
சாராயக் கடை பக்கம் போவாத
சுப்பனைப் பிடித்து
மூஞ்சியில் சாராயம் ஊத்தினானாம்
கடைக்காரன்
வெம்பிப்போன குப்பத்தா
கடைக்காரனை
வாய்க்கு வந்தபடி பேசிப்பிட்டாளாம்
...முண்ட
பல்லுமேல நாக்குப் போட்டு பேசுறதான்னு
சேலையை உருவிட்டானாம்
மேஜாதிக்காரன்
அம்மணமா அழுத குப்பத்தாவுக்காக
சேரியே தெரண்டுடுச்சு
ரத்தக்களறி ரணகளறி
இரும்புத் தொப்பி வந்தப்புறம்தா அடங்குச்சு
இருந்தாலுமென்ன
இப்போ சேரிதாண்ட வழியில்லை
கூலிசெய்ய நிலமில்ல
எப்படிச் சொல்றது சாமி
எங்க ஊரு ஐயம்பாளையம்னு
- பச்சியப்பன்