ஒருவர், எவ்வளவு பெரிய இலட்சியவாதியாக இருந்தாலும், எவ்வளவு வலிமைமிக்க மன உறுதி படைத்தவராக இருந்தாலும் ஒத்த தன்மை உள்ளவர்களுடன் சேர்ந்து ஓர் அமைப்பில் செயல்படவில்லை எனில் அவரது அந்தத் தகுதிகள் அவருக்கும் சமூகத்திற்கும் பயன்படா. கருமியின் கையில் உள்ள செல்வம் போல் பயனற்றுப் போகும்.

சிலர், இன்று தமிழ்ச் சமூகம் சந்திக்கின்ற சிக்கல்களைத் துல்லியமாகப் புரிந்து கொள்வார்கள். அவற்றிற்கான காரணங்கள் யாவை என்பவற்றையும் புரிந்து கொள்வார்கள். அவற்றிற்கான தீர்வுகள் யாவை என்பதையும் புரிந்து கொள்வார்கள் இத்தீர்வுகளை நோக்கி சமூகம் முன்னேறாமல் தடுப்பவர்கள் யார், யார் என்றும் புரிந்து கொள்வார்கள். ஆனால் அவர்கள், இத்தனை புரிதல்களோடும் ஒத்த கருத்துள்ள அமைப்போடு, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இணைந்து செயல்பட மாட்டார்கள். ஏன்?

1. களத்தில் இறங்கி செயல்படும் மனநிலை இன்றி கருத்துகள் கூறும் தனிநபராக இருப்பதில் ஆர்வம்.
2. அமைப்பை ஆதரித்தால், செயல்பட வேண்டிவரும். செயல்பட்டால், சில சுகங்களை இழக்க வேண்டிவரும் என்ற எச்சரிக்கை; சில பாதிப்புகள் வரலாம் என்ற அச்சம்.
3.  எவ்வளவோ பேர் அவரவர் பிழைப்பைப் பார்த்துக் கொண்டு போகும்போது நாம் மட்டும் ஏன் சுமைகளைச் சுமக்க வேண்டும் என்று ஒதுங்கிக் கொள்வது. மற்றவர்களுக்கு இல்லாத அக்கறை நமக்கு மட்டும் என்ன வந்தது என்று ஞாயம் கற்பித்துக் கொள்வது.
4. சரியான புரிதல்களையும் சரியான தீர்வுகளையும் சொல்லிப் போராடும் அமைப்பு சிறிய அமைப்பாக உள்ளது. அதை ஆதரித்து என்ன செய்துவிட முடியும் என்ற நம்பிக்கைக் குறைவு.
5. இந்த அமைப்பை ஆதரித்து இவர்களைத் தலைவராக வளர்த்து விட்டால் இவர்களும் மற்ற பெரிய அரசியல் கட்சிகளின் தலைவர்களைப் போல் இலட்சியத்திற்குத் துரோகமிழைத்து, சொந்த வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ள மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது.

இவை போன்ற காரணங்களை மனதில் கொண்டு அமைப்பாக ஒருங்கிணையாமல் உதிரிகளாக இருப்போர் பலர். ஒத்த கருத்துள்ளவர்கள் அமைப்பு வடிவத்திற்குள் வராமல் ஒதுங்கி, உதிரியாக இருப்பதே இன்று தமிழ்நாட்டு உரிமைகளை மீட்டிட உறுதியாகப் போராட முடியாத பலவீனத்திற்கு முதன்மைக் காரணம் ஆகும்.

தமிழ்நாட்டிற்கு வந்த இழப்புகளை உணர்வோர், அவற்றிற்காகக் கவலைப்படுவோர், ஆத்திரப்படுவோர், அவை தனிபட்ட முறையில் தங்களுக்கும் ஏற்பட்ட இழப்புகள் என்று கருதுவதில்லை.

தன் இனத்திற்கு ஏற்பட்ட இழப்பு, தன் இனத்திற்கு ஏற்பட்ட மானக்கேடு ஆகியவை தமக்கும் தனிபட்ட முறையில் ஏற்பட்ட இழப்பாக, மானக்கேடாக உணரும் மனநிலை வேண்டும். அவ்வாறான உணர்ச்சி உருவாகவில்லை எனில் நாம் அனைவரும் தமிழர்கள் என்று உணர்வதில் என்ன பொருள் இருக்கிறது?

தங்களைத் தமிழர்கள் என்று உணர்ந்து கொள்ளாத தமிழர்கள் இருக்கிறர்கள் அவர்களுக்கும் இயற்கையாய் உள்ள இன உணர்ச்சியை நாம் தான் தூண்ட வேண்டும். அது வேறு. ஆனால் தமிழர்களாகத் தங்களை உணர்ந்து கொண்டவர்கள் தமிழர்களாய்த் தங்களை உணராதவர்கள் போல் இருக்கக் கூடாதல்லவா! தமிழ் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள காவிரி உரிமை இழப்பு, முல்லைப் பெரியாறு உரிமை இழப்பு, நமது கடல் பகுதியில் மீன் பிடிக்கும் உரிமை இழப்பு அதனால் ஏற்பட்டுவரும் உயிர் இழப்புகள் அனைத்தும் தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் வந்த இழப்புகள்தாம். ஊன்றிக் கவனித்தால் இது விளங்கும்.

காவிரி உரிமை இந்திய அரசின் துணையுடன் கர்நாடகத்தால் பறிக்கப்பட்டுள்ளது. சென்னை, இராமநாதபுரம், திருப்பூர், புதுக்கோட்டை என காவிரிப் பாசனமில்லாத பல மாவட்டங்களுக்குக் குடிநீர், குளிக்கும் நீர் காவிரி நீராகவே உள்ளது. வேலூருக்கும் காவிரிநீர் செல்ல உள்ளது. தர்மபுரி தொடங்கி கடலூர் மாவட்டம் வரை உள்ள மற்ற 14 மாவட்டங்களுக்குப் பாசன நீரும் குடிநீரும் காவிரி அளிக்கிறது. காவிரி நீர் இழப்பு ஒவ்வொரு தமிழருக்கும் ஏற்படும் இழப்புதானே.

காவிரி நீரால் விளைந்த நெல், வாழை, கரும்பு, மஞ்சள் உள்ளிட்டவை தமிழ்நாடு முழுவதுக்கும் பொதுதானே! அதேபோல் முல்லைப் பெரியாறு அணையில் முழுக் கொள்ளளவில் நீர் தேக்கப்பட்டால் அதனால் உண்டாகும் பலன் தமிழ்நாட்டுத் தமிழர் அனைவருக்கும் பயன் படாமலா இருக்கும்?

இந்திய அரசின் துணையுடன் நமது கடல் உரிமையை ஆக்கிரமித்து, நம்மின மீனவர் களைக் கொல்கிறது சிங்களப்படை. இதனால், ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டிற்குக் கிடைக்க வேண்டிய மீன் உணவு பாதிக்கப்படுகிறது. வேலைவாய்ப்பு சுருங்குகிறது. அங்கு ஏற்படும் இச்சுருக்கம் தமிழ்நாட்டின் இதரப் பகுதிகளில் வேலைவாய்ப்பில் புதிய அழுத்தத்தை உண்டாக்குகிறது. மீன் விலை அதிகமாகிறது.

அதுமட்டுமன்று இந்த உரிமைப் பறிப்புகள் தமிழினத்தின் மானத்திற்கு ஒட்டு மொத்தத் தமிழர்கள் அனைவரின் இனமானத்திற்கு விடப்படும் அறை கூவல் ஆகும்.
இவற்றைப் புரிந்து கொள்ளும் விழிப்புணர்ச்சி இன உணர்வாளர்களுக்கு வேண்டும். இவ்வின உணர்ச்சியை நம் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் இப்பணியை அமைப்பு வடிவம் இல்லாமல் எப்படிச் செய்ய முடியும்?

தொட்டறியக் கூடிய பலன் தனக்குக் கிடைத்தால்தான் அதற்காக நான் போராடு வேன் என்று ஒருவர் சொன்னால் அது பொது அறம் அன்று; மனித நீதியும் அன்று, வெறும் நுகர்வு வாழ்வின் வெளிப்பாடு என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. போன்ற பெரிய தேர்தல் கட்சிகள் குறிப்பாக மாநிலக் கட்சிகள் தமிழின உணர்வு வளர்வதைக் கண்டு அஞ்சுகின்றன. இவை இந்திய ஏகாதிபத்தியதுடன் இணக்கம் கொண்டு, கங்காணி வேலை பார்த்து, பதவி, பணம் சுருட்டுபவை. தமிழின உணர்வு வளர்ந்தால், அது தமிழ்த் தேசியமாக உருமாறும், இந்திய ஏகாதிபத்தியத்துடமிருந்து விடுதலைக் கோரும் உணர்வாக படி மலர்ச்சி பெறும் என்று அக்கட்சிகள் எச்சரிக்கை கொள்கின்றன. தமிழக உரிமைக்குக் குரல் கொடுப்பது போல் வெளிப்பூச்சு வேலைகள் செய்துவிட்டு உண்மையான உரிமை மீட்புக்குத் தங்கள் கட்சிகளை களமிறக்காமல் ஒதுங்குகிக் கொள்கின்றன.

அனைத்திந்திய இடதுசாரிக் கட்சிகள் தமிழ் இன உரிமைக் காப்பு உணர்ச்சி எழுவதை இந்தியத் தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிரான பேரபாயம் என்று கருதுகின்றன. பெரிய திராவிடக் கட்சிகள் தங்களின் பிழைப்புவாதத்திற்கு ஆபத்து என்று தமிழின உணர்ச்சியை கருதுகின்றன. காங்கிரசு, பா.ச.க. கட்சிகள் இந்திய ஏகாதிபத்தியத்தின் ஆளும் வர்க்கத்தின் அசல்பிரதிநிதிகள். தமிழர்களையும் தமிழின உணர்வையும் நசுக்கும் கட்சிகள் இவை. மேற்கண்ட கட்சிகளுடன் கூட்டணி சேரும் சிறு சிறு தேர்தல் கட்சிகளும் தமிழின உணர்ச்சியை ஒருங்கிணைக்கும் கொள்கையை தங்கள் வேலைத் திட்டமாக வைத்துக் கொள்வதில்லை.

எனவே, தேர்தல் அரசியலுக்கு வெளியே உள்ள தமிழின அமைப்புகளும் தமிழின உணர்வாளர்களும்தான் தமிழின உணர்வாளர்களை ஒருங்கிணைக்கும் பணியைத் தலை மேற்கொண்டு செய்யமுடியும். உணர்வாளர்களின் ஒருங்கிணைப்பு, மக்கள் திரள் ஒருங்கிணைப்புக்கு முன்னோடியாக அமையும்.

இன உணர்வு அமைப்புகளின் இணைந்தக் கூட்டமைப்புக்கு முன்னோடியாக, தனித் தனியே உள்ள இன உணர்வாளர்கள், தங்களின் பட்டறிவில் சரியான அமைப்பென்று கருதும் தமிழ்த் தேசிய அமைப்பில் உறுப்பினர்களாகவோ அல்லது ஆதரவாளர் களாகவோ இணைய வேண்டும்.

களத்தில் இறங்கித் தம்மால் இயன்ற பணிகளைச் செய்யாமல் கருத்துப் பேசிக் கொண்டு தமக்கான தனி அடையாளத்தைப் பராமரிக்க விரும்பும் சிலர் தங்களின் பிரமுகர் உளவியலை உதறித்தள்ள வேண்டும். சரியான அமைப்பொன்றில் இணைந்து அதன் வழித் தமது அடையாளத்தை நிறுவிக் கொள்ள வேண்டும்.

நேரடியாகவோ அல்லது ஆதரவு நிலையிலோ தமிழ் மக்களுக்கான சிறு பணியையும் செய்யாமல், வெறும் பேச்சு பேசுவதை அருவருக்க வேண்டும்.

“ மற்றவர்களைப் போல் நாமும் மக்கள் பணி ஆற்றாமல் இருப்போம்” என்று இன உணர்வாளர்கள் கருதக் கூடாது. அந்த “மற்றவர்களில்”, விவரம் அறியாதவர்கள், தன்னல விரும்பிகள் மந்தையைப்போல் தலைவர்களால வழிநடத்தப்படுவோர் என்று பலவகையினர் இருப்பர். அப்பட்டியலில் இன உணர்வாளர்கள் இணைந்து கொள்வது என்ன ஞாயம்?

மற்றவர்களைப் போல் நாமும் வறுமையில் வாடுவோம், வசதியற்றிருப்போம், நம் பிள்ளைகளும் படிப்பில் குறைந்த மதிப்பெண் எடுக்கட்டும் என்றா இருக்கிறோம். இல்லை. இதிலெல்லாம் மற்றவர்களைப்போல் இருக்க விரும்பாதவர்கள் மக்கள் பணி ஆற்றுவதில் மட்டும், மற்றவர்களைப் போல் ஒதுங்கிக் கொள்வோம் என்று கருதினால் அது தன்னலவாதம் ஆகும்.

சிறிதாகிலும் விவரமறிந்தோர், விவரம் அறியாதவர்களுக்கு வெளிச்சம் காட்ட வேண்டும்; மக்கள் பணியாற்றி மற்றவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். நம் முன்னோர்களும் நம் காலத்தில் பொதுநல செயல்பாடுகளில் ஈடுபாடு கொண்டோரும் மக்கள் பணி ஆற்றாவிட்டால், நாம் இன்று அனுபவிக்கும் சில உரிமைகளை யாவது பெற்றிருப்போமா?

நாம் மற்றவர்களிடமிருந்து பல உரிமைகளையும் பலன்களையும் பெற்றிருக்கிறோம். நாமும் அவர்களைப் போல் நமக்குப் பின் வருவோர்குக் கொடுத்துச் செல்ல வேண்டும். ஈ, எறும்பு போல் வெறும் நுகர்வு வாழ்வு வாழ்ந்து மறையக் கூடாது பிறந்ததற்கான அடையாளம் வேண்டும். வாழ்ந்ததற்கான தடம் வேண்டும்.

சரியான அமைப்பை, தகுதியான இயக்கத்தை அடையாளம் கண்ட பிறகும், அது சிறிய அமைப்பாக இருக்கிறது என்று கருதி அதனோடு இணையாமல, ஒதுங்கி யிருந்தால் அது எப்படி பெரிய அமைப்பாக வளரும்?

இவ்வாறான மனநிலை தன்னம்பிகை அற்றது. படர்வதற்குக் கொழுகொம்பு தேடும் கொடியை போன்ற மனநிலை கொண்டது.

சிறியதாயிருந்தாலும் சரியானது வளரும்; மக்களுக்குப் பயன் தரும். பெரியதாயி ருந்தாலும் தவறானது மக்களுக்குப் பயன்படாது; காலப் போக்கில் சிதையும்.

சிறியதாக இருக்கும் சரியான அமைப்பு வளர்ந்த பின் கெட்டுப் போகும் என்று கருதிக் கொள்வது, மனம் நிறைய சந்தேகங்களை மட்டுமே நிரப்பிக் கொண்டுள்ள சலன உளவியலாகும்.

“தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்” என்றார் அறிவு ஆசான் திருவள்ளுவர்.

பல முனைகளில் ஆராய்ந்து தெளிவடையாமல் ஒரு முடிவுக்கு வருவதும், பல வழிகளில் ஆராய்ந்து ஒரு நல்ல முடிவுக்கு வந்த பின் அதைப் பற்றி சந்தேகப் பட்டுக் கொண்டே இருப்பதும் முடிவில்லாத துன்பம் தரும் என்றார்.

அடைய வேண்டிய இலக்கைத் துல்லியமாக அடையாளம் காட்டும் கொள்கை அதற்கேற்ற நடைமுறை ஆகிய இரண்டும் இணைந்த அமைப்பே சரியான அமைப்பு அதைக் கண்டறிய வேண்டியது, சமூக நலனில் அக்கறையுள்ளவர் பொறுப்பு!

த.தே.பொ.க. தமிழ்நாடு விடுதலை கோருகிறது, அது சாத்தியமா என்று சிலர் கேட்கிறார்கள். சாத்தியமா, இல்லையா, என்பதைவிட அது தேவையா, இல்லையா என்று கேட்க வேண்டும். விடுதலை இல்லாமல் நாம் இழந்த உரிமைகளை மீட்க முடியுமா? இனியும் உரிமைகளையும் உயிர்களையும் காக்க முடியுமா என்று நமக்கு நாமேவினா எழுப்பி விடை காண வேண்டும்.

இஞ்சி மரப்பா சாப்பிட்டு இருதய நோயைக் குணப்படுத்த முயல்வோர் இருக்கி றார்கள்; அதே மனநிலையில்தான் வாக்களிப்பதன் மூலம் தமிழ்நாட்டின் அடிப்படை உரிமைச் சிக்கல்களுக்குத் தீர்வுகாண முடியும் என்று கூறும் தலைவர்களும் இருக்கிறார்கள். அதை நம்பும் தொண்டர்களும் இருக்கிறார்கள்.

கடினமான சிக்கல்களுக்கு எளிமையான தீர்வுகளை மனம் நாடுகிறது ஏன்? உள்ளதை உள்ளவாறு புரிந்து கொண்டு கடினமான சிக்கல்களைத் தீர்க்க உண்மையில் தேவைப்படும் கடினமான முடிவுகளை எடுத்துப் பாடுபட மனம் தயங்குகிறது. மனித மனத்தின் இந்தப் பலவீனத்தைத்தான் பாவலாத் தலைவர்களும், மேனாமினுக்கிப் பிரமுகர்களும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தாங்களும் இலட்சியத் தலைவர்கள் போல் முழங்கிக் கொண்டு வலம் வருகிறார்கள்.

 “அக்கா வந்து வாங்கித் தர, சுக்கா, மிளகா சுதந்திரம் கிளியே” என்று புரட்சிப்பாவலர் பாரதிதாசன் கேட்டார். “துடைப்பம் எட்டாத இடத்தில் தூசித்தானாக மறையாது” என்றார் மாசே துங்.

தமிழ்நாட்டின் அடிப்படைச் சிக்கல்களுக்குத் தமிழக விடுதலைதான் தீர்வு என்ற உண்மையை உணர்ந்து கொண்டு விட்டபின், அது உடனடியாகக் கிடைத்தால்தான் அதற்காகப் பாடுபடுவேன் என்று ஒருவர் கூறினால், அது முழுக்க முழுக்க தன்னல வாதமாகும். கைமேல் பலனை எதிர்பார்க்கும் காரியவாதமாகும்.

விடுதலைக் கோரிக்கை வெற்றி பெறும் வாய்ப்பு இருந்தால்தான் அதில் ஈடுபடுவேன் என்று ஒருவர் கூறினால், அது இலாப நட்ட கணக்குப் பார்க்கும் வணிகப் பார்வையாகும் அது இலட்சியப் பார்வை ஆகாது. அடிமைப்படுத்தப்பட்ட இனத்தின் விடுதலை இலட்சியம் என்றுமே தோற்பதில்லை. வெற்றியை ஈட்ட ஒருக்கால், கால தாமதம் ஆகலாமே தவிர, அந்த இலட்சியம் அழிந்து போவதில்லை.

ஒருவர் வணிகத்தில் ஈடுபடுகிறார் அதில் அவர்க்குத் தோல்வி ஏற்பட்டால் அவர் போட்ட முதல் அழிந்து போகலாம். ஒருவர் வேளாண்மை செய்கிறார். மழையின்றி, நீரின்றி அவ்வேளாண்மைப் பயிர் அழிந்து போகலாம், ஆனால் விடுதலை இலட்சியம் அப்படிப்பட்டதன்று. ஒருவருடைய அல்லது ஒரு சிலருடைய நெஞ்சத்தில் மட்டும் விழுந்த விதையனறு விடுதலை உணர்வு. அது அடிமைப்பட்ட இனத்தின் இலட்சோப இலட்சம் மக்களின் மனதில் விழுந்த விதை. ஒரே இடத்தில் உள்ளவர்களின் மனதில் விழுந்த விதையன்று. எங்கெங்கும் இருக்கும் அடிமைப்பட்ட மக்களின் மனதில் விழுந்த விதை. அது அந்த மனிதர்களின் மரணத்தோடு மரித்துப் போகும் விதை அன்று. அவர்களின் அடுத்தடுத்த தலைமுறையினர் மனதிலும் மறுபடியும் மறு படியும் மரபு வழியில் ஊன்றிக் கொள்ளும் விதை.

உழவன் விதைத்த விதை நீரின்றி அழிந்து போவது போல் விடுதலை எண்ணம் என்ற விதை ஒரு தலைமுறையில் வெற்றி கிடைக்கவில்லை என்றால் அழிந்து போகாது. மனித மனதில் விதையாக விழுந்த உயர்ந்த கருத்துகள் அவர்களின் அடுத்தடுத்த தலைமுறையினர்க்கும் தொடர்ந்து வருவதுபோல் விடுதலை இலட்சியமும் தொடரும் எனவே உடனடி வெற்றி கிடைக்கவில்லை என்பதற்காக விடுதலை இலட்சியம் ஒருக்காலும் அழிந்து விடாது.

உடனடியாக தோசை, உடனடியாகக் கோழி வறுவல் போல் விடுதலை இலட்சியத்தை அடைய முடியாது. கைமேல் பலன் கிடைத்தால்தான் விடுதலை இலட்சியத்தை ஏற்பேன் என்று எந்த இலட்சியத் தலைவரும் போராளியும் நிபந்தனை போட்டதில்லை. என் காலத்தில் விடுதலை கிடைக்கும் என்று போராடுகிறேன். என் காலத்தில் கிடைக்காவிட்டால் எதிர் காலத்தில் கிடைக்கட்டும் என்பதே அவர்களின் மன நிலையாகும். தூக்குக் கயிற்றை விரும்பி வரவழைத்துக் கொண்ட பகத்சிங், தண்ணீரும் அருந்தாமல் சாவை வரவழைத்து கொண்ட திலீபன் போன்றவர்கள் கைமேல் பலன் கருதியா உயிரை மாய்த்துக் கொண்டார்கள்? இல்லை. “என் சாவில் எனது விடுதலை இலட்சியம் இன்னும் இலட்சக் கணக்கான மனதில் பிறப்பெடுக்கும்” என்று கருதி உயிரீகம் செய்தார்கள்.

தன் காலத்தில் தமிழீழம் பிறந்தாக வேண்டும்; தான் முடிசூட்டிக் கொள்ள வேண்டும் என்று கைமேல் பலன் கருதியா தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் விடுதலைப் புரட்சியைத் தொடங்கினார் இல்லை. “அடிமைப்பட்ட என் இனத்திற்கு விடுதலை தேவை; அதற்கு நான் கருவியாகச் செயல்படுகிறேன். விடுதலை கிடைக்கும் போது கிடைக்கட்டும்” என்பது தானே அவரது மனநிலை.

இவ்வாறு நாம் சொல்வது, விடுதலை இலட்சியத்தை மனதளவில் ஏற்றுக் கொண்டு விடியும் போது விடியட்டும் என்று செயல்படாமல் சும்மா இருப்பதற்காக அன்று. மேலே நாம் சுட்டிக்காட்டிய உவமைநாயகர்கள் செயல் துடிப்பில் மற்றவர்களுக்கு வழிகாட்டிகள்! கைமேல் பலன் கருதி ஓர் இலட்சியத்தில் இறங்குவதோ அல்லது இறங்காமல் இருப்பதோ வரலாற்றுப் பிழை.

கைமேல் பலன் கருதும் மனித பலவீனம்தான் சந்தர்ப்பவாதத் தலைவர்கள் உருவாகும் விளைநிலம் ஆகும். மயிலைப் பிடித்து வருகிறேன் என்று காட்டுக்குப் போய்விட்டு மயில் உதிர்த்துப் போட்ட இறகுகளைப் பொறுக்கி வந்து காட்டி “ மயிலிறகு மீட்டு வந்த மாவீரர்கள்” என்று பட்டம் சூட்டிக் கொண்ட தலைவர்கள் உருவாகும் தளம் கைமேல் பலன் கருதும் மக்கள் மனம்தான்! இப்படிபட்ட “மக்கள்” புலிவேட்டை என்று புறப்பட்டவர்கள் பூனையைப் பிடித்து வந்தாலும் பாராட்டு வார்கள்.

மக்களின் பெரும்பாலானவர்கள் சாதாரண காலங்களில் பின்பற்றுபவர்களாகவே இருப்பார்கள் அவர்களில் வழிகாட்டுவோரும் இருப்பார்கள். அவர்கள் குறைந்த எண்ணிக்கையில் இருப்பார்கள். இன உணர்வாளர்கள் தங்களை வழிகாட்டுபவர்களாக அமைத்துக் கொள்ள வேண்டும். சமூகத்தின் உச்சியில் ஒற்றைத் தலைவர் இருப்பார்; அவரின் வழிகாட்டுதலுக்குக் காத்துக்கிடப்பவர்களே மக்கள் அனைவரும் என்ற ஒற்றைக் கதாநாயக அரசியல் முடிவுக்கு வரவேண்டும். ஊருக்கு ஊர் வழிகாட்டும் தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களும் நாமும் ஒருவர் என்ற எண்ணம் இன உணர்வாளர்களுக்கு வேண்டும். இல்லாத ஊர்களில் வழிகாட்டும் தலைவர்களை உருவாக்குவதும் இன உணர்வாளர்கள் பொறுப்பு.

முன் முயற்சி (iniative) எடுப்பவர்தாம் எப்போதும் ஒரு நிகழ்வைத் தொடங்கி வைக்கிறார். பொதுவாக மக்களில் அனைவரும் முன் முயற்சி எடுப்பதில்லை. மிகச் சிலரே முன் முயற்சி எடுப்பர்.

சாலையில் ஊரிதிகளில் பலர் பயணம் செய்கிறார்கள். நடந்து போன இளைஞன் ஒருவன் மயங்கி விழுந்த விடுகிறான் “ஐயோ, மயங்கி விழுந்து விட்டானே” என்று கூறிக்கொண்டே பலரும் அவரவர் ஊர்திகளில் விரைகிறார்கள். அவன் அப்படியே விழுந்து கிடக்கிறான். சற்று நேரத்தில் அவ்வழியே ஈருருளியில் வந்த ஓர் இளைஞன் வண்டியை நிறுத்திவிட்டு விழுந்து கிடப்பவனைத் தூக்கி உட்கார வைக்கிறான், உடனடியாக அக்கம் பக்கம் நின்று கொண்டிருந்தவர்கள் வந்து விடுகிறார்கள். வந்துவர்களில் ஒருவர் தண்ணீர் கொண்டு வந்து முகத்தில் தெளிக்கிறார்; இன்னொருவர் சோடா உடைத்துக் கொடுக்கிறார். விழுந்தவன் மயக்கம் தெளிந்ததும், ஒருவர் ஈருருளியில் அவனை ஏற்றி அவன் செல்லுமிடத்திற்கு கொண்டு போய்விடுகிறார். முன் முயற்சி எடுத்த அந்த இளைஞரும் “உச்சுக் கொட்டிக் கொண்டு” வண்டியை நிறுத்தாமல் போயிருந்தால் மேலும் சிறிது நேரம் இளைஞன் விழுந்து கிடந்திருப்பான். ஒருவர் முன்முயற்சி எடுத்தால் மற்றவர்கள் தொடர்ந்து கொள்வார்கள்.

எப்போழுதும் முன்முயற்சி எடுப்பதில்தான் காலதாமதம் நேர்கிறது. தமிழின உணர்வாளர்கள் முன்முயற்சி எடுப்பவர்களாக இருக்க வேண்டும்.

ஒற்றையடிப் பாதையில் ஒருவன் போய்க் கொண்டிருக்கிறான். அப்பாதையில் கிடக்கும் ஒரு கொத்து முள்ளைக் கவனிக்காமல் காலில் குத்திக் கொள்கிறான் அவன் தன் காலில் குத்திய முள்ளை உட்கார்ந்து எடுத்துக் கொண்டு போய் விடுகிறான். முள்பாதையிலேயே கிடக்கிறது சிறிது நேரம் கழித்து இன்னொருவன் அப்பாதையில் வருகிறான். அவன் முள்கொத்துக்கிடப்பதைப் பார்த்து விடுகிறான். அவன் முள்ளைக் குத்திக் கொள்ளாமல் ஒதுங்கிக் போய்விடுகிறான். அந்த முள் கொத்து அதே இடத்தில் கிடக்கிறது. சிறிது நேரம் கழித்து அப்பாதையில் மூன்றாவதாக ஒருவன் வருகிறான். அவன் முள் கொத்து கிடப்பதைப் பார்த்து விடுகிறான். அப்படியே அந்த முள் கொத்தை எடுத்து, பக்கத்தில் உள்ள முட்புதருக்குள் போட்டு விட்டுப் போகிறான்.

மூன்று பேரில் ஒருவன்தான் மற்றவர்களுக்கும் குத்திக் கொள்ளக் கூடாது என்று முன்முயற்சி எடுத்தான் வந்த வரிசையில் அவன் மூன்றாவது ஆளே தவிர, செயலில் முதல் மனிதன். அந்த மூன்றாவது மனிதர் போல் இன உணர்வாளர்கள் செயல்படவேண்டும். மற்றவர்கள் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு போகும் போது, நாம் மட்டும் ஏன் இதிலெல்லாம் இறங்கி சுமக்க வேண்டும் என்று கருதக் கூடாது. அப்படிக் கருதுவது வெறும் தன்னலம். அதில் பொதுநலம் குறித்த அக்கறை எதுவுமில்லை. மனித வாழ்வின் சாரம் எதுவுமில்லை. விலங்கு வாழ்வின் சாரம்தான் இருக்கிறது.

தேடிச்சோறு நிதம் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக வுளன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போல – நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?

என்று பாரதியார் கேட்டார். மனித சமூகத்தின் நலவாழ்வுக்கு, உரிமை வாழ்வுக்குத் தம்மால் இயன்றதைச் செய்து மடிவதே மனித வாழ்வின் சாரம். மனித குலத்தின் ஒரு பகுதியாக உள்ள தமிழின மக்களின் உரிமைக்கும், நல வாழ்வுக்கும் பாடு படுவதே நமது வாழ்வின் சாரமாக இருக்க வேண்டும்.

சமூகத் தொண்டு செய்வதெனில், அதனை ஒத்த கருத்துள்ள மனிதர்களின் கூட்டு முயற்சியில் செய்வதே பலனளிக்கும். அந்த கூட்டு வடிவம்தான் அமைப்பு. ஒடுக் கப்பட்ட வர்க்கமும் அடிமைபட்ட இனமும் தன் தன் விடுதலைப் போராட்டக் களத்தில் ஏந்த வேண்டிய முதற் பெரும் ஆயுதம் அதனதன் அமைப்பே!

இலட்சியமில்லாத அமைப்பு மண் குதிரை; அமைப்பு இல்லாத இலட்சியம் ஆகாயக் கோட்டை. மின்சாரம் பேராற்றல் கொண்டதுதான். ஆனால் அதனை எடுத்துச் செல்ல செப்புக் கம்பி தேவை. வெறும் செப்புக் கம்பிக்கு மின்னாற்றல் கிடையாது. அது போல், இலட்சியத்திற்கு அமைப்பு தேவை, அமைப்பிற்கு இலட்சியம் தேவை.

இறுதிக்கும் இறுதியாகப் பார்த்தால், மனிதர்களின் மன உறுதியே இலட்சியம், அமைப்பு ஆகிய இரண்டின் உயிர்ப்பைத் தீர்மானிக்கிறது. இத்தாலியப் புரட்சியாளர் அந்தோணியோ கிராம்சி செல்வது போல் புரட்சி, ஒரு மனிதரின் மனதிலிருந்து புறப்படுகிறது.

நம்பிக்கையிலிருந்து பிறப்பது மன உறுதி. புரட்சிக்கனல் நெஞ்சில் எரிகின்ற ஒருவர் பச்சைத் தண்ணீரைத் தொட்டால்கூட அது பற்றிஎரியும் என்பார்கள் கவிதை மொழியில்.

தமிழின உணர்வாளர்கள் பலரிடம் இன்று காணப்படும் குறைபாடு நம்பிக்கைக் குறைவே. “தமிழ்த் தேசியம் சரியான திறவுகோல்தான்; தமிழ்நாடு விடுதலை பெற வேண்டியது தேவைதான்; ஆனால் தமிழ் மக்கள் இந்த இலட்சியத்தை நிறைவேற்றத் திரள்வார்களா? இனத்துரோகக் கட்சிகளைச் சுற்றி பெருமளவில் மக்கள் திரண்டி ருக்கும் போது தமிழ்த் தேசிய அமைப்பினால் எதைச் சாதித்து விட முடியும் “ என்று அவர்கள் பெருமூச்சு விடுகிறார்கள்.

இந்த நம்பிக்கையின்மை அவர்களைச் செயலற்றவர்களாக்கி விடுகிறது. அவர்கள் தமிழகத்தில் நடைபெறும் தனித் தனி நிகழ்வுகளைப் பார்த்து உற்சாகமடைகிறார்கள். ஆனால் அவற்றைத் தொகுத்துப் பார்த்து தமிழ்ச் சமூகத்தின் அடி நீரோட்டம் எதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்று அடையாளம் காணத் தவறுகிறார்கள்.

அண்மைக் காலங்களில் தமிழ்நாட்டில் பீறிட்டுக் கிளம்பிய பேரெழுச்சிகள், கொந்தளிப்புகள் அனைத்தும் தமிழின உணர்வு சார்ந்தவையே. இப்பேரெழுச்சியை எந்தப் பெரிய கட்சியும் தொடங்கவுமில்லை, வழிநடத்தவுமில்லை. பெரிய கட்சி களெல்லாம் இந்தப் பேரெழுச்சிகளுக்குப் பின்பாட்டுப் பாடிக்கொண்டிருந்தன.

இந்திய ஏகாதிபத்தியத்தின் துணையுடன் ஈழத் தமிழர்கள் 2009 இல் இனப்படுகொலை செய்யப்பட்ட போது ஏற்பட்ட எழுச்சியும், தமிழர் உயிர்காக்க மூண்டெழுந்த கொந்தளிப்பும், முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்க போர்க் கோலம் பூண்ட மக்கள் எழுச்சியும் தமிழின எழுச்சியின் வெவ்வேறு வடிவங்களே! இந்திய , தமிழக அரசுகளின் அடக்கு முறைகளை எதிர்கொண்டு 400 நாள்களுக்கு மேல் நடக்கும் கூடங்குளம் எழுச்சியும் சாரத்தில் தமிழினத் தற்காப்பு எழுச்சியே!

இவையெல்லாம் எந்தப் பெரிய கட்சியின் முன்னெடுப்போ, துணையோ இன்றி எழுந்தவை. அரசின் அடக்குமுறையை எதிர்கொண்டு நடந்தவை.

பெரிய கட்சிகள் ஒப்போலைகள் (ஓட்டுகள்) வாங்குகின்றன. இங்கு பெரும்பாலும் ஒப்போலைகள் வாங்கப்படுகின்றனவே அன்றி வழங்கப்படுவது இல்லை. ஒப்போலை களை வாங்கும் சக்தி பெரிய கட்சிகளிடம் இருக்கின்றன. ஆனால் தமிழ்நாட்டின் ஆன்மாவாக விளங்குபவர்கள் தமிழின உணர்வாளர்களே!

சிறு சிறு நீரோட்டங்களாகக் குமரி முனையிலிருந்து கும்மிடிப்பூண்டி வரை தமிழின உனர்வு ஆற்றல்கள் அவ்வப்போது செயல் புரிகின்றன. இவையனைத்தும் ஒருங் கிணைந்த தமிழ்த் தேசிய நீரோட்டமாகப் பெருக்கெடுக்க வேண்டும். இலட்சியத் தெளிவும் அமைப்புத் தேர்வும் சரியாக பொருந்திவிட்டால், உணர்வாளர்கள் எதிர் பார்க்கும் தமிழ்த் தேசியப் பெருக்கு அலையடித்துக் கிளம்ப அதிக காலமாகாது.

முதலில் ஒருவருக்கு தமது ஆற்றல் மீது நம்பிக்கை வேண்டும்; அடுத்துத் தமிழினத்தின் ஆற்றல் மீது நம்பிக்கை வேண்டும்; தமிழ் மொழியின் ஆற்றல் மீது நம்பிக்கை வேண்டும்; வரலாற்று வளர்ச்சியின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். நம்பிக்கையின்மை என்பது ஒரு தொற்று நோய்; அது ஒருவரிடமிருந்து இன்னொருவர்க்கு எளிதில் பரவி விடும்.

தமிழகத்தின் மக்கள் தொகைக்குச் சமமான மக்கள் தொகை கொண்ட நாடுகள் தாம் பிரிட்டனும், பிரான்சும்! ஆங்கிலத்தையும் பிரஞ்சையும் விட வரலாற்றுத் தொன்மை யும், வளமும் கொண்ட மொழி நம் தமிழ் மொழி. உலகெங்கும் வாழும் தமிழர்களின் மொத்த மக்கள் தொகை 12 கோடி இருக்கும். நம்மால் சாதிக்க முடியாதா? பிரிட்டனும் பிரான்சும் வல்லரசுகளாகக் கோலோச்சும் போது தமிழ்நாடு நல்லரசாகத் திகழ முடியாதா?

“தமிழா, நம்பிக்கை கொள், நாளை நமதே” என்று நாம் கூறுவது உசுப்பிவிடுவதற்காக உரைக்கும் உணர்ச்சிச் சொற்கள் அல்ல; உண்மைச் சொற்கள். உலக நடப்புகளையும் சமகாலச் சமூக நகர்வுகளையும் கணக்கில் கொண்டே மதிப்பிட்டப்பிறகே அவ்வாறு சொல்கிறோம்.

உலகின் ஒரு பாதியைக் கட்டி ஆண்ட பிரிட்டனின் கதியைப் பாருங்கள். பிரிட்டனி லிருந்து பிரிந்து போக ஸ்காட்லாந்து துடிக்கிறது 2014-இல் கருத்து வாக்கெடுப்பு மூலம் அதைத் தீர்மானிக்க உள்ளார்கள். கனடாவுடன் கணக்கை தீர்த்துக் கொள்ள கியுபெக் காலம் பார்த்துக் கொண்டுள்ளது.

பாழடைந்த கட்டடத்தின் பழங்காலச் சுவர் போல் அங்கங்கே பிளவுகளுடன் நின்று கொண்டிருக்கிறது இந்தியா. அதைப் பார்க்கும் போதெல்லாம் “ நீ ஓங்கி உதைத்து என்னை விழச் செய்கிறாயா? இல்லை நானே விழுந்து விடவா?” என்று கேட்பது போல் இருக்கிறது. இதை உணர்ந்து கொண்ட இந்தியப் பெருமுதலாளிகளும், பார்ப்பனியச் சக்திகளும், இவர்களின் இடதுசாரி வலதுசாரிக் கட்சிகளும் மாநில கங்காணிகளும் அவ்வப் போது அந்தச் சுவருக்கு மஞ்சள் பூசி ஊதுபத்தி ஏற்றி, பாரதமாதா பசனைபாடி அதற்கொரு தெய்வீகச் சக்தி இருப்பது போல் காட்ட தீபாராதனை செய்கிறார்கள்.

இந்தியா என்பது கொள்ளையர்கள். கோலோச்சும் மர்ம மாளிகை! அன்றாடம் வெளி வரும் கொள்ளைப்பட்டியல் இந்தக் கொள்ளையர்கள் யாரென்று அடையாளம் காட்ட வில்லையா? ஒன்றரை லட்சம் கோடி, இரண்டு இலட்சம் கோடி என்றல்லவா ஊழல் நடந்திருக்கிறது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற வேறுபாடு இல்லையே! “நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்; உங்கள் ஆசை நெஞ்சைத் தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்ற பாட்டை அல்லவா இவர்கள் நினைவுபடுத்துகிறார்கள்.

 “உலகமயம், “தாராளமயம் “ என்று இவர்கள் உரைத்த தெல்லாம் ஊழல்மயம், கொள்ளைமயம் என்பவற்றின் முகமூடிச் சொற்கள் என்று மக்கள் இப்போது புரிந்து கொண்டிருப்பார்கள். இவர்களில் யார், ஒட்டுமொத்த இந்தியாவை ஒன்றாகக் கட்டி வைக்கும் செல்வாக்கு படைத்த தலைவர். புற்றில் உறையும் பாம்புகளல்லவா இவர்கள்!

இன்னும் சில காலத்தில் இந்தக் கொள்ளையர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்வார்கள். இந்தத் பாம்புகள் ஒன்றையொன்று கொத்திக் கொள்ளும் இவர் களுக்குக் கங்காணி வேலை பார்த்து அதன் மூலம் கொள்ளையடித்துக் கொழுக்கும் தமிழகக் கங்காணி தலைவர்களும் மக்கள் எதிர்ப்புச் சூறைக் காற்றில் சிக்கிச் சீரழிவார்கள். இது உண்மை

எனவே, இன உணர்வாளர்கள் நம்பிக்கை இழக்க வேண்டிய நிலை இல்லை.

இன அடிப்படையில் இந்திய அரசால் தமிழர்கள் ஒடுக்கப்படுகிறார்கள்; இந்தியாவின் பங்களிப்புடன் ஈழத் தமிழர்கள் அழிக்கப்பட்டார்கள், மீனவத் தமிழர்கள் சிங்களர்களால் கொல்லப்படுகிறார்கள். இந்தியாவின் மறைமுக ஆதரவோடு, மலையாளிகள் முல்லைப் பெரியாறு உரிமையைப் பறித்தார்கள். கன்னடர்கள் காவிரி உரிமையைப் பறித்தார்கள். தெலுங்கர்கள் பாலாற்று உரிமையைப் பறிக்கிறார்கள்.

இத்தனைக்குப் பிறகும் தமிழர்கள் விழித்துக்கொள்ளாமல் இருக்க மாட்டார்கள். எனவே நம்பிக்கையோடு இன உணர்வாளர்கள் செயல்படவேண்டிய காலமிது. தமிழ் மக்கள் திரளுவார்கள். சரியான இலட்சியமும் சரியான அமைப்பும் இணையட்டும்

Pin It