வெவ்வேறு அணிவகுப்பாக நின்றுக்கொண்டு, எதிரெதிர் கட்சிகளாகக் காட்சி அளிப்பவர்கள் உண்மையில் ஒருவரோடு ஒருவர் ஒத்திசைந்து பல நேரங்களில் கூட்டுக் களவாணிகளாக செயல்படுகின்றனர். எனவே ஒருவர் ஊழலை இன்னொருவர் முன்முயற்சி எடுத்து வெளிப்படுத்துவதில்லை. ஏதாவது ஊடகமோ, ஊழல் எதிர்ப்பு செயல்பாட்டாளர்களோ பெரிதும் முயன்று ஒரு ஊழலை வெளிக்கொணர்ந்தால், அதைப்பிடித்துக் கொண்டு கொஞ்ச நாட்கள் கூச்சல் எழுப்பி முடிந்தவரை பதவி அரசியலில் இலாபம் பார்ப்பது என்ற அளவோடு நின்று விடுகிறார்கள்.

சோனியா காந்தியின் மருமகன் இராபர்ட் வத்ராவின் ஊழலை “ஊழலுக்கு எதிரான இந்தியா” அமைப்பின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளிப்படுத்தியதை பா.ச.க பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என வலியுறுத்துவதற்காக காங்கிரசு கட்சியின் பொதுச் செயலாளர் திக் விஜய்சிங் கூறிய ஒப்புதல் வாக்குமூலம் இந்த கூட்டுக் களவாணித் தனத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆளும் “பா.ச.க கூட்டணி ஆட்சிக் காலத்தில் வாஜ்பாயியின் உறவினர்களும், அத்வானியின் உறவினர்களும் பலகோடி ரூபாய் ஊழல்களில் ஈடுபட்டிருந்தது தெரிந்திருந்தாலும் காங்கிரசுக் கட்சி அதனை பெரிது படுத்தவில்லை. அந்த பெருந்தன்மையை பா.ச.க விடம் எதிர்ப்பார்க்கிறோம்” என்றார்.

சனநாயக அரண்மனைவாசிகள் அடிக்கும் கொள்ளையை எதிர்க்கட்சித் தலைமைகள் கண்டுகொள்ளாமல் விடுவது எழுதப்படாத ஒப்பந்தமாக நிலைபெற்றுவிட்டது. ஏனெனில் பல நேரங்களில் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் இணைந்தே ஊழல் கொள்ளையில் ஈடுபடுகின்றன.

மராட்டிய மாநிலத்தில் நடைபெற்ற பாசனத் திட்ட ஊழலில் 35ஆயிரம் கோடி ரூபாய் அரசுப் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இக்கொள்ளையில் பா.ச.க அனைத்திந்தியத் தலைவர் நிதின் கட்கரியும் பங்காளி. காங்கிரசு, சரத்பவாரின் தேசியவாத காங்கிரசு, பா.ச.க, சிவசேனா எல்லோரும் இணைந்தே இந்த கூட்டுக் கொள்ளையில் பங்கெடுத்திருக்கிறார்கள்.

இராபர்ட் வத்ராவின் ரியல் எஸ்டேட் ஊழலை அரவிந்த் கெஜ்ரிவால் அமபலப்படுத்திய போது சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாய் சிங் “கெஜ்ரிவால்கள் வாய் வலிக்கும் வரை ஊழலைப் பற்றி பேசி ஓயட்டும். அதனை யாரும் பொருட்படுத்த வேண்டாம். அவ்வாறு பொருட்படுத்தாது விட்டுவிட்டால் அவர்கள் ஊழல் குறித்து பேசிப் பேசி ஓய்ந்துவிடுவார்கள்” என்றார்.

கட்சிகள் ஒரு அரசியல் வர்க்கமாகவே செயல்படுகின்றன. தேர்தல் அரசியல் வாதிகள் முதலாளிகளைப் போலவே ஓர் ஆளும் வர்க்கமாக – ஒட்டுண்ணி ஆளும் வர்க்கமாக செயல்படுகிறார்கள். கட்சிகள் கொஞ்சம் முதலீடு செய்து பெருந்தொகை இலாபம் ஈட்டும் தொழில் நிறுவனங்களாக மாறிவிட்டன.

கம்பெனிகளுக்கு காரியமாற்றி கையூட்டு பெறுவது என்ற நிலை மாறி கம்பெனிகளும், கட்சித் தலைவர்களும் ஒன்றிணைந்தே கூட்டுக் கொள்ளை நிறுவனங்கள் நடத்துவது என்ற நிலையை எட்டிவிட்டார்கள். இராபர்ட் வத்ரா – டி.எல்.எப் மனைத்தொழில் கூட்டுக் கொள்ளை இதற்கொரு சான்று. பன்னாட்டு முதலாளிகளோடு கூட்டு சேர்ந்துள்ள இந்தியாவின் முதன்மை மனைத்தொழில் (ரியல் எஸ்டேட்) நிறுவனம் டி.எல்.எப் (Delhi Land & Finance Limited). இந்த டி.எல்.எப் நிறுவனம் சோனியா காந்தியின் மருமகன் இராபர்ட் வத்ராவிற்கு 65 கோடி ரூபாய் வட்டியில்லா கடன் கொடுத்து, தானே குறைந்த விலையில் மனைகளை அவருக்கு விற்பனை செய்து அதற்கு பதிலுதவியாக தில்லியை ஒட்டி உள்ள அரியானா மாநிலத்தில் சட்டத்தை வளைத்து நிலங்களை வாங்கிக் குவித்துள்ளது அம்பலமானது. அரவிந்த் கெஜ்ரிவாலும், இந்து நாளேடும் பல்வேறு ஆவணங்களின் அடிப்படையில் இதனை வெளிப்படுத்தினர்.

இந்திய சனநாயக அரசக் குடும்பத்தைச் சேர்ந்த வத்ரா 2007 ஆம் ஆண்டு தனது மொத்த சொத்து மதிப்பு ரூபாய் 50 இலட்சம் என அரசுக்குக் காட்டியுள்ளார். அப்போது அவருடைய முதன்மைத் தொழில் உலோகத்தாலான அழகு பொருட்கள் விற்பனை செய்வதாகும். அடுத்த ஆண்டே அதாவது 2008 இல் அவருடைய சொத்து மதிப்பு 7 கோடி ரூபாயாக உயர்ந்தது. 2009 இல் 18 கோடி ரூபாயாக இரண்டு மடங்கையும் தாண்டியது. 2010 இல் அவருடைய சொத்து மதிப்பு 60.5 கோடியாக ஏறியது. அதாவது 4 ஆண்டுகளுக்குள் இந்த அரண்மனை மருமகனின் சொத்து 121 மடங்கு உயர்ந்துள்ளது.

குறிப்பாக 2009க்கும் 2010க்கும் இடைப்பட்ட காலத்தில் இராபர்ட் வத்ரா புது தில்லியில் ஹில்டன் கார்டன் ஹோட்டல் என்ற 114 அறை உள்ள ஆடம்பர விடுதியை விலைக்கு வாங்கியுள்ளார். இது தவிர தில்லியின் மையப் பகுதியில் 7 அடுக்குமாடி குடியிருப்புகள், அரியானாவில் 160 ஏக்கர் பண்ணை, ஸ்கை லைட் ஹாஸ்பிட்டாலிட்டி என்ற தொடர் உணவு விடுதிகள், ஸ்கை ஹை ரியல்டி என்ற மனைத் தொழில் நிறுவனம் என்று அடுக்கடுக்காக வாங்கி குவித்திருக்கிறார். இவற்றின் கணக்கு வழக்குகளில் பள்ளி மாணவன் கூட எளிதில் கண்டுபிடிக்கும் அளவிற்கு தில்லு முல்லு செய்திருக்கிறார். ஆளும் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் எந்த சட்டம் என்ன செய்துவிட்டும் என்ற துணிச்சல் இருப்பதால் தான் இவ்வாறு மனம் போன போக்கில் கணக்கு வழக்குகளை வைத்திருக்கிறார்.

எடுத்துக்காட்டாக ஸ்கை ஹை ரியல்டி நிறுவனத்தில் இராபர்ட் வத்ரா மட்டுமே ஒரே ஊழியர். அவருக்கு சம்பளம் ஆண்டுக்கு 60 இலட்சம் என்று எழுதப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் சம்பளப்பட்டியலில் வேறு யாருமே இல்லை. அந்நிறுவனம் 2009-2010 ஆம் ஆண்டில் என்ன வரவு செலவு செய்தது என்பதற்கான நாள் குறிப்பே கிடையாது. 2009இல் அதன் முதலீடு 15 கோடி ரூபாய் என்றும், 2010 ஆம் ஆண்டின் இறுதியில் 50 கோடி ரூபாய் இழப்பு என்றும் கணக்கு காட்டப்பட்டுள்ளது. மனநோயாளி கூட இந்த கணக்கு பித்தலாட்டத்தை புரிந்துக் கொள்ள முடியும். ஆனால் இந்த வரவு செலவுக் கணக்கை சட்டப்படியான ஒரு தணிக்கையாளர் தணிக்கை செய்திருக்கிறார். தணிக்கை செய்யப்பட்ட அந்த வரவுச் செலவு கணக்கை வத்ரா வருமான வரித்துறைக்கு முன்வைத்திருக்கிறார். வருமானவரித் துறை அதிகாரிகளும் அதனை எந்த கேள்வியும் எழுப்பாமல் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

டி.எல்.எப் நிறுவனம் இராபர்ட் வத்ராவிற்கு வழங்கிய வட்டியில்லா கடனான 65 கோடி ரூபாயை அவர் தொழில் வளர்ச்சிக்காக வழங்கப்பட்ட முன் தொகை என்கிறது. வேறு யாருக்கும் இவ்வாறான வட்டியில்லா கடனோ, முன் தொகையோ வழங்காத நிலையில் வத்ராவிற்கு மட்டும் 65 கோடி ரூபாய் வழங்கியதன் காரணம் என்ன என்று கேட்டால் டி.எல்.எப் முதலாளி கே.பி.சிங் கூறுகிறார் “இது நட்புக்காக செய்த உதவி” என்று.

ஆனால் அதே 2009-2010 ஆம் ஆண்டில் டி.எல்.எப் மிகப்பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியிருந்ததை அந்நிறுவன பங்குதாரர்களுக்கு கே.பி.சிங் கொடுத்த அறிக்கையே எடுத்துகாட்டுகிறது. மேற்குலக நாடுகளில் 2008 இல் ஏற்பட்ட வங்கிச் சரிவு டி.எல்.எப்-ன் நிதிநிலையை கடுமையாக பாதித்திருப்பதாகவும் அதனால் டி.எல்.எப் நிறுவனம் 17 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கி தவிப்பதாகவும் அதனால் இந்திய அரசு வங்கிகளில் தான் பெற்ற கடனுக்கான வட்டியை குறைத்து தருமாறு வலியுறுத்தி வருவதாகவும் அந்த அறிக்கையில் கே.பி.சிங் கூறியிருந்தார்.

ஆனால் இதே காலத்தில் தான் சோனியாவின் மருமகனுக்கு 65 கோடி ரூபாய் வட்டியில்லாமல் கொடுத்திருக்கிறார். சட்டப்படி இதற்கு வங்கிகள் அனுமதி அளிக்கவே முடியாது. ஆனாலும் அரண்மனை குடும்பம் என்பதால் சட்டம் வளைந்து கொடுத்திருக்கிறது.

டி.எல்.எப் வத்ராவிற்கு இந்த 65 கோடி ரூபாயை நட்புக்காக கொடுத்ததாக நம்ப முடியவில்லை. இந்த நட்புக்கு விலையாக அரியானா காங்கிரசு அரசு எல்லை மீறிப் போய் சட்டத்தை வளைத்து ஹயாத் பூர், ஹசன் பூர், கோர்குவான் ஆகிய ஊர்களில் அடிமாட்டு விலைக்கு ஏராளமான நிலத்தை டி.எல்.எப் வாங்குவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறது. இந்த நட்புக்கு மானேசர் என்ற கிராமத்தில் இராபர்ட் வத்ராவிற்கு 3.5 ஏக்கர் நிலத்தை பரிசாக டி.எல்.எப் வழங்கியிருக்கிறது. அரியானா மாநில நிலப்பதிவு தலைமை அதிகாரி அசோக் கெம்கா இது சட்ட விரோத பரிமாற்றம் என்று இந்த நிலப்பரிமாற்றத்தை ரத்து செய்து ஆணையிட்டதால் அவர் அப்பதவியிலிருந்து வேறு இடத்துக்கு மாற்றல் செய்து தூக்கி அடிக்கப்பட்டார்.

இராபர்ட் வத்ராவின் மனைத் தொழில் ஊழலை அம்பலப்படுத்திய அரவிந்த் கெஜ்ரிவால் அடுத்த சில நாட்களில் பா.ச.க தலைவர் நிதின் கட்கரியின் ஊழலையும் வெளிப்படுத்தினார்.

மராட்டிய மாநிலம் விதர்பா பகுதியானது உழவர்களின் தற்கொலை பூமி என்பது ஊர் அறிந்த செய்தி. அதுபற்றி கூக்குரல் எழுந்ததையொட்டி அடுத்தடுத்து வந்த மராட்டிய மாநில ஆட்சியாளர்கள் விதர்பா பகுதிக்கு பாசன வளர்ச்சி திட்டங்களை அடுக்கடுக்காக அறிவித்து செயல்படுத்தினர். ஏதோ விதர்பா உழவர்களின் கண்ணீரைத் துடைப்பதற்காக இத்திட்டங்களை ஆட்சியாளர்கள் மேற்கொண்டிருப்பதாக அப்பாவிகள் மட்டுமே நம்பினர். மக்களின் கண்ணீரிலும் காசு பார்க்கும் வித்தையை நாற்காலிகாரர்கள் அறிவார்கள். முதலில் இப்பாசன திட்டங்களுக்கு 35 ஆயிரம் கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டது. ஒரு சில மாதங்களுக்குள் இத்திட்டச் செலவு 70 ஆயிரம் கோடி ரூபாய் என இரண்டு மடங்காக ஊதிப் பெருக்கப்பட்டது.

மராட்டிய மாநிலத்தை இன்று ஆள்வது காங்கிரசு - தேசியவாத காங்கிரசு கூட்டணி ஆகும். ஆனால் இந்த 35 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் கொள்ளையில் எதிர்க்கட்சியான பா.ச.கவுக்கும் பாரபட்சமின்றி பங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களில் முதன்மையாக பயன்பெற்ற ஒப்பந்தக்காரர்கள் மூவர். ஒருவர் பா.ச.க மேலவை உறுப்பினர், இன்னொருவர் தேசிய வாத காங்கிரசுக் கட்சியை சேர்ந்தவர், மற்றொருவர் காங்கிரசுக்காரர். இதில் பா.ச.க அனைத்திந்திய தலைவர் நிதின் கட்கரிக்கு மராட்டிய அரசு அளித்துள்ள பங்கு “சிறப்பானது”.

நிதின் கட்கரி சிறிய தொழில் முனைவோராக இருந்து 1995 – 99 ஆண்டுகளில் பா.ச.க-சிவசேனா கூட்டணி ஆட்சியில் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தபோது பெரும் தொழில் அதிபராக மாறிய புள்ளி ஆவார். சர்க்கரை ஆலை, மின் உற்பத்தி நிறுவனங்கள் என 12 தொழிற்சாலைகளுக்கு உரிமையாளர் கட்கரி. இவருடைய தொழில் முறை பங்குதாரரான அஜய் சஞ்செட்டி பா.ச.க வின் மாநிலங்களவை உறுப்பினர். கட்கரியின் பினாமியாக செயல்படுவதால் சஞ்செட்டிக்கு கிடைத்த பரிசே இந்த மாநிலங்களவை உறுப்பினருக்கான பதவி. இந்த சஞ்செட்டி ஒரு பாசனக் கால்வாய் திட்டத்திற்கு ஒப்பந்தக்காரராக மராட்டிய அரசால் தேர்வு செய்யப்பட்டார். அந்த ஒப்பந்தத்தை எடுக்கும் போது அத்திட்டத்திற்கு 1000 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டது. ஒப்பந்தம் எடுத்த பிறகு அத்திட்டச் செலவு 3000 கோடி ரூபாயாக மாற்றி எழுதப்பட்டது. வறட்சியில் வாடும் உழவர்களின் பெயரால் அஜய் சஞ்செட்டி அடித்த இந்த 2000 கோடி ரூபாய் கொள்ளையில் பெரும் பயனாளி நிதின் கட்கரியே ஆவார்.

மராட்டிய பா.ச.க தலைவர்களும் மராட்டிய மாநில அரசின் துணை முதலமைச்சரும் தேசிய வாத காங்கிரசு தலைவர் சரத்பவாரின் மருமகனுமான (அக்காள் மகன்) அஜித் பவாரும், நிதின் கட்கரியும் கூட்டுக் கொள்ளையர்களாகவே செயல்பட்டுள்ளனர்.

நிதின் கட்கரியின் ’பூர்த்தி மின்சார மற்றும் சர்க்கரை ஆலை’ வட்டியில்லா கடன் என்ற பெயரால் ஐடியல் ரோடு பில்டர்ஸ் என்ற நிறுவனத்திடம் 164 கோடி ரூபாய் பெற்றுள்ளதை 23.10.2012 நாளிட்ட டைம்ஸ் ஆப் இந்தியா ஏடு அம்பலப்படுத்தியது. இந்த ஐடியல் ரோடு பில்டர்ஸ் நிறுவனம் நிதின் கட்கரி பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த காலத்திலிருந்து இன்று வரை பல்லாயிரம் கோடி ரூபாய் அரசுப் பணிகளுக்கு ஒப்பந்தம் பெற்றுள்ள நிறுவனமாகும்.

மும்பை மாநகரத்தின் குடிசை வாசிகளை தொகை தொகையாக வெளியேற்றிவிட்டு அங்கு பல்லாயிரம் கோடி மதிப்பில் அடுக்குமாடி கட்டிடங்களை கட்டுவதற்கு தனியாருக்கு அனுமதி அளித்து கொள்ளையடித்ததில் காங்கிரசு, தேசியவாத காங்கிரசு, சிவசேனை கூட்டணி ஊரறிந்த ஒன்று.

தமிழ்நாட்டில் பல்லாயிரம் கோடி கொழிக்கும் டாஸ்மாக் சாராய கடைகளுக்கு சீமை சாராயம் வழங்குவதில் தி.மு.க வின் மு.க.ஸ்டாலினின் பினாமி நிறுவனங்களும், செயலலிதாவின் தோழி சசிகலாவின் நிறுவனங்களும் சச்சரவு ஏதுமின்றி பங்கு பெறுகின்றன. ஊரெங்கும் நடைபெறும் மணல் கொள்ளையில் தி.மு.க, அ.தி.மு.க தொழில் கூட்டணி அனைவரும் அறிந்த ஒன்று.

இவ்வாறு ஊழல் கொள்ளையில் ஈடுபடாமல் தேர்தல் கட்சிகள் நிமிர்ந்து நிற்கவே முடியாது. தங்களது சுரண்டல் கொள்ளையில் கட்சித் தலைவர்களை இணைத்துக் கொள்ளாமல் முதலாளிய நிறுவனங்களும் இன்றுள்ள வளர்ச்சியைப் பெற்றுவிட முடியாது. அரசின் கட்டுப்பாடுகள் இருந்தக் காலத்தை பர்மிட்-லைசன்ஸ் இராஜ்ஜியம் என கேலி செய்தவர்கள் உண்டு. இந்தக் கட்டுப்பாடுகளால் கையூட்டு வளர்வதாக இவர்கள் திறனாய்வு செய்தார்கள். அதிகார வர்க்க கட்டுபாட்டில் இருந்து தொழில் துறையை விடுவித்தால் தான் ஊழல் மறையும் என வாதிட்டார்கள்.

ஆனால் அரசுக் கட்டுப்பாடுகள் பெருமளவு தளர்ந்து தாராளமயப் பொருளியல் கோலோச்சத் துவங்கிய 1990களுக்கு பிறகுதான் இந்த கையூட்டுக் கொள்ளை பாய்ச்சல் வேகத்தில் வளர்ந்து புதிய பரிணாம வளர்ச்சி அடைந்தது. கட்டுப்பாடுகள் இருந்த காலத்தில் கட்சிகள், கம்பெனிகள், அதிகாரிகள் என்ற மூன்று தரப்பினரும் தனித்தனி அடையாளத்தோடு, தனித்தனி இருப்பு நிலையில் இருந்துக் கொண்டு கையூட்டை பரிமாறிக்கொண்டார்கள். காரியத்தை நடத்திக் கொண்டார்கள். ஆனால் தாராளமயம் தலைத் தூக்கிய பிறகு இவர்களுக்கு இடையே இருந்த தனித்தனி அடையாளங்கள் பெருமளவு மறைந்தன. கட்சிகளும், கம்பெனிகளும் பிரித்தறிய முடியாத படி ஒன்றுக்குள் ஒன்று கலந்தன. ஒட்டுண்ணி முதலாளியம் (Crony Capitalism) என்று இதற்குப் பெயர். இன்று ஒட்டுண்ணி முதலாளிய ஆட்சி முறை (Crony Capitalist Raj) நடக்கிறது.

பணம் படைத்தவர்களே அரசியல் தலைவர்களாவது, அரசியல் தலைவர்கள் முதலாளிகளாவது, அரசியல் மூலமாக முதலாளிகள் உருவாவது, முதலாளி அரசியல் பதவி பெறுவது என ஒன்றோடு ஒன்று பிணைந்துவிட்ட நிலை இது.

ஒட்டுமொத்த தேர்தல் கட்சிகளே முதலாளிய நிறுவனங்கள் போல் ஆகிவிட்டன. தேர்தல் அரசியல் கொடுக்கல் வாங்கலாக நிலைத் தாழ்ந்து போனது. கட்சிகள் முன்வைக்கும் கொள்கைகள் பாலும், கட்சித் தலைவர்களின் ஆற்றல்கள் மீதும் ஈர்க்கப்பட்டு மக்கள் கட்சிகளுக்கு ஆதரவு தருவது என்ற நிலை பெருமளவு குறைந்துவிட்டது. கட்சிகளின் அடுத்தடுத்த தலைமுறைத் தலைவர்கள் நிறுவனம் நடத்தும் மேலாளர்களாக (மேனேஜர்களாக) இருந்தால் போதும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. பணத்தைப் பட்டுவாடா செய்து வாக்குகளை கொள்முதல் செய்வது என்பதாகத் தேர்தல் நடவடிக்கை பெரிதும் மாறிய பிறகு கட்சிகளுக்கு இத்தகைய மேலாளர்களே போதுமானவர்களாக இருக்கிறார்கள்.

இத்தகைய அரசியலில் முதன்மை பயனாளிகளாக பெரு முதலாளிகளே உள்ளனர். 1990இல் தாராளமயம் தலையெடுத்த பிறகு இந்தியாவில் கோடிசுவரர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை ஏடுகளும், அரசியல் தலைவர்களும் பெருமையாகச் சொல்லிக் கொள்கின்றனர்.

“1990க்கு முன்பு 100 கோடி டாலர் சொத்து இருந்த கோடிசுவரர்கள் இரண்டே இரண்டு பேர்தான். அவர்களின் மொத்த சொத்து மதிப்பு 320 கோடி டாலர். ஆனால் 2012 வாக்கில் இவ்வாறான கோடீசுவரர்கள் 46 பேர் உள்ளனர். இவர்களின் சொத்து மதிப்பு 17,630 கோடி டாலர் அதாவது 8 இலட்சத்து 51 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஆகும். இந்த 46 பேரில் 20 பேரின் முதன்மைத் தொழில் மனை வணிகம், கட்டுமானம், சிமெண்ட், சுரங்கம், ஊடகம் ஆகியவை ஆகும். இந்த 20 முதலாளிகளின் சொத்து மதிப்பு 58 இலட்சத்து 28 ஆயிரத்து 900 கோடி ரூபாயாகும். இவர்கள் தான் மற்ற பெருமுதலாளிகளைவிட கட்சிகளோடு மிக நெருக்கமாக இருந்து கூடுதல் பலன் அடைகிறார்கள்” என்று பொருளியல் ஆய்வாளர் மிஷேல் வால்டன் கூறுவது கவனங் கொள்ளத்தக்கது. (காண்க :Inequality, Rents and The Long Run Transformation Of India – Michael Walton, 2012).

டி.எல்.எப் வரலாறு வால்டன் கூற்றுக்கு சான்றாக அமைந்துள்ளது. மனை வணிகத் தொழிலில் டி.எல்.எப் 1963 ஆம் ஆண்டிலிருந்தே இருக்கிறது என்றாலும் 1981 இல் இராசீவ் காந்தியின் நட்பு தனக்கு கிடைத்த பிறகுதான் தான் மனைத் தொழிலில் பாய்ச்சல் வேகம் கண்டதாக டி.எல்.எப் தலைமை இயக்குநர் கே.பி.சிங் அடிக்கடி பெருமையோடு கூறிக்கொள்கிறார். எனவே டி.எல்.எப் – சோனியா காந்தி குடும்ப உறவு இராபர்ட் வத்ரா மூலம் ஏற்பட்ட புதிய உறவல்ல, இராசீவ் காந்தி காலத்திலேயே தொடங்கிய உறவு என்பது தெளிவாகிறது. இந்த உறவின் மூலம் கூடுதல் பயன் பெற்ற முதன்மைப் பயனாளி டி.எல்.எப் இன் கே.பி.சிங் தான். ஒட்டுண்ணி வலைப்பின்னலில் அரசியல் தலைவர்கள் கோடி கோடியாய் கொள்ளையடித்திருந்தாலும் இந்தக் கொள்ளையில் முதன்மை பயனாளிகள் பெரு முதலாளிகளே ஆவர்.

அரவிந்த் கெஜ்ரிவாலோ, ஊழலை அம்பலப்படுத்தும் ஏடுகளோ இந்த உண்மையை காணத் தவறுகிறார்கள் அல்லது தயங்குகிறார்கள்.

பொருளியலில் தாராளமயமும், அதிகாரம் மையத்தில் குவிதலும், அரசியலில் குற்ற மயமும், தேர்தலில் ஊழல் மயமும் ஒன்றுக்கொன்று துணை செய்பவை. ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிக்க முடியாத படி பின்னிப்பிணைந்தவை எனவே தாராளமயத்தை எதிர்க்கொள்ளாமல் ஊழல்மயத்தை எதிர்க்க முடியாது. ஊழல் அரசியல்வாதிகள் தொடரும் வரை தாராளமயத்தை தடுத்துவிட முடியாது. ஊழல் பணம் இல்லாமல் தேர்தல் கட்சிகள் கிடையாது. எனவே தேர்தல் அரசியலுக்குள் நின்றுக் கொண்டு ஒட்டுண்ணி முதலாளிய ஆட்சி முறைக்கு முடிவு கட்ட முடியாது.

அதிகாரம் எந்த அளவிற்கு மக்களிடமிருந்து அயன்மைப்பட்டு மையத்தில் குவிக்கப்படுகிறதோ அந்த அளவிற்கு ஊழலும் எளிதில் கண்ணுக்கு தெரியாமல் மறைக்கப்படும். எனவே அதிகாரம் மையப்படுதலை ஒழிக்காமல் இவை எதையும் ஒழிக்க முடியாது.

அதிகாரம் மையப்படுவதை உடைப்பது என்பது தேசிய இன இறையாண்மையை மீட்பதில் அடங்கியிருக்கிறது. அதிகாரப் பரவலில் தங்கியிருக்கிறது.

ஊழல் அரசியலிலிருந்து மீள்வது என்பது தேர்தல் அரசியலுக்கு வெளியே இருக்கிறது.

இவைதான் ஊழலை ஒழிப்பதற்கான உறுதியான அடிப்படையை அளிக்கும். அதைவிடுத்து இன்றுள்ள அமைப்புக்குள்ளேயே ஊழலுக்கு எதிராக நடைபெறும் மக்கள் இயக்கங்கள் ஊழலின் பயணத்திற்கு வேகத்தடையை ஏற்படுத்தலாம். அந்த அளவுக்கு அது பயந்தரலாம். ஆனால் அது ஊழலின் பயணத்தை நிறுத்திவிட முடியாது.

Pin It