“முதலாளியம் ஒழிக” என்ற முழக்கம் அமெரிக்காவையும், ஐரோப்பாவையும் பிடித்து ஆட்டுகிறது. முதலாளியவாதிகள் சற்றும் எதிர்பார்த்திராத எதிர்ப்பு அலை இது. கடந்த செப்டம்பர் 17 அன்று வால் ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம் என்ற முழக்கத்தோடு நியூயார்க்கின் வால் ஸ்ட்ரீட்டில் உள்ள பங்குச்சந்தை வளாகத்தில் தொடங்கிய முற்றுகைப் போராட்டம் இன்று அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் உள்ள முதலாளிய நிறுவனங்களில், பெரு வங்கி அலுவலகங்களில் முற்றுகையாக வளர்ந்து வருகிறது.

"நாங்கள் 99 விழுக்காட்டினர்" என்ற முழக்கத்தோடு பேரணிகளும், ஆர்ப்பாட்டங்களும், மறியல்களும் நடக்காத நகரங்களே இல்லை என வட அமெரிக்கா அதிர்ந்து கொண்டிருக்கிறது.

மூன்றாண்டுகளுக்கு முன்னால் உணர்ச்சிகரமாக ஒபாமாவுக்குப் பின்னால் அணி திரண்டிருந்த மாணவர்கள், இளைஞர்கள், உழைப்பாளர்கள், கறுப்பின மக்கள் ஆகியோர் இன்று அவருக்கு எதிராக மட்டுமின்றி நடப்பில் உள்ள அமெரிக்க அரசியலுக்கு எதிராகவே அணிதிரண்டுள்ளனர். வேலையின்மை, வீடின்மை ஆகியவற்றிற்கு எதிராக எழுந்த இப்போராட்டம் நிதிமூலதனத்தால் வழிநடத்தப்படும் ஒட்டுண்ணி முதலாளிய அரசியலுக்கு எதிராகவே திரும்பியுள்ளது.

எதிரிகளை “1 விழுக்காட்டினர்” (1%) எனக் குறிக்கும் போராட்டக்காரர்கள் இந்த ஒரு விழுக்காட்டினருக்குள் நிதிமூலதன அதிபர்கள், உலகமய முதலாளிகள் ஆகியோரை மட்டுமின்றி அனைத்துக் கட்சியையும் சேர்ந்த உயர்மட்ட அரசியல் வாதிகள், அதிகார வர்க்கத்தினர், உச்சநிலை நீதிபதிகள், ஊடக அதிபர்கள் ஆகியோர் இணைந்த ஆதிக்க வலைப்பின்னலையே குறிக்கின்றனர்.

'புதிய பொது உணர்வு" (New Common Sense) என்ற பெயரில் வால் ஸ்ட்ரீட் வளாகத்தில் 09.11.2011 அன்று போராட்ட அவையினர் வெளியிட்ட பேரறிக்கை முதலாளியத்திற்கு எதிரான பிரகடனமாகவே உள்ளது. 99 விழுக்காட்டு மக்களுக்கு அனைத்து வகை பொது வெளியும் மறுக்கப்பட்டுள்ளதை நிரல்படுத்தி அம்பலமாக்கியது இப் பேரறிக்கை. நிதிமூலதனப் பேயாட்சியின் பிடிக்குள் ஒட்டுமொத்த வட அமெரிக்க அரசியலும் சிக்கியுள்ளதை அது தெளிவுப்படுத்தியது. அரசியல் கட்சிகள், அதிகார வர்க்கம், நீதித்துறை, ஊடகம் அனைத்தும் இணைந்த ஒட்டுண்ணி வலைப்பின்னலில் ஒட்டுமொத்த அமெரிக்கச் சமூகமும் சிக்கிக்கொண்டு பெரும்பான்மை மக்களின் விழைவுகள், கருத்துகள் ஆகியவை வெளிவரவே முடியாமல் அடைக்கப்பட்டிருப்பதும் இவ்வறிக்கையில் துல்லியமாக வலுவான ஆதாரங்களோடு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அரசு, நீதித்துறை, ஊடகம் அனைத்திலும் உண்மையான மக்கள் பங்கேற்பைக் கோரும் மாற்று சனநாயகத்தை இப்போராட்டம் வலியுறுத்துகிறது. குடியரசுக் கட்சி அல்லது சனநாயக கட்சி என்ற அமெரிக்காவின் தேங்கிய அரசியலில் ஒரு முறிவை வலியுறுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டமாக இது வளர்ந்துள்ளது.

“தலைவரற்ற சனநாயகம்” என்று கூறிக்கொண்டாலும் திசைத் தெரியாத அலங்கோலத்தை அது முன்வைக்கவில்லை. முற்றுகைப் போராட்டக் களம் ஒவ்வொன்றும் பொறுப்பான விவாத அரங்காக மாறி வருகிறது. இவ்விவாதங்களின் ஊடாக மலரும் ஒருமித்த கருத்துகளே கொள்கை அறிவிப்புகளாக வெளிவருகின்றன.

கூடாரம் அமைத்து ஒன்றாக சமைத்து ஒன்றாக உணவருந்தி ஒன்றாக விவாதித்து ஒன்றாக படித்து ஒன்றாக உறங்கி இந்த இளைஞர்கள் தங்களுக்குள் அற்புதமான தோழமையை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். பொறுப்பான ஒழுங் கமைவு போராட்டக்களங்களில் நிலவுகிறது. ஒவ்வொரு நாளும் காலையிலிருந்து இரவு வரை என்னென்ன நிகழ்ச்சி நிரல் என்பது முடிவு செய்யப்பட்டு எழுதிப்போடப்படுகிறது. இணையதளங்களிலும் வெளியாகிறது. அந்த ஒழுங்கின்படியே நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

சுற்றுமுறையில் வளாகத்தை தூய்மைச் செய்தல், சமைத்தல், மாற்று ஊடகங்களை உருவாக்குதல்-உறவாடுதல், விரிவடைந்து வரும் போராட்டக்காரர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடாரங்களை ஒழுங்கமைத்தல் என எல்லாம் கச்சிதமான வேலைப் பிரிவினையின் கீழ் நடக்கின்றன. போராட்டக் களம் ஒவ்வொன்றிலும் அறிவார்ந்த அரசியல், பொருளியல் நூல்களும் குறுந்தகடுகளும் ஏராளமாக குவிந்துள்ளன. காரல் மார்க்சும், சேகுவேராவும், காந்தியும் விரும்பிப்படிக்கப்படுகின்ற அறிஞர்கள் ஆவர்.

வட அமெரிக்க காவல்துறை இவர்களை வெளியேற்ற முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. ஏறத்தாழ 1000 பேர் கைது செய்யப்பட்டிருந்தாலும் பலவித அச்சுறுத்தலுக்கு உள்ளானாலும் போராட்டக்காரர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்த வண்ணமே உள்ளது.

ஆயினும் அமெரிக்க அரசு பலவகையிலும் நெருக்கடிகளைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. முதலில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. மின்னாக்கிகள் (ஜெனரேட்டர்) வைத்துக் கொண்டார்கள். ஜெனரேட்டர்களையும் காவல்துறை பறிமுதல் செய்தது. இது ஒரு பெரிய சிக்கல். ஏனெனில் இது குளிர் காலம். கூடாரத்திற்குள் வெப்பமூட்டுவதற்கும், சமைப்பதற்கும் அவர்களுக்கு மின்சாரம் அவசியம் தேவை. ஆனாலும் போராடும் இளைஞர்கள் அயர்ந்து விடவில்லை. ஆளுக்கொருமணிநேரம் இரண்டு மணிநேரம் என்று சைக்கிள் டைனமோவை சுற்றி சுழற்சி முறையில் இளைஞர்கள் மின்சாரத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள்.அவசியத் தேவைக்கு மட்டும் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்தி கொள்கிறார்கள்.

ஒலிபெருக்கி இல்லை. ஆயினும் பல்லாயிரக்கணக்கில் கூடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். முதலில் இருப்பவர் முடிந்தவரை உரத்து பேசுகிறார். அந்த ஒலி எட்டும் எல்லையில் இருக்கும் இன்னொருவர் அதையே மீண்டும் உரத்துக் கூறுகிறார். கொஞ்ச தொலைவில் இருக்கும் இன்னொருவர் மறுஒலிபரப்பு செய்கிறார். இவ்வாறு பழைய கால கூட்டங்களைப் போல் போராட்ட அவையை அவர்கள் நடத்துகிறார்கள்.

ஒட்டுமொத்தத்தில் இது நாள் வரை வெறும் நுகர்வு வாழ்க்கையில் அமிழ்ந்திருந்த அமெரிக்காவின் இளைய சமூகம் தன்னைத் தானே உள்நோக்கி பார்க்கின்றது. தன்னாய்வு செய்துகொள்கிறது. அரசியல்மயப்படுதல் ஒரு மக்கள் இயக்கமாகவே நடந்து வருகிறது.

ஆயினும் ஒரு மாற்று மெய்யியலின் கீழ் இந்த அணித் திரட்சி நடந்துவிட்டதாக சொல்ல முடியாது. புதிய பொது உணர்வு பேரறிக்கை அமெரிக்க அரசமைப்பு வடிவத்திற்குள் ளேயே மாற்றுத் தீர்வுகளை முன்வைக்க முயல்கிறது. முதலா ளியம் ஒழிக என முழங் கினாலும், நாட்டின் அனைத்து பொருளியல், அரசியல் அமைப்பு முறைகளும் மக்களின் கண்காணிப்புக்கும், கட்டுப் பாட்டிற்கும் உட்பட்டதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினாலும் இதற்கான மாற்று முறைமைகளை வரை யறுப்போடு இன்னும் முன் வைத்துவிடவில்லை.

“வால் ஸ்ட்ரீட்டைக் கைப் பற்றுவோம்” என்ற போராட்ட முழக்கம் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் மட்டுமின்றி மேற் குலகம் முழுவதையும் பற்றி யுள்ளது. பிரான்ஸ், ஸ்பெயின், பிரிட்டன், கிரீஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் நகரங் கள் எங்கும் இளம் தலை முறையினர் இதே போன்ற வடிவங்களில் போராடி வரு கின்றனர். இப்போராட்ட களங் களுக்கு இடையே வலைத் தளங்கள் வழியாக உலகுதழுவிய விவாதங்களும் நடந்துவரு கின்றன. அந்தந்த நாட்டிற்கும் அவரவர்கள் விரும்புகிற மாற்று திட்டங்களை முன்வைத்து வருகிறார்கள்.ஆயினும் “முதலாளியம் ஒழிக”, “நாங்கள் 99 விழுக்காட்டினர்” என்பவை மட்டும் அனைத்து நாடுகளிலும் மைய முழக்கங்களாக எழுப்பப் படுகின்றன.

உலகமெங்கும் இது ஏன் இப்பொழுது நிகழ்கிறது?

காரல் மார்க்சு ஆய்ந்து சொன்னது போல முதலாளியம் அதன் பிறப்பு காலத்திலிருந்தே வெவ்வேறு வகை நெருக் கடியைச் சந்தித்துதான் வரு கிறது. ஆயினும் தனக்கு வரும் நெருக்கடியை பலவழிகளில் மக்கள் மீது சுமத்தி தப்பித்து கொண்டே வருகிறது. அதற் கான வாய்ப்புகள், வெளிகள் முதலாளியத்திற்கு இருந்தன. ஆயினும் அவ்வாறான வாய்ப் புகள் இப்போது பெருமளவு சுருங்கிவிட்டன.

உலக ஏகாதிபத்தியங்கள் காலனிய நாடுகளின் வளங் களை ஒட்டச் சுரண்டுவதன் மூலமாகவும் அவற்றைத் தங்களது சந்தையாக கைப் பற்றிக் கொண்டதன் வழியா கவும் அளவு கடந்த உபரியைப் பெற்றன. அந்த உபரியில் மிகச்சிறிதளவை தங்கள் நாட்டு மக்களுக்கு வழங்கி அவர்கள் வாழ்க்கை தரத்தை மேம் படுத்தின. இதன் மூலமாக முதலாளியத்திற்கு எதிரான சிந்தனை பெரும்பாலான மக்களை கவ்வாமல் பார்த்துக் கொண்டன.

உலகப் போர்களின் முடி வுக்கு பிறகு உலகெங்கிலும் தேச விடுதலைப் போராட்டங்கள் எழுந்து காலனி ஆட்சிகள் முடிவுக்கு வந்த போது தேசச் சந்தைகளை மீட்டு கொள்ளும் முயற்சிகள் வலுப் பெற்றன. ஏகாதிபத்திய முதலாளிகளுக்கு இது ஒருவகை நெருக்கடியை ஏற்படுத்தியது.

ஆயினும் புதிதாக அரசியல் விடுதலை அடைந்த நாடுகளின் முதலாளிகளோடு கூட்டணி அமைத்துக் கொண்டு தங்களது காலனியச் சுரண்டலைப் புதிய வகையில் முன்னெடுத்தன. இன்னொருபுறம் இரஷ்யப் புரட்சியைத் தொடர்ந்து எழுச்சி பெற்ற பொதுவு டைமைச் சிந்தனையின்பால் மக்கள் சாய்ந்து விடாமல் இருக்க தங்கள் நாடுகளில் கல்வி, மருத்துவம், அடிப்படை வசதிகள் போன்ற நலத் திட்டங்களை நடத்தின. கால னிய சுரண்டலின் உபரி அந்த வாய்ப்பை வழங்கியது.

ஒரே காலத்தில் 1991ல் நிகழ்ந்த பொதுவுடைமை நாடுகளின் வீழ்ச்சியும், உலக மயத்தின் எழுச்சியும் ஏகாதிபத் தியங்களுக்கு புதிய நம்பிக்கை யைக் கொடுத்தன. “வரலாறு முடிந்துவிட்டது”, “தத்துவங்கள் செத்துவிட்டன” என முதலாளிய வாதிகள் கூரைமீதேறி கொக்கரித்தனர்.

பெரும்பாலான நாடுகளின் அரசுகள் உலக மயத்தின் நிர்வாக மன்றங்களாக உருக்கொண்டன. கட்சிகளும், கம்பெனிகளும் ஒன்று கலந்தன. பணநாயகத்தின் அடிமையாக சனநாயகம் முற்றிலும் மாறிப் போனது. நாடுகளுக்கு இடை யிலான அரசியல் உறவுகளை சந்தை உறவே வழிநடத்தியது. அரசியல் உரையாடல் நடை பெற வேண்டிய ஊடகங்கள் பண்ட விளம்பரங்களின் கள மாக மாறிப் போயின.தேசிய அரசியலில் உயிர் துடிப்போடு பங்குப்பெறும் குடிமக்கள் உலகமயத்தின் நுகர்வோர் குடிமக்களாக, அரசியல் பார் வையாளர்களாக மாற்றப் பட்டனர்.’ஒரு விழுக்காட் டினரின்’ செயற்களமாக அர சியலும், ஊடகமும் மாறியது.

உலகமயப் பொருளியல் ஆதிக்கமானது, வெள்ளை இன மேலாதிக்கத்தோடு இணைந்தே நடைபெற்றது. அமெரிக்கத் தன்மை, ஐரோப்பியத் தன்மை என்ற பெயரால் இந்த வெள் ளை இன மேலாதிக்கம் நிலை நிறுத்தப்பட்டது.

ஆயினும் இதே வலுவில் இந்த ஆதிக்கத்தைத் தொடர முடியவில்லை.முதலாளிய வளர்ச்சியின் இயல்பான உள் முரண்பாடும், கேள்வி முறை யற்ற உலகமயச் சுரண்டலும், வெள்ளை இன ஆதிக்கமும் எதிர்வினைகளை உருவாக்கின.

முதலாளிய வளர்ச்சியின் உள்நெருக்கடி அதன் உச் சாணியில் உள்ள நிதி மூலதன நிறுவனங்களின் வெடிப்பின் மூலம் வெளிப்பட்டது. 2008 ஆம் ஆண்டு பெரும் பெரும் வங்கிகளும் காப்பீட்டு நிறு வனங்களும் சடசடவென சரிந்தன. வட அமெரிக்கா தொடங்கி ஐரோப்பாவெங்கும் இந்தச் சரிவுகள் தொடர்ந்தன. உலகமய முதலாளிய கூட்டணி யில் இணைந்திருந்த எல்லா நாடுகளும் இதன் அதிர்வை சந்தித்தன.

உலகச் சந்தையையே கட்டி ஆண்ட பன்னாட்டு முதலாளி கள் தங்கள் சொந்த நாட்டுச் சந்தையை இழப்பது என்ற நிகழ்வு தொடங்கியது.பல இலட்சம் கோடி டாலர் அரசுப் பணத்தை வாரி இறைத்து இந்நிதி நிறுவனங்களையும், தொழில் நிறுவனங்களையும் தூக்கி நிறுத்த முயன்றாலும் அவை பழைய நிலைக்கு திரும்ப முடியவேயில்லை. அந்நாடு களில் தொழில் மந்தம் (ஸிமீநீமீssவீஷீஸீ) நீடித்து ஆழப்பட் டுள்ளது. வேலையிலிருந்து தொழிலாளிகள் வெளியில் வீசப்படுகின்றனர். படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெருமளவு சுருங்கி விட்டது. அரசுக்கோ வரி வரு மானம் உரிய அளவு உயர வில்லை.

இதன் விளைவாக எல்லா நாட்டு அரசுகளும் கடன் வலையில் சிக்கின. எடுத்துக் காட்டாக 2007ல் அமெரிக்க ஐக்கிய நாடுகள் தங்கள் நாட் டின் ஒட்டுமொத்த உற்பத்தியை ஒப்பிட 42.6% கடன் வைத் திருந்தது. மூன்றாண்டுகளில் இக்கடனளவு 72.4%நிஞிறி என உயர்ந்துள்ளது. இத்தாலியின் பொருளியலானது ஓட்டாண்டி நிலைக்கு வந்துவிட்டது. அந் நாட்டின் கடன் 120%நிஞிறி அதாவது அந்நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தி மதிப்பை விட அதன் கடன் 20 விழுக்காடு அதிகம். கிரீஸ் நாட்டின் கடன் 153% நிஞிறி அந்நாடு முழுகிக் கொண்டிருக்கிறது என்று பொருள். பிரான்சும், இங் கிலாந்தும் விரைவில் கடன் சேற்றில் சிக்கப்போகின்றன.

இதிலிருந்து விடுபட சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் நலத்திட்டங்கள் ஒவ்வொன்றாக கைவிடப்படுகின்றன. ஓய்வூதியம், மருத்துவக் காப்பீடு, வேலையில்லா காலத்திற்கான வாழ்வூதியம், கல்வி உதவித் தொகை ஆகியவை பெருமளவு வெட்டப்படுகின்றன. அந்நாடு களில் எளிதாக கிடைத்து வந்த கல்விக் கடனும் பெருமளவு நிறுத்தப்பட்டுவிட்டன.

கண்மண் தெரியாத கல்விக் கட்டண உயர்வை அந்நாட்டு மாணவர்கள் முதன்முறையாக சந்திக்கிறார்கள். வேலையும் இல்லை, வேலையில்லா காலத்து வாழ்வூதியமும் இல் லை என்ற புதிய நிலைமையை அந்நாடுகளின் இளம் உழைப் பாளர்கள் சந்திக்கிறார்கள். ஓய்வூதியமும் இல்லை. தங்கள் சேமிப்பை வைத்திருந்த வங்கி களும் ஓட்டாண்டிகளாகி விட்டன என்பதை அந்நாட்டு முதியவர்கள் சந்திக்கிறார்கள். தற்காலிக தொழிலாளர்களாக வும், சொந்த வீடற்றவர்களாக வும் உள்ளவர்களில் ஏற்கென வே பெரும்பாலும் கறுப்பினத் தவர்களே இருந்தனர். அரசின் சிக்கன் சீரமைப்பின் தாக்கம் மற்றவர்களை விட இவர் களையே கடுமையாக பாதிக் கிறது.

தொழில் மந்தமும், அரசின் சிக்கன சீரமைப்பு தாக்குதலும், இன ஒதுக்கலும் இணைந்து அந்நாடுகளின் பெரும்பான்மை மக்களைப் போராட்டக் களத் திற்கு இழுத்து வந்துள்ளது.

அமெரிக்க டாலர் ஏற்கெனவே மதிப்பிழந்து வருகிறது.அந்த இடத்தை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பொது நாணயமான யூரோ கைப்பற்றும் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் ஐரோப்பிய மண்டலத்தில் இப்போது ஏற்பட்டுள்ள பொரு ளியல் நெருக்கடி யூரோ நாண யம் ஐரோப்பாவிலேயே பொது நாணயமாக தொடர்ந்து நீடிக்க முடியுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பலவீனமான 10 நாடு களை கழற்றி விட்டால் தான் மீதியுள்ள 17 நாடுகளுக்காவது பொது நாணயமாக யூரோவை வைத்து கொள்ள முடியும் என பிரித்தானிய பிரதமர் கேமரூன் வெளிப்படையாகவே பேசி வருகிறார். ஐரோப்பிய பொதுச் சந்தை, ஐரோப்பிய பொது நாணயம் என்பவையும் ஆட் டம் காண தொடங்கி விட்டன. உலகமயமும் ஐரோப்பிய மய மும் மட்டுமின்றி ஒட்டுமொத்த முதலாளியமே கேள்விக்குள் ளாகி முட்டுச்சந்தில் நிற்கிறது.

இதிலிருந்து தப்பிப்பதற்கு மரணச்சந்தையே உடனடி வழி என அமெரிக்க ஆட்சியாளர் கள் கருதுகிறார்கள். ஆயுதங் களை விற்று போர்களைத் தீவிரப்படுத்தி போர்ச் சந்தையை விரிவாக்குவதன் மூலம் நெருக் கடியிலிருந்து மீளலாம் என அமெரிக்க வல்லரசு திட்ட மிடுகிறது. பேரழிவு ஆயுதம் வைத்திருந்ததாக பொய்க் குற்றம் சொல்லி ஈராக் மீது போர் தொடுத்தது போலவே அணு ஆயுதம் வைத்திருப்பதாக குற்றம் சொல்லி ஈரான் மீது போர் தொடுக்கலாம் என அமெரிக்கா தீவிரமாக திட்டமிடுகிறது. இன்னொருபுறம் நைஜீரியாவை பயன்படுத்தி சோமாலியா மீதான தாக்குதலைத் தீவிரப் படுத்தி ஒட்டுமொத்த ஆப்பிரிக் காவை போருக் குள் சிக்க வைக்க முயல்கிறது.

அமெரிக்க மரண வியாபாரத்தை மூன்றாம் உலக நாடுகள் புரிந்திருப்பதைப் போலவே அமெரிக்க இளைஞர்களும் புரிந்து கொண்டிருக்கிறார்கள். உலகின் 131 நாடுகளில் அமெரிக்க வல்லரசு வைத்துள்ள 1000 படைத் தளங்களைக் கலைத்து விடுமாறும் அந்நிதியை வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்து மாறும் வால் ஸ்ட்ரீட் இளைஞர்கள் வலியுறுத்துகிறார்கள்.

ஏகாதிபத்தியம் என்றால் போர். என்றார் லெனின். இன்று அமெரிக்கத் தெருக்களில் முதலாளியத்திற்கு எதிரான முழக்கமும் போர் தயாரிப்புக்கு எதிரான முழக்கமும் ஒன்று கலந்துள்ளன.

இந்த இளைஞர்களின் பயணத் திசைவழி இன்னும் தெளிவுபட வேண்டியுள்ளது என்றாலும் முதலாளியத்தின் வாழ்நாள் குறுக்கப்பட்டு விட்டது என்பது மட்டும் உறுதி.

சரிந்து வரும் இந்த உலகமய முதலாளியத்தோடு இளைய பங்காளியாக இணைந்துள்ள இந்தியாவிலும் இந்தியாவின் காலனியாக உள்ள தமிழ்நாட்டிலும் இதன் தாக்கம் என்ன என்பதை வேறொரு வாய்ப்பில் பார்ப்போம்.

Pin It