உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன் எழுதிய ’பொழிச்சல்’ என்ற இலக்கியத் திறனாய்வு நூலும், 'நறுக்குகள்' இரண்டாம் தொகுப்பும், 'FABLES' என்ற ஆங்கில மொழியாக்க நூலும் 10.11.2011 அன்று சென்னை பாவாணர் அரங்கில் வெளியிடப்பட்டன. திரு பழ.நெடுமாறன் தலைமையில் திரு வைகோ நூல்களை வெளியிட்டார். இயக்குநர் மணிவண்ணன், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், ஓவியர் சந்தனம், இயக்குநர் கௌதமன் ஆகியோர் உரையாற்றினர். புலவர் இரத்தின வேலவர், தமிழ்மண் பதிப்பகம் கோ.இளவழகனார் ஆகியோர் முதல் படிகளைப் பெற்றனர். கவிஞர். செயபாஸ்கரன் நிகழ்ச்சியைத் தொகுத்தளித்தார். புதுவைச் சித்தன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார். உணர்ச்சிப்பாவலர் காசி ஆனந்தன் ஏற்புரை நிகழ்த்தினார்.

 காலம் தந்த கவிஞர்கள் பலர் உண்டு

களம் தந்த கவிஞர் காசி ஆனந்தன்

களம் இவரால் புகழ் பெற்றதும்

களத்தால் இவர் புகழ் பெற்றதும்

ஒருநாணயத்தின் இரு பக்கங்கள்

 

காசி ஆனந்தன்

விடுதலையின் வித்து

தமிழீழத்தின் முத்து

மொத்தத் தமிழினத்தின் சொத்து

 

தன்னலக் கறைபடாத் தமிழ்ச் சான்றோன்

தலை தாழ்ந்து வாழாத தமிழ் வேங்கை

அண்டிப் பிழைப்பதை

அருவருக்கும் தன்மானன்

புகழ் தேடி அலையாத அறிஞன்

 

ஏதிலியாய் இங்கு வந்தான்

உணர்ச்சிப் பாவலன்

தமிழ் மொழிக்கிங்கே அவன்தான் காவலன்

”தமிழா நீ பேசுவது தமிழா” என்று

சாட்டையைச் சுழற்றி தமிழகமெங்கும்

 உலா வருகிறான்

 

’’இருப்பாய் தமிழா நெருப்பாய்

இதுவரை இருந்தது போதும் செருப்பாய்’’

என்று நம்மை எச்சரிக்கின்றான்

புரட்சிப் பாவலன்

தமிழின் பெருமிதம் தனது பெருமிதம்

என்று வாழும்

உணர்ச்சிப்பாவலரே!

காசி ஆனந்தன் அவர்களே!

உங்களுக்கு என் வணக்கமும் வாழ்த்தும்...

தற்பெருமை கொண்ட சில பேர் தமிழ்ப் பெருமையை இகழ்கின்றனர். இன்னும் சில பேர் மொழி என்பது வெறும் கருத்துப் பறிமாற்றக் கருவி என்கின்றனர். மொழி இந்த ஒலி வாங்கியைப் போல் வெறும் கருவியா? இல்லை.

மொழி ஒரு தேசிய இனத்தின் ஆன்மா. ஓர் இனத்தின் முகவரி. ஓர் இனத்தின் வரலாற்றுப் பெட்டகம். தலைமுறை தலை முறையாக உருவாகி வரும் அறிவைக் கலையை சேமித்து வைக்கும் களஞ்சியம். அவற்றை அடுத்த தலை முறைக்குக் கையளிக்கும் அமுத சுரபி.

காசிஆனந்தனின் ’’பொழிச்சல்’’ என்ற இந்நூல் பா வடிவங்களைப் பற்றிய ஒரு திறனாய்வு நூல். ’பா’ அதாவது கவிதை என்பது - ஓசை நயம் சந்தம் கொண்டதாக இருக்க வேண்டும். தெறிப்பான சொற் களை மட்டும் கொண்டிருந் தால் அது கவிதை ஆகாது என்கிறார்.

புதுக் கவிதை என்ற பெயரில் எழுதப்படும் கவிதை, உரை நடையைச் சார்ந்ததே தவிர ’பா’ வகையைச் சார்ந்தது அல்ல. அவற்றைப் புதுக்கவிதை என்று சொல்லக் கூடாது என்கிறார்.

பழைய கவிதை வடிவம் மறைந்துவிட்டதைப் போலவும் புதிய கவிதை வடிவம் ஒன்று பிறந்து விட்டது போலவும் ’’புதுக் கவிதை’’ என்ற சொல் பொருள் குறிக்கிறது. புதுக் கவிதை என்ற பெயரில் எழுதப்படுவை கவிதை வடிவத் திற்குள் வராது. ’’பொழிச்சல்’’ என்ற வடிவத்தைச் சேர்ந்தவை இவை. மழை பொழிவது போல, பூ சொரிவது போல விழும் சொற்களைக் கொண்ட இந்த உரைவீச்சைப் புதுக் கவிதை என்று சொல்லாமல் ’பொழிச்சல்’ என்று சொல்ல வேண்டும் என்கிறார் காசி ஆனந்தன். அந்தப் பொழிச்சலி லும் சிந்தல், நறுக்கு என்று இருவகைகள் உண்டு என் கிறார்.

புதுக் கவிதையில்தான் பல செய்திகளைச் சொல்ல முடியும், மரபுக்கவிதையில் அவற்றைச் சொல்ல முடியாது என்று கூறுவோரை சாடுகிறார் கவிஞர். ’கசடதபற’ ஏட்டில் புதுக்கவிதை பற்றி சாருவாகன் எழுதியதைச் சான்று காட்டு கிறார்.

‘’ பல பக்கங்கள் கொண்ட வைரக்கல் போன்றது புதுக் கவிதை. ஒரு பக்கம் அழகு, புது மாதிரியான அழகு, வியக்கும் அழகு. ஒரு பக்கம் ஏக்கம், மன முறிவு, பெருமூச்சு, கா தல், தத்துவம், கோபம், சந்தேகம், அறை கூவல், சமகால விமர் சனங்கள், தன் மனத்தையே துடைத் தெடுத்து ஆராயும் நேர் மை, பாலுணர்ச்சி, பொங் கல், ரேசன், காந்தியம், கம்யூனிசம் , அறச்சீற்றம், என இப்படிப் பல பக்கங் கள் உண்டு’’. என்கிறார் சாரு வாகன்.

இதற்கு ஆவேசமாக விடை இறுக்கும் காசி ஆனந்தன், ‘’ஏதோ பெரிதாக ’கிழிச்சது’ போல் அள்ளிக் கொட்டியிருக் கிறாரே! இவர் கொட்டித் தள்ளியிருக்கும் அத்தனையும் புதுப்பாவில் - புதுக்கவிதையில் மட்டும்தான் வருமா? ஏனைய சிறுகதையில் - புதினத்தில் - பா இலக்கியத்தில் இவை வராதா? யாரை ஏமாற்றுகிறீர்கள்?’’ என்கிறார்.

புதுக்கவிதை எழுதக்கூடாது என்று காசிஆனந்தன் கூற வில்லை. இன்றைக்குப் புதுக் கவிதை என்ற பெயரில் எழுதப் படுபவற்றை தொடர்ந்து எழுதலாம். ஆனால் அவற்றுக் குப் புதுக்கவிதை என்று பெயரிடாதீர்கள். பொழிச்சல் என்று பெயரிடுங்கள் என்று கூறுகிறார். காசி ஆனந்தனே நறுக்குகள் எழுதிவருகிறார். உரை வீச்சு, சிந்தல், நறுக்குகள் என்று எழுதுங்கள் என்கிறார்.

மரபுக் கவிதையை மறுக்கும் வகையிலோ ஓசையை உயிராகக் கொண்ட பாட்டு நடையை புறக்கணிக்கும் வகையிலோ புதுக்கவிதை என்று பெயர் சூட்டி எழுதாதீர்கள். என்பது தான் காசி ஆனந்தன் கருத்து.

கலை என்பதும், இலக்கியம் என்பதும் உள்ளதை உள்ள படி அப்படியே சொல்லுவது அல்ல. நடந்த நடப்புக்கு மெருகூட்டி அழகு சேர்த்து மற்றவர்கள் சுவைக்கும் நிலையில் வழங்கு வது தான் உண்மையான கலைப் படைப்பாகும். சோகத் தைக் கூட ஒரு சுகமாக அனுப விக்கும் உளவியலைத் தருவது தான் சிறந்த கலையாகும்.

புதுக்கவிதை எழுதப் புகுந்தோரில் சிறப்பாக எழுதி யவர்கள் இருக்கிறார்கள். நா.காமராசன், ஈரோடு தமிழன்பன், அப்துல் ரகுமான், மேத்தா, வைரமுத்து எனச் சிறப்பாகப் பலர் எழுதிருக் கிறார்கள். வேறு சிலர் புதுக் கவிதையை உள் மனத் தேடலுக்கான வடிவம் என்றும், இருண்மை பற்றி பேசுவதற்கான வடிவம் என்றும் கையாண் டார்கள். யாருக்கும் புரியக் கூடாது, எழுதியவருக்கும் புரியக் கூடாது. அதுவே சிறந்த கவிதை என்று சொல்லிக் கொண்டார்கள். அவ்வாறானக் கவிதைகளை அவர்கள் தங்கள் மனதிற்குள்ளேயே எழுதி எழுதி மகிழ்ச்சியடையலாம். அவற்றை அச்சிட்டு ஏன் விற்க வேண்டும் என்பதுதான் நம்முடையக் கேள்வி.

மேற்கத்திய நூலாசிரியர்கள் சிலர் பெயரைச்சொல்லி, அவர் இப்படி சொல்லியிருக்கிறார். இவர் அப்படிச் சொல்லி யிருக்கிறார் என்று மேற்கோள் தோரணம் கட்டி இளைஞர் களை மிரட்டுகிறார்கள்.

மேற்கத்தியப் பிரதிகளை மேய்ந்துவிட்டு அவர்கள் வண்ண வண்ணமாக வாந்தி எடுக்கிறார்கள். எஸ்றாபவுண் டைப் பற்றி பேசுவார்கள். அவர்களுக்கு இளங்கோவடி களைத் தெரியாது.

இப்படிப் பட்டவர்கள் இளைஞர்களுக்குத் திகைப் பூட்டி, மிரட்சியூட்டி இப்படித் தான் இலக்கியம் இருக்க வேண்டும் என்று ஒரு தவறான பாதையை காட்டிவிட்டார்கள். இந்த பாதிப்பால் தமிழ்ச் சமூகத்தில் ஓங்கி உயர்ந்திருக்க வேண்டிய கவிஞர்கள் பலர் இரண்டு தலைமுறையாக திசை மாறிப்போய் வீணாகி விட்டார் கள். செல்வாக்குமிக்க மக்கள் கவிஞர்கள் உருவாவதில் இவர் களின் தவறான வழிக்காட்டல் பாதிப்பை உண்டாக்கிவிட்டது.

பசுவய்யா என்ற புனை பெயரில் சுந்தர ராமசாமி எழுதிய ஒரு கவிதையைப் பாருங்கள்:

யாரோ ஒருவனுக்காக / பெண்ணே / உன் கடிதம் எழுதுவது எப்படி என்று கேட்காதே / எழுது / அதுவே அதன் ரகசியம் / எழுது எவர் முகமும் பாராமல் / உன் மனம் பார்த்து / உன் தாகம் தீர்க்க நதி யிலிருந்து நீரைக்/ கைகளால் அள்ளுவதுபோல் / கண்டுபிடி உன் மன மொழியை / உன் மார்புக் கச்சையை முற்றாக விலக்கி / காலக் குழந்தை களுக்குப் பாலூட்டு / உனக்கும் உன் அனுபவங்க ளுக்கு மிடையே / ஆடைகளை முற்றாகக் களைந்து / அம்மணம் கொள்.

புகை மூட்டத்தைப் புணர்ந்து/ மெய்ம்மையைப் பேரானந்தத் துடன் கருத்தரி / எழுதுவது எப்படி என்று கேட்காதே / எழுது / அதுவே அதன் ரகசியம்.

சுந்தர ராமசாமி இதைப் புதுக் கவிதை என்கிறார். இதில் அழகில்லையா எனில் அதன் நோக்கத்தை அவர் பாணியில் அழகா கத்தான் சொல்லி யிருக்கிறார். ஆனால் மனதில் நினைக்கும் படியான ஓசை நயம் எதுவுமில்லாத இவ்வரிகள் ஒரு கருத்தைத் தாங்கி நிற்கும் உரை நடை தவிர கவிதையில்லை.

இவ்வரிகளில் உள்ள சுந்தர ராமசாமியின் கருத்தை பரிசீலித் தால் அது ஏற்படுத்திய தீய விளை வுகள் பல. இலக்கியத்தில் பெண்களை அம்மணம் கொள் ளச் சொன்ன சுந்தர ராம சாமியே கூச்சப்படும்படி சில பெண் கவிஞர்கள் அம் மணத்தை எழுதிக் குவித்து விட்டார்கள். சுந்தர ராம சாமியின் அன்பர்கள் ’’அவர் இந்த அம்மணத்தை எழுதச் சொல்லவில்லை’’ என்று கூடச் சொல்லக்கூடும். தங்கள் பாலுறுப்புகளைப் பலவாறாக மீண்டும் மீண்டும் வர்ணித்து வாசகர்களுக்கு பகிரங்கமாகப் பரிமாறிவிட்டார்கள் அப் பெண்கவிஞர்கள். இவற்றை பெண் விடுதலைக் கவிதைகள் என்றார்கள். இங்கே உரை யாற்றிய சகோதரி தமிழச்சி தங்க பாண்டியன் இப்படி எழுதி யுள்ளார் என்று நான் கூற வில்லை. அவர் அப்படி எழுத வில்லை. பெண் விடுதலை நோக்கில் சிறப்பாக எழுதிக் கொண்டிருக்கும் பெண் கவிஞர்கள் பலர் இருக்கி றார்கள் அவர்களையெல்லாம் இந்த வரிசையில் நான் சேர்த்துக் கூறவில்லை.

பெண்ணியம் என்பதைக் கவசமாக வைத்துக்கொண்டு தங்களின் பாலுறுப்புகளை வர்ணித்து சந்தைப் படுத்து வோரைப் பற்றிதான் நான் குறிப்பிடுகிறேன். அவர்கள் எழுதியிருக்கும் இந்த கவிதை களை இந்த மன்றத்தில் படிக்கமுடியாது. அந்த அளவுக் குப் பாலுறுப்பு வர்ணனைகள் மட்டுமல்ல பாலுறவு வர்ண னைகளும் இருக்கின்றன. அதே பெண்களில் சிலர் இப்பொழுது இணைய தளங்களில், ஏட்டில் எழுதியதையும் விஞ்சி எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அவ் வரிகளை இந்த அவையில் எடுத்துச் சொல்ல முடியாது.

பெண்ணின் பாலுறுப்புகளை நுகர்வுப் பண்டமாக ஏற்கெனவே ஆண் கவிஞர்கள் வர்ணித்துக் கொண்டிருந்தார்கள். இப்பொழுது அதை நாங்களே செய்துகொள்கிறோம் என்று பெண்கவிஞர்கள் சிலர் முன் வந்துள்ளார்கள். பெண்ணை நுகர்வுப் பண்டமாக பார்க்கும் பார்வை இருக்கும் வரை பெண் விடுதலை எப்படிப் பிறக்கும்?

இறக்குமதி செய்யும் இலக்கிய வடிவங்கள்தான் சிறப்பானவை என்று சிலர் கருதுகிறார்கள். மருத்துவர்களில் இருதய நோய் வல்லுநர்கள், பல் நோய் வல்லுநர்கள், இருப்பதை போல கவிஞர்களில் சிலர் ஹைக்கூ வல்லுநர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். சப்பானி லிருந்து வந்த அந்த ஹைக்கூ வடிவத்தில் தான் செறிவாகக் கவிதைக் கருத்தை வெளிப் படுத்த முடியும் என்று அவர்கள் சொல்கிறார்கள். மூன்று வரிகள் மட்டுமே உள்ள ஹைக்கூ மிகச்சிறந்த திரட் சியான வடி வம் என்கிறார்கள். ஒன்றே முக்கால் அடியில் திருவள்ளு வன் திரட்சியான கருத்துகளை தமிழில் சொல்லவில்லையா?

ஆசிரியப்பாவில் எத்தனை வரி வேண்டுமானலும் எழுத லாம். அதன் குறுகிய வரி மூன்று அடி மட்டுமே.

‘’ பூத்த வேங்கை வியன்சினை ஏறி

மயிலினம் அகவும் நாடன்

நன்னுதல் கொடிச்சி மனத்தகத் தோனே’’

 என்று ஆசிரியப்பாவில் ஒரு சங்கப்பாடல் உள்ளது. குறுகிய வடிவத்தில் கவிதை தர தமிழ் தடை போட்டதா?

ஹைக்கூவைக் கற்றுக் கொள் ளுங்கள். அந்த வடிவம் தமிழில் இல்லாதது போலவும் அதை இங்கு கொண்டு வந்தால் தான் தமிழ்க் கவிதையை வாழவைக்க முடியும் என்பதைப் போலவும் பேசாதீர்கள்.

கவிஞர் காசி ஆனந்தன். வகை வகையாய் வர்ணிக்கப் படும் இசங்களைப்பற்றி பொ ழிச்சல் நூலில் விமர்சனம் செய்துள்ளார். அந்த இசங்க ளைப் படித்து விட்டு அதற் கேற்ப இலக்கியம் படைப் பது, அந்த வடிவங்களைப் பார்த்து விட்டு அவற்றிக் கேற்ப இலக்கியம் படைப்பது என்ப தெல்லாம் தமிழில் செல்வாக்கு மிக்க மக்கள் படைப்புகளை உருவாக்காது.

நமது மரபின் வளர்ச்சியாகப் புதிய உத்திகளைப் புதிய வடி வங்களை நாம் உருவாக்க வேண் டும். அதற்கு வெளி நாட்டுப் படைப்புகளிலிருந்து நாம் கற்றுக்கொண்டவை துணை செய்ய வேண்டும். மாறாக வெளி நாட்டு வடிவங்களையும் இசங் களையும் இங்கே நகலெடுப்பது வெற்றிகரமான இலக்கியப் படைப்பாக அமையாது. விரிந்து பரந்த தமிழ் மக்களையும் போய்ச் சேராது. இலக்கியம் கண்டது இலக் கணம் என்பது நமது மரபு. இலக் கியங்கள் படைக்கப் பட்டபின் அவற்றி லிருந்து இலக்கணம் தோன்றும். இங்கே இவர்கள் இறக்குமதி செய்த இலக்கணங்களைத் தங்கள் முன் வைத்துக் கொண்டு அவற்றிற் கேற்ப இலக்கியம் படைக்கிறார்கள். அதனால் அவை வெற்றி பெறவில்லை.

இலத்தின் அமெரிக்க நாடு களில் இப்பொழுது பேசப் படும் மாய எதார்த்தவாதம் எனும் மேஜிக்கல் ரியலிசம் தமிழில் 2000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது. கணவன் பொய்க் குற்றம் சாட்டப்பட்டு அரச னால் கொலை செய்யப்பட் டான். என்ற ஆவேசத்தில் கண்ணகி மதுரையை எரித்தாள் என்கிறது சிலப்பதிகாரம்.

’’பட்டாங்கில் யானுமோர் பத்தினியே யாமாகில்

ஒட்டேன் அரசோடு ஒழிப் பேன் மதுரையும் ’’

என்று இட முலை கையால் திருகி எரிந்து தீப்பற்றச் செய்து மதுரையை எரித்தாள் என்கிறது அக்காப்பியம். கண்ணகியின் முலையில் பாஸ்பரஸ் இருந் ததா? அது எப்படி தீயைப் பற்ற வைத்தது என்று, நம்மால் மதிக்கப்படும் பெரிய தலைவர் பகுத்தறிவின் பெயரால் கேள்வி கேட்டார். அங்கே சித்தரிக்கப் பட்ட அந்நிகழ்வு ஓர் இலக்கிய உத்தி. ஆவேச உணர்ச்சியின் உச்ச நிலையை வெளிப்படுத்த கையாளப்பட்ட மாய எதார்த்த வாதம் அது. கிரேக்கத்தின் பழைய இலக்கியங்களில் பட்டணங்கள் எரிக்கப்பட்ட நிகழ்வுகள் இல்லையா? இருக் கின்றன.

ஆவேசம் கொண்ட கண்ணகி சில குடிசைகளுக்கு தீ வைத்திருக்கலாம் அல்லது அரண்மனையின் ஏதோ ஒரு பகுதியில் தீவைக்க முயன் றிருக்கலாம். அப்படி அவள் தீ வைக்க முயன்றிருந்தால் மற்ற மக்கள் தொடக்கத்திலேயே தடுத்திருப்பார்கள். அதற்கு மேல் அங்கு ஒன்றும் நடந் திருக்காது. இலக்கிய உத்தியாக சித்தரிக்கப்பட்ட ஒரு நிகழ்வை உண்மையில் நடந்ததாகக் கருதிக் கொண்டு விமர்சிப்பது தவறு. இன்று தென் அமெரிக் காவில் செல்வாக்குப் பெற் றுள்ள மாய எதார்த்தவாத உத்தியை அறிந்த பிறகாவது பகுத்தறிவுப் பார்வையில் விமர்சிக்கும் நண்பர்கள் தங்கள் பார்வையை மாற்றிக் கொள்ள வேண்டும்.

தமிழில்தான் மூட நம்பிக் கைகள் இருக்கின்றன. ஆங்கிலத் தில் இல்லை என்று அவர்கள் கருதுகிறார்கள். ஆவி எழுப்பு தல் கூட்டங்கள் ஆங்கிலத்தில் தானே அதிகமாக நடக்கின்றன. அதும் பெரியார் திடலிலேயே பல முறை நடந்துள்ளனவே.

எல்லா மொழியிலும், பகுத் தறிவுக் கருத்துகளும் உண்டு, மூடக் கருத்துகளும் உண்டு. மொழி என்பது சமூகக் கருத்து களின் கொள்கலன். ஒரு சமூகத்தில் ஒரு மொழியில் எந்தக் கருத்து முன்னோக்கி எடுத்துச் செல்லப்படுகிறது; போற்றப்படுகிறது; பின் பற்று மாறு வலியுறுத்தப்படுகிறது என்பதைப் பார்க்க வேண்டும். 19 - ஆம் நூற்றாண்டில் காரல் மார்க்சு வகுத்த கம்யூனிசம் என்பதன் முதல் நிலை வடிவத் தைச் சங்ககால தமிழர்கள் அறம் என்ற பெயரில் அழைத் தனர். இன்று வரை அந்த அறத்தைத்தான் தமிழ்ச்சமூகம் தனது முதல் நிலைக்கருத்தாக முன்னோக்கி எடுத்துச் செல்கிறது.

இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன் நம் பாட்டன் வள்ளுவன் சொன்ன,

’’பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத் தவற்றுள் எல்லாம் தலை’’ என்பதுதான் கம்யூனிசத்தின் வேர்.

தமிழ் மொழியில் தன்னை அடையாளம் கண்டு தமிழ் மொழி தம் தாய் மொழி என்பதில் பெருமிதம் கொண்டு தமிழீழ விடுதலைப் போரா ளியாக விடுதலைப்போர் பாவ லராக வீறுபெற்றுள்ள காசி ஆனந்தன் தமிழ்நாட்டு இளம் படைப்பாளிகளுக்கு சிறந்த எடுத்துக் காட்டாவார். தமிழ் நாட்டில் பல காசி ஆனந்தன் கள் உருவாக வேண்டும். அவர் கள் விடுதலைப் போர்ப் பரணி பாட வேண்டும்.

தமிழ்த்தேசியம் என்பது தமிழ்நாட்டு விடுதலையை உள்ளடக்கியதாகும். தமிழ்நாட்டு விடுதலையை முன் வைக்காத ஒரு கருத்தியல் தமிழ்த் தேசியம் ஆகாது. பசி, தாகம் போல் இன உணர்ச்சி நம் மனதில் இயல் பூக்கமாக உள்ளது. பசி தாகத்தை நீண்ட நேரம் அடக்கிக்கொண்டால் நோய்வரும். இயல்பாக ஊற் றெடுக்கும் இன உணர்ச்சியைத் தமிழர்கள் செயற்கையாக அடக் கிக் கொண்டால் அது அவர் களுக்கும் நோய்தரும் தமிழ் இனத்திற்கும் நோய்தரும்.

தமிழ்த் தேசியத்தை இன் றைக்கு எழுதாத படைப் பாளி உண்மையான படைப் பாளி ஆகமாட்டார். தமிழ்நாடு இந்திய ஏகாதிபத்தியத்தின் காலனியாக உள்ளது. எனவே இங்கு காசி ஆனந்தன் போன்ற விடுதலைப் படைப்பாளிகள் தேவை. படைப்பாளிகள் மட்டு மல்ல விடுதலையை முன்னெடுக்கும் அமைப்புகளும் தேவை.

Pin It