கொலைச் செயலைப் போன்றதுதான் குடியிருக்கும் குடிசை வீடுகளைக் கொளுத்தும் கொடுஞ் செயல்.அதுவும் ஏழை எளிய மக்களாகவும் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களாகவும் சேரிகளில் வாழும் மக்களின் வீடுகளைக் கும்பல் திரட்டிச் சென்று கொளுத்துவது காட்டுமிராண்டித்தனம்.

நாய்க்கன்கொட்டாய் பகுதியில் 7.12.2012 அன்று பேரளவில் நடத்தப்பட்ட அதே அழிவு வேலை 25.04.2013 அன்று மரக்காணம் பகுதியில் சிறிய அளவில் நடந்துள்ளது. அங்கே 260 வீடுகள் எரிக்கப்பட்டன. இங்கே ஏறத்தாழ பத்து வீடுகள் எரிக்கப்பட்டன.

மரக்காணம் கட்டையன் தெரு, இடைகழியூர் ஆகிய குடியிருப்புகளில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் வீடுகளை அவர்களே கொளுத்திக் கொண்டார்கள் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் மருத்துவர் இராமதாசு அவர்கள் கூறுவது அவரது தகுதியை அவரே தாழ்த்திக் கொள்ளும் செயலாகும்.

சாதி சங்கங்களை நாம் விரும்பவில்லை என்றாலும் சாதி சங்கங்களும் சமூக அமைப்புகள் தாம். எந்த சாதி சங்கமாக இருந்தாலும் அதில் வம்பை விலைக்கு வாங்குவோர் இருப்பர். சாதிப் பகைமையைக் கூர்தீட்டி விடுவோர் இருப்பர். ஆனால் அவர்களுக்கப்பால் அதே சாதியில் பண்பாளர்கள், பக்குவப்பட்டவர்கள், அறிவாளி கள், உழைப்பாளிகள் எனப்பலரும் இருப்பர். இவர்களுக்கெல்லாம் சேர்த்துத் தலைமை தாங்கு பவர்கள் எப்படி இருக்க வேண்டும்? முதலில் சுட்டிக் காட்டப்பட்ட இரு பிரிவினர்க்கு மட்டும் தலைமை தாங்கும் தகுதி கொண்டவர்களாக இருக்கக்கூடாது. முதல் இருபிரிவினரையும் கட்டுப்படுத்துபவர்களாக இருக்க வேண்டும்.

தருமபுரி தீ வைப்பு நிகழ்வுகளால் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் வன்னியர் சங்கத்திற்கும் தமிழ்ச் சமூகத்தின் பொது வெளியில் மிகப்பெரிய கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது; பின்னடைவு ஏற்பட்டுள் ளது. ஆனால் அத்தீவைப்புகள் வன்னியர் சங்கத்தில் ஒரு சாராரை, ஊக்கப்படுத்தியிருக்கலாம்; அவர் களின் கட்சி உணர்வை – சாதி உணர்வை தீவிரப் படுத்தியிருக்கலாம். ஆனால், தலைமை தாங்குவோர், அப்பாவி மக்கள் மீது நடத்தப் பட்ட வன் செயல்களால் தீவிர உணர்ச்சி பெறுவோரில் நிலைக்குப் போகக்கூடாது. அப்படிப் போனால், தலைவர்கள் என்ற தகுதியை காலப் போக்கில் இழந்து விடுவார்கள். அவர்கள் தலைமை தாங்கும் சங்கம் காலப்போக்கில் மெல்ல மெல்லக் கரையும்.

நாயக்கன் கொட்டாய், நத்தம், அண்ணா நகர், கொண்டம்பட்டி தீ வைப்புகள் நடந்தவுடன், அந்த வன்செயல்களில் ஈடுபட்டவர் களை மருத்துவர் இராமதாசு அவர்கள் கண்டித் திருக்க வேண்டும்; இனி இது போன்ற வன்செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது என்று தன் கட்சியினரை, தன் சங்கத்தினரை அவர் எச்சரித்து இருக்க வேண்டும்.

இந்தக் கண்டனத்தையும் எச்சரிக்கையையும் அவர் பகிரங்கமாகச் செய்திருந்தால், மற்ற வகுப்பு மக்களிடம் மட்டுமல்ல, வன்னியர் வகுப்பு மக்களிடமும் அவர் பெருமை உயர்ந்திருக்கும்.

மாறாக, அந்த தீ வைப்பு வன் செயல்களை ஞாயப்படுத்துவதற்காகப் புதிய தத்துவம் ஒன்றை உருவாக்கினார். அதுதான் நாடகக் காதல். தாழ்த்தப்பட்ட வகுப்பு இளைஞர்கள் சதித்திட்டம் தீட்டி, கவர்ச்சியாக ஜீன்ஸ் பேண்ட்டும்சட்டையும் அணிந்து கொண்டு, கருப்புக் கண்ணாடி மாட்டிக் கொண்டு, வன்னியப் பெண்கள் உள்ளிட்ட பிறசாதிப் பெண்களைக் காதலித்துப் பணம் சுருட்டிக் கொண்டு பின்னர் அப்பெண்களைக் கைவிட்டு விடுகிறார்கள். இந்த நாடகக் காதல் மீது ஏற்பட்ட சினம்தான் நாயக்கன் கொட்டாய் பகுதியில் நடந்த நிகழ்வுகளுக்குக் காரணம் என்றார்.

இந்தத் தத்துவத்தைத் தமிழ் நாடெங்கும் பரப்புவதற்காகத் தாழ்த்தப் பட்டோர் அல்லாத பிற சாதிக் கூட்டமைப்பை உருவாக் கினார். ஊர் ஊராகப் பேசினார்.

இதுவரை வந்த வழக்கமான சாதி சங்கத் தலைவர்கள் போல் இல்லாமல், வர்ணாசிரம எதிர்ப்பு, சமூகநீதிக் கோரிக்கைகள், விடுதலைப்புலிகள் ஆதரவு, தமிழின உரிமைகளுக்குக் குரல் கொடுப்பது, மாற்று நிதிநிலை அறிக்கைகள், மாற்று வளர்ச்சித் திட்டங்கள் என்று பன்முகப்பட்டுச் செயல்பட்டுச் சேர்த்து வைத்திருந்த நன்மதிப்பையெல்லாம் நாடகக் காதல் தத்துவம் பேசி வீணடிக்கத் தொடங்கினார் மருத்துவர்.

மருத்துவரே இப்படி இறங்கும் போது, காடுவெட்டி குரு என்ன வேகத்தில் சாதித் தீவிரவாதம் பேசுவார் என்று எண்ணிப் பார்த்துக் கொள்ளலாம்.

இரண்டாவது நிகழ்வாக மரக்காணம் தீ வைப்பு நடந்து விட்டது. இதிலும் தலைமைத்துவ ஆளுமையை அவர் நிலை நாட்டவில்லை. தலித்துகளே தங்கள் வீடுகளைக் கொளுத்திக் கொண்டார்கள் என்றார். மருத்துவர் உள்ளிட்ட தலைவர்கள் கைதைக் கண்டித்து வன்னி யர் சங்கத்தினர் சற்றொப்ப அறு நூறு பேருந்துகளை எரியூட்டியும், கல்லெறிந்தும் சேதப் படுத்தியுள்ளனர். இதனையும் விடுதலைச் சிறுத்தைகளே செய்தார்கள் என்று மருத்துவர் இராமதாசு பேசுகிறார். இப்பேச்சுகள், அவரது அமைப்பில் உள்ள ஒரு சாராரை உற்சாகப் படுத்த லாம்; பொதுமக்கள் அவரது குற்றச்சாட்டை நம்ப மாட்டார்கள்.

மாமல்லபுரத்தில் நடந்த வன்னிய இளைஞர் பெருவிழாவில் காடுவெட்டி குரு சாதி வெறி யோடு, மற்ற சாதியினரை இழிவு படுத்தும் வகையில் பேசிய கருத்துகளுக்கு மருத்துவர் இராமதாசு தமது நிறைவுரையில் வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும். அது முடியாவிட்டால் திருத்தமாவது தெரிவித்திருக்க வேண்டும். “நாங்கள் விவசாயிகள், எங்கள் வீட்டில் கடப்பாரை இருக்கிறது; மண்வெட்டி இருக்கிறது, அரிவாள் இருக்கிறது. இதை யெல்லாம் பயன்படுத்துவோம். நாங்கள் என்ன மோளம் கொட்டும் சாதியா சும்மா இருக்கிறதுக்கு”என்று காடுவெட்டி குரு பேசியதற்குத் திருத்தமாவது சொல்லியிருக்க வேண்டும்.

கருணாநிதி, வீரமணி, தா.பாண்டியன் ஆகியோரை திரும்பத் திரும்ப அவன், இவன் என்று குரு பேசினார். இது என்ன நாகரிகம்?

இலட்சக்கணக்கான இளைஞர்கள் கூடிய அக்கூட்டத்தை தங்களுக்கு வலுச்சேர்க்கும் வகையில் பயன்படுத்தாமல், தங்களைப் பற்றி குழப்பமான, சிதைவான, வெறுப்பான உணர்வுகள் மற்றவர்களிடம் உண்டாக்கும் வகையில் பயன்படுத்திக் கொண்டார்கள்.

வன்னியப் பெருமக்களுக் கென்று, சமூகநீதி அடிப்படையில் தனி இட ஒதுக்கீடு உள்ளிட்ட சில கோரிக்கைகள் வைத்துத்துள்ளார்கள். அம் மாநாட்டில் அவை முகாமை பெற வில்லை. தாழ்த்தப்பட்டோர் எதிர்ப்பு, நாடகக் காதல், தீண்டா மைக் குற்றத்திற்கெதிரான வன்கொடுமைச் சட்டத்தை மாற்றுவது, இவைதான் மையங் கொண்டிருந்தன.

1980களில் தனி இடஒதுக்கீடு கோரி வன்னியர் சங்கம் மருத்துவர் இராமதாசு தலைமையில் நடத்திய மாபெரும் போராட்டத்தை த.தே.பொ.க. (அப்போது எம்.சி.பி.ஐ.) ஆதரித்தது. ஒத்த தன்மையுள்ள சாதிகளை ஒரு தொகுப்பாக்கி, மொத்தமுள்ள 100 விழுக்காட்டையும் அந்தந்தத் தொகுப்பின் மக்கள் தொகை விகிதத்திற்கேற்ப இட ஒதுக்கீடு வழங்கும் தொகுப்புமுறை இட ஒதுக்கீட்டை இன்றும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆதரிக்கிறது. இதில் பார்ப்பனர்கள் தனித்தொகுப்பாக வந்துவிடு வார்கள். இந்தத் தொகுப்புமுறை இட ஒதுக்கீட்டிற்கு அக்காலத்தில் அறிவார்ந்த விளக்கங்களை ஆதாரங்களோடு வழங்கியது வன்னியர் சங்கம். இன்று, சாதி வெறி அமைப்பாகக் காட்டிக் கொள்வதில் தீவிரம் காட்டுகிறது.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கெதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், அப்பிரிவு மக்களால் தவறாகவும், வேண்டாதவர்களைப் பழிவாங்குவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது, அச்சட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் அதில் மாற்றம் வேண்டும் என்றும் வன்னியர் சங்கத் தலைவர்கள் இப்போது பேசி வருகிறார்கள்.

இக்குற்றச்சாட்டில் ஒரு சிறிதும் உண்மை இல்லை என்று நாம் கூறவில்லை. அங்கொன்றும், இங்கொன்றுமாக இச் சட்டத்தைப் பயன்படுத்தித் தவறாகப் புகார் கொடுத்த நிகழ்வுகள் உண்டு. ஆனால் அது பெரும் பான்மை இல்லை. இன்றும் தீண்டாமைக் கொடுமை, சாதி அடிப்படையில் இழிவு படுத்துப் படுவது தமிழ்நாட்டில் இருக்கிறது. இந்தச்சட்டம் இருக்கும் போதே சாதி அடிப்படையிலான தீண்டாமைக் கொடுமைகளும், இழிவு படுத்தல்களும் தமிழ் நாட்டில் பல இடங்களில் தலை விரித்தாடுகின்றன. அவற்றை யெல்லாம், ஏடுகளில், தொலைக் காட்சிகளில் பார்க்கிறோம்.

ஆயிரக்கணக்கில் இச் சட்டத் தின் கீழ்ப் பொய்ப் புகார்கள் பதிவு செய்யப்பட்டு விட்டனவா? இல்லை. மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும் பொய்ப் புகார்கள் கொடுக்கக் கூடாது என்பதே நமது நிலைபாடு. பொய்ப் புகார்கள் பதிவா காமல் இருப்பதற்கு மேலும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைச் செய்யலாம்; அம்மக்களுக்கென அமைப்புகள் நடத்து வோரிடமும் கோரிக்கை வைக்கலாம். அதை விடுத்து, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தையே நீக்க வேண்டும் என்பது ஞாயமன்று. அந்தச் சட்டம் இல்லையேல் ஒடுக்கப் பட்ட மக்களுக்கு சட்டப்படியான பாதுகாப்பு இல்லாமல் போய்விடும்.

1990 பிப்ரவரி 25-ஆம் நாள் சென்னைப் பெரியார் திடலில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி முன்னின்று தமிழ்த் தேசியத் தன்னுரிமை மாநாடு நடத்தியது. அதில் நான் முன் மொழிந்த தீர்மானம் தமிழ் நாட்டின் பிரிவினைக்கு வழிவகுக்கிறது என்று சொல்லி அப்போ திருந்த தி.மு.க. ஆட்சி என்னைக் கைது செய்து சென்னைச் சிறையில் அடைத்தது. நான் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னையில் நடந்த பொதுக் கூட்டத்தில் சிறப்புரை ஆற்றியவர் மருத்துவர் இராமதாசு. அப்போது நான் சென்னை நடுவண் சிறையில் இருந்தேன். ஒரு சிறப்பான கண்டன அறிக் கையை தினப்புரட்சி ஏட்டில் வெளியிட்டார்.

நான் பிணையில் வெளிவந்த போது சிறைவாயிலுக்கு தோழர்கள் தலித் எழில்மலை, பு.தா. இளங்கோவன் ஆகிய இருவரையும் அனுப்பி, சால்வை அணி வித்து என்னை வரவேற்கச் செய்தார்.

இவ்வளவும் அவர் செய்ததற்குக் காரணம், தன்னுரிமைக் கோரிக்கையின் மீது அவர்க்கு ஏற்பட்ட ஈர்ப்பேயாகும். அதனால் அவர் தன்னுரிமைத் தீர்மானத்தை மேலும் சிறப்பாக நிறை வேற்றக் கூட்டிய ஒரு பெரும் மாநாட்டை 1992ஆம் ஆண்டு, சென்னையில் பா.ம.க. சார்பில் நடத்தினார். தன்னுரிமைத் தீர்மானம், விடுதலைப்புலிகள் ஆதரவுத் தீர்மானம் ஆகியவை அம் மாநாட்டில் நிறைவேற்றப் பட்டன. அப்போது முதலமைச்சராக இருந்தவர் செயலலிதா. மாநாடு முடிந்த இரண்டு நாட்களில் மாநாட்டில் பேசியவர்களை இரவோடிரவாக வேட் டையாடிக் கைது செய்ய வைத்தார்.

சென்னை நடுவண் சிறையில், மருத்துவர் இராமதாசு, ஐயா பழ.நெடுமாறன், பண்ருட்டி இராமச்சந்திரன், நெல்லிக்குப்பம் கிருட்டிணமூர்த்தி, சுப.வீரபாண்டியன், தியாகு, நான் எனப்பலரும் இருந்தோம். இந்தக் கைதால் மருத்துவர் இராமதாசின் மதிப்பு உயர்ந்தது.

ஆனால் இப்பொழுது, மாமல்லபுரம் மாநாட்டை யொட்டி மருத்துவர் இராமதாசு கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் சில வசதிக் குறைவுகளால் துன்பப்பட்டுள்ளார். இருந்த போதும், அந்த உயர்வு நிலை இன்றில்லை.

1980களில் வன்னியர்களின் தனி இடஒதுக்கீட்டுக்காக, மருத்துவர் இராமதாசின் வழிகாட்டலில் ஒருவாரம் கடுமையான சாலை மறியல் நடந்தது. வன்னியர்கள் பலர் துப்பாக்கிச் சூட்டில் பலியானார்கள். அப்போது தமிழ்நாட்டில் உள்ள மற்ற மக்கள், மருத்துவரை வியப்போடும், மதிப்போடும் பெருமிதத் தோடும் தான் பார்த்தார்கள். ஏனெனில் அது ஒரு பிரிவு உழைக்கும் மக்களின் கோரிக்கை! மாமல்லபுரம் மாநாட்டுப் பேச்சுகள் நடவடிக்கைகள் அந்தத் தன்மையில் இல்லையே!

ஏன் இந்தச்சரிவு? தன்சாதி மக்களுக்கு சமூக நீதி பெற்றுத்தர வேண்டும்; தான் பிறந்த தமிழினத்திற்கு உரிமை பெற்றுத் தர வேண்டும் என்று அன்று மருத்துவர் எடுத்த முடிவுகள் சொந்த சாதியிலும், சாதி எல்லை கடந்தும் வரவேற்பைப் பெற்றன. பாராட்டைப் பெற்றன.

பின்னர், சாதி சங்கத்தை அரசியல் கட்சியாக்கி பதவி அரசியல் தலைவராக மாறிப் போய்விட்டார். இந்தத் தேர்தலில் அ.தி.மு.க.வோடு கூட்டணி, அடுத்த தேர்தலில் தி.மு.க.வோடு கூட்டணி. எப்பொழுது வேண்டு மானாலும் எந்தக் கூட்டணியில் வேண்டுமானாலும் மாறிக் கொள்வார் என்ற முத்திரை மருத்துவர் இராமதாசு மீது பதிந்துவிட்டது.

இந்தச் சந்தர்ப்பவாதங்களில் அவர் ஏன் ஈடுபடுகிறார். தான் அரசுத் பதவிக்குப் போவதில்லை; ஆனால் அரசுப் பதவிகளில் இருப்போரைத்தான் இயக்க வேண்டும் என்ற பால் தாக்க ரேயின் கோட்பாட்டை மருத்துவர் கடைபிடித்தார். பால்தாக்ரேயும் குடும்ப வாரிசு அரசியல் நடத்தினார். மருத்து வரும் குடும்ப வாரிசு அரசியல் நடத்து கிறார். குடும்ப வாரிசு அரசியல் நடத்துவதில் கலைஞர் கருணாநி திக்கும் மருத்துவர் இராமதாசுக்கும் இடையில் குறிப்பிடத்தக்க எந்த வேறுபாடும் இல்லை.

குடும்ப வாரிசு அரசியல், வன்னியப் பெருமக்களிடம் அவருக்கிருந்த செல்வாக்கின் அளவைக் குறைத்தது. கூட்டணிக் கட்சிகளிடமும் நம்பகத் தன்மையை இழந்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. வுடன் கூட்டணி சேர்ந்தும் மூன்றுபேர் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. அதற்கு முன் 19 உறுப்பினர்கள் இருந்தார்கள்.

நாடாளுமன்ற, சட்டமன்றத் தோல்விகள் மருத்துவரிடம் விரக்தி நிலையை உண்டாக்கி விட்டது. தன்சாதி மக்களே, தன்னை விட்டுப் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்தார். எனவே சாதியுணர்ச்சி யைத் தீவிரமாக ஊட்டி, வன்னிய மக்களைத் தன்பக்கம் திரட்டிக் கொண்டு, அந்த வலிமையின் அடிப்படையில் தி.மு.க. அல்லது அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேரம் பேசலாம்; கூடுதல் தொகுதிகள் பெறலாம்; வெற்றியும் பெறலாம் என்பது அவரது கணக்காக இருந் திருக்கிறது. தன்சாதி மக்களுக்குத் தீவிர சாதி உணர்ச்சியைத் தூண்ட வேண்டு மானால், கண்ணுக்குத் தெரிந்த எதிரி வேண்டும். அந்த எதிரிதான் தாழ்த்தப்பட்ட மக்கள்; அவர்களின் கட்சியாக உள்ள விடுதலைச் சிறுத்தைகள் என்று ஆக்கினார்.

ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி கற்று, அரசுப் பணிகள், தனியார் துறைப் பணிகள் என்று ஓரளவு வசதியாக வாழும்போது, உரிமையுணர்ச்சி வளர்ந்து சமத்துவம் கோரும் விடுதலை உணர்வு பீறிட்டுக் கிளம்பும் போது, பழைய காலம் போல் ஒடுக்கப் பட்ட மக்கள் பணிந்து, குனிந்து போக மாட்டார்கள். அவர்களில் சிலர், தங்களை இதுவரை கீழ் நிலையில் வைத்திருந்த பிற்படுத் தப்பட்ட சாதியினரைச் சீண்டவும் செய்வார்கள்.

இவ்வாறான ஒடுக்கப்பட்ட மக்களின் வளர்ச்சிப் போக்கு – வன்னிய மக்களில் ஒரு சாரார்க்கு எரிச்சல் உண்டாக்கவும் கூடும். இம்மனநிலையை ஊதிப் பெருக்கிட வன்னிய மக்கள் அனைவர்க்குமான பொது உணர்வாக்கி, தனக்கொரு வலுவான வாக்கு வங்கியை வன்னியப் பெருமக்களிடம் உருவாக்கிக் கொள்வது தான் இப்போதுள்ள பா.ம.க.வின் திட்டம்!

நாயக்கன் கொட்டாய் நத்தம் கிராமத்தில் இளவரசன் என்ற ஒடுக்கப்பட்ட வகுப்பு இளைஞனும், திவ்வியா என்ற வன்னியர் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டது இது வரை நடக்காத புதிய நிலநடுக்கம் அல்ல; அதை நிலநடுக்கம் போல் மாற்றியது பா.ம.க.வின் புதிய திட்டம்.

திராவிடக் கட்சிகளோடு கூட்டணியே கிடையாது என்கிறார் மருத்துவர் இராமதாசு. ஆனால், ஒரு தடவை கூட அவர் ‘திராவிடம்’ என்பதை கோட் பாட்டளவில் திறனாய்வு செய்ததே இல்லை. வெறுமனே தி.மு.க., அ.தி.மு.க. எதிர்ப்பாக மட்டுமே திராவிட எதிர்ப்பைக் காட்டுகிறார்.

அடுத்த தேர்தலில் தி.மு.க. வுடன் அல்லது அ.தி.மு.க.வுடன் பா.ம.க. கூட்டணி சேர்ந்தால் வியப்படைய ஏதுமில்லை. அக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இருந்தால் அதிலும் புதுமை ஒன்றுமில்லை.

சாதி அடிப்படையில் வாக்கு வங்கியைத்தக்க வைப்பதை அடிப்படையாகக் கொண்டுள்ள எந்த சாதிக் கட்சியும் தன்சாதி உணர்வை தூண்டிக் கொண்டே தான் இருக்கும். சாதி ஒழிப்பை மனமார விரும்பமாட்டார்கள். வெளிப் பேச்சுக்கு சாதி ஒழிப்புப் பற்றி கருத்துகள் சொல்வார்கள். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தோழர் தொல்.திருமாவளவன் அவர்கள் விடாமல் தமிழ்த் தேசியத்தைத் தாக்கி வருவதன் நோக்கமும் அதுதான்.

சாதி உணர்ச்சி மங்கி, தமிழின உணர்ச்சி மேலோங்கினால் தங்கள் அஸ்திவாரம் நொறுங்கி விடும் என்று சாதி அமைப்புகள் எப்போதும் கவலைப்படும்.

அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் சாதிக் கட்சிகள் இல்லையென்றாலும் சாதி உணர்வைப் பயன் படுத்திப் பலன்கண்ட கட்சிகள். அந்தந்த வட்டாரத்திற்கேற்ப அந்தந்த சாதிக்கு முக்கியத்து வமும், பதவிகளும் கொடுத்து, சாதி உணர்ச்சியைத் தூண்டி வளர்த்துவிட்ட கட்சிகள் 1. காங்கிரசு, 2. தி.மு.க., 3. அ.இ .அ.தி.மு.க.

இக்கட்சித் தலைவர்கள் சாதியைப் பயன்படுத்திக் கொள்வதைப் பார்த்துதான், சாதிக் கட்சிகளே உருவாயின.

2012 மே மாதம் மாமல்லபுரத் தில் நடந்த வன்னிய இளைஞர் விழாவில் வன்னியப் பெண்க ளைப் பிறசாதியினர் காதலித்துத் திருமணம் செய்தால் வெட்ட வேண்டும், குத்த வேண்டும் என்று காடுவெட்டி குரு பேசினார். அவர்மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. ஓராண்டாக அவ்வழக்கை நடத்தாமல் – அவரைக் கைது செய்யாமல் அ.இ.அ.தி.மு.க. அரசு கிடப்பில் போட்டதேன்? வன்னியர் வாக்குகள் பாதிக்கப்படுமே என்ற தயக்கம் தான்.

இப்பொழுது, எப்பொழுதோ பதிவு செய்யப்பட்டு தூசி படிந்து கிடந்த வழக்குகளை தூசித்தட்டி மருத்துவர் இராமதாசு மீது போடுவதேன்? பழி வாங்கும் உணர்வு என்று தானே பொது வாகப் புரிந்து கொள்ளப்படும்.

மரக்காணத்தில் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்த விவேக், செல்வராஜ் ஆகிய இருவர் இறந்தார்கள். விவேக் விபத்தில் இறந்ததாக காவல்துறை முடிவு செய்தது. செல்வராஜ் கொலை செய்யப்பட்டு மரணமடைந்தார் என பிரதேசப் பரிசோதனைக்குப் பின் கண்டறியப்பட்டது.

செல்வராசைக் கொலை செய்தவர்கள் யார் என்பதைக் கண்டறிந்து அவர்களைக் காவல் துறை கைது செய்து, வழக்குத் தொடுக்க வேண்டும்.

அதேபோல் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சேட்டு என்பவரது மரணமும் கொலை தான் என்று கூறப்படுகிறது. இந்தக் கொலைக் குற்றவாளி களையும் காவல்துறை கைது செய்ய வேண்டும்.

சாதித் தீவிரவாதத்தை முன்னிறுத்தி மற்ற சாதியினரை இழிவு படுத்தி யார் பேசினாலும் அவர்கள் மீது உடனுக்குடன் சட்டப்படி நட வடிக்கை எடுக்க வேண்டும்.

இப்பொழுது தமிழ்நாடு சந்திக்கும் முகாமை யான சிக்கல்கள் அனைத்தும் தமிழினம் தழுவி யவை. தமிழினத்தில் உள்ள அனைத்துச் சாதி களையும் பாதிக் கூடியவை. காவிரி, முல்லைப் பெரி யாறு, பாலாறு, கச்சத்தீவு, மீனவர் சுட்டுக் கொல் லப்படுதல், மூன்று தமிழர் உயிர்க்காப்பு, கூடங் குளம் அணுஉலை மாநில அரசின் அதிகாரங் களைப் பறிப் பது, பன்னாட்டு நிறுவனங் களைத் தமிழ்நாட்டில் முற்றுகை யிடச் செய்வது, அயல் இனத்தார் அன்றாடம் தமிழ்நாட்டை ஆக்கி ரமிப்பது என இவை அனைத்தும் தமிழினச் சிக்கல்கள்! ஒட்டு மொத்தத் தமிழினமும் இவற்றை எதிர் கொள்ள வேண்டும்.

தமிழர்கள் – சாதிச்சண்டை போட்டு – தன்னழிவுப் பாதையில் செல்லக்கூடாது. பாட்டாளி மக்கள் கட்சித் தலைமை தனது சாதித் தீவிரவாதத் திட்டத்தைக் கைவிட்டு, சமூக நீதி அடிப் படையில் வன்னியர் உரிமை களுக்குப் போராடுவது என்றும் தமிழின உரிமைகளுக்குப் போரா டுவது என்றும் முடிவெடுக்க வேண்டும்.

மனிதர்கள் அனைவரும் சமம்!

தமிழர்கள் அனைவரும் சமம்!

இதுவே தமிழர் அறம்!

Pin It