திருச்சி தமிழறிஞரும், பொறியாளருமான பாவலர் நடுவை மு.பரமசிவம் என்ற பரணர் 04.05.2013 காரிக்கிழமை இரவு திருவெறும்பூர் கொதிகலன் ஆலை(BHEL) மருத்துவமனையில் காலமானார். அவருடைய கணையத்தில் புற்றுநோய் ஏற்பட்டு, உடல் நலம் குன்றி திருவெறும்பூர் கொதிகலன் மருத்துவனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், அங்கு நோய் குணமாகாமல் அவர் காலமானார்.

திருச்சி கொதிலன் ஆலையில் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற அவர், பணி ஓய்வுக்குப் பின்னும் அவரது துறையில் அவருக்கு இருந்த பொறியியல் வல்லமையை கருத்தில் கொண்டு இந்தியாவின் பல மாநிலங்களிலும் கொதிகலன் தயாரிப்பு ஆலைகளுக்கு அழைக்கப்பட்டு, அங்கெல்லாம் போய் கொதிகலன் தயாரிப்பில் உதவி வந்தார். லிபியா நாட்டிலும் ஓராண்டு கொதிகலன் உருவாக்கப் பணியில் இருந்தார்.

இளம் அகவையிலேயே தமிழ் மொழியின் மீதும் இனத்தின் மீதும் பற்றுக் கொண்டிருந்த பரமசிவம், மொழி ஞாயிறு பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோருடன் தொடர்பு கொண்டார். “தென்மொழி” இதழின் தொடக்க கால படிப்பாளர்களில் ஒருவர் அவர்.

பாவாணர், பெருஞ்சித்திரனார் ஆகியோர் முன்முயற்சியில் உருவாக்கப்பட்ட உலகத் தமிழ்க் கழகத்தின் முதல் மாநாடு திருச்சி தேவர் மன்றத்தில் 1968ஆம் ஆண்டு நடந்தது. அம்மாநாட்டுக்கான அமைப்புப் பணிகளில் செயல்பட்டவர்களில் நடுவை மு.பரமசிவம் அவர்களும் ஒருவர். தமிழக விடுதலை, தமிழீழ விடுதலை ஆகியவற்றில் ஆழமாகப் பற்றுக் கொண்டவர். 1980களில், விடுதலைப்புலிகள் தோழமைக் கழகம் தமிழ்நாட்டில் செயல்பட்ட போது, திருச்சியில் அதில் முகாமையான பணியாற்றினார். தொடர்ந்து, தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டார்.

“ஐந்திணை”, “ஆண்டகை” ஆகிய நூல்களை எழுதியுள்ளார். இதில், ‘ஆண்டகை’ நூல், தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களை காப்பியத் தலைவராகக் கொண்டு, புறநானூற்று நடையில் எழுதப்பட்ட பா நூலாகும்.

கடந்த ஆண்டிலிருந்து மு.வ.பரணர் அவர்கள், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியில் உறுப்பினராகச் செயல்பட்டார். கட்சியின் மீது பற்றுறுதி, கட்சிக் கட்டுப்பாடு, தோழமை உறவில் வழிகாட்டும் தன்மை, தமிழ்த் தேசியம் ஆகிய பண்புகளை கொண்டிருந்தார்.

பாவலர் பரணர் அவர்களுக்கு மனைவியும், இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

05.05.2013 அன்று, திருவெறும்பூர் ஜெய் நகரிலுள்ள அவரது இல்லத்தில், வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் திரு. பழ.நெடுமாறன், திருவள்ளுவர் தவச்சாலை நிறுவனர் புலவர் இளங்குமரனார், பேராசிரியர் திருமுருகன், பேராசிரியர் இளமுருகன், புலவர் செந்தலை ந.கவுதமன், முன்னாள் தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர் திரு. சேகரன், ம.தி.மு.க. தொழிற்ச் சங்கத் தலைவர் திரு. பாலகிருஷ்ணன், புலவர் க.முருகேசன், ம.தி.மு.க. தோழர் அடைக்கலம், த.ஓ.வி.இ. தோழர்கள் குடந்தை ஈகவரசன், நிலவழகன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும், அறிஞர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், தலைமைச் செயற்குழுத் தோழர்கள் நா.வைகறை, அ.ஆனந்தன், கோ.மாரிமுத்து, பழ.இராசேந்திரன், தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, திருச்சி செயலாளர் தோழர் கவித்துவன், மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் த.பானுமதி, மகளிர் ஆயம் தோழர்கள் ம.இலட்சுமி மற்றும் மீனா, த.க.இ.பே. தோழர்கள் பாவலர் இராசா இரகுநாதன், கவிஞர் கவிபாஸ்கர் உள்ளிட்ட ஏராளமான த.தே.பொ.க. தோழர்களும், உணர்வாளர்களும் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு பரணருக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

பாவலர் மு.வ.பரணர் அவர்களுக்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வீரவணக்கம் செலுத்துகிறது! அவரது இலட்சிமான தமிழ்த் தேசியத்தை மேலும் மேலும் முன்னெடுத்துச் செல்ல உறுதி பூணுகிறது!

பேராசிரியர் திருநாவுக்கரசு காலமானார்

விழுப்புரம் பேராசிரியர் து.திருநாவுக்கரசு அவர்கள் 19.04.2013 அன்று தமது இல்லத்தில், மாரடைப்பால் காலமானார்.

விழுப்புரம் அரசுக் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராக இருந்த திரு. து.திருநாவுக்கரசு அவர்கள், மாணவப் பருவத்திலேயே தமிழ்த் தேசியத்தின்பால் கொண்ட ஈடுபாடு காரணமாக, ஈ.வெ.கி. சம்பத் தொடங்கிய தமிழ்த் தேசியக் கட்சியில் சேர்ந்து செயல்பட்டார். அக்கட்சியின் விழுப்புரம் மாவட்டப் பொறுப்பிலும் இருந்தார். பின்னர், சம்பத் அவர்கள் காங்கிரசில் இணைந்துவிட்டதால், காங்கிரசில் திருநாவுக்கரசு அவர்கள் சேராமல், மார்க்சிய இலெனினிய அடிப்படையில் தன்னுரிமையை ஆதரிப்பதாகச் சொன்ன இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுரிமை குறித்த செயல்பாடுகள் எதுவும் வைத்துக் கொள்ளாததால், அவர் அக்கட்சியிலிருந்தும் விடுபட்ட நிலையிலிருந்தார். விழுப்புரத்தில் நண்பர்களுடன் சேர்ந்து, தாய்த்தமிழ்ப் பள்ளி தொடங்கினார். அவரது தமிழ்த் தேசியத் தேடலின் விளைவாக, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியில் உறுப்பினரானார். தலைமைப் பொதுக்குழுவுக்கும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். செயல் துடிப்பும், கொள்கைப பற்றும் கொண்டு விழுப்புரம் பகுதியில் இயக்கப் பணியாற்றினார்.

பின்னர் அவர், நோய்வாய்ப்பட்ட நிலையில், தமிழ்த் தேசிய அரசியல் பணியில் வெளியில் சென்று ஈடுபட முடியவில்லை. தொடர்ந்து பல கட்டுரைகள் எழுதினார். அவருக்கு மனைவியும், இரண்டு மகன்களும் இருக்கிறார்கள்.

விழுப்புரத்தில் 20.04.2013 அன்று காலை நடைபெற்ற இறுதி வணக்க நிகழ்வு இரங்கல் கூட்டத்தில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், பேராசிரியர் த.பழமலய், இராசேந்திரச்சோழன், இரவி கார்த்திகேயன், எழில் இளங்கோவன், முன்னாள் தி.மு.க. நகர் மன்றத் தலைவர் உள்ளிட்ட பலரும் இரங்கலுரை நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் முருகன்குடி க.முருகன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் கு.சிவப்பிரகாசம், தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ.குபேரன், சென்னை த.இ.மு. செயலாளர் தோழர் கோபிநாத் உள்ளிட்ட த.தே.பொ.க. தோழர்களும், அய்யனார், திண்டிவனம் மு.கந்தசாமி, மயிலம் பாபு உள்ளிட்ட உணர்வாளர்களும் கலந்து கொண்டனர்.

தோழர் து.திருநாவுக்கரசு அவர்களுக்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வீரவணக்கம் செலுத்துகின்றது!

Pin It