சென்னை, அய்யனாவரம், சாலை கோவிந்தராசன் மெட்ரிகுலேசன் பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவி கவிதா தீக்குளித்து 19.4.2012 அன்று இறந்தார். தேர்வில் தன்னுடைய விடைத் தாளை பார்த்து எழுத விரும்பிய பக்கத்து மாணவிக்கு கொடுத்த போது ஆசிரியையிடம் சிக்கிக் கொண்ட கவிதா கண்டிக்கப்பட்டார். இதனால் மனம் உடைந்து தீக்குளித்து இறந்தார். -  -தி இந்து 20.4.2012 செய்தி

திருவண்ணாமலை மவுண்ட் செயிண்ட் ஜோசப் மெட்ரிகுலேசன் மேல் நிலைப் பள்ளியில் நடந்த எஸ். எஸ்.எல். சி. தேர்வில் பார்த்து எழுத (பிட் வைத்து காப்பி அடிக்க) உதவிய ஆசிரியர்கள் ஏழு பேர் இடை நீக்கம் இப்பள்ளியில் பள்ளி நிர்வாகமே மாணவர்களுக்கு 16.4.2012 அன்று நடைபெற்ற கணிதத் தேர்வில் கேட்கப்பட்ட வினாவுக்குரிய விடைகளைத் தயாரித்து பார்த்து எழுத மாணவர்களுக்கு வழங்கியுள்ளது. பள்ளியின் அலுவலக நகல் அச்சு எந்திரமும், அப்பள்ளியில் தேர்வை கண்காணிக்க நியமிக்கப்பட்ட ஆசிரியர்களும் இக்குற்றத்தில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். (தினத் தந்தி மற்றும் பிற ஏடுகள் 17.4.2012)

மேற்குறிப்பட்டவை உதிரியாக நடக்கிற தனித்த நிகழ்வுகள் அல்ல. ஆங்கில வழி தன்நிதிப் பள்ளிகள் கணக்கின்றி பெருகியதற்குப் பிறகு பெருமளவில் எழுந்துள்ள சிக்கலாகும் இது.

பொதுத் தேர்வில் காப்பியடிப்பதும், பிட் அடிப்பதும் புதிய செய்தி அல்ல. அண்மைக் காலமாக நடந்து வருகிற குற்றமும் அல்ல ஆனால் இவை இங்கொன்றும் அங் கொன்றுமாக ’மாணவர் முயற்சியில்’ நடைபெற்ற குற்றங்களாகும்.

ஆனால் பள்ளி நிர்வாகமே காப்பியடைப்பதை ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாக செய்வது தன்நிதி மெட்ரிகுலேசன் பள்ளிகள் வந்த பிறகுதான். கொள்ளையாக பணத்தை பெற்றோரிடமிருந்து கறக்கும் இப்பள்ளிகள் எப்படியாவது நூற்றுக்கு நூறு விழுக்காடு தேர்ச்சிக் காட்ட வேண்டிய போட்டியில் உள்ளன. இதற்கு இப்பள்ளி முதலாளிகள் மேற்கொள்ளும் சந்தை முயற்சிகள் ஒட்டு மொத்த கல்விச் சூழலையே பாழ்படுத்தி விட்டன. ஒழுங்கங்கெட்ட தன்னலவாதிகளை இவை உருவாக்கி வருகின்றன.

பள்ளியில் சேர வரும் பிள்ளைகளின் பெற்றோருக்கு தேர்வு வைத்தல், பிள்ளைகளின் பெற்றோர்களில் ஒருவராவது படித்தவராக இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தல், பள்ளி நேரத்திற்குப் பிறகு தனிப்பயிற்சியை (டியூசன்) திணித்தல் ஆகியவை மழலையர் வகுப்பிகளிலிருந்தே தொடங்கி விடுகின்றன. “ இங்கு யூ.கே.ஜி. லிருந்து ஐந்தாம் வகுப்பு வரை டியூசன் சொல்லிக் கொடுக்கப்படும்” என்ற அறிவிப்பு அட்டை ஏதாவது ஒரு வீட்டிலாவது தொங்காத சந்து பொந்துகளை நகரங்களில் பார்ப்பது அரிது. அதுவும் கோடை விடுமுறை தொடங்குகிறதென்றால் திரும்பிய பக்கமெல்லாம் இவ்வாறான அறிவிப்புகள் பெருகத் தொடங்கி விடும்.

இது மட்டுமின்றி 9 ஆம் வகுப்பு பாட்த்தை 9 ஆம் வகுப்பில் நடத்தாமல் பத்தாம் வகுப்புக்குரிய பாடத்தை ஒன்பதாம் வகுப்பிலேயே தொடங்கி பத்தாம் வகுப்பு முடியும் வரை இரண்டாண்டுகள் நடத்துவது பெரும் பாலான மெட்ரிகுலேசன் பள்ளிகளின் வாடிக்கை. அதே போல் 11 ஆம் வகுப்பு பாடத்தையே நடத்தாமல் 12 ஆம் வகுப்புக்குரிய பாடத்தை 11, 12 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் நடத்துவது. ஆங்கில வழி தன்நிதி மெட்ரிகுலேசன் பள்ளிகளில் வழக்கமாகிவிட்டது.

இதுவும் போதாதென்று பள்ளி நிர்வாகமே முன்னின்று ஏற்பாடு செய்து பறக்கும் படை உள்ளிட்ட அனைவரையும் சரி கட்டி மாணவர்களுக்கு பிட் வழங்கி பார்த்து எழுதுவதை ’ஒழுங்கு’ செய்கின்றன. சில ”நெஞ்சுறுதியுள்ள” மெட்ரிகுலேசன் பள்ளிகளில் இரண்டு மதிப்பெண் பதில்கள். கோடிட்ட இடங்களை நிரப்புதல், பொருத்துதல் போன்ற சிறு வினாக்களுக்கு தேர்வு அரங்கிலுள்ள கரும்பலகையிலேயே விடை எழுதி போட்டு விடுவது உண்டு.

’இந்த கல்விச் சேவைக்காக’ சிறப்பு சேவைக்கட்டணம் திரட்டப்படுவதும் உண்டு. அப்படி திரட்டப்பட்ட தொகையில் ஆயிரம் ரூபாய் தான் திருவண்ணா மலையில் ஆசிரியரிடம் சிக்கியது.

இவ்வாறு அனைத்து வகை தில்லு முல்லுகளையும் செய்துதான் பெரும்பாலான ஆங்கில வழி தன்நிதி மெட்ரிகுலேசன் பள்ளிகள் நூற்றுக்கு நூறு தேர்ச்சி விகிதத்தைக் காட்டுகின்றன. உண்மையில் இப்பள்ளிகள் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தி விடுவதில்லை. கல்வி தரத்தை உயர்த்தாதது மட்டுமின்றி மாணவர்களிடம் எதை செய்தாவது வெற்றி பெற வேண்டும் என்ற தன்னல வெறியையும் உருவாக்கி விடுகின்றன.

பளப்பளப்பான விளம்பரங்களோடு புற்றீசல்கள் போல் புறப்பட்டுள்ள இந்த கல்வி நிறுவனங்களால் மாணவர்களின் கல்வித் தரம் உயர்ந்துவிடவில்லை என்பதற்கு அண்மையில் வெளியான மாணவர் அறிவு குறித்த அறிக்கையே சான்று.

கல்விக் கணகெடுப்பு ஆண்டறிக்கை என்பது ஒவ்வொரு ஆண்டும் அரசினால் வெளியிடப்படுகிறது. தொடக்க்க் கல்வி மற்றும் நடு நிலைக் கல்வியில் தரம், பள்ளிகளின் நிலை, மாணவர் சேர்க்கை போன்றவற்றை ஆய்வு செய்து இந்திய அரசு வெளியிடும் அறிக்கை இது.

கல்விக் கணகெடுப்பு ஆண்டறிக்கை – 2011 கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. (காண்க: தினமணி 23.2.2012) இவ்வாய்வு தமிழ்நாட்டில் இயங்கும் அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி , தன்நிதிப் பள்ளி அனைத்திலும் படிக்கும் மாணவ மாணவியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஒன்றாகும். தமிழ்நாட்டில் பள்ளியில் சேருவோர் எண்ணிகையும் நாள்தோறும் பள்ளிக்கு வரும் மாணவ்ர்கள் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கையும் பிற மாநிலங்களை ஒப்பிட சிறப்பாக இருப்பதை இவ்வறிக்கை சுட்டிக்காட்டியது.

ஆனால் மாணவர்களிடம் உள்ள கல்வித் தரம் தான் கவலையளிக்கிறது. எடுத்துக்காட்டாக ஐந்தாம் வகுப்பு மாணவர்களிடத்தில் இரண்டாம் வகுப்பு தமிழ்ப் பாட்த்தைக் கொடுத்து படிக்கச் சொன்ன போது அரசுப் பள்ளி மாணவர்களில் நூற்றுக்கு 68 பேரும் தன் நிதி தனியார் பள்ளி மாணவர்கள் 66 விழுக்காட்டினரும் படிக்க முடியாமல் திணறினார்கள். இவர்களுக்கு தமிழில் மட்டும் தகராறு இல்லை பிறவற்றிலும் இப்படித்தான். ஐந்தாம் வகுப்பு மாணவர்களில் கழித்தல் கணக்கு மட்டுமே தெரிந்த மாணவர்கள் 45 விழுக்காட்டினர் கழித்தலும், வகுத்தும் சேர்த்து தெரிந்தவர்கள் 15 விழுக்காட்டினர். கழித்தல் கணக்கும் தெரியாது வகுத்தல் கணக்கும் தெரியாது என்ற நிலையில் இருந்தோர் 15 விழுக்காடு. இதில் அரசுப் பள்ளிக்கும் தன் நிதிப்பள்ளிக்கும் பெரிய வேறுபாடு இல்லை. இத்தனைக்கும் தன்நிதி தனியார்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 25 விழுக்காட்டினர் தனிப்பயிற்சிக்கு (டியூசன்) செல்வர்கள் ஆவர்.

கைதூக்கிவிட வேண்டிய நிலையிலுள்ள மாணவர்களை கழித்துக் கட்டிவிட்டு, ஓராண்டுகள் நடத்த வேண்டிய பாடத்தை இரண்டு ஆண்டுகள் நடத்தி, காப்பியடிக்க ஏற்பாடுகளும் செய்து விட்டு அதற்குமேலும் விடைத்தாளைத் துரத்திச் சென்று இலஞ்சம் கொடுத்து தேர்ச்சிப்பெற்று. இப்படி எல்லா மோசடிகளிலும் ஈடுபட்டுதான் தன்நிதி மெட்ரிகுலேசன் பள்ளிகள் கல்வியை வளர்க்க படாதபாடு படுகின்றன.

ஆங்கிலம் என்ற முகமூடியை வைத்துக் கொண்டு மக்களை கவர்ந்து இழுக்கும் தன் நிதி மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் ஏறத்தாழ 90 விழுக்காட்டினர் இவ்வகையினரே ஆவர்.

இனியாவது தமிழ்நாட்டுப் பெற்றோர்கள் தன் நிதி மெட்ரிக்குலேசன் பள்ளிகள் தரமானவை என்ற மாயையிலிருந்து விடுபட வேண்டும்.

திருவண்ணாமலை நிகழுவும் மாணவி கவிதாவின் மரணமும் பெற்றோர்களின் கண்களை திறக்கட்டும்.

Pin It