ஜெர்மனி, ஸ்பெயின், சுவிடன், சுவிட்சர்லாந்து ஆகிய பணக்கார நாடுகளில் கூட கல்வி இலவசமாக்கப்பட்டு இருக்கிறது. உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் கூட கல்வி இலவசமாக தரப்படுகிறது. இப்படி உலகின் பல்வேறு நாடுகள் கல்வியை இலவசமாகத் தான் தருகின்றன. ஆனால் இந்திய அரசு, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளில் உள்ள அரசமைப்புச் சட்ட விதிஎண் 45யின் படி 14 வயது நிரம்பியவர்களாகும் வரை கட்டாய இலவசக் கல்வி கொடுக்க வேண்டும் என்று சொல்கிறது. ஆனால் இதை இந்திய அரசு அமுல்படுத்துவது குறித்து விவாதிக்க மாநிலக்கல்வி அமைச்சர்கள் மாநாடு டில்லியில் 31.08.2009 அன்று நடைபெற்றது. இதில் பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபில், “இந்தத் திட்டத்தை நிறைவேற்ற ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் கோடிரூபாய் தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. எனவே மாநிலஅரசுகள் நிதி ஒதுக்கீட்டை அதிகரித்தால் தான் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கல்விக்கு 6% நிதி என்ற இலக்கை அடைய முடியும்” என்றார்.

1 வயது முதல் 14 வயது வரை கல்வி தரவே இந்த நிலை என்றால் உயர்நிலைக் கல்வி என்பது எட்டாக்கனியே! பள்ளி, கல்லூரிகளில் அனைவருக்கும் கல்வி இலவசமாகக் கிடைக்கும்படி செய்யும் திட்டம் இந்திய அரசிடம் இல்லை. ஏனென்றால் இந்திய அரசின் மறைமுகக் கொள்கை முதலாளித்துவத்தை தூக்கிப்பிடிப்பதே, கல்வித்துறையில் மட்டும் அல்ல அனைத்துத் துறைகளிலும் தனியார் மயத்தை தக்கவைத்துக் கொள்ளத்தான், அரசு அனைவருக்கும் கல்வியை இலவசமாகத் தருவதில்லை. கல்வி பயிலும் மாணவர்களில் 1 சதவிதத்திற்கும் குறைவாகத்தான் உதவித்தொகை பெற்று படிக்கின்றனர். இந்த உதவித்தொகையில் தனியார் நிறுவனங்களின் உதவித்தொகையும் அடங்கும். முதலாளிகள் கல்விக்கு உதவித்தொகை தருவது வருமான வரியிலிருந்து தப்பிப்பதற்கும் தாங்கள் நல்லவர்கள் என்ற மாயையை உருவாக்குவதற்குமே தவிர மக்களுக்காக உதவுகின்றனர் என்று தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம். ஆக 99%க்கும் அதிகமானோர் பணம் கொடுத்தே படிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். அதனால்தான் பெரும்பான்மை மக்களாகிய ஏழை மக்களுக்கு உயர்கல்வி என்பது கானல் நீரே.

தொழிற்கல்வி பயில்பவர்களில் பெரும்பாலானோர் மேட்டுக்குடிகளும் நடுத்தர மேட்டுக் குடிகளும் தான். தொழிற்கல்வி மட்டும் அல்ல கலை மற்றும் அறிவியல் கல்வியில் கூட ஏழை மக்களுக்கு உயர்கல்வி பெறமுடியாமல் பட்டப்படிப்பில் இளநிலையோடு முடித்துக் கொள்ளும் அவலத்தில் உள்ளார்கள். அரசிற்கும் அரசின் பிரதிநிதிகளுக்கும் இந்த அவலம் நன்கு தெரியும். தெரிந்தே தான் அரசும் அரசின் பிரதிநிதிகளும் காசு இருப்பவனுக்கே கல்வி என்ற கொள்கையை தூக்கிப் பிடிக்கிறார்கள். இதற்கு ஆழமான காரணம் உண்டு. சமுதாய சிந்தனை அதிகம் உள்ளவர்களாகவும், அரசின் இயலாமையை எதிர்த்துப் போராடுபவர்களாகவும் உள்ளவர்கள் அரசுப் பள்ளி, கல்லூரிகளில் படித்தவர்கள், படிப்பவர்கள் தான். தனியார் பள்ளி, கல்லுரிகளில் உள்ளவர்கள் சமுதாயத்திற்காகப் போராடுவது என்பது அரிதே.

தனியார் பள்ளி, கல்லூரிகளில் அதிக கட்டணம் கொடுத்து படிப்பவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் நல்ல வேலையை (அதாவது உயர்நிலை வேலையை) வாங்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். இதற்காக அவர்கள் தங்களது ஆசிரியர்களையும் கல்வி நிறுவனங்களையும் பகைத்துக் கொள்வதே கிடையாது. அப்படி பகைத்துக் கொண்டால் செய்முறைத் தேர்வில் மதிப்பெண் குறைத்து விடுவார்கள் என்பதாலும் தன்னாட்சிகளாக உள்ள கல்லூரி, பல்கலைகழகங்களில் தங்களது தேர்வு விடைத்தாள்களைக் கூட தங்களது பேராசிரியர்கள் திருத்த வாய்ப்பு உண்டு என்பதாலும் அவர்கள் எதிர்த்துப் பேசுவதே இல்லை. அதிக கட்டணம் மட்டுமல்ல ரசீது இல்லாமல் வசூலித்தால் கூட புலம்புவதை விட வேறு எதுவும் செய்வது இல்லை. இப்படி தங்களது கல்விக்கட்டணம், தங்களது பள்ளி, கல்லூரிகளில் நடக்கும் ஊழல்களைக் கூட எதிர்த்துப் போராட முடியாதவர்களாக உள்ள தனியார்க் கல்லூரி மாணவர்கள், அரசுத் துறைகளிலும் தனியார்த் துறைகளிலும் உயர்ந்த பொறுப்பு மிக்க வேலையில் சேர்கிறார்கள். அதனால் தான் இவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் சமுதாயத்திற்காகப் போராடுவதே கிடையாது. சுரண்டக் கூடிய தனியார் முதலாளிக்கும் ஊழல் நிறைந்த அரசு இயந்திரத்திற்கும் துணை நிற்கிறார்கள்.

வகுப்புகள்              படிப்பவர்களின் எண்ணிக்கை

1-வது வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை - 61,51,278 பேர்

6-வது வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை - 43,27,808 பேர்

9-வது வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை - 30,17,000 பேர்

தொழிற்கல்வி பல் தொழில் - 66,223 பேர்

பொறியியல் - 73,953

மருத்துவம் - 1,734 பேர்

கலை மற்றும் அறிவியலில் இளநிலை பட்டம் - 1,35,060 பேர்

கலை மற்றும் அறிவியலில் முதுநிலை பட்டம் - 26,924 பேர்

முனைவர் பட்டம் பெறுபவர்கள் எண்ணிக்கை - 2,526 பேர்

(ஆதாரம் பதினோராவது ஐந்தாண்டுத் திட்டத்தின் தமிழ்நாடு திட்ட ஆணைய தகவல் அறிக்கை)

1ம் வகுப்பிலிருந்து 5ம் வகுப்பு வரை படிப்பவர்களின் எண்ணிக்கை 61,51,278 பேர் ஆனால் வெறும் 2,526 பேர் மட்டுமே முனைவர் வரை செல்கிறார்கள் என்று தமிழக அரசின் திட்ட ஆணையத்தின் தகவலே தெரிவிக்கிறது. ஆக பொறியியல் + மருத்துவம் + முனைவர் பட்டம் என மொத்தமாக சேர்த்தால் (73,953 + 1,734 + 2,526) = 78,213 இவர்களுக்குத் தான் வேலைவாய்ப்பே மற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு என்பதே குதிரைக் கொம்பு தான்.

கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர் - மாணவர் விகிதம் என்று எதிலும் அரசு கவனம் செலுத்தாமல் தொடர்ந்து மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். மேற்கண்ட அட்டவணையைப் பார்த்தோம் என்றால் அதில் 1-வது முதல் 5-ம் வகுப்புவரை 61,51,278 பேர் 6ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 43,27,808 பேர். ஆக வகுப்பு அதிகமாக அதிகமாக படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகிறது. இதற்குக் காரணம் பொருளாதரமும் அருகில் பள்ளி, கல்லூரிகள் இல்லாததுமே.

2001-2002 இல் மெட்ரிக் பள்ளிகளின் எண்ணிக்கை 2907 என்று இருந்தது. 2006-2007 ஆண்டில் 3538 ஆக உயர்ந்துள்ளது இது 21.7 விழுக்காடு வளர்ச்சியாகும். தனியார் பள்ளிகள் இப்படி உயர உயர, அரசு பள்ளிகள் குறைந்து கொண்டே செல்கின்றன. கிராமப்புற மாணவர்கள் 5-ம் வகுப்பு அல்லது 8-ம் வகுப்பு வரை உள்ளுரில் படித்து முடித்து விட்டு நகர்ப்புறங்களுக்கு 9ம் வகுப்பு படிக்கத் துவங்குவதில் இருந்து அவர்களுக்கு பிரச்சணை ஏற்படுகிறது. போக்குவரத்து வசதி, குடும்பசூழ்நிலை, வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றால் படிப்பைத் தொடரமுடிவதில்லை. அரசு இலவச பேருந்து அனுமதிசீட்டு வழங்குவதாக சொன்னாலும் கூட்ட நெரிசலில் பெரும்பாலான பேருந்துகள் மாணவர்களை ஏற்றுவது இல்லை. கூட்ட நெரிசலில் ஏறி அந்த கூட்ட நெரிசலில் சிக்கித் தவிக்கும் மாணவர்களைப் பார்ப்பவர்களுக்கு கண்ணீரே வந்து விடும்.

மருத்துவம் மற்றும் பொறியியல் கட்டணம் மட்டும் அல்ல பள்ளிக் கட்டணமே பல ஆயிரம் என்று மாறிவிட்ட நிலை ஒருபுறமும், மேற்கூறிய சூழல்கள் ஒரு புறமும் என்று மாணவர்களை நசுக்கி அவர்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட வைக்கிறது. மீண்டும் நினைவு கூர்வோம், கல்வி தனியார்மயம் ஆவதன் நோக்கம் முதலாளித்துவம் தழைத்தோங்கவே. அரசும் தனியார்கல்வி நிறுவனங்களுக்கு வாய்ப்பும் சலுகைகளும் வாரி இறைக்கிறது. கல்வி தனியாரிடம் இருந்தால் இலவசக்கல்விக்கு வாய்ப்பே இல்லை. கல்வி அரசுடமை ஆனால் தான் இலவசக் கல்வி கிடைக்கும். இலவசக் கல்வி இல்லாமல் அனைவருக்கும் கல்வி என்பது கானல் நீரே. இலவசக் கல்வி நமது சலுகை அல்ல; நமது உரிமை. நமக்குக் கல்வி தருவது அரசின் பொறுப்பு. எனவே பறிக்கப்பட்ட நமது கல்வி உரிமையை மீட்டெடுக்கப் போராடுவோம்.

- க.இராசா ஸ்டாலின்

Pin It