தமிழ் ஈழத்தை உருவாக்கப் போவதாகக் கூறி, தமிழீழ ஆதரவாளர் மன்றம் (டெசோ) அமைத்துள்ள கருணாநிதியும், அதில் இணைந்துள்ள தொல் திருமாவளவனும் எவ்வளவு போலித்தனமாக ஈழம் பற்றி பேசுகிறார்கள் என்பதற்கான இன்னுமொரு எடுத்துக்காட்டு தான் அவர்கள் இந்தியக் குடியரசுத் தலைவர் வேட்பாளரான காங்கிரசுக் கட்சியின் பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பது.

ஈழத்தமிழர் அழிப்புப் போரில், ஒட்டு மொத்த இந்திய அரசின் தமிழினப் பகை அரசியல் தீவிரமாக செயல்பட்டது என்றாலும், அதில் அதிகார மையத்தில் இருக்கும் மலையாளிகள் மற்றும் வங்காளிகளின் தமிழின எதிர்ப்பு முனைப்பு மிகுதியாகும்.

வங்காளிகளும் சிங்களர்களும் தாங்கள் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கருதுகிறார்கள். இலங்கையில் குடியேறிய விசயன் வங்காளி என்கிறார்கள். 25.03.2012 ஆம் நாளைய டைம்ஸ் ஆப் இந்தியா ஏட்டில், சொப்பன் தாஸ் குப்தா என்ற இதழாளர் எழுதிய, “ஒரு நட்பு நாட்டின் துரோகம்” என்ற கட்டுரையில், வங்காளிகளும் சிங்களர்களும் பங்காளிகள் என்று கூறுகின்றார்.

இலங்கை அரசு நடத்தியப் போரில், நிகழ்ந்த மனித உரிமை மீறல்களை இலங்கை அரசே விசாரிக்க வேண்டுமென்று அமெரிக்கா கொண்டு வந்தத் தீர்மானத்தை, இந்தியா ஆதரித்தது துரோகச் செயல் என்று சொப்பன் தாஸ் குப்தா எழுதுகிறார்.
அதில் அவர் கூறுகிறார்:

"வங்காளிகள் இலங்கைக்கு எப்போது போனாலும் சிறப்பாக வரவேற்கப்படுவார்கள். காரணம், விசயன் வங்காளி என்பது தான்....

"அப்பாவி பொதுமக்கள் 40,000 பேர் கொல்லப்பட்டதாக சொல்கிறார்கள். அவர்கள் அப்பாவிகள் என்று சொல்ல முடியாது. விடுதலைப்புலிகளுடன் தொடர்ந்து சென்று போரில் ஈடுபட்டவர்கள்"

ஒரு வங்காளி இதழாளரின் பார்வை இது என்றால், அதிகாரத்தில் இருந்து கொண்டு இந்தியப் படையையும், இந்திய அரசையும் சிங்கள இனவெறி அரசு நடத்தியத் தமிழின அழிப்புப் போருக்குத் துணையாகச் செயல்படுத்திய பிரணாப் முகர்ஜியின் தமிழின எதிர்ப்பு வெறி எந்தளவில் உச்சத்தில் இருந்திருக்கும்?

பிரணாப் முகர்ஜியின் வாய்மொழி மூலமாகவே, அவரது தமிழின எதிர்ப்பு மனப்பான்மையை அறிந்து கொள்ளலாம்.

2008இல் தமிழின அழிப்புப் போரை இலங்கை அரசு உக்கிரமாக நடத்திக் கொண்டிருந்த போது, தமிழ்நாட்டில் கட்சி கடந்து, சாதி கடந்து, தமிழர்கள் ஈழத்தில் போர் நிறுத்தம் கோரி போராடினார்கள். அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, இந்திய அரசுத் தலையிட்டுப் போரை நிறுத்தவில்லையென்றால் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகுவார்கள் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முன்மொழிந்து தீர்மானம் நிறைவேற்றினார்.

2008 நவம்பர் - திசம்பரில் இது நடந்தது. குறிப்பிட்ட நாளுக்குள் போர் நிறுத்தம் வரவேண்டும் என்றும் கெடு விதித்தார். கெடு முடியப்போகும் கடைசி நாளுக்கு முதல்நாள் பிரணாப் முகர்ஜி சென்னையில் கருணாநிதியை அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார்.

பேசி முடித்து வெளியே வந்த பிரணாப் முகர்ஜியை செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டனர்.

”போர் நிறுத்தம் செய்ய ஒத்துக் கொண்டீர்களா?” என்று கேட்டனர் செய்தியாளர்கள்.
”நாங்கள் போர் நிறுத்தம் கோரவில்லை (We are not for Ceasefire)” என்றார் பிரணாப்.

”இந்தியா இலங்கைக்கு ஆயுதம் தருவதை நிறுத்திக் கொள்ளுமா?” - செய்தியாளர்கள்.
”இந்தியாவின் தென்பகுதியில் நாம் சில அமைப்புகளை நிறுவியுள்ளோம். அவற்றைப் பாதுகாப்பதற்காக இலங்கைக்கு ராடார் உள்ளிட்ட கருவிகள் கொடுக்க வேண்டியுள்ளது” - பிரணாப்.

”சிங்களப் படைவீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி கொடுப்பது நிறுத்தப்படுமா?”
”இந்தியப் படை வீரர்கள் பலநாடுகளில் பயிற்சி பெறுகிறார்கள். பலநாட்டுப் படை வீரர்கள் இந்தியாவில் பயிற்சி பெறுகிறார்கள். அதுபோல், இலங்கைப் படை வீரர்களும் இந்தியாவில் பயிற்சி பெறுகிறார்கள்” - பிரணாப்.

ஆனால்,இதற்குப் பிறகும் பேச்சுவார்த்தை இணக்கமாக நடந்து வெற்றி பெற்றதாக கருணாநிதியும் கூறினார். பிரணாப்பும் கூறினார்.

தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக மாட்டார்கள் என்று அறிவித்தார் கருணாநிதி. கருணாநிதி - பிரணாப் உடன்படிக்கைக்குப் பிறகு, சிங்கள இனவெறி அரசு தமிழின அழிப்புப் போரை தீவிரப் படுத்தியது. கொத்துக் குண்டுகளை வீசி கூட்டம் கூட்டமாகத் தமிழ் மக்களைக் கொன்றது. 2009இல் முல்லைத் தீவில் தமிழீழ தேசியத் தலைவர் உள்ளிட்ட விடுதலைப்புலிகளும், தமிழ் மக்களுமாக மூன்றரை இலட்சம் பேர் ஒரு சிறு நிலப்பரப்புக்குள் சிங்களப் படையால் சுற்றிவளைக்கப்பட்டனர். அம்மக்கள் மீது வான்வழியே குண்டுமாறிப் பொழிந்தது சிங்களப் படை.

இலட்சக்கணக்கான மக்கள் ஒரு சில நாட்களில் கொல்லப்படப் போகிறார்கள் என்ற நிலையில், உலக மனித உரிமை அமைப்புகள் இலங்கையைக் கண்டித்தன. இலட்சக்கணக்கான தமிழ் மக்களை கூட்டமாகக் கொல்லத் திட்டமிட்ட இராசபக்சே கும்பல், அங்கே சிக்கியுள்ள மூன்றரை இலட்சம் மக்கள் தொகையை வெறும் 80,000 பேர் என்று குறைத்துச் சொன்னது.

கடைசியில், அவ்வளவு பேர் தான் மிஞ்சுவார்கள் என்று கணக்கிட்ட இராசபக்சே கும்பல் தந்திரமாக, முன்கூட்டியே மக்கள் தொகையைக் குறைத்துச் சொல்லி உலகை ஏமாற்ற முனைந்தது.

அப்போது, இலங்கை சென்ற பிரணாப் முகர்ஜி முல்லைத் தீவுப் பகுதியில் சிக்கியுள்ள தமிழ் மக்களின் எண்ணிக்கையை 70,000லிருந்து 80,000க்குள் இருக்கும் என்று உலகிற்கு அறிவித்தார்.

ஈழத்தமிழ் இன அழிப்பின் மூளையாகவம், முக்கியப் புள்ளியாகவும், செயல்பட்டவர் வங்காளியும், சிங்களர் பங்காளியுமான பிரணாப் முகர்ஜி ஆவார். அந்த பிரணாப் முகர்ஜியை தான் மாறுவேட டெசோவின் “மாவீரர்”களான கருணாநிதியும், திருமாவளவனும் குடியரசுத் தலைவராக்கி சிங்காரிக்கச் சேவை புரிகிறார்கள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வங்காளிகள் - மலையாளிகள் - பார்ப்பனர்கள் ஆகியோர் நலம் காக்கும் கட்சி. சோனியா காந்தி, பிரணாப் பெயரை அறிவித்தவுடனேயே தனது அரசியல் தலைமைக்குழுக் கூடுவதற்கு முன்பாகவே, பிருந்தா காரத் மூலம் பிரணாப்புக்கு வாழ்த்துத் தெரிவித்தது சி.பி.எம். கட்சி. அதன் பிறகு, குழுக் கூட்டம் நடத்தி, “முறைப்படி“ முடிவு செய்து பிரணாப் குடியரசுத் தலைவர் ஆக வாக்களிப்பது என அறிவித்தது.

வங்காளக் கட்சியான திரிணமூல் காங்கிரசு, காங்கிரசுக் கூட்டணியில் தில்லியில் ஆளும் கட்சியாக உள்ளது. இருந்தபோதிலும், மாநில அரசியலில் உள்ள முரண்பாடு காரணமாக அக்கட்சியின் தலைவி மம்தா பானர்ஜி, பிரணாப்பை ஆதரிக்க மறுத்து வருகிறார். இப்பொழுது, துணைக் குடியரசுத் தலைவராக உள்ள அன்சாரியைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தினால் மம்தா ஆதரிப்பதாக அறிவித்தார்.

நடுவண் கூட்டணி ஆட்சியிலுள்ள மம்தாவின் இந்த உத்தியையாவது, மாறுவேட டெசோ தலைவர்களான கருணாநிதியும், திருமாவளவனும் கடைபிடித்திருக்கலாம். அவர்கள் போடும் டெசொ வேடத்திற்காவது அது பொருத்தமாக இருந்திருக்கும்.

இப்பொழுதும், இந்திய அரசு மற்றும் அதன் உளவுத்துறையின் திட்டத்தைச் செயல்படுத்த மாறுவேட டெசோ அமைத்துள்ளார் கருணாநிதி. தமது நம்பகமான கூட்டாளியாகவுள்ள கருணாநிதியின் ஒப்புதலைப் பெற விரும்பித்தான் அந்தோணியை அனுப்பி வைத்தார் சோனியா.

புரட்சிகரத் தமிழ்த் தேசிய அமைப்பான த.தே.பொ.க. இந்தியக் குடியரசுத் தலைவராக யார் வரவேண்டும் என்பதில் எந்த அக்கறையும் செலுத்தவில்லை. பிரணாப், அன்சாரி, பி.ஏ.சங்மா ஆகியோரில் யார் வந்தாலும் ஒன்று தான். இந்திய ஏகாதிபத்தியத்தின் தலைமைப் பதவிகளில் ஒன்று குடியரசுத் தலைவர் பதவி. இந்தியாவின் காலனியாக இருக்கிறது தமிழ்நாடு.

மேற்படியாரில் யார் வந்து தமிழீழ மக்களின் துயர் துடைக்கப் போகிறார்கள்? தமிழ்நாட்டிற்கு உரிமைகள் வழங்கப் போகிறார்கள்? அவர்கள் அனைவரும் ஏகாதிபத்தியத்தின் பேராளர்களே!

காங்கிரசுக் கூட்டணியும், பா.ச.க. கூட்டணியும் பன்னாட்டு முதலாளிகளின் கொள்ளைக்கு, தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியத் துணைக் கண்டத்தை திறந்து விடும் உலகமயவாதிகளே.

தமிழினத்தை அழிப்பதில் முனைப்புக் காட்டிய சிங்களர் பங்காளியான வங்காளி பிரணாப் முகர்ஜிக்கு தமிழ்நாட்டுத் தமிழர்கள் எதிர்ப்புக் காட்டினார்கள் என்ற அளவில் ஒருவரலாற்றுப் பதிவிருக்க வேண்டும். அதில், கருணாநிதியும் திருமாவளவனும் பிரணாப்பை எதிர்த்து பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கில் இவற்றை எழுதுகிறோம்.

தி.மு.க.வின் இனத்துரோகம் தொடர்கிறது. தி.மு.க.வின் இனத்துரோகத்தில் வழக்கம் போல் விடுதலைச் சிறுத்தைகளும் பங்குபெற்றிருக்கிறது.

Pin It