உலகத் தமிழக் கழகத்தின் சார்பில் வட சென்னை திரு.வி.க.நகரில் பேருந்து நிலையம் அருகில் 0.6.01.2012 அன்று, “திருக்குறள்மணி” புலவர் இறைக்குருவனார், திருவாட்டி தாமரை பெருஞ்சித்திரனார் ஆகியோர்க்கு நினைவேந்தல் - படத்திறப்புக் கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு உலகத் தமிழக் கழகத்தின் தலைவர் முனைவர் ந.அரண முறுவல் தலைமை தாங்கினார். சென்னை மாவட்ட உ.த.க. அமைப்புத் தலைவர், அன்றில் திரு பா. இறை யெழிலன் வரவேற்புரை நிகழ்த்தினார். பேராசி ரியர் ம.இலெ.தங்கப்பா அவர்கள் தாமரை அம்மா படத்தையும், புலவர் கு.அண்டிரன் இறைக்குருவனார் படத்தையும் திறந்து வைத்து உரையாற்றினர்.

நிறைவாக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் உரையாற்றினார். “1916இல் மறைமலை அடிகள் தொடங்கிய தனித்தமிழ் இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றியவர்கள் பாவாணர் அவர் களும் பாவலலேறு பெருஞ்சித்திரனார் அவர் களும் ஆவர். பாவாணர், பெருஞ்சித்திரனார் ஆகியோரின் கொள்கைத் தொடர்ச்சியாகவும் இயக்கத் தொடர்ச்சியாகவும் செயல்பட்டவர் இறைக்குருவனார் ஆவார். ஒரு சிறந்த தமிழ்க் குடும்பத்திற்கு எடுத்துக் காட்டான குடும்பம் பெருஞ்சித்திரனார் குடும்பம். அக்குடும் பத்தின் சிறந்த தலைவியாக, அனைவர்க்கும் அம்மா வாகவும் விளங்கியவர் தாமரை அம்மா அவர்கள். பாவலரேறு தாமரை அம்மா குடும்பம் தமிழ்நாட்டின், தமிழ் இனத்தின் தலைக் குடும்பம் ஆகும்.

அக்குடும்பத்தில் சாதி இல்லை; சமற்கிருதம் இல்லை, பேச்சில் ஆங்கிலம் இல்லை, தமிழினம் உண்டு, தனித்தமிழ் உண்டு, தமிழ்த் தேச விடு தலைத் கொள்கை உண்டு. திருக்குறள் மணி இறைக்குருவனார்க்கும், தாமரை அம்மாள் அவர்களுக்கும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பேச்சு வேறு செயல் வேறு என்றில்லாத குடும் பம் பெருஞ்சித்திரனார் குடும்பம். சாதியை மறுத்தார்கள். தமிழ்த் தேசியம் சாதியை மறுக்கிறது. சாதி ஒழித்தல் ஒன்று நல்ல தமிழ் வளர்த்தல் மற்றொன்று. இதில் பாதியை நாடு மறந்தால் மறுபாதி துலங்கு வதில்லையாம் என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.

அதேபோல் பெண்ணுரிமையை மதிக்கும் கொள்கை தமிழ்த் தேசியம். தாமரையம்மா பெருங்குடும்பத்தில் பெண்கள் தமிழ்த் தேசிய அரசியலில் முன்னணியில் இருக்கிறார்கள்.

இப்பொழுது பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் பெருகி வருகின்றன. பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்க தமிழின உணர் வுள்ள ஆண்கள் முன்னணியில் நிற்க வேண்டும். தமிழ்நாட்டில் ஒவ்வொரு பெண்ணும் எப் போதும் கத்தி வைத்துக் கொள்ள வேண்டும். தங்களிடம் வன்முறை செய்ய வரும் ஆளை முந்திக் கொண்டு கத்தியால் குத்த வேண்டும். தற்காப்புக்காக வன்முறையில் ஈடுபடலாம் இந்திய அரசமைப்புச் சட்டம் உரிமை வழங்குகிறது.

எனவே, தயங்காமல் பெண்கள் கத்தி வைத்துக் கொள்ள வேண்டும். பாலியல் வன்முறை செய்ய வரும் ஆணைக் குத்திச் சாய்த்து விட்டு தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். முரடன் கையில் சிக்கிச் சாவதை விட அவனைக் குத்திச் சாய்த்துவிட்டு தப்பிக்கலாம் அல்லது அப்போரில் மடியநேர்ந்தாலும் வீரத்தோடு மடியலாம். அவ்வாறு பெண்கள் போராடும் போது பக்கத்தில் உள்ள ஆண்கள், அந்த முரடர்களைத் தாக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

கூட்டத்தில், திரளான தமிழின உணர் வாளர்களும், பல்வேறு தமிழறிஞர்களும் கலந்து கொண்டனர்.

Pin It