பண்பாட்டின் தாயகம் - கலாசாரத்தின் பிறப்பிடம் என்றெல்லாம் தம்பட்டம் அடித்துக் கொண்டு பெருமைப்பட்டுக் கொள்ளும் இந்தியாவின் தலைநகர் தில்லியில், 16.12.2012 அன்று, ஓடும் பேருந்தில் ஒரு மருத்துவக் கல்லூரி மாணவியைக் கூட்டாக பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய நிகழ்வு, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இக்குற்றச் செயலில் ஈடுபட்டவர்களுக்குக் கடும் தண்டனைகள் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும், பெண்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகிவிட்டதெனவும் பல்வேறு போராட்டங்கள் தலைநகர் தில்லியில் மட்டுமின்றி வடநாட்டின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெறுகின்றன.

தில்லியில், வடநாட்டு மாணவர்கள் குடியரசுத் தலைவர் மாளிகை, பிரதமர் அலுவலகம் எனப் பல இடங்களிலும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுட்டனர். தில்லிப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட நிகழ்வு, “தேசிய அவமானம்” என்பதாகச் சித்தரித்த வடநாட்டு ஊடகங்கள், மாணவர் போராட்டங்களை நேரலையில் ஒளிபரப்பின.

மாணவர்களின் போராட்டங்களும், வடநாட்டு செய்தி ஊடகங்களின் கூச்சலும், எதற்கும் வாய் திறவாத பிரதமர் மன்மோகன் சிங், தொலைக்காட்சியில் தோன்றி விளக்கம் அளிக்கும் அளவிற்கு, நெருக்கடியை உண்டு பண்ணின.

தில்லிக் காவல்துறையின் கண்ணீர் புகைக்குண்டு வீச்சு, தடியடி என பலவற்றையும் எதிர்கொண்டு, போர்க்குணமுடன் போராடிய தில்லி இளைஞர்களின் ஞாயமான உணர்வை நாம் மதிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

எனினும், இப்பாலியல் வன்கொடுமை நிகழ்வு தில்லியில் நடைபெறாமல், தமிழகத்தில் நடைபெற்றிருந்தால், தில்லி மாணவர்களிடம் இதே கோப உணர்வு எழுந்திருக்குமா?

இந்திய அரசால் இயற்றப்பட்ட ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தின் காரணமாக, சாதாரணக் காவல்படைகள் கூட ‘பாதுகாப்பு’ என்ற பெயரில், ஆயுதம் ஏந்தியுள்ள மணிப்பூர் மாநிலத்தில், 2004ஆம் ஆண்டு, சூலை 11ஆம் நாள் மனோரமா என்ற பழங்குடியினப் பெண், காவல் படைகளால் கூட்டாகப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, கொடூரமாகக் கொலை செய்யப்பட்டாள்.

அப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமைக்கும், கொலைக்கும் காரணமான இந்தியக் காவல் படைக் கயவர்களை மாநில அரசுகூட விசாரிக்க முடியாதென சட்டம் சொன்னபோது, தில்லி மாணவர்களுக்கு இதே கோப உணர்வு ஏன் எழவில்லை? காசுமீரிலும், வடகிழக்குப் பகுதிகளிலும், இன்றைக்கும் இந்திய வெறிப்படையால் தங்கள் பாதுகாப்புக்கு அஞ்சி வாழ்கின்ற பெண்கள் மீது, தில்லி மாணவர்களுக்கும், ஊடகங்களுக்கும் ஏன் கரிசனம் ஏற்படவில்லை?

இவ்வளவு ஏன்? தில்லி கொடும் நிகழ்வு நடைபெற்ற சில நாட்களிலேயே, தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தின், கருங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்த புனிதா 12 வயதே நிரம்பிய 7ஆம் வகுப்புப் பள்ளி மாணவி, 20.12.2012 அன்று , குடிபோதையில் ஒரு கொடூரனால், பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட நிகழ்வு, வடநாட்டு தில்லி ஊடகங்களில், ஒரு வரிச் செய்தியாகக் கூட இடம் பெறவில்லை.

இந்த இலட்சணத்தில், தில்லிப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு நீதி கேட்டு, சென்னையிலுள்ள வடநாட்டு மாணவர்கள் மற்றும் இளைஞர்களால் பேரணி ஒருங்கிணைக்கப்பட்டது. இப்பேரணியில், தமிழக இளைஞர்களும் கலந்து கொண்டனர். இந்தியிலும், ஆங்கிலத்திலும் தான் “நீதி” கேட்டு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

அதே நேரத்தில், அங்கு தமிழர் பண்பாட்டு நடுவம் உள்ளிட்ட அமைப்பகளைச் சேர்ந்த தமிழின உணர்வாளர்கள், தூத்துக்குடி புனிதாவுக்கும், அண்மையில், ஆணாதிக்க வெறியன் ஒருவனால் அமிலம் வீசப்பட்டு, பார்வை பறிபோன நிலையில் மருத்துவமனையில் உள்ள வினோதினி என்ற இளம்பெண்ணுக்கும் நேர்ந்த கொடுமையை விளக்கிப் பொது மக்களிடம் பரப்புரையில் ஈடுபட்டனர். பரப்புரையில் ஈடுபட்ட தோழர்கள், வடநாட்டு மாணவர்களிடம் தமிழகத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்துப் பேசிய போது, அவர்கள் அதைப் பற்றிக் கண்டு கொள்ளவே இல்லை எனத் தெரிவித்தனர்.

பெண்களுக்கு எதிரான இது போன்ற பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள், இந்தியாவெங்கும் பல்வேறு இடங்களில், இந்தியப் படையால், காவ்துறையால், சாதி வெறியர்களால் என தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்க, பெண்களின் பாதுகாப்பைக் கேள்விக் குறியாக்கியுள்ள அதிகார வர்க்கத்திற்கு எதிராக, அனைவரும் திரள வேண்டிய நிலையில், வட நாட்டவர்களும், வடநாட்டு ஊடங்களும் நம்மிடம் காட்டுகின்ற இந்த இனப்பாகுபாட்டை எந்த வகையில் நாம் சகித்துக் கொள்ளப் போகிறோம்?

தில்லி வன்கொடுமை நிகழ்வு ஏற்படுத்திய அதிர்வலைகளின் விளைவாக, அந்நிகழ்வு நாடாளுமன்றத்தில் விவாதப் பொருளானது. தில்லிப் பெண்ணுக்காக நாடாளுமன்ற அரசியல்வாதிகள் உள்ளே நீலிக்கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த நேரத்தில், சனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (Association for Democratic reforms) என்ற அமைப்பு, இந்திய அரசியல்வாதிகளின் இலட்சணத்தைத் தோலுரித்துக் காட்டியது.

கடந்த 5 ஆண்டுகளில், இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் தேர்வான வேட்பாளர்களில், சுயேட்சை வேட்பாளர்கள் 72 பேர், காங்கிரஸ் கட்சி வேட்பாளாகள் 26 பேர், பா.ச.க. வேட்பாளர்கள் 24 பேர் உள்ளிட்ட, 260 பேர் மீது பெண்களுக்கெதிரான வன்கொடுமைக் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என அவ்வமைப்பு அம்பலப்படுத்தியது. (ஆதாரம் - http://adrindia.org/content/crimes-against-women-including-rape-cases-declared-mps-mlas-and-candidates). இது தான் மக்கள் பிரதிநிதிகளின் இலட்சணம்!

இவை ஒருபுறமிருக்க இந்தியாவின் பல்வேறு இடங்களிலும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஆண்டுதோறும் அதிகரித்தே வருகிறது என்பதைப் பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின், 2011 ஆம் ஆண்டு அறிக்கையின்படி, இந்தியா முழுதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக் குற்றங்களாகப் பதிவாகியுள்ள குற்றங்கள் மொத்தம் 24,206 ஆகும். தமிழ்நாட்டில் மட்டும் பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள் கடந்த 2011 ஆம் ஆண்டில் 677ஆகவும், 2012 ஆம் ஆண்டில் 528 ஆகவும் பதிவாகியுள்ளன.

இந்தியாவைப் பொருத்தவரை அதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் அதை வெளியே சொல்வதேயில்லை என்பதும் இங்குக் கவனத்தில் கொள்ள வேண்டியது. ஆக, காவல்துறையில் குற்றமாகப் பதிவு செய்யப்பட்டுள்ள எண்ணிக்கையே இவ்வளவு அதிகம்.

பணிபுரியும் இடத்திலும், பாதுகாப்பற்ற பயணங்களிலும், தனிமையில் இல்லங்களிலேயே கூட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிறார்கள். பருவம் வந்த, விவரம் தெரிந்த, எதிர்க்கும் சக்தியிருந்தும் இயலாமல் போன பெண்களே பல நேரங்களில் தங்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு மிக மோசமாகப் பலியாகிவிடும் சூழலில் இந்த நாட்டில் பெண் குழந்தைகளின் மற்றும் சிறுமிகளின் அதாவது பருவ வயதை அடையாத, விவரம் அறியாத சிறு பிள்ளைகளின் நிலை இன்னும் மோசமாக உள்ளது என்பது வருத்தப்படவும் வெட்கப்படவும் வேண்டிய மிக மோசமான சூழல் ஆகும்.

பெண் குழந்தைகளின் மீதான மற்றும் சிறுமிகளின் மீதான பாலியல் வன்முறை என்பது அண்மைக் காலமாக அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. சிறுமியர் மீதான அதிகரித்து வந்த பாலியல் கொடுமைகளைக் கணக்கில் கொண்டு, இந்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறை அமைச்சகத்தின் சார்பில் 2007 ஆம் ஆண்டு ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டது. 13 மாநிலங்களைச் சேர்ந்த, 12,447 குழந்தைகளிடம் மேற்கொள்ளப்பட்ட இவ் ஆய்வின் முடிவில், 53% விழுக்காட்டுக் குழந்தைகள் ஏதோ ஒரு பாலியல் வன்முறைக்கு ஆளானதாகவும், 21.9% குழந்தைகள் மோசமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் இருபாலரும் ஏறக்குறைய சரிசமமாக உள்ளனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை 2006இல் துளிர் எனும் தன்னார்வத் தொண்டு அமைப்பு, 2,211 சென்னைக் குழந்தைகளிடம் மேற்கொண்ட ஆய்வில், 42% விழுக்காட்டினர் பாலியல் கொடுமைகளுக்கு ஆளானதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. டெல்லியில் சாக்ஷி எனும் தொண்டு நிறுவனம் செய்த ஆய்வில் 350 குழந்தைகளில் 63% விழுக்காட்டினர் குடும்ப உறுப்பினர்களால் பாலியல் வன்முறைக்குப் பலியாவதும் தெரிய வந்தது.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மட்டுமின்றி, வரதட்சிணைக் கொடுமை, மாமியார் – நாத்தனார் – கணவர் கொடுமை, பெண் சிசுக் கொலை என பெண்களுக்கு எதிரான பல்வேறு குற்றங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகின்றன.

இவ்வாறு, குடும்பத்தில் உறவினர்கள், பள்ளிகளில் ஆசிரியர்கள், அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள், பணியிடங்களில் உயரதிகாரிகள் அல்லது சக ஊழியர்கள் என நம்மைச் சுற்றியுள்ள சக மனிதர்கள், இப்படிப் பாலியல் வெறி கொண்டவர்களாகவும், பணத்தாசைப் பிடித்த வன்மை மிக்கவர்களாகவும் மாற என்ன காரணம் என்பதை நாம் எப்பொழுதாவது ஆராய்ந்திருக்கிறோமா? அரசும், ஊடகங்களும் ஆராய்ந்துள்ளனவா? கிடையாது. ஏனெனில், பாலியல் வெறியர்களையும், பொருளாசை மிக்க வெறியர்களையும் உருவாக்குவதில் அரசுக்கும், ஊடகங்களுக்குமே மிகமுக்கியப் பங்கிருக்கின்றன.

புனிதத்தின் சின்னமாகவும், உணர்வுமிக்க பாசமுள்ளவர்களாகவும், பார்க்கப்பட்ட பெண்கள், இன்று கண் கவர்ச்சிக்கும், கவன ஈர்ப்புக்கும், காம வெறிக்கும் உரிய போகப் பொருளாக மட்டுமே பார்க்கப்படுவது எதனால் என்று நாம் ஆராய்ந்துள்ளோமா?

ஆடையின்றித் திரிந்த ஆதிவாசிகளிடத்தில் காணப்படாத வன்புணர்ச்சி வெறி, இன்றைய “நாகரீகச்“ சமூகத்தில் வயது வேறுபாடு இல்லாமல் மலிந்து காணப்படுவது எதனால் என்று நாம் சிந்தித்துப் பார்த்துள்ளோமா?

தாய்வழிச் சமூகத்தின் பிறப்பிடமாய்த் திகழும் இந்த மண்ணில், பெண்களைப் பல்வேறு பெயர்களிலும் வடிவங்களிலும் தெய்வங்களாக வழிபடும் இந்த மண்ணில், நதிகளுக்குக் கூட பெண்ணின் பெயரையே வைத்துப் பெண் இனத்திற்குப் பெருமை சேர்த்த இந்த மண்ணில், பெண் எவ்வாறு இவ்விதம் ஆணுக்குக் காம அடிமையாக மாற்றப்பட்டாள் என நாம் கேள்வி எழுப்பியிருப்போமா?

இப்படி நாம் சிந்திக்க வேண்டிய கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனாலும் அத்தனை கேள்விகளுக்கும் கிடைக்கும் பதில்களின் சாரம் ஒன்றாகத்தான் இருக்கும். மனிதனின் சுய ஒழுக்கம் (Self Discipline) கெட்டுப் போய்விட்டது அல்லது அற்றுப் போய்விட்டது என்பது தான் அந்த பதில்.

உணர்வுள்ள மனிதர்களை, வெறும் வாடிக்கையாளர்களாக்கி, பணம் பறிக்கத் திட்டமிடும் உலகமயம், அவர்களை வெறும் வாடிக்கையாளர்களாக மட்டுமே வாழ விடுவதில்லை. தமது முக்கிய விளைவான நுகர்வியப் பண்பாட்டுச் சீரழிவுகளின் மூலம், பொருள் வாங்கும் அடிமைகளாகவும் மாற்றுகின்றது.

தில்லி வன்கொடுமை நிகழ்வில், இரவு நேரத்தில் தனது ஆண் நண்பருடன் ஊர் சுற்றிக் கொண்டிருந்த பெண்ணுக்குப் பாடம் புகட்டவே அவளைத் தாங்கள் வன்கொடுமை செய்ததாகக் குற்றவாளிகள் வெளிப்படையாக ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பெண் இன்னொரு ஆணுடன் தனியே செல்வதைக் கூடப் பொறுத்துக் கொள்ள முடியாத அளவிற்கு, ஆணாதிக்க வெறித்தனம் அக்கொடூரர்களிடம் தாண்டவமாடியுள்ளதையே இது காட்டுகிறது.

தனது ஊடகங்களின் வழியாகப் பொருட்கள் வாங்கத் தூண்டும் பரப்புரை நடத்தும் உலகமயம், சக மனிதர்களான பெண்களையும் போகப் பொருட்களோடு ஒன்றாக, நுகர்வுப் பொருளாக்கி சித்தரிக்கிறது. இதன் மூலம் வளருகின்ற, ஆணாதிக்க வெறித்தனம், குழந்தைகள் முதல் பெரியவர் வரை வயது வேறுபாடின்றி விதைக்கப்பட்டு, இறுதியில் அது கொடுங்குற்றங்களில் போய் முடிகிறது.

இரண்டு நொடி கூட கண்ணில் நிலைக்காத விளம்பரப் படங்களானாலும் சரி, இரண்டரை மணி நேரம் ஓடும் திரைப்படங்களானாலும் சரி அரைகுறை ஆடைகளுடனும், அத்துமீறிய அசைவுகளுடனும், முகம் சுழிக்க வைக்கும் பாவனைகளுடனும், இரட்டை அர்த்தம் கொண்ட மட்டமான வசனங்களுடனும் ஆண்களின் காமப்பசிக்குத் தீனி போடும் நோக்குடனேயே , அவை காட்சிப்படுத்தப்படுகின்றன.

பொறுக்கியும் போக்கிரியுமான ஒருவனையே இன்றைய திரைப்படங்கள் பெரும்பாலும் கதாநாயகனாகக் காட்டுகின்றன. காதல் தோல்வியில் தாடி வைத்தல், தண்ணியடித்தல், தற்கொலை செய்தல் என்று தன்னைத் தானே அழித்துக் கொண்டிருந்த அந்தக் காலக் கதாநாயகன் போல் இல்லாமல் இந்தக் காலத் திரைப்படக் கதாநாயகர்கள் தனக்குக் கிடைக்காத பெண் யாருக்கும் கிடைக்கக் கூடாது என்கிற பழிவாங்கும் மனப்பான்மையைப் பார்வையாளர்களிடத்தில் உறுதிப்படுத்துபவர்களாகவே சித்தரிக்கப்படுகிறார்கள். தன்னைக் காதலிக்க முன்வராத பெண்களை பல கொடுமைகளுக்கு உட்படுத்தி, அதன் பின் காதலிக்கத் தூண்டுவதுதானே இன்றைக்கு கதாநாயகத் தன்மையாகத் திரையுலகில் வெளிப்பட்டுக் கொண்டுள்ளது.

கைபேசி, இணையம் தொடங்கி நவீன தகவல் தொழில் நுட்ப வடிவங்களில் வளர்ந்த உலகமயச் சமூகம், பெண்களின் அந்தரங்கங்களில் தலையிடுவதைத் தனது ஊடக வழக்கமாகக் கொண்டன. இணையதள ஊடகம் பெரும்பாலானவர்களுக்குக் காமக் கிடங்காகச் செயல்படுகிறது என்பதை யாரும் மறுக்க இயலாது.

இலைமறைவு காய்மறைவாக இருந்த குடும்பம், உறவு மற்றும் தாம்பத்ய இரகசியங்களையெல்லாம் ஒவ்வொரு வீட்டின் வரவேற்பறையையும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ள தொலைக்காட்சிகள் வெட்ட வெளிச்சமிட்டுக் காட்டி அதன் கட்டுக்கோப்பைக் குலைத்து, வெறித்தனத்தைத் தூண்டி விட்டிருப்பதும் இன்றைய குற்றச் செயல்கள் மிகுதிக்கு மிக முக்கியக் காரணம்.

தெருவுக்குத் தெரு தவறாமல் முளைத்திருக்கும் மதுபானக் கடைகள், இக்கொடுமைகளை மேலும் மேலும் அதிகரிக்கச் செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தூத்துக்குடியில் புனிதாவை நாசப்படுத்தியக் கொடூரன், மது அருந்திவிட்டுத்தான் அக்குற்றச் செயலில் ஈடுபட்டான். இவ்வாறு, போதை தலைக்கேறிய பெரும்பாலான “குடி“மகன்களை காம வெறியர்களாக மாற்றி குற்றச் செயல்களில் தங்களை மறந்து ஈடுபடும் துணிச்சலை மதுபானக் கடைகளைத் தாராளமாகத் திறந்து அரசே அவர்களுக்குக் கொடுத்திருப்பதை நாம் மறுக்க முடியாது.

மது போதையைக் காட்டிலும் மோசமான ”பண”போதைக்கு ஆளான பெரும்பாலான பெற்றோர் சமூகம் இந்த வன்கொடுமைச் செயலுக்கு மிக முக்கியக் காரணமாகவும் விளங்குகின்றனர். உலகமயப் பொருளியல் கொடுக்கும் நெருக்கடிகளின் விளைவாக, பொருளியல் அழுத்தங்களைத் தாங்கி நிற்பவர்களாகவும், மன அழுத்தம் கொண்ட கடும் போக்கர்களாகவும் மனிதர்கள் மாற்றப்படுகின்றனர். எதிர்காலம் குறித்த அச்சம், பணம் சேர்க்கும் வெறித்தனத்தைத் தோற்றுவிக்கிறது. அந்த வெறித்தனம், வரதட்சிணைக் கொடுமையாக பெண்களிடத்தில் வெளிப்படுகின்றது.

பிள்ளைகளிடம் மனம் விட்டுப் பேசாமல், அவர்களின் எதிர்காலம் கருதி என நம்பிக் கொண்டவாறு, கல்வியைக் காரணம் காட்டி அவர்கள் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கும் பெற்றோர்கள், தம்மை அறியாமல் அவர்களை வன்மம் கொண்டவர்களாக மாற்றுகின்றனர்.

”பணம் பணம்” என்று 24 மணி நேரமும் பணத்தின் பின்னால் ஓடித்திரியும் இந்த நூற்றாண்டு மனிதர்களால், தங்கள் குழந்தைகளுக்கு நல்லொழுக்கத்தைக் கற்றுத் தர எங்கே நேரமிருக்கிறது? பணத்துக்காக ஓடிக்கொண்டே இருக்கும் பெற்றோரிடம் வளரும் பிள்ளைகள், இதைத்தானே கற்றுக் கொள்வர்?

அரசையும், அதன் ஒழுக்கங்கெட்டப் பொருளியலையும் ஊடகங்களையும் குற்றம் சுமத்தும் நாம் நமக்குள்ளும் சிலவற்றைச் சரிசெய்ய வேண்டியிருக்கிறது. வீட்டிலும் பள்ளிகளிலும் வெளியிடங்களிலும் பணியிடங்களிலும் குழந்தைகளுக்கு உள்ள உரிமைகளை அவர்களுக்கு உணர்த்தவும், அதில் பாதிப்பு ஏற்பட்டால் அதை எதிர்க்கவும் கற்றுக் கொடுக்க வேண்டியது பெற்றோர்களின்/ பாதுகாப்பாளர்களின் கடமை. அதை செய்யச் நாம் என்றாவது நேரம் ஒதுக்கியிருக்கிறோமா?

குறைந்தபட்ச உறவு நெருக்கத்தையோ பாசத்தையோ கூட பெற்றோர், தம் குழந்தைகளுக்குக் கொடுக்கத் தவறும் காலத்தில் அல்லவா நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நாகரீக வளர்ச்சியால் நகரமயமாகிப் போன வாழ்க்கை முறையால், சிதைந்து போன கூட்டுக் குடும்ப அமைப்பு முறையால் எந்த வீட்டிலும் மூத்த தலைமுறையினர் அறிவுரை சொல்லவோ, அரவணைப்பு தரவோ, பாதுகாப்பு அளிக்கவோ இல்லாமல் போய்விட்டார்கள்.

பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகள் இந்த அளவு அதிகரித்து வருவதற்கு சில சமயங்களில் ஏதோ ஒரு வகையில் பெண்களே காரணமாக அமைந்துவிடுகிறார்கள் என்பதையும் இந்த இடத்தில் சொல்லியே ஆக வேண்டும். பெண்களே தங்கள் உடலை ஒரு போகப் பொருளாகப் பார்க்க வைக்கப் பழக்கப்பட்டிருப்பதாலும், ஆண்களைக் கவரும் வகையிலும், கவன ஈர்ப்பு செய்யும் வகையிலும், உடல் அங்கங்களும் அங்க அசைவுகளும் அடுத்தவர்களுக்குத் தெரியும் வகையில் “நவநாகரீக“ உடை அணிவது தான் பெண்ணுரிமை எனக் கருதிக் கொள்வதையும் ஒரு பகுதிப் பெண்கள் விரும்பவே செய்கிறார்கள்.

ஆண்களால் பறிக்கப்படும் உரிமைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து போராடி வெற்றி பெறுவதுதான் பெண் விடுதலை - பெண்ணுரிமை என நாம் பொருள் கொள்ள முடியும். ஆனால், ஆணுக்குப் போட்டியாக தாமும் அரைகுறையாய் ஆடை அணிய முடியும் என செயல் வழியில் நிறுவ முயன்றால், அதைப் பெண்ணுரிமை என நாம் சொல்ல முடியுமா?

பாலியல் வன்கொடுமை போன்ற கொடு நிகழ்வுகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் யாராயினும் நீதியின் முன் நிறுத்தப்பட்டு மிகக் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். இது குறித்து விசாராணைகள் விரைவில் நட்நது குறுகிய காலத்தில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.

ஆனால், அவர்களுக்கு ‘உச்சபட்ச” தண்டனையாகத், தூக்குத்தண்டனை கொடுக்க வேண்டும் என ஊடகங்களும், அரசியல்வாதிகளும் கருத்துகளை முன்வைக்கிறார்கள்.

மரணம் ஒரு தண்டனையே அல்ல என்பது ஒருபுறமிருக்கட்டும், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுப்பதன் மூலம், தான் குற்றவாளிக் கூண்டிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என ஊடகங்களும், அரசும் நினைக்கின்றன.

தூக்குத் தண்டனை கொடுப்பதன் மூலம், இதுபோன்ற குற்ற நிகழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என நம்புபவர்களுக்கு ஒரு கேள்வி, இதுவரை பலமுறை இதுபோன்ற குற்றவாளிகளுக்கு இந்தியாவில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதே, அதன் பின்னர், ஏன் தில்லி, தூத்துக்குடி நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன என விளக்க முடியுமா?

தனி மனித ஒழுக்கக் கல்வி மாணவப் பருவத்திலிருந்தே புகட்டப்பட்டால் ஒழிய எந்தவிதமான தண்டனைகளாலும் தனிமைப்படுத்தல்களாலும் இது போன்ற மனிதாபிமானமற்ற உணர்ச்சி நிலைத் தவறுகளைத் திருத்தவோ நிறுத்தவோ தடுக்கவோ முடியாது.

பெண்கள் பற்றிய பார் வையை மாற்றியமைக்கும் வண் ணம் பண்பாட்டு மறுமலர்ச்சி எல்லா முனைகளிலும் ஏற்படுத் தப்பட வேண்டும். பள்ளியில், ஆசிரியர்களும், ஆட்சியில் நிர் வாகத்தினரும், காவல் துறையினரும், நீதித் துறையினரும் இது குறித்து சிறப்புப்பயிற்சி பெற வேண்டும் ஊடகங்கள் இச் சிக்கல்களை பெண்கள் குறித்த கண்னியமான பார்வையோடு அணுகுவதற்கு உள்ளார்ந்த திட்ட ஏற்பாடுகளும், பயிற்சி முறைகளும் வேண்டும்.

இவ்வாறு தண்டனைகளும், பண்பாட்டு எழுச்சியும் சேர்ந்து தான் பெண்களுக்குப் பாதுகாப் பான சமூகத்தை வழங்க முடியும்.

Pin It