உலகெங்கும் வசிக்கும் கத்தோலிக்கக் கிறித்தவர்களின் தலைவரான பாப்பரசர் இலங்கைக்கு வருகைதர வேண்டும் என்று சிங்கள இனவெறியன் ராஜபக்சே அழைப்பு விடுத்துள்ளான். இதனை ஏற்றுக்கொண்டு, ஆசிய நாடுகளுக்கு மேற்கொள்ளப்போகும் தமது பயணத்திட்டத்தில் இலங்கையையும் இணைக்கத் திட்டமிட்டிருப்பதாக பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் பாப்பரசர் தெரிவித்திருப்பதாக ஊடகங்களில் அண்மையில் செய்திகள் வெளிவந்துள்ளன (காண்க: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், ஆகஸ்டு 3, 2013). இச்செய்தி தமிழ் மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக உள்ளது.

2009 - ஆம் ஆண்டு மே மாதம் ஈழ மண்ணில் நடந்த இனப்படுகொலையில் ஏறக்குறைய 1,46,000 தமிழர்கள் சிங்கள பேரினவாத அரசால் கொடூரமாக கொல்லப்பட்ட துயரமான சம்பவங்கள் உலகமெல்லாம் வாழும் தமிழர்களின் நெஞ்சை விட்டு இன்னமும் அகலவில்லை. தடைசெய்யப்பட்ட பாஸ்பரஸ் மற்றும் கொத்துக் குண்டுகளை வீசி பிஞ்சுக் குழந்தைகள், பெண்கள், வயது முதிர்ந்தோர் என அப்பாவித் தமிழர்களை கொத்துக் கொத்தாக சிங்கள இராணுவம் படுகொலை செய்தது. போர் நடைபெற்ற போது சிங்கள அரசின் அறிவிப்பை நம்பி, பாதுகாப்பு வளையங்களுக்குள் வந்த எண்ணற்ற தமிழ் மக்களை இரசாயனக் குண்டுகள் போட்டு கொடூரமாகக் கொன்றது, சிங்கள இராணுவம். இலங்கையில் தமிழ் மக்கள் மீது தொடுக்கப்பட்ட சாட்சியங்களற்ற போர் பற்றியும், சிங்கள இராணுவத்தின் மிருகத்தனமான கொலை வெறித்தாக்குதல்கள் குறித்தும் இலண்டன் தொலைக்காட்சி நிறுவனமான சேனல் 4 வெளியிட்ட ஆவணப்படங்கள் உலகின் மனசாட்சியையே உலுக்கியது.

போர் முடிவுற்று நான்காண்டுகள் ஆன பின்னரும் கூட தமிழ் ஈழப் பகுதிகளில் சிங்கள இனவெறி இராணுவத்தின் நேரடியான மற்றும் மறைமுகத் தாக்குதல்கள் குறைந்தபாடில்லை. ஆயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் விதவைகளாக ஆக்கப்பட்டனர். இவர்களில் பலர் மிகவும் கொடூரமாக சிங்கள இராணுவத்தின் பாலியல் தாக்குதல்களுக்கு இன்றும் தொடர்ந்து பலியாகி வருகின்றனர். தமிழரின் தாயகப் பூமி முழுவதும் சிங்கள இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் தங்களது சொந்த மண்ணில் தமிழ் மக்கள் முற்றிலும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வசிக்கின்றனர். ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரங்கள் அனைத்தும் படிப்படியாகப் பறிக்கப்பட்டு, நிர்க்கதியாக இருக்கின்றனர். வன்னிப் பெருநிலத்தில் தமிழர்களுக்குச் சொந்தமான வளமான நிலங்கள் சிங்கள இராணுவத்தால் வரைமுறையின்றி பிடுங்கப்படுகின்றன.

எந்த அரசியல் உரிமைகளுமின்றி, அநாதைகளாக இன ஒடுக்குதல்களுக்கும், தொடர்ந்த பாகுபாட்டுக்கும் ஈழத் தமிழர்கள் உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் சிங்கள அரசின் அனுமதியோடும், அங்கீகாரத்தோடும் தமிழர்களின் பூர்வீகப் பகுதிகளில் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களும், இளம் பெண்களும் சட்டத்திற்குப் புறம்பாக கைது செய்யப்பட்டு, எந்தவொரு விசாரணையுமின்றி இலங்கைச் சிறைகளில் பல ஆண்டுகளாக வாடி வருகின்றனர். தமிழர்கள் வசிக்கும் வடக்கு - கிழக்குப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான கிறித்தவ தேவாலயங்களும், சைவக் கோவில்களும், இசுலாமிய தர்காக்களும் சிங்கள இனவெறியர்களால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. சிங்கள - பவுத்தமயமாக்கல் தமிழர்களின் தாயகப் பூமியில் திட்டமிட்டு சிங்கள அரசால் வெறித்தனமாக செயற்படுத்தப்படுகின்றன. தமிழ் ஈழப் பகுதிகளில் தமிழ்ப் பெயர்கள் சிங்களப் பெயர்களாக சிங்கள அரசால் வலிந்து மாற்றப்படுகின்றன.

எந்தவகைக் கருத்துரிமையோ, பேச்சுரிமையோ இல்லாத நிலையே இலங்கையில் நீடித்து வருகிறது. தமிழர்களின் நியாயமான உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் ஊடகவியலாளர் களும், மனித உரிமை ஆர்வலர்களும் மிருகத்தனமாகத் தாக்கப்படுகின்றனர்; அரசு இயந்திரங்களாலே இவர்களில் பலர் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்படுகின்றனர். அங்கு நீதித்துறையும் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. மோசமான இந்த உரிமை மீறல்களையெல்லாம் பன்னாட்டுப் பொதுமன்னிப்புச் சபை, மனித உரிமை கண்காணிப்பகம் போன்ற மனித உரிமை அமைப்புகள் வெளியுலகுக்கு தொடர்ந்து வெளிச்சம் போட்டு காட்டி வருகின்றன. இலங்கை அரசு நிகழ்த்திய கொடுமைகளுக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை மன்றத்திலும் இரண்டு முறை தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஈழத்தில் நடந்துள்ள கொடூரமான உரிமை மீறல்களை கடுமையாகக் கண்டித்து ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் உயர் ஆணையர் திருமிகு. நவநீதம் பிள்ளை பல அறிக்கைகள் விடுத்துள்ளார்.

சிங்கள இனவெறியன் இராஜபக்சே மீது இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான கொடுஞ்செயல்கள் போன்ற குற்றச் சாட்டுகள் இப்போது வலுப்பெற்று வருகின்றன. ஈழத் தமிழர்கள் மீது நடத்திய இனப் படுகொலைக்காக பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் இராஜபக்சே சகோதரர்கள் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்று குரல்கள் உலகின் பல பகுதிகளிலிருந்தும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. நெருக்கடியான இச்சூழலில் பன்னாட்டு விசாரணையிலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக எல்லாவிதமான மோசடி வேலைகளையும் இராஜபக்சே கும்பல் செய்து வருகிறது. இந்நிலையில், கத்தோலிக்க கிறித்தவர்களின் தலைவரான பாப்பரசர் இலங்கைக்குச் செல்வது ஈழத் தமிழர்கள் மீது அக்கும்பல் நடத்திய இனப்படுகொலையை அங்கீகரிப்பதற்கு ஒப்பாகும். தங்களது உறவுகளை பறிகொடுத்து, வாழ்வாதாரங்களை எல்லாம் இழந்து நிற்கும் ஈழத்தமிழர்களின் மத்தியில் பாப்பரசரின் இலங்கை வருகை, வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதாக அமையும்.

நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்ற முழக்கங்கள் தமிழ்நாட்டில் வலுப்பெற்று வருகின்றன. இனப்படுகொலை நடந்த இலங்கையில் நடைபெறப் போகும் இம்மாநாட்டில் பிற நாடுகளும் கலந்து கொள்ளக் கூடாது என்று பரவலாக உலகின் பல பாகங்களிலும் குரல்கள் இப்போது ஒலிக்கத் தொடங்கியுள்ளன. ஈழத் தமிழருக்கு சிங்கள இனவெறி அரசு இழைத்துள்ள கொடுமைகளை புரிந்து கொண்டு கனடா போன்ற நாடுகள் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க மாட்டோம் என்று பகிரங்க அறிவிப்பு செய்துள்ள நிலையில், பாப்பரசர் இலங்கைக்கு வருகை புரிவது தமிழ்க் கிறித்தவர்களை மட்டுமல்ல, மனித உரிமை ஆர்வலர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும்.

சாமானிய மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, ஒடுக்குண்டோரின் எண்ணங்களையும், ஏக்கப் பெருமூச்சுகளையும் பிரதிபலிக்க வேண்டிய திருச்சபை, இலங்கையில் இனப்படுகொலை புரிந்த இனவெறியர்களின் சதிவலையில் வீழ்ந்துவிடக் கூடாது. பாப்பரசரின் வருகையை வைத்து இலங்கையிலும், பன்னாட்டு அரங்கிலும் தனக்குச் சாதகமாக அரசியல் காய்களை நகர்த்த நினைக்கும் இராஜபக்சே கும்பலுக்கு வத்திகான் எக்காரணம் கொண்டும் துணை போகக் கூடாது.

2009 - ஆம் ஆண்டில் போர் உக்கிரமமாக நடைபெற்றபோது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களோடு சிங்களத் திருச்சபை நிற்காமல், சிங்கள பேரினவாதிகளோடு தன்னை இணைத்துக் கொண்டது, கொடுமையிலும் கொடுமை. போரைத் தடுத்து நிறுத்துமாறு சிங்கள இன வெறி அரசுக்கு குறைந்த பட்சக் கோரிக்கையைக் கூட விடுக்கத் திராணியற்றுக் கிடந்தது சிங்களத் திருச்சபை. இந்த நூற்றாண்டில் மிகக் கொடூரமான மனிதப் பேரவலம் நடைபெற்ற போது அதனைக் கடுமையாகக் கண்டிக்காத கத்தோலிக்கத் திருச்சபை, இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் போன்ற மோசமான குற்றச்சாட்டுகள் பன்னாட்டு அரங்கில் இலங்கை மீது எழுப்பப்படும் போது இப்போது யார் பக்கம் நிற்க வேண்டும்?

எனவே பாப்பரசர் இலங்கைக்கு வருகை தருவதாக முன்மொழியப்பட்டுள்ள திட்டத்தை உடனே கைவிட வேண்டும்; அவரது இம்முடிவை மறுஆய்வு செய்ய வேண்டும் . ஏழை எளிய மக்கள் பால் அக்கறையும், அன்பும் கொண்ட பாப்பரசர், பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சார்பாக நின்று, 2009 - ஆம் ஆண்டில் ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை கண்டிப்பதோடு, தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய நியாயமான தீர்வை முன்மொழிவதுதான் இந்நேரத்தில் அவர் ஆற்ற வேண்டிய வரலாற்றுக் கடமை. தமிழகக் கத்தோலிக்க ஆயர் பேரவையும் ஈழத்தில் நடந்த இனப்படுகொலை மற்றும் தமிழகத்தில் நிலவும் கொந்தளிப்பான சூழ்நிலை குறித்து வத்திக்கானுக்கு போதிய தகவல்களை அனுப்பி, பாப்பரசரின் இலங்கைக்கான உத்தேசத் திட்டத்தை உடனே தடுத்து நிறுத்திட போதிய அழுத்தம் தரவேண்டும்.

“இனப்படுகொலை நாடான இலங்கையைப் புறக்கணிப்போம்”, என்ற பரப்புரையை புலம்பெயர்ந்த தமிழர்கள் உலகு தழுவிய அளவில் வேகமாக மேற்கொண்டு வரும் இவ்வேளையில், அன்பு, அமைதி, நீதியின் வடிவமாய் அமைந்த இயேசுக் கிறித்துவின் வழித் தோன்றலான பாப்பரசர் இரத்தக் கறைபடிந்த இனவெறியன் ராஜபக்சேவோடு கை குலுக்கலாமா? பாப்பரசரின் தகுதிக்கும், பதவிக்கும், அவர் நேசிக்கும் உயரிய உன்னதமான மதிப்பீடுகளுக்கும் இழுக்கையல்லவா தேடித்தரும்? வரலாற்றில் அழிக்க முடியாத களங்கமாக அது மாறிவிடுமே! அவர் இலங்கைக்கு வருகை தருவது ஈழத்திலும், தமிழகத்திலும் மட்டுமல்ல, பிற நாடுகளில் வசிக்கும் தமிழர்களின் மனங்களைப் புண்படுத்துவதாக அமையும். மனித நேயம் கொண்டோர், மனித உரிமைகளில் அக்கறை கொண்டோர் எவரும் இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

Pin It