“வெளியார் ஆதிக்கத்தில் கிடக்கும் தமிழினமே நீ என்ன செய்யப் போகிறாய்?” என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் கேள்வி எழுப்பினார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் இயங்கி வரும் இந்திய அரசின் பாதுகாப்புத்துறைத் தொழிற் சாலையான திண்ணூர்தி தொழிற்சாலையில் (HVF) அயல் மாநிலத்தவர்களுக்கே அனைத்து வேலை வாய்ப்புகளும் அளிக்கப்படுவதைக் கண்டித்தும், தமிழர்களுக்கு வேலை வாய்ப்பில் 80 விழுக்காடு இட ஒதுக்கீடு கோரியும் தமிழருக்கான உரிமை மீட்புக் குழு சார்பில், 12.08.2013 அனறு மாலை ஆவடி பேருந்து நிலையம் அருகில், தொடர் முழக்கப் பொதுக் கூட்டம் நடை பெற்றது.

கூட்டத்திற்கு, தமிழருக்கான உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பா.நாகராசன் தலைமையேற்றார். தந்தைப் பெரியார் தி.க. பொதுச் செயலாளர் தோழர் கோவை கு.இராமகிருட்டிணன், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன், மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சிப் பாவலர் தமிழேந்தி, தமிழர் முன்னேற்றக் கழகத் தலைவர் தோழர் அதியமான், ஆவடி தமிழ்ப்பேரவை அமைப்பாளர் தோழர் செ.ப.முத்தமிழ் மணி, தமிழர் தன்மானப் பாசறை அமைப்பாளர் தோழர் இரா.திருநாவுக்கரசு, வழக்கறிஞர் அங்கயற்கண்ணி, நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் செ.கணேசன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் இதில் பங்கேற்று கருத்துரையாற்றினர்.

நிறைவில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் சிறப்புரை நிகழ்த்தினார். அவரது பேச்சின் எழுத்து வடிவம்:

“ஆவடியில் இயங்கும் இந்திய அரசுத் தொழிற்சாலையான திண்ணூர்தி தொழிற்சாலையில், 80 விழுக்காட்டு வேலை வாய்ப்புகளை மண்ணின் மக்களான தமிழர்களுக்கே வழங்கக் கோரி, இந்தத் தொடர் முழக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டுள்ளது.

ஆவடியில் இன, மொழி உரிமைகளுக்காக நடைபெறும் கூட்டங்களில் முனைப்புடன் பங்கேற்ற ஒரு தோழரை நாம் இங்கு பார்க்க முடியவில்லை. அவர் தான் ஆவடி மனோகரன். கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் ஆவடியில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் அவர் கலந்து கொண்டு எங்களுக்குத் துணை நின்றார். இப்போது, அவர் இல்லை.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, 1956ஆம் ஆண்டு நவம்பர் 1 – மொழி வாரி மாநிலங்களின் பிரிவினைக்குப் பிறகு தமிழகத்தில் குடியேறியுள்ள அயலார் அனைவரையும் வெளியேற்ற வேண்டுமென்றக் கோரிக்கையை, 1991ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து முன் வைத்து வருகிறது. தமிழகத்தில் இயங்கும் நடுவணரசுத் தொழிற்சாலைகளில் தமிழர்களுக்கு 80 விழுக்காட்டு வேலை வாய்ப்பை அளிக்க வேண்டுமெனக் கோரி வருகிறது.

இதே கோரிக்கையை, ஆவடி திண்ணூர்தித் தொழிற்சாலையில் வலியுறுத்தியே தமிழருக்கான உரிமை மீட்புக் குழு என்ற கூட்டமைப்பை ஆவடியில் ஏற்படுத்தியுள்ளார்கள். இது பாராட்டத் தக்க முயற்சி! இப்படித்தான் நாம் அவரவர் பகுதிகளில், தமிழர்களின் உரிமைகளை மீட்க முன்முயற்சிகளை எடுக்க வேண்டும். நாம் சிறு எண்ணிக்கையில் இருக்கிறோம். என எண்ணாமல், ஒத்த கருத்துள்ள வர்களுடன் நாம் கை கோத்து நின்றால் பெரும் சக்தியாக நாம் வளர முடியும். இந்த மண்ணில் 7 கோடித் தமிழர்கள் இருந்தும், தமிழர்களுக்கான உரிமை களை மீட்க நாம்தான் குரல் கொடுக்க வேண்டியிருக்கிறது. இங்குநாம் நூறுபேர் இருக்கிறோம். ஆனால் ஏழுகோடித் தமிழர்களுக்காகப் பேசுகிறோம். ஏழுகோடித் தமிழர்களின் பிரிதிநிதிகள் நாம்! ஏழுகோடிப் பேர்க்காகப் பேசுகிறோம் என்பதுதான் நமது வலிமை! இந்த உளவியல் வலிமையை நம் தோழர்கள் ஒவ்வொருவரும் பெறவேண்டும்.

இங்கு நின்று பேசிக்கொண்டிருக்கும் எங்களில் யாருக்கும் அடுத்த தேர்தலில் வேட்பாளராக நிற்க வேண்டுமென்ற ஆசையில்லை. இன உணர்வு கொண்ட, அக்கறையுள்ள இளைஞர்கள் கட்சி, சாதி, மதம் கடந்து இது போன்ற முயற்சிகளில் பங்கெடுத்து வருகின்றனர்.

இவர்களைத் தமிழ்மக்கள் அன்புகாட்டி அரவணைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு மாநிலத்தில், நடுவண் அரசின் அலுவலகத்தில் தொழிலகத்தில் வேலைக்குப் பணியமர்த்த வேண்டு மென்றால், முதலில் அந்த மாநிலத்தில் இயங்கும் வேலை வாய்ப்புத்துறை அலுவலகத்தைத் தான் நடுவண் அரசு அலுவலகமும் தொழிலகமும் தொடர்பு கொள்ள வேண்டும். அவர்கள் எதிர்பார்க்கும் தகுதியுடன் இந்த மாநிலத்தில் யாருமே இல்லையென, மாநில வேலைவாய்ப்புத் துறை தடையில்லா சான்று (No Objection) கொடுத்த பிறகே, நடுவண் அரசு அலுவலகங்கள் தானே தமது வேலைகளுக்கு ஆட்களைப் பணியமர்த்த முடியும். இங்கு இந்த விதிமுறைகள் சட்டைசெய்யப்படுவதே இல்லை.

2007ஆம் ஆண்டு திருச்சி அருகிலுள்ள திருவெறும்பூரில் இயங்கும் இந்திய அரசின், பெல்(BHEL) தொழிற்சாலையில் அதிகளவில் அயல் மாநிலத்தவர்களைப் பணியில் அமர்த்தியதைக் கண்டித்து நாங்கள் போராட்டம் நடத்திக் கைதானோம். அங்கே, தொடக்கத்தில் சில ஆண்டுகள் மாநில அரசின் வேலைவாய்ப்புத் துறையிலிருந்து வேலைக்கு ஆட்களை எடுத்தார்கள். அதன்பின்பு, முழுவதுமாகத் தானே பணியமர்த்தத் தொடங்கி விட்டார்கள்.

இந்த உரிமை மீறல் எப்படி நடைபெறுகின்றது? இந்தி – மலையாளம் போன்ற மொழிகளைப் பேசிக் கொண்டு, ஜமீன்தார்களைப் போல நடுவண் அரசு அலுவலகங்களை ஆளுகின்ற உயர் அதிகாரிகளின் துணையுடன் தான் இப்படி நடக்கிறது.

இந்த உரிமை மீறலை, தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி தட்டிக் கேட்பதில்லையே, ஏன்? பிரதமருக்கு வாரம் ஒரு கடிதம் எழுதும் தமிழக முதலமைச்சர் செயலலிதா தட்டிக் கேட்கவில்லையே, ஏன்? தமிழ்நாடு வேலைவாய்ப்புத் துறையின் மூலம் தான் நீங்கள் வேலைக்கு ஆட்களைப் பணியமர்த்த வேண்டுமென இவர்கள் ஏன் கேட்கவில்லை? இந்தப் பெரிய தலைவர்களின் காதில் அந்தந்த கட்சிக்காரர்கள் இதைக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும்.

தமிழ்நாட்டிலே தொழில் திறனுடைய, தொழிற்கல்வி கற்ற ஏராளமான இளைஞர்கள் இருக்கிறார்கள். 605 பொறியியல் கல்லூரிகளும், நூற்றுக்கணக்கில் பாலிடெக்னிக் கல்லூரிகளும், ஐ.டி.ஐ பயிலகங்களும் தமிழ்நாட்டில் இருக்கின்றன. இவர்களையெல்லாம் ஆவடித் தொழிற்சாலையில் இன்ன பிற நடுவணரசுத் தொழிலகங்களில் ஏன் பணியமர்த்த வில்லை; எதற்காகத் தேர்வு எழுதச் சொல்கிறார்கள். நம்மவர்கள் சுமார் 2000 பேருக்குப் ஆவடி திண்ணூர்தித் தொழிலகத்தில் பணிப்பயிற்சி (Apprentice) கொடுத்து வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். அவர்களுக்கு வேலை கொடுக்கவில்லை. பின்னர், வடநாட்டுக்காரர் களையும், மலையாளிகளையும் வைத்துப் பணிகளில் நிரப்பியிருக்கிறார்கள். தமிழ்நாட்டு அதிகாரிகளே தேர்ந்தெடுத்தாலும், நம்மவர்களை தேர்ந்தெடுக்க மறுக்கிறார்கள். தமிழக அரசு நினைத்திருந்தால், தனது அதிகாரத்தை வைத்து இந்த அநியாயத்தைத் தடுத்திருக்க முடியும். ஆனால், தடுக்கவில்லை.

நம்மவர்கள் சிலர் இருக்கிறார்கள். வடநாட்டிலிருந்து வருபவர்களும் ஏழைகள் தான், எனவே அவர்களை இங்கு பணியமர்த்துவதில் தவறில்லை என்கின்றனர். வடநாட்டிலிருந்து, உத்திரப் பிரதேசத்திலிருந்து, மத்தியப் பிரதேசத்திலிருந்து வருகின்ற ஏழைகள், தமிழ்நாட்டிலே மண்ணின் மைந்தர்களாக இருக்கும் ஏழைகளின் வேலைவாய்ப்பைப் பறித்துத் தான், இங்கு பணியில் அமர்கின்றனர். வர்க்கம் பேசும் தோழர்கள் வெளிமாநிலத்திலிருந்து வரும் தொழிலாளிக்குப் பணிகொடுக்கக் கூடாது என்கிறார்கள். இது. தொழிலாளர் விரோதக் கொள்கை என்கின்றனர். பிறமாநிலத்திலிருந்து வரும் ஒரு தொழிலாளி, ஒரு தமிழ் தொழிலாளிக்குரிய வேலையைப் பறித்துக் கொள்வது ஞாயமா? வடநாட்டிலிருந்து ஒரு பிற்படுத்தப்பட்டவர் இங்கு வந்து வேலைபெற்றால், அவர் தமிழ்நாட்டின் பிற்படுத்தப்பட்டவர் ஒருவரின் வேலை வாய்ப்பைப் பறித்துவிட்டார் என்று பொருள். வடநாட்டிலிருந்து ஒரு தலித் இங்கு வந்து வேலை பெற்றால் தமிழ்நாட்டுத் தலித் ஒருவர் வேலையை இழக்கிறார் என்று பொருள்.

சி.பி.எம். கட்சியின் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு. சங்கத்தினர், நாமெல்லாம் ஒரே வர்க்கம் என்பார்கள். ஆனால், தமிழன் என்றாலே அவர்கள் காழ்ப்புணர்ச்சி கொள்வார்கள். அவர்களது ஊர்வலத்திலே ஒரு முழக்கம் எழுப்புவார்கள். ‘பாடுபடும் பாட்டாளிக்கு சாதியில்லை, மதமில்லை, மொழியில்லை, இனமில்லை’ என்பார்கள். சாதியில்லை, மதமில்லை என்பது சரி. மதம் கூட அவரவர் விருப்பம் சார்ந்தது. ஆனால், மொழியில்லை – இனமில்லை என்பது எப்படி சரியாகும்? அப்படியென்றால் அவர்களுக்கு நாடு எப்படி கிடைக்கும்?

இன்று உலக நாடுகள் எல்லாம் இன அடிப்படையில்தான் அமைந்திருக்கின்றன. இத்தாலி, ஜெர்மன், பிரான்ஸ், சப்பான், சீனா என ஒவ்வொரு நாடும் அந்தந்த மொழி பேசும் மக்களின் இன அடிப்படையில் தான் தனிநாடுகளாக இருக்கின்றன. நம்மைத்தான், வெள்ளைக்காரன் பாம்பு, பல்லி, முயல், மயில், மான் நட்டுவாக்களி என எல்லாவற்றையும் ஒன்றாகக் கட்டிப் போட்டுவிட்டுச் சென்று விட்டான் இங்கு தமிழ்நாடு ஒரு மாநிலமாகக் குறுகிக் கிடக்கிறது.

மறுமலர்ச்சிக் காலம் எனப்படும் 18ஆம் நூற்றாண்டில், ஒரு மன்னர் தனது படை வலிமையைக் கொண்டு இன்னொரு நாட்டைப் பிடித்துக் கொள்ளக்கூடாது, ஒவ்வொரு நாட்டிற்கும் இறையாண்மை உண்டு, ஒவ்வொரு நாடும் சனநாயகப்படி தங்கள் அரசுகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும், ஒவ்வொரு மொழி பேசும் மக்களும் தங்களுக்கான நாட்டை அமைத்துக் கொள்ள வேண்டுமென பல புதிய சிந்தனைகள், தேச உருவாக்க கோட்பாடுகளாகப்(Nation State formation) பிறந்தன.

இதனடிப்படையில், பல புதிய நாடுகள் தோன்றின. இன்னும் பல புதிய நாடுகள் வரப் போகின்றன. ஒரு மொழி பேசும் மக்களுக்கு ஒரு மாநிலம் என்ற அடிப்படையில்தான், 1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் நாள் இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன.

இங்கே செங்கொடி பிடித்துப் போராடுகிறார்களே சி.ஐ.டி.யூ. தோழர்கள், அதே செங்கொடியைக் கேரளாவில் பிடித்துக் கொண்டு முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டுமென இனவெறியுடன் ஊர்வலம் நடத்துகிறார்கள். சி.பி.எம். கட்சிகள் மலையாள இனவெறிதான் அங்கு வெளிப்படுகின்றது. நாம், நம்முடைய உரிமையைக் கேட்கிறோம். அது இனத்தற்காப்பு உணர்ச்சி. இனவெறியல்ல. எங்கள் மண்ணில் நமக்கு வேலை கொடு எனக் கேட்கிறோம், இது இனவெறியல்ல, தற்காப்பு முழக்கம்.

வங்காளத்திலே சி.பி.எம். கட்சி வங்காள இனவெறியுடன் செயல்படுகிறது. கேரளாவில், சி.பி.எம். – காங்கிரசுக் கட்சியின் மலையாள இனவெறியுடன் செயல்படுகின்றன. கர்நாடகத்தில், காங்கிரசு – பாரதிய சனதாக் கட்சிகள் கன்னட இனவெறியுடன் தமிழர்களைத் தாக்கினர். நாம் தொடர்ந்து தாக்கப்பட்டுக் கொண்டு வருகிறோம்.

தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் இருப்பது பாட்டாளி வர்க்கம் தானே, எனவே, தமிழ்ப் பாட்டாளிகளுக்கு உரிய நீரை முல்லைப் பெரியாறு அணையில் தேக்கித் திறந்து விட வேண்டியது தானே? அதற்கு கேரள சி.பி.எம். கட்சி முன்வராதது ஏன்? ஏனெனில், தமிழர்கள் அவர்களுக்குப் பகையாளிகள். இங்கு தமிழ்நாட்டில் எவ்வளவு மலையாளிகள் இருக்கிறார்கள்? நாம் எப்பொழுதாவது அவர்களை இனவெறியுடன் தாக்கியிருக்கிறோமா? இல்லை. ஆனாலும், தமிழர்களை அவர்கள் முல்லைப் பெரியாறு அணைச் சிக்கலையொட்டித் தாக்கினர்.

சமூகநீதி அடிப்படையில், இந்தியா முழுவதும் பல்வேறு தேசிய இனங்களில் உள்ள பிற்படுத்தப்பட்டவரும், தலித்துகளும் சமம் கிடையாது. உத்திரப்பிதேசத்திலிருந்து வரும் பிற்படுத்தப்பட்டவர் தமிழகத்தில் வேலை செய்வதன் மூலம், தமிழ்நாட்டிலுள்ள பிற்படுத்தப் பட்டவருக்குக் கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பைப் பறிக்கிறார். உத்திரப்பிரதேசத்திலிருந்து வரும் ஒடுக்கப்பட்ட தலித், தமிழகத்தில் வேலை செய்வதன் மூலம், தமிழ்நாட்டிலுள்ள தலித்து களுக்குக் கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பைப் பறிக்கிறார்.

எனவே தான், நடுவண் அரசு நிறுவனங்களில் மண்ணின் மக்களுக்கு 80 விழுக்காட்டு இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென நாம் கோருகிறோம். மீதமுள்ள 20 விழுக்காடு களுக்கு, அயலார்கள் இருப்பதில் ஒன்றும் தவறில்லை. தற்போதுள்ள தமிழ்நாட்டில் அய லார்கள் உள்ள விகிதத்தைப் போல, எங்காவது தமிழர்கள் அதிகளவில் வடநாட்டில் நடுவணரசுப் பணிகளில் அமர்ந்துள்ளதைக் காட்ட முடியுமா?

இந்திய அரசின் திருவெறும்பூர் பெல் (BHEL) தொழிற்சாலையில், கொதிகலன்களை உற்பத்தி செய்யும் பணியில் தமிழர்கள் சிறந்து விளங்கினர்.. எனவே, இங்கிருந்து தமிழர்களைக் கொண்டு போய் மேற்கு வங்கத்திலுள்ள பராக்கா நகரில் கொதிகலன் தயாரிக்கக் கொண்டு சென்ற போது, மேற்கு வங்கத்தின் சி.ஐ.டி.யூ. தொழிலாளிகள் செங்கொடி பிடித்துக் கம்யூ னிஸ்ட்டுகள், தமிழகத்தி லிருந்து வந்தவர்களுக்கு மேற்கு வங்கத்தில் என்ன வேலையென போராடி, தமிழர்களை அங்கிருந்து வெளியேற்றினர்.

ஆனால், இங்கென்ன நிலைமை? வங்காளிகளுக்கு ஒரு ஞாயம், தமிழர்களுக்கு ஒரு ஞாயமா? இனவெறியோடு மலையாளியும், வங்காளியும், திரிபுராவிலிலும் இருப்பார்கள் தொழிலாளிகள், தமிழ்நாட்டில் இருப்பவர்கள் மட்டும் கருங்காலிகளா?

கேரளாவில் தமிழர்கள் என்ன செய்கிறார்கள்? வயல்வெளி உழைப்பில், நாற்று நடுவதில், தென்னமரம் ஏறி தேங்காய்ப் பறிப்பதில் என கேரளாவின் அடிப்படை வேலைகளை தமிழ்ஆண்களும் பெண்களும் தான் செய்கிறார்கள். அவ்வேலைகளை செய்வது நாகரிகக் குறைவென்று மலையாளிகள் கருதுகிறார்கள். அரபு நாடுகளில் மலையாளிகள் ஈட்டி வரும் பணத்துடன் வாழும் மலையாளிகள், அதை கவுரவக் குறைச்சலாக, சுயமரியாதைக்கு இழுக்காக நினைக்கிறார்கள். அவர்களது வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது. இந்த அடிப்படை வேலைகளைச் செய்ய ‘பாண்டிக்காரன்’ இருக்கிறான் என்ற இறுமாப்பு அவர்களுக்கு இருக்கிறது. தமிழ்நாட்டில், அப்படி அடிப்படை வேலை செய்யும் மலையாளிகள் ஒருவரையாவது நாம் காண முடியுமா? இங்கு குறைந்தபட்சம் அவர்கள் டீக்கடை முதலாளிகளாகவும், பெரும் தொழில் நிறுவனங்களில் அதிகாரிகளாகவும், முதலாளிகளாகவும் அவர்கள் இருக்கின்றனர்.

இது பழைய காலமல்ல. புதிய இளைஞர்களிடையே புதிய சிந்தனைகளும் இன உணர்வுகளும் பூத்து வருகின்ற காலமிது. இன்றுள்ள இழிநிலையைத் தமிழக இளைஞர்கள் மாற்றுவார்கள்.

இங்கு பேசிய நாங்கள், சமத்துவதற்கு எதிரானவர்கள் அல்ல. தந்தைப் பெரியார் வலியுறுத்திய சாதியற்ற சமத்துவம், மார்க்சியம் வலியுறுத்தும் வர்க்கச் சுரண்டலற்ற சமத்துவம் இவற்றினூ டாக மனித சமத்துவம் வேண்டும் எனச் சொல்பவர்கள் நாங்கள். ஆனால், இந்தத் தத்துவங் களைக் காட்டி எங்களை ஏமாளிகளாக்க நினைக்காதீர்கள்; நாங்கள் ஏமாற மாட்டோம்.

இந்திய அரசு, 2011ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை வெளியிட் டுள்ளது. அதில், கடந்த 2001 தொடங்கி 2011 வரை உள்ள பத்தாண்டுகளில் தமிழ்நாட்டின் மக்கள் தொகை 97 இலட்சம் உயர்ந்துள்ளது. அதில், இங்கு ஏற்கெனவே குடியிருந்தோர்க்கு (புதிதாக வந்த வெளிமாநிலத்தவர்கள் உட்பட) பிறந்த குழந்தை பிறப்பு மூலம் 54 இலட்சம் பேரும், வெளி மாநிலங்களிலிருந்து குடியேறி (Migration)யுள்ளவர்கள் 43 இலட்சம் பேரும் அடக்கம் என சொல்கிறது அந்த அறிக்கை. எவ்வளவு அபாயகரமான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம் பார்த்தீர்களா?

2011ஆம் ஆண்டிற்குப் பிறகு, தமிழகத்திற்கு ஆயிரக்கணக்கான வடநாட்டவர்கள் வந்து குவிகிறார்கள். நாள்தோறும் சென்ட்ரல் தொடர்வண்டி நிலையத்திலே ஆயிரக்கணக்கான வடநாட்டவர்கள் வந்து இறங்குகிறார்கள்.

மக்கள் தொகை கணக்கெடுப்பில் அதிகமான வெளியார்கள் குடியேறியுள்ளப் பகுதியாக, அதிக தொழிற்சாலைகள் நிறைந்திருக்கும், நாம் இன்றைக்குப் பேசிக் கொண்டிருக்கும் திருவள்ளூர் மாவட்டம்தான் விளங்குகிறது. அடுத்ததாக, காஞ்சிபுரம், திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களும், வறட்சியால் தாக்கப்பட்ட சிவகங்கை மாவட்டமும் வருகின்றது. இன்னும் 15 ஆண்டுகளில், கிட்டத்தட்ட நமக்கு சமமாக வெளியாரின் எண்ணிக்கைப் பெருகும். ஐம்பதுக்கு ஐம்பது விழுக்காடு வெளியார்கள் தமிழகத்தில் குவிந்து விடுவார்கள். அவ்வாறான பிறகு தமிழர்கள் சொந்த மண்ணில் அயலாரை அண்டிப் பிழைக்கும் இரண்டாம் தர குடிமக்களாக மாறிவிடுவர். எனவேதான் 1956க்குப் பின்வந்தவர்களுக்கு வாக்காளர் அட்டை கொடுக்கக் கூடாது. குடும்ப அட்டை கொடுக்கக் கூடாது என்கிறோம்.

இவ்வாறு தோழர் பெ.மணியரசன் பேசினார்.

இக்கூட்டத்தில், ஆவடி எச்.வி.எப். தொழிலாளர்களும், பொது மக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

Pin It