அ.தி.மு.க. தலைவி செயலலிதாவின் ஆட்சிக்காலத்தில், நாள்தோறும் அமைச்சர்களும், அதிகாரிகளும் பணியிடமாற்றம் செய்யப்படுவது ஒன்றும் புதிய செய்தியல்ல. ஆனால், அண்மையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் திடீரென பணியிடமாற்றம் செய்யப்பட்ட நிகழ்வு, பத்தோடு ஒன்றாகப் பார்க்கப்பட வேண்டிய செய்தியும் அல்ல என்பதை அவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டதற்கான காரணங்களே உணர்த்துகின்றன.

தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டக் கடலோர பகுதிகளில் கார்னெட்(Garnet), இலும்னைட்(Illuminte), ரூட்டைல்(Rutile), ஜிர்கான்(Zirgan), மோனசை(Monasize) ஆகிய பல தாதுக்கள் இயற்கை வளமாகக் கிடைக்கின்றன. இதில், விலையுயர்ந்த மணலாக கருதப்படும் கார்னெட் தாது மணல், சட்டவிரோதமாக அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது குறித்து தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திற்கு அடிக்கடி புகார்கள் வந்தன.

இது குறித்து ஆராயும் வகையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷிஷ்குமார் 06.08.2013 அன்று, தூத்துக்குடி கடலோர பகுதிகளில் இருந்த மணல் குவாரிகளை ஆய்வு செய்ய அதிகாரிகளை நியமித்தார்.

இதன்போது நடத்தப்பட்ட ஆய்வில், வி.வைகுண்டராஜனுக்கு சொந்தமான வி.வி. மினரல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான குவாரிகளில் முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வைப்பாறு, வேம்பார் பகுதிகளில் நடத்திய ஆய்வில், மொத்தம் 2,39,712 மெட்ரிக் டன் அளவில் கனிமங்களை வி.வி. குழும நிறுவனம் முறைகேடாக அள்ளியிருப்பது கண்டறியப்பட்டது.

ஏற்கெனவே, வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தின் அதிபார் வைகுண்டராஜனின் சகோதருடைய நிறுவனமான பி.எம்.ஜி நிறுவனம் விதிமுறைகளை மீறி இரண்டு லட்சத்து 82 ஆயிரத்து 744 மெட்ரிக் டன் கூடுதலாக மணல் எடுத்திருப்பதைக் கண்டறிந்த மாவட்ட நிர்வாகம், அதற்கு மூன்று கோடியே 10 லட்சத்து 25 ஆயிரத்து 250 ரூபாய் அபராதம் விதித்தது.

வெறும் 4 ஏக்கர்களில் மணல் அள்ள பெற்ற ஒப்பந்தத்தைக் கொண்டு, சற்றொப்ப 30 ஏக்கருக்கு மேலுள்ள நிலங்களில் தாது மணலை அந்நிறுவனம் முறைகேடாக வெட்டியெடுத்திருப்பதும் தெரியவந்தது.

இது குறித்து மேலும் விசாரிக்க, புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையருக்கு அறிக்கை அனுப்பினார், மாவட்ட ஆட்சியர் ஆஷிஸ்குமார். இதனைத் தொடர்ந்து, அறிக்கை அனுப்பிய அன்றே, அவர் சத்துணவுத் திட்டத்துறைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

வி.வி.மினரல்ஸ் நிறுவனம் கார்னெட் மணல் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே முதலிடமும், உலக அளவில் இரண்டாம் இடமும் பெற்றுள்ளதெனில், எவ்வளவு அளவிற்கு தமிழகத்தின் தாது மணல் இங்கிருந்து அள்ளப்பட்டிருக்கும் என்பதை எண்ணிப் பார்த்தால் அதிர்ச்சியே மேலிடுகிறது.

வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தின் அதிபரான வைகுந்தராஜன் அ.தி.மு.க.வுக்கு நிறைய நிதியுதவி செய்யும் பெரும் பணக்காரர் என்பதும், இவரது செல்வாக்கின் காரணமாக இது குறித்து விசாரித்த பல அதிகாரிகள் அத்துறையை விட்டே மாற்றப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பே, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் போதும், கிரனைட் முறைகேடுகளை கண்டறிந்து அம்பலப்படுத்திய போதும் சிறப்பாக செயல்பட்ட மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம், அப்பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டு கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டார்.

இதே காலகட்டத்தில், உத்திரப்பிரதேசத்தில், மணல் கொள்ளை குறித்து ஆய்வு செய்து கண்டறிந்த துர்கா என்ற பெண் மாவட்டத் துணை ஆட்சியரை, சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் முலாயம் சிங்கின் மகனும், முதல்வருமான அகிலேஷ் யாதவ் பணியிடமாற்றம் செய்துள்ளார். மணல் கொள்ளைக்கு எதிராக நடவடிக்கை எடுத்த அரசு அதிகாரிகள் மாற்றப்பட்ட நிகழ்வு இதைத் தொடர்ந்து ஊடகங்களில் விவாதப் பொருளானது.

இதனைத் தொடர்ந்து, மணல் கொள்ளையைக் கண்டறிந்த காரணத்திற்காக மாவட்ட ஆட்சியர் மாற்றப்படவில்லை என்பதை உணர்த்தும் வகையில், மணல் கொள்ளை குறித்து வருவாய்த் துறைச் செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் சிறப்பு குழு ஆராயும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில், கடந்த 05.08.2013 அன்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நாடு முழுவதம் மணல் எடுக்கும் இடங்களில் மணல் அள்ள தடை விதித்து உத்தரவிட்டது.

மணல் கொள்ளை, தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் மிகப்பெரும் சூழலியல் ஆபத்தாக உள்ளதென பல சூழலியல் ஆய்வறிஞர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

கடந்த 1990ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்திய அரசால் செயல்படுத்தப்பட்ட உலகமய – தாராளமயப் பொருளியல் கொள்கைகளின் காரணமாக, இந்தியாவெங்கும் பன்னாட்டு நிறுவனங்கள் பெருமளவில் கட்டுமானத்துறையில் களம் இறங்கின. மனை வணிகத் தொழில் பெருமளவில் வளர்ச்சி பெற்றது.

பன்னாட்டு – வடநாட்டு நிறுவனங்கள் மனை வணிகத் தொழிலும், கட்டுமானத் தொழிலிலும் தீவிரமாக ஈடுபட்டன. இக் கட்டுமானத் தொழிலில் இணை பிரியா கூட்டாளிகளாக தேர்தல் கட்சிப் பிரமுகர்கள் பலர் மாறிப்போயினர். இந்நிறுவனங்களின் புதிய வாடிக்கையாளர்களாக பன்னாட்டு நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்ட புதிய நடுத்தர வர்க்கம் அமைந்தது. இதன் போதே, இந்தியாவெங்கும் கட்டுமானத்திற்குத் தேவையான மணலின் அளவும் அதிகரித்தது.

மணலை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு வெட்டியெடுப்பதில் தவறில்லை. எனினும், அதற்கான அளவுகோலையே தமிழக அரசு நிர்ணயிக்க வேண்டுமென நீதிமன்றமும் மட்டுமின்றி, சூழலியலாளர்களும் கோரினர். ஆனால், நடப்பதோ வேறு.

2004ஆம் ஆண்டு கணக்கின்படி, சென்னை மாநகரில் நடைபெறும் கட்டுமானப் பணிகளுக்க மட்டும் ஒரு நாளைக்கு 3,000 லோடு மணல் தேவைப்படுகின்றது. (காண்க: http://www.downtoearth.org.in/print/10901). 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இது 7,000 லோடாக உயர்ந்துள்ளது.

ஆந்திராவின் தடுப்பணைகள் காரணமாக பாலாற்றில் கடந்த பல ஆண்டுகளாக நீர்வரத்தே இல்லாத சூழலைப் பயன்படுத்திக் கொண்ட மணல் கொள்ளையர்கள், சென்னைக்கான இம்மணல் தேவையை பாலாற்றுப் படுகையிலிருந்தே நிறைவு செய்கின்றனர்.

அதே போல, நெல்லை - தாமிரபரணியாறு, கடலூர் - பெண்ணையாறு, விழுப்புரம் சங்கராபரணியாறு என தமிழகத்தில் நீர் வரத்து இல்லாத 33 முக்கிய ஆற்றுநீர் படுகைகளில், அதிக ஆழத்தில் மணல் அள்ளப்பட்டு வருவது அரசக்கும், அதிகாரிகளுக்கும் தெரிந்தே நடைபெற்று வருகின்றது.

கன்னட அரசின் அடாவடியால் காவிரியும் வறண்டு போனதைப் பயன்படுத்தி இந்த ஆற்றிலும் மணல் கொள்ளைக் களம் அமைக்கப்பட்டுவிட்டது.

கட்டுமானத் தொழில் நிறுவனங்களில் கூட்டாளிகளாக உள்ள அரசியல்வாதிகள், கட்சி வேறுபாடின்றி மணல் கொள்ளையில் கூட்டணி வைத்துள்ளனர். இவர்களுக்கு கையூட்டுப் பெற்றுக் கொண்டு சேவகம் செய்யும் அதிகாரிகளும் கணிசமாக வளர்த்தெடுக்கப்பட்டுள்ளனர். அதற்கு சம்மதிக்காத அரசு அதிகாரிகள் பலரும், அரம்பர்களைக் கொண்டு கொல்லப்பட்டும், தாக்கப்பட்டும் பணிய வைக்கப்படுகின்றனர்.

தமிழகத்தில் நடைபெற்று வந்த மணற்கொள்ளையைக் கட்டுப்படுத்துவது குறித்து கடந்த, 1999 சூலை 14 அன்று, சென்னை உயர்நீதிமன்றம் ஓர் உத்தரவைப் பிறப்பித்தது. தமிழக ஆறுகளை பாதிக்காத வகையில் மணல் அள்ளப்படுவதை தமிழக அரசு முறைப்படுத்த வேண்டுமென்றும், ஒவ்வொரு ஆற்றுக்கும் எந்தளவு ஆழத்தில் மணல் அள்ளலாம் என்றும் குறியீடு நிர்ணயிக்க வேண்டும் என்றும் அத்தீர்ப்பில் கூறப்பட்டது.

இதன்படி, தமிழக அரசு குறியீடுகளை நிர்ணயித்திருந்தாலும், அதை முறையாக கண்காணிப்பதற்கான பொறியமைவு ஏதுமில்லை. சூழலியலாளர்கள், அப்பகுதி பொது மக்கள் கொண்ட தற்சார்பான கண்காணிப்புக் குழுக்களை அமைத்து மணல் அள்ளும் நடவடிக்கைகளை தமிழக அரசு கண்காணித்திருக்க வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை.

மேலும், கன்னியாகுமரி, தூத்துக்குடி போன்ற கடலோர மாவட்டங்களில் யுரேனியம் உள்ளிட்ட பல தாதுக்கள் நிறைந்த மணலை வி.வி.மினரல்ஸ் போன்ற பல தனியார் நிறுவனங்கள் பிரித்தெடுத்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. எவ்வளவு மணல் – தாதுக்களை வெட்டியெடுக்கலாம் என பல நிர்ணயிப்புகள் இருந்தும் இவை முறையாக கண்காணிக்கப்படுவதில்லை.

கேரளாவில், 44 ஆற்றுப்படுகைகள் இருந்தும் கூட கடந்த 1994ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை மணல் அள்ளுவதற்கான உரிமங்கள் வழங்கப்படவில்லை. அவர்களது ஆற்று நீர் வளங்களைக் காப்பாற்ற முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் அதே சூழலில், கேரளாவிற்கான மணல் தேவை தமிழகத்தை வைத்தே பூர்த்தி செய்யப்படுவதையும் நாம் சாதாரணமானதாகப் எண்ணக்கூடாது.

கடந்த 2003ஆம் ஆண்டு மணல் கொள்ளையைத் தடுக்கும் நடவடிக்கையாக, தமிழக அரசே பொதுப்பணித்துறையின் மூலம் மணல் குவாரிகளை நடத்துமென அறிவிக்கப்பட்டது. அதன்பின்பு, ஆளும்கட்சியைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களுக்கே கனிசமான அளவிற்கு மணல் குவாரி அனுமதிகள் வழங்கப்பட்டன. ஆளும் கட்சி பிரமுகர்களைப் பகைத்துக் கொள்ள விரும்பாத அதிகாரிகள், அதிகளவில் வரம்பற்ற மணல் கொள்ளைகளுக்கு துணைபோயினர்.

இவ்வாறான, அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் கூட்டணியில் அவ்வப்போது ஏற்படும் பிணக்குகளின் போது மட்டும் தான், “மணல் கொள்ளையர்கள் கைது” என நாளிதழ்களில் செய்தி வரும் அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றன. அதன் பிறகு, வழக்கம் போல் மணல் கொள்ளை நடைபெற்றுக் கொண்டுள்ளது.

ஆற்றுப்படுகை மற்றும் கடலோரங்களில் மணல் அள்ளுவதன் காரணமாக, நிலத்தடி நீர் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, மண்ணின் வளம் மாறுதலுக்குள்ளாகின்றது. இதன் காரணமாக, வேளாண்மைக்கு நீரில்லாமல் போவதும், ஆறுகளில் மீன் வளம் குன்றுவதும் மக்களின் வாழ்வாதரங்களுக்கு பெருஞ்சிக்கலை ஏற்படுத்துவதாக அமையும்.

இந்திய அரசின் சுரங்கங்கள் மற்றும் கனிம வளங்கள் ஒழுங்குமுறைச் சட்டம் – 1957(Mines and Minerals (Development and Regulation) Act - 1957)இன்படி, ஆற்று மணல் உள்ளிட்ட சில கனிமங்களின் மீது தமிழக அரசுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, மணல் அள்ளும் உரிமைப் பெற்றுள்ள தமிழக அரசு, இதற்காக நடைபெறும் சுரங்க அனுமதிகளை மாவட்ட ஆட்சியர் மூலம் நேரடியாக வழங்கிக் கொண்டுள்ளது.

இந்த நடைமுறையை மாற்றி, மாவட்ட ஆட்சியர் மட்டுமின்றி சூழலியலாளர்கள், அப்பகுதியின் கிராம பஞ்சாயத்தினர், பொது மக்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவின் ஒப்புதலுடன் தான் மணல் அள்ளுவது உள்ளிட்ட சுரங்கப் பணிகளுக்கான அனுமதியை தமிழக அரசு வழங்க வேண்டுமென சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மணல் அள்ளுவது, வெறும் கனிமத்தை எடுக்கும் செயல் மட்டுமல்ல, இயற்கைச் சமநிலையை பாதிக்கும் கொடுஞ்செயலுமாகும்.

மேலும் மணலுக்கான மாற்றுப் பொருள்கள் கண்டறியப்படவேண்டும்.

பழையக் கட்டிட இடிபாடுகலைப் பயன்படுத்துவது கண்ணாடிக் கழிவுகளை தூளாக்கி பயன்படுத்துவது கருங்கல் ஜல்லித் தூள்களை பயன்படுத்துவது நீண்ட நாள் நிற்க்கும் கட்டிட உறுதித் தன்மையை உள்ளாட்சி நிர்வாகங்கள் கட்டாயப் படுத்துவது போன்ற வழிகளில் மணலின் பயன்பாட்டைக் குறைக்கும் முயற்சிகளில் தமிழக அரசு போர்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

நம் முன்னோர்கள் கைக்கொண்ட மரபான கட்டிடத் தொழில்நுட்பங்களை மீட்டெடுக்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

Pin It