(குழந்தைகளைக் கொஞ்ச ஒரு தமிழக் கொஞ்சுமொழி)
உறைந்து கிடந்த உள்ளத்தை
நெருப்பின்றிச்
சிரிப்பெடுத்து உருக்குகிறாய்.
மெல்லக் கரைகிறேன் நான்.
சின்ன விரல்கொண்டு
சீராய் எனை வார்த்து
முன்னர் நிலை செய்தாய்.
அதனால் இன்று
உன்னைப் பாடுவேன்.
குமரிமக்கள் வாழ்வியலே
கொடுந்தமிழின் பேரறமே
குறள்பிறந்த பேரறிவே
புறத்தின் பொருட்செறிவே
அன்பின் அகப்பாட்டே
ஐம்பெருங் காப்பியமே
பதிணெண் கீழ்க்கணக்கே
பழகுதமிழ்ப் பத்துப்பாட்டே
உறையூர் மென்துகிலே
மறைமலைத் தனிமொழியே
பாண்டிய நன்முத்தே
பாவாணர்த் தமிழ்ச்சொல்லே
சேரமான் குறுமிளகே பெருஞ்
சித்திரனார்ப் பாவீச்சே
கீழடியின் நன்மணியே
கிஆபெ குறள்விரிவே
தென்மொழித் திரவியமே
சிந்துத் தமிழறிவே
சுமேரியச் சொற்கூட்டே
சொல்பிறந்த நல்லுலகே
மயக்கும் பறையலியே
மாண்புறு தமிழிசையே
பண்ணே பழந்தமிழே - இன்று
உன்னைப் பாடிடுவேன்.