அண்மையில், இந்திய அரசின் தொடர்வண்டித்துறையில் காலியாகவுள்ள பல்வேறு பணிகளுக்காக, தமிழகத்தில் தேர்வுகள் நடைபெற்றன. மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்ற தேர்வில் பங்கேற் பதற்காக வடநாட்டிலிருந்து நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தொடர்வண்டி மூலம் தமிழகம் வந்தனர்.

மதுரையில் தேர்வு முடிந்தவுடன், 17.11.2013 அன்றிரவு மதுரை தொடர்வண்டி நிலையம் வந்த அவர்கள், பொதுப்பெட்டியில் பயணம் செய்வதற்கான பயணச் சீட்டைகையில் வைத்திருந்த போதிலும், எவ்வித சிறுதயக்கமும் இன்றி, அங்கு நின்று கொண்டிருந்த நெல்லை விரைவுத் தொடர்வண்டியின் குளிரூட்டப் பட்ட பெட்டி உள்ளிட்ட பதிவுசெய்யப் பட்ட பெட்டிகளில் ஏறினர்.

பதிவு செய்யப்பட்ட தொடர்வண்டிப் பெட்டியில் அடாவடித்தனமாக நுழைந்த வடநாட்டவர்களின் செயல், அப்பெட்டியில் முறைப்படி பதிவு செய்து வந்திருந்த மற்ற பயணிகளுக்கு நெரிசலை ஏற்படுத்தியது. அதிருப்தியுற்றப் பயணிகள், தொடர்வண்டி சோழவந்தான் அருகில் வந்தபோது, சங்கிலியை இழுத்துப் பிடித்து தொடர் வண்டியை நடுவழியில் நிறுத்தினர்.

உடனே அங்கு வந்த தொடர்வண்டிக் காவல்துறையினர், அத்துமீறி பெட்டிகளில் நுழைந்திருந்த வட நாட்டவர்களை வெளியேற்றினர். வெளியேற்றப் பட்ட வடநாட்டவர்கள், அங்கேயே தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் செய்ததுடன், ஏசி பெட்டிகளின் கண்ணாடிகளை அடாவடித்தனமாக உடைத்து நொறுக்கினர். அத்துமீறி பயணம் செய்ததோடு மட்டுமின்றி, தொடர்வண்டிக் கண்ணாடிகளையும் உடைத்த அவர்கள் யார் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை, அதன்பின் வந்த அனந்தபுரிவிரைவுத் தொடர்வண்டியில் புதிதாக 3 பெட்டிகளை அவர்களுக்கென இணைத்து, அவர்களை வழியனுப்பி வைத்தது.

வடநாட்டின் ஏதோவொரு நகரில், தமிழ்நாட்டு இளைஞர்கள் இவ்வாறு செய்திருந்தால், அங்கிருந்த காவல்துறை அவ்விளைஞர்களை என்ன செய்திருக்கும்? கண்ணாடிகளை உடைத்ததற்கு வழக்குப் போட்டு, அவர்களை சிறையிலடைத்திருக்கும். தமிழகத்திலிருக்கும், நாம் அவர்களை விடுவிக்க வேண்டுமெனக் குரலெழுப்பிப் போராடிக் கொண்டிருப்போம்.

ஆனால், வடநாட்டவர்களுக்கோ வழக்குப்பதிவு கிடையாது. நடவடிக்கை கிடையாது. காரணம், அவர்கள் என்ன செய்தாலும், இது அவர்களின் நாடு. ஆண்டைகளுக்கு இருக்கும் அத்து மீறும் உரிமைகள், அடாவடித்தன உரிமைகள், அடிமைத் தமிழர்களுக்கு எப்போதும் கிடையாது.

இந்நிகழ்வு நடந்து சில நாட்களுக்குப் பின், இன்னொரு அரசியல் நிகழ்வு உ.பி.யில் நடந்தது. சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் முலாயம் சிங், நாடாளுமன்றத்தில் அனை வரும் இந்தியில்தான் பேச வேண்டும், ஆங்கிலத்தில் பேசக்கூடாது என அறிக்கை விடுத்தார்.

அண்மையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிதாகப் பதவியேற்ற நீதிபதிகள் அனைவரும், எந்த மொழி பேசுபவராக இருந்தாலும், பதவி ஏற்பு உறுதி மொழியில் கட்டாயம் இந்தியில்தான் கையெழுத்திட வேண்டும், என நிர்பந்திக்கப்பட்டு கையெழுத்திட்ட பிறகே பதவியேற்க முடிந்தது.

தமிழகத்தில் இயங்கும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும், சென்னை இந்துஸ்தான் பல்கலைக்கழகத்திலும் அதிகளவில் பயிலுகின்ற வடநாட்டு மாணவர்கள், தமிழக மாணவர்களையும், ஆசிரியர்களையும் இந்தியில் தான் பேச வேண்டுமென நிர்பந்தித்து பல தகராறுகள் நடை பெற்றதுண்டு.

இவ்வாறு, தொடர்வண்டியில் வெளிப்பட்ட வடநாட்டவர்களின் அடாவடித்தன உணர்வேதான், முலாயம் சிங்கின் அறிக்கையிலும், இந்திய அரசின் அதிகாரத்துறையிலும், வடநாட்டு மாணவர்களிடமும் ஒரே குரலாக எதிரொலிப்பதை, நாம் எளிதில் உணர்ந்து கொள்ள முடியும். இந்திய அரசும், வடநாட்டவர்களும் எப்பொழுதும் ஒரே இந்தி ஆதிக்கக்குரலில் தான் பேசி வருகிறார்கள்.

ஆண்டையைப் போல் நடந்து கொண்ட வடநாட்டவர்களின் செயல்பாட்டையும், முலாயம் சிங் அறிக்கையையும் வெறும் தனிப்பட்ட செயல்பாடுகள் என நாம் புறந்தள்ளிவிட முடியாது. இவர்களால் இயக்கப்படும் இந்திய அரசு, தமிழகத்தை, தமிழினத்தை எந்த அளவில் மதிக்கிறது என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.

தமிழீழ மக்கள் இனப்படு கொலை செய்யப்பட்ட இலங்கை மண்ணில் நடைபெறுகின்ற காமன் வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டுமென தமிழக மக்கள் கோரினர். தமிழக அரசு கோரியது. தமிழகக் கட்சிகள் கோரின. ஆனால், அனைத்தையும் குப்பையில் வீசிவிட்டு, தமிழினத்தை அவமரியாதை செய்து விட்டு அதில் பங்கெடுத்தது இந்தியா.

மலையாளிகளோ, இந்திக்காரர்களோ கூட்டம் கூட்டமாக இனப் படுகொலை செய்யப்பட்ட ஒரு மண்ணில், இதே போன்று ஒரு மாநாடு நடைபெற்றால் அதில் இந்தியா கலந்து கொள்ள முற்படுமா? வடநாட்டுக் கட்சிகள் அதை அனுமதிக்குமா?

ஆனால், வடநாட்டவர்கள் சிலர் ஆஸ்திரேலியாவிலோ, வேறு நாடுகளிலோ தாக்கப்பட்டால், அது தான் அவர்களுக்கு உலக மகா சிக்கல். இலண்டனில் சீக்கியர்களுக்கு தலைப்பாகைஅணிய உரிமை மறுக்கப்பட்டால், தாக்கப்பட்டால் அது தான் அவர்களுக்கு பெருஞ்சிக்கல். தினந்தோறும் தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற் படையால் தாக்கப்பட்டு வந்தாலும், சுட்டுக் கொல்லபட்டாலும் அது அவர்களுக்கு எவ்வித நெருடலையும் ஏற்படுத்தாது.

அணுஉலையை எதிர்த்து கூடங்குளத்தில் எழுச்சி மிக்கப் போராட்டங்கள் நடந்து வரும் அதே நேரத்தில், தேவாரம் பகுதியில் இந்தியா வெங்குமுள்ள அணுக்கழிவுகளை சேமிக்கும் திட்டத்தை கையிலெடுக்கிறது இந்தியா.

‘இந்தியா’ - ஆண்டை இந்திக் காரர்களின் நாடு, தமிழகத்திற்கும் தமிழர்களுக்கும் இதில் எபபொழுதும் அடிமைப் பாத்திரமே என்பதை வெளிப்படையாக அவர்கள் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். நாம் தான் அதை கவனிக்கத் தவறுகிறோம்!

இந்திய ஆட்சியாளர்களும் சரி, வடநாட்டவர்களும் சரி, தமிழர்கள் மீதும், தமிழகம் மீதும் எப்பொழுதும் தீரா இனப்பகையுடன் தான் செயல்படுகின்றனர். நாம்தான் அதனை கவனிக்கத் தவறுகிறோம்! வட நாட்டானோடு சேர்ந்து ஒரு அரசமைப்பில் இருந்தால் நாம் அடிமையாகத்தான் அதில் இருக்க முடியும் என்பதைக் கவனிக்கத் தவறுகிறோம். இனியாவது கவனிப் போமா?

Pin It