ஐ.நா.வின் முன் முயற்சியில் நடைபெற்ற பருவநிலை மாற்றம் குறித்த இன்னுமொரு மாநாடும் தோல்வியில் முடிந்துள்ளது. 2013 நவம்பர் 11 தொடங்கி 22 வரை போலந்து தலைநகர் வார்சாவில் நடைபெற்ற ஒப்பந்த உறுப்பு நாடுகளின் 19 ஆவது மாநாடு (conference of parties- COP 19) உருப்படியான முடிவேதும் எட்டாமல் பெயருக்கு ஒரு கூட்டறிக்கை வெளியிட்டுக் கலைந்தது.

புவி வெப்பமாதல் குறித்தும் அதன் விளைவாக ஏற்பட்டு வரும் தாறுமாறான பருவநிலை மாற்றங்கள் குறித்தும் ஜப்பான் நாட்டின் கியோட்டோ நகரில் 1997 டிசம்பரில் கூடிய உலக நாட்டுதலைவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கை கியோட்டோ அறிக்கை எனப்படும். இதில் கையொப்பமிட்டுள்ள நாடுகளே ஒப்பந்த உறுப்பு நாடுகள் எனப்படுகின்றன. 193 நாடுகள் இவ்வாறு ஒப்பந்த உறுப்பு நாடுகளாக உள்ளன.

இந்த உறுப்பு நாடுகளின் மாநாடு ஆண்டுக்கு ஒரு முறை நடைபெற்று கியோட்டோ அறிக்கையில் ஏற்றுக் கொண்ட முடிவுகளை செயல் படுத்துவது குறித்தும், 2015 இல் பாரிசில் இன்னொரு உச்சி மாநாடு நடத்தி இறுதி செய்யவுள்ள அடுத்த பருவநிலை ஒப்பந்தம் குறித்தும் பேசி வருகின்றன. (கியோட்டோ அறிக்கை குறித்த விரிவிற்கு காண்க: தமிழர்கண்ணோட்டம் இதழ்கள் மே 2007 டிசம்பர் 2009, சனவரி 2010)

அவ்வகையில் வார்சா மாநாடு 19 ஆவது மாநாடாகும்.

பெருந்தொழில் முனைவோரின் மிகை இலாபா நோக்கு, அதற்கேற்ப வளர்க்கப்பட்டுள்ள கண்மண் தெரியாத நுகர்வுவெறி ஆகியவை இணைந்து இப்புவி மண்டலத்தின் இயற்கை வளங்களை மிகையாக உறுஞ்சி கழிவுகளை மிகையாக வெளியிட்டதன் விளைவாக புவி வெப்பமயமாதல் என்ற சிக்கல் விளைந்து பருவ நிலைமாற்றங்கள் சீரற்ற தன்மையை அடைந்தன என்ற உண்மையை கியோட்டோ அறிக்கை ஏற்றது.

இதனை சரி செய்ய வளிமண்டலத்தில் உள்ள கார்பன்டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு உள்ளிட்ட நச்சுவாயுக்களின் அளவைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றும், புவி வெப்பமடைதல் இந்த நூற்றாண்டு இறுதிக்குள் 2 டிகிரி செல்சியஸ் அளவுக்குமேல் உயராமல் பார்த்துக் கொள்வ தென்றும் கியோட்டோவில் முடிவானது.

இவ்வாறு நச்சுவாயுக்களை வெளியிட்டதில் தொழில்துறையில் முன்னேறிய அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சப்பான் ஆகியவை கூடுதல் பங்கு வகிப்பதால் இதனை சரி செய்வதிலும் அவற்றின் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும். என்பதும் ஏற்கப்பட்டது. இதற்கு “பொது நோக்கு - வேறுபட்ட பொறுப்பு’’ (common but differential responsibilities) என்று பெயர்.

கியோட்டோவுக்குப் பிறகு நடைபெற்ற ஒவ்வொரு பருவ நிலை மாநாட்டிலும் வெவ்வேறு சாகசங்கள் செய்து வல்லாதிக்க நாடுகளின் கூடுதல் பொறுப்பை தட்டிக் கழிப்பதில் அமெரிக்காவும், ஆஸ்திரேலியாவும் தொடர்ந்து முனைப்புக் காட்டின. ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேரு நாடுகளில் அமைச்சர்கள் அளவிலான பன்னாட்டு மாநாடுகள் பல நாட்கள் நடைப்பெற்ற போதிலும் பேச்சு வார்த்தை இழுபறிகள் கடந்த 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

ஆனால் அறிவியலாளர்கள் எதிர்பார்த்ததை விடவும் கூடுதல் வேகத்தில் பருவ நிலை மாற்றங்கள் ஏற்பட்டு புயல், பெருமழை, கடல் சீற்றம், பெரும்வறட்சி, என தாறு மாறன நிகழ்வுகள் ஏற்பட்டு பேரழிவை உண்டாக்கி வருகின்றன.

குறிப்பாக புவியின் வெப்ப அதிகரிப்பால் துருவங்களில் உள்ள பல்லாயிரம் சதுரகிலோ மீட்டர் பனிப்பாறைகளும், இமயமலை உள்ளிட்ட மலைச்சிகரங்களின் உறைபனிகளும் உருகி பெருவெள்ளம், கடல் மட்ட உயர்வு போன்றவை ஏற்படுவதும், கடல் வெப்பம் அதிகரிப்பதால் உருவாகும் வெப்பச் சலனம் காரணமாக புவிக் கோட்டுப் பகுதிகளில் கடும் வறட்சி ஏற் படுவதும் கடந்த 10 ஆண்டுகளில் மிகையாக அதிகரித்துள்ளன.

பருவ நிலையில் ஏற்படும் இம் மாற்றங்களால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளை ஐ.நா. வல்லுநர்கள் தர வரிசைப்படுத்தியுள்ளனர். அந்த வகையில் கியோட்டோ அறிக்கையில் கையொப்பமிட்டுள்ள மொத்தம் 193 நாடுகளில் அதிகம் பாதிக்கப்படும் முதல் எண் நாடாக வங்காள தேசம் உள்ளது. வங்காள தேசத்தின் போலோ, குதுப்தியா தீவு மாவட்டங்கள் கடல் அரிப்புக் காரணமாக பெருமளவு நீரில் மூழ்கி விட்டன. இன்னும் 20 ஆண்டுகளுக்குள் இத்தீவுகள் முற்றிலும் காணாமல் போய்விடும் என அஞ்சப்படுகிறது. இத்தீவுகளில் வாழும் 20 இலட்சம் மக்களில் பாதி பேருக்குமேல் நிலம் இழந்து, ஊரிழந்து, பருவநிலை அகதிகளாக நாட்டின் உள்பகுதிகளுக்கு புலம் பெயர்ந்து விட்டனர்.

இவ்வாறு பாதிப்படையும் தர வரிசையில் 20 ஆவது இடத்தில் இந்தியா உள்ளது.

அதிலும் ஆந்திராவும் தமிழ்நாடும் மிக அதிகப் பாதிப்புகளை சந்திக்கவுள்ள மாநிலங்கள் என அடையாளமிடப்பட்டுள்ளன.

கடந்த 40 ஆண்டுகளில் ஆந்திரா 60 புயல்களைச் சந்தித்துள்ளது. அதன் பாதிப்புகள் தமிழகத்திற்கும் நேர்கிறது.

அண்ணாப் பல்கலைக்கழகம் அண்மையில் வெளியிட்டுள்ள பருவநிலை குறித்த ஆய்வறிக்கை அதிர்ச்சியான தகவல்களை தெரிவிக்கிறது. 2020க்குள் தமிழ்நாட்டின் வெப்பநிலை 1.1 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்றும், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் 3.7. டிகிரி செல்சியஸ் உயரும் என்றும் இவ்வாய்வறிக்கைக் கூறுகிறது.

இதன் காரணமாக தமிழ் நாட்டின் 1100 கிலோ மீட்டர் நீளமுள்ள கடல் பகுதியில் கடல் நீர் மட்டம் 2020க்குள் 18 செ.மீ அதிகரிக்கும் என இந்த அறிக்கை எச்சரிக்கிறது. ஏற்கெனவே கடும் கடல் அரிப்புக்கு உள்ளாகிவரும் எண்ணூர், புதுவை, விழுப்புரம், கடலூர், நாகை உள்ளிட்ட பகுதிகள் இன்னும் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகும். கடல் அரிப்பு நிலங்களை விழுங்கி அப்பகுதி மக்களை வெளியேற்றும். கடற்கரையை ஒட்டி உள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் உப்பாகிப் போவதால் பல தொடர் பாதிப்புகள் ஏற்படும்.

இன்னொருபுறம் ஏற்படும் வெப்பச் சலனம் காரணமாக கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, ஆகிய மாவட்டங்களில் மழை அளவு குறைந்து குடிநீர் பஞ்சமும் வேளாண்மை பாதிப்பும் அதிகரிக்கும் ஆபத்துள்ளது.

இந்த ஆய்வும் இந்திய அரசின் மானாவாரி வேளாண்மை ஆய்வு நடுவம் என்ற இந்திய அரசு நிறுவனத்தின் இன்னொரு ஆய்வும் காவிரி பாசன மாவட்டங்கள் குறித்த அதிர்ச்சியான விவரங்களைக் கூறுகின்றன.

தமிழகத்தில் 7 மாவட்டங்கள் ஈரமண்டலத்திலிருந்து வறட்சி மண்டலமாக மாறி வருகின்றன. என இவ்வாய்வறிக்கைகள் கூறுகின்றன. 1988ஆம் ஆண்டோடு ஒப்பிட காற்றில் ஈரப்பதம் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 27 விழுக்காடு குறைந்து அரை வறட்சிப் பகுதியாகி விட்டன என்று இந்த அறிக்கைக் கூறுகிறது.

இது இயல்பாக இயற்கைச் சூழலில் ஏற்பட்ட மாறுதல்களால் விளைந்த விபரீதமல்ல. முதலாளிய அமைப்பின் வரம்பற்ற இயற்கைச் சுரண்டலால் ஏற்பட்ட செயற்கை விபரீதமாகும். அதனால்தான் நாடுகளின் அரசுகள் கூடி இதை தடுத்து நிறுத்துவதற்கு திட்டமிட வேண்டிய தேவை எழுகிறது. அவற்றுள் ஒன்றுதான் வார்சா மாநாடு.

பருவ நிலை குறித்த வார்சா மாநாடு நடந்த பின்னணி கவனிக்கத் தக்கது. 2013 நவம்பர் 8 ஆம் நாள் பல்லாயிரம் தீவுக்கூட்டங்களின் நாடான பிலிப்பைன்சை ஹையானா என்ற பெரும்புயல் தாக்கி பேரழிவை ஏற்படுத்தியது. 10 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். 10 இலட்சத்திற்கு மேற்பட்டோர் ஊரிழந்து உண்ண உணவும் குடிக்கநீரும் இன்றி வீதியில் வீசப்பட்டனர்.

இச்சூழலில் நவம்பர் 11 அன்று தொடங்கிய வார்சா பருவ நிலை மாநாட்டில் முதல் பேச்சாளராக பிலிப்பைன்சு நாட்டின் பேராளர்யெப்சானோ (Yeb sano) பேச அழைக்கப்பட்டார். ஹைனா புயல் ஏற்படுத்திய பேரழிவை கண்ணீரும் விம்மலுமாக விளக்கிப் பேசிய சானோ “ இந்த வார்சா மாநாட்டில் உருப்படியான ஒப்பந்தம் ஏதும் ஏற்படவில்லையென்றால் இம் மன்றத்திலேயே எனது உயிர் போகட்டும்’’ என்று கூறி காலவரையற்ற உண்ணாப் போராட்டத்தில் அமர்ந்தார். மனிதர்களின் பேராசைச் சுரண்டலால் ஏற்பட்ட பேரழிவு இது என பல நாட்டுப் பேராளார்களும் பேசினார்கள்.

ஆனால் இதுவரை நடந்த பருவநிலை குறித்த மாநாடுகளிலேயே வார்சா மாநாடு தான் மிகக் கேவலமான போலி உரைகளின் மாநாடாகத் நிகழ்ந்தது.

2009 இல் கோபன் ஹேகனில் நடைபெற்ற பருவ நிலை மாநாட்டில் அமெரிக்க குடியரசுத் தலைவர் ஒபாமா, கியோட்டோ ஒப்பந்தத்தையே திரிபுப்படுத்தி சொற்சிலம்பம் ஆடினார். “பொது நோக்கு-- வேறுபட்ட பொறுப்பு” (common but differential responsibilities) என்பதைத் திரித்து “பொது நோக்கு’’ - வேறுபட்ட எதிர் வினை” (common but differential responses) என்று மாற்றிப் பேசினார்.

அடுத்தக் கட்டப் பித்தலாட்டம் இப்போது வார்சாவில் நடந்தது. “பொது நோக்கு - அனைவருக்கும் பொறுப்பு’’ (Common and universal responsibilities) என்று வார்சா கூட்டறிக்கையில் மாற்றப்பட்டது. அதிகம் மாசுப்படுத்தியவர், அதிகம் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற அடிப்படைக் கோட்பாடே கைவிடப்பட்டது. அமெரிக்கா உள்ளிட்ட அதிக தொழில் வளர்ச்சி அடைந்த நாடுகள் தங்கள் பொறுப்புகளை கைகழுவினர்.

கடந்த ஆண்டு தோகாவில் நடைபெற்ற 18 ஆவது மாநாட்டில் பருவநிலை மாற்றங்களால் வறிய நாடுகள் அடையும் இழப்புகளை ஈடு செய்வதற்கு வளர்ச்சி அடைந்த நாடுகள் நிதி வழங்குவதற்கான பொறி அமைவை ஏற்படுத்துவது என முடிவானது. இந்த மாநாட்டில் அந்த பொறியமைவுநிறுவுவது குறித்து துல்லியமான முடிவெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது. 2009 கோபன் ஹேகன் மாநாட்டிலேயே அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் 2010 தொடங்கி ஆண்டுக்கு 10 கோடி டாலர் இழப்பீட்டு நிதி வழங்குவதென்றும் 2020க்கு பிறகு ஆண்டுக்கு 100 கோடி டாலராக இதனை உயர்த்துவதென்றும் முடிவானது.

இதன்படி வார்சா மாநாட்டிற்குள் 30 கோடி டாலர் நிதி வந்திருக்க வேண்டும். ஆனால் வந்ததோ 6 கோடி டாலர்தான்.

இது குறித்த வார்சா மாநாட்டில் சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கேட்ட போது 2015 பாரிசு மாநாடு முடிந்த பிறகு பார்க்கலாம் என அமெரிக்காவும், பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் கைவிரித்தன.

அதே போல் கோபன்ஹேகனில் தங்கள் நாட்டுக் தொழிற்சாலைகள் வெளியிடும் கார்பன்டைஆக் ஸைடு அளவை 1990 ஆம் ஆண்டை ஒப்பிட 2020க்குள் 25 விழுக்காடு குறைத்து விடுவோம் என்றும், ஆண்டுக்காண்டு அந்த விகிதத்தை வெளிப்படையாக செயல்படுத்துவோம் என்றும் உறுதியளித்த சப்பான் அவ்வாறு ஒரு விழுக்காடு கூட கார்பன் வெளியீட்டை குறைக்காதது மட்டுமல்ல, 3 விழுக்காடு கார்பன்டை ஆக்சைடு வெளியீட்டை தங்கள் நாடு அதிகரித்துக் கொள்ள அனுமதி வேண்டு மென்று வார்சா மாநாட்டில் வலியுறுத்தியது.

ஆஸ்திரேலியாவும் தான் ஏற்றுக் கொண்டவாறு கார்பன் வெளியீட்டை ஒரு விழுக்காடு கூட குறைக்கவில்லை.

1990 ஆம் ஆண்டை ஒப்பிட 40 விழுக்காடு கார்பன்டை ஆக்சைடு வெளியீட்டை குறைத்துக் கொள்வோம் என 2009 இல் உறுதி கூறிய அமெரிக்கா 0.3 விழுக்காடு அளவு தான் குறைத்துள்ளது.

இவ்வாறு எந்த முனையிலும் எள்ளளவு முன்னேற்றமும் இல்லாத நிலையில் இம் மாநாட்டில் பங்கேற்ற சீனா, இந்தியா உள்ளிட்ட 133 நாடுகளின் பேராளர்கள் இம் மாநாட்டில் பங்கேற்ற 150 தன்னார்வ அமைப்புப் பேராளர்கள் ஆக மொத்தம் 4700 பேரில் ஒருவர் விடாமல் 20.11.2013 அன்று வெளிநடப்பு செய்தனர்.

மறுபுறம் பிலிப்பைன்சு அமைச்சர் சானோ 10 ஆவது நாளாக தனது உண்ணாப் போராட்டத்தை உறுதியாக தொடர்ந்து கொண்டிருந்தார்.

இந்த இக்கட்டான சூழலில் 22.11.2013 மாநாட்டின் இறுதி நாள் பின்னிரவில் ஒன்றுக்கும் ஆகாத ஒரு தொளதொளப்பான ஒப்பந்தம் கையெழுத்தானது.இழப்பீடு குறித்த பொறி அமைவிற்கு அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் ஒப்புக் கொள்வதாக அறிவித்தன. எவ்வளவு நிதி என்பதை அடுத்த ஆண்டு இறுதியில் தென் அமெரிக்க நாடான பெருதலைநகர் லீமாவில் நடைபெறவுள்ள 20 ஆவது மாநாட்டிற்குள் தெரிவிப்பதாகவும் அனைத்து நாடுகளும் ஒத்துக் கொண்டு கலைந்தன.

கொள்கை அளவில் கோரிக்கை ஏற்கப்பட்டதாக சானோவிடம் வலியுறுத்தி அவரது உண்ணாப் போராட்டத்தை விலக்கிக் கொள்ள வைப்பதில் அனைத்து நாட்டுப் பேராளர்களும் வெற்றி கண்டனர் என்பதைத் தவிர வார்சாவில் சாதித்தது எதுவுமில்லை.

சுற்றுச் சூழல் இழப்பீடு நிதிக்கு அரசுகளை மட்டும் நாடாமல் தனியார் பெருமுதலாளி நிறுவனங்களையும் அழைக்கலாம் என்ற அமெரிக்காவின் முன் மொழிவின் மீதே அடுத்த மாநாட்டு விவாதங்கள் சுழலும் என்பதற்கான அறிகுறிகளும் இம்மாநாட்டிலிலேயே தெரிந்தன.

மொத்தத்தில் திக்குத் திசை தெரியாத பயணத்திற்கு உலகத்தை அழைத்து செல்வதாகவே பருவ நிலை குறித்த பன்னாட்டு மாநாடுகள் காலத்தைக் கழிக்கின்றன.

வரம்பற்ற தனி முதலாளி இலாபத்தையும், அடுத்த தலைமுறை குறித்துக் கவலைப்படாத நுகர்வு வெறியையும் அனுமதித்துக் கொண்டே தீர்வு தேடும் வரை பருவநிலை மாற்றம் குறித்து உறுப்படியான எந்த முடிவுக்கும் உலகம் வர முடியாது.

இயற்கையோடு இயைந்து செல்லும் சிறு உற்பத்தி முறையும், கொள்ளை இலாபத்தை அனுமதிக்காத நிகரமை நோக்கிய பொருளியல் அமைப்பும் நிறுவப்படாத வரை இச்சிக்கலுக்கு நிரந்தர தீர்வு ஏது மில்லை.

இந்த உண்மையை உணராமல் கண்ணை மூடிக்கொண்டு இருட்டு அறையில் கருப்புப் பூனையைத் தேடும் வேலையில் உலக நாடுகள் தொடரும் வரை வார்சாவைப் போல மாநாடுகளின் எண்ணிக்கைக் கூடுமே தவிர நடக்கப் போவது எதுவுமில்லை.

Pin It