மோசமானதொரு மன்னர் ஆட்சியை விடவும் கெடுபிடியான எதேச்சாதிகார ஆட்சியை ‘சனநாயக அரசி’ செயலலிதா நடத்திக் கொண்டிருக்கிறார்.

மன்னர் ஆட்சிக் காலத்தில் கூட மக்கள் தங்கள் குறைகளை நேரடியாக மன்னரிடம் கூற அரசவைக்குச் செல்ல முடியும். ஆளும் அரசரிடம் அல்லது அரசியிடம் குறைகளை நேரில் முறையிட்டு விவாதிக்க முடியும்.

தமிழக முதலமைச்சர் செயலலிதா ஆட்சியில் அதெற்கெல்லாம் வாய்ப்பில்லை. செயலலிதா காட்டிய வழியில் அவரது அதிகாரப் பரிவாரங்களும் காட்சிக்கு அரியோராய் ஆட்சி புரிவதே தங்களது வழியாகக் கொண்டுள்ளனர்.

கடந்த 800 நாட்களுக்கும் மேலாக கூடங்குளம் அணு உலையை எதிர்த்து இடிந்தகரையில் கடலோர மக்கள் வரலாறு காணாத அமைதி வழிப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். முனைவர் சுப. உதயகுமார் உள்ளிட்ட போராட்டக் குழுவினர் மீதும் போராடும் மக்கள் மீதும் 2000 க்கும் மேற்பட்ட வழக்குகள் புனையப்பட்டுள்ளன.

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டம் இந்திய அரசை எதிர்த்தே நடைபெறுகிறது. தேவையே இல்லாமல் தமிழகக் காவல்துறை அடிப்படையற்ற பொய் வழக்குகளை அடுக்கடுக்காக தொடுத்து வருவதை தடுத்து நிறுத்த, வழக்குகளைத் திரும்பப் பெறுமாறு வலியுறுத்த பல்வேறு கட்சிகளை உள்ளடக்கிய அனைத்து அமைப்பினர் முயன்றனர்.

இக் கோரிக்கைகளை மனுவாக அளித்து நேரில் பேச தமிழக அரசின் தலைமைச் செயலாளர் நேரம் ஒதுக்கித் தருமாறு மனித நேய மக்கள் கட்சித் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் தி.வேல்முருகன் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் தோழர் சீமான், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி உள்ளிட்டோர் கோரினர்.

அவ்வாறு நேரில் சந்திக்க நேரம் தருவதற்கு தலைமைச் செயலாளர் மறுத்துவிட்டார். அவரைப் போலவே காவல்துறைத் தலைவரும் மறுத்துவிட்டார். வேறு வழியின்றி கடந்த 17.09.2013 அன்று தமிழக உள்துறை செயலாளரை மட்டும் சந்தித்து இத் தலைவர்கள் கோரிக்கை விண்ணப்பம் அளித்துவிட்டு வந்தனர்.

அதிகாரிகளின் இம் முடிவு செயலலிதாவின் ஆட்சிமுறைக்கு ஒரு சான்று. அவரது கருத்து அறிந்துதான் இந்த அதிகாரிகள் இவ்வாறு நடந்துகொள்கிறார்கள்.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அலுவலகங்கள் நிறுவு வதற்காக அப்பல்கலைக் கழக நிலம் பறிக்கப்படுவதைக் கண்டித்து த.தே.பொ.க ஒருங்கிணைப்பில் பல்வேறு தமிழறிஞர்களும் பல்வேறு தமிழின உணர்வாளர்களும் போராடி வருகின்றனர்.

இச்சிக்கல் தொடர்பாக விண்ணப்ப மனு அளித்து பேச நேரம் ஒதுக்கித் தருமாறு கோரி சென்னைப் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் பொற்கோ தலைமைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பினார். கடிதம் அனுப்பி ஆறுமாதத்திற்கு மேல் ஆகியும் இன்றுவரை விடை இல்லை.

ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டு யாரும் எளிதில் சந்திக்க முடியாதபடி இரும்புத் திரை அமைத்துக் கொண்டு தந்தப் பல்லக்கில் உலாவருகிறார் செயலலிதா.

அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் கையில் பூங்கொத்தோடு தர்ம தரிசனத்திற்காக வரிசைக் கட்டிக் காத்து நிற்பது கோட்டையில் அன்றாடக் காட்சியாகிவிட்டது.

பொறுப்பான மக்கள் பேராளர்களை, அறிஞர்களை, சான்றோர்களைச் சந்திக்கவே மறுக்கும் ஆட்சியாளர்கள் அருவருப்பான எதேச்சாதிகாரர்களாகத்தான் இருக்க முடியும். தமிழ்நாட்டில் மக்களாட்சியின் பெயராலேயே இது நடக்கிறது.

இன்னொருபுறம் அரசுக்கு எதிராக நடத்தப்படும் அமைதிவழிப் போராட்டங்கள் பல நேரங்களில் செயலலிதா ஆட்சியின் அடக்குமுறையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் படம் வைத்தால் அக்கூட்டத்திற்குத் தடை, கோரிக்கைகளுக்காகப் போராடிய பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள், மற்றும் திருநங்கைகளுக்கு எதிரான ஈவு இரக்கமற்ற காவல்துறை தாக்குதல், ஆகியவை இதற்குச் சில சான்றுகள்.

 “இம் என்றால் சிறைவாசம், ஏன் என்றால் வனவாசம்” என்பது போல் தனக்கு எதிராக கருத்துக்கூறுவோர் மீது அரசு செலவில் அவதூறு வழக்கு போடுவதில் செயலலிதா ‘கின்னஸ்’ சாதனையே படைத்து வருகிறார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் கருணாநிதி, மு.க ஸ்டாலின், விஜயகாந்த் அவர் மனைவி பிரேமலதா, இராமதாசு உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மீதும் சன், கேப்டன் உள்ளிட்ட தொலைக் காட்சிகள் மீதும், ஜூனியர் விகடன், நக்கீரன், தி இந்து, டைம்ஸ் ஆப் இந்தியா, முரசொலி உள்ளிட்ட ஏடுகள் மீதும் சற்றொப்ப 130 அவதூறு வழக்குகள் தமிழக அரசின் சார்பில் தொடுக்கப்பட்டுள்ளன.

கோட்டைக்குச் செல்லாமல் மாதக்கணக்கில் கொடநாட்டில் முதலைமைச்சர் செயலலிதா தங்கி இருந்ததைக் குறிப்பிட்டு தி.மு.க தலைவர் கருணாநிதியும், பா.ம.க தலைவர் இராமதாசும் திறனாய்வு செய்து பேசியதற்காக அவர்கள் மீது அவதூறு வழக்கு.

தமிழகத்தில் காலரா பரவியிருக்கிறது என்று சொன்ன மு.க ஸ்டாலின் மீதும், அச்செய்தியை வெளியிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளேடு மீதும் அவதூறு வழக்கு. பெண் ஆளும் மாநிலத்தில் பெண்களுக் கெதிரானவன் முறை அதிகம் நடந்துவருவதற்கு காரணம் டாஸ்மாக் மதுக்கடைதான் என்று பேசியதற்காக தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மீதும், அதை ஒளிபரப்பிய கேப்டன் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவர் பிரேமலதா விஜயகாந்த் மீதும் அவதூறு வழக்கு. தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் மீது அவதூறு வழக்குப் போட்ட சாதனையாளர் செயலலிதா தான்!

முதலமைச்சர் செயலலிதா பங்கேற்ற விழாவில் தூங்கி வழியும் அமைச்சர்கள் படத்தை வெளியிட்டதற்காக தினமலர் நாளேட்டின் மீது அவதூறு வழக்கு, அந்நாளேட்டுக்கு வழங்கப்பட்ட அரசு விளம்பரம் நிறுத்தம், இது குறித்து கருணாநிதியின் கருத்தை வெளியிட்டதற்காக முரசொலி ஏட்டின் மீது அவதூறு வழக்கு. நெடுஞ்சாலையில் குடித்துவிட்டு வாகனம் ஒட்டுபவர்களின் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை என்ற செய்தி வெளியிட்டதற்காக டைம்ஸ் ஆப் இந்தியா மீது அவதூறு வழக்கு, தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து எடுக்கப்பட்ட “அங்குசம்” என்ற திரைப்படத்திற்கு வரி விலக்குத் தர அமைச்சர் கையூட்டு கேட்டதைக் கண்டித்து கருத்துக் கூறிய இயக்குனர் மனு கண்ணன் மீதும் அதை வெளியிட்ட நக்கீரன் இதழ் மீதும் அவதூறு வழக்கு என வாரம் தவறாமல் வழக்குகள் தொடுக்கப்படுகின்றன.

அப்பல்லோ மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தன் அவர்களைப் பார்க்கப்போன செயலலிதா, செருப்புடன் உள்ளே சென்றார். தீவிர சிகிச்சை அறைக்குள்  செல்வோர் செருப்பை வெளியில் விட்டுச் செல்வது மருத்துவத் தேவையாகும். செருப்பைக் கழற்றிவிட்டு வருமாறு செயலலிதாவைக் கேட்டுக் கொண்டார் அங்கிருந்த மருத்துவ வல்லுநர் கருணாநிதி. மறுநாள் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்; அரசு அதிகாரிகளைக் கடமையாற்ற விடாமல் தடுத்தார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு!

செயலலிதா ஆட்சிக்கெதிராக கூர்மையான திறனாய்வு வெளியிடும் சுவரொட்டிகளை அச்சிடக் கூடாது என அச்சகங்களுக்கு காவல்துறையின் வாய்மொழி ஆணை வழங்கப்பட்டுள்ளது. முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் காவல்துறை தலையீடு கூடிவருகிறது.

நடைமுறையில் ஒரு அவசர நிலை ஆட்சி செயலலிதா தலைமையில் நடந்து வருகிறது. ஒரு வாய்க்கால் மதகு திறப்பதாக இருந்தாலும், ஒரு பொதுக் கழிப்பிடம் திறப்பதாக இருந்தாலும் அ.இ.அ.தி.முக வினர் இரண்டு பானையில் குடிதண்ணீர் வைப்பதாக இருந்தாலும் அவை “அம்மா ஆணைக்கு இணங்க” நடைபெறுவதாக அறிவிக்கப்படும் அருவருக்கத் தகுந்த இழிநிலை ஓர் ஆட்சி முறையாகவே நிலைப்பெற்றுவிட்டது.

தமிழ்நாட்டு இளையோர் மற்றும் சனநாயக சக்திகள் இதனை நாள்தோறும் பார்த்து நகைத்து நகர்ந்து விடுவதும், அதுவே நாளடைவில் பழகி மரத்துப் போவதும் தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல. இதுதான் ஆளும் தலைவர் களுக்கு இயல்பு என்று சகித்துக் கொள்ளத் தொடங்கிவிட்டால் அடுத்துவரும் ஆட்சியாளர்கள் இதைவிடக் கேவல மான நடைமுறைகளை மக்கள் ஆட்சியின் பெயராலேயே உருவாக்கி விடுவார்கள்.

இத்தகைய ஆட்சி முறையையும் அரசியல் பண்பாட்டையும் எதிர்த்து சனநாயக நெறியையும், பண்பாட்டையும் நிலை நிறுத்த பொதுக் கருத்து உருவாவதும், போராட்டங்கள் வெடிப்பதும் தமிழ்நாட்டின் இன்றைய தேவை ஆகும்.

Pin It

தமிழீழம் தொடர்பான போராட்டங்களில் அடுத்த கட்டப் போராட்டம் என்ன என்பதைத் தமிழீழ மக்களும், தமிழ்நாட்டு மக்களும் முடி வெடுத்தாக வேண்டிய தருணமிது! ஒரு திருப்புமுனை தேவைப்படுகிறது.

இத்திருப்புமுனையின் முதல் தேவையாக, தமிழீழம் தொடர்பான கோரிக்கைகளில், தமிழ் ஈழத்தில் உள்ள தமிழர்களும் தமிழ்நாட்டில் உள்ள தமிழீழ ஆதரவு அமைப்புகளும் ஒரே நிலைபாட்டை எடுக்க வேண்டியது கட்டாயமாகிறது.

தமிழ்நாட்டில் தமிழீழம் குறித்த கருத்துகளைத் தங்கு தடையின்றியும், தடை வந்தாலும் சிறை சென்றும் பேசி வருகிறோம்; எழுதி வருகிறோம். இராணுவத் தால் முற்றுகையிடப்பட்டு - குடிமை உரிமைகள் மறுக் கப்பட்டுள்ள சூழ்நிலையில், ஈழத்தமிழர்கள் தங்கள் கருத்துகளை உரிமையுடன் வெளியிடும் வாய்ப்பு கள் மிகவும் குறைவு என்பதை நாம் அறிவோம். ஆனால் சம்பந்தர் தலைமையில் உள்ளோர் - தமிழ் நாட்டில் உள்ள தமிழீழ ஆதரவு இயக்கங்கள் ஒருமித்து எடுக் கும் நிலைபாடுகளுக்கு முரணாகப் பேசி வருகிறார்கள்.

எடுத்துக்காட்டாக, இலங்கையில் நடக்கும் பொது நலநாடுகள் மாநாட்டில் இந்தியா அறவே கலந்து கொள்ளக்கூடாது என்பது தமிழ்நாட்டில் எடுக்கப் பட்ட நிலை. ஆனால், முதலில் பொதுநல மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்து கொண்டு, ஈழத் தமிழர்களின் குறைகளைக் களையப் பேச வேண்டும் என்று சம்பந்தர் தலைமையில் உள்ள விக்னேசுவரன் அறிவித்தார் (2013 செப்டம்பர் - 21, டைம்ஸ் ஆப் இந்தியா).

தமிழ்நாட்டில் உள்ள இனத்துரோக ஆற்றல் களான காங்கிரசார், சி.பி.எம். கட்சியினர் மற்றும் சோ சுப்பிரமணிய சாமி போன்ற பார்ப்பன வெறியர்கள் விக்னேசுவரன் பேச்சை சாக்காக வைத்துக் கொண்டு, தமிழ்நாட்டுத் தமிழீழ ஆதரவு ஆற்றல்களைத் தாக்கு கின்றனர்.

ஈழத்தமிழர்கள் இலங்கைக் காமன்வெல்த்தில் இந்தியா கலந்து கொள்ள வேண்டும் என்று கோரும் போது, தமிழ்நாட்டில் உள்ளோர் எதிர்ப்பது- இங்குள்ள அரசியல் ஆதாயங்களுக்காகத் தான் என்று அவதூறு செய்கின்றனர் என்று அவர்கள் கூறினர்.

தமிழகம் கொடுக்கும் நெருக்கடி யைச் சமாளிப்ப தற்காக, “இலங்கை போவது பற்றி நான் இன்னும் முடிவு செய்யவில்லை’’ என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவிக்கிறார்.

இந்தியப் பிரமதரே இப்படி அறிவித்த பின், சம்பந்தர் குட்டிக் கரணம் போட்டு, இலங்கைக் காமன்வெல்த்தில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என்கிறார். (பி.பி.சி. இணையதளம் - தமிழ், 2013 அக்டோபர் 22).

அதாவது சம்பந்தர் வகையறா வினர் இந்திய அரசின் - விசுவாசி களாக நடந்து கொள்கிறார்களே தவிர, தங்கள் இனத்தைச் சேர்ந்த தமிழ்நாட்டு மக்கள் இயக்கங்கள் ஈழம் தொடர்பாக எடுக்கும் ஒரு மித்த நிலைபாட்டை ஆதரிப்ப தில்லை.

ஒருவேளை, காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்று கோருகிற கருத்துரிமை இலங்கையில் இல்லையென்றால், இது தொடர்பாக அமைதிகாக்க வேண்டுமேயன்றி “இந்தியா கலந்து கொண்டு எங்கள் சிக்கல்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டும்’’ என்று கூறக் கூடாது.

வடக்கு மாநிலத் தேர்தல் பரப்பு ரையின் போது, “இங்கு கணவன் மனைவிக்கிடையே நடக்கும் சண்டைபோல் சிங்களர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே சிக்கல்கள் உள்ளன. இதில் மூன்றாவது நபராகிய தமிழ்நாட்டினர் தலையிட்டு, மணமுறிவு (தனி ஈழம்) தான் தீர்வு என்று சொல்லக் கூடாது’’ என்று கூறினார்.

சம்பந்தரோ அல்லது விக்னே சுவரன், சுமந்திரன் உள்ளிட்ட அவரின் அணியினர் தமிழகத்தில் ஈழம் தொடர்பாக எடுக்கப்படும் சரியான - தேவையான நிலைபாடு களுக்கு முரணாகப் பேசும் போது, தமிழ் ஈழமக்கள் (வடக்கு, கிழக்கு மாநிலங்களின் மக்கள்) வெறும் பார்வையாளர்களாக இருக்கக் கூடாது. எந்தெந்த வடிவங்களில் முடியுமோ அந்தந்த வடிவங்களில் தங்கள் எதிர்ப்பை சம்பந்தர் அணியிடம் தெரிவிக்க வேண்டும்.

தமிழீழத்தில் பொதுக்கூட்டம் போட்டுத் தங்கள் நிலையை மக்கள் தெரிவிக்க முடியாது என்ற உண் மையை நாம் அறிவோம். வடக்கு கிழக்கு மாநில மக்கள் தங்களுக்குள் வீடுகளில், வீதிகளில், கோயில்களில், மக்கள் கூடும் பிற இடங்களில் சம்பந்தர் அணியின் தவறான அணுகுமுறைகளை விமர்சனமாகப் பேசிக் கொள்ள வேண்டும். அப்போது அக்கருத்து தமிழ்த் தேசியக் கூட்டணித் தலைமையை எட்டும். அங்கு வரும் தமிழ் நாளிதழ்களில் மாற்றுக் கருத்துகளை எழுத வேண்டும்; வெளியிட வேண்டும். நேரடியாக அத்தலைவர்களைச் சந்தித்து அவர்களின் கருத்துகளில் தங்களுக்கு உடன்பாடில்லை என் பதைத் தெரிவிக்க வேண்டும்.

2009 பேரழிவு முடிந்து நான் காண்டுகள் முடிந்து ஐந்தாவ தாண்டு நடந்து கொண்டுள்ளது. இராசபட்சே கும்பல் மீது பன்னாட்டுத் தலையீடுகள் கூடுதலாக வருகின்றன. அக்கும்பல் முன்னைப் போல் அதே பாணியில் தமிழினத் திற்கெதிரான சர்வாதிகாரத்தை நடத்த முடியாத அளவிற்கு சிறித ளவாவது தடங்கல்கள்கள் உருவாகியுள்ளன. இவ்வாறு உருவாகியுள்ள இந்த வெளியைத் திறமையாகப் பல்வேறு வடிவங்களில் தமிழ் ஈழ மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சம்பந்தர் - விக்னேசுவரன் அணியினர் தங்கு தடையின்றி இராசபட்சே கும்பலுக்கு சலாம் போட்டு, இந்தியாவுக்கு விசுவாசம் காட்டும் போக்கில் தடைக் கற்களைப் போட வேண்டும்.

தமிழீழ மக்கள் செயலற்று இருக்கக் கூடாது. இறுக்கமான காற்றழுத்தச் சூழலில் அதற்கேற்ப மூச்சுவிட முயல்வதைப் போல- இப்பொழுதுள்ள இக்கட்டான நிலையிலும் ஈழமக்கள் இச்சூழலுக் கேற்ற வடிவத்தில் செயல்பட்டாக வேண்டும். வெறும் பார்வையாளர் களாக இருக்கக்கூடாது. இச்செயல் பாட்டின் ஊடாகத்தான் சனநாயக வெளிக்கேற்ற புதிய தமிழீழ இயக்கம் பிறக்கும். இவ்வுணர்ச்சியைத் தடுக்க இலங்கை அரசு அடக்குமுறைகளை ஏவும்.

அவற்றை எதிர் கொள்ளவும் அதற்காக சிறைக்குச் செல்லவும் அணியமாக வேண்டும். ஆனால், சனநாயக வடிவங்களில் போராடும் மக்களை அரசின் அடக்குமுறை களால் முற்றிலுமாகத் தடுத்துவிட முடியாது. இப்புதிய மக்கள் திரள் இயக்கத்தின் இப்போதைய இலக்கு குடிமை உரிமை மீட்பாக இருக்க வேண்டும்.

குடிமை உரிமை மீட்பில் வேர் பிடித்து, மக்கள் ஆதரவைத் திரட்டிக் கொண்ட பின், குடிமை உரிமை மீட்பின் நீட்சியாக, ஐ.நா. மேற்பார்வையில் கருத்து வாக் கெடுப்பு கோர முடியும்.

ஆனால், சம்பந்தர் அணியைத் திருத்த முடியாது என்ற கசப்பான உண்மையை தமிழீழத் தமிழர்கள் உணர்ந்தாக வேண்டும். அவ்வணி எதிரியிடம் சரணாகதி அடை வதைத் தனது “இராசதந்திரம்” என்று வர்ணித்துக் கொண்டு அடிமை அரசியல் நடத்திக் கொண் டிருக்கும்.

புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழர்கள், தங்களை ஒரு குடிமை உரிமை மீட்பு அமைப்பாக இன்னும் ஒருங்கிணைத்துக் கொள்ள வில்லை. 2009 பேரழிவிற்குப் பின் நான்கரை ஆண்டுகள் கடந்து விட்டன. ஆண்டு தோறும் மாவீரர் நாளில் கூடுவதும், அமைதி வணக் கம் செலுத்துவதும் மட்டும் போது மா? அது அமைப்பு வடிவம் பெற வேண்டாமா? புலம் பெயர்ந்த நாடுகளில் எத்தனை குழுக்கள்?

அவ்வப்போது ஏற்படும் நிகழ் வுகளின் எதிர்வினையாகக் கூடிக் கலைந்தால் போதாது. அமைப்பாக வேண்டும். புலம் பெயர்ந்த நாடுகளில் ஏன் அமைப்பாக முடிய வில்லை?

அரசியல் போராட்டம், அமைப்பு, இயக்கம் ஆகிய துறை களில் ஈழத்தமிழர்களுக்குக் கிடைத் துள்ள பட்டறிவை விட உலகில் வேறு யார்க்குக் கிடைத்திருக்கிறது? ஈழத்தமிழர்களை விட அறிவு நுட்பம் வாய்ந்த, ஈகத்திற்கஞ்சாத வேறொரு இனம் உண்டா? இவை அனைத்தையும் பயன்படுத்தி, தமிழ் ஈழத்திலும், புலம் பெயர்ந்த நாடுகளிலும் புதிய சூழலுக்கேற்ற அமைப்பை உருவாக்க வேண்டும்.

அமைப்பு வடிவம் பெறாத சமூகம் தலைமை இல்லாத சமூகம் ஆகும்; சரியான தலைமையில்லாத சமூகம் சர்வாதிகாரிகளின் வேட்டைக்காடு மட்டுமல்ல, சந்தர்ப்ப வாதிகளின் வேட்டைக்காடும் ஆகும்.

தமிழ்நாடு

ஈழத்தமிழர்களுக்காகத் தமிழ் நாட்டுத் தமிழர்கள் எண்ணில டங்கா ஈகங்கள் புரிந்திருக்கி றார்கள்; உயிரிழப்புகள், உடைமை இழப்பு, வேலை இழப்பு, சிறை வாழ்வு என ஏராளமாக ஈகம் செய்துள்ளார்கள். ஈழ ஆதரவுக் கட்சி களும் இயக்கங்களும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்காகப் போராடியதை விட ஈழத்தமிழர்களுக்காகப் போராடியதே அதிகம். 1983லிருந்து கணக்கெடுத்தால் இந்த உண்மைகள் விளங்கும்.

இத்தனை ஈகங்களால், போராட்டங்களால், ஈழத்தமிழர்களுக்குத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் சாதித்தது என்ன? சொல்லிக் கொள்ளும் படியான சாதனை எதுவுமில்லை. 2009-இல் ஈழத்தில் போர் நிறுத்தம் கொண்டு வர முடிய வில்லை. போர் நிறுத்தம் கொண்டு வரும் வகையில் இந்திய அரசுக்குத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் போராட்டம் நெருக்கு தல் நடத்தவில்லை; கொடுக்க வில்லை.

இப்பொழுது, ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் அமெரிக்கா - இலங்கை அரசுக்கு எதிராகக் கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் நிலைக்குத் தள்ளியுள்ளோம் என்று கூறிக் கொள்ளலாம். ஆனால், அமெரிக்கத் தீர்மானம் இலங்கையின் மீது பன்னாட்டுப் புலனாய்வு வந்து விடாமல் தடுக்கும் மதில் சுவர் என்பதே நடைமுறை உண்மை. எனவே, இத்தீர்மானத்தை ஆதரித்த தன் மூலம், இந்தியாவின் இலங்கை ஆதரவுக் கொள்கை அப்படியே நீடிக்கிறதே தவிர, மாறிவிட வில்லை.

2008 -2009-இல் இலங்கை அரசு நடத்திய தமிழின அழிப்புப் போரில், இந்தியா படை, பணம், பன்னாட்டு ஆதரவு திரட்டித் தருதல் என்பன போன்ற பல வகையிலும் பங்கெடுத்தது. இன்றும் பன்னாட்டுப் புலனாய்வு மன்றம் சிங்கள அரசு மீது அமைத்திடாமல் பாதுகாப்பதில் இந்தியாவின் பங்கு முகா மையானது.

இப்பொழுது இலங்கையில் பொதுநலநாடுகள் மாநாடு நடை பெறாமல் தடுப்பதில் தொடங்கி, குறைந்த அளவாக, இந்தியா அதில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க வேண்டும், அதிலும் குறைந்த அளவாக பிரதமராவது அதில் கலந்து கொள்ளாமல் இருக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுக் காகப் போராட்டங்கள் தமிழகத் தில் நடக்கின்றன. எமது தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும், இப்போராட்டங்களில் பங்கு கொண்டு வருகிறது.

பொதுநலநாடுகள் மாநாட்டில் இந்தியா பங்கு கொள்ளவில்லை என்றால், சிங்கள அரசுடன் இந்தியா கொண்டுள்ள உறவில் மாற்றம் வந்ததாக எடுத்துக் கொள்ள முடியுமா? முடியாது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் தமிழக மக்களின் வாக்குகளை இழந்துவிடக்கூடாது என்பதற்காக நயவஞ்சக நாடகமாடி, கொழும்பு மாநாட்டில் கலந்து கொள்ளாமல் இருக்கலாம். அல்லது பிரதமர் கலந்து கொள்ளாமல் இருக்கலாம். அவ்வாறு நடந்தால் அது ஏமாற்று உத்தி தவிர, இலங்கையின் மீது இந்தியாவின் கொள்கை மாறியதன் அடையாளம் அன்று. தமிழீழத் தமிழர்களுக்கு நீதிபெற்றத் தர இந்தியா முன்வந்து விட்டதாகக் கருத முடியாது.

இந்தியாவின் இலங்கைக் கொள்கை - சிங்கள ஆதரவு-- தமிழின எதிர்ப்பு என்ற வரலாற்று அடிப்படையில் அமைந்தது. இன வரையறுப்பு - இன அணுகுமுறை ஆகிய வற்றின் மீது கட்டி எழுப்பப் பட்டுள்ளது. இந்தக் கமுக்கத்தை அண்மையில், இலங்கையின் இந்தியத் தூதர் கரியவாசம் போட்டு உடைத்து விட்டார்.

இலங்கையில் உள்ள தமிழர் களையும், இந்தியாவில் உள்ள தமிழர்களையும் தவிர்த்த மற்ற எல்லாரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றார். அதாவது ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றார்.

பாரதிய சனதாக் கட்சித் தலைவர் அத்வானியும் அவரது இணை யத்தளத்தில், அண்மையில் அதே கருத்து வெளியிட்டிருந்தார். இலங்கையிலும், இந்தியாவிலும் ஒரே இனத்தவர்தாம் உள்ளனர். எனவே, இலங்கை இந்திய ஒற்றுமையைப் பிரிக்க முடியாது என்றார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள இந்த ஆரிய இனப்பிணைப்பைத் தமிழ்நாட்டில் ஈழமக்களுக்காகப் போராடும் பல அமைப்புகள் புரிந்து கொள்ள வில்லை. ஆரியக் கொள்கையில் பா.ச.க.வுக்கும் காங்கிரசுக்கும் இடையில் வேறுபாடில்லை என்ற அடிப்படை உண்மையையும் தமிழ கத்தின் ஈழஆதரவு பல அமைப்பு கள் அறியவில்லை; அல்லது அவ்வாறு அறிந்து கொள்ள விரும்பவில்லை.

காங்கிரசு - பா.ச.க மட்டுமின்றி வடஇந்தியத் தென்னிந்தியக் கட்சி கள், மனித உரிமை அமைப்புகள் ஆகியவையும் சிங்கள இன ஆதரவு, தமிழின எதிர்ப்பு அல்லது தமிழினப் புறக்கணிப்பு என்ற அணுகு முறையை வெவ்வேறு அளவுகளில் அழுத்தங்களில் கொண்டுள்ளன. இந்தக் கட்சிகள் கடந்த மார்ச்சு மாதம், இந்திய நாடாளுமன்றத்தில் “இலங்கையில் நடந்தது இனப் படுகொலை’’ என்ற தீர்மானம் போட முடியாது என்று மறுத்து விட்டன. இப்போதும் இந்தக் கட்சிகள், இலங்கையில் பொதுநல நாடுகள் மாநாடு நடக்கக் கூடாது என்று கூறவில்லை. மனித உரிமைப் போராளிகளான அருந்ததிராய், மேதாபட்கர் போன்றவர்கள் கூட இக்கோரிக்கையை எழுப்பவில்லை.

இந்தியாவில் தமிழினத்திற் கெதிராக உள்ள இந்த இனப்பாகு பாட்டைப் புரிந்து கொள்ளாத தமிழர்கள், புரிந்துக் கொண்டாலும் அதை வெளிப்படுத்த விரும்பாத தமிழர்கள் ஈழத்தமிழர்களின் விடிவுக்காக எந்த அளவுக்குப் போராடிட முடியும்? அடையாளப் போராட்டங்களும் தங்களை அடையாளப் படுத்திக் கொள்ளும் போராட்டங்களும் மட்டுமே அவர்களால் நடத்த முடியும்!

தமிழர்களுக்கும் கன்னடர்களுக்குமான காவிரிச் சிக்கலில்- தமிழர்களுக்கும் மலையாளிகளுக் குமான முல்லைப் பெரியாறு அணைச் சிக்கலில், - தமிழர்களுக்கும் தெலுங்கர்களுக்குமான பாலாற்றுச் சிக்கலில், - தமிழர்களுக்கும் சிங்களர்களுக்குமான கச்சத்தீவு மற்றும் மீன்பிடிப்புச் சிக்கலில் இந்திய அரசும், இந்தியாவின் இதர அரசியல் கட்சிகளும் என்றாவது நடுநிலை வகித்து, நீதி சொன்ன துண்டா? இல்லை. இந்தியாவுக்குள் பன்னாட்டு அநாதைகளாகக் கிடக்கும் தமிழர்களின் அவலத்தை உணராத, உணர்ந்தாலும் அதை வெளிப்படுத்தாத, தமிழ்நாட்டுக் கட்சிகளும், அமைப்புகளும் ஈழத் தில் நடைபெறும் தமிழர்களுக் கெதிரான இனப்பாகுபாட்டைத் தடுக்கப் போகிறோம் என்றால் அதில் எந்த அளவு உண்மை இருக்கும்? எந்த அளவில் அதில் வெற்றி பெற முடியும்?

தமிழ்நாட்டின் மொத்த வணி கத்தை ஏற்கெனவே மார்வாடி- குசராத்தி சேட்டுகள் கைப்பற்றி விட்டார்கள். இப்போது அவர்கள் தமிழக சில்லறை வணிகத்தையும் கைப்பற்றிக் கொண்டுள்ளார்கள். மார்வாடி - குசராத்தி சேட்டுகளின் புதிய பங்காளிகளாக இணைந்து மலையாளிகள் தமிழக வணிகத்தைக் கைப்பற்றிக் கொண்டுள்ளார்கள். நிதி நிறுவனங்களில் மலையாளிகள் கோலோச்சுகிறார்கள்.

மார்வாடி - குசராத்தி சேட்டுகள் சென்னை சௌக்கார்பேட்டையில் கொற்றம் நடத்துகிறார்கள் என் றோம். இது பழைய கதை, இப் போது சென்னையில் பல சௌக் கார் பேட்டைகள் உருவாகிவிட் டன. புரசைவாக்கம் கெல்லீஸ் பகுதியில் அடுக்குமாடி வீடுகளைக் கட்டிக் கொண்டு தமிழர்களுக்கு வாடகைக்கு தரமுடியாது என்று பகிரங்கமாகக் கூறுகிறார்கள். மனைவணிகத்தில் கோலோச்சும் மார்வாடி - குசராத்தி சேட்டுகள்- தமிழரல்லாத குடியிருப்புகளை தமிழகமெங்கும் உருவாக்கி வருகிறார்கள். ஏராளமாக நிலங்களை வாங்கிப் போட்டுள்ளார்கள். அவர்களுக்கு அடுத்த நிலையில் மலையாளிகள் ஆக்கிரமிப்பு உள்ளது.

வடமாநிலங்களிலிருந்து அன்றாடம் பல்லாயிரம் பேர் வந்து தமிழ கத்தில் குவிகிறார்கள். குக்கிராமங் களிலும் வெளி மாநிலத்தவர்கள் ஏராளமாகக் குடியேறி விட்டார் கள். இந்த வேகத்தில் அயலார் குடியேற்றம் போனால் அடுத்த பத்தாண்டுகளில் தமிழகம் தமிழர் தாயகமாக இருக்காது. வேற்றினத் தார் தாயகமாக மாறிவிடும்.

தமிழகத்தில் சூறாவளிக் காற்று போல் அயலார் தொழில், வணிக குடியேற்ற ஆக்கிரமிப்பு நடைபெறுகிறது. இதைக் கண்டு கொள்ளாத கட்சிகளும் அமைப்புகளும் ஈழத்தில் நடைபெறும் சிங்களக் குடி யேற்றங்களைத் தடுக்கப் போராடுகிறோம் என்றால் அதில் எந்த அளவு உண்மை இருக்கும்? அது வெறும் அடையாளப் போராட்ட மாகத்தானே அமையும்?

எமது தமிழ்த் தேசப் பொதுவு டமைக் கட்சி தமிழகத்திலிருந்து வெளியாரை வெளியேற்ற வேண் டும் என்று போராடுகிறது. மொழி அடிப்படையில் தமிழர் தாயகமாக தமிழ்நாடு அமைக்கப்பட்ட 1956 நவம்பர் 1-க்குப் பிறகு தமிழ்நாட்டில் குடியேறிய அனைத்து வெளி மாநிலத்தவரையும் வெளிநாட்டி னரையும் வெளியேற்ற வேண்டும் என்கிறது த.தே.போ.க. தமிழகத்தில் புதிதாக வந்து குவிந்துள்ள வெளி மாநிலத்தவர் யாருக்கும் வாக்காளர் அடையாள அட்டையோ, குடும்ப அட்டையோ வழங்கக் கூடாது என்று இயக்கம் நடத்துகிறது. தமிழகக் கட்சிகளும் அமைப்புகளும் தமிழகத்தில் நடைபெறும் அயலார் ஆக்கிரமிபிற்கெதிராக ஏன் குரலெழுப்பவில்லை?

கடந்த ஆண்டு காவிரி நீரை முற்றாகத் தடுத்து வைத்துக் கொண்டது கர்நாடகம். அந்த அநீதிக்குப் பக்க வலுவாகச் செயல்பட்டது இந்திய அரசு. தமிழகத்தில் பல மாவட்டங்களில் பதினாறு இலட்சம் ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்திருந்த பயிர்கள் காய்ந்து சருகாயின. மேலும் பல இலட்சம் ஏக்கர் நிலங்கள் தரிசாகப் போடப்பட்டன. இந்த அநீதியை- அவலத்தை எதிர்த்துத் தமிழகம் தழுவியப் போராட்டத்தை யாரும் நடத்த வில்லையே ஏன்? காவிரி டெல்டா மாவட்டங்களில் உழவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். அதன் பின்னர் கூட தமிழகம் தழுவிய போராட்டங்கள் வெடிக்க வில்லை. டெல்டா மாவட்டங்களில் வட்டார அளவில் போராட் டங்கள் நடத்தப்பட்டன. கண்முன்னே நடந்த தமிழகத் தமிழர்களின் துயரங்களும் - தற்கொலைகளும் தமிழகக் கட்சிகளையும் அமைப்புகளையும் தமிழகம் தழுவிய அளவில் கட்டி எழுப்ப வில்லை என்றால் - இவை ஈழத் தமிழர்களுக்காக நடத்தும் போராட்டங்கள் அடையாளப் போராட்டங்களாக அமையாமல் - இந்திய அரசைப் பணிய வைக்கும் போராட்டங்களாகவா அமையும்?

தமிழக முதலமைச்சர் செயலலிதா மிகத் துணிச்சலாகத் தமிழகப் பள்ளிக் கல்வியில் தமிழ் மொழியை வெளியேற்றும் திட்டத்தை அறிவித்துச் செயல்படுத்தி வருகிறார். நடப்புக் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் +2 வரை ஆங்கிலப் பயிற்று மொழி வகுப்பு களைத் தொடங்கியுள்ளார். தமிழக மெங்கும் இது முழுமையாகச் செயல்படுத்தப்பட உள்ளது. இத் திட்டம் முழுமையடைந்து விட்டால் தமிழ்நாட்டிலிருந்து தமிழக அரசே தமிழை வெளியேற்றி விட்டதாக அமையும் இந்தக் கொடுமையை, - இனத்தின் மொழி அழிப்பை எதிர்த்துத் தமிழகம் தழுவிய போராட்டங்கள் தமிழ் நாட்டில் நடைபெற வில்லையே ஏன்? தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் சார்பில் வரம்பிற்குட்பட்ட சில போராட்டங்கள் மட்டும்தானே நடந்தன? தமிழ் மொழியை வெளியேற்றும் செயலலிதா அரசின் தமிழின எதிர்ப்புத் திட்டத்தை எதிர்த்துத் தமிழகம் தழுவிய அளவில் வீதிக்கு வராத கட்சிகளும் அமைப்புகளும் தனிநபர்களும் தமிழ் ஈழத் தமிழர்களின் உரிமையை மீட்டிட என்ன செய்துவிட முடியும்?

ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல ஒரு புள்ளி விவரம் வெளியாகியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் 161 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் தமிழ்வழிப் பிரிவுகள் இல்லை. 28 நடுநிலைப் பள்ளிகளில் 1-ஆம் வகுப்பில் தமிழ் வழி வகுப்புகள் இல்லை.

நிறைவாக...

ஈழத்தமிழர்களிடையேயும் தமிழகத் தமிழர்களிடையேயும் உள்ள குறைபாடுகளை, வலுவின்மைகளை (பலவீனங்களை) ஓரளவு பார்த்தோம். இந்தத் திறனாய்வு அடிப்படையில் இனிச் செய்ய வேண்டியவற்றைச் செய்ய முனைய வேண்டும்.

தமிழீழத் தமிழர்கள்

1. தமிழீழத்தில் புதிய சூழலுக் கேற்ற முறையில் - புதிய சனநாயக அமைப்பொன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதற்குத் தேவைப்படும் ஈகத்தைச் செய்தாக வேண்டும். ஆயுதப் போராட்ட வடிவம் இப்போதைய உடனடித் தேவை அன்று.

இந்திய - இலங்கை அரசுகளின் கங்காணித் தலைமையாக உள்ள சம்பந்தர் வகையறாக்களின் தலைமையைப் புறந்தள்ள வேண்டும்.

தமிழீழத்தில் புதிதாக உருவாக்கப்படும் சனநாயக அமைப்பின் தலைமையை ஏற்றுப் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் ஒருங்கிணைய வேண்டும்.

2. தமிழீழத் தமிழர்கள் இலங்கை அரசை மட்டுமின்றி இந்திய அரசையும் தங்களது இனப்பகை அரசாக வரையறுக்க வேண்டும். இந்திய அரசின் மூலமாக ஈழ உரிமைகளை மீட்க முடியும் என்று இனியும் கருதினால், ஈழத் தமிழர்களை வரலாறு நிரந்தரமாகக் கைவிட்டுவிடும் என்பதை உணர வேண்டும்.

தமிழகத் தமிழர்கள்

1. ஈழத்தமிழர்களின் உரிமைகள் மீட்பிலும் தமிழ் ஈழ விடுதலையிலும் அடித்தள ஆற்றலாகவும் முதன்மை ஆற்றலாகவும் உள்ள மக்கள் ஈழத்தமிழர்களே அன்றி, தமிழ்நாட்டுத் தமிழர்கள் அல்லர்.

தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஈழத் தமிழர்களின் உண்மையான உருப்படியான ஆதரவு ஆற்றல்களாக மட்டுமே செயல்பட முடியும்.

ஈழவிடுதலைக்காகத் தமிழ் நாட்டில் இயக்கம் நடத்துகிறோம் என்று யார் சொன்னாலும் அவர்கள் ஈழத்தமிழர்களையும் ஏமாற்றுகிறார்கள், தமிழகத் தமிழர்களையும் ஏமாற்றுகிறார்கள் என்ற உண்மையை அறிந்து கொள்ள வேண்டும்.

2. தமிழ்நாட்டுத் தமிழர்களின் உரிமைகள் - சிக்கல்கள் ஆகியவற்றின் தீர்வுக்காகப் போராடித் தமிழ்நாட்டு மக்கள் ஆதரவை அடித்தளமாகக் கொண்டு செயல்படும் கட்சி அல்லது அமைப்பே தமிழ்நாட்டில் வளரும். அவ்வாறு வளர்ந்து தமிழக மக்களின் பாதுகாப்புப் படை போல் விளங்கும் தமிழக அமைப்பே, ஈழத் தமிழர்களின் துயர்துடைக்கவும் அவர்களின் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் உருப்படியான துணை ஆற்றலாய் விளங்கமுடியும்.

3. இந்திய அரசு இனப்பகை அரசு என்பதை வரலாற்று வழிப்பட்ட உண்மையை உணர்ந்து அதனடிப் படையில் தமிழகத் தமிழர்கள் கொள்கை வகுக்க வேண்டும். அப்படிப்பட்ட அமைப்புகளையே ஏற்க வேண்டும், ஆதரிக்க வேண்டும்.

மேற்கண்ட அடிப்படையில் செயல்பட்டால் தமிழீழத் தமிழர்களுக்கும் தமிழகத் தமிழர்களுக்கும் வரலாற்றின் வாயில் திறக்கும்.

Pin It

எதிர்காலச் சமூகத்தைக் கட்டமைக்கும் மிகப் பெரிய பொறுப்பைக் கொண்ட “குழந்தை வளர்ப்பு’’ கடந்த சில ஆண்டுகளாகக் கடுமையான மேற்கத்தியத் தாக்கத்திலும், உலகமயத்தின் நுகர்வுப் பண்பாட்டுச் சீரழிவிலும் சிக்கியிருக்கிறது.

இளம் பெற்றோர்களின் குழந்தை வளர்ப்பு முறையில் அறியாமையின் காரணமாகவும், பொறுமை யின்மை மற்றும் நேரமின்மை உள்ளிட்ட அவசரப் போக்கின் காரணமாகவும் நம் மண்ணுக்குரிய மரபுகளை மறந்து வருகின்றனர். மேற்கத்திய முறையை பின்பற்றுகின்றனர். அதனால் பிறந்த குழந்தைகளுக்கு உளவியலாகவும் உடலியலாகவும் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன.

கூட்டுக்குடும்ப அமைப்பு முறை சிதறிப் போனபிறகு வீட்டில் அனுபவம் வாய்ந்த பெரியவர்கள் இல்லாமல் போனதால் மிகப் பெரிய அளவில் ஏற்பட்ட பாதிப்பு பச்சிளம் குழந்தை வளர்ப்பில் தான். (“பெரியவர்கள்’’ என்று இங்கே குறிப்பிடுவது இன்றைய இளம் பெற்றோர்களின் தாத்தா- பாட்டிகளை- பிறந்த குழந்தைகளின் தாத்தா- பாட்டிகளை அல்ல)

தாய்மொழித் தமிழைவிட ஆங்கிலத்தை உயர்வாகக் கருதும் போன தலைமுறை பெற்றோர்களின் வளர்ப்பில் வளர்ந்த இன்றைய இளம் பெற்றோர்கள் வளர்க்கும் குழந்தைகள் “பிராய்லர் கோழிகளைப்’’ போல வளர்க்கப்படுகிறார்கள். ஒவ்வொரு குறிப்பிட்ட மாதத்திலும் ஒரு குறிப்பிட்ட எடைக்குக் குழந்தைகள் வளர்க்கப்படவேண்டும் என்பதே இன்றைய பெரும் பாலான இளம் பெற்றோர்களின் குறிக்கோள் மற்றும் சவால்.

குழந்தை எவ்வளவு நேரம் தூங்க வேண்டும், ஒரு நாளைக்கு எத்தனை முறை - எவ்வளவு நேரம் பால் குடிக்க வேண்டும், எத்தனை முறை சிறுநீர் - மலம் கழிக்கவேண்டும், சிறுநீரும் - மலமும் என்ன நிறத்தில் தன்மையில் இருக்க வேண்டும், எத்தனை முறை எவ்வளவு நேரம் அழவேண்டும் என்பது வரை குழந்தையின் அசைவுகள் அனைத்தையும் பட்டியல் போட்டுக் கொடுக்கிறது ஆங்கில மருத்துவம். இதில் சிறு பிசகு ஏற்பட்டாலும் பெற்ற மனது பதறித்துடித்து உடனடியாக மருத்துவரை நாடுகிறது.

“அழ அழத்தான் பிள்ளை ஊறும்’’ என்பதும் “அழுத பிள்ளை தான் பால் குடிக்கும்’’ என்பதும் காலங்காலமாகச் சொல்லப்பட்டு வந்து இப்போது மறந்து போன நம்மூர் பழமொழிகள். இப்போது, குழந்தை தூங்கிக் கொண்டிருந் தாலும் இரண்டுமணி நேரத்துக் கொருமுறை அதை எழுப்பி கட்டாயமாகப் பால் கொடுத்து, இப்படிப் பசியில்லாமல் கொடுத்த பால் செரிப்பதற்காக என்று சொல்லி “கிரைப் வாட்டர்’’ கொடுப்பதும் வாடிக்கையாகிப் போய்விட்டது.

இன்னொருபுறம் ஒரு முறையில் 20 நிமிடங்கள் வரைதான் பால் கொடுக்கலாம் என்பதும் மருத்துவ அறிவுரையாக இருப்பதால் கூடுதல் பசியில் குழந்தை அழும்போது வலுக்கட்டாயமாகப் பால் மறுக்கப் பட்டு குழந்தையின் வாய் ரப்பர் வைத்து அடைக்கப்படுவதும் சத்தமில்லாமல் நடந்து கொண்டு தான் உள்ளது.

பசியில்லாமல் பால் திணிக்கப்படும் போது செரிமானப் பிரச்சினையும், வயிற்றுக்கோளாறுகளும், கக்கலும், வயிற்றுப்போக்கும் ஏற்படுவது தவிர்க்கமுடியாத தாகிறது.

“குறைந்தது ஆறுமாதம் வரை வெறும் தாய்ப்பால் மட்டுமே குழந்தையின் உணவாக கொடுக்கப் படவேண்டும். தண்ணீர் கூட கொடுக்கத் தேவையில்லை என்கிற அளவுக்குத் தாய்ப்பாலில் அத்தனை சத்துகளும் மிகுதியாக உள்ளன,’’ என்று சொல்லிக் கொண்டே மருந்துச் சீட்டில், “காலையில் 3 சொட்டு மல்டி வைட்டமின் டிராப்ஸ் - மதியம் 3 சொட்டு கால்சியம் டிராப்ஸ் - இரவில் 3 சொட்டு அயர்ன் டிராப்ஸ்’’ என்று எழுதுகிறார் மருத்துவர். “இந்தச் சத்துகள் எனது தாய்ப்பாலில் இல்லையா?’’ என்று எதிர்க்கேள்வி கேட்காமல் மருத்துவர் சொல்லை வேதமெனக் கடைப்பிடிக்கிறார்கள் இன்றைய இளம் தாய்மார்கள்.

தாய் உண்ணும் உணவின் தன்மை அவரது தாய்ப்பாலில் இருக்கு மென்பதால்தான் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் காலம்வரை தாயின் உணவில் பத்தியம் காக்கப்பட்டது நம் மரபில். குறைந்தது ஒரு மாத காலம் வரை தண்ணீர் கூட தாய்க்கு அளந்து அளந்துதான் கொடுப்பார்கள் அந்தக் காலத்தில். எடுத்துக்காட்டாக பூண்டு, இஞ்சி போன்றவை தாயின் உணவில் அதிகம் சேர்க்கப்படும்.

ஆனால் இப்போது குழந்தை பிறந்த அடுத்த நொடியே ஹார்லிக்ஸ் தொடங்கி பீட்ஸா வரை (மருத்துவரின் அனுமதியின் அடிப்படையில்) அனைத்தும் தாய்மார்களின் உணவாகிப் போகிறது. அதிகம் பால் சுரப்பதற்காக சுறாப் புட்டும், நாட்டுக்கோழி சூப்பும், பூண்டுக் குழம்பும் தாய்க்கு உணவாகக் கொடுத்த காலம் மாறி, “கேலக்ட்’’ (galact) போன்ற பவுடர் களைப் பாலில் கலந்து குடித்தும் ”டொமிரிடோன்’’ (domperidone) போன்ற மாத்திரைகளை உட் கொண்டும் பால்சுரப்பு செயற்கையாகத் தூண்டப்படுகிறது.

குழந்தைகள் தூக்கத்தில் சிறுநீர் கழிப்பதும், ஈரம்பட்டவுடன் தூக்கம் கலைந்து எழுந்திருப்பதும் இன்று நேற்றல்ல காலங்காலமாக நடந்து கொண்டிருக்கும் பழக்கம். ஒருவேளை தூக்க அசதியில் குழந்தை ஈரத்தில் தூங்கினாலும் கூட ஈரத்தை அப்புறப்படுத்தி படுக்கைச் சூழலை மாற்ற வேண்டியது தாயின் பொறுப்பாக இருந்த காலம் மாறிவிட்டது “டயாபர்’’ என்கிற பெருவரத்தினால். இரு பத்து நான்கு மணி நேரமும் டயாபர் போட்ட குழந்தைகளை இன்று அதிகம் பார்க்க முடிகிறது.

தொடர்ந்து டயாபர் அணிவித்து விடும்போது ஆசனவாய்ப் பகுதி மற்றும் அரையிடுக்குகளில் காற்றோட்டம் தடைபடுகிறது. இதனால் தோல்வறட்சி, தோலில் அரிப்பு, புண் போன்றவை ஏற்படும் என்பது பெரும்பாலும் எல்லோரும் அறிந்த பொதுவான பிரச்சினைகள். இதைவிடக் கொடுமையாக டயாபர் தயாரிப்பில் சேர்க்கப்படும் TBT என்ற வேதிப் பொருள் குழந்தை களின் பாலுணர்வு சுரப்பிகளில் (Sex harmones) பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை என்ற உண்மை எத்தனை அம்மாக்களுக்குத் தெரியும்.

குழந்தைக்கு ஐந்து மாதங்களானதுமே தினமும் காலையில் கால் இடுக்கில் குழந்தையை உட்காரவைத்து மலம் கழிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திய காலத்தை நவீன டயாபர்களில் வேகமாகத் தொலைத்து வருகிறோம்.

எத்தனை முறை மலம் கழித்தாலும் சுத்தமான வெது வெதுப்பான நீர் கொண்டு கழுவி விடுவதையே ஆரோக்கியம் என்று சொல்கிறது நமது மரபு. ஆனால் இன்றோ நீர் கொண்டு கழுவத் தேவையில்லை என்ற நிலைக்கு மாறிவிட்டோம். “பேபி வைப்ஸ்” என்று மிதமான ஈரத்துடன் இலேசான மணத்துடன் பயன்படுத்தித் தூக்கியெறியும் மென்மையான காகிதத் துடைப்பான்களைத் தான் பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள். இதற்காக மட்டுமல்ல தும்மும் போதோ, கக்கலெடுக்கும் போதோ, சாதாரணமாக முகம் துடைக்கவோ, உடல் துடைக்கவோ, வியர்த்தால் துடைக்கவோ கூட இந்தத் துடைப் பான்கள் தான் பயன்படுத்தப் படுகின்றன.

பாட்டிமார் குழந்தையைக் குளிப்பாட்டுவதே ஒரு தனிக் கலை - அழகு, மிகவும் நளினமான செயல். காலை எழுந்ததுமே உச்சிமுதல் பாதம் வரை எண்ணையால் வருடி விட்டு இளவெயிலில் கொஞ்ச நேரம் கிடத்தி, பின் இளஞ்சூடான தண்ணீர் கொண்டு கை கால்களை நன்றாக நீவிவிட்டு தன் கால்களில் குழந்தையைக் கிடத்திக் குளிப்பாட்டியபின் சாம்பிராணிப் புகை போடுவது நமது மரபில் உண்டு.

எத்தனை விலைஉயர்ந்த “அறை வாசனையூட்டிகளாலும்’’ (room freshners) உருவாக்கிட முடியாத இனிமையான, மனதுக்கு அமைதியான, சூழலைக் குழந்தைக்கு சாம்பிராணிப் புகை ஏற்படுத்திக் கொடுக்கிறது.

இன்று இத்தனையையும் செய்ய ஆங்கில மருத்துவர்கள் தடைவிதித் திருக்கிறார்கள். குளிப்பதற்கென்றே விற்கப்படும் “டப்பு’’களில் (TUB) வைத்து குழந்தையைக் குளிப்பாட்டுவது போன்று ஏதோ ஒன்று செய்யப்படுகிறது.

குழந்தை வளர்ப்பில் அதிகம் படித்தவர், சராசரியாகப் படித்தவர் என்று பராபட்சம் இல்லாமல் கண்மூடித்தனமாக எல்லோரும் பின்பற்றும் இன்னுமொன்று மிகப் பெரிய அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான”ஜான்சன் & ஜான்சன்’’ தயாரிப்பில் சோப், எண்ணெய், ஷாம்பு, க்ரீம் என்று சகலத்தையும் குழந்தைக்குப் பயன்படும். பிறந்த குழந்தையைப் பார்க்க வருபவர்களில் மிகப் பெரும்பாலா னவர்கள் “ஜான்சன் & ஜான்சன்’’ பொருள்களையே குழந்தைகளுக்குப் பரிசுப்பொருளாக வாங்கி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.

புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய எதிலீன் ஆக்சைட், ஜான்சன் அன்ட் ஜான்சன் பொருட்களில் இருப்பதாக 2007ல் வழக்கு தொடரப்பட்டு அது நிருபிக்கப் பட்டு கடந்த ஜூன் 24ம் தேதி முதல் மும்பை முலுந்தில் உள்ள ஜான்சன் அன்ட் ஜான்சன் ஆலையின் அழகுசாதனப் பொருட்கள் தயாரிக்கும் உரிமத்தை, உணவு மற்றும் மருந்து நிர்வாகம் நிறுத்தி (சஸ்பெண்ட்) வைத்துள்ளது.

காலங்காலமாகக் குளியலுக்குப் பயன்படுத்திய கடலைமாவு இன்று வெறும் பஜ்ஜிக்கு மட்டுமே என்று புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. கடலைமாவுடன் பயத்தமாவும் கஸ்தூரி மஞ்சளும் சேர்த்துக் குளிப்பாட்டித்தான் நம் அம்மாக்களை நம் பாட்டிகள் வளர்த்தார்கள் என்பது இன்றைய இளம் தாய்மார்களில் எத்தனை பேருக்குத் தெரியும். சுத்தமான தேங்காய் எண்ணெயை பசும்பால் சீரகம் சேர்த்துக் காய்ச்சி உச்சி முதல் உள்ளங்கால் வரை தேய்த்துப் பாதுகாத்த பாரம்பரிய பழக்கத்தை இன்று ஜான்சன் அன்ட் ஜான்சன் பொருட்கள் மோடிவித்தை செய்து மறைந்து போகச் செய்துவிட்டன.

நெற்றிப்பொட்டின் மையத்தில் இருக்கும் பிட்யூட்டரி சுரப்பியைத் திறம்பட இயங்கச் செய்வதற்காக அந்த இடத்தைத் தொட்டு இலேசாக அழுத்தம் கொடுத்து வட்ட இயக்கத்தில் கடிகாரச் சுற்றிலும் எதிர்க்கடிகாரச் சுற்றிலும் சுற்றி வைக்கப்பட்ட பொட்டு இன்று வெறும் அழகுக்காகவும், திருஷ்டிக் கழிப்புக்காகவும் என்று வைக்கப்படுவது வருத்தத்திற்குரியது.

அரிசியை பொன்னிறமாக வறுத்து கருப்பட்டி சேர்த்துக் காய்ச்சி இறுகவிட்டு எடுத்து வைத்து தேவைப்படும் போதெல்லாம் ஒரு துளி நீர்விட்டு கரைத்து அதை நெற்றிப்பொட்டாக பௌர்ணமி நாளின் வட்ட நிலா போல் வைத்த நம் பாரம்பரியப் பழக்கம் “அய்டெக்ஸ்’’ கண்மைகளில் காணாமல் போனது. யானைமுடி வளையலும், வசம்பு கட்டிய பாசியும் குழந்தையின் அழகைக் கெடுப்பதாக இளம் பெற்றோர்கள் எண்ணுகிறார்கள்.

குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டும் கிலுகிலுப்பையில் தொடங்கி குரங்கு பொம்பை, கரடி பொம்மை, என்ற அனைத்துமே இன்று பிளாஸ்டிக்கால் செய்யப் பட்டவையாகவே மிகப் பெரும் பாலும் உள்ளன. “3 வயதுக்குட் பட்ட குழந்தைகள் கையில் கொடுக்க வேண்டாம்’’ என்று அட்டையில் (மிகமிகச் சிறிய அளவில்) அச்சிடப்பட்டு விற்கப் படுபவை அவற்றில் அதிகம் (சிகரெட் உடல் நலத்துக்குக் கேடு என்று எழுதி விற்கப்படுவது போல்) வாங்கும் நுகர்வோருக்கும் அதில் பெரிய கவனம் இல்லாமல் இருப்பது வேதனைக்குரிய செய்தி.

கையில் சிக்கும் எல்லா பொருட்களையும் உடனடியாக வாயில் வைப்பது ஐந்து மாதங்களுக்கு மேற்பட்ட குழந்தைகளின் இயல்பு. அவர்கள் கையில் எதைத் தரலாம் எதைத் தரக்கூடாது என்பதைப் பெற்றோர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாகப் பல் முளைக்கும் நாள்களில் வாயில் வைத்துக் கடிப்பதற்கு வசதியாக நம் மூரில் தயாரிக்கப் பட்ட மரப்பாச்சி பொம்மைகள், தலையாட்டி பொம்மைகள், மரச்செப்பு சாமான்கள், பனைஓலைப் பொருட்கள் எல்லாம் பளபளக்கும் பிளாஸ்டிக் பொம்மை களிடத்தில் தோற்றுப்போய் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. பார்பி டாலும், டெடி பியரும், நம் மண்ணை விட்டுக் குழந்தைகளை வெகுதூரம் கடத்திச் செல்கின்றன.

பெரும்பாலான இளம் தாய்மார்கள் தங்கள் குழந்தை எப்போது மூன்று மாதத்தைக் கடக்கும் என்று மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். படிநிலை வாரியாகக் கடைகளில் கிடைக்கும் செரிலாக் 1,2,3.. அல்லது ஃபெரக்ஸ் 1,2,3.. (ஆப்பிள், வெண்ணிலா, ஸ்ட்ரா பெரி, சாக் லேட் என்று இதில் பல சுவைகள் வேறு) போன்ற அரைதிட  உணவுகளைக் கொடுக்கத் தொடங் குவதற்குத்தான் அந்த ஆர்வம்.

போன தலைமுறை வரை வீட்டி லேயே தயாரித்துக் கொடுத்த பொறிஅரிசிக் கூழ், ராகிக் கூழ், சத்துமாவு கூழ், ஓமம் சேர்த்த அரிசிக்கூழ் போன்றவற்றைவிடவும் அட்டைபெட்டிகளில் அடைத்து விற்கப்படும் செரிலாக் ஃபெரக்ஸ் தான் சிறந்தது தரமானது ஆரோக் கியமானது உயர்வானது என்று எண்ணுகிறது இன்றைய இளம் தலைமுறை. ஐந்து மாதங்களான குழந்தைக்குத் தினமும் இரண்டு பிரிட்டானியா மில்க் பிக்கிஸ் பிஸ்கட் பாலில் நனைத்துக் கொடுக் கப்படவேண்டும் என்பது எழுதப் படாத விதியாகிப் போனது.

குழந்தையை ஆராரோ தாலாட் டுப் பாடி தூங்கவைக்கும் வேலை யை இன்று பல வீடுகளில் சன் மியூசிக், ஜெயா மியூசிக், மெகா மியூசிக், போன்ற தொலைக் காட்சி கள்தான் செய்கின்றன.

குழந்தை தும்மினாலும், செருமி னாலும், இருமினாலும், கூடுதலாக ஒரு முறை மலம் கழித்து விட் டாலும் அவ்வளவு ஏன் பத்துநிமி டம் தொடர்ந்து வீரிட்டு அழுது விட்டாலும் கூட உடனடியாக மருத்துவமனைக்கு விரையும் போக்கை இளம் பெற்றோர்களி டத்தில் பார்க்க முடிகிறது. இது மட்டுமல்லாமல் மாதம் ஒரு முறை குழந்தையைக் கட்டாயம் மருத்துவ மனைக்குக் கொண்டுபோய் எடை போட்டு பார்த்து எந்த விதத்திலும் ஆரோக்கியக் குறைவு இல்லை என்று மருத்துவரே சொன்னாலும் கூட ஊட்டத்துக்கு ஏதாவது பரிந்துரைக்கச் சொல்லிக் கேட்டு வாங்குவதைப் பல இளம் பெற் றோர்கள் வழக்கமாகக் கொண்டி ருக்கிறார்கள். தங்களது குடும்ப மாத வரவு செலவு கணக்கில் மளிகைக்கு ஒதுக்குவது போல் மாதாமாதம் ஒரு தொகையைக் குழந்தையின் மருத்துவத்துக்கு ஒதுக்குகிறார்கள்.

கருவுற்ற நாளில் தொடங்கி ஆங்கில மருத்துவத்தின் பரிந்துரைப்படியும் வழிகாட்டுதல்படியும் மட்டுமே தாய்மையை அனுபவிக்கப் பழகிக் கொள்ளும் இளம் தாய் மார்கள் ஆங்கில மருத்துவம் கொடுக்கும் சாவிக்கு ஆடும் பொம்மைகள் போல் மாறிவிடுகிறார்கள். தன் குழந்தைக்குரிய உணவு, மருந்து, போன்றவற்றைத் தனது மரபிலிருந்து, பெறுவதை விடுத்து மருத்துவர் எழுதும் மருந்துச் சீட்டின் அடிப்படையில் பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிப்புப் பொருட்களைச் சார்ந்தே குழந்தைகளை வளர்க்கிறார்கள்.

டயாபர், பேபி வைப்ஸ் மற்றும் மேலே குறிப்பிட்ட க்ரீம் எல்லாமே பனி அடர்ந்த குளிர் நாடுகளில் நீரின் பயன்பாட்டைக் குறைப்பதற்கான நோக்கில் கண்டுபிடிக்கப் பட்டவை. ஆனால் அக்டோபர் மாதத்திலும் அக்னி நட்சத்திரம் அளவுக்கு வெயில் வாட்டி எடுக்கும் தமிழ்நாட்டிலும் அதே பொருட்களைப் பயன்படுத்து பவர்களைப் படித்த மற்றும் பணம்படைத்த முட்டாள்கள் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

தன் வாயில் அம்மா கொடுப்பதை மறுக்கும் உரிமை கூட இல்லாத பச்சிளம் குழந்தைக்கு எதைக் கொடுக்கலாம் எதைக் கொடுக்கக் கூடாது என்பதைத் தீர ஆராய்ந்து கொடுக்க வேண்டியது ஒவ்வொரு தாயின் தலையாய கடமை.

முதலில் நம் குழந்தைக்காக வீட்டில் நாமே தயாரிக்கும் உணவுகளை விட கடையில் வாங்கும் உணவுகள் சத்துமிகுந்தவை, சுத்த மானவை, தரமானவை, உயர்வானவை என்ற எண்ணத்தை இளம் தாய்மார்கள் கைவிடவேண்டும். உணவின் சுவையும், சத்தும், தன்மையும் அதைத் தயாரிப்பவரின் மன நிலையைப் பெருமளவில் பொறுத்தே அமையும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். குழந்தையின் உடல், அறிவு மற்றும் மன வளர்ச்சியைத் தொடக்கம் முதலே நம் மரபு வழிப்பட்டதாக அமைக்கவேண்டுமே தவிர, அதில் கண்மூடித்தனமாக மேற்கத்திய முறையைப் பின்பற்றக் கூடாது.

Pin It

கர்நாடக மாநிலம் பெல்காம் நடுவண் சிறையில் மரண தண்டனை சிறைவாசிகளாக உள்ள நான்கு தமிழர்களான சைமன், பிலவேந்திரன், ஞானப்பிரகாசம், மீசை மாதையன் ஆகியோரை இன்று(22.10.2013) தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் தலைமையிலான 10 பேர் கொண்ட தமிழகக் குழுவினர் சந்தித்து நலம் விசாரித்தனர்.

இக்குழுவில், பேரறிவாளன் தாயார் திருவாட்டி அற்புதம் அம்மாள், த.தே.பொ.க. தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் தோழர் கோ.மாரிமுத்து, தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் ஆசிரியர் குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி, த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் வெ.இளங்கோவன், மற்றும் தோழர்கள் பார்த்திபராசன், மு.வேலாயுதம், குழந்தைராஜ் ஆகியோர் இருந்தனர்.

கர்நாடகத்தில், வெவ்வேறு தனிப்பட்ட வழக்குகளில் கைதாகி மரண தண்டனை விதிக்கப்பட்ட சிறைவாசிகளான சிவா, ஜடேசுவர சாமி, சாய் பன்னா நடேகர் ஆகியோரையும் தமிழகக் குழுவினர் சந்தித்து நலம் விசாரித்தனர்.

இவர்கள் அனைவருடைய கருணை மனுக்களையும் குடியரசுத் தலைவர் ஏற்க மறுத்துவிட்ட நிலையில், உச்சநீதிமன்ற மேல் முறையீட்டுத் தீர்ப்பை எதிர்நோக்கி உள்ளனர்.இவர்கள் தங்கள் மீது சுமத்தப்பட்ட கொலை வழக்குகளில் எள்ளளவும் தொடர்பில்லை என்று மனம் நொந்துப் பேசினார்கள்.

குறிப்பாக, ஞானப்பிரகாசம் கூறிய செய்தி, அனைவர் மனதையும் உருக்கியது. காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட வேறொரு ஞானப்பிரகாசத்தின் கொலையை மறைப்பதற்காக காவல்துறையினர், அப்பாவியான ஞானப்பிரகாசத்தை பாலாறு வெடிகுண்டு வழக்கில் இணைத்துள்ளதை ஞானப்பிரகாசம் மனமுருக எடுத்துச் சொன்னார்.

அதே போல், பிலவேந்திரன் ஈரோடு பகுதியில் வேளாண் பண்ணை ஒன்றில் அவரும், அவரது மனைவியும் வேலை செய்திருந்த போது, காவல்துறையால் பிடித்து வரப்பட்டு பாலாறு வெடிகுண்டு வழக்கில் சேர்த்துள்ளனர். அதிரடிப்படை அவரை விசாரிக்கும் போது, அவரை அம்மணப்படுத்தி, அவரது ஆண் குறி உட்பட அனைத்து உறுப்புகளிலும் மின்சார அதிர்வு கொடுத்து சி்த்திரவதை செய்யப்பட்டதை கண்ணீர் மல்க எடுத்துரைத்தார்.

மீசை மாதையன் நீண்டகாலத் தனிமைச் சிறை வாழ்க்கையாலும், அதிரடிப்படை சித்திரவதையாலும் பாதிக்கப்பட்டு பேச முடியாமல் இருக்கிறார்.

பாலாறு வெடிகுண்டு வழக்கில் தீர்ப்பளித்த தடா சிறப்பு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட 133 பேரில், 7 பேருக்கு வாழ்நாள் தண்டனை விதித்தது. மீதமிருந்தவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். வாழ்நாள் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரும், உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீ்டு செய்தனர்.

உச்சநீதிமன்றமோ, ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள் என்பது போல், சைமன், பிலவேந்திரன், ஞானப்பிரகாசம், மீசை மாதையன் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதித்து, மற்றவர்களை விடுதலை செய்தது.

ஒரு மேல் முறையீட்டு வழக்கில், தண்டனையை உறுதி செய்து அல்லது தண்டனையைக் குறைத்து தான் நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும். ஆனால், மேல் முறையீடு செய்தவர்களைத் தூக்கிலிடும் தீர்ப்பை முதன் முறையாக இந்நான்கு தமிழர்களுக்கும் உச்சநீதிமன்றம் விதித்ததாக சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

சைமன் மற்றும் கர்நாடகச் சிறைவாசிகள் மூவரும், அவரவர் வழக்குகளில் காவல்துறையினரால் எப்படி பொய்யாக சேர்க்கப்பட்டோம் என்பதை விவரித்துச் சொன்னார்கள். 61 அகவையான சாய் பன்னா நடேகர் என்ற முதியவர், கடந்த 22 ஆண்டுகளாக மரண தண்டனை பெற்று அவர் சிறையிலிருப்பதைக் கூறி கண்ணீர் வடித்தார்.

அனைவரும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, தங்களுக்கு ஞாயம் வழங்கும் என எதிர்பார்ப்போடு உள்ளனர்.

தோழர் பெ.மணியரசன் அவர்களும், கி.வெங்கட்ராமன் அவர்களும், “தமிழ்நாட்டில் இராசீவ்காந்தி கொலை வழக்கில் பொய்யாக சேர்க்கப்பட்ட மூன்று தமிழர் உயிரைக் காக்கவும், பெல்காம் சிறையிலுள்ள நான்கு தமிழர் உயிரைக் காக்கவும், இந்தியாவில் மரண தண்டனை ஒழிக்கப்படவும் பல்வேறு இயக்கங்களுடன் இணைந்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும் போராடி வருகிறது. கர்நாடகத்தில் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள், கன்னட இலக்கியவாதிகள் போன்றோருடன் தொடர்பு கொண்டு மரண தண்டனை ஒழிக்கப்படுவதற்கு ஆதரவாக கருத்தரங்குகள், பரப்புரைகள் நடத்த முயற்சிகள் எடுப்போம். நம்பிக்கையோடு இருங்கள். தெம்பாக இருங்கள். உங்களுக்காக கவலைப்படுவோர் வௌயில் ஏராளமானோர் உள்ளனர்” என்று தெரிவித்து அவர்களிடமிருந்து விடை பெற்றனர்

Pin It

கடந்த பத்தாண்டுகளாக இரசியாவில், பழைய சோவியத் இரசியாவிலிருந்து பிரிந்து போன உக்ரைன், உஸ்பிகிஸ்தான், கசகஸ்தான், அசர்பெய்ராஜான், டஜகஸ்தான் உள்ளிட்ட மத்திய ஆசிய நாடுகள், ஐரோப்பா நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் குறைந்த கூலிக்காக, இரசியாவின் பல்வேறு தொழில்களிலும் பணியமர்த்தப்பட்டனர். தெற்கு காகஸ் பகுதிகளைச் சேர்ந்த இசுலாமியர்களும் இதில் கணிசமாக இருந்தனர். மேலும், அசர்பெய்ஜான், செசன்யா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் இரசியாவின் வணிகங்களிலும் ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.

மக்கள் தொகையில் உலகின் 9ஆம் நாடாக சற்றொப்ப 14.5 கோடி மக்கள் வசித்துக் கொண்டுள்ள இரசியாவில், தற்போது சற்றொப்ப 1.3 கோடி வெளிநாட்டவர்கள் அனுமதி பெற்றும், 40 இலட்சம் பேர் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாகவும் குடியேறியுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. உலகிலேயே அமெரிக்காவை அடுத்து இரசியாவில் தான் அதிகளவிலான வெளிநாட்டவர்கள் பணி நிமித்தமாக அதிகளவில் குடியேறியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. (காண்க: தி இந்து, 14.10.2013).

இவ்வாறு, இரசியாவில் குடியேறியுள்ள வெளிநாட்டவர்களுள், அவரவர் நாடுகளில் குற்றம் புரிந்து விட்டுத் தப்பியோடி வந்த குற்றவாளிகளும் கணிசமாக இருந்தனர். இதன் காரணமாக, இரசியாவிலும் அவ்வப்போது அவர்கள் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது நடைபெற்று வந்தது.

இரசியாவில் குடியேறுகின்ற வெளிநாட்டவர்கள் அங்கு பணிபுரிவதற்கான அனுமதி பெறவும், வீடு உள்ளிட்ட சலுகைகள் பெறவும் இரசிய அரசு அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் பெருமளவில் கையூட்டு அளிப்பதால், அவர்களை அதிகளவில் இரசியாவில் உள்நுழைய அரசு அதிகாரிகள் அனுமதிக்கும் போக்கும் அங்கு நிலவி வருகின்றது.

ஏற்கெனவே, பொருளியல் நெருக்கடியின் காரணமாக வேலையிழந்து நின்ற இரசியர்கள், வெளியாரின் வருகைக்கும், அவர்களது வணிக ஆதிக்கத்திற்கும் பல இடங்களில் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். இரசியாவின் முக்கிய எதிர்க்கட்சியான லிபரல் டெமாக்ரடிக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வெளியார் வருகைக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டுமென கோரிக்கைகள் விடுத்து வருகின்றன.

இன்னொருபுறத்தில், மண்ணின் மக்களான இரசியர்களுக்கும், வெளி நாட்டவர்களுக்கும் அவ்வப்போது ஆங்காங்கு சிறு சிறு மோதல்கள் ஏற்படுவது இரசியத் தலைநகர் மாஸ்கோவில் வாடிக்கையாகிப் போனது.

கடந்த 2006ஆம் ஆண்டு ஆகத்து மாதம், வடக்கு இரசியாவின் கொன்டோபோகா (Kondopoga) நகரத்தில், அசர்பெய்ஜான் – செசன்யா நாட்டைச் சேர்ந்தவர்களால் 3 இரசியர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்நகரிலுள்ள அசர்பெய்ஜான் – செசன்யா நாட்டவர்கள் நடத்தும் நிறுவனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. அனைத்து வெளிநாட்டவர்களையும் உடனடியாக வெளியேற்ற வேண்டுமெனக் கோரி, இரசிய மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடினர். (காண்க: தி இந்து, 05.09.2006) இதன் காரணமாக பெருமளவில் வெளிநாட்டவர்கள் அந்நகரை விட்டு வெளியேறினர்.

கடந்த 2010ஆம் ஆண்டு திசம்பர் மாதம், இரசிய உதைப்பந்தட்ட இரசிகர் ஒருவர் வெளிநாட்டவர் ஒருவரால் கொல்லப்பட்டதையடுத்து, மாஸ்கோவிலுள்ள வெளி நாட்டவர்களை வெளியேற்ற வேண்டுமெனக் கோரி மாஸ்கோவின் மனேஸ்நயா சதுக்கத்தில் (Manezhnaya Square) இரசியர்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

இதனையடுத்து, 2011ஆம் ஆண்டு, இரசியாவில் குடியேறும் வெளிநாட்டவர்களுக்கு இரசிய அரசு சில கட்டுப்பாடுகளை விதித்தது. 2012ஆம் ஆண்டு சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அடுத்த 10 ஆண்டுகளுக்கு இரசியாவிற்குள் நுழையமுடியாதபடி வெளியேற்றப்பட்டனர். ஆனாலும், இரசியாவில் குடியேறும் வெளியாரின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.

இவ்வாறான நிலையில் தான், கடந்த 10.10.2013 அன்று, இரசியத் தலைநகர் மாஸ்கோவின் தெறகு மாவட்டமான பிர்யுலியோவோ (Biryulyovo) பகுதியில், வெளிநாட்டவர் ஒருவரிடமிருந்து, தனது காதலியை பாதுகாக்க முயன்ற இகோர் ச்செர்பகோவ் (Egor Shcherbakov) என்ற 25 அகவை இரசிய இளைஞன், வெளிநாட்டவர் ஒருவரால் தாக்கப்பட்டு மரணமடைந்தார்.

அவரைக் கொலை செய்த வெளிநாட்டவர், வடக்கு காகஸ் பகுதியைச் சேர்ந்த இரசியரல்லாத இசுலாமியர் என அங்கிருந்த கமுக்க ஒளிப்படக் கருவிகளை ஆராய்ந்து காவல்துறையினர் கண்டறிந்தனர். எனினும், அவர் கைது செய்யப்படவில்லை.

இதனையடுத்து, சக இரசியரின் சாவுக்கு நீதி கேட்டும், இகோரைக் கொன்றக் கொலையாளிகளைக் கைது செய்யக் கோரியும், பிர்யுலியோவோ நகரில் நூற்றுக்கணக்கான இரசிய மக்கள் 13.10.2013 அன்று ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். இகோர் இறந்த இடத்தில், மலர்களைத் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி, ‘இரசியா இரசியர்களுக்கே’ என முழக்கமிட்டனர்.

ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே இன்னொரு குழுவினர், வெளியாருக்கு பணியளித்து வரும் காய்கறி நிறுவனங்களின் கடைகளையும், பொருட்களையும் அடித்து நொறுக்கித் தீ வைத்தனர். ஆர்ப்பாட்டக்காரர்களை காவல்துறையினர் கைது செய்ய முயன்றதையடுத்து, காவல்துறை வாகனங்களும், மகிழுந்துகளும் ஆர்ப்பாட்டக்காரர்களால் தூக்கி வீசப்பட்டன. இதன் முடிவில், 380 இரசிய ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.

மறுநாளான, 14.10.2013 அன்று இகோரைக் கொன்ற கொலையாளியை தேடியும், எதிர்த்தாக்குதல் நடத்தக்கூடும் என அஞ்சியும் பிர்யுலியோவோ நகரில், 1200 வெளிநாட்டவர்களையும், வடகிழக்கு மாஸ்கோவில் 450 வெளிநாட்டவரையும் இரசியக் காவல் துறையினர் கைது செய்தனர்.

”எங்களால் இந்தப் பகுதியில் வாழவே முடியாது. எந்த நேரமும் இங்கு விமானச் சேவை வசதியுண்டு. இங்கு பணிபுரிபவர்கள் நல்லவர்களாக இல்லை. அவர்களுள் குற்றவாளிகளும் இருக்கின்றனர்” என்கிறார் அப்பகுதியைச் சேர்ந்த அலெக்சாண்டர் என்ற 23 அகவை இரசிய இளைஞர் (காண்க: தி கார்டியன், 13.10.2013).

மாஸ்கோ ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து ஊடகங்களிடம் பேசிய இரசிய அதிபர் விளாடிமிர் புடின், கட்டுமானத் தொழில் உள்ளிட்ட பல தொழில்களுக்கும் வெளிநாட்டவர்கள் அவசியம் தேவைப்படுவதாகச் சொன்னார். ஆனால், அவர்களின் எண்ணிக்கையை வணிகத்தில் குறைக்க நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

வெளியாரின் எண்ணிக்கையை வரம்புக்குள் வைப்பதற்கான விசா நடைமுறைக் கொண்டுள்ள இரசியா போன்ற நாடுகளிலேயே இவ்வாறான நிலையெனில், இது போன்று எந்தவொரு நடைமுறையும் இல்லாமல் வந்தேறிகளின் வேட்டைக்காடாக உள்ள தமிழ்நாட்டின் நிலை என்ன? நாம் என்ன செய்யப் போகிறோம்?

Pin It