(இந்து மதம், - இந்திய நாடு என்பவை வெள்ளைக் காரன் தந்த நன்மைகள் - காஞ்சி சங்கராச்சாரியார் சந்திர சேகரேந்திரர்)

நம்முடைய மதம் என்பது சைவம், வைஷ்ணவம் என்று இரண்டு பெரிய பிரிவுகளாக இருக்கின்றது. 'இதை 'இரண்டு மதம் என்று சொல்வதா, ஒரே மதம்தான் என்று சொல்வதா?' என்று சந்தேகம் வரும்.

கிறிஸ்துவ மதத்திலும் கத்தோலிக், ப்ராடெஸ் டன்ட் என்று பிரிவுகள் இருக்கின்றன. இருந்தாலும், ஒரே மதம் என்று சொல்கிறார்கள். காரணம் என்ன? இரண்டு பேரும் பொதுவாகப் பூஜை செய்ய ஒரே கர்த்தரின் பெயரைச் சொல்லி வணங்குகிறார்கள். புத்த மதத்தில் ஹீனயானம், மஹாயானம் என்று இரண்டு மதமாகச் சொல்வதில்லை! காரணம் அவர்கள் இரண்டு பேருக்கும் புத்தரே தலைவர்.

இப்படி, சைவர்களுக்கும் வைஷ்ணவர்களுக்கும் ஒரே ஸ்வாமி இருக்கிறாரா? இல்லை. இப்போது சாதாரண வைஷ்ணவர்கள் எப்படி இருந்தாலும் அவர்களுக்கு ஆசார்ய புருஷர்களாக இருப்பவர்கள் சிவன் கோயில் பக்கமே வரமாட்டார்கள். விஷ்ணுதான் அவர்களுக்கு ஸ்வாமி, அவர்களுக்கு சிவன் ஸ்வாமியே அல்ல. விஷ்ணுவினுடைய பக்தர்களுக்கு, சிவனும் ஒரு பக்தன்தான் என்பது அபிப்ராயம். சைவர்களிலும் தீவிரவாதிகள், 'விஷ்ணு ஸ்வாமியே அல்ல; சிவன்தான் ஸ்வாமி; விஷ்ணு அவருக்குப் பக்தன்' என்று சொல்கிறார்கள். இவர்கள் இரண்டு பேரையும் எப்படி ஒரு மதம் என்று சொல்வது?

'அது போகட்டும்; இவர்கள் இரண்டு பேரையும் ஒரு மதம் என்று சொல்ல இரண்டு பேருக்கும் பொதுவாக ஏதாவது ஒரு மதப்புஸ்தகமாவது இருக்கிறதா?' என்று பார்க்கலாம். கிறிஸ்துவம் இஸ்லாம் முதலியவற்றில் பல பிரிவுகள் இருந்தாலும், எல்லாருக்கும் பொதுவாக பைபிளும், குர் ஆனும் இருப்பதுபோல், சைவ வைஷ்ணவருக்குப் பொதுவான பிராமண கிரந்தம் இருக்கிறதா என்று பார்க்கலாம். சைவர்கள் தேவாரம் முதலிய திருமுறைகளைத் தங்கள் மத நூல்களாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள். வைஷ்ணவர்களோ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் தமது ஆதார நூல் என்கிறார்கள். புஸ்தகங்களும் வேறாகப் போய்விட்டன. ஸ்வாமியும் வேறாகப் போய்விட்டார். அப்படி இருக்க இரண்டு பேரையும் ஒரே மதம் என்று எப்படிச் சொல்லுவது?

நமக்குள் சைவர்கள், வைஷ்ணவர்கள் என்று வேறாகச் சொல்லிக் கொண்டிருந்தாலும் வெள்ளைக் காரன் நமக்கு ஹிந்துக்கள் என்று பொதுப் பெயர் வைத்தானோ நாம் பிழைத்தோம். அவன் வைத்த பெயர் நம்மைக் காப்பாற்றியது. அவன் மட்டும் 'ஹிந்து' என்று பெயர் வைத்திருக்காவிட்டால், ஒவ்வொரு ஊரிலும் சைவர், வைஷ்ணவர், சாக்தர், முருக பக்தர், பிள்ளை யார் உபாசகர், ஐயப்பன் பக்தர், எல்லையம்மனைக் கும்பிடுகிறவர் என்று நம்மைப் பிரித்துக் கொண்டு தனித்தனி மதமாக நினைத்துக் கொண்டிருப்போம்.

இப்போது 'ஹிந்து சமூகம்' என்று பொதுப் பெயரில் சொல்லப்படும் சமுதாயத்தை இப்படி ஏழெட்டாகத் தனித்தனி மதம் என்று பிரித்துவிட்டால், அதற்கப்புறம் ஒவ்வோர் ஊரிலும் முஸ்லீம், கிறிஸ்துவர்கள் போன்ற மதஸ்தர்கள்தான் அதிகத் தொகை இருப்பார்கள். அதாவது, இப்போது தேசத்தின் இரண்டு பக்கங்களில் மட்டும் பாக்கிஸ்தான் முளைத்திருப்பதுபோல் இல்லாமல், நம் தேசம் முழுவதுமே பாக்கிஸ்தானாகி யிருக்கும். எத்தனையோ கிருத்திருவங்கள் செய்து பாக்கிஸ்தானைப் பிரித்த அதே வெள்ளைக்காரன் தான், எத்தனையோ யுக்திகள் செய்து நம்மை ஆரியர்-திராவிடர் என்றெல்லாம் பேதப்படுத்திய அதே வெள்ளைக்காரன்தான் தன்னையும் அறியாமல் நமக்கு 'ஹிந்து' என்று பொதுப் பெயரைத் தந்து, இன்று இந்தியா தேசம் என்று ஒன்று இருக்கும் படியான மகா பெரிய நன்மையைச் செய்திருக்கிறான்!

தெய்வத்தின் குரல் (முதல் பாகம்) - வைதிக மதம்.

Pin It