(ஓசூர் தொழிலாளர் கருத்தரங்கில்  தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் பேச்சு)

ஓசூர் அசோக் லேலண்ட் அலகு--2 தொழிலா ளர்கள் நடத்தும் 'தொழிலாளர் பாதுகாப்புப் பேரவை'  சார்பில், 21.12.2014 அன்று, ஓசூரில் “தொழிலாளர் உரிமை பாதுகாப்புக் கருத்தரங்கம்’’ நடைபெற்றது.

ஓசூர் செங்குந்தர் திருமண மண்டபத்தில் நடை பெற்ற இக்கருத்தரங்கிற்கு, தொழிலாளர் பாதுகாப்புப் பேரவைத் தலைவர் தோழர் எம். பாலசுந்தரம் தலைமையேற்றார். செயலாளர் தோழர் எஸ். மகேந் திரன் வரவேற்புரையாற்றினார்.

இக்கருத்தரங்கில், அசோக் லேலண்ட் தொழிலா ளர்கள் மட்டுமின்றி, டைட்டன் (TITAN), ஆவ்டெக் ((AVTEC), குளோபல் பார்மா ((GLOBAL PHARMA), பைமெட்டல் (BIMETAL), அல்ஸ்டாம் (ALSTOM), பாட்டா (BATA), பி.எஸ்.என்.எல் (BSNL) உள்ளிட்ட பல் வேறு தொழிலகங்களிலிருந்து தொழிற்சங்க முன்னணித் தோழர்களும் திரளாகப் பங்கேற்றனர்.

labours meeting 600

தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் எழுதிய “தொழிலாளர் பகைச் சட்டங்களைத் தகர்த்தெறிவோம்’’ என்ற நூலை வெளியிட்டு, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அஜய்கோஷ் சிறப்புரையாற்றினார். முதல்படியை பெற்றுக் கொண்ட ஏ.ஐ.டியூ.சி. சங்க மாநிலக்குழு உறுப்பினரும், நெய்வேலி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத் தலைவருமான தோழர் எம். சேகர், “ஒப்பந்த முறை ஒழிப்போம்! உழைப்பாளர் உரிமை காப்போம்” என்ற தலைப்பில் எழுச்சியுரையாற்றினார்.

நிகழ்வில் தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்:

“இந்திய நாட்டுத் தொழிலாளர்கள் குறிப்பாக, தமிழகத் தொழிலாளர்கள் ஆலை மூடல், ஆட் குறைப்பு, தொழிற்சங்க உரிமைப் பறிப்பு உள்ளிட்ட பெரும் நெருக்கடியில் சிக்கியிருக்கும் முக்கியமானத் தருணத்தில் இக்கருத்தரங்கு நடைபெறுகிறது.

வரலாறு காணாத அளவில் இந்திய அரசு, தொழிலாளர்களுக்கு எதிரான ஒட்டுமொத்தமான சட்டத் தாக்குதலை தொடங்கியுள்ள நேரம் இது.

“வேளாண்மையை விட்டு உழவர்களே வெளியே றுங்கள்” என்று முன்னாள் இந்தியப் பிரதமர், முதல் வர்கள்  மாநாட்டில் வெளிப்படையாக அறிவித்தார். அப்படி ஒரு அறிவிப்பை கிராமத்தில் ஒருவர் சொன் னால் அவருடைய சட்டை கிழியாமல் போகாது. ஆனால், பிரதமர் என்ற அதிகாரத்தோடு அப்பட்ட மான இந்த மக்கள் பகை அறிவிப்பை அன்றைக்கு மன்மோகன் சிங் வெளியிட்டார்.

அதைப்போலவே இன்றையப் பிரதமர் முதலா ளிகள் கூட்டத்திலே சொல்லுகிறார். “சட்டங்கள் குறைந்த நாடாக இந்தியாவை மாற்றுவேன். தைரியமாகத் தொழில் தொடங்குங்கள். இந்தியாவில் உற்பத்தி செய்து உலகமெங்கும் விற்றுக் கொள்ளுங்கள். குறைந்த கூலிக்கு திறனுள்ள தொழிலாளர்கள் இங்கே ஏராளமாக கிடைக்கிறார்கள்’’ என்று அழைத்தார். தொழிலாளர்களைப் பாதுகாக்க இருக்கிற அரைகுறை சட்டங்களையும் இல்லாமல் மாற்றுவதற்கு தயாராக இருப்பதாகச் சொல்கிறார், நரேந்திர மோடி. நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட சில கூச்சல் குழப்பங்கள் காரணமாக முன்வைத்த சில சட்டதிருத்தங்கள் நிறை வேறவில்லை. ஆனாலும் அடுத்த மார்ச்சுக்குள் நிறை வேற வாய்ப்புண்டு.

ஏனென்றால் இந்தச் சட்டத் திருத்தங்கள் பலவும் ஏற்கெனவே இருந்த மன்மோகன் சிங் ஆட்சியில் முன் வைக்கப்பட்டவை. எல்லாவற்றையும் ஒன்றாகக் கூட்டி, பெரிதாக்கி, அத்திருத்தங்களை அதிகமாக்கி, தீவிர மாக்கி இப்போது முன்வைத்திருக்கிறார்கள்.

ஏற்கெனவே இந்தத் திருத்தங்களை காங்கிரசு ஆட்சி முன்வைத்த போது, அதை ஆதரித்த எதிர்க் கட்சியான பா.ச.க., இன்றைக்கு ஆட்சியில் இருக்கிறது. எதிர்க்கட்சி என்ற தகுநிலை கிடைக்காத போதும் காங்கிரசுக் கட்சி இதை  ஆதரிக்கிறது. எனவே நாடாளு மன்றத்தில் ஒருமித்த ஆதரவோடு நிறைவேற்றப்பட உள்ளது. உண்மையான எதிர்ப்பு வெளியே இருக்கிறது. மக்கள் மன்றத்தில் இருக்கிறது.

தொழிற்சாலை ஆய்வாளர்கள் தொழிலகங்களை இனி ஆய்வு செய்ய முடியாது, 1948 தொழிற்சாலைச் சட்டத்தில் திருத்தங்கள் வருகிறது. ஏற்கெனவே தொழிற்சாலை ஆய்வாளர்கள், தொழிற்சாலைகளை உருப்படியாக ஆய்வு செய்வதில்லை. அசோக் லேலண்ட் அலகு- 2 தொழிலகத்திற்குள்ளேயே இதற்கு சான்று உண்டு. சீனாவிலும், கொரியாவிலும் காலவதி யானதென்று தள்ளிவிடப்பட்ட எந்திரங்களை வைத்து பட்டாசு வெடிக்கும் சூழல் போல, நெருப்பு உமிழும் பாதுகாப்பற்றப் பிரிவுகளில் தொழிலாளர்கள் இத்தொழிலகத்தில் பணியாற்றி வருகிறார்கள்.

உருப்படியான தொழிற்சாலை ஆய்வுகள் நடந் திருக்குமானால், அப்பிரிவுகள் எப்போதோ மூடப் பட்டிருக்கும். தொழிற்சாலை ஆய்வாளர்கள் பணி இந்த நிலையில்தான் உள்ளது. இதையும் இல்லாமல் ஆக்க, ஆய்வுகளுக்கு அப்பாற்பட்டவையாக தொழி லகங்களை மாற்ற தொழிற்சாலைச் சட்டத்தில் திருத்தம் வருகிறது.

எட்டு மணி நேர வேலை என்பது பத்தரை மணி நேர வேலை என்பதாக மாற்றப்படுகிறது. வரம்பற்ற மிகை நேரப்பணி திணிக்கப்படவுள்ளது.

முந்நூறு தொழிலாளர்களுக்குக் கீழ் உள்ளத் தொழிலகங்களுக்குத்தானே இந்தத் திருத்தம் என அசோக் லேலண்ட் போன்ற பெரியத் தொழிற் சாலை யில் பணிபுரியும் தொழிலாளர்கள் கவனமின்றி இருக்க முடியாது. இது, படிப்படியாக அடுத்தடுத்து மாற்றப் பட்டு ஆயிரம் தொழிலாளர்கள் வரையுள்ள  தொழில கங்களுக்கு தொழிற்சாலைச் சட்டம் பொருந்தாது என்ற நிலை வர இருக்கிறது.

தொழிற்தகராறுச் சட்டத்திலும் முந்நூறு தொழி லாளிகளுக்குக் கீழே உள்ளத் தொழிற்ச் சாலைகளுக்கு கேள்வி முறையின்றி லாக்கவுட் விடலாம் என்ற நிலை வரப்போகிறது. இதிலே, நமக்கு பாதிப்பில்லை என்று பெரியத் தொழிற்சாலைகளில் உள்ள தொழிலாளர்கள் நினைக்கலாம். ஆனால், அதிலும் ஒரு திருத்தம் உண்டு.

தொழிற்தகராறுச் சட்டத்தின் பிரிவு 2(s) படி, தொழிலாளி என்ற வரையறுப்பில் இனி 20,000 ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குகிற தொழிலாளி வர மாட்டார் என்று திருத்தம் வருகிறது. இனி, அவர் நிர்வாக அதிகாரியா? என்றால் அதுவுமில்லை. அவர் தொழிலாளி தான்! ஆனால் தொழிலாளி இல்லை என்ற நிலை வரப்போகிறது.

சட்டம் குறைந்த நாடாக மாற்றுவது என நரேந்திர மோடி சொல்வது, ஒரு அவையடக்கத்திற்காகத்தான். அவரது உண்மையான நோக்கம், இந்தியாவை சட்ட மில்லாத நாடாக மாற்றுவதுதான்.

இப்போதுகூட, சொத்துரிமை அடிப்படையாக அறிவிக்கப்பட்டுள்ளது. சோசலிசம், கம்யூனிசம் பேசியத் தோழர்கள் சொத்துரிமை என்பது, அடிப்படை உரிமை யாக இருக்கக்கூடாது என குரல் எழுப்பினார்கள். ஆனாலும், அது அடிப்படை உரிமை என்று அறிவிக்கப் பட்டிருக்கிறது.

இவ்வாறு சொத்துரிமை அடிப்படை உரிமையாக அறிவிக்கப்பட்டதாலேயே எல்லாருடைய சொத்துரி மையும் பாதுகாக்கப்படும் என்ற பொருளல்ல. ஒரு விவசாயியின் சொத்துரிமைக்கு இன்றைக்கு பாது காப்பில்லை. கெயில், பாஸ்கோ போன்ற நிறுவனங்கள் ஒரு விவசாயியின் நிலத்தில் அவரைக் கேட்காமலேயே கால் பதித்து வேலையைத் தொடங்கிவிடலாம். நிலத் தைத் தர முடியாது என ஒன்றரை ஏக்கர் துண்டு நிலம் உள்ள அந்த உழவர் கூக்குரல் எழுப்ப முடியாது. எவ்வ ளவு இழப்பீடு என்பதைப் பற்றி மட்டுமே அவர் பேசலாம் என்று சட்டத்திருத்தம் வருகிறது. இங்கு விவசாயியின் சொத்துரிமையும் கம்பெனிகளின் காலடியில் வைக்கப்படுகிறது.

அதேபோல், எல்லாவற்றையும் சந்தை தீர்மானிக் கிறது என்றார்கள். அரசாங்கம் தலையிடக் கூடாது என்று கொள்கை வகுத்தார்கள். ஆனால், இன்று கச்சா எண்ணெய் பெட்ரோலியத்தின் விலை உலகச் சந்தையில் கடந்த ஆறு மாதங்களில் 61 விழுக்காட் டிற்குக் கீழே குறைந்துவிட்ட போதிலும், இந்தியச் சந்தையில் பெட்ரோல், - டீசல் விலை அந்தளவிற்குக் குறையவில்லை.

பன்னாட்டுச் சந்தை விலைப்படி இங்கே பெட் ரோல் விலை ரூ. 52க்கும், டீசல் ரூ. 32க்கும் விற்கப்பட வேண்டும். ஆனால், நிலைமை அவ்வாறு இல்லை. சந்தைத் தீர்மானித்துக் கொள்ளட்டும் என்பது கூட, பெரு முதலாளிகளின் நலனுக்கு ஏற்றாற்போல், அரசாங்கத்தின் வரிக் கொள்ளைக்கு ஏற்றாற்போல் கடைபிடிக்கப்படுகிறது.

தேர்தல் செலவுக்கு உதவினார் அதானி என்பதற் காக ஒரு நாட்டின் பிரதமர் ஆஸ்திரேலிய அரசிடம் அதானியின் நிறுவனத்துக்காக பேசுகிறார். ஒரு தேர்ந்த புரோக்கர் போல செயல்படுகிறார். அந்நாட்டு அரசு சுற்றுச்சூழல் காரணம்காட்டி மறுத்த போதும் நம் நாட்டு பிரதமர் அதானிக்காக வாதாடுகிறார். பாரத ஸ்டேட் வங்கியின் நிதித் தலைவரை பக்கத்தில் வைத்துக்கொண்டு எல்லா நிதியையும் நாங்கள் தரு கிறோம், என்கிறீர்கள். கிட்டத்திட்ட 100 கோடி டாலர் முதலீடு அது.

கம்பெனிகளுக்கு வேலை செய்யும் ஆட்களாக ஆட்சியாளர்கள் மாறிப் போனார்கள். இதைத் தான் ஒட்டுண்ணி முதலாளியம் என்கிறோம். கட்சிகளும் கம்பெனிகளும் ஒன்றுகலந்துவிட்ட நிலைமை இது. காரல் மார்க்சு கண்டிராத, புதிய அழுகல் நிலை இது. 2ஜி ஊழல் காட்டுவது அதுதானே!

சட்டங்கள் ஏதுமற்ற கம்பெனிகளின் நேரடி ஆட்சி நடப்பது போன்ற, ஓர் காட்டாட்சி நிலை உருவாக்கப் படுகிறது. இருக்கிற சட்டங்களின் அரைகுறைப் பாது காப்பிலிருந்து, கேள்விமுறையிலிருந்து தொழிலாளி களை மொத்தமாக வெளியேற்ற நினைக்கிறார்கள். அதற்கு அவர் சொல்லும் காரணங்கள், தொழிற் சங்கங்களைக் கேட்டு ஏதும் செய்ய வேண்டியதில்லை, முதலீடு  செய்வது நான்தான், ஒப்பந்தம் எப்போது முடியுமோ  அப்போதுதான் என்கிறார்கள். தொழி லாளர்கள் ஒன்று திரண்டிருப்பது, தொழிற்துறை வளர்ச்சியை பாதிக்கிறது என்கிறார்கள்.

ஆனால், இந்திய அரசின் புள்ளி விவரத்துறை என்ன சொல்கிறது என்றால் வெறும் 7% மட்டுமே தொழிற்சங்க வரம்புக்குள் வருகிறார்கள். 93% தொழி லாளிகளுக்கு இல்லை. அந்த 7%-க்குள் தான் கட்சி களின் ஆதரவு சங்கங்கள், எதிர்ப்பு சங்கம், கையாள் சங்கம், கூஜா சங்கம், போராடும் சங்கம் எல்லாமே!

இவ்வளவு சங்கங்கள் இருந்தும் எந்த அளவுக்கு தொழிலாளர்களுக்கு உண்மை ஊதியம் கிடைத்திருக் கிறது. அரசாங்கத்தின் கூற்றுப்படி 2010க்குப் பிறகு, கடந்த 5 ஆண்டுகளில் 37%  உற்பத்தி உயர்ந்திருக்கிறது. ஆனால் தொழிலாளிகள் சம்பளம் 0.1%  மட்டுமே உயர்ந்திருக்கிறது. இதன் பொருள் என்ன? உண்மை ஊதியம் குறைந்து விட்டது என்பதுதானே! இது எப்படி, தொழிற்சாலைகளின் வளர்ச்சிக்குத் தடையாக வந்து விட்டது என்று சொல்ல முடியும்?

இன்னொன்றையும் மோடி சொல்கிறார். இந்தியா வில் குறைந்த எண்ணிக்கைத் தொழிலாளர்கள் பணிபுரியும் சிறு தொழிற்சாலைகள்தான் அதிகம். அத்தொழிற்சாலைகளில், கடைபிடிக்கப்படும் தொழி லாளர் சட்டங்கள் சிறுதொழில் வளர்ச்சிக்குத் தடை யாக அமைகிறது என்கிறார்.

இந்தியாவிலேயே அதிக சிறுதொழில் உள்ள மாநிலம் தமிழ்நாடு தான். இங்கு பாதிக்கு மேற்பட்டத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன. ஆனால், இந்த சீக்கு நிலைக்கு காரணம் தொழிலாளர்களா? இல்லவே இல்லை.

அரசு வங்கிகளில் குறைந்தவட்டிக் கடன் கிடைக் காமை, தாறுமாறான மின்வெட்டு, தாராள இறக்கும தியில், சந்தைப் போட்டியில் பெரு நிறுவனங் களோடு போட்டியிட இயலாமை, தொழில்நுட்ப உதவி கிடைக்காமை போன்றவைதான் சிறுதொழில் நெருக்கடிக்கு பெரும்பான்மைக் காரணங்களாகும்.

ஆனால், இந்தச் சிக்கலையே காரணமாகச் சொல்லி தொழிலாளர் சட்டங்கள் எதுவும் சிறு தொழிற் சாலைகளுக்குச் செல்லாது என்ற நிலையில், திருத்தத்தின் மூலம் மோடி அரசு முன் வைத்திருக்கிறார். இதன் மூலம், தொழிலாளர்கள் ஆதரவற்றவர்களாக மாற்றப் படுவார்களே தவிர, சிறு தொழில் முன்னேற்றத்திற்கு இது ஒன்றும் பயன்பட்டுவிடப் போவதில்லை.

ஏற்கெனவே ஓவர்டைம் என்றிருப்பதை, அதிக  சம்பளம் தருவதை தடுக்கும் பொருட்டு அதை Extended work என்று மாற்றியிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் இதை முதலில் கண்டுபிடித்தவர்கள் அசோக் லேலண்ட் நிறுவனம்தான். Lay off என்று சொல்வதில்லை. Cessation of work  என்கிறார்கள். புஷ்பம் வேறு பூ வேறு என்கிறார்கள்.

Contract labour act  என்பது கூட வேண்டாம் என்கிறார்கள். ஏற்கெனவே மத்திய சட்டம், மாநில சட்டம் என்றிருந்தது. ஆங்காங்கே உள்ள  மாநிலங் களின் நிலைமைகளுக்கு ஏற்ப, தொழிற்சாலை சட்ட விதிகள் இயற்றப்பட்டிருந்தது. ஏனெனில், தொழி லாளர் என்பது இந்திய அரசமைப்புச் சட்ட அதிகாரப் பட்டியலில், ‘பொதுப்பட்டியல்’ என்ற தலைப்பில் வருகிறது. மாநில அரசும் தனியே சட்டமியற்றலாம். மத்திய அரசும் சட்டமியற்றலாம்.

ஆனால், இப்போதையத் திருத்தத்தில் மாநில அரசு என்று வரக்கூடிய எல்லா இடத்திலும் “நடுவண் அரசு அல்லது’’ என்ற வரியை “மாநில அரசு’’ என்பதற்கு முன்னால் சேர்க்கிறார்கள். இவ்வாறான நிலையில், மத்திய அரசு ஒரு சட்டம் இயற்றி அதற்கு மாறாக, தொழிலாளர் நலனுக்கு இசைவாக மாநில அரசு சட்டமியற்றினால், மாநில அரசின் சட்டம் செல்லாது. தோழர் சேகர், தமிழ்நாட்டில் நிரந்தர நிலைமை உறுதிப்பாட்டுச் சட்டம் ((Conferment of Permanent status Actt) செயலாவதில்லை என்று கூறினார். மோடி சட்டத்தால், இனி இச்சட்டமே செல்லுபடியாகாது என்ற நிலை வரப்போகிறது.

இந்த அநீதிகளுக்கு எதிராக தொழிலாளர்கள் அணிதிரள வேண்டும். போராட வேண்டும். ஆனால், தொழிலாளர்களிடையே நிலவும் அரசியல் அக் கறையற்றப் போக்கு மாற வேண்டும். தொழிற்சாலை யில் அன்றாடம் சந்திக்கிற சிக்கல்கள், நிர்வாகம் செய் கிற அநீதி ஆகியவற்றைப் பற்றி மட்டுமே சிந்திக்கிற குறுகிய நிலையிலிருந்து மீள வேண்டும். நாட்டில் நிலவும் உழைப்பாளர் நிலையைப் பற்றிப் பேசினால், அது ஏதோ தனக்குத் தொடர்பில்லாத ‘அரசியல்’ என்பதாக புறந்தள்ளுகிற மனப்பான்மை மாற வேண்டும். தொழிற்சங்கங்கள் பொது நலனுக்கானவை என்பதுகூட இன்றி, கூட்டுத் தன்னலத்திற்கானவை என்ற நிலை இருப்பதை மாற்ற வேண்டும்.

இன்று மோடி அரசின் கீழ் தொழிலாளர்கள் மட்டுமின்றி, உழவர்கள், பழங்குடியினர், கடலோர மக்கள், சிறு வணிகர்கள் என்று அனைவருமே பாதிக்கப்பட்டு போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களோடு, தொழிற்சங்க இயக்கம் கைகோத்துப் போராட வேண்டும். அப்படியான எதிர்த் தாக்குதல் போராட்டம் தான், தொழிலாளர்களின் தற்காப்புப் போராட்டமும் ஆகும்.

ஒப்பந்த முறையை எதிர்ப்பதென்றால், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் தர வேண்டும் என்றும் அவர்களை நிரந்தரப்படுத்த வேண்டுமென்றும் போராட வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளர்களைத் திரட்டுவதில், நிரந்தரத் தொழி லாளர்கள் முன்னிற்க வேண்டும்.

ஒப்பந்த முறை, தற்காலிக முறை, வெளி உற்பத்தி முறை என்பது போல வெளியார்மயமாக்கலும் இன்றைக்குத் தொழிலாளர்களுக்கு எதிரான ஆயுத மாகக் கையாளப்படுகிறது. இங்கே பேசிய தோழர் சேகர், நெய்வேலி ஒப்பந்தத் தொழிலாளர் போராட் டத்தைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். என்.எல்.சி. நிர்வாகம் ஒரு கட்டத்தில், இவர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை முறியடிப்பதற்கு வெளி மாநிலத் தொழிலாளர்களை இறக்குவேன் என்றது.

இங்கு ஒவ்வொரு தொழிலகத்திலும் வெளியார் மயம் என்பது இதே வகையிலான கருங்காலிமயம்தான். போராடும் தொழிலாளர்களுக்கு எதிராக பயன்படுவது போலவே, வெளி மாநிலத் தொழிலாளர்கள் இங்குள்ள தொழிலாளர்களின் வேலை நேரத்தை நீட் டிக்கவும், ஊதியத்தைக் குறைக்கவும் பயன்படுகிறார்கள். இங்குள்ள தொழிலாளர்களின் உரிமைகளைப் பாது காப்பதற்கு அவர்களை வெளியேற்றுவதுதான் வழி யாகும். தனிப்பட்ட முறையில் பார்த்தால், ஜார் கண்டிலிருந்தோ, ஒரிசாவிலிருந்தோ இங்கே அழைத்து வரப்படும் தொழிலாளர்கள் பரம ஏழைகளாக ஏதிலிகள் போல் வருகிறார்கள் என்பது உண்மைதான்.

இப்போதும்கூட, போக்குவரத்துத் தொழிலா ளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அணிய மாகிக் கொண்டிருக்கிறபோது, தமிழக அரசு அவசர அவசரமாக தற்காலிகத் தொழிலாளர்களாக ஆட் களைத் தேர்வு செய்து வருகிறது. இப்போது, சம்பள உயர்வு கோரும் தொழிலாளர்களை ஒப்பிட, எந்த வேலையுமின்றி இந்தக் கருங்காலி வேலைக்கு வரும் உழைப்பாளர்கள் - இளைஞர்கள் பரிதாபத்திற்குரிய வர்கள்தான். ஆனால், அதற்காக அவர்களை நாம் அனுமதித்து விடமுடியாது. அதே போல்தான் வெளியார்மயமும்.

தொழிலாளர்கள் உரிமையைப் பாதுகாத்திடும் முழக்கம்தான் வெளியார்மய எதிர்ப்பு என்பது. மண்ணின் மக்களுக்கே வேலை வேண்டும் என்று போராடுகிறோம். தமிழ் மண்ணின் மக்களில் மிகப்பெரும்பாலோர் தமிழைப் பொதுமொழியாகக் கொண்டவர்கள்தான். எல்லைப்புறப் பகுதியான ஓசூரில், கன்னடத்தையும் தெலுங்கையும் தாய்மொழி யாகக் கொண்டு, தலைமுறைத் தலைமுறையாக வாழ்ந்துவரும் மக்கள் இருக்கிறார்கள். இவர்களும் மண்ணின் மக்கள்தான். மண்ணின் மக்களுக்கு வேலை கேட்டுப் போராடுவது இவர்களையும் உள்ளடக்கித் தான். இதுதான் உழைப்பாளர்களின் உரிமையைப் பாதுகாக்கும் பரந்த மனப்பான்மை. இதுதான் விரிந்த பார்வை! இதற்கு மாறாகப் பார்ப்பதுதான் தொழி லாளர்களைச் சிதறடிக்கும் குறுகியப் பார்வை. இந்தத் தெளிவு தொழிற்சங்க இயக்கத்திற்குத் தேவை.

எல்லா திசைதிருப்பங்களையும் போலி புரட்சிக் கூச்சல்களையும் புறந்தள்ளிவிட்டு இந்திய அரசின் தொழிலாளர் பகைச் சட்டங்களை முறியடிக்கும் வகை யில், அனைத்துத் தொழிலாளர்களும், கட்சி களுக்கு அப்பால் ஒன்றுதிரண்டு போராட வேண்டும் என்பதே இக்கருத்தரங்கத்தின் முதன்மையான அழைப்பு!’’.

இவ்வாறு தோழர் கி.வெங்கட்ராமன் பேசினார்.

நிறைவில், தொழிலாளர் பாதுகாப்புப் பேரவை நடைமுறைத் தலைவர் தோழர் ஆர். ஜோதிலிங்கம் நன்றியுரையாற்றினார். இந்நிகழ்வில், தொழிலாளர்களும், தமிழின உணர்வாளர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.

                             

Pin It