தமிழர் கொண்டாடும் தைப்பொங்கள் திருநாளில் தமிழ்ப்புத்தாண்டை தை முதல் நாளில் தொடங்க வேண்டுமென்று ‘தமிழ்க்கடல்’ மறைமலை அடிகள் முழக்கம் எழுப்பினார்.

அதுபோல தைப்பொங்கல் நாளினை தமிழர் திருநாளாக கொண்டாட முதல் முழக்கம் எழுப்பியவர் பேராசிரியர் நமசிவாய முதலியார் ஆவார். சென்னை நகரில் தமது பதிப்பகத்திற்கு பாடநூல் எழுதித்தரும் தமிழாசிரியர்களுக்கு சிறப்புச் செய்திடும் வகையில் ‘தமிழர் திருநாள்’ பெயரில் ஒரு விழாவினை நமச்சிவாய முதலியார் நடத்தி  வந்தார்.

அதன்பிறகு ‘தமிழர் திரு நாள்’ பெயரில் நடத்திய அமைப்பு ம.பொ.சி நடத்திய தமிழரசுக் கழகமாகும். 1964 இல் தொடங்கப்பெற்ற தமிழரசுக் கழகத்தின் முதல் பணியும் இதுவேயாகும். சென்னை மட்டுமல்லாது, தமிழர் வாழும் பிற பகுதியிலும் மாநிலம் கடந்து, நாடு கடந்து தமிழர் திருநாள் விழாவை நடத்துவதற்கு தூண்டுகோலாகவும் தமிழரசுக் கழகம் விளங்கியது.

இந்திய விடுதலை நெருங்கி வந்த தருணத்தில் மிகத் தீவிரமாகத் தெலுங்கர்கள் விசாலா ஆந்திரம் (சென்னை உட்பட) கேட்டும், மலையாளிகள் ஐக்கிய கேரளா கேட்டும் போராடி வந்தனர். அப்போது மா.பொ.சி அவர்கள் தமிழனத்தை ஒன்றுபடுத்தி தட்டியெழுப்புவதற்காக ‘தமிழர் திருநாள்’ விழாவினை நடத்த முடிவு செய்தார். தமிழரசுக் கழகத்தின் சார்பில் ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டார்.

அதில் “தைத்திங்கள் முதல் நாளைத் தமது நாட்டுத் திருநாளாக  தமிழர்கள் கொண்டாடுவது வழக்கம். இவ்வாண்டு அம்முதல் பெருநாள் 1947, சனவரி 14 அன்று வருவதால் இம்முறை தமிழ்நாட்டின் மூலை முடுக்கிலும் சிறப்பாக நிகழ்பெற வேண்டும். காரணம் அது தமிழ்நாட்டிற்கென சுயநிர்ணய அறிக்கையை உறுதி செய்வதாகும்.

சுயநிர்ணயத்தின் வழியே தமிழ்நாட்டின் எல்லை கோரல், அரசியல் அமைப்பை வரையறுத்தல் முதலிய நிகழ்தல் வேண்டும். தமிழகத்தின் விடுலைக் குரிய ஒரு விழாவில் கலந்து உழைக்குமாறு எல்லாக் கட்சியாரை வேண்டுகிறேன். தமிழர் திருநாளை நடத்த தொழி லாளர், மாணாக்கர், முதலிய யாவரும் முற்படுவாராக, தமிழினம் எழுவதாக!’’- என்று அறை கூவல் தரப் பட்டது.

இந்தக் கூட்டறிக்கையில் திரு.வி.க., காமராசர், டி.டி. கிருஷ்ண மாச்சாரி, ப.சுப்பையன், ப.ஜீவா னந்தம், வ.ரா, கல்கி, செங்கல்வராயன் ஆகியோர் கையப்ப மிட்டனர். அப்போது திராவிடர் கழகப் பெரியாருக்கும், பொதுச் செயலாளர் அண்ணா துரைக்கும் இந்தக் கூட்டறிக்கை நகல் அனுப்பப்பட்டது. இருவருமே பதில் தர மறுத்தனர்.

1947 சனவரி 14 இல் அறிவித்த படி தமிழர் திருநாள் விழா தமிழகமெங்கும் நடத்தப்பட்டது. சென்னை செயிண்ட் மோரிஸ் மண்டபத்தில் நடைபெற்ற விழா வில் திரு.வி.க, தெ.பொ. மீனாட்சி சுந்தரம், ரா.பி. சேதுப்பிள்ளை, உள் ளிட்ட பலர் பங்கேற்றுப் பேசினர். அக்கூட்டத்தில் தில்லி அரசின் அரசியல் நிர்ணய சபை உடனடி யாக  மொழிவாரி நாடுகளைப் பிரிக்க வேண்டுமென்றும், ‘குமரி முதல் திருப்பதி’ வரை உள்ள நிலப் பரப்பைக் கொண்ட தமிழகம் அமைக்கப்பட வேண்டுமென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்குப் பிறகும் ஒத்துழைக்க மறுத்த திராவிடர் கழகம் தனியாக “திராவிடர் திருநாள்’’ பெயரிலேயே விழா கொண்டாடத் தொடங் கியது.

பெரியாரிடமிருந்து பிரிந்து தி.மு.க.வை உருவாக்கிய அண்ணாவும் கூட திராவிடர் திருநாள் என்றும், தமிழர் திருநாள் என்றும், இரண்டுவிதமாகக் குழப்பத்தோடு பொங்கல் விழாவை நடத்தி வந்தார். ஆனால் பொங்கல் விழாவைபட்டி  தொட்டியெங்கும் பரவச் செய்ததில் தி.மு.க.வுக்குப் பெரும் பங்குண்டு என்பதை மறைப்பதற்கில்லை.

தற்போது வீரமணி தலைமையில் இயங்கக் கூடிய ‘திராவிடர் கழகம்’ அதே பழைய முறையில் பொங்கல் விழாவை ‘திராவிடர் திருநாள்’ என்று அறிவித்து கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தி வருகிறது. அதில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டமும் உள்ளடக்கம். தமிழர்கள் கொண் டாடும் பொங்கல் விழாவை ஆந்திரகளோ, கர்நாட கத்தினரோ, கேரளத்தினரோ கொண்டாடாத போது “திராவிடர் திருநாள்’’ பெயரில் விழா எடுப்பது யாருக்காக என்று தெரியவில்லை.

நவம்பர் 1 ஆம் நாள் மொழி வழி அமைந்த நாளை கர்நாடக, கேரள, ஆந்திர அரசுகளும், அங்குள்ள அரசியல் இயக்கங்களும் வெகுமக்கள் ஏற்போடு கொண்டாடி வருகின்றன. அன்றைய நாளில் மட்டும் வீரமணி குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருப்பார்.

வீரமணியார் தமிழ்ப் புத்தாண் டை தைமுதல் நாளன்று கொண் டாடுவதை வரவேற்கிறோம். அதே நாளில்தான் திருவள்ளுவராண்டும் பிறப்பும் தொடங்குகிறது என்பதை அவருக்கு நினைவூட்ட விரும்புகிறோம். “திராவிடர் திரு நாள்’’ என்று விளம்பரம் செய்திடும் ‘விடுதலை’ ஏடு அல்லவா திருவள் ளுவராண்டுப் பிறப்பைக் கொண்டாடி இருக்க வேண்டும். இன்றுவரை ‘விடுதலை’ ஏட்டில் பெரியாராண்டு தான் எழுதப்பட்டு வருகிறது. தமிழர்கள் அனைவ ராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட திருவள்ளுவராண்டுக்கு அங்கு இடமில்லை. ‘ஊருக்குப் பலன் சொல்லுமாம் பல்லி! கழனிப் பானையில் விழுந்ததாம் துள்ளி!’’ என்ற பழமொழிதான்  நினைவுக்கு வரும்.

தமிழர்களிடமிருந்து வளர்ந்து வரும் தமிழ்த் தேசிய எழுச்சியைத் தடுக்கும் நோக்கோடு இயங்கும் வீரமணி போன்றோரின் திராவிடத் திரிபுவாதத்தை முறியடித்து  ‘தமிழர் திருநாள்’ விழாவை இன்றும் விரிவு படுத்தி தமிழர்களிடத்தில் கொண்டு சேர்த்திட அயராது உழைத்திடு வோம்!

அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!

துணைநூல்: மா.பொ.சி  “எனதுபோராட்டம்.’’ 

Pin It