மனிதகுலத்தை அச்சுறுத்தும் பருவநிலைப் பேரழிவிலிருந்து முதலாளிய பேராசைக் கொண்ட நாடுகள் மக்களைப் பாதுகாக்க முன்வர மாட்டார்கள் என்பது மீண்டும் ஒருமுறை மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. தென்னமரிக்க நாடான பெரு நாட்டுத் தலைநகர் லிமாவில், கடந்த 2014 திசம்பர் 1 முதல் 14 நாட்கள் வரை நடைபெற்ற பருவநிலை மாநாடு ஏமாற்றத்தில் முடிவ டைந்திருக்கிறது.

லிமா பருவநிலை மாநாடு பெரிய எதிர்பார்ப்புக ளோடு தொடங்கப்பட்ட ஒன்றாகும். ஏனெனில் இம்மாநாடு நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்னால் நவம்பரில் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையில் ஒர் மாசுபாட்டுக் குறைப்பு ஒப்பந்தம் செய்துகொள்ளப் பட்டது. அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பாரக் ஒபா மாவும், சீனக் குடியரசுத் தலைவர் ஜி. ஜின் பிங்கும் இவ்ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டனர்.

இந்த ஒப்பந்தத்தின்படி அமெரிக்கா 2005ஐ ஒப்பிட 2025இ-ல் 28 விழுக்காடு கார்பன்டை ஆக்சைடு உமிழ் வதை குறைத்துக் கொள்வதாக ஒத்துக் கொண்டது. சீனா தனது நாட்டின் கார்பன்டை ஆக்சைடு உமிழ்தல் அளவை 2030க்குப் பிறகு படிப்படியாக குறைத்துக் கொள்வதாகவும், 2030க்குள் தனது மின் உற்பத்தியில் 20 விழுக்காடு கதிரவன் ஒளி மற்றும் காற்றாலை மின்சார உற்பத்திக்கு மாறுவதாகவும் ஒத்துக் கொண்டது.

lima 600

பருவநிலை ஆய்வுக்குழுவின் இறுதி ஆய்வறிக்கையில் 20 செல்சியசுக்கு மிகாமல் வெப்ப உயர்வு இருக்க வேண்டுமானால் கரிம வெளியீடு  900 ஜிகா டன்னைத் தாண்டக் கூடாது எனக் கூறப்பட்டது.? இவ்வாறாக வளி மண்டலத்தில் மீதியுள்ள கார்பன் அளவில் 2030 வரை அமெரிக்கா 16 விழுக்காடும், சீனா 16 விழுக்காடும் எடுத்துக் கொள்வது என இந்த ஒப்பந்தத் தின் மூலம் வளி மண்டலத்தை தாங்களே தங்களுக்குள் பங்கு வைத்துக் கொண்டன. ஏற்கெனவே ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் 2030 வரை மீதமுள்ள கரி உமிழ்தல் அளவில் 15 விழுக்காடு எடுத்துக்கொள்ளப் போவதாக அறிவித்தன.

சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை மீதமுள்ள கார்பன்டை ஆக்சைடு உமிழ்தல் அளவில் 47 விழுக்காட்டை தங்களுக்குள் தம்மிச்சையாக பகிர்ந்து கொண்டன.  உலகில் மீதமுள்ள 161 ஐ.நா. உறுப்பு நாடுகள் இவர்கள் மீதி வைத்துள்ள 53 விழுக்காடு  கார்பன் வெளியை தங்க ளுக்குள் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறான ஓர் நிர்பந்தச் சூழலை அமெரிக்காவும். சீனாவும் உருவாக்கிய பின்னணியில் தான் லிமா பருவநிலை மாநாடு நடை பெற்றது.

ஆயினும் இதுவரையிலும் நடைபெற்ற பருவநிலை மாநாடு களில் அமெரிக்காவும், சீனாவும் மேற்கொண்ட எதிர் எதிர் நிலைகளால் தான் ஒப்பந்தம் எட்டப்பட முடியாமலேயே போனது. இப்போது இவ்விரு நாடுகளிடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு விட்டதால் லிமா பருவநிலை பேச்சுவார்த்தையில் உருப்படியான பருவநிலை வரைவு ஒப்பந்தம் ஒன்று அணியமாகிவிடும் என ஏடுகள் பலவும் நம்பிக்கைத் தெரி வித்தன.

அதனால் தான்  டிசம்பர் 12 வரை இறுதி வரைவு எட்டப்படாத சூழலில் இழுபறி நீடித்ததால் மாநாட்டை 2 நாட்கள் நீடித்தார் கள். 2014 டிசம்பர் 13, 14 ஆகிய இரு நாட்கள் இடைவேளை ஏதுமின்றி இராப்பகலாக பேச்சுவார்த்தை நீடித்தது. இறுதியில் 2014 டிசம்பர் 14, ஞாயிறு இந்திய நேரப்படி பகல் 12.00 மணிக்கு லிமா மாநாட்டின் தலைவர் இமானுவேல் பல்கார் விடால் (பெருநாட்டுச் சுற்றுச் சூழல் அமைச்சர்) முன்வைத்த நான்காவது வரைவு ஒப்பந்தமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஏடுகள் ஏற்படுத்திய எதிர் பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றத் தில் முடிந்தன. 2009 கோபன் ஹேகன் பருவநிலை மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டவாறு புவி வெப்ப உயர்வை 20 செல்சியசுச்குள் நிறுத்த முடியுமா என்ற ஐயம் எழுந்துள்ளது.

ஏனெனில் கட்டுப்படுத்தும் ஒப்பந்தத்தை உருவாக்க முடியாது என சீனாவும் அமெரிக்காவும் பிடிவாதம் பிடித்தன. கோபன் ஹேகனின் முடிந்தது போல பாரிசி லும் வெறும் கோட்பாட்டு அறிக்கை ஒப்பந்தம் என்ற பெயரால் வெளியிடப்படுமோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாடும் தாங்கள் வெளியிடும்  கார்பன்டை ஆக்சைடு அளவை தாங்களே வரையறுத்து முன்வைக்கும். அவை நாடுகளிடை ஆய்வுக் குழு ஒவ்வொரு நாட்டிற்கும் அறிவித் துள்ள வரம்புக்குள் இருக்கும் என்று வார்சா மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இப்போதைய லிமா மாநாட்டில்  வரும் நவம்பர் 2015-க்குள் இந்த வரம்பு அளவை ஒவ்வொரு நாடும் அறிவிப்பதாக ஏற்றுக் கொண்டன. ஆனால் பாரிசு மாநாட்டில் இது கையெழுத்தானப் பிறகு அதன் அடிப்படையில் தான் ஒவ்வொரு நாடும் நடந்து கொள் கிறதா என்று கண்காணிப்பதை சீனாவும், அமெரிக்காவும் ஏற்றுக் கொள்ளவில்லை. இறையாண்மை என்ற காரணத்தைக் கூறி இந்தியா வும் ஏற்க மறுத்தது.

இவ்வாறு  ஒவ்வொரு நாடும் தங்களது கார்பன் வெளியீட்ட ளவை அறிவிக்க வேண்டும் ((Shall Inform)) என்று முதல் வரைவில் இருந்தது. ஆனால் நடந்த இழுபறி யில், இறுதி வரைவு ஒப்பந்தத்தில் அறிவிக்கலாம் ((May Inform)) என்ப தாக மாற்றப்பட்டது.

கியோட்டோ மாநாட்டி லிருந்து பேசப்பட்டு வரும் “பொது வான ஆனால் மாறுபட்ட பொறுப்பேற்பு’’ ((Common but Differential Resposibility) என்பது லிமா வரைவில் இறுதியாக ஏற்கப் பட்டாலும் அதை செயல்படுத்துவ தற்கான குறிப்பான பொறுப்பை வளர்ந்த நாடுகள் ஏற்றுக் கொள்ள முன்வரவில்லை. இக்கோட்பாட்டின்படி வளர்ச்சியடையாத மற்றும் ஏழ்மை நாடுகளின் மாசு பாட்டு குறைப்பு முயற்சிகளுக்கு வளர்ந்த நாடுகள் நிதி உதவி அளிக்க வேண்டும். இது ஆண்டுக்கு 100 கோடி டாலர் என கோபன் ஹேகனில் முடிவானது. இந்த நிதி ஒதுக்கீட்டிற்கு லிமாவிலும் அமெரிக்கா உள்ளிட்ட வளர்ச்சி யடைந்த நாடுகள் ஏற்றுக் கொள்ள முன்வரவில்லை.

இந்த நிலையில் 2015 இறுதியில் நடைபெறும் பாரிசு மாநாட்டில் உருப்படியான பருவநிலை ஒப்பந்தம் எட்டப்படுமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி.

முதலாளிய இலாப வேட்கை, உலகிற்கு ஏற்படும் அழிவைப் பற்றி கவலைப்படுவதில்லை. வளர்ச்சி அடைந்த நாடுகள் உள்ளிட்டு உலகெங்கிலும் உள்ள பல நாடு களில் சுற்றுச்சூழல் பேரழிப்புத் திட்டங்களுக்கு எதிராக பெருமளவிலான மக்கள் இயக்கங்களும், சூழலியல் அறிவாளர்களும் தொடர்ந்து ஏற்படுத்தி வரும் அழுத்தங்கள் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சூழ்நிலையில்கூட லிமா பருவநிலை மாநாடு ஏமாற்றத்தில் முடிந்தது. இது தாராளமய முதலா ளியத்தை அப்படியே வைத்துக் கொண்டு சூழலைப் பாதுகாக்க முடியா. என்ற உண்மையை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

Pin It