காவல்துறையினரின் காவலில் உள்ள ஒருவர் இறந்து போனால், புள்ளி விவரத்தின்படி அது சாதாரணமானது தான். ஆனால், இறந்தவரின் குடும்பத்துக்கு அவர் வெறும் புள்ளி விவரம் அல்ல. குடிமக்களுக்கு அவர்கள் வீடுகளிலும், பணிபுரிந்த வீடுகளிலும் மற்றும் பொது இடங்களிலும் பாதுகாப்பு கொடுக்க வேண்டியகடமை காவல்துறையினருக்கு இருக்கும்போது, ஒரு குடிமகன் காவல் நிலைய வளாகத்திற்குள் இறப்பது என்பது சர்ச்சைக்குரிய தாகும். காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி ஒருவர் உயிரிழப்பது, நீதியையே கேலிக் கூத்தாக்கிவிடும்’’

மேற்கண்டவாறு பேசியவர் வேறுயாருமல்ல, தமிழக முதல்வர் செயலலிதாவின் கூற்று தான் இது.

ஒவ்வொரு ஆண்டும் ஆண்டு இறுதியில்நடை பெறும், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் கூட்டுக்கூட்டம், கடந்த 2013ஆம் ஆண்டு இறுதியில் 13.12.2013 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றபோதே, இவ்வாறு பேசியுள்ளார் முதல்வர் செயலலிதா.

ஒவ்வொரு முறையும் அ.தி.மு.க. தலைவி செயலலிதா ஆட்சிக்கு வரும்போ தெல்லாம், காவல்துறையினரின் அடாவடித்தனங்கள் வரம்புமீறி நடைபெறும். இம் முறையும் அவ்வகையிலேயே அவை நடைபெற்று வருகின்றன. பலமுறை காவல்துறையினரின் அடாவடித் தனங்களை பெருமையாகவே சொல்லிக் கொள்ளும் முதல்வர் செயலலிதா, இம்முறை காவல்துறையினரால் நிகழ்த்தப்படும் காவல்நிலைய மரணங்கள் குறித்து சுட்டிக்காட்டி உரையாற்றியது, காவல்துறை யினர் நடத்தும் எல்லை மீறிய செயல்கள் குறித்த செயலலிதாவின் வெளிப்பாடாகவே அமைந்ததுள்ளது.

முதல்வர் செயலலிதா இவ்வாறு உரையாற்றி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில், 07.01.2014 அன்றுகாவல்துறை ஆய்வாளர் புஷ்பராஜ் என்பவர், கோயில் உண்டியல் திருட்டு வழக்கு தொடர்பாக இழுத்துவரப்பட்ட 15 அகவை இசுலாமியச் சிறுவனான தமீம் அன்சாரியின் வாயில்துப் பாக்கியை வைத்து, குற்றத்தை ஒத்துக்கொள் என ‘விசாரித்துள்ளார்’. அப்போது, ‘திடீரென’ குண்டு பாய்ந்து, அச்சிறுவன் படுகாய மடைந்தான்.

police 600பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ஆதரவாக அவனது உறவினர்களும், இசுலாமிய அமைப்புகளும் கிழக்குக் கடற்கரைச் சாலையை மறித்துப் போராட்டத்தில் அமர்ந்தனர். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக் கூடிய அரசாக இருந்தால், அந்த காவல்துறை ஆய்வாளர் புஷ்பராஜை உடனடியாக பணி நீக்கம் செய்து, அவர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிந்து அவரை சிறைக்கு அனுப்பியிருக்க வேண்டும். ஆனால் இங்கு நடப்பதோ, செயலலிதா ஆட்சி! காவல் துறையினரின் மொழியில் சொன்னால், “போலீசு ஆட்சி’’!

இரண்டு நாட்களுக்குப் பிறகு, அக்காவல்துறை ஆய்வாளர் புஷ்பராஜ் பணியிடை நீக்கம் மட்டும் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தற்போது எழுந்துள்ள களே பரங்கள் சில மாதங்களில் காணமல் போய்விடும் போது, அவர் மீண்டும் பணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுவிடுவார் என்பதே இவ்வறிவிப்பின் மறைபொருள்.

கொடும் குற்றச்செயல்களில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளை வெறும் பணி இடைநீக்கம், இட மாற்றம் போன்ற துறைரீதியான நடவடிக்கைகளுக்கு உட்படுத்துவது மட்டும் போதாது, அவர்கள் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி வழக்குப்பதிய வேண்டுமென பல தீர்ப்புகளில் உச்சநீதி மன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில், 1992ஆம் ஆண்டு பத்மினி என்ற பெண், அவரது கணவர் நந்தகோபால் கண் முன்னேயே காவல் துறையினரால் கூட்டாக பாலியல் வன்கொடு மைக்கு உள்ளாக்கப்பட்டதும், நந்த கோபால் பத்மினி முன்பே அடித் தேக் கொல்லப்பட்டதும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக் காக வந்த போது, இக் கொடுஞ் செயலில் ஈடுபட்ட காவல் துறையி னர் மீது, கொலைப் பிரிவான இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 302-ன் கீழ் ஏன் வழக்குப் பதிய வில்லை என்பது ஆச்சரியமளிப்ப தாக, கேட்டது உச்சநீதி மன்றம்.

இதைவிட மிகக் கொடு¬மான செய்தி, குற்றமிழைத்தக் காவல்துறை யினர் மீது குற்றவியல் சட்டப்படி நடவடிக்கையோ, முதல் தகவல் அறிக்கையோ இல்லாதபோது, பாதிக்கப்பட்டவரது குடும்பங்க ளால் சரியான நிவாரணம் கூட பெறமுடியாது என்பது தான்!

தற்போது, காயம்பட்டுள்ள அச் சிறுவன் தமீம் அன்சாரியின் தந்தை சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். தந்தை இறந்த பிறகு படிப்பதற்கு வசதியின்றி, அச்சிறுவ னும் அச்சிறுவனின் தாய் சபினா பேகமும்,ஒரு உணவகத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் தான் இந் நிகழ்வு நடைபெற் றுள்ளது.

ஏழைக் குடும்பமான எம்மிடம் அச்சிறுவனின் கடினமான காயத் திற்கு சிகிச்சைசெய்யும் அளவிற்கு பணமேதும் இல்லை என்பதால், அச்சிகிச்சை செலவு முழுவதையும் தமிழக அரசே ஏற்க வேண்டு மென் றும், இந்நிகழ்வு குறித்து நீதிபதி தலைமையில் விசாரிக்க வேண்டும் என்றும் கோரி சென்னை உயர் நீதி மன்றத்திடம் முறையிட்டார், தாயார் சபினா பேகம். அம்முறை யீட்டை ஏற்றுக் கொண்டு சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு 10.01.2014 அன்று அதை உத்தரவாகப் பிறப்பித்தது.

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட 3 நாட்கள் கழித்து, 13.01.2013 அன்று இந்நிகழ்வு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட தமிழக முதல்வர் செயலலிதா, அச் சிறுவனின் சிகிச்சை செலவை தமிழக அரசு ஏற்றுக் கொள்ள தாம் “ஆணையிட்டு’’ இருப்பதா கவும், அக்குடும்பத்திற்கு 1 இலட்சம் ரூபாய் நிவாரணம் அளிப்பதாகவும் தெரிவித்தார்.

அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற மே 2011லிருந்து அக்டோபர் 2013 வரை, 29 காவல் நிலையக் கொலை கள் நடந்துள்ள தாக, மக்கள் கண் காணிப்பகம் (Peoples’s Watch) - மனித உரிமை அமைப்புத் தெரிவிக் கிறது. கடந்த மாதம் கூட, 28.12. 2013 அன்று திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்திலுள்ள ஆலிவலம் காவல் நிலைய எல்லைக் குட்பட்ட நங்காளி கிராமத்தைச் சேர்ந்த சுந்தர்என்ற இளைஞர், காவல்துறையினரின் ‘விசாரணை’யில் கொல்லப்பட்டார்.

தமிழகத்தில் மட்டுமின்றி, இந்தியாவெங்கும் இப்போக்குக் காணப்படுகின்றது. தேசிய மனித உரிமைகள் ஆணையம், கடந்த 2001-2010ஆம் ஆண்டுகளில் மட்டும் 1504 பேர் காவல்துறை காவலிலும், 12,727 பேர் நீதிமன்றக் காவலிலும் என மொத்தமாக 14,231 பேர் அரசுக் காவலில் மரணமடைந்திருப்பதாகத் தெரிவிக்கிறது. காவல்துறைக் காவ லில் மரணமடைந்தவர்களில் 99.99 பேர் காவல்துறையினரின் கடுமை யான சித்தரவதையின் காரணமாக மரணமுற்றவர்கள் தான் என மனித உரிமைகளுக்கான ஆசிய மையம் (Asian Centre for Human Rights) என்ற தன்னார்வ அமைப்புத் தெரிவிக்கிறது.

தமக்கு அளிக்கப்பட்ட அதிகார வரம்பைக் கொண்டு மக்கள் சிக்கல்களைத் தீர்க்க முயல்வதை விட, அந்த அதிகார வரம்பைக் கொண்டு எவ்வகையில் எப்படியெல்லாம் பணம் ஈட்டலாம் என ஆராயும் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் இருக்கும் வரை, காவல்துறையும் அப்படியேத்தான் இருக்கும் என்ப தில் ஐயமில்லை. இதன் காரண மாகவே, தம்மை அணுகும் பொது மக்களை தரக்குறைவாகவேக் கருது கின்றப் போக்கு காவல்துறையி னரிடம் இருக்கின்றது. இதன் காரணமாகவே, சட்டம் - ஒழுங்கைப் பாதுகாத்து, சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டிய காவல் துறையினர், சட்டத்தை மீறி நடந்து கொள்வதே நடைமுறை ஆகிவிட் டது.

ஒருவரைக் கைது செய்யும் போது என்னென்ன நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பதற்கான 11 விதிமுறைகளை வகுத்த வரலாற்று சிறப்புமிக்கத் தீர்ப்பை 18.12.1996 அன்று திலீப் குமார் பாசு வழக்கில் உச்சநீதி மன்றம் வழங்கியது. இவை அனைத்தும் கண்டிப்புடன் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றதுடன், அந்த விதிகளை ஒவ்வொரு மாநில அரசும், அந்தந்த மாநில மொழிகளில் தமது காவல் நிலையங்களில் பெரிய அளவில் மக்களுக்குத் தெரியும்படி வைக்க வேண்டு மெனவும் உத்தர விட்டது.

இந்த சிறப்புவாய்ந்தத் தீர்ப்பை ஒவ்வொரு மாநிலத்திலும் செயல் படுத்த, மக்கள் பெரும் போராட்டங்களையே நடத்த வேண்டியிருந்தது. முதலில், அத்தீர்ப்பை நடை முறைப்படுத்த முன்வராத தமிழக அரசை எதிர்த்துசென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநலவழக்குத் தாக்கல் செய்யப்பட்டதன் விளைவாகவே, அப்பதினோரு விதிகளையும் தமிழகக் காவல் நிலையங்களில் எழுதி வைக்க ஒப்புக் கொண்டது, தமிழக அரசு. அந்தளவிற்கு மனித உரிமைக்களில் அக்கறை கொண்ட வர்களாக விளங்கியவர்கள்தாம் நம் ஆட்சியாளர்கள்!

அவ்விதிகளும், நடைமுறையில் செயல்படுத்தப்படுகின்றனவா என்பது கேள்விக்குறியே! அவை கடைபிடிக்கப்படுகின்றனவா என கண்காணிப்பதற்கான எந்த பொறியமைவையும் உச்சநீதிமன்றம் ஏற்படுத்தாத நிலையில், அது வெறும் எழுதி வைக்கப்பட்ட அறிவிப்பாகவே இன்றைக்கும் அனைத்துக் காவல் நிலையங்களிலும் இருக்கின் றது.

அண்மையில் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தமிழகம் வந்த போது, அவருக்குக் கருப்புக் கொடி காட்டுவார்கள் எனக் கருதி இயக்குநர் வ.கௌத மன் உள்ளிட்ட மாணவர்களையும், இளைஞர்களையும் நள்ளிரவில் வீடுபுகுந்து கைது செய்தது தமிழகக் காவல்துறை. பெற்றோர்களும், சுற்றத்தாரும் கேட்டும் கூட அவர் களை எங்கு கொண்டு செல்கிறோம் எனச் சொல்லாமல், அவர்கள் அனைவரையும் சட்ட விரோ தக் காவலில் வைத்தும், தாக்கியும் கொடுமைப்படுத்தியது காவல்துறை.

ஊடகங்களில் நன்கு அறியப் பட்ட இயக்குநர் வ.கௌதமன் அவர்களையும், தமிழீழ விடுதலைக்காக களப்போராட்டம் நடத்திய மாணவர்களையுமே இவ்வாறு அடித்து நொறுக்கிய தமிழகக் காவல்துறையினர், ஒரு குற்றமும் செய்யாத அப்பாவிகளை எப்படி யெல்லாம் பாடுபடுத்தியிருப்பார் கள்?

டி.கே.பாசு நெறிமுறைகள் ஒவ்வொரு காவல் நிலையங்களில் எழுதி வைக்கப்பட்ட அதே கால கட்டங்களில் தான், காவல்துறையின் காவலில் நிகழுகின்ற சித்திரவதைகள், கற்பழிப்புகள், மரணங்கள் என தொடர்ச்சியான நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதுமறுக்கமுடியாத உண்மை.

காவல் நிலைய மரணங்கள் மற்றும் சித்திரவதைகள் போலவே, நீதிமன்றக் காவலில் சிறைச் சாலை களில் அடைக்கப்படும் சிறைவாசிகள் அவ்வப்போது அங்குள்ள காவலர்களால் தாக்கப்பட்டுக் கொல்லப்படுவதும், உரிய மருத்துவ வசதிகள் கிடைக்காமல் சிறைக்குள்ளேயே நோய் வாய்ப்பட்டு மரணத்தை நோக்கித் தள்ளப்படு கின்ற அவலமும் நடைபெற்றுக் கொண்டுள்ளது.

குடியுரிமைப் பாதுகாப்பு நடுவத் தின் வழக்கறிஞர் கே.சேகவன், தமிழகச் சிறைகளில் கடந்த 2000 சனவரி முதல் 2013 பிப்ரவரி வரை மட்டும், சற்றொப்ப 1095 பேர் இறந்துள்ளதாகவும், சிறையாளிகளுக்கு முழுமையான மருத்துவ வசதி அளிக்கப்படாத காரணத்தி னால் தான் அதிகளவிலானவர்கள் சிறைக்குள்ளேயே நோய் வாய்ப் பட்டு மடிந்துள்ளனர் என்றும் இது குறித்து முறையாக விசாரணை நடத்த வேண்டுமெனவும் வழக்குத் தாக்கல் செய்தார். இது குறித்து, பதிலளிக்கும்படி அரசுக்கு நீதி மன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் தான், கைது செய்ய பட்டவர்களின் உரிமைகளைக் காக்கடி.கே.பாசு வழக்கில் பிறப்பிக் கப்பட்ட அந்த 11 நெறிமுறைகள் மட்டும் போதாது என கருதிய உச்ச நீதிமன்றம், இவ்வழக்கின் தீர்ப்பை மேலும் செழுமைப்படுத்தும் வகையில் அதற்கு உதவி செய்வதற்காக நடுநிலை விரிவுரையாளர் குழுவை (Amicus curiae) நியமித் தது.இக்குழுவினர், இத்தீர்ப்புக்கு மேலும் வலுசேர்க்கும் வகையிலான பரிந்துரைகளை உச்சநீதிமன்றத்திற்கு அளிப்பர். அதன்படி, உச்சநீதி மன்றம் உத்தரவுகளைப் பிறப்பிக்கும்.

இதன்படி, உச்சநீதிமன்றம் நியமித்த விரிவுரையாளர் குழு கடந்த திசம்பர் 2 அன்று, பல பரிந்துரைகளை நீதிமன்றத்திற்கு வழங்கியுள்ளது.நீதிமன்றம் மற்றும் காவல் துறையினரின் காவலில் நிகழுகின்ற சித்திரவதை, பாலியல் வன்புணர்வு மற்றும் மரணங்கள் ஆகியவற்றைத் தடுப்பதற்கான ஒரு முயற்சியாக நாடெங்கிலும் உள்ள காவல் நிலையங்கள் மற்றும் சிறைச் சாலைகளில் கண்காணிப்பு ஒளிப்படக் கருவிகளை (CCTV Cam eras) நிறுவ வேண்டும் என்பதும், இப் பணியை 1 ஆண்டுக்குள் முடிக்க வேண்டுமென்பதும் அப்பரிந்துரைகளில் முக்கியமான ஒன்று.

பல்லாண்டுகளாக மனித உரிமை ஆர்வலர்கள் முன்வைத்த இக் கோரிக்கையை, தற்போது உச்ச நீதிமன்றம் அமைத்த அறிவுரைக் குழுமமே பரிந்துரைத்துள்ள நிலையில், இதை உச்ச நீதிமன்றம் உத்தரவாகப் பிறப்பிக்க வேண்டும். உத் தரவு பிறப்பிப்பதோடு மட்டுமல்லாமல் மாநில அரசுகள் இதை சரிவர கடைபிடிக்கின்றனவா எனக் கண்காணிப்பதற்கான அதிகாரம் கொண்ட கண்காணிப்புப் பொறிய மைவை ஏற்படுத்த வேண்டும். இது காவல் மரணங்களையும், சித்திரவ தைகளையும் ஓரளவு குறைக்க உதவும்.

இன்னொரு முக்கியமான சிக்கலை தமிழகம் எதிர்கொள்ள விருக்கிறது.

தமிழகமெங்கும் தற்போது, மிகை எண்ணிக்கையிலான அயலார் குடியேற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. பீகார், உத்தி ரப்பிரதேசம், ராஜஸ்தான், கேரளா என பல்வேறு அயலினத்தார் தமிழகத்தில் இவ்வாறு குடியேறிக் கொண்டுள்ளனர்.

இவர்களது குடும்பத்தினர் வாக்காளர் அட்டை - குடும்ப அட்டை - ஆதார் அட்டை ஆகியவற்றைப் பெறுவதன் மூலம், இங்கேயே நிரந்தரமாகத் தங்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொள்கின்றனர். இவர் களது குடும்பத்தினர், அவர்கள் குடியேறியுள்ள பல பகுதிகளிலும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கல்வி பெறுகின்றனர். இவை போதாதென்று, தமிழக அரசே தமிழ்வழிக் கல்வியை அகற்றி விட்டு, இவ்வகை அயலார் களின் வசதிக்காக ஆங்கில வழிக் கல்வியைக் கடந்த ஆண்டு முதல் தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது. மேலும் பல மாவட்டங்களில், தமிழர்களின் தாய்மொழியை அகற்றிவிட்டு ஆங்கிலத்தைத் திணிக்கும் தமிழக அரசு, இந்திக் காரர்களின் பிள்ளைகள் மட்டும் அவர்களது தாய் மொழியான இந்தியைப் படிக்கட்டும் என இந்திப் படிப்பதற்கான பல சிறப்பு ஏற்பாடுகளை செய்துத் தருகிறது.

இவ்வாறு தமிழகத்தில் வளரும் அயல் இனத்தைச் சேர்ந்த மாணவர்கள், பத்தாம் - பன்னிரெண்டாம் வகுப்புகளைக் கடந்து கல்லூரி படிப்புகளை முடித்த பின்னர், தமிழக அரசுப் பணிகளுக்கான (TNPSC) தேர்வுகளுக்கும் போட்டி யிடுவதன் மூலம், தமிழக அரசுப் பணிகளில் இவர்கள் எளிதில் அமர்ந்து விடுவர்.

தற்போது, தமிழ்த் தெரிந்த தமிழர்களைக் கொண்டு செயல் படும் தமிழக அரசுத் துறை நிறுவ னங்களிலேயேகூட, மக்கள் பிரச்சி னைகளைப் புரிய வைக்க நாம் படாதபாடு படுகிறோம். கையூட்டு இல்லையேல் காரியம் சாதிக்க முடியாது என்ற நிலை பல அலுவலகங் களில் உள்ளது. நாளை, இதே நிர் வாகத்தில் வேற்று மொழியினர் கணிசமாக அமரும் போது, தமிழர் களின் பிரச்சினைகளை நம் மொழி யிலேயே எடுத்துக் கூற முடியுமா? கூறினாலும் அதை தீர்த்து வைக்கும் அக்கறையும், ஆர்வமும் அவர்களுக்கு இருக்குமா? தற்போதுள்ள கையூட்டு அலுவலகங்களின் அளவும் எண்ணிக்கையும் மட்டும் தாள் இதனால் அதிகரிக்கும்.

கர்நாடகத்தில் காவிரிக்காகப் போராடுபவர்கள் மீது தடியடியோ, வழக்குப் பதிவோ செய்வதில்லை அம்மாநிலக் காவல்துறை. முல்லைப் பெரியாறில் அடாவடித்தனமாகப் போராடும் மலையாளிகளுக்கு அம்மாநிலக் காவல்துறை பாதுகாப்பு மட்டுமே வழங்குகிறது. ஆனால், தமிழகத்தில் மட்டும் தான் தனது சொந்த இனத்தின் பிரச்சி னைக்காக மக்கள் போராடினால் கூட, அம்மக்கள் மீது தீராவன்மத்துடன் காவல்துறை பாய்ந்து குதறுகின்றது.

தமிழகக் காவல்துறையினரின் இந்த வன்மத்திற்கு, அரசிற்குத் தலைமை தாங்கும் தி.மு.க. -அ.தி.மு.க. கட்சிகளின், சொந்த இனத்தை ஒடுக்கி இந்திய அரசுக்குக் கங்காணி வேலை பார்க்கும் இனத் துரோகம் முதன்மைக் காரணமாக இருந்தாலும், காவல்துறையில் முக்கியப் பொறுப்புகளில் அங்கம் வகிக்கும் அயல் மொழிக்காரர்களின் வன்ம மும் இதனுடன் இணைந்தே வரு கின்றது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

2008- 2009ஆம் ஆண்டுகளில் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்தில் செயலாற்றியவர்களை ஒடுக்கியதில், அப்போது சென்னை புறநகர் காவல் துறை ஆணையராக இருந்த மார்வாடியான ஜாங்கிட்டுக்கு, உளவுத் துறை அதிகாரியாக இருந்த ஜாபர் சேட் ஆகியோருக்கு பங்கி ருந்ததை நாம் மறுக்க முடியுமா? கூடங்குளம் அணுஉலைப் போராட்டத்தை ஒடுக்கியதிலும், முல்லைப் பெரியாறு அணைப் போராட்டத்தை ஒடுக்கி யதிலும், அப்போது தமிழகக் காவல் துறை துணைத் தலைவராக இருந்த மலையாள இனத்தைச் சேர்ந்த ஜார்ஜூக்கு பங்கிருந்தது. அவரே தற்போது சென்னை மாநகர ஆணையர்.தமிழகக் காவல்துறை அதிகாரிகளாகத் தமிழர்களை நியமித்துவிட்டால், தமிழர்கள் மீதான அடக்கு முறைகள் இருக் காது என நாம் கூறவில்லை.

இவ்வாறு அயல் இனத்தார் தமிழகக் காவல்துறைப் பணிகளில் இன்றைக்கே ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், நாளை நிலை என்ன என்பதை நாம் கவனத்துடன் சிந்திக்க வேண்டும். தமிழகத்தின் முதன்மையான காவல்துறைப் பொறுப்புகளில் தமிழகத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகளே நியமிக்கப்பட வேண்டுமென, காவல்துறைக்கு வெளியேயும் உள்ளேயும் போராட்டங்கள் நடை பெற்றால்தான் இது நடக்குமா னால், அதற்கும் நாம் தயாராக வேண்டும்.

Pin It