வழக்கறிஞர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே அவ்வப்போது நடைபெறும் மோதல்களும், இந்த சம்பவங்களைத் தொடர்ந்து மீடியாக்களில் வெளியாகும் செய்திகளும் பொதுமக்களுக்கு, வழக்கறிஞர்கள் மேல் கடும் அதிருப்தியையும், அச்சத்தையும் ஏற்படுத்தக்கூடும். வழக்கறிஞர்களை சண்டைக்காரர்களாகவும், சட்டத்தை மதிக்காதவர்களாகவும் உருவகப்படுத்தும் நோக்கத்தில் மீடியாக்களின் உதவியுடன் காவல்துறை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

Chennai court அண்மையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து, சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய வழக்கறிஞர்களும், காவல்துறையினரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று முதலமைச்சர் உட்பட பலதரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். பத்திரிகைகளில் பரவலாக இந்த செய்திகள் தொடர்ந்து வெளிவருவதால் இந்த கருத்துகளை மக்கள் ஏற்கும் நிலையும் ஏற்பட்டுவிடலாம். ஆனால் வழக்கறிஞர்களும், காவல்துறையினரும் எதிரெதிர் நிலையில் இருப்பதே மக்களுக்கு நல்லது. இவ்விரண்டு தரப்பினரும் ஒன்றுபட்டுவிட்டால் அது பொதுமக்களை மட்டுமல்ல; மாற்றுக்கருத்து கொண்ட அரசியல் தலைவர்களையும், சமூகத்தலைவர்களையும், சிந்தனையாளர்களையும், எழுத்தாளர்களையும், பத்திரிகையாளர்களையும்கூட பெருமளவில் பாதிக்கும்.

மக்களாட்சி நடைபெறுவதாக கருதப்படும் இந்தியா போன்ற நாடுகளில், மக்கள் எந்த பிரச்சினைக்காக போராடினாலும் அங்கே குண்டாந்தடிகளுடன் வந்து போராட்டக்காரர்களை எதிர்கொள்வது காவல்துறையினர்தான். அந்த போராட்டங்களின் நியாயம் குறித்தோ, போராடும் மக்களின் உரிமைகள் குறித்தோ காவல்துறையினர் கவலைப்படுவதில்லை. அதற்குப் பதிலாக ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கே காவல்துறையினர் முன்னுரிமை கொடுக்கின்றனர். எனவே எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், எந்த முக்கியமான காரணமாக இருந்தாலும் போராட்டம் என்பதே நடக்கக்கூடாது; அனைத்து சமூக அநீதிகளையும் மக்கள் சகித்துக்கொண்டு அமைதியாக இருக்க வேண்டும் என்பதே காவல்துறையினரின் கருத்தாக உள்ளது.

தற்போது இருக்கும் நிலையிலிருந்து மேம்பட்ட நிலையை அடையப் போராடுவது, மனிதர்களுக்கு மட்டுமல்ல - அனைத்து உயிர்களின் இயல்பு. நாட்டில் ஆட்சிக்கு வரும் அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களின் உரிமைகளுக்காகப் போராடுவதன் மூலமே மக்களின் ஆதரவையும், அவர்களுடைய வாக்குகளையும் பெற்று ஆட்சியை கைப்பற்றுகின்றனர். ஆனால் அதே கட்சிகள் ஆட்சியைப் பிடித்தவுடன், மக்களின் நியாயமான போராட்டங்களைக்கூட இரும்புக்கரம் கொண்டு அடக்குகின்றனர். இதற்கான காரணத்தை ஆராய்ந்தால், போராட்டம் என்பது சமூக இயங்கியலின் தவிர்க்க இயலாத, முக்கியமான பகுதி என்பதைப் புரிந்துகொள்ள மறுக்கும் ஆட்சியாளர்கள், எந்தப் போராட்டத்தையும், அவர்களுடைய ஆட்சிக் கட்டிலை கவிழ்க்கும் சதியாகவே பார்க்கின்றனர். எனவே அனைத்துப் போராட்டங்களையும் என்ன விலை கொடுத்தேனும் அடக்க முயற்சிக்கின்றனர்.

இந்தப் போராட்டங்களின் காரணம் குறித்தோ, அவற்றின் நியாயம் குறித்தோ எந்தவிதமான பரிசீலனையும் செய்யாமல் காவல்துறையினர் போராட்டக்காரர்களை அடக்க முயற்சிப்பது அன்றாட நடைமுறை ஆகிவிட்டது. மக்களின் பிரச்சினைகளை உரிய முறையில் பேசித்தீர்ப்பதற்குப் பதிலாக குண்டாந்தடிகள் மூலமாகவும், பொய் வழக்குகள் மூலமாகவும், தேவைப்பட்டால் துப்பாக்கிச்சூடு நடத்தியும் போராட்டத்தை அடக்கும் காவல்துறைக்கு மூளை இல்லையா? அல்லது இதயம் இல்லையா? என்ற கேள்வி எழலாம்.

இதற்கான பதிலை கண்டறிய சமூகவியல், உளவியல் மற்றும் அரசியல் ரீதியான புரிதல் அவசியம். இதன் முதல் கட்டமாக காவல்துறையினரைப் பற்றி பார்க்கலாம்.

இந்தியாவில் உள்ள காவல்துறையினரை உத்தேசமாக மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதல் பிரிவினர் உயர் அதிகாரிகள். உயர்குலத்தோரும், இடைநிலை ஆதிக்க சாதிகளும் இடம்பெற்றுள்ள இப்பிரிவில் இருப்பவர்களுக்கு ஆட்சித் தலைமையோடும், அரசியல் கட்சித் தலைமைகளோடும் நெருங்கிய தொடர்புகள் இருக்கும். ஆட்சித்தலைமையின் கட்டளைக்கிணங்க செயல்படுவதைப்போல பாவனை செய்து கொண்டே தங்கள் சொந்த விருப்பு-வெறுப்புகளை நிறைவேற்றிக்கொள்வதில் இவர்கள் திறமைசாலிகள். இதற்காக அரசியல் தலைமைகளின் குடும்பத்திலேயே குழப்பம் ஏற்படுத்தும் வல்லமையும் இவர்களுக்கு உண்டு.

இவர்கள் செய்யும் எந்த பாதகச் செயலையும், இவர்களுக்கு எதிரான நிரூபணம் இன்றி செய்யும் ஆற்றலும் இவர்களுக்கு உண்டு. பல அரசியல்வாதிகள் மற்றும் பெரும்புள்ளிகளின் தனிப்பட்ட ரகசியங்களை தெரிந்து வைத்திருப்பதே இவர்களின் பலமாக இருக்கும். சட்டத்திற்குப் புறம்பான வழிகளில் செல்வம் சேர்ப்பதில் இவர்கள் அரசியல்வாதிகளுக்கும், தொழில் அதிபர்களுக்கும் சளைத்தவர்கள் அல்ல.

இவர்களை அடுத்து இருப்பவர்கள் இடைநிலை அதிகாரிகள். இவர்களுக்கு சட்டப்படியான அதிகாரம் சற்று குறைவாகவே இருந்தாலும் “எக்ஸ்ட்ரா வருமான”த்திற்கு எந்த குறைவும் இருக்காது. அதை மேலிடத்திற்கு எந்த அளவு உண்மையாகவும், நேர்மையாகவும் பங்கிடுகிறார் என்பதே இவர்களின் நேர்மைக்கு உரைகல். இந்த உரைகல்லின்படி நேர்மையானவர்கள் மேலும் அதிக வருமானம் வரும் இடங்களில் அமர்த்தப்பட்டு ஆசிர்வதிக்கப்படுவர். வருமானம் மட்டுமன்றி காவல்துறையின் பிம்பத்தைப் பாதுகாக்கும் பணியும் இவர்களிடமே இருக்கும். அதாவது பொதுமக்களை எப்போதும் அச்சத்திலேயே வைத்திருக்க வேண்டிய மிக முக்கியமான பணி இவர்களுடையதே. இதற்காக, என்கவுண்டர் என்ற பெயரில் திட்டமிட்ட படுகொலைகள், காவல் நிலைய பாலியல் வல்லுறவுகள், காவல் நிலைய சித்ரவதைகள் போன்ற பெரும்பாலான மனித உரிமை மீறல்களில் நேரடியாக ஈடுபடுபவர்கள் இந்த இடைநிலை அதிகாரிகளே. நடுநிலையாக இருக்க வேண்டிய பத்திரிகையாளர்களை, அவர்களை அறியாமலே காவல்துறையின் ஆள்காட்டி(இன்ஃபார்மர்)களாகவும், பொதுத்தொடர்புக் கருவிகளாகவும் உருமாற்றும் கலை அறிந்தவர்கள் இவர்கள்.

காவல்துறையில் கடைநிலை ஊழியர்களை விரிவாக விளக்க வேண்டியதில்லை. அன்றாட வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் பல காவல்துறையினரும் கடைநிலை ஊழியர்களே. கவுரவமாக குடும்பம் நடத்தத் தேவையான ஊதியம்கூட இல்லாமல் எப்போதும் செயற்கையான வறுமைக்குள்ளேயே வாழுமாறு ஆட்சியாளர்களால் நிர்பந்திக்கப்படுபவர்கள் இவர்கள். பணிநேர வரையறை, பணிப்பாதுகாப்பு, சங்கம் அமைக்கும் உரிமை போன்ற அடிப்படையான மனித உரிமைகள் இவர்களுக்கு சட்டபூர்வமாகவே மறுக்கப்படுகிறது. எனவே இவர்களுக்கு மற்றவர்களின் மனித உரிமைகள் குறித்த உணர்வே இல்லாமல் மறத்துப்போகும் நிலை ஏற்படுகிறது.

ஆட்சியாளர்களுக்கும், அரசியல் கட்சியினருக்கும், சினிமாத் துறையினர் - கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் போன்றவர்களுக்கும் பாதுகாப்பு கொடுக்கும் பணியிலேயே இவர்களின் பெரும்பாலான வேலைநேரம் போய்விடும். அந்த நேரங்களில் சிறுநீர் கழிக்கக்கூட வாய்ப்பின்றி அவதிக்குள்ளாகும் இவர்களின் கோபம் அனைத்தும் அவ்வப்போது அப்பாவி மக்கள்மீது திரும்பும்.

இடைநிலை ஆதிக்கச்சாதிகளை சேர்ந்தவர்களே இந்த கடைநிலை காவலர் பதவிகளில் அதிகம் இருக்கின்றனர். சாதிவேறுபாடுகளை பகுத்தறிவு மூலம் புறந்தள்ளக்கூடிய அளவிற்கு இவர்களுக்கு கல்வியோ, விழிப்புணர்வோ இருப்பதில்லை. தங்கள் பிரச்சினைகளுக்கான காரணத்தைக் கண்டறியும் பக்குவம் இல்லாமல், அவற்றைக் களையும் வழி குறித்து யோசிக்காமல் வாழும் இந்த கடைநிலை காவலர்களின் அதிகாரம் செல்லக்கூடிய ஒரே இடம் அப்பாவி பொதுமக்கள்தான். அப்பாவி பொதுமக்களிடமும், குறிப்பாக தலித் மக்களிடம் இவர்கள் நடந்து கொள்ளும் விதம் யாவரும் அறிந்ததே.

கடைநிலை காவலர்களை இத்தகைய நிலையிலேயே வைத்திருப்பதில் அரசும், உயரதிகாரிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்ற உண்மைகள் பெரும்பாலும் பொதுத்தளங்களில் விவாதிக்கப்படுவதில்லை. இந்த கடைநிலை காவலர்களும் வாய்ப்புக்கேற்ற லஞ்ச ஊழலில் அவ்வபோது ஈடுபடுவார்கள். ஆனால் நியாயமான ஊதியம் இல்லாத காரணத்தால் லஞ்ச ஊழலில் ஈடுபடும் இந்த கடைநிலை காவலர்கள் ஈட்டும் பணம் அவர்களின் அன்றாட செலவுக்குக்கூட போதாது. அதேநேரம் லஞ்ச ஊழல் தடுப்புப் பிரிவினரிடம் அவ்வப்போது சிக்குபவர்கள் இந்த கடைநிலை காவலர்கள் மட்டும்தான்.

மக்களாட்சி என்ற கருத்தியலின் உண்மைப் பொருள் புரியாமலே வாக்களிக்கும் பெருந்திரளான மக்கள் வசிக்கும் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளிலும், தேர்தல் என்ற நடைமுறையே வழக்கொழிந்துபோன நாடுகளிலும் காவல்துறை என்பது ஆட்சிப்பொறுப்பில் இருப்போரின் ஏவல் படையாகவே செயல்படுகிறது. ஆட்சியில் இருப்பவர்களைப் பாதுகாக்க எந்த பாதக செயலிலும் ஈடுபடுவதற்கு தயாராகவே அந்த காவல்துறை திட்டமிட்டு கட்டமைக்கப்படுகிறது. இத்தகைய நாடுகள் அனைத்திலும், காவல்துறையை கண்காணிப்பதற்கோ, கட்டுப்படுத்துவதற்கோ சட்டப்பூர்வ அமைப்புகள் இருப்பதில்லை, வழக்குமன்றங்கள் உட்பட. மனித உரிமை மீறல்கள் குறித்து ஆதாரங்களுடன் செய்திகள் வெளியாகும் சந்தர்ப்பங்களில் கடைநிலை காவலர்களை பலிகொடுத்து உயரதிகாரிகள் தப்பிவிடுவதும், அதற்கான பரிசுபோல அந்த உயரதிகாரிகளுக்கு பதவி உயர்வுகள் கிடைப்பதும் மிகவும் சாதாரணமாக நடைபெறுகிறது.

இந்த காவல்துறையினரும் ஒரே அணியாக இருக்கக்கூடாது என்பதில் ஆளும் சக்திகள் மிகவும் தெளிவாகவும், திட்டமிட்டும் செயலாற்றுகின்றன. இதனால்தான் காவல்துறையில் எண்ணற்ற பிரிவுகள் ஏற்படுத்தப்படுகின்றன. அவைகளுக்குள் உரிய தகவல் தொடர்புகள் இல்லாமல் இருப்பதோடு, ஒரே விவகாரம் குறித்து நேரெதிர் பார்வைகளோடும் (உ-ம்: இலங்கைப் பிரசினை) இந்த பிரிவுகள் செயல்படுகின்றன.

இந்த காவல்துறையினருக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் பெரும்பாலும், வெள்ளையர்கள் இந்தியாவை ஆண்டபோது வடிவமைக்கப்பட்டவையே. அதனால்தான் “காவல்துறை உங்கள் நண்பன்” என்று எழுதிவைத்திருந்தாலும் காவலர்களின் சீருடையுடன் லத்தி போன்ற ஆயுதங்களும் தவறாமல் இடம் பெறுகின்றன.

வழக்கறிஞர், பத்திரிகையாளர் அல்லது அரசியல் பிரமுகர் போன்றோரின் துணையின்றி காவல் நிலையம் செல்லும் யாரும் காவல்துறையினரின் மோசமான அணுகுமுறையிலிருந்து தப்ப முடியாது. பாதிக்கப்பட்ட ஒருவர் புகார் கொடுக்கச் சென்றால்கூட அவரிடமிருந்து எந்த கையூட்டும் பெறாமல் அந்தப் புகாரை பதிவு செய்து நேர்மையாக நடவடிக்கை எடுக்கும் காவல் நிலையங்களையும், அதிகாரிகளையும் விரல்விட்டு எண்ணிவிடலாம். ஒருவேளை அந்தப் புகாரில் எதிரியாக இருப்பவர் செல்வாக்கு மிக்கவராக இருந்துவிட்டால், புகார் கொடுக்கப்போனவரே எதிரியாக்கப்பட்டு தண்டிக்கப்படும் அபாயங்களும் நிறையவே உண்டு.

இது தவிர கொலை, கொள்ளை, திருட்டு, விபத்து போன்ற தவிர்க்கமுடியாத சம்பவங்களில்கூட காவல்துறையின் செயல்பாடு நடுநிலையாக இருப்பதில்லை. செல்வாக்கு மிக்கவர்களுக்கு ஆதரவாகவும், ஏழைகளுக்கும், நலிந்தவர்களுக்கும், ஆதரவற்றோருக்கும் எதிராகவுமே காவல்துறையினர் செயல்படுகின்றனர். இதை காவல் நிலையத்தை அணுகும் அனைவரும் அனுபவபூர்வமாக உணரலாம்.

ஆனால் இவை அனைத்தையும் இயல்பான ஒன்றாக பொதுமக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டனர் என்பதே கசப்பான உண்மை. இந்த சமூக அநீதிகளை களைய வேண்டிய அரசுத்தலைவர்களே, “லஞ்சமும், ஊழலும் உலகம் முழுதும் இருக்கிறது” என்றும், “தேன் எடுப்பவன் புறங்கையை நக்காமல் இருப்பானா?” என்பது போன்ற கேள்விகள் மூலமாகவும் இந்த நெறியற்ற செயல்களை அங்கீகரிக்கின்றனர். நேர்மையான செயல்பாடுகள் குறைந்து கொண்டே வருவதால், நேர்மையற்ற செயல்களே இயல்பு என்று ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு பொதுமக்கள் உளவியல் ரீதியாக தள்ளப்படுகின்றனர்.

பத்திரிகைகளிலும் இந்த செய்திகள் இயல்பான செய்திகளைப்போல, எந்த விமர்சனமும் இன்றி இடம் பெறுகிறது. உதாரணமாக காவல்நிலைய வன்முறைகள் அனைத்தும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் உறுப்பு 20[3]-த்திற்கு எதிரானது என்பதை மறைத்து, அவை அனைத்தும் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டதைப்போல பத்திரிகைகளும், சினிமா, டிவி போன்ற ஊடகங்களும் கருத்துகளை பரப்புகின்றன. எனவே காவல்துறையினரின் அத்துமீறல்கள் அனைத்தும் எந்த எதிர்ப்புமின்றி பொதுமக்களால் ஏற்கப்படுகிறது.

ஆனால் சட்டம் படித்த வழக்கறிஞர்களுக்கும், சட்ட மாணவர்களுக்கும் காவல்துறையினரின் இத்தகைய அன்றாட அத்துமீறல்கள் அனைத்தும் சட்டப்படியான குற்றங்களாக தெரிகின்றன. சட்டம் தெரிந்த காரணத்தால் வழக்கறிஞர்கள் இந்த அத்துமீறல்களை தட்டிக்கேட்கும் உரிமையை – கடமையைப் பெறுகின்றனர். வழக்கறிஞர்களின் இந்தப்போக்கு காவல்துறையினரை பெரும் சிரமத்திற்கு உள்ளாக்குகிறது. மேலும் அவர்களின் “மாமூல் வாழ்க்கை”யையும் பாதிக்கிறது. எனவே காவல்துறையினர், வழக்கறிஞர்களை தங்கள் “ஜென்ம எதிரி”களாக கருதுகின்றனர். மேலும் வாய்ப்பு கிடைத்த நேரத்தில் எல்லாம் வழக்கறிஞர்களை சட்டத்தை மதிக்காதவர்கள் - சண்டைக்காரர்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்த முயல்கின்றனர்.

காவல்துறையில் உள்ள அலுவல்ரீதியான ஏற்றத்தாழ்வுகளையும், அதனால் பெரும்பாலான கடைநிலை காவலர்கள் வஞ்சிக்கப்படுவதையும் அவர்கள் உணரவிடாமல் ஆட்சியில் இருப்பவர்களும், உயரதிகாரிகளும் கடைநிலை காவலர்களை மூளைச்சலவை செய்து கொண்டே இருக்கின்றனர். தவறு செய்த காவல்துறை அதிகாரி ஒருவருக்கு கிடைக்கும் தண்டனையை, ஒட்டுமொத்த காவல்துறைக்கும் கிடைத்த தண்டனையாக உருவகப்படுத்துகின்றனர். காவல்துறையை ஒரு ஜாதிய அமைப்புப் போல உருவாக்கி, காவல்துறையில் யாரேனும் தவறு செய்தாலும் தண்டிக்கப்படக்கூடாது என்ற மனப்போக்கை பரப்புகின்றனர். மேலும் ஒரு காவல்துறை அதிகாரிக்கு சட்டரீதியாக ஒரு சின்ன சிக்கல் என்றாலும் ஒட்டுமொத்த காவல்துறையும், அந்த சட்டரீதியான சிக்கலை ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக அணிதிரண்டு அவர்களை வஞ்சம் தீர்க்க வேண்டும் என்ற வெறி திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது.

இவ்வாறாக, வழக்கறிஞர்களுக்கு எதிரான மனப்போக்கு காவல்துறையினரிடம் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. இந்த கருத்தை ஊடகங்கள் மூலமாக மக்களிடம் பரப்பும் பணியிலும் காவல்துறையினர் இடையறாது முயற்சித்து வருகின்றனர். ஆனால் அனைத்து வழக்கறிஞர்கள் மீதும் புகார் வருவதில்லையே என்ற கேள்வி எழலாம். உண்மைதான். அனைத்து வழக்கறிஞர்களும் போராட்டக்களத்தில் நிற்பதில்லை என்பதே உண்மை. இதைப் புரிந்து கொள்ள வழக்கறிஞர்களை பற்றியும் சற்று ஆராய வேண்டியுள்ளது.

காவல்துறையினரை மூன்று பிரிவாக பிரித்ததைப்போல, வழக்கறிஞர்களையும் உத்தேசமாக மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம்.

(1) “தகுதி, திறமை மிக்க(வர்களாக கருதப்படும்) வழக்கறிஞர்கள்”, (2) அரசியல் கட்சி சார்புடைய வழக்கறிஞர்கள், (3) மக்கள் சார்பு வழக்கறிஞர்கள்.

முதல் பிரிவான “தகுதி, திறமை வழக்கறிஞர்”கள் பிரம்மனின் நெற்றியிலிருந்து பிறந்ததாகச் சொல்லப்படும் உயர்குடி பிரிவிலிருந்து உருவானவர்கள். இவர்களில் பலரும் இரண்டாம் அல்லது மூன்றாம் தலைமுறையாக இந்தத் தொழிலில் இருப்பவர்கள். இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு சட்டமே மேலானது, அது தடா அல்லது பொடா போன்ற கருப்புச் சட்டமாக இருந்தாலும்கூட. இவர்களின் தொழில் பக்தியோ புல்லரிக்க வைக்கும். இவர்களை நம்பி வந்த கட்சிக்காரர்கள் நேர்மையானவர்களா, நியாயமானவர்களா என்பதெல்லாம் இவர்களுக்கு இரண்டாம் பட்சமே. இவர்களுக்கு தேவையான சேவைக்கட்டணம் கிடைத்தால் இவர்கள் யாருக்காகவும் வழக்காடுவார்கள். இவர்களின் கட்சிக்காரர்களுக்கு வெற்றி கிடைப்பதற்காக யாருக்கும் துரோகம் செய்யத் தயங்க மாட்டார்கள்.

மக்களின் நலன்களுக்கு எதிராக செயல்படும் பன்னாட்டு பகாசுர நிறுவனங்களுக்கோ, கோல்ட் குவெஸ்ட் போன்ற மோசடி நிறுவனங்களுக்கோ ஆதரவாக வழக்காடினாலும் அதனால் பாதிக்கப்படும் அப்பாவி மக்களின் நலன்கள் இவர்களுக்கு ஒரு பொருட்டாகவே இருக்காது. இவர்களைப் பொறுத்தவரை காசேதான் கடவுளடா. இவர்களின் வாரிசுகள் தற்போது நாட்டின் மிக உயர்ந்ததாகக் கருதப்படும் “ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ்” போன்ற சட்டக்கல்லூரிகளில் படித்துவிட்டு, நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தொழில் நடத்துவதைக்கூட மிகவும் கேவலமாகக் கருதி மக்களுக்கு எதிரான பன்னாட்டு பகாசுர நிறுவனங்களின் சட்டக்கூலிகளாகவும், அடியாட்களாகவும் பணியாற்ற சென்றுவிடுகின்றனர்.

இவர்கள் பொதுவாக எந்த போராட்டத்திலும் கலந்து கொள்ள மாட்டார்கள். முடிந்தவரை போராட்டங்களை திசைதிருப்பவும், போராடும் வழக்கறிஞர்களை ஆள்காட்டவும் முனைப்பாக இருப்பார்கள். தேவையானால் தினமணி, தினமலர், தினகரன், தி ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற “நடுநிலை நாளேடுகள்” மூலமாகவும், தொலைக்காட்சிகள் மூலமாகவும் மக்களை திசைதிருப்பும் தங்கள் திருப்பணிகளை அயராது செய்து கொண்டிருப்பார்கள். சாமானிய மக்கள் இவர்களை அணுகவே முடியாத தொலைவில் இருப்பார்கள். இவர்களைப் பொறுத்தவரை பொதுநலன் என்பது ஆதிக்க சக்திகளின் நலனாகவே இருக்கும். சாமானிய மக்களுக்கு எந்தவிதமான நலனும் கிடைத்துவிடக்கூடாது என்பதில் திடமாகவும், இட ஒதுக்கீடு போன்ற சமூகநீதி கொள்கைகளுக்கு எதிரான உறுதியான நிலைப்பாட்டுடனும் இருப்பார்கள்.

வழக்கறிஞர்களில் அடுத்த பிரிவினரான அரசியல் கட்சி சார்ந்த வழக்கறிஞர்களே கணிசமானவர்கள். இவர்கள் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, சாதிக் கட்சி, மதவாதக் கட்சி, தேசியக் கட்சி, நடிகர்களின் கட்சி என்று பல கட்சிகளிலும் இருப்பார்கள். எந்த கட்சியிலிருந்தும் எந்த கட்சிக்கும் எப்போது வேண்டுமானாலும் மாறுவார்கள். இவர்கள் சமூகத்தின் எந்தப் பிரிவிலிருந்தும் வருவார்கள், ஆனால் இடைநிலை ஆதிக்க சாதிகளிலிருந்தே மிக அதிகமானோர் இந்தப் பிரிவில் இருப்பார்கள்.

Chennai court அரசியல் அடையாளம் மூலமாக அதிகபட்சமாக அரசியல் பதவிகளையும், குறைந்த பட்சமாக அரசு வழக்கறிஞர் பதவி மற்றும் அதன்மூலமாக நீதிபதி பதவி போன்றவையும் இவர்களின் இலட்சியம். இடைக்கால நிவாரணமாக அரசியல் செல்வாக்கு மூலம் அதிக அளவில் வழக்கிடும் கட்சிக்காரர்களைப் பெற்று வளமான வாழ்வு பெறுவது இவர்களின் உடனடி லட்சியமாக இருக்கும். பொதுப்பிரச்சினைகளில் இவர்களின் நிலைப்பாடு என்பது பெரும்பாலும் இவர்கள் சார்ந்த கட்சிகளின் நிலைப்பாடாகவே இருக்கும். ஆளும் கட்சி மற்றும் அதன் தோழமை கட்சி சார்ந்த வழக்கறிஞர்கள் மேலே குறிப்பிட்டுள்ள “தகுதி-திறமை வாய்ந்த வழக்கறிஞர்”களின் பின்னே செல்வார்கள். எதிர்க்கட்சி சார்ந்த வழக்கறிஞர்கள், ஆட்சியில் இருப்போரின் பதவி நாற்காலிகளைப் பறிக்கும் நோக்கத்தில் செயல்படுவார்கள். இவர்கள் சார்ந்த கட்சி ஆட்சிக்கு வந்தால், இவர்களின் அணுகுமுறையும், நடைமுறையும் அடியோடு மாறி மக்களுக்கு எதிராக செயல்பட ஆரம்பித்து விடுவார்கள்.

மூன்றாம் பிரிவு, மக்கள் சார்ந்த வழக்கறிஞர்கள். இவர்களில் பெரும்பான்மையோர் முதல் தலைமுறை வழக்கறிஞர்களாகவும், ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்தவர்களாகவும் இருப்பார்கள். இவர்களில் பலருக்கும் கட்சி அரசியலில் ஈடுபாடு இருக்காது. ஆனால் அரசியல் கோட்பாட்டு ரீதியான அணுகுமுறைகளுடனே இவர்களின் அன்றாட செயல்பாடுகள் இருக்கும். சமூகத்தில் ஏற்படும் எந்த ஒரு வினைக்கும் உடனடியாக எதிர்வினை தெரிவிப்பவர்களாக இவர்களே இருப்பார்கள். இவர்களில் பலருக்கும் வருமானத்தைவிட தன்மானத்தில் அதிக பற்று இருக்கும். வழக்கறிஞர் பணியை வருமானம் தரும் தொழிலாக பார்ப்பதைவிட சமூகத்துக்கு பணியாற்றும் வாய்ப்பாகவே கருதுவார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்காக இலவசமாக மட்டுமல்லாமல், கைக்காசை செலவழித்தும்கூட வழக்கு நடத்தும் இயல்பு இவர்களுக்கு உண்டு.

நாட்டின் நீதிமுறையே ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக இருப்பதை இவர்கள் துணிவாக எடுத்துக்காட்டுவர். இதன் காரணமாக முந்தைய இரண்டு பிரிவு வழக்கறிஞர்களின் அதிருப்தியையும், எதிர்ப்பையும் அவ்வப்போது இவர்கள் சந்திப்பர். ஆதிக்க சக்திகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் மீடியாவும் இவர்களை குறிவைத்து தாக்கிக்கொண்டே இருக்கும். அரசின் எந்த அங்கீகாரமும் இவர்களுக்கு கிடைக்காது. எனினும் அவற்றை எதிர்பார்க்காமல் – புறக்கணித்துவிட்டு தங்கள் கடமைகளை தொடர்ந்து செய்துவருவர்.

காவல்துறையை தட்டிக்கேட்கும் பணியை பெரும்பாலும், மூன்றாவது பிரிவில் பார்த்த வழக்கறிஞர்களே செய்கின்றனர். சங்கராச்சாரி கைது செய்யப்படுவது போன்ற அரிதான நேர்வுகளிலேயே “தகுதி-திறமை வழக்கறிஞர்”கள் காவல்துறையினரிடம் மோதும் நிலை ஏற்படுகிறது. அத்தகைய நிகழ்வுகளிலும் பெரும்பான்மையான மீடியாக்களின் ஆதரவு உயர்குலத்தோருக்கே இருப்பதால் காவல்துறை கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. மேலும் காவல்துறையில் உள்ள உயர்குலத்தவர்கள் இந்த வழக்கில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஈடுபடுவதால் குற்றம் சாட்டப்படுபவர்களின் சட்டரீதியான உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன.

அரசியல் கட்சி சார்பான வழக்கறிஞர்களும் பல காரணங்களால் காவல்துறையினரைப் பகைத்துக் கொள்ள விரும்புவதில்லை. அதற்குப் பதிலாக காவல்துறையினருக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுத்து பெற வேண்டியதை பெற்றுக் கொள்கின்றனர்.

வழக்கறிஞர்களில் மூன்றாம் பிரிவினரான மக்கள் சார்ந்த வழக்கறிஞர்களே, காவல் துறையினருடன் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் மோதும் சூழ்நிலை உருவாகிறது. இதற்கான காரணம் எளிதில் புரிந்து கொள்ளக்கூடியதே. பெரும்பாலும் இவர்களின் கட்சிக்காரர்கள் சமூகத்தின் கடைநிலையில் இருப்பவர்களாகவும், நியாயமானவர்களாகவும் இருக்கின்றனர். எனவே இவர்கள் தங்கள் உரிமைகளையும், அரசின் கடமைகளையும் சுட்டிக்காட்டி போராட முன்வருகின்றனர்.

ஆனால் எந்த நியாயமான போராட்டத்தையும் ஆட்சியை கவிழ்க்கும் சதித்திட்டமாகவே கருதும் நிலை இருப்பதால் இந்தப் போராட்டங்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க ஆட்சியாளர்கள் முனைகின்றனர். இந்தப் போராட்டங்களை மீடியாக்களும் எதிர்மறை கண்ணோட்டத்துடனேயே மக்களிடம் கொண்டு செல்கின்றன. அரசுக்கு சிக்கல் வராமல் நடந்துகொள்ள விரும்பும் நீதிமன்றங்களும் போராட்டங்களுக்கு எதிரான கருத்துகளை வெளியிடுகின்றன.

இந்த நிலையில் வேறு வழியின்றி, மக்கள் சார்பு வழக்கறிஞர்களும், போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்தத் தருணங்களை சரியான வாய்ப்பாக பயன்படுத்தும் அரசும், காவல்துறையும் பத்திரிகைகளின் உதவியுடன் போராடும் மக்களையும், அதற்குத் துணையாக இருக்கும் வழக்கறிஞர்களையும் சமூக விரோதிகள் போல சித்தரிக்கின்றனர்.

அதே நேரத்தில் ஆதிக்க சக்தியினர், பெரும்பான்மை மக்களுக்கு எதிராக மேற்கொள்ளும் எந்த செயலும் நாகரீகமான நடவடிக்கையாக கருதப்படுகிறது. அது இடஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்கு தொடுப்பதாக இருந்தாலும் சரி, சிதம்பரம் கோவிலை தீட்சிதர்களிடம் ஒப்படைக்க கூறுவதாக இருந்தாலும் சரி.

நாகரீகம் என்று கூறப்படும் நரித்தந்திரத்துடன் கூடிய வழிமுறைகளை உயர்குலத்தோர் பின்பற்றுகின்றனர். உதாரணமாக, சிதம்பரம் நடராஜர் கோவிலின் கட்டுப்பாட்டை அரசிடம் இருந்து மீட்க தீட்சிதர்கள் பின்பற்றும் வழியைக் கூறலாம். உயர்நீதிமன்றத்திலோ, உச்சநீதிமன்றத்திலோ வழக்கு தொடுப்பது, மகாகனம் பொருந்திய சுப்ரமணியம் சுவாமி போன்ற சட்ட மூதறிஞர்களைக் கொண்டு அந்த வழக்கை திசைதிருப்புவது அல்லது கடத்துவது, ‘துக்ளக்’ சோ – தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள இனவாத அரசு வழங்கிய “லங்கா ரத்னா” விருது பெற்ற ‘ஹிந்து’ ராம் – ‘எக்ஸ்பிரஸ்’ கோயங்கா போன்ற கோயபல்ஸ் கும்பலைக் கொண்டு நடுத்தரவர்க்க மக்களைக் குழப்பி அவர்களது ஆதரவைப் பெறுவதற்கு முயற்சிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது நாகரீகமான நடைமுறையாக கூறப்படுகிறது.

இது போன்ற வழக்குகளில் “தகுதி-திறமை வாய்ந்த வழக்கறிஞர்”களே முழுமையாக ஈடுபடுவார்கள். இதுபோன்ற வழக்குகளைத் தொடுக்கும் உயர்குலத்தோருக்கு காவல்துறையாலோ, ஆட்சியில் இருப்பவர்களாலோ எந்த தீங்கும் ஏற்பட்டுவிடாது என்பதால், இந்த வழக்குகளை நடத்தும் “தகுதி-திறமை வழக்கறிஞர்”களுக்கு காவல் நிலையங்களுக்கு போகும் அவசியமே இருக்காது. தப்பித்தவறி அவர்கள் காவல் நிலையத்திற்குப் போகும் நிலை வந்தாலும், காவல்துறையின் உயர்பதவியில் உள்ள “தகுதி-திறமை” மிக்கவர்களின் ஒத்துழைப்பால் மிகவும் கண்ணியமாகவே நடத்தப்படுவர்.

வழக்கறிஞர்களில் அடுத்தப்பிரிவினர் அரசியல் கட்சி சார்புடையவர்கள். இவர்கள் மிக அதிக அளவில் காவல்துறையினருடன் தொடர்புடையவர்கள். ஆளும் கூட்டணியில் இருக்கும் கட்சி சார்ந்த வழக்கறிஞர்கள், காவல்துறையினருக்கு கட்டளை இடுவதும், “கடமை தவறாத காவல்துறையினர்” அந்த கட்டளைக்குக் கட்டுப்பட்டு கடமையாற்றுவதும் அன்றாட நிகழ்வுகள். எதிர்க்கட்சி சார்ந்த வழக்கறிஞர்கள், ஆளும்கூட்டணியில் உள்ள சக வழக்கறிஞர்கள் மூலம் பிரசினையை சுமூகமாக முடித்துக்கொள்ளும் சாமர்த்தியம் உள்ளவர்கள். இவர்கள் பெரும்பாலும் “தகுதி-திறமை வழக்கறிஞர்”களின் அறிவிக்கப்படாத ஜூனியர்களாக விளங்குவதாலும், “தகுதி-திறமை வழக்கறிஞர்”களுக்கும் ஆளும்கட்சிக்கும் இடையே இணைப்புப் பாலமாக விளங்குவதாலும், அரசியல் “நெளிவுசுளிவு”களைத் தெரிந்து நடந்து கொள்வதாலும் எந்த பாதிப்புமின்றி தொழில் புரிகின்றனர். சிக்னலில் நிற்காமல் செல்வது போன்ற சில்லறைத் தவறுகளை செய்து பொதுமக்களிடமும், பத்திரிகைகளிடமும் கெட்டபெயர் வாங்குவதில் இந்தப்பிரிவை சேர்ந்த வழக்கறிஞர்களே முக்கிய இடம் வகிப்பர்.

மூன்றாவது பிரிவினரான மக்கள் சார்பு வழக்கறிஞர்கள், இந்தியாவின் சட்டங்களையும், நீதிமன்ற நடைமுறைகளையும் பொதுத்தளங்களில் விமரிசனம் செய்தாலும், தனிப்பட்ட வாழ்வில் சட்டத்தை மதித்தே வாழ்வர். இவர்களது கட்சிக்காரர்களில் பெரும்பான்மையினராக ஒடுக்கப்பட்ட மக்களே இருப்பர். இந்த ஒடுக்கப்பட்ட மக்களை மிக மோசமாகவும், கேவலமாகவும் நடத்தும் காவல்துறையினரிடம், இந்த வழக்கறிஞர்கள் தொழில் முறையில் மோதுவது தவிர்க்க இயலாத அம்சமாகும். இந்தப் பிரிவு வழக்கறிஞர்கள் அடிக்கடி கையாளும் போராட்ட வழிமுறையாக நீதிமன்ற புறக்கணிப்புகள் உள்ளன. எந்த நியாயமான காரணத்துக்காக நீதிமன்ற புறக்கணிப்பு நடத்தப்பட்டாலும், அதனால் ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களே மிக அதிகமாக பாதிக்கப் படுகின்றனர். எனவே மக்கள் சார்ந்து இயங்கும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற புறக்கணிப்பை தவிர்த்து வேறு போராட்ட வழிமுறைகளை தேர்ந்தெடுக்கவேண்டிய கால கட்டத்தில் உள்ளனர். அவ்வாறு வேறு போராட்ட வடிவங்களை வழக்கறிஞர்கள் முன்னெடுக்கும்போது பொதுமக்களின் ஆதரவு, இந்த மக்கள் சார்பு வழக்கறிஞர்களுக்கு பெருவாரியாகக் கிடைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை. இந்த மக்கள் சார்பு வழக்கறிஞர்களிலும் பெரும்பகுதியினர் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்தே வருகின்றனர்.

இடைநிலை ஆதிக்கச்சாதிகளில் இருந்து காவல்துறையில் கடைநிலை காவலர் பணியில் சேருவோருக்கு, இந்த வழக்கறிஞர்களின் கல்வித்தகுதியைவிட சாதியே பிரதானமாகத் தெரிவதால், தங்களை விட தாழ்ந்த சமூகத்தில் பிறந்தவன், தங்களைக் கேள்வி கேட்பதா? என்ற மனநிலைக்கு கடைநிலை காவலர்கள் தள்ளப்படுகின்றனர். இந்த கடைநிலைக் காவலர்களின் அடிப்படை உரிமையான சங்கம் அமைக்கும் உரிமை, திட்டமிட்டு மறுக்கப்படுவதால் - அடிப்படை மனித உரிமைகள் சார்ந்த விழிப்புணர்வோ, சமூகப்பார்வையோ இவர்களுக்கு ஏற்பட வழியிருப்பதில்லை. மேலும் அரசின் கொள்கைகளை, செயல்பாடுகளை விமர்சிக்கும் அனைவரும், அரசை கவிழ்க்க முயற்சி செய்வதாகக் கருதும் நிலை இருப்பதால், விமர்சனங்களைத் தவிர்க்க - போராட்டங்களை ஒடுக்க காவல்துறையை அரசு பயன்படுத்துகிறது.

இந்தச் சூழலில், குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், ஒடுக்கப்படும் மக்களுக்கு விழிப்புணர்வூட்டி தட்டி எழுப்பவும் வழக்கறிஞர்களே முக்கியமானவர்கள். உலகம் முழுவதும் உரிமைகள் சார்ந்த அரசியல் புரட்சிகள் அனைத்தும் அந்த நாட்டு காவல்துறையினரின் அடக்குமுறைகளையும் மீறி வழக்கறிஞர்களால்தான் நடந்துள்ளது.

காவல்துறையில் சில நல்லவர்கள் இருப்பதுபோல, வழக்கறிஞர்களிலும் சில கெட்டவர்கள் இருக்கக்கூடும். அவர்களும் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவர். ஆனால் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் வழக்கறிஞர்கள் மட்டுமே முழுமையான பணியாற்ற முடியும். இதை மக்கள் புரிந்து கொள்கிறார்களோ, இல்லையோ ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கின்றனர். அதனால்தான் மக்கள் போராட்டங்களை நசுக்கி ஒடுக்கும் முன், வழக்கறிஞர் போராட்டங்களை என்ன விலை கொடுத்தாவது ஒடுக்க முயற்சிக்கின்றனர்.

மேலும், சட்டத்தை பாதுகாக்கும் கடமை கொண்ட காவல்துறையினரும், வழக்கறிஞர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தவும் செய்கின்றனர். இந்த இரு தரப்பினருக்கும் சட்டத்தைப் பாதுகாக்கும் கடமை இருந்தாலும், வழக்கறிஞர்களில் ஒரு தரப்பினரும் – காவல்துறையினரில் பெரும்பான்மையினரும் பல்வேறு காரணங்களுக்காக சட்டத்திற்கு எதிராகவே செயல்படுகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில் மனசாட்சியுடன் இயங்கும் மக்கள் சார்பு வழக்கறிஞர்கள் காவல்துறையுடன் இணைந்து செயல்படுவது என்பது நடைமுறையில் சாத்தியமில்லாதது. மேலும் அனைத்து தரப்பு மக்களின் மனித உரிமைகளை மீறும் காவல்துறையினருடன் வழக்கறிஞர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டால் நாட்டில் மனித உரிமைகள் என்பதே இல்லாமல் போய்விடும். எனவே வழக்கறிஞர்களும், காவல்துறையினரும் எதிரெதிர் அணியில் இருப்பதே மக்களின் மனித உரிமைகளை பாதுகாக்க மிகச்சிறந்த ஏற்பாடாகும்.

- டார்வின் சார்வாகன்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.