kaliki 400“பறிபோகும் தமிழன் வேலை” - இது தமிழர் கண்ணோட்டம் இதழில் உள்ள கட்டுரைத் தலைப்பன்று; கல்கி இதழ் கட்டுரையின் தலைப்பு. 12.01.2014 நாளிட்ட கல்கி வார இதழ் இத்தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது.

“சென்னை மட்டுமின்றி கோவை, திருப்பூர் போன்ற நகரங்களிலும் கட்டப்படும் மால்கள், மல்டி ப்ளக்ஸ்கள், பெரிய கடைகள், உணவகங்கள், சாலைப் பணிகள், கட்டு மானப் பணிகள், தொழிற்சாலைகள், அழகு நிலையங்கள்..

பல்வேறு தொழிற்பேட்டைகளிலும் வட இந்தியர்களே பெருமளவில் தென்படுகின்றனர்”, என்று கவலையோடு கூறுகிறது கல்கி.

“சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி சென்னையில் மட்டும் மூன்றரை இலட்சம் வெளி மாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களில், பீகார், ஆந்திரா மற்றும் ஒரிசா மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கள் மனைவி, குழந்தைகளோடு இங்கு வந்து தங்கி பணியாற்றி வருகின்றனர்”.

கல்கி ஏடு மேலும் தொடர்கிறது. ”தொடக்கத்தில் வெளி மாநிலத் தொழிலாளர்களைத் தமிழர்கள் ஒரு பிரச்சினையாகப் பார்க்கவில்லை. ஆனால், இப்போது அந்தப் பார்வை மெல்ல மெல்ல மாறுவதை உணர முடிகிறது.

எதிர்காலத்தில் இவர்களின் வரவு நிச்சயம் ஒரு பெரிய சமூகப் பிரச்சினையாக மாறும். இப்படி வருபவர்கள் இங்கேயே தங்கிவிட்டால் தமிழ்நாட்டுத் தமிழர்களை விட இவர்களின் எண்ணிக்கை அதிகமாகி விடும்.

‘தற்போது சென்னையின் பொருளாதாரம் ராஜஸ்தானியர் மற்றும் குஜராத்தியர்களிடம் தான் இருக்கிறது. காரணம், எந்தத் தொழில் என்றாலும் மொத்தமாக விற்பனை செய்யும் முதலாளிகள் இவர்கள் தான்’ எனத் தம் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் பெயர் சொல்ல விரும்பாத இயக்கத் தலைவர் ஒருவர்” என்கிறது கல்கி.

“ஒரு வேளை நேரடியாகத் தொழில் செய்ய முடியவில்லை என்றால், மறைமுகமாக வட்டித் தொழில் மூலம் அவர்களது கரங்கள் அதில் இணைந்திருக்கும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்து”.“சென்னையின் பல பகுதிகளும் வட இந்தியர்களின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. வருங்காலத்தில் அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் பெரம் சவாலாக இருப்பார்கள் என்கிறார் கோயம்பேடு வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்த ஆதிமூர்த்தி” என்கிறார் கல்கி கட்டுரையாளர் வனராஜன்.

ஏமாளித் தமிழர்களே எண்ணிப்பாருங்கள். இந்தியத் தேசியம் பேசும் இதழான கல்கியே, வெளி மாநிலத்தவர்களின் மிகை ஆக்கிரமிப்பைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் கொந்தளிப்போடு கட்டுரை வெளியிடுகிறது. ‘திராவிடன்’ என்றும், ‘தமிழன்’ என்றும் பேசிக் கொண்டு இங்கு அரசியல் பண்ணும் கட்சிகள், இயக்கங்கள், வெளியார் ஆக்கிரமிப்பு பற்றி வாய் திறப்பதில்லையே ஏன்?

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வெளியாரை வெளியேற்றுவோம் முழக்கத்தை 1992 முதல் முன்வைத்து வருகிறது. போராடி வருகிறது. தமிழ்மொழி பேசும் மக்களின் தாயகமாக 1956 நவம்பர் 1-இல் தமிழகம் வடிவமைக்கப்பட்டது. அதன் பிறகு, தமிழ்நாட்டில் குடியேறிய அனைத்து வெளி மாநிலத்தவரையும் வெளியேற்ற வேண்டும் என்பதுதான் த.தே.பொ.க.வின் உறுதியான நிலைப்பாடு!

வெளிமாநிலத்தவர்களுக்குக் குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை வழங் கக் கூடாது என்ற கோரிக் கைகளை முன்வைவைத்து த.தே.பொ.க.வும் அதன் தலைமையில் இயங்கும் தமிழக இளைஞர் முன்னணியும் இப்போது பரப்புரை இயக்கம் நடத்தி வருகிறது.

வெளியாரின் ஆக்கிரமிப்பிற்கு எதிராகத் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நடத்தி வரும் இயக்கம் எவ்வளவு சரியானது, தேவையானது என்பதற்குக் கல்கி கட்டுரையே சான்று!

Pin It