வாழவந்தா கிழவி வீட்டுல விடிஞ்சதும் கேட்டுக்கிடலாம் மாமியா மருமகள் சண்டையை. சண்டையின்னா சண்டை மாமியா மருமக ரெண்டு பேருக்கும் வாய்தான் வலிக்குமோ வலிக்காதோ எந்நேரமும் ஒலைப்பாயில நாய் மோண்ட மாதிரி சலச்சலச்சலன்னு பக்கத்துல மனிசர்கள் இருக்க முடியாது. புள்ளிக்கி ஒரு திக்கமா வேலை வெட்டின்னு வெளியேறிப்போனாத்தான் வீடு வீடாயிருக்கும். எங்கேயும் போகலியோ யம்மா வீடு அலறிப்போகும் அலறி. தெருவும் நாறிப்போகும்.

வாழவந்தா கிழவிக்கு மூணு மகனுக. மொத ரெண்டு பயகளுக்கும் கல்யாணம் முடிச்சி வந்த மருமக்க ரெண்டு பேரையும் இருந்து பிழைக்க விடலை. எந்த நேரமும் இம்சையான இம்சை தொணதொணன்னு நச்சரிப்பு. கொமட்டுலயே இடிக்கிறது. நின்னா குத்தம் நடந்தா குத்தம். அறியாத ஊர்ல தெரியாம வாக்கப்பட்டேன், அடியாத புடியாத விடியாம ஓடிர்றேன்னு ஒவ்வொருத்தியும் பொட்டணத்தைக் கட்டிக்கிட்டு ஓடியே போனவதான் இந்தத் திக்கமே திரும்பிப் பார்க்கலே.

பயகளும் ஆத்தாளுக்கான குணவான்க. வீட்டுல சிய்யிங்காம எந்த நேரமும் ரெண்டு பொம்பளக விடாம சண்டை கட்டுறாகளே ஏது என்ன எவடம்ன்னு கேப்பானுகன்னு நெனைக்கிறீகளா? அது கழுதைகளுக்கு வேலையென்ன அதுக பாட்டுக்கு அதுக சண்டை போட்டு மண்டைகளை உடைக்கட்டும் நாம சோலிய நாம பாப்போமுன்னு வட்டில்ல இவனுகளா சோத்தப்போட்டு சாப்பிட்டுட்டு `பேவ்'ன்னு ஒரு ஏப்பம் போட்டுட்டு வேலையைப் பாக்க வெளியே போயிடுவாங்க. எந்தக் கட்சியிலயும் சேர்றதில்லே.

வந்த மருமக்கள் அந்நாடு வேலை செய்யுற குடும்பத்திலிருந்து வந்தவங்க. யாரும் நகை நட்டுன்னு போட்டு வரல. காதுல மூக்குல கூட பித்தளை சாமான்கள்தான். மேற்கொண்டு அதிகமா பேசுறதுக்கு வாழவந்தா கிழவிக்கு அது ஒரு தோது ஆகிப்போச்சு. அவங்க குடும்பத்தை ரொம்ப தொக்காப்பேசுவா. மூத்தவளுக்கு பிறந்த மூளிக்கழுதைகம்பா.

ஏன்னா அவ கழுத்தில ரெட்டை வடம் செயினு ஒண்ணு போட்டிருந்தா. `அது எங்கல்யாணத்துக்கு எங்க அய்யா சீதனமா போட்டது நா ரொம்ப வசதியான வீட்லே பிறந்தவ. என்னை இந்த மனுசன் ஏமாத்தி கல்யாணம் பண்ணீட்டு வந்து இந்த ஏலாத குடும்பத்துலெ கிடந்து சீரழியுறேன்னு' சொன்னாலும் ஊருக்குள்ள, 'அதெல்லாம் கிடையாது. ஒரு நாப்பது வருசத்துக்கு முன்னாடி வாழ வந்தாக் கிழவி கல்யாணம் ஆன புதுசுல பிள்ளையில்லேன்னு வேண்டிக்கிட்டு சுந்தர மகாலிங்கம் மலைக்குப்போனா. அப்பொ அங்கே எங்கில்லாத மழை பெஞ்சி வெள்ளம் வந்து வத்றாப்பு பெரிய கண்மாய் உடைஞ்சி தாணிப்பாறை ஆத்துல மலையேறி இறங்கி அலுத்துப்போய் உட்கார்ந்திருந்த சனங்களையெல்லாம் அடிச்சி இழுத்துட்டுப் போயி ஏ... ஆத்தா திட்டங்கெட்ட சேதாரம், உயிர்ச்சேதம், அதுலெ தப்பிச்சி ஓடியாந்தவ, வர்ற வரத்துல ஒரு பொம்பளை பொணத்திலிருந்து அரவம்படாம இருக்கிறதையெல்லாம் உருவிட்டு வந்துட்டான்னு சொல்லுவாக.

அதுலயிருந்து ஊருக்குள்ளே அந்த ரெட்டைவடம் செயினைப் போட்டுக்கிட்டு நான் அப்படி பிழைச்சவ இப்படி பிழைச்சவன்னு ஆட்டமின்னா ஆட்டம் இன்னமட்டுமின்னில்லே 'நாதியத்த நாய்க. குடிக்க கஞ்சியில்லாத கழுதைக. வெறுங்கழுத்து முண்டெக. ஆடி தீபாவளிக்கு தோசைக்கு நனையப்போடுற அட்டத்தரித்திரம் பிடிச்சு ஆக்கங்கெட்ட மூதிக'ன்னு இந்த தெருவுக்கும் அந்தத்தெருவுக்கும் காரணமில்லாம காலையில எந்திரிச்சு ஒரு மூச்சு வைதிட்டுத்தான் மறுசோலி.

இவளை வசம்மா ஒரு மருமக இல்லாட்டாலும் ஒரு மருமகா வந்து தூக்கிப்போட்டு சங்குலயே மிதிக்க மாட்டேங்காளேன்னு ஊருக்குள்ள ஒரு ஏக்கப்பாடு இருந்தது. அந்த நேரத்துலதான் மூணாவது மகனுக்கு மலைப்பட்டிக்காரி பெண்டாட்டியா வந்து சேந்தா. அவதான் இப்பொ சரிபோர்ல நிக்கிறா.

மலைப்பட்டிக்காரி லேசுப்பட்டவா கிடையாது. அவ சமைஞ்சு கொமரா இருந்தப்பவே அவ பிறந்த ஊரையே ஒரு கை பாத்தவ. 'ஏலேய் இந்த ஊருல எந்த ஆம்பளையோ, இல்லே இளவட்டமோ என் கை மண்ணை தட்டிவிட்டுட்டு ஓடிருங்கடா பாப்பம்! தட்டிவிட்டுட்டு ரெண்டு எட்டு எடுத்து வைக்குமுன்னே அவன் குதிங்காலை மிதிச்சி, கீழே விழுத்தாட்டலையாக்கும் நான் சேலை கட்டுன பொம்பளையில்லடா வங்கடா' அப்படீன்னு சொடக்குப்போட்டு மந்தையில நிப்பா, முழங்காலுக்கு மேலே சேலையை ஏத்திவிட்டு தடாபுடான்னு தான் திரியுவா.

ஒரு தடவை டெப்டி கலெக்டரே இவகிட்ட மாட்டிக்கிட்டு வெகுபாடுபட்டுப் போனாரு. ஓட்டுப்போட மொத மொத மிஷின் வந்த நேரம். பட்டிக்காட்டு ஜனங்களுக்குப் பட்டனை அழுத்தி ஒட்டுப்போடுற விதத்தைச் சொல்லி டிரெயினிங் கொடுக்க மிஷினோட டிப்டி கலெக்டர் வந்திருக்காரு. ஊரு பொம்பளைகளை கூட்டி வந்து ஒவ்வொருத்தரையும் ஆடு, மாடு, அணில்ன்னு பேருக்கு சின்னங்களை வச்சி எப்படி அதுகள்ல ஓட்டுப்போடணும்னு சொல்லிக்கொடுத்தாக. மலைப்பட்டிக்காரியும் பட்டனை அழுத்தி ஓட்டுப்போட்டா.

முடிச்சிட்டு கலெக்டர் ஜீப்புல கிளம்பும்போது போயி ரோட்டை மரிச்சு நின்னுக்கிட்டா. ஒழுங்கா மருவாதியா ஓட்டுப்போட்டதுக்கு ரூவா கொடுத்திட்டுப்போ. என்ன, மலைப்பட்டிக்காரிகளைப் பாத்தா உனக்கு இளிச்சவாச்சிகளாத் தெரியுதா. வண்டி ஒரு இஞ்சு நகலப்படாதுன்னு போயி நட்டம்மா நின்னுக்கிட்டா.

"அம்மா தாயி இது ட்ரெயினிங்கும்மா எலக்சன் கிடையாது"ன்னு கலெக்டர் எவ்வளவோ சொல்லிப்பாத்தாரு.

"யோவ் நீ படிச்சவன்தானெ! நா ஓட்டுப்போட்டனா இல்லையா. ஓட்டுப்போட்டா ரூபா கொடுக்கணுமின்னு அறிவில்லே. சொன்ன லக்குல போட்டமா இல்லையா? அங்கங்கே ஜெயிக்கிறவனும் கொடுக்கான் தோக்கிறவனும் கொடுக்கான். நீ மாத்தச் சம்பளம் வாங்குறே! உனக்குக் கொடுக்க என்ன பேதி?"

ஒரு வழியா போலீசு வந்து கலெக்டரை மீட்டிக்கிட்டுப்போச்சி.

வழக்கம்போல கழுத்துச் சங்கிலிய கழட்டி முந்தியாலே நல்லா தொடச்சி தெருவையே இளக்காரமா ஒரு பார்வை பாத்து மலைப்பட்டி மருமக காதுல விழுகுற மாதிரி நாதியத்த நாய்க பிச்சைக்கார முண்டெகன்னு கிழவி ஆரம்பிச்சா. மருமக திரும்பி மாமியாரை ஓரக்கண்ணால பார்த்து 'பகுத்து வந்து பந்தல்ல நிக்கி பிள்ளையப் புடிரா புருசான்னாளாம். அப்படின்னா. மாமியாக்காரி திரும்பி பார்க்காமலே பதிலுக்கு 'ஊரு வழியா போற மாரியாத்தா எம் மேல வந்து ஏறாத்தான்னு' என் வாயை புடுங்காதேன்னா.

நா  எம்பாட்டுல இங்கெ சொல்லிக்கிட்டிருக்கேன் நீ பொத்திக்கிட்டு இரு. 'பிடுங்காதே பிடுங்காதே பீக்கங்காயைன்னாளாம் நா ஏன்டி பிடுங்கறேன் நார்த்தங்காயைன்னாளாம்" "வெறும் முண்டெ துப்புக்கெட்ட முண்டைக்குபேச்சு பாரு பேச்சு. கொண்டு வந்தியாக்கும் அப்பன் வீட்டுலருந்து வாய்தான் இருக்கு அங்கெ என்னயிருக்கு அப்பன் வீட்டுல. சீனி சக்கரை சித்தப்பா சீட்டுல எழுதி நக்கப்பான்னு இருக்கு"

'ஏ கிழவி நா எம்பாட்டுல இருக்கேன் வம்புக்கு இழுக்காதே 'மந்தை வழியா போற ஆசாரி மறக்காம வந்து எனக்கொரு ஆப்பு வச்சிட்டுப் போன்னு' வலிய வந்து வம்பு செய்யாதே மரியாதையா சொல்லிட்டேன்"

"வந்து சேந்திருக்கா கடைசி கடைசின்னு மருமகா கூத்துக்கு பிள்ளைப் பெத்து கோமாளின்னு பேரு வச்சி த்தூ.. வேண்டா வெறுப்பா பிள்ளை பெத்து காண்டா மிருகம்னு பேருவச்ச மாதிரி.. த்தூ... லொங்காதவளே, மானங்கெட்டவளே..." அவ்வளவுதான் கோபம் திட்டக்கெட்டுப்போயி மருமகா "இந்தா வாரேன் உன்னைய..." விறு விறுன்னு போயி மூலையில சாத்திக்கிடந்த உலக்கையைத் தூக்கிட்டு வந்து கழுத்தைச் சேத்து 'மங்குன்னு' ஒரு போடு போட்டா.

மாமியாக்காரி 'ஆ'ன்னு வாயைப் பொளந்த மட்டுல மொந்துன்னு கீழே விழுந்தவதான் பேச்சு மூச்சு இல்லாம முழிச்சு மட்டுல கிடக்கா. மருமக அடுத்த வீட்டுக்குத் தெரியாம தூக்குவாளியில கஞ்சியை ஊத்திக்கிட்டு வேலைக்கு ஓடிப்போயிட்டா. என்ன கிழவி அரவத்தைக் காணோம்ன்னு ஆளுக வீட்டுக்கு வந்து பாத்தாக. கண்ணு நெல முழியா முழிச்சமட்டுல இருக்கு. வீட்டுக்கு வர்ற ஆளுகளைப் பூராம் மலங்க மலங்க பாக்குறா. ஆனா என்ன என்ன நடந்ததுன்னு விபரஞ்சொல்ல வாய் எந்திரிக்கலை. வாப்பேச்சு நின்னுப்போச்சு. அப்படியொரு நரம்படி விழுந்துடுச்சி. மூத்தவனும் நடுவுளவனும் அம்மா என்னம்மா என்னம்மா இப்படியிருக்கேன்னு கேட்டுப்பாத்தாக திருதிருன்னு முழிக்காளே யொழிய சொல்ல நாக்கு எந்திரிக்கல. கடைக்குட்டி மகனும் வந்தான். வீட்டுக்குள்ள கூட்டமான கூட்டம். கூட்டத்தை விலக்கிட்டு போயி "அம்மா! என்னப்பெத்தவளே! ஒண்ணுமே பேசாம உன்னால எப்படிம்மா இருக்க முடியுது". அழுதான். கண்ணை நாலாபுறமும் சுத்தி சுத்தி தேடுற மாதிரி தவிச்சாள். "என்னம்மா செய்யுதுன்னு" கட்டிக்கிட்டு அழுதான்.

சாயுங்காலமா வேலைக்குப்போயிட்டு நல்லபிள்ளை மாதிரி மருமக வீட்டுக்குள்ள வந்தா. அத்தைக்கு வாய் விழுந்து போச்சுன்னு கேள்விப்பட்டதும் நல்லவேளையாப் போச்சுன்னு இருந்தா. "அடியேய் எங்க அம்மாவுக்கு என்ன ஆச்சுன்னு தெரியலையே வந்து பாருடி"ன்னு அவ பக்கத்துல போயி நின்னு கேவிக்கேவி அழுதுக்கிட்டிருந்தான்.

அப்பொதான் மாமியா மருமகளைப் பாத்தா. அவ கண்ணு அஷ்டகோணலும் ,சுத்தி சுத்தி வந்தது. ரொம்ப திகாரப்பட்டு கையை சின்ன மகனைக் காட்டி ஆட்டுனா. என்னம்மா என்னன்னு அவன் கிட்டெ ஓடியாந்தான்.அப்படியே கையை உலக்கையைப் பார்த்து நீட்டுனா, தன் கழுத்தைக் காட்டுனா, அவன் பெண் ஜாதியைப் பாத்து கையை நீட்டுனா. மலைப்பட்டிக்காரிக்கு திகீல்ன்னது. பழையபடி மகன்கிட்டெ உலக்கையைக் காட்டுனா, தன் கழுத்தைக் காட்டுனா, மருமகளைக் காட்டுனா.

"என்னம்மோ எங்கம்மா சொல்ல வர்றா என்னன்னு தெரியாலையே யம்மா! என்னம்மா சொல்றே விளங்கலையே. மூலையில சாத்தியிருக்கிற உலக்கையைக் காட்டுறே ஒங் கழுத்தைக் காட்டுறே, என் பெண்ஜாதியைக் காட்டுறே என்னதான் சொல்றியோ எனக்கு ஒண்ணும் புரியலையே"ன்னு தலையில கையை வெச்சான்.

அப்பொ மலைப்பட்டிக்காரி புருசன்கிட்டெ சொன்னா: "ஆமளு! உங்களுக்கு எதுதான் புரிஞ்சிருக்கு இது புரியறதுக்கு; வயசுதான் ஆகுது ஏழு கழுதை வயசு"

"உனக்குப் புரிஞ்சா நீதான் என்னான்னு சொல்லேன்டி"

"உங்க அம்மா என்ன சொல்றாகன்னா, "ஏன்டா உலக்கை மாதிரி பாத்துக்கிட்டு நிக்குறியே எங்கழுத்துலயிருக்கிற ரெட்டைவடம் சங்கிலியை எடுத்து ஒம் பொண்டாட்டிக்கு போடுறாங்கிறாங்க"

Pin It