உற்பத்தி செய்யப்படும் எந்தப் பொருளுக்கும் விலை நிர்ணயம் செய்து விற்பவர் உற்பத்தியாளர்தான். ஆனால் வேளாண் விளைபொருள் விற்பனைக்கு மட்டும் விலை நிர்ணயம் செய்பவர் உற்பத்தியாளராகிய விவசாயிகள் அல்லர். வாங்குபவர்தான் என்ற நிலை இன்று வரை நடைமுறையில் உள்ளது. விவசாயிகள் தமது விளைபொருட்களுக்கு தாம் விரும்பும் விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்ய இயலாதா? யார் இதற்குத் தடையாக உள்ளார்கள்?
1928 ஆம் ஆண்டில் வெள்ளையர் அரசு அமைத்த ராயல் கமிஷன் அளித்த அறிக்கையின்படி பருத்தி, மணிலா, புகையிலை போன்ற விளைபொருட்களுக்கு விவசாயிகள் நல்ல விலை பெற மேற்படி பொருட்களை ஒரு பொது இடத்திற்கு (ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள்) கொண்டு வந்து அதிகாரிகளின் முன்னிலையில் ஏலம் விட்டு, விவசாயிகள் விரும்பும் விலை கிடைத்தால் அதை வணிகர்கள் வாங்கவும், அல்லது விவசாயிகள் நல்ல விலை கிடைக்கும் வரை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பாதுகாத்து வைக்கவும் ஏற்பாடு இருந்தது. மேலும் அதன் பேரில் வட்டியில்லாமல் சிறிது காலத்துக்கும் குறைந்த வட்டியுடன் நீண்ட காலத்துக்கும் கடன் பெறவும் 1933 ஆம் ஆண்டிலேயே ஒரு சட்டம் இயற்றப்பட்டது.
மேற்படி சட்டம் 1959 திருத்தியமைக்கப்பட்டு பின்பு சட்டம் 1987ல் என்று மீண்டும் திருத்தியமைக்கப்பட்டது. தமிழகத்தில் விளையும் சுமார் 40 விழுக்காடு விளைபொருட்கள் தற்சமயம் அறிவிக்கை செய்து இந்த விற்பனைச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு 21 விற்பனைக் குழுக்களும், 277 விற்பனைக் கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அறிவிக்கை செய்யப்பட்ட விளை பொருட்களில் நடக்கும் வணிகத்திற்கு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ரூபாய் 100க் ரூ1 என கட்டணம் (செஸ்) வணிகர்களிடமிருந்து வசூல் செய்து கொள்கிறது.
பருத்தி உள்ளிட்ட வேளாண் விளைபொருள் வணிகம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு உள்ளேதான் நடக்க வேண்டும் என இச்சட்டம் கூறுகிறது. ஆனால் இதன்படி இயங்குமாறு அரசாணை பிறப்பித்து செயலாக்குவதற்கு அரசு முன்வரவில்லை. 77 ஆண்டுகளாக இது ஏட்டுச் சுரைக்காயாக உள்ளது.
இதற்கு முக்கிய காரணம் விளைபொருட்களின் வணிகம் உள்ளே நடைபெறாமல் வெளியே நடைபெற்றாலும், விளைபொருட்கள் அங்கு விளைந்தாலும் விளையா விட்டாலும் எங்கிருந்து (வெளி மாநிலங்கள் வெளிநாடுகள்) வந்தாலும், வேளாண் விளை பொருட்களுக்கும் அவற்றிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்கும் கட்டணம் வசூலிக்கலாம் என்ற சட்டப் பிரிவு இதில் உள்ளதுதான். விவசாயிகளுக்கும் வணிகர்களுக்கும் எந்தச் சேவையும் செய்யாமலும் கட்டணம் வசூல் செய்யலாம்!
இவ்வாறு வணிகம் நடைபெறுவதால் துறைக்கு வரும் வருவாயை விட துறையினர் லஞ்சம் மூலம் பெறும் வருவாய் பெருகிக் கொண்டே போகின்றது. வெளியில் நடைபெறும் வணிகத்தைக் குறைத்துக் காட்டி இந்தக் கூட்டுக் கொள்ளை நடக்கிறது.
இதனால் அனேக விற்பனைக் கூடங்கள் வெறும் அலுவலகங்களை வைத்துக் கொண்டு விற்பனை கட்டணம் வசூலித்து, அனுமதிச்சீட்டு கொடுக்கும் வேலையை மட்டும் செய்து வருகின்றன. தேவையான சொந்த இடத்தில் உரிய வசதிகளுடன் விற்பனைக் கூடங்கள் அமைக்க ஆக்கப்பூர்வமான முயற்சிகளை துறையினர் மேற்கொள்ளததால் இன்றுவரை 10% முதல் 15% வணிகம்தான் விற்பனைக் கூடத்திற்குள்ளே நடைபெறுகின்றது. மீதி வணிகம் வெளியே நடைபெறுகின்றது உரிய வசதிகள் இல்லாததால் விற்பனைக் கூடத்திற் குள்ளே வரும் பொருட்களும் பாதுகாக்க முடியாமல் வீணாகி விடுவ தாலும் சேமித்து வைக்க உரிய கிடங்குகள் இல்லாததாலும் அனேக விவசாயிகள் உற்பத்தியாகும் பொருட்களை உரிய விலை கிடைக்காவிட்டாலும் உடனே விற்று விடுகின்றனர்.
விற்பனைக் கூடங்கள் அமைந்துள்ள 277 ஊர்களில் உரிய வசதிகளுடன் கிடங்குகள் அமைத்து இருந்தால் தமிழகத்தில் உற்பத்தியாகும் பொருட்களை எல்லாம் எந்தவித சேதாரமுமின்றி உற்பத்தியாகும் அந்தந்த பகுதிகளில் சேமித்து வைத்து விவசாயிகள் விரும்பும் விலை கிடைக்கச் செய்து இருக்கலாம். சேமிப்புக் கிடங்கு கட்ட இடமில்லை என்பதையே இத்துறையினர் கூறி வந்தனர். இது குறித்து ஆராய 1999ல் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது.
உயர்நிலைக்குழுவின் அறிக்கைப்படி தமிழகத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்குத் தேவையான சொந்த இடங்கள் வாங்கி அனைத்து வசதிகளுடன் அமைக்க வேண்டும் என அரசாணை எண் 66 நாள் 08.03.2001 பிறப்பிக்கப்பட்டது.
இதற்குப் பிறகும் உரிய நிதி இல்லை, உரிய இடம் கிடைக்க வில்லை என்று வேளாண் விற்பனைத் துறையினர் கை விரிக்கின்றனர். ஆணை செய லாகவில்லை.
இதே நேரத்தில் துறையினர் இதுவரை வசூலித்த உபரி பணத்தைப் போக்குவரத்து, ஆயுள் காப்பீடு நிறுவனம் போன்ற மற்ற துறைகளில் வட்டிக்குப் போட்டுள்ளனர். இதனால் விற்பனைக் கூடங்கள் சட்டம் இயற்றப்பட்டதின் நோக்கத்திற்குப் புறம்பாக இன்றுவரை அது செயல்பட்டு வருகின்றது.
பல்லாயிரம் கோடிகள் செலவு செய்து குறுகிய காலத்தில் நான்கு சாலை வசதி, அரசு தலைமைச் செயலகம் மற்றும் மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள் தேவையான இடங்களைக் கையகப்படுத்தி அமைக்கப்படுகிறது. வேளாண் விற்பனைக் கூடம் கட்டுவதற்கு மட்டும் உரிய இடம் கிடைக்கவில்லையாம். அரசு நினைத்தால் ஓராண்டில் இதை முடிக்க முடியும்.
மேலேகூறியவாறு ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்கள் அமைக்கப்பட்டால் தமிழகத்தில் விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயர்வதோடு உற்பத்தியாகும் தானியங்களில் ஒரு குன்றிமணி தானியம் கூட விரயம் செய்யாத மாநிலம் என்ற பெருமை நமது தமிழகத்திற்குக் கிடைக்கும். அரசும் விவசாய துறையினரும் ஆக்கப் பூர்வமாகச் செயல்பட முன்வருவார்களா?