ஒரு மாமன்னன் பணத்திமிரால் 

எங்களைப் போன்ற 

ஏழைகளின் காதலை இங்கே 

ஏளனம் செய்திருக்கிறான் 

காதலி! நாம் 

இந்த இடத்தில் 

 

சந்திக்கவேண்டாம் 
(தாஜ்மகாலைப்பற்றி) - சாஹிர் (உருதுக் கவிஞர்)

 

உமாபார்வதி எனும் இயற்பெயர் கொ்ணட உமாசக்தியின் முதல் கவிதைத் தொகுப்பு. வேட்கையின் நிறம் (2009) மணிரத்னத்தின் உதவியாளராகப் பணியாற்றியவர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் கதை, வசனப்பகுதிகளில் கவனம் செலுத்தி வருகிறார். த.மு.எ.க.சவில் தென்சென்னை மாவட்டதைச் சார்ந்தவர். இவரது தொகுப்பு அவள், அவன், அவர்கள், மற்றவை என்று பகுக்கப்பட்டுள்ளது. உமாசக்தி துயரங்கள் வாட்டி எடுக்கும் நிலையில் கவிதைக் குழந்தையின் மழலை மொழிக்குள் தன்னைப் புகுத்திக் கொள்பவர். சௌந்தர்யத்தையும் இளமையையும் எடுத்துக் கொண்டு தனிமையும் துயரையும் கொடுக்கும் வீடு ஆற்றாமையை முறையிடல்களைப் புறக்கணித்து விட்டுவிடுகிறது. எவ்வளவு தட்டினாலும் வளையல்கள் உடைபடுகின்றனவே அன்றி கதவுகள் திறக்கப்படாத இறுக்கத்தைக் கொண்டது. வீட்டின் அரவணைப்பை வேண்டும் இவரது கவிதைகள் பரவலாக புறக்கணிப்புகள், ஏமாற்றம், நேசிப்பைத் துறக்கவியலா தன்னிரக்கம் குழந்தைகளின் உலகம், தாய்மை இழையோடுபவையாக வெளிப்படுகின்றன. 

காதல் கடிதம் தொலைந்து போனநிலையில் எழுதப்பட்ட அவ்வரிகளை மீட்கமுடியாமல் தோற்கும் மனதின் இயலாமையை சொல்லவந்து இறுதியில் ஒரே ஒரு முத்தத்தைக் கடிதத்திற்குப் பதிலியாக்குகிறது. ஒளிந்து கிடக்கிற காதல் நெஞ்சத்தில் ஏற்படுத்தும் பரிதவிப்பில் வலியில் உறைந்து போகவைக்கிறது. இவ் உறைதலைப் பகிரவியலா மென்னுணர்வை வனைகிறது. காதல் கொண்டவரிட்த்தே பெருமழை ஏற்படுத்தும் ருசியை உயிரை உயிர் உறிஞ்சும் அவஸ்தையைக் கூறுகிறது. புறக்கணிப்பபின் முட்கீறல்களால் தவிக்கிறது.  

காதல்மீது ஏற்றப்படும் புனிதத்தின் முகத்தை கிழிக்கின்றன சில கவிதைகள். காதலின் பொய்த்துப்போன நம்பகத்தன்மையைப் பேசுகின்றன. காதலின் நம்பகத்தன்மை தோற்ற நிலையில்தான் திருமணம்எனும் சடங்கு நடைமுறையில் உருவெடுத்ததை அகப்பொருள்எனும் இலக்கணநூல் கூறும். சங்கப்பாடலொன்று, தான் காதலனோடு இருந்ததற்கு பறவையே சாட்சிஎன பறவையை சாட்சிகூறும். காதலின் பெயரால் புறக்கணிக்கப்படுவது காலங்காலமாக நாகரிகம் வளரவளர அதிகரித்துள்ளது. 

நம்பகத்தன்மையற்ற காதல் பெண்ணுக்கே பெரும் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. முள்மீது சேலைபட்டாலும் சேலைமீது முள்பட்டாலும் சேலைக்குதான் நஷ்ட்டம் எனும் பழமொழி இந்த அடிப்படையிலும் உருவாகியிருக்கலாம். காதலில்மீது பின்விளைவுகளை சந்திக்க வேண்டிய உடற்கூறு பெண்களைக் கட்டுப்படுத்தக் காரணமாக அமைகிறது. கற்புஎன்ற கற்பிதங்கள் பெண்ணைக் கட்டுப்படுத்தவும் பெண்ணை அடக்குமுறைக்கு உட்படுத்தவும்   தாய்மையைத் தாங்கும் இவ்வுடற்கூறே காரணமாகிறது. திருமணத்தின்பின் கொண்டாடப்படும் தாய்மையே திருமணத்திற்குமுன் பெண்ணைக் கட்டுப்படுத்துவதற்கு முனைகிறது.  

காதல் சொன்ன கணத்தின் ருசியை அதிகப்படுத்திய முத்தங்கள், கொடுங்கோடையின் தவிப்பில் புறக்கணிப்பின் முட்கள் சீறி விடைபெற்ற முத்தங்கள்,  மரணத்தின் நெடியுடன் எப்போதாவது வாய்க்கும் கடைசி முத்தம் என சக உணர்வெழுச்சியில் முத்தங்கள் முக்கியத்துவத்தைப் பேசுகிறது. அன்பின் காரணங்களை தெய்வப்பெண் தேவதையென பாசாங்காய் சொல்லி வெண்மை வெளிகள் இற்றுப்போன நாளொன்றில்  மோகமலர் உதிரும் சத்தம் சன்னமாய்க் கேட்பதாக அன்பு சருகாய் போனதைக் கூறுகிறது. 

முண்டும் மழைநீர்பட்ட விதையென  

தவிக்கும் என்னிடத்தில் 

நிறமறியா சில பறவைகள் 

சட்டென கனவினை உடைத்து வெளிவந்தது 

இதயத்தி்ன் அடி ஆழம் சுவைத்த காதல்கள் 

நஞ்சைவிட கசப்பாய் அமிலமாய் எரியும் 

முதலான உவமைகளைப் படிமங்களைக் கண்முன் நிறுத்துகிறது. 

உமா சக்தியின் கவிதைகள் அன்பின் வேராய்ப் படர்கிறது. அன்பிற்குமுன் மண்டியிடுகிறது. உறவிற்கான அர்த்தங்களைத் தேடுகிறது. நட்பை விளிக்கிறது. பிடிவாதங்களை உடைக்கும் அச்சமூட்டும் காதலைப் பாசாங்கற்று இருக்கச் சொல்கிறது. சொற்களின் காதலியாக பிரகடனப்படுத்துகிறது. தீண்டும் இன்பத்தில் சிலிர்க்கிறது. வலிக்க வலிக்க முத்தங்களை வேண்டிநிற்கும் இக்கவிதைகள் தமிழ்க்கவிதை கடந்து வந்த பாதையைச் சிந்திக்கத் தூண்டுகிறது. ஆண்கள் பெண்ணின் உணர்வை குரலைத் தன்எழுத்துகள் மூலம் பதிவுசெய்தனர். பெண் தனக்கான குரலை ஆண்மனோபாவத்தின் அடிப்படையில் இருந்தே பதிவு செய்யத் தொடங்கினாள். பெண்ணின் வாழ்வை, உணர்வை உள்ளபடியே பதிவு செய்யவில்லை. அதன்பின்   ஏற்பட்ட மாற்றங்களுள் ஒன்றாக காதலையும், காமத்தையும் வெளிப்படப்பேசுகிற பெண்குரலின் பதிவு அமைகிறது. பெண்கள் அகஉணர்ச்சியை வெளிப்படுத்தக் கூடாதவர்களாக கட்டுப்படுத்திவைக்கப்பட்டிருந்தனர். 

பெண்ணின் உடலைக் காமக்கிடங்காக பார்த்த ஆணாதிக்கத்தைக் களைநீக்கித் துளிர்க்கிறது பெண்கள் எழுதும் கவிதைகள். பொலிவிழந்த  பெண்ணொருத்தியைப் பார்த்து உன்னை எப்படி மீட்பது எனக் கேட்குமிடத்தில்  

 

உன் காதலர்கள் கைவிட்டிருக்கலாம் 

ஏதோவொரு ரகசியக் கனவின் 

வண்ணச் சேர்க்கைகளின் 

பாதியில் நீ விழித்திருக்கலாம் 

தோழியுடன் கணவன் சுகித்திருப்பதைக் கண்டிருக்கலாம்

இவ்வரிகள் படிப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. சமூகத்தில் பெண்ணுக்கு ஒரே காதல்தான் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிற கற்புக்கோட்பாட்டைக் கொண்டிருக்கிற பண்பாடு தமிழருடையது. இதே பண்பாட்டில்தான் காதற்பரத்தை, காமக்கிழத்தி என பெண்களுக்கான வாழ்க்கைமுறையும், கலைச்சொற்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இதனை வரவேற்கிற, பால்பேதத்தைப் பேணுகிற, ஆணாதிக்கத்திற்குத் துணைபோன ஒழுக்க முறைகள் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றது. பெண் மோகம் சொள்ளுவது மட்டுமல்ல அப்பெண்ணால் ஆண் வசீகரிக்கப்பட்டாலும்கூட அக்குற்றத்திற்கு பெண் காரணமாக்கப்பட்டிருக்கிறாள்.

நகரத்தில் பறவைகள் இல்லை, அக்குருவிகள் மாயமாகிவிட்டன. காகங்கள் வரமறுக்கின்றன. கோழிகள்கூட திரிவதில்லை என பறவைகளற்ற நகரத்தைக் கண்டு வருந்துகிறார். வாழும் காலத்தில் ஒரு தலைமுறைக்கும் அடுத்த தலைமுறைக்கும் கருத்தியல் ரீதியான இடைவெளி இருக்கும். இயற்கை சார்ந்து ஒவ்வொரு தலைமுறையும் பெரிய மாற்றங்களை சந்திக்க ஆரம்பித்துவிட்டன. அதில் சிறுவயதில் பார்த்து வளர்ந்த பறவையினங்களைச் செல்லப்பிராணிகளை அடுத்த தலைமுறை இழந்திருக்கிறது என்பது பெரும் சோகத்திற்குரியது. மின்னுவைக் காணவில்லை எனும் கவிதையில் காணாமல் போன பூனைக்குட்டியின் நினைவைப் பகிர்கிறார். திசைகள் அறியாத அப்பூனைக்குட்டிக்கு என் வாசனை மட்டுமல்ல வேதனையைக் புரிந்து கொள்கிறது. காணாமல்போன மின்னு பசியால் துடித்துக் கொண்டிருக்கும் அதனைக் கண்டுபிடிக்க உதவும்படி காற்றிடம் வேண்டுகிறார்.

பிறந்த குழந்தையைத் துணியில் சுற்றி காண்பிக்கையில் உடலும் உணர்வும் பெரும் உவகையைக் காட்சிப்படுத்துகிறது. பஞ்சுப்பொதியில் சுற்றப்பட்ட குட்டிக் கடவுளைப் பார்த்து வார்த்தை வரவில்லை உயிர் ஊற்று அருவியாய் ததும்புகிறது. மகவின் வாசனையை நுகர்ந்தவாறு சிற்பமாகிக் கிடக்கிற அந்த கணம் எத்தனை எண்ண எழுச்சியை ஏற்படுத்தக் கூடியது. பிள்ளைமேனி என்கிற கவிதை அதுவரை அனுபவித்த வலியின் அத்தனை கணுக்களில் இருந்தும் விடுதலை பெற்று உலகின் மொத்த பேரானந்தங்கள் அனைத்தையும் திரட்டி எடுத்துக் கொண்ட வார்த்தைகளுக்கு அகப்படா நொய்மை உணர்வை தூய்மையால் உணரமுடியும். அவ்வுணர்வின் அதிர்வுகளைக் கண்முன் நிறுத்துகிறது.

சக்திவேலும் டீச்சரும் எனும் கவிதை பள்ளியில் குழந்தை செய்யும் குறும்புகளை வரிசைப் படுத்துகிறது. கரும்பலகையில் நிலவு வரைந்து நட்சத்திரம் என்கிறான் ப்ரேயரி்ல் ஒற்றைக்கண் திறந்து பூஜாவின் ஷூவை மிதிக்கிறான். கணக்குப் போடச் சொன்னால் பக்கம் முழுக்க தன் பெயரெழுதி எப் ஃபார் சக்திவேல் எனக் கத்துகிறான் இப்படியே தினசரி குறும்புகளை செய்யும் குழந்தை மன்னித்து விடும்படி சாரி கேட்கும் பொழுது ஆசிரியை சிரித்து விடுகிறார். குழந்தைகளின் உலகம் எத்துணை ரம்யமானது குழந்தைகளின் இயல்பு ரசனைமிக்கது சொல்கிறது. சக்திவேல் போன்று குறும்புத்தனம் செய்ய முயலும் குழந்தைகள் பள்ளிகளில் கண்டிக்கப்படுகின்றனர். சுதந்திர உணர்வையும் குறும்புத்தனத்தையும் மழலை குணத்தையும் கட்டுப்பாடுகளை செலுத்திக் குறைத்து விடுகின்றனர்.

உமாசக்தியின் கவிதைகளில் குழந்தைகள் உலகமும் காட்டப்பட்டுள்ளது. சக்திவேலும் சாவிகளும் எனும் தலைப்பிடப்பட்ட கவிதை சக்திவேல் எனும் குறும்புக் குழந்தை எவற்றிக்கெல்லாம் சாவிகள் உண்டோ அந்தச் சாவிகளை மறைத்து வைக்கின்றான். சாவிகள் வாசனையை அறிந்த அவனின் ரகசிய இடங்கள் வேறுயாருக்கும் தெரியாது. மிரட்டல்களின் அச்சத்தில் பிஞ்சுக் கைகள் நடுங்க சாவியை எடுத்துத் தருவான் என்கிறது. கவிதையில் சாவி எனக் குறிப்பிடப்படும் பொருளை எடுத்துவிட்டு இணையான வெறெந்த பொருளையும் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம். இந்த அனுபவம் பெரும்பாலான வீடுகளில் காணக் கிடைக்கும் பலநேரங்களில் பெரியவர்கள் எதையாவது எங்காவது வைத்துவிட்டு நியாபக மறதியில் தேடுவதும் உண்டு. குழந்தைகள்தான் எடுத்து வைத்திருந்தாலும் பொருளையோ பிறர் வைத்திருக்கும் பொருளையோ நினைவில் வைத்திருந்தால் உடனே இங்கே இருக்கிறது எனக் கூறிக்கொண்டே எடுத்துக் கொடுப்பதைப் பார்க்கலாம். குழந்தைகளின் குறும்புத்தனம் தாய்களுக்கு தொந்தரவான ஒன்றாகத் தோன்றி கண்டிக்க வைக்கும். கண்டித்தவர்களே சிறிது நேரத்திற்குள் அந்தக் குறும்புக் கதைகளைக்கூறி சிரிக்கத்துவங்கும் தாய்மையைக் கண்ணனின் லீலைகளில் காணுகிறோம்.

காதலின் மூலம் கிடைத்த அனுபவங்களின் பல்வேறு பரிமாணங்களைப் பேசுகிற இவரது கவிதைகள். வாசிப்பவர்களுக்கு இருண்மையை ஏற்படுத்தாதவை. எளிய சொற்களையும் உருவகங்களையும் படிமங்களையும் கொண்டிருப்பவை. உரத்த குரலில் பாடாத மென்மையும் குழைவும் கொஞ்சலும் நிறைந்த மொழி உமாசக்திக்குரியது. காதல், தாய்மை, பெண்மை கானகத்தின் அடர் இருளுள் படர்ந்த பச்சைவாசனையாய்க் கவிந்திருக்கிறது. எப்பொருளையும் கவிதையாக்கி விடுகிற முயற்சி இவருடையது. கூந்தலை சுருக்கிக் வெட்டிக் கொண்ட அனுபவத்தில் அக்கூந்தல் கிளர்த்திய எண்ண முடிச்சுகளை மர்மமுடிச்சுகளைப்போல அவிழ்கிறார். கருங்கூந்தல் மோக வாக்கியங்களின் நீட்சியாக கலவியின் அர்த்தமாக நுகர்வின் வாசனையாய் அரவங்களாய் கவிதையில் மாறிக் கிடக்கின்றன.

புல்வெளிகளில் வெள்ளைக் கொக்குகள்

எண்ண ஆரம்பிப்பதற்கு முன்னேயே

விரைந்து நகர்ந்துவிட்ட ரயில்

பனிக்காட்சி எனும் கவிதையின் இவ்வரிகளை வாசிக்கும் பொழுது இன்குலாபின் நீர்த்துறையில் வாத்துகளின் முட்டைகள் இருக்கக் கூடும் என பார்த்துச்செல்லும்படி படகுக்காரரைக் கூறுவது நியாபகத்திற்கு வருகிறது.

காதலும் தாய்மையும் பெண்மையின் சிறப்பு இவ்வுலகத்தின் அனைத்து உயிர்களின் மீது அன்பையும் நேசத்தையும் காதலையும் செலுத்துபவள். காதல் மேலோங்கியிருக்குமிடத்தே வன்முறைக்கு வாய்ப்பில்லை. காலில்போட்டு மிதித்துவிட வேண்டுமெனும் கோபத்தையும் வன்மத்தையும் காதலின்மூலம் ஆட்கொள்ள முடியும். உலகின் இயக்கத்திற்கு காதலே மூலமானது. தாய்மையின்மூலம் உலக உயிர்களை அரவனணத்துக் கொள்ளமுடியும். அன்னை தெரசா போன்றவர்கள் இதனை நடத்திக் காட்டியுள்ளனர். தாய்மையின் முலைப்பாலைப் பருகாத உயிர்களில்லை. தாய்மையை உணராதவர்களை உயிரினமாகக்கூட கருதமுடியாது. அவ்வகையில் உமாசக்தியின் கவிதைகள் காதலின் பரிணாமத்தையும் தாய்மையையும் எளிய உயிர்களிடத்தே கசிந்துருக வேண்டிய நேசத்தையும் கொண்டவை.

 

கவிதை நுண் உணர்வுகளின் பொதி. உணர்வுக்கு அதிகமுக்கியத்துவம் தரும் வடிவம். உணர்வெழுச்சியில் வார்த்தைகளை வரிசைப்படுத்திக் கொள்ளும் சாத்தியத்தை உடையது. அன்பு, பாசம், நட்பு எனும் மென்னுணர்வுகள் அணைத்துக் கொள்ளவும் கூறுபோட்டு விடவும் கூடியவை. கவிதை துடிதுடிக்கும் மனத்தின் வெளிப்பாடுதானே.   உணர்வுக்கும் உறவுக்குமாக திணரும். கவிதைகள் உமாசக்தியுடையது.

 

 

Pin It