பிள்ளைகளின் தோள்கள்:

-ந.பாண்டுரங்கன்

வெளியீடு:

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,

41, பி- சிட்கோ இண்டஸ்ட்ரீஸ் எஸ்டேட்,

அம்பத்தூர், சென்னை-98.

விலை ரூ.75/- 

செம்மலரின் சில கதைகள் எழுதியிருக்கிற ந.பாண்டுரங்கனின் முழுச்சிறுகதை தொகுப்பு நூலாக வெளிவந்திருக்கிறது. ``பிள்ளைகளின் தோள்கள்'' என்ற தலைப்பிலான அந்த நூலை என்.சி.பி.எச். பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

இருபத்து மூன்று சிறுகதைகள், எளிமையான இயல்பான மொழிநடை. தம்மைச் சுற்றி நிகழ்பவற்றை தார்மீகக் கண் கொண்டு பார்த்து ஓர் அறச்சிந்தனையோடு எழுதப்பட்ட கதைகள்.

சகமனுஷி கதை சப்பென்று நெஞ்சில் அறைகிறது. சாதி வித்தியாசம் பார்க்காமல் குரலெடுத்து ஒப்பனை பாடுகிறவள், குழந்தைப் பாக்கியம் தர முடியாத கணவனின் மரணத்தில் மன மரணமாகி உறைந்து போய் விடுகிறாள். அவளது கனத்த சோகம் நம்முள் ஏறுகிறது.

சீட்டு கட்டி ஏமாந்த மத்திய தர வர்க்கத்தின் மன உலகத்தைப் பதிவு செய்கிற `வீட்டுமனை' கதை. ஆற்றில் கரைக்கிற களிமண் பிள்ளையார் காசுகளை பொறுக்குகிற சிறுவனின் நதிவழிப் பயணம் மரணத்தில் முடிகிறது; அதிர்கிறது வாசக மனசு.

சகோதரி மகள் மொட்டை போட தாய்மாமன் தலை மொட்டையடிக்கப்படுகிற கதையில் தாய்மாமன் பாத்திரத்தின் மன ஓட்டத்தில் கதை பயணப்படுகிறது. யதார்த்தமான மனச்சித்தரிப்பு காரணமாக கதையின் உணர்வு, வாசக உணர்வாகி விடுகிறது. சான்றிதழ் பெறுவதற்காக, அல்லாடி அலைகிற பழனிச்சாமி, அலைக்கழித்து வேடிக்கை காட்டுகிற அரசு அலுவலகச் செயல்பாடுகளை கண்டு அரூயை அடைகிற போது, அது நமது அரூயையாகி விடுகிறது.

`கை மாற்று' போன்று ஒன்றிரண்டு சிறு கதைகள் சுருதிபேதமாகிறது. வட்டிக்கு விட்டவர் மீது அனுதாபத்தையும், வட்டிக்கு வாங்கிய சின்னானின் மீது வெறுப்பையும் ஏற்படுத்துகிற அது, மனித நேயத்துக்கு முரணாக நிற்கிறது. இருந்தாலும்... பொதுவாக... பெரும்பான்மையான சிறுகதைகளில் முற்போக்கு மனித நேயம் உயர்ந்து நிற்கிறது. பாண்டு ரங்கனின் பாவனையற்ற, இயல்புத்தன்மைமிக்க அசலான மொழி நடை, வாசிப்பு, மனசை கட்டியிழுத்துச் செல்கிறது.

அச்சாக்கமும் வடிவமைப்பும் கச்சிதமான அழகுடன் திகழ்ந்தாலும்... ஒரு சில இடங்களின் பிழைகள் நெருடுகின்றன. தவிர்த்திருக்கலாம்.