உலகமயத்தின் உப விளைவுகளில் ஒன்று ஹைடெக் சாமியார்கள். மனதை ஒரு கேணி என்றார் வள்ளுவப் பேராசான். அதில் தோண்டத் தோண்ட அறிவு ஊற்றெடுக்க வேண்டும் என்றார் அவர். ஆனால் இப்போது புதிது புதிதாக முளைக்கும் சாமியார்கள் மனதைத் தோண்டித் தோண்டி மாயையை வெட்டி யெடுக்கச் சொல்கிறார்கள். பன்னாட்டு, மென்பொருள் நிறுவனங்களில் பணி யாற்றும் இளைஞர்கள் நவீன கொத்தடிமைகளாக மாற்றப்பட்டு வருகின்றனர். பணிச்சுமையால் அவர்களது மனக் கிணறு வறண்டு போகிறது. மதுவிருந்து வைத்து அவர்களை மயங்கவைக்க முயல்கின்றனர். அதில் மயங்காத இளைஞர்களே ஆன்மீகம் எனும் கயிறு கொண்டு கட்டிப்போடுகின்றனர்.

மூச்சுவிடுவது எப்படி என்று சொல்லிக்கொடுக்கிறார் ஒரு பூஜ்யஸ்ரீ. பிரசாதத்தில் லாகிரி வஸ்துகளை கலந்துகொடுத்து மூளையை முனை மழுங்க வைக்கிறார் கல்கி சாமியார் என்பவர்.

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் என்று ஆங்கிலத்தில் பட்டிணத்தாரை படியெடுக்கிறார் சுகபோதானந்தா.

இவர்களில் சத்குரு என்று தன்னை அழைத்துக்கொள்ளும் ஜக்கி வாசுதேவ் தனி ரகம். அவரது பேச்சும் எழுத்தும் ஒரு மயக்க நிலைக்கு தள்ளும். அவ்வப்போது இவர், அரசியலும் பேசுவார். அன்மையில் இவர் அளித்த நேர்காணல் ஒன்றிற்கு “கறுப்புப்பணம் பதுக்கியோர் தேசத் துரோகிகள்... பாய்கிறார் ஜக்கி வாசுதேவ்” என்று தலைப்பு கொடுத்திருந்தது ஒரு நாளேடு. அடப் பரவாயில்லையே... என்று படிக்கத் துவங்கினால் அழகாக முடிச்சு அவிழ்க்கிறார் இந்த சத்குரு.

தலைவர்கள் சரியாக இருந்தால் தேசம் முன்னேறும் என்பதற்கு குஜராத் ஒரு முன்னூதாரணம் என்று மோடிக்கு முட்டுக்கொடுக்கிறார் இவர். பல்லாயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்மக்களைக் கொன்று குவித்ததுதான் மோடியின் சாதனை. அவர் சரியாக இருக்கிறார் என்று சான்றிதழ் கொடுப்பதிலிருந்தே இவர் சரியான ஆள் இல்லை என்பது சட்டெனத் தெளிவாகிவிடுகிறது.

பாபா ராம்தேவ் அறக்கட்டளைக்கு ரூ.1000 கோடி சொத்து இருப்பதாக அவரே சொல்லியிருக்கிறாரே என்று ஜக்கியிடம் கேட்டதற்கு, இவர் கேள்வி முடிவதற்கு முன்பே “இதில் என்ன தப்பு. அறக்கட்டளைக்கு ஆயிரம் கோடிகள் இருந்தால் என்ன? அவர் எளிமையாகத்தானே இருந்தார்?” என்று பதில் சொல்லியிருக்கிறார். இது ராம்தேவ் அறக்கட்டளைக்கு வக்காலத்து வாங்கி சொன்ன பதிலாக மட்டும் தெரியவில்லை. இவர் நடத்தும் அறக்கட்டளைக்கு எத்தனை ஆயிரம் கோடி சொத்து இருக்கிறதோ தெரியவில்லை. இவரும் எளிமையாகத்தான் இருக்கிறார்.

பற்றற்ற ஞானிகள் வளைத்து வளைத்து சொத்து சேர்ப்பதன் மர்மம்தான் விளங்கமாட்டேன் என்கிறது. அறக்கட்டளை என்று சமாளிப்பதெல்லாம் இவர்கள் வைத்திருக்கும் தாடியைப் போன்றது தான். கேட்டால், எனக்கும் அந்த தாடிக்கும் சம்பந்தம் இல்லை என்பார்கள்.

சாய்பாபா படுக்கையறையிலிருந்து 12 கோடி ரூபாய் ரொக்கம் எடுக்கப்பட்டுள்ளதே என்று கேட்டதற்கு, “அவரது உயரத்திற்கு 12 கோடி ரூபாய்யெல்லாம் ஒன்றுமே இல்லை. பக்தர்கள் கொடுத்தது, அப்படியே வாங்கி ஓரமாக வைத்திருக்கிறார்” என்று வாசுதேவ் விளக்கமளித்திருக்கிறார். வாங்கி ஓரமாக வைத்ததுதான் 12 கோடி ரூபாய். மையமாக வைத்தது எவ்வளவு என்பது குறித்து தொடர்ந்து தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

பாபா பயன்படுத்திய படுக்கையறையை திறந்து பார்த்தபோது அதில், 11.57 கோடி ரொக்கம், 98 கிலோ தங்கம், 307 கிலோ வெள்ளி இருந்திருக்கிறது. அடுத்த அறையை திறந்தபோது ரூ.76லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கிடைத்துள்ளன. அடுத்தகட்டமாக மேலும் ஒரு அறையை திறந்தபோது 34.5 கிலோ தங்கம், மற்றும் 340 கிலோ வெள்ளி, ஒரு கோடியே 90லட்சத்து 53ஆயிரத்து 899 ரூபாய் ரொக்கம் கிடைத்துள்ளது. மேலும் ஒரு அறையை திறந்தபோது 1.5 கிலோ தங்கம், ரூ.32லட்சம் ரொக்கம், 734 கிலோ வெள்ளிப்பாத்திரங்கள், வெள்ளி சிம்மாசனம், வெள்ளி பாதுகைகள் கிடைத்துள்ளன.

இதெல்லாம் ஜக்கியின் வார்த்தையில் சொல்வதானால் பாபா ஓரமாக வாங்கி வைத்தவை. பாபாவின் மகா சமாதி திறக்கப்பட்டபோது ஆயிரக்கணக்கான பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டு சென்று தரிசனம் செய்துள்ளனர். ஆனால் அதற்கு முன்பாக ஆசிரம நிர்வாகிகள் சிலர் பல லாரிகளில் தங்கத்தையும் ரொக்கத்தையும் கடத்தியுள்ளனர். அவ்வாறு மக்கள் கொடுத்த பணத்தை கொள்ளையடித்துக்கொண்டு ஓடியவர்களை பாபாவின் சக்தி தடுக்கவில்லையா? போலீசார் சிலரை பிடித்திருக்கின்றனர்.

பாபா உயிருடன் இருக்கும்போது அவரை கொலை செய்ய சில சீடர்கள் முயற்சித்துள்ளனர். பாபா ஓடிச்சென்று அறைக்குள் தாழிட்டுக் கொண்டார். தனது உயரத்தை பயன்படுத்தி அந்த சீடர்களை பஸ்பமாக்கவில்லை.

பாபா ஆசிரமத்தில் இப்போது கிடைக்கும் ஆபரணங்களில் சின்ன சின்ன மோதிரங்கள் அதிகமாக இருக்கிறதாம். பாபா பலருக்கு மோதிரம் வரவழைத்துக்கொடுத்ததை இந்தச் செய்தியோடு இணைத்துப்பார்த்து குழப்பிக் கொள்ளக்கூடாது. பாபாவின் உயரமே வேறு.

சி.டி.புகழ் நித்தியானந்தா சாமிக்கும் உலகம் முழுவதும் சொத்து உள்ளது. அமெரிக்காவிலும் கூட ஆசிரம் இருக்கிறது. கதவைத் திற காற்று வரட்டும் என்று உபதேசித்த இவருக்கு சிறைக்கதவும் திறந்தது. ஜாமீனில் வெளியே வந்த இவர், குண்டலினியோகத்தை பயன்படுத்தி அந்தரத்தில் பக்தர்களை மிதக்கவிடப் போவதாக பெருமளவு விளம்பரம் செய்தார்.

பெரும் கூட்டம் கூடியது. அந்தரத்தில் பறக்கும்போது கீழே விழுந்து தலையில் அடிபட்டு விடக்கூடாது என்பதற்காக சிலர் ஹெல்மெட் கூட அணிந்திருக்கிறார்கள். கடைசியில் நித்தியானந்தா ஒரு பிரம்பை வைத்து ஆட்ட பக்தகோடிகள் உட்கார்ந்த இடத்திலேயே தவளையைப்போல குதித்துக்கொண்டிருந்தார்கள். சிலர் உருண்டு புரண்டார்கள். ஆனால் யாரும் அந்தரத்தில் பறக்கவில்லை. கடைசியில் நான் சொன்னதை யாரும் சரியாக கேட்கவில்லை. அதனால்தான் பறக்கமுடியவில்லை என்று நித்தி நெத்தியடியாக அடித்து விட்டார். இவர் அமெரிக்கா உட்பட வெளிநாடுகளுக்கு சென்றபோது பாஸ்போர்ட், விசாவோடு விமானத்தில் பறந்தாரா அல்லது குண்டலினி சக்தியை பயன்படுத்தி அந்தரத்தில் பறந்து அப்படியே போய்விட்டாரா என்று தகவல் இல்லை.

கறுப்புப்பணம் வைத்திருப்பவர்கள் தேசத் துரோகிகள் என்று ஜக்கி வாசுதேவ் கூறுவதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கப்போவதில்லை. ஆனால் சாமியார்கள் பதுக்கிவைத்துள்ள பணம் கறுப்புப்பணம் இல்லை போலிருக்கிறது. கேட்டால் இது காவிப்பணம் என்பார்கள்.

Pin It