womensdress 350பெண்கள் தங்களை அலங்காரப்படுத்திக்கொள்வதில் என்ன தேவை இருக்கிறது? பெண்கள் தங்களை அழகுபடுத்தி, அலங்காரப்படுத்திக்கொள்வதினால் அது யாருக்குப் பயன்படும்? பெண்கள் அழகுப்படுத்தப்பட்ட அலங்காரப் பொருளா என்ன? இந்த மாதிரியான கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் மதுரை தோழர் மகிழ். அவரிடம் ஒரு நேர்காணல்:-

- பல்லடம் தீபா, திருப்பூர் வேணி

என்னுடைய பெயர் மகிழ். அப்பா பாபுகண்ணன், அம்மா நிர்மலா, நாங்கள் மதுரையில் வசிக்கிறோம். நான் மாகாத்மா பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கிறேன்.

பெண்களுக்கு உரிய அடையாளங்களான ஆடை, அணிகலன், கூந்தல் இவைகளைத் தவிர்த்து வாழக் காரணம் என்ன?

பெண்களுக்கு அடையாளங்கள் ஆடை, அணிகலன்களோ, கூந்தலோ இல்லை என்று நான் நினைக்கிறேன். பெண்கள் என்ன நகை மாட்டும் ஸ்டாண்டா? என்ற பெரியாரின் வரிகள் என் மனதைக் கவர்ந்தவை. இந்த சிந்தனையோடு நான் எப்படி சராசரி சமூகப் பெண்ணாக வாழமுடியும்? அதனால் தான் அனைத்து விசயங்களையும் சிந்தித்து நகை மாட்டும் ஸ்டாண்டாக நான் வாழ விரும்பவில்லை.

பெண்கள் அணியும் உடைகளில் பாதுகாப்பான உடை எது? பாதுகாப்பற்ற உடை எது?

முதலில் தாவணிபாவாடை, சேலை பற்றிப் பேசுவோம். ஒரு பெண் தன்னை தயார்படுத்தி வெளியில் செல்வதற்கு நேரமும்செலவாகிறது. அதுமட்டுமில்லாமல், ஆபத்தும், ஆபாசமும் நிறைந்த உடைகள் இவை இரண்டுதான். குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் இரு சக்கர வாகனங்களில் செல்லும் போதும் பேருந்தில் பயணிக்கும் போதும் ஆடைகளைச் சரி செய்வதிலேயே தன்னுடைய கவனத்தைச் செலுத்தவேண்டியது அவசியமாகிறது.

எனவே இது ஒரு பாதுகாப்பற்ற உடைதான். சரியான உடை என்று சொல்ல வேண்டுமானால் ஆண்கள் அணிவது போல் பேண்ட், சர்ட், டி.சர்ட் அணிவதே சிறப்பானதும், பாதுகாப்பானதும் கூட. இப்படி அணிவதினால் நேரமும் வீணாவதில்லை. தேவையற்ற பொருட் செலவுகள் (உடைக்கு ஏற்றது போல் கம்மல், வளையல், பாசி) ஏதும் இல்லை.

பெண்களுக்குக் கூந்தல்தான் அழகு என்கிறார்கள் அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஆண்களுக்குக் கூந்தல் இல்லை. ஆனால் அவர்கள் அழகாக இல்லையா? இப்போது எனக்கு கூந்தல் இல்லை. இப்படியிருப்பது எனக்கு மிகவும் சவுரியமாக இருக்கிறது. காலையில் சீக்கிரமாகவே பள்ளிக்குப் போக முடிகிறது. தினமும் தலைக்குக் குளிக்க முடிகிறது. ஆனால், என்னுடைய சக தோழிகள் பள்ளிக்குத் தாமதமாக வருவதற்குக் காரணமே அவர்களுடைய முடிதான். தலைசீவி, சடைபிண்ணி வருவதால் தாமதம் ஆகிவிட்டது என்று சொல்வார்கள்.

நான் எளிமையான தோற்றத்தில் (Hair cut) இருப்பதனால் எந்த ஒரு இடத்திற்குப்போகும் போதும் சீக்கிரமாகப் போகமுடிகிறது. என்னுடைய  பள்ளியில் 8000 பேர் படிக்கிறார்கள். ஒரு போட்டிக்குத் தேர்வு செய்யும் போது முதல் வாய்ப்பு எனக்குக் கிடைக்கிறது. அதற்குக் காரணம் என்னுடைய (Hair cut),

அலங்கார அணிகலன்களைத் தவிர்த்ததால் இந்த விஷயத்தில் தைரியமாக இருக்கிற பெண் எல்லா விஷயங்களிலும் தைரியமாக இருப்பாள் என்று அவர்களுக்கே என்மேல் ஒரு நம்பிக்கை ஏற்படுகிறது. நான் இப்படி இருப்பதால் எனக்கு முதல் வாய்ப்புதான் கிடைக்கிறது. எந்த இடத்திலும் இழிவு ஏற்படவில்லை. அலங்காரத்தோடும், கூந்தலோடும் இருக்கிற பெண்களுக்குக்கூட 2 வது இடம்தான் கிடைக்கிறது. அதனால் ஒரு பெண்னுக்கு முக்கியமானது அலங்காரமோ, அணிகலன்களோ இல்லை. பகுத்தறிவு சிந்தனைகள்தான்.

நான் கைப்பந்துப் போட்டியில் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டேன் .வயது குறைவாக இருப்பதினால் விளையாட முடியவில்லை. அடுத்த ஆண்டு பெயர்ப் பட்டியலில் என்னுடைய பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

கைப்பந்தாட்டத்திற்குத் தினமும் பயிற்சி எடுக்கும் போது என்னுடைய சக தோழிகள் தலைமுடி பிரிந்துவிட்டது, ரிப்பன் பிரிந்துவிட்டது என்று அதைச் சரிசெய்வதும், காதில் இருந்த கம்மல் காணாமல் போய்விட்டது என்று தேடுவதுமாக இருப்பார்கள். ஆனால், நான் கூந்தல், அணிகலன் களைத் தவிர்த்ததால் எனக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. விளையாட்டில் கவனமாக இருக்க முடிகிறது.

நாங்கள் விளையாடும்போது கூட பந்து காதில் பட்டுவிடுமோ, என்று அலங்காரம் செய்து கொண்ட பெண்கள் அதைப் பாதுகாப்பதாகவே இருப்பார்கள். ஆனால், எனக்கு எந்த விதமான பிரச்சனையும் இல்லை.

முடி வளர்ப்பதால் நம் பெண் சமூகத்திற்கு முன்னேற்றம் முற்றிலும் தடைபடுகிறது. எப்படியெனில் ஒரு பெண் முடிவளர்க்கும் போது அதனை அலங்கரிக்க, தன்னுடைய நேரம் மட்டும் இல்லாமல் தன்னுடைய தாயின் நேரத்தையும் சேர்த்து செலவிடவேண்டியுள்ளது. இதனால் இரண்டு பேரின் நேரமும் வீணாகிறது. ஆகவே நாம் வளர்க்க வேண்டியது கூந்தல் அல்ல கல்வி. அறிவியல், பகுத்தறிவு இவைகளைத்தான் நாம் வளர்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

அலங்காரம், அணிகலன்களைத் தவிர்த்தது உங்களின் விருப்பமா? பெற்றோரின் விருப்பமா?

இது என்னுடைய விருப்பம்தான். நான் பெரியாரியல் புத்தகங்களை வாசிக்கும்போதும், கூட்டங்களுக்குப் போகும் போதும் ஆடை, அணிகலன், கூந்தல் இவைகளை ஏன் தவிர்க்கணும் என்பதை நான் தெரிந்து கொண்டேன்.

என்னுடைய பெற்றோருடன் கலந்து உரையாடும்போதும் இவைகளைத் தவிர்ப்பதின் அவசியங்களை அறிந்தேன். ஒரு சில நிகழ்ச்சிகளுக்குப் போகும்போது கூட என்னுடைய பாட்டி, சித்தி இவர்கள் அனைவரும் நிறைய நகை அணிந்து கொண்டுதான் வருவார்கள். ஆனால், என்னுடைய அம்மா மிகவும் எளிமையான தோற்றத்தில்தான் வருவார். நான் என்னுடைய அம்மாவிடம் கேட்டேன் நீங்கள் மட்டும் ஏன் எளிமையான தோற்றத்தில் இருக்கிறீர்கள் என்று, அதற்கு என்னுடைய அம்மா விளக்கம் கொடுத்தார். அப்போதுதான் நான் அடிமைத்தனம் இல்லாமல் இருக்கவேண்டும் என்று நினைத்தேன். அதனால் நான் என்னை மாற்றிக்கொண்டேன்.

உங்களுடைய நண்பர்களோ இல்லை உறவினர்களோ, இந்த வாழ்க்கை முறையை எப்படிப் பார்க்கிறார்கள்?

என்னுடைய உறவினார்கள் எதுக்கு இப்படி முடியை வெட்டி இருக்கிறாய்? முடி இருந்தால் உனக்கு அழகாக இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால், என்னுடைய பாட்டியே மற்றவர்களிடம் சொல்லும்போது என்னுடைய பேத்தி மாதிரி முடியை வெட்டி விடுங்கள். பள்ளிக்குச் செல்வதற்கும் காலையில் தலைக்கு குளிப்பதற்கும் வசதியாக இருக்கும் என்று சொல்வார்.

ஒட்டு மொத்த பெண் சமூகமே வேறுவிதமான வாழ்வியலைக் கடைபிடிக்கும் போது உங்களுடைய மாற்றத்திற்கு என்ன நோக்கம்?

பொதுவாகவே பெண்கள் என்றாலே எதுக்கு அதிகமாக படிக்க வைக்க வேண்டும்? எப்படியிருந்தாலும் திருமணம் முடிந்து வேறு வீட்டுக்கு போகிறவள் தானே? ஏதோ எழுத, படிக்கத் தெரிந்தால் போதும் அதிகப்படியான படிப்பைப் படிக்க வைத்துச் செலவு செய்யாமல் அந்தப் பணத்தை வைத்துத் திருமணம் செய்து வைத்துவிடலாம் என்று நினைப்பார்கள். இதுதான் பெண்களுடைய சாதாரணமான வாழ்க்கை. நான் இந்த வாழ்க்கை முறையிலிருந்து வேறுபட்டு இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். கல்வி, விளையாட்டு போன்ற எல்லாவற்றிலும் கலந்து கொண்டு ஒரு பெண்ணாலேயும் இப்படி இருக்க முடியும் என்று காட்டவேண்டும். ஒரு சராசரிப் பெண்ணாக இல்லாமல் ஒரு திறமைசாலியாகவும், புத்திசாலியாகவும் தைரியமான பெண்ணாக பெரியார் சொன்னதுபோல் வாழ வேண்டும் என்று நினைக்கிறேன்.

திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிகளில் அலங்காரம் மற்றும் அழகுசாதனப் பொருட்களுக்காகவே பெண்கள் படைக்கப்பட்டதாக காட்டுகிறார்களே இதைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன?

ஒரு மாதத்திற்கு முன்பு ‘காளை’ என்ற விலங்கினைக் காட்சிப்படுத்தப்பட்ட பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என்று ஒரு போராட்டமே நடந்தது. ஆனால், பலநூற்றாண்டுகளாகப் பெண்கள் காட்சிப் படுத்தப்பட்ட பொருளாகத்தான் இருக்கிறார்கள். இதிலிருந்து இவர்கள் நீக்கப்பட்டாலே பெண்சமூகம் முன்னிலையில் இருக்கும்.

ஒரு விளம்பரத்தைப் பார்த்தால் அழகு கிரீம்கள், சோப்பு, பவுடர்கள் என்று பெண்களை மையப்படுத்தியே விளம்பரங்கள் எடுக்கப்படுகின்றன . சேவிங் கிரீம், வாசனைப் பொருட்கள் (Spray) இவைகளைப் பயன்படுத்தினாலே ஆண்கள் பின்னே பெண்கள் போகிறார்கள் என்று பெண்களை மிகவும் கேவலமாகச் சித்தரித்துக் காண்பிக்கிறார்கள். இப்படி ஓர் ஆணுக்கான விளம்பரத்தில்கூட பெண்கள்தான் வருகிறார்கள். இந்த நிலை மாறவேண்டும். அப்போதுதான் பெண் சமுதாயம் முன்னேறும்.

பொதுவாகவே பெண் என்றாலே ஒரு சின்னக் குண்டுமணி அளவாவது தங்கம் போட்டிருக்க வேண்டும் என்கிறார்களே!

ஒரு பெண் வந்து ஒரு ஒலிம்பிக்கிலோஅல்லது மாநில அளவிலோ, மாவட்ட அளவிலோ ஒரு விளையாட்டுத்துறையில் சாதனை செய்து தங்கப்பதக்கம் வாங்கிக் கொண்டு வரவேண்டும். அந்த மாதிரியான ஒரு குண்டுமணித்தங்கம் தான் வாங்க வேண்டுமே தவிர கழுத்து, காதுகளில் போடுவது தேவையற்றது என்று நினைக்கிறேன்.

பெண்கள் விளையாட்டுத் துறையில் பின் தங்கியிருக்கக் காரணம் என்ன?

அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று சொல்வார்கள். இப்படிப் படிப்பிலேயே மட்டம் தட்டும்போது அவர்களை விளையாட்டுத்துறைக்கு அனுமதிப்பது கிடையாது.

நான் L.K.G. படிக்கும் போது இருந்து 5 -ஆம் வகுப்பு படிக்கின்ற வரைக்கும் 10ஆண்கள், 10 பெண்கள் சேர்ந்து விளையாடுவோம். ஆனால், இப்பொழுது 10 பெண்களில் 9பேர் விளையாடுவதற்கு அவர்களுடைய வீடுகளில் அனுமதிப்பது கிடையாது.

பள்ளிக்குப் போவதும் பள்ளி முடிந்தவுடன் வீட்டிற்குள் முடங்கியிருப்பதுமாக இருக்கிறார்கள். ஆனால், எனக்கு இப்போது 13 வயது ஆகிறது. நான் இப்பவரைக்குமே எல்லா ஆண்களோடும் விளையாடிக்கொண்டுதான் இருக்கிறேன். இப்ப இருக்கிற பெண்குழந்தைகளை இப்படி வீட்டில் அடிமைப்படுத்தி வைத்திருப்பதால் இவர்கள் எப்படி விளையாட்டுத்துறையில் சாதிக்கமுடியும்? இந்தநிலைமாறவேண்டும். அப்போதுதான் இனிவரும் காலங்களில் பெண்களின் பங்கீடு அதிகமாக இருக்கும்.

உங்களுடைய வாழ்க்கையின் லட்சியம் என்ன?

ஒரு அலங்கார அணிகலன்களைப் போட்ட - கூந்தல் உடைய அடிமைப்பெண்ணாக இல்லாமல் ஒரு பகுத்தறிவுச் சிந்தனையுள்ள ஒரு பெண்ணாக வாழ விரும்புகிறேன்.

என்னுடைய முதல் இலட்சியம் மாவட்ட ஆட்சியாளராக ஆகவேண்டும் என்பதே. அதாவது யாரும் எதிர்பார்க்க முடியாத அளவிற்கு ஒரு பெண்ணால் இப்படி இருக்க முடியுமா? என்று சிந்தனை கூடப் பண்ணமுடியாத ஆட்சியாளராக இருந்து சாதனை படைக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.

மகிழ் பெற்றோர்களிடம் கேள்விகள்

இந்திய மற்றும் தமிழ்க் கலாச்சாரங்களில் பெண்கள் கூந்தல் வளர்ப்பதையும் நகை அணிவதையும் கொண்டாடும்போது நீங்கள் அதற்கு மாறாக உங்கள் மகளை வளர்க்க என்ன காரணம்?

எங்களுடைய திருமணமே பெரியாரின் கொள்கைப்படி சுயமரியாதைத் திருமணம்தான். நாங்கள் பெரியாரின் வாழ்வியலை ஏற்றுக்கொண்டு அதன்படி வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அதனால், எங்களுடைய குழந்தையை பெரியாரின் கொள்கைப்படிதான் வளர்க்கவேண்டும் என்று முடிவு செய்தோம். மனுசாஸ்திரம் பெண்களை மிகவும் இழிவாகக் கூறுகிறது. பெண்கள் படுக்கை, ஆசனம், அலங்காரங்களுக்கு ஆசைப்படுவார்கள். காம குரோதங்களுக்கு வசப்பட்டிருப்பார்கள். செய்யத் தகாததைச் செய்பவர்களாகவும் துரோக பாவத்தோடும் இருப்பார்கள் (அத்தியாயம் 8, சுலோகம்-17) இந்த மனுசாஸ்த்திரப்படி இல்லாமல் இந்து மதசாஸ்திரத்திற்கு எதிராகவும் - பகுத்தறிவு உடையவராகவும் எங்கள் மகளை வளர்க்க முடிவு செய்தோம்.

உங்கள் மகளை இப்படி வளர்ப்பதால் இந்த சமூகத்தில் நீங்கள் எதிர்கொண்ட  பிரச்சனைகள் என்ன?

நாங்கள் நிறைய பிரச்சனைகளைச் சந்தித்து இருக்கிறோம். ஒரு பெண் என்றால் நிறைய கூந்தல் இருக்கணும். நிறைய அணிகலன் அணிந்து இருக்கணும். ஒரு பெண்ணைப் பெண்ணாக வளர்க்கணும். ஆண் பிள்ளையைப்போல்  வளர்க்கக்கூடாது என்று நிறையப் பேர் சொல்வார்கள். ஆனால், நாங்கள் எங்களுடைய பெண்ணை இப்படித்தான் வளர்க்க வேண்டும் எனபதில் உறுதியாக இருந்தோம்.

ஆடைகளை வைத்தோ, கூந்தலை வைத்தோ அவள் மதிக்கப்படத் தேவையில்லை. அவளுடைய வளர்ச்சியாலும், அறிவினாலும் மதிக்கப்படணும் என்று நினைத்தோம். இப்பவும் நிறைய விஷயங்களை மகிழ் புரிந்து கொண்டு அதன்படி நடக்கிறாள். ஆரம்பத்தில் பெயர் வைப்பதிலேயே பிரச்சனை ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அடையாளம் இல்லாமல் பொதுப்பெயர் வைக்கணும் என்று பெரியார் வலியுறுத்தியிருப்பார்.

அந்தச் சொல் எனக்கு மிகவும் பாதிப்பாக இருந்தது. என்னுடைய மனைவி 5 மாதக் கர்ப்பிணியாக இருக்கும்போது பிறக்கப்போவது ஆணா,பெண்ணா என்று தெரியாத போதே நமக்கு எந்தக் குழந்தை பிறந்தாலும் ‘மகிழ்’ என்று பெயர் வைக்க முடிவு செய்தோம். அப்போதும்கூட எங்களுடைய உறவினர்கள் வெறும் மகிழ் என்று இருக்கக்கூடாது ‘மகிழ் ஓவியா’ என்று இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். அதன்பின்பு என்னுடைய அம்மா, அப்பா ஒரு பெயர் சொல்லி மகிழை அழைத்தார்கள்; நிர்மலாவின் அம்மா, அப்பா ஒரு பெயரைச் சொல்லி அழைத்தார்கள்;  அதை எல்லாம் உடைத்து மகிழ் என்ற பெயரை நிலை நிறுத்தினோம்.

அதன்பிறகு முடி வெட்டுவது. 5 ஆம் வகுப்பு வரை முடி வெட்டிக்கொண்டு இருக்கும்போது பள்ளிக்கூடத்திற்குச் சீக்கிரமாகப் போகட்டும் என்று இருந்தார்கள். ஆனால்,அதன்பிறகு இப்ப மகிழ் பெரிய பெண் ஆகிட்டா அதற்கு சடங்கு, சம்பிரதாயங்கள் எல்லாம் செய்யவேண்டும். அதற்கு முடி வளர்க்கணும். இப்படி இருந்தால் குடும்பத்திற்கு நல்லது அல்ல. நிறைய பேர் வருவாங்க.  அந்த நேரத்தில் நாம் இப்படியிருப்பது சரியில்லை என்று சொன்னார்கள்.

ஆனாலும் மகிழ் பெரிய பெண்ணாவதைச் சாதாரண நிகழ்வாகத்தான் பார்க்கிறோம். எந்த ஒரு சடங்கு, சம்பிரதாயங்கள் செய்யப்போவதுமில்லை. இருந்தாலும் இந்தச் சமூகம் இனிமேலும் முடி வளர்க்காமல் இருப்பது நல்லதல்ல என்று சொல்கிறார்கள். முடி இல்லாமல் இருப்பது வசதியாக இருக்கிறது. எளிமையாக இருக்கிறது என்பதையும் தாண்டி - சமூகத்தில் ஒரு பிரச்சனையாக இருக்கிறது. எந்த ஒரு பிரச்சனையும் நாம் எடுத்துச் சொல்வதின் மூலமாகத்தான் நாம் அவர்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டியிருக்கிறது. எந்த ஒரு கட்டாயத்திற்கும் நாங்கள் உட்படவில்லை. எங்களுடைய முறைகளில்தான் நாங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

உங்களுடைய மகளை அலங்காரம், அணிகலன் தவிர்த்து உருவாக்கியதால் என்ன நன்மை?

எங்களுக்கு வீண் பொருட்செலவு இல்லை. எங்களுடைய குழந்தைக்கு  பூ, பொட்டு, வளையல் அந்த மாதிரி எதுவும் நாங்கள் வாங்கியதே இல்லை. ஒரு ஆண் குழந்தைக்கு பேண்ட், சர்ட் வாங்கிக் கொடுத்துவிட்டால் போதும். ஆனால், ஒரு பெண் குழந்தைக்கு உடைக்குத் தகுந்த மாதிரி பூ, தோடு, வளையல், பாசி எல்லாம் வாங்கித்தரவேண்டும். போகின்ற இடங்களில் எல்லாம் இவற்றை வாங்கி வாங்கி சேகரிப்பது இந்த மாதிரியான செலவுகள் எங்களுக்கு எதுவும் இல்லை.

மகிழிடம் பெண் உடுத்துகின்ற உடைகள் என்று எதுவுமே இல்லை. ஒரு ஆண்பிள்ளைக்கு உண்டான உடைகள் மட்டுமே இருக்கின்றன. என்னுடைய கணவருக்கும், மகிழுக்கும் உடைகள் ஒரே மாதிரியாகத்தான் எடுக்கிறோம். அளவுகள் மட்டுமே சற்று மாறுபட்டு காணப்படும். தங்க ஆபரணங்கள் மகிழ் போட்டது கிடையாது. போட்டிகளில் கலந்து கொள்வதினால் நிறைய இடங்களுக்கு போக வேண்டியுள்ளது. இப்படி வெளியே அனுப்பும்போது எங்களுக்கு எந்த ஒரு பயமும் இல்லை. நகை அணிந்து கொண்டு போவதினால் ரொம்பவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்கிற பயம் இல்லை.

உங்களது வாழ்க்கைமுறையைப் பார்த்து உங்கள் உறவினர்கள் யாராவது அதைப் பாராட்டி இருக்கிறார்களா? பின்பற்றி இருக்கிறார்களா?

குழந்தை பிறந்ததற்குப் பிறகு புண்ணியதானம் பண்ணனும் என்று சொன்னார்கள். புண்ணியதானம் என்பது குழந்தை பிறந்து 30 நாட்களில் செய்து தீட்டு கழிப்பது. பிறந்த குழந்தையே ஒரு தீட்டு என்றால் நாங்களும் தீட்டுதானே? நாங்கள் வேண்டுமானால் எங்களுடைய வீட்டுக்குக் குழந்தையை எடுத்துக்கொண்டு போய்விடுகிறோம் என்று சொன்னோம்.

அதற்கு நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம் நாங்கள் செய்கிறோம்.அப்படி செய்யாவிட்டால் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் நம்முடைய வீடுகளில் வந்து யாரும் சாப்பிடமாட்டார்கள் அதனால்தான் சொல்கிறோம் என்றார்கள். அந்தப் புண்ணியதானம் செய்வதற்கு மறுப்பு தெரிவித்தோம்.

அந்த முறையிலேயே எங்களுடைய வீட்டிலும், என்னுடைய மனைவி வீட்டிலும் சேர்த்து 10 குழந்தைகள் பிறந்து இருக்கிறது. இந்த 10 குழந்தைகளுக்குமே புண்ணியதானம் என்கிற சடங்குகள் மறுக்கப்பட்டு இருக்கிறது. இதுவே எங்களுக்கு ஒரு பெரிய வெற்றியாகக் கருதுகிறோம்.

அதுமட்டுமில்லாமல் பெயர் வைக்கும்போது என்னுடைய பெயர் பாபுகண்ணன், துணைவியார் நிர்மலா, எங்களுடைய குழந்தைக்கு ‘நி.பா.மகிழ்’ என்று எங்கள் இருவரின் முதல் எழுத்தை இன்சியலாக வைத்தோம். இதனுடைய தாக்கம் என்னவாக இருக்கிறது என்றால் என்னுடைய தம்பியுடைய குழந்தைகள், நிர்மலாவின் தங்கையின் குழந்தைகள் மற்றும் நண்பர்கள் அனைவரும் நல்ல விஷயம்தானே நாமும் இப்படி இன்சியல் வைக்கவேண்டும் என்று எல்லாக் குழந்தைகளுக்கும் இரண்டு இன்சியல் உள்ளது. அது அம்மா, அப்பாவின் பெயரின் முதல் எழுத்தாக உள்ளது.

மகிழுக்கு எந்த ஒரு இந்து மத சடங்குகளும் இதுவரை நாங்கள் செய்யவே இல்லை. குழந்தை பிறந்து புண்ணியதானத்தில் இருந்து காதுகுத்து, சடங்கு என்று எதுவும் நாங்கள் செய்யவில்லை. ஒரு பெரியாரியல்வாதியாக இருந்து சடங்குகளைச் செய்யாமல் இருப்பது ஒரு சாதாரணமான விஷயம்தான்.

இது ஒரு சமூகமாக நம்மைச் சார்ந்தவர்களின் குடும்பங்களில் நடக்கின்ற நிகழ்வுகளைப் பார்க்கும்போது இதை யார் முன்னெடுப்பது என்பதற்கு முன்னாடி இதை நாங்கள் எடுத்துக்கொண்டு போகிறோம். நாங்கள் எங்கள் குழந்தைக்குக் காது குத்தாததினால் எங்களுடைய வீடுகளில் இதை ஒரு சடங்காக, நிகழ்ச்சியாக எந்த ஒரு குழந்தைக்கும் செய்யவில்லை.

அதுவே ஒரு பெரிய வெற்றி. மகிழ் பெரிய பொண்ணு ஆகி ஒரு வருடம் ஆகிவிட்டது. ஆனால், எங்களுடைய வீடுகளில் யாருக்கும் தெரியாது. ஆனால், அவர்கள் அனைவரும் எப்படியிருந்தாலும் பெரிய பொண்ணு ஆனா சடங்கு செஞ்சுதான் ஆகவேண்டும். எந்த விஷயங்களைச் செய்யாமல் இருந்தாலும் இதை எங்களுக்குத் தெரியாமல் மறைக்கவே முடியாது என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், அதுக்குமே நாங்கள் அவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கவில்லை. இதை ஒரு விஷேசமாக கொண்டாடத் தேவையில்லை. இது ஒரு இயற்கைக் கழிவு வெளியேற்றம்தான். மகிழ் பெரிய பெண் ஆனவுடன் ஒரு பெண்மருத்துவரை அணுகி மகிழுக்குத் தேவையான சத்து மாத்திரைகள் வாங்கிக் கொடுத்தோம். மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்தோம்.

இது ஒரு சாதாரணமான நிகழ்ச்சியாகத்தான் பார்க்கிறோம். இதைப் பார்த்து என்னுடைய சகோதரனின் வீடுகளிலோ, இல்லை சமூகத்தின் பிள்ளைகளிலோ மாறுதல் வரும் என்று எதிர்பார்க்கிறோம். எங்களைப் பார்த்து நாலுபேர் செய்கிறார்கள். அதற்கு மகிழ் ஒரு முன் உதாரணமாக இருப்பது எங்களுக்கு சந்தோசமாக இருக்கிறது.

இன்றைய சமூகச் சூழலில் பெண் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

விளையாட்டு, அரசியல் போன்ற எல்லாவற்றையும் பெண்களுக்கு முழுக்க, முழுக்க கற்றுக் கொடுக்கவேண்டும். இந்தியாவில் ஒலிம்பிக்கில் பெண்கள் கலந்து கொள்கின்ற விகிதம் அதிகமாக இருக்கவேண்டும். அதற்கு பெண் குழந்தைகளை அடிப்படையிலேயே ரோடுகளில் விளையாடுவதற்கு அனுமதிக்கவேண்டும். நீங்கள் ரோடுகளில் விளையாடுவதை அனுமதிக்காத போது அந்தக் குழந்தை எப்படி ஒலிம்பிக்கில் விளையாடும்?

பெண்களுக்கு பாலியல் தொந்தரவுகள் மிகவும் அதிகமாக இருக்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் பெண் எப்படி தன்னைப் பாதுகாக்க வேண்டும் என்று கற்றுக் கொடுக்கவேண்டும். அதற்குத் தற்காப்பு, ஆயுதப்பயிற்சிக் கலைகளைக் கற்றுக்கொண்டு தன்னை மேம்படுத்தி வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பாலியல் சம்பந்தமான விஷயங்களைக் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கவேண்டும். பாலியல் சம்பந்தமான அறிவை நாம் பேசாமல் மறைப்பதினால் நம் குழந்தைகள் பாலியல் தொந்தரவுகளால் பாதிக்கப்படுகிறார்கள். பாலியல் கல்வி என்பது அவசியமானதாக இருக்கிறது. நமது கல்வி முறைகளில் பாலியல் கல்வி என்பதை ஒரு பாடத்திட்டமாகக் கொண்டு வந்தால் இன்று நடக்கும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் எதிர்காலங்களில் நடக்காமல் போகலாம்.

ஒரு ஆணை வளர்த்தாலும் பாலியல் என்றால் என்ன? என்பதைத் தெரிவிக்கவேண்டும். ஓர் ஆண் தவறான முறையில் வளர்க்கப்படுவதினால்தான் பெண் பாதிக்கப்படுகிறாள் என்பதை நாம் ஆண் குழந்தை வைத்திருப்பவர்களுக்கும் வலியுறுத்த வேண்டும். பாலியல் சம்பந்தமான விஷயங்களை இந்தியக் கல்விமுறை இன்னும் கொடுக்கவில்லை. பாலியல் கல்வி என்பதையும், பாலியல் சமத்துவம் பற்றியும் பெற்றோர்களாகிய நாம்தான் கற்றுக்கொடுக்க வேண்டும். எந்த எந்த காலகட்டத்தில் எப்படியிருக்க வேண்டும் என்பதை அறிவியல் பூர்வமாக விளக்கவேண்டும். இன்றைய குழந்தைகளுக்கு நல்ல கல்வி முறையையும், எந்த இடத்திற்கும் தனியாக சென்று வருகின்ற தைரியத்தையும்,தற்காப்பையும் கற்றுக்கொடுத்து வளர்க்க வேண்டும்.

“பெண்கள் மதிப்பற்றுப் போவதற்கும்,அவர்கள் வெறும் போகப்பொருள்தான் என்று ஆண்கள் கருதி நடப்பதற்கும் முக்கியக் காரணமே பெண்கள் ஆபாசமாகத் தங்களைச் சிங்காரித்துக் கொள்வதேயாகும்” (தோழர் பெரியார் - விடுதலை - 15.06.1943)

தங்களை நாகரிகப் பெண்மணிகள் என்று கருதிக்கொள்ளும் பெண்கள் எல்லாம் கூட நல்லமுறையில் ஆடை, அலங்காரம் செய்து கொள்வதையும் நைசான  நகைகள் போட்டுக் கொள்வதையும் பவுடர் பூசிக்கொள்வதையும்தான் நாகரிகம் என்று கருதி வருகிறார்களே தவிர ஆண்களுக்குச் சரி நிகர் சமமாக வாழ்வதுதான் நாகரிகம் என்பதை உணர்ந்திருக்கில்லை.

(தோழர் பெரியார் - விடுதலை - 11.10.1948)

Pin It