மதுரையைப் பிறப்பிடமாகக் கொண்டவர் மா. வள்ளலார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றதிலிருந்தே அந்த மாவட்டத்தின் பல்வகை வளர்ச்சியிலும் தனி அக்கறை கொண்டவராக அவரை மக்கள் உணரத் தொடங்கினார்கள். மாவட்டம் முழுதும் இந்த ஆண்டு மட்டும் இரண்டரை லட்சம் மரக்கன்றுகளை நட்டு அவற்றை நன்கு பராமரிக்கவும் சிறந்த ஏற்பாட்டைச் செய்துள்ளார். இது அடுத்த ஆண்டு 5 லட்சமாகவும், அதற்கு அடுத்த ஆண்டு 10 லட்சமாகவும் இரட்டிப்பாகிக்கொண்டே போகும்படியும் திட்டமிட்டிருக்கும் வள்ளலார் கலை ஆர்வமிக்கவர். இசையில் தீவிர ஈடுபாடுள்ளவர்.

திண்டுக்கல்லில் ஒரு கலையரங்கத்தினை நிர்மானித்து, நடனமும் கலைகளும் பயிற்றுவித்து அரங்கேற்றும் விதத்தில் அதனை உருவாக்கப் பெருவிருப்பம்கொண்டிருப்பவர். அண்மையில் திண்டுக்கல் நகரத்திலும், மாவட்டத்தில் மேலும் மூன்று இடங்களிலும் நான்கு நாட்களுக்கு தமிழகம், கேரளம், ஆந்திரம் மற்றும் கர்நாடகக் கலைஞர்கள் நூற்றுக்கணக்கில் பங்கேற்ற கிராமியக் கலை விழாவினை மிகவும் புதுமையாகவும் எழுச்சியோடும் நடத்தியிருக்கும் மா. வள்ளலார் செம்மலருக்காக அளித்த பேட்டி இங்கே:

கிராமியக் கலைவிழா நடத்த வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்படித் தோன்றியது?

கலை வடிவங்களில் இசை என்பது பொதுவாகவே நம் எல்லோர் ரத்தத்திலும் ஊறியதுதானே? நாம் எல்லோருமே இசையை விரும்பி ரசிப்பவர்கள்தானே? என்னைப் பொறுத்தளவில் கர்நாடக இசை என்றாலும், இந்துஸ்தானி இசை என்றாலும், மேற்கத்திய இசை என்றாலும், நமது தொன்மைமிக்க கிராமிய இசை என்றாலும் இவை எல்லாவற்றையுமே நான் மிகவும் ரசிப்பேன். எல்லா இசையிலும் எனக்கு ஈடுபாடுண்டு. இவற்றில் நமது நாட்டுப்புற கலைகளுக்கு, குறிப்பாக நாட்டுப்புற இசைக்கு எங்குமே வாய்ப்புகள் வாய்க்கவில்லை. சினிமா, தொலைக்காட்சி, பத்திரிகைகள் போன்ற எந்த ஊடகங்களும் இவர்களைக் கண்டுகொள்ளவேயில்லை.

இந்தப் பரிதாபப்பட்ட கலைஞர்கள் தங்களுக்கு ஆதரவில்லாததால் மேலும் வளரவே முடியவில்லை. அடுத்த கட்டத்திற்கு அவர்களால் போகவே முடியவில்லை. இது குறித்து நீண்டகாலமாக எனக்குள் ஒரு மனக்குறை இருந்துகொண்டேயிருந்தது. இப்போது அதற்கு ஏதாவது செய்வதற்கு ஒரு சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்திருக்கிறது. இவ்வளவு கலைஞர்களையும் கலைகளையும் ஒருங்கிணைக்க எனக்கு சக்தி கலைக்குழுவின் இயக்குநர் சகோதரி சந்திராவின் அறிமுகம்தான் பேருதவியாக இருந்தது. நாங்கள் ஒரு குழுவினை ஏற்படுத்தி இந்தச் சாதனையைச் செய்திருக்கிறோம்.

ஒர ு மாவட்ட ஆட்சித்தலைவர் மட்டுமே தனியாக இதனைச் செய்திருக்க முடியாதில்லையா? நான் சில ஆலோசனைகள் சொல்லலாம். அதனை அப்படியே உள்வாங்கிக் கொண்டு இவர்கள் மிக அருமையாக அதனைச் செயலாக்கம் செய்திருக்கிறார்கள். இந்த அனுபவம் நாட்டுப்புறக் கலைகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பிருக்கிறது என்பதையே காட்டுகிறது. அது மக்களைச் சென்றடையமுடியும் என்பதையே காட்டுகிறது. நாட்டுப்புறக் கலைகள் ஏதோ ஒதுங்கிப்போய் நிற்கிற கலைகளல்ல.

'இலக்கியக் களம்' எனும் ஒரு அமைப்பையும் துவங்கியிருக்கிறீகளாமே?

இலக்கியக் களம் என்ற ஒரு அமைப்பினை உருவாக்கி, அதனைத் தனித்து இயங்கவிட்டிருக்கிறோம். மாவட்ட ஆட்சியர் அதனைத் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். அது சுதந்திரமாகச் செயல்பட வேண்டும். அதற்கு ஏழு பேர் கொண்ட ஒரு குழு இருக்கிறது.

அந்த அமைப்பின் நோக்கம் என்ன?

இலக்கியம் என்பது எவ்வளவு பெரிய விஷயம்? மனித வாழ்க்கையின் பரிணாமமே இலக்கியத்தில்தானே பதிவாகியிருக்கிறது. மனிதனின் அறிவு சுத்திகரிக்கப்படுவது இலக்கியத்தால்தானே? இலக்கியம் என்பது சமூகத்தைப் பிரதிபலிப்பது. தமிழ் மொழி இலக்கியங்களோடு பிற மொழி இலக்கியங்களையும் நாம் அறிந்துகொள்ளவேண்டும்.

இசையில் உங்களது ஈடுபாடுதான் 'இசை விழா' யோசனைக்கும் காரணமா?

நாட்டுப்புற இசை மட்டுமல்ல, கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை, கஜல், மேற்கத்திய இசை என்று எல்லாவற்றையும் மேடையேற்றப் போகிறோம். கிராமியக் கலை விழா இப்போதுதான் நிறைவடைந்திருக்கிறது. அடுத்து இசை விழாவைப் பற்றி இனிதான் திட்டமிடவேண்டும்.

இனி ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து இந்த கிராமியக் கலைவிழாவை மக்கள் எதிர்பார்ப்பார்கள் இல்லையா?

நாங்கள் ஆரம்பித்து வைத்துவிட்டோம். அதை இனி தொடர்ந்து எடுத்துச்செல்ல வேண்டியது மக்கள்தான்.

'குறிஞ்சி' என்ற பெயரில் இதழ் ஒன்றினைத் துவக்கப் போகிறீர்களாமே?

அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் கிராமங்கள்தோறும் நூலகங்களை அரசு துவங்கியிருக்கிறது. அவற்றில் ஏராளமான நூல்கள் இருக்கின்றன. கிராமப்புற மக்களை, குறிப்பாக இளைஞர்களை அந்த நூலகங்களுக்கு வரவழைக்கவேண்டும். அதற்காக நாங்கள் எல்லா ஊர்களிலும் வாசகர் வட்டம் துவக்கியிருக்கிறோம். ஒவ்வொரு பஞ்சாயத்து மட்டத்திலும் கூட்டங்கள் நடத்தி, உறுப்பினர்களைச் சேர்த்துவிட்டோம். அந்தக் கூட்டங்களில் கிராமப்புறங்களைச் சார்ந்த நிறையப் படைப்பாளர்களைச் சந்தித்தோம். தங்களை வெளிப்படுத்திக்கொள்ள அவர்களுக்குச் சந்தர்ப்பங்களே வாய்ப்பதில்லை. எனவே, 'குறிஞ்சி' அவர்களை வெளிக்கொண்டுவரப்போகிறது. கவிதைகள், கதைகள், கட்டுரைகள் என்று எழுதி அவர்கள் தயாராகிவிட்டார்கள். ஆசிரியர் குழுவும் தயார். உள்ளூர் எழுத்தாளர்களை அடையாளம் காணப்போகிறோம். அவர்கள் சமையல் குறிப்புகள் உள்ளிட்ட எதையும் எழுதலாம். 'குறிஞ்சி' தயாரிப்புப் பணிகள் விரைவில் முடிந்துவிடும்.

மாவட்ட ஆட்சியர் பொறுப்பே மிகவும் சுமைகள் மிகுந்ததாயிற்றே, அத்தோடு கலை- இலக்கியப் பணிகளுக்கும் எப்படி நேரம் ஒதுக்க முடிகிறது?

நான் செய்யவேண்டிய வழமையான வேலைகள் என்று இருக்கின்றன. அவற்றை நான் செய்தே ஆகவேண்டும். என் மனதிற்குப் பிடித்த வேலைகள் சிலவும் இருக்கும். அவற்றைச் செய்கிறபோதுதான் மன நிறைவாக நான் உணரமுடியும். எனக்கு அமைதியும் அதனால் கிடைக்கும். அரசு பணித்திருக்கும் எனது வழமையான பணிகளையும் நான் ஆர்வத்தோடு செய்ய அது துணைசெய்யும். கலைப்பணி என்பது எனக்குக் கூடுதல் சுமை இல்லை. அது நான் இளைப்பாறுகிற இடம்.

கிராமியக் கலைஞர்கள் நலிவு நீங்க என்ன ஆலோசனை வைத்திருக்கிறீர்கள்?

ஏன் அவர்கள் நலிந்திருக்கின்றனர்? வாய்ப்பின்றித்தானே? அதை மாற்றத்தானே நாங்கள் இந்த முயற்சியைச் செய்தோம்? தமிழக ஆட்சிப் பொறுப்பில் இருப்பவரே கலைத்துறையைச் சார்ந்தவர்தானே? அவரது ஆட்சியில் கிராமியக் கலைஞர்கள்வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றம் வரும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. திண்டுக்கல் மாவட்ட அனுபவத்தை அரசுக்கு விரிவாக எழுதியிருக்கிறோம். எங்கள் அனுபவத்தினைக் கைக்கொண்டு தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் இந்த விழா நடைபெற்றால் கிராமியக் கலைஞர்கள் நிச்சயமாக நலிவடைந்த கலைஞர்களாக இருக்கமாட்டார்கள்.

இசை ஆர்வம்மிக்க நீங்கள் அதனைப் பயில முயற்சிக்கவில்லையா?

பியானோ கொஞ்சம் வாசிப்பேன். வீட்டில் கீ போர்டு இருக்கிறது. என் மகள் படிக்கிறாள். நானும் கொஞ்சம் வாசிப்பேன்.

எந்த மாதிரியான நூல்களில் உங்களுக்கு நாட்டம்?

தினசரி நூல்களை வாசிக்க விருப்பம் அதிகம் உண்டு. இலக்கியம் என்று சொல்வதைவிட எனக்கு அதிக விருப்பமானவை வரலாற்று நூல்கள்தான். வரலாற்று நூல்கள் எது கிடைத்தாலும் அப்படியே விழுங்கிவிடுவேன். நான் எந்த நாட்டிற்குப் போனாலும் அங்கு வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைப் பார்ப்பதிலேயே ஆர்வமாக இருப்பேன். பெர்லின் போனபோதுகூட அங்கே பார்க்கவேண்டிய அழகான இடங்கள் பலவற்றைச் சொன்னார்கள். நான் ஹிட்லர் வாழ்ந்த இடம், செத்த இடம், கேஸ் சேம்பர் என்றுதான் சுற்றிக்கொண்டிருந்தேன்.

திண்டுக்கல்லில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் எப்போதும் டென்ஷனாகவே இருக்கும். இந்த ஆண்டு அது மிக அமைதியாக நடந்து முடிந்தது. அதற்கு உங்களது பங்களிப்பு முக்கியமானது என்று பேசப்பட்டது. நீங்கள் என்ன செய்தீர்கள்?

நான் ஒன்றுமே செய்யவில்லை. இரண்டு தரப்பாரையும் புரிந்துகொள்ளச் செய்தோம். நான் ஒரேயொரு வார்த்தைதான் சொன்னேன். "மனங்கள் மலர்ந்தால் மதங்களுக்கு வேலையில்லை!" என்று மட்டும் சொன்னேன். அவர்களுக்குள் இருந்த ஈகோவைப் புரிய வைத்தோம். கடந்த 13 ஆண்டுகள் திண்டுக்கல் விநாயகர் ஊர்வலம் என்றாலே கலவரம்தான். இந்த ஆண்டு முஸ்லிம் மக்கள் விநாயகர் ஊர்வலத்தின்போது அதனை எதிர்கொண்டு வரவேற்றார்கள். அவர்களோடு ஒரு நாள் அல்ல, மூன்று மாதங்கள் தொடர்ந்து பேசினோம். முதலில் அவர்களின் மனங்களை நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்துகொள்ள முயன்றோம். மக்களோடு மக்களாக நாங்கள் கலந்தோம். அவர்களுக்கு ஏராளமான அடிப்படைத் தேவைகள் நிறைவு செய்யப்படாமல் இருந்தன.

தண்ணீர் வசதியில்லை, சாக்கடை வசதியில்லை. அவற்றையெல்லாம் தீர்த்துவைக்க முயன்றோம். எனவே, மாவட்ட ஆட்சித்தலைவர் சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும் என்று அவர்கள் கருதுகிற நிலைமை ஏற்படச்செய்தோம். பிரச்சனை முடிந்த பிறகும்கூட நாம் தொடர்ந்து அந்தப் பகுதிகளுக்குப் போய் அவர்களுடன் நல்ல நட்பைப் பராமரித்தோம். தீபாவளி மற்றும் ரம்ஜான் ஆகிய பண்டிகைகளை இரண்டு சமூகத்தாரையும் ஒன்றாகக் கொண்டாடச் செய்தோம். ரம்ஜானின்போது இஸ்லாமிய மக்கள் பிரியாணியை இந்து மக்களுக்குக் கொடுத்து உபசரித்தனர். அதைப்போலவே, தீபாவளியன்று இனிப்புகளை முஸ்லிம் மக்களுக்குக் கொடுத்தனர். இந்த ஒற்றுமை நிரந்தரமாக நீடிக்கும் வகையில் எங்களது முயற்சிகள் அமைந்தன.

சந்திப்பு: சோழ. நாகராஜன்

Pin It

கவிஞர் பேனா மனோகரன் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வந்து, இங்கு கல்லூரி படிப்பை முடித்து, காவல்துறை சார் ஆய்வாளராக பதவிஏற்று, காவல்துறை துணைக் கண்காணிப்பாளராக சமீபத்தில் பணி நிறைவு பெற்று அரசுப் பணியிலிருந்து விட்டு விடுதலையானதும் "கற்றறிந்த காக்கைகள்" என்னும் கவிதைத் தொகுப்பினை தமிழ்கூறும் நல்லுலகிற்கு சமர்ப்பித்துள்ளார். 

காவல்துறைப் பணியிலிருந்த போதும் எங்கெங்கு முற்போக்கு படைப்பாளிகளின் இலக்கிய நிகழ்ச்சிகள் நடக்கிறதோ, அங்கு சென்று தனது மனதின் ஆழமான எண்ணங்களுக்கு வடிகாலைத் தேடிக் கொள்வதுண்டு. அங்கு பலரிடம் தன்னை அறிமுகப்படுத்தி நட்பு வட்டத்தை பெருக்கிக் கொள்வதோடல்லாமல், அவர்களுக்கு தன்னாலான உதவியினை செய்ததுண்டு.இப்படியான கவிஞர் தனது அனுபவத்தை "கவிதைச் சட்டை ஆகும் காக்கிச் சட்டை" என்னும் கவிதையில் பதிவு செய்கிறார் பேனா மனோகரன். 

பொதுவாக கவிதை - தேங்காய் உடைப்பது போல் வெளிப்படையாய் சொல்வது ஒரு ரகம்; பூடகமாய் குறிப்பால் உணர்த்தி வாசகனை யோசிக்க வைப்பது இன்னொரு ரகம்; சொல்ல விரும்புவதை இருண்மையாய்ச் சொல்லி வாசகரை திணறடிப்பது மூன்றாவது ரகம்.கவிதையில் யதார்த்தம் வெளிப்பட நேர்படச் சொல்லும் கவிஞர் பேனா மனோகரன் இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர் என்று அவரது "கற்றறிந்த காக்கைகள்" தொகுப்பு வெளிப்படுத்துகிறது. 

"... கபடமுள்ளவைகள் என்றா 

காக்கைகளை சுட்டுகிறீர்கள்?

இல்லை; கிடைக்கும் உணவை 

கமுக்கமாக அமுக்கக் 

கற்றுக் கொள்ளவில்லை 

அவை இன்றும்!" - என்று அழுத்தமாகச் சொல்லும் கவிஞர், காக்கைகள் கற்றுக் கொண்டது என்ன என்பதை "கோழிகளும் நாய்களும் கொண்டது போகச் சிந்திச் சிதறியதை -அணில்கள் வந்து -அள்ளிச் செல்வதை எட்ட இருந்தே அமைதியாகப் பார்த்து பறக்கின்றன. கற்றறிந்த காக்கைகள்" என்று காக்கையின் உயர்ந்த குணத்தினைச் சொல்லி மனிதரிடம் இத்தகைய குணம் இல்லை என்பதை சொல்லாமல் வாசகனுக்கு உணர்த்துகிறார். "காக்கை குருவி எங்கள் ஜாதி" என்ற பாரதியின் வரிகளுக்கு மேலே பறிக்கிறார். 

புங்கை மரக்கிளையில் 

பூங்கா ரயில் ஓட்டி மகிழும் 

அகதி அணில் குஞ்சுகள் 

மரணபயம் இல்லாமலே...! (பக்.5)

என்ற கவிதையில் குழந்தைகள் தமது அகதிநிலையை மறந்து மரணபயமின்றியும் விளையாடும் சூழலை அணில் மூலமாக உணர்த்துகிறார். ஒன்றைச் சொல்லி மற்றொன்றை உணர்த்தும் தமிழ்க் கவிதை மரபு இங்கே மிளிர்கிறது. 

புதிதாகக் கட்டி குடிபுகுந்த வீட்டின் பார்வை மறைக்கும் புங்கை மரத்தின் கிளைகளை வெட்டச் சென்ற மகன், அதில் குருவியின் கூடு இருப்பது கண்டு வெட்டாமல் திரும்பும் மகனின் ஜீவகாருண்யத்தை 'வீடும் கூடும்' கவிதையில் தர்சிக்கும் மழலை ஒலிக்கும் 'சுட்டபழமும் சிறுகை அளாவிய கூழும் (பக்.8) என்ற கவிதையை வாசிக்கையில் மனசெல்லாம் சிலிர்க்கிறது. 

"சூர்ப்பனகை நிலைகண்ட ராவணனைப் போல கலங்கி வேப்பமரத்தை விசாரிக்கச்சென்ற கவிஞனை வேப்பமரம் விசாரணைக்கு உட்படுத்தும் கவிதை வாசகமனதை உறுத்துகிறது. இந்தக் கவிதை அசாமில் அகில இந்திய வானொலி நடத்தும் 'கவிசம்மேளன்' நிகழ்ச்சியில் வாசிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது இக்கவிதையின் வீச்சினை உணர்த்தி வாழ்த்தத் தோன்றுகிறது. 

"எப்போதும் வருகிற/தபால்காரரிடம் இருந்த சினேகிதம். 

எப்போதாவது வந்து போகிற/கூரியர்காரரிடம் இல்லை" என்னும் உறவுகள் கவிதை வரிகள் வாசகமiதை பிசைகின்றன. இக்கவிதை பொதுத்துறை நிர்வாகத்திற்கும் தனியார்மயத்திற்கும் உள்ள வேறுபாட்டை அற்புதமாக குறிப்பால் உணரச்செய்கிறது. 

வலைகள்கூட /மீன் குஞ்சுகளைப் 

பிழைத்துப்போ என்று / வழி விடுமே 

அலைகளே... நீங்கள் எங்கள் பிஞ்சுகளுக்கு 

இழைத்தது பெருத்த அரக்கத்தனம்!" என்று 

ஆழிப்பேரலை சுனாமியை குற்றவாளிக்கூண்டில் நிறுத்தும் கவிஞரின் மனிதாபிமானம் போற்றுதலுக்குரியது. 

இத்தொகுப்பின் கவிதைகள், புலம் பெயர்ந்தோர் பிரச்சனைகள், தனியார்மயம், உலகமயத்தால் ஏற்படும் பண்பாட்டுச் சிதைவுகள், இவற்றையும் மீறி மிளிரும் மனிதாபிமானம் போன்றவற்றை கருக்கொண்டுள்ளன. மொழிநடையிலும் எடுத்துரைப்பிலும் முன்னைய பழமைக்கும் பின்னைய புதுமைக்கும் ஊடு சரடாய் மரபின் கண்ணிகளாய் இக்கவிதைகள் முற்போக்கு திசை நோக்கி நகர்கின்றன. 

- ஜனநேசன்

வெளியீடு:

நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்

சென்னை 600 098

விலை : ரூ.35/- 

Pin It

 

வங்கத்து உழவனின் இதயம்

அவனது காணிநிலம்...

 

காணி நிலம் களவுபோகாமல்

கட்டப்பட்டிருக்கும்

வேலிக் கம்புகளை உற்றுநோக்குங்கள்

வேலிக் கம்புகளில்

தோழர் ஜோதிபாசுவின்

விலா எலும்புகளின் சாயலைக் காணலாம்.

 

வங்கம் எங்கும் பரவியுள்ள

நியாய விலைக் கடைகளின்

நியாயமாய் அவர்

நீடூழி வாழ்கிறார்

 

அவரது புன்னகைவெண்மை

அந்த அங்காடிகளில் விநியோகிக்கப்படும்

அரசியலில் பதப்படுத்தப்பட்டிருக்கிறது

அவரது ஆட்சியின் மகிமை

அது

சோனார் பங்களாவின்

தங்கவங்கத்தின்

பொன் மஞ்சள் மகிமை

 

அந்த பொன்மக்கள் மகிமை

கூலி மகனுக்கு மலிவாய்த் தரும்

கோதுமை நிறத்தில்

குடிகொண்டிருக்கிறது நிரந்தரமாய்

வங்கத்து கிராமப் பஞ்சாயத்துக்களின்

ஜீவ ஓட்டத்தில் அவரது

உயிரின் ரகசியம் உறைந்திருக்கிறது

எனவே அவரது

உயிரை அவரது

உடலில் தேடலாமா?

 

அவரது மூளையின் கூர்மையை

இந்திய கிராமத்து உழவனின்

உழவு கோலின் கூர்முனைகள்

தங்களுக்கென எப்போதோ

தத்தெடுத்துக் கொண்டுவிட்டனவே

 

எமது இயக்கத்தின்

படைநடை அணிவகுப்பு

அவரது

பாதச் சுவட்டின் பின்னேதான்

இன்னும் சென்று கொண்டிருக்கிறது

 

அவரது நரம்புகளின்

நாடித் துடிப்புகள்

அடங்கிவிட்டதாய்

அறிவிக்கும் மருத்துவரே!

 

வங்கமெங்கும் வற்றாமல்

மிகையாக ஓடும்

மின்சாரக் கம்பிகளின்

காந்தத் துடிப்புகளில்

அவரது

நரம்பின் நாடிகள் எழுப்பும்

நாதங்களை நீர் கேட்வில்லைபோலும்!

 

அவரது இரு கண்களையும்

இப்போதுதான்

தானமாய்ப் பெற்றதாய்

சந்தோஷப்படும் மருத்துவமனையே!

 

எழுத்தறிவின்றி இருந்த

வங்கத்துப் பாமரனின்

ஒவ்வொரு மூளையிலும்

ஒட்டியிருக்கிறது

அவது ஞானக்கண்.

 

எனவே அவர்

வங்கத்தின் கோடானுகோடி

மக்களுக்கும் ஏற்கெனவே

'கண்தானம்' செய்துவிட்டார்

 

அவரது ஒளி எமது

கட்சிக் கொடியின் நட்சத்திரத்தை

மேலும் ஜொலிக்கச் செய்கிறது

 

அவரது

கம்பீர அசைவுகள்

எமது

கட்சிக் கொடியின் அசைவுகளில்

இரண்டறக் கலந்திருக்கிறது

 

எனவேதான் இன்று

இன்னும் துடிப்புடன்

எழுச்சிப் படபடப்புடன்

பட்டொளி வீசிப் பறக்கிறது

பாட்டாளிகளின் கொடி.

 

தோழர் ஜோதிபாசு மறையவில்லை

ஏன் எனில்

மலைகள் மறைவதில்லை

ஆழ்கடலின் அலைகள் மறைவதில்லை

 

- நவகவி

 

Pin It

2009ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் மூன்றாவது வாரத்தின் ஒரு நாளில் சென்னை உட்லண்ட்ஸ் தியேட்டரில் முற்பகல் காட்சியில் ‘பெட்டிஷன்’ என்றொரு சீனப்படத்தைப் பார்த்தேன். பார்த்ததும் ஒருவிதமான அதிர்ச்சி. அதே நேரத்தில், காலத்தையும் நிகழ்வுகளையும் பதிவு செய்ய சினிமாவைவிட கூர்மையான ஆயுதம் இருக்க முடியுமா என்ற கேள்வியும் மனதில் எழுந்தது. இப்படம் சென்ற ஆண்டின் ‘கான்ஸ்’ திரைப்பட விழாவில் அதிகாரபூர்வமாக திரையிடப்பட்ட படம். இப்படம், மிகச் சாதாரண காமிராவால், தற்போதைய தொழில்நுட்ப நேர்த்தி ஏதும் இல்லாமல் எளிமையாக எடுக்கப்பட்ட ஓர் ஆவணப்படம். ஆனாலும், கான்ஸ் திரைப்பட விழா இதைத் தேர்ந்தெடுக்க காரணம் படத்தில் சொல்லப்பட்ட விஷயம்தான். 

தற்போதைய சீனாவில், சாதாரண மக்கள் நியாயங்களுக்காக, தங்களின் சொந்த வாழ்வில் ஏற்பட்ட அநீதிகளின் தீர்வுக்காக பல வருடங்கள் போராடினாலும், முடிவு கிடைப்பதில்லை என்பதை சொல்கிறது படம். 

நீண்ட நெடிய சீனாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து பிராந்திய நிர்வாகத்தாலும் உள்ளூர் கட்சி தலைவர்களாலும் பாதிக்கப்பட்ட பல மக்கள் அவர்களுக்கெதிராக மனு கொடுக்க தலைநகர் பீய்ஜிங்கி¢ற்கு பல ஆயிரம் மைல்கள் பயணப்பட்டு வருகிறார்கள். அங்கு அவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வோ பதிலோ உடனடியாக கிடைப்பதில்லை. பலமுறை அந்த அலுவலகத்துக்கு அவர்கள் செல்ல வேண்டியுள்ளது. அதற்காக அவர்கள் அங்கேயே அலுவலகத்தின் அருகில், பெய்ஜிங்கின் புறநகர் பகுதியில் தற்காலிக குடியிருப்பில் தங்கிவிடுகின்றனர். நாளடைவில் அது ஒரு காலனியாக மாறி, ‘பெட்டிஷன் காலனி’ என்றே அழைக்கப்படுகிறது. இக்காலனியில் வசிக்கும் சில குடும்பங்களை பல ஆண்டுகளாக ஒற்றை ஆளாக இப்படத்தின் இயக்குநர் ஷாவோ லியாங் படம் பிடித்திருக்கிறார். இறுதியில் 2008ஆம் ஆண்டு பீய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக்கின்போது, நகர அபிவிருத்திக்காக பெட்டிஷன் காலனி தரைமட்டமாக்கப்பட்டு, எஞ்சியுள்ள சிலர், புதிதாக கட்டப்பட்ட பாலத்துக்கு கீழே இருளில் வாழ்கின்றனர்.

உலகத் திரைப்பட விழாக்கள் என்றதுமே, 25 ஆண்டுகளுக்கு முன்பு திரைப்பட கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில், முதன் முதலாக உலகத் திரைப்பட விழாக்களில் கலந்துக் கொண்டதுதான் ஞாபகத்துக்கு வருகிறது. அப்போதெல்லாம் உலகத் திரைப்பட விழா என்றாலே டெல்லியில் மட்டுமே நடக்-கும். ஓர் ஆண்டு டெல்லியிலும், அடுத்த ஆண்டு இந்தியாவின் பெருநகர் ஒன்றிலும், மீண்டும் அடுத்த ஆண்டு டெல்லியிலும் நடத்தப்படும். டெல்லியில் நடத்தப்படும் விழா போட்டி விழாவாகவும், பெருநகரங்களில் நடத்தப்படும் விழா போட்டியில்லாத விழாவாகவும் நடத்தப்படும். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன், இந்திய உலகத் திரைப்பட விழாவுக்கான நிரந்தர இடம் கோவா என அறிவிக்கப்பட்டு, இப்போது கோவாவில் மட்டுமே அதிகாரப்பூர்வமான இந்திய உலகப்பட விழா நடத்தப்படுகிறது.

கடந்த பத்தாண்டுகளில் பல மாநிலங்கள் தங்களின் தலைநகரங்களில் உலகத் திரைப்பட விழாக்களை நடத்த தொடங்கியுள்ளன. கொல்கத்தா, திருவனந்தபுரம், மும்பை, பூனா, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் என்று பல நகரங்கள் இப்போது ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச திரைப்பட விழாக்களை நடத்துகின்றன. இதன் காரணமாக இந்திய அரசின் அதிகாரப்பூர்வ திரைப்பட விழாவிற்கு கவர்ச்சி குறைந்து விட்டது என்னவோ உண்மைதான். அப்போதெல்லாம் டெல்லி உலகத் திரைப்பட விழாவிற்கு ஞிமீறீமீரீணீtமீ அட்டை கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கும். சினிமாத் துறையோடு சம்பந்தப்பட்டவர்களுக்கும், திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கும், சினிமா பற்றி எழுதுபவர்களுக்கும், பிலிம் சொஸைட்டி இயக்கத்தைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. 

இப்போது நிலைமை அப்படியில்லை. கான்ஸ், பெர்லின், ஸன்டான்ஸ் போன்ற நட்சத்திர உலகத் திரைப்பட விழாக்களை தவிர மற்ற திரைப்பட விழாக்களில், பல நேரங்களில் திரையிடலின்போது அரங்கின் இருக்கைகள் நிரம்புவதில்லை. 

அந்தக் காலங்களில் டெல்லி திரைப்பட விழா என்றாலே, ஜனவரி மாதத்தின் கடுங்குளிரையும் மீறி, ஒருவித கொண்டாட்டமும், பேரானந்தமும், விஷேசத்தன்மையும் கரைபுரண்டோடும். திரைப்பட விழா தொடங்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே திரையிடல் தொடங்கிவிடும். மொத்த 17 நாட்களில் தீவிர சினிமா ரசிகர்கள் 60-லிருந்து 80 படங்களைப் பார்த்துவிடுவர். நாளன்றுக்கு 4 - 5 படங்களைப் பார்த்துவிடுவார்கள். நான் 80களின் ஆரம்பத்தில் கல்கத்தாவில் நடைபெற்ற உலகத் திரைப்பட விழாவில் மிக அதிகபட்சமாக 90 படங்களைப் பார்த்தேன். ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டும் அதிகபட்சமாக 7 படங்கள் பார்த்தேன். உலகப்பட விழா முடிந்து வீடு திரும்பினால், ஏதோ நீண்ட உலகப் பயணம் மேற்கொண்டு திரும்பியது போல், உடலும் மனமும் களைத்து போகும். சகஜ நிலைமைக்குத் திரும்ப ஒரு வாரமாவது ஆகும். 

இதுபோன்ற உணர்வுகளும், பரபரப்பும் இப்போதைய உலகத் திரைப்பட விழாக்களில் அனுபவப்பட முடியாத ஒன்றாகிவிட்டது. பார்ப்பவர்களை அப்படியே கட்டிப் போடும் ஒரு சில படங்களைத் தவிர, பெரும்பாலான திரையிடல்களின்போது ரசிகர்கள் உள்ளே வருவதும் வெளியே செல்வதுமாக இருக்கின்றனர். ஆனாலும், உலகப்பட விழாக்கள் பரவலாக்கப்பட்டுவிட்டதன் காரணமாக, பயன்கள் அதிகம் என்றே சொல்லவேண்டும். 

ஞிக்ஷிஞிகளின் வருகையால் உலக சினிமா பார்க்கும் கூட்டம் அதிகமாகிவிட்டது. குறும்படம், ஆவணப்படம் எடுக்கும் இளைஞர்கள், மாணவர்கள் பலர் உலகப் பட ஞிக்ஷிஞி-க்களைத் தேடிப் போய் வாங்குகின்றனர். இவர்களுக்கு பரவலாக்கப்பட்ட உலகப்பட விழாக்கள் பயனுள்ளதாக அமைகின்றன. 

இத்தகைய உலகப்பட விழாக்களை மேலும் பயனுள்ளதாக, சிறு நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் கொண்டு செல்லவேண்டும். 35 படச்சுருள் இல்லாவிட்டாலும், தரமான ஞிக்ஷிஞிக்களைக் கொண்டு உலகப்பட விழாக்களை இன்னும் பரவலாக்குவது சாத்தியமே. இதற்கு தேவை கொஞ்சம் பணம், நிறைய ஆர்வம் மட்டுமே. 

இன்னும் பத்தாண்டுகளில் உலகப் பட விழாக்கள் உள்ளூர்களுக்கு எடுத்துச் செல்லப்படும்போது, அது நம் தேசிய (?) சினிமாவில், பிராந்திய சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத்தான் போகிறது. 

முதல் உலகத் திரைப்பட விழா, சினிமா தோன்றி 37 ஆண்டுகளுக்குப் பிறகுதான் நிகழ்ந்தது. முதல் உலகத் திரைப்பட விழாவை நடத்தியவர் யாரென்று பார்த்தால், நமக்கு ஆச்சர்யமாக இருக்கும். இத்தாலிய சர்வாதிகாரி முசோலினிதான் முதல் உலகத்திரைப்பட விழாவை வெனிஸ் நகரில் நடத்தினான். தேசிய சினிமாவை வளர்ப்பதற்காக ஏராளமான நிதி ஒதுக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக உலகத்திரைப்பட விழா நடத்தப்பட்டது. ஒரு விதத்தில் ஹாலிவுட் சினிமாவின் ஆதிக்கத்திற்கெதிராகவும் இப்படவிழா நடத்தப்பட்டது. வேறு மொழிகளிலிருந்து இத்தாலிய மொழியில் டப் செய்யப்பட்ட படங்களுக்கு கடுமையான வரியையும் முசோலினி விதித்தான். இப்படவிழாவில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படமாக இத்தாலியப் படத்திற்கே முசோலினி கப் வழங்கப்பட்டது. இப்படவிழா இத்தாலிய சினிமாவை மட்டும் வளர்க்கவில்லை. கூடவே, இத்தாலியின் தோழனாக இருந்த நாஜி ஜெர்மனியின் சினிமாவையும் வளர்த்தது. 1936க்கும் 1942க்கும் இடைப்பட்ட ஆறு ஆண்டுகளில் நான்கு முறை ஜெர்மனிய படங்கள்தான் சிறந்த அயல்நாட்டுக்கான பட விருதைப் பெற்றன.

முசோலினியைப் போலவே, ஹிட்லரும் சினிமாவின் சக்தியை முழுவதுமாக உணர்ந்திருந்தான். ஆரியனின் உயர்த்தன்மையைக் காட்டும் விதமாக, ஹிட்லரின் அன்புக்குரிய பெண் திரைப்பட இயக்குநர் லினே ரீபெஃபென்தால் (Lene Ricfenstahl) “Olympia” “Triumph of a will” போன்ற உலகப் புகழ் பெற்ற படங்களை எடுத்தார். அந்தக் காலத்திலேயே பல கேமராக்களை கொண்டு, மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படங்கள் அவை. அதற்கான செலவு முழுவதையும் ஹிட்லர்தான்  செய்தான்.

1937ஆம் ஆண்டு இத்தாலிய திரைப்பட விழாவில் ழான் ரெனுவார் இயக்கிய பிரெஞ்சு படமான தி கிராண்ட் இல்யூஷன் (The Grand illusion) படத்துக்குத்தான் உயர் விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இத்தாலிய அரசு தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, மீண்டும் உயர் விருதை இத்தாலிய படத்துக்கே அறிவித்தது. இதனால் கோபமடைந்த பிரெஞ்சு திரைப்பட இயக்குநர்கள் தோற்றுவித்ததுதான், இன்று உலகின் நம்பர் ஒன் நட்சத்திர திரைப்பட விழாவாக விளங்கும் ‘கான்ஸ்’ திரைப்பட விழா. 

இந்தியாவை பொறுத்தவரை முதல் உலகத் திரைப்பட விழா 1952ஆம் ஆண்டே மும்பையில் நேரு அரசாங்கத்தால் நடத்தப்பட்டது. இதன் துவக்க நிகழ்ச்சியாக சினிமாவைத் தோற்றுவித்த லூமியர் சகோதரர்கள் முதன்முதலில் (1895ல்) பம்பாயில் காட்டிய திரைப்படம காட்டப்பட்டது. இப்பட விழாவில் காண்பிக்கப்பட்ட படங்கள் இரு வாரங்கள் கழித்து, டெல்லி, கல்கத்தா மற்றும் சென்னைக்கும் கொண்டு செல்லப்பட்டது. இப்படங்களைத் திரையிடுவதற்காக, பெரிய திறந்தவெளி திரையரங்குகளைக் கட்டுவது ஒரு முக்கிய திட்டமாக இருந்தது. 

இந்தியாவில் முதல் உலக திரைப்பட விழா 1952ல் நடத்தப்பட்டாலும், இரண்டாவது உலகத் திரைப்பட விழா என்னவோ 1961ல்தான் டில்லியில் நடத்தப்பட்டது. அடுத்தடுத்த உலகத் திரைப்பட  விழாக்கள் சில ஆண்டு இடைவெளி விட்டுத்தான் நடத்தப்பட்டன. 1975ஆம் ஆண்டு ஐந்தாவது உலகத் திரைப்பட விழா டில்லியில் நடைபெற்றபோதுதான், அது வருடாந்திர நிகழ்வாக மாறியது. 

இன்று இந்தியா முழுதும், பல மாநில அரசுகளும், பல தனியார் அமைப்புகளும் பல உலகப்பட விழாக்களை பல இடங்களில் நடத்துகின்றன. ஆவணப்படங்களுக்காக மட்டுமே உலகப்பட விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதுபோல், குழந்தைகள் படம், பெண்கள் பற்றிய படம், உடல் ஊனமுற்றோரைப் பற்றிய படம், அரவாணிகளைப் பற்றிய படம், பிமிக்ஷி நோயாளிகள் குறித்த படம்... என பல பிரிவுகளில் உலகப்பட விழாக்கள் நடத்தப்படுகின்றன. 

பெரும்பாலும் இப்படவிழாக்கள் பெருநகரங்களில் மட்டுமே நடத்தப்படுகின்றன. இப்படவிழாக்களை சிறு நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் கொண்டு செல்வதுதான் அடுத்தக்கட்ட பரவலாக்கச் செயலாக இருக்க முடியும். இப்பணியை அரசாங்கமோ, தனியார் அமைப்புகளோ செய்யும் என எதிர்பார்க்காமல் பண்பாட்டு தளத்தில் இயங்கும் முற்போக்கு எண்ணம் கொண்ட கலைஞர்களும் ஊழியர்களும்தான் இதை செய்ய வேண்டும். அடுத்த ஆண்டு ஆண்டிப்பட்டியில் ஒன்றும், கோவில்பட்டியில் ஒன்றுமாக சர்வதேச திரைப்பட விழாக்களை நடத்த திட்டமிடலாம். 

சினிமாவின் அடிப்படை நோக்கமே உலகை உள்ளூருக்குக் கொண்டுவருவதும், உள்ளூரை உலகுக்-குக் கொண்டு செல்வதும்தான். அதுபோல உலகப்பட விழாக்களின் நோக்கமும், உலகப் படங்களை உள்ளூருக்கு கொண்டுவருவதும், உள்ளூர் படங்களை உலகுக்குக் கொண்டு செல்வதும்தான். 

அவ்வாறு உலகப்பட விழாக்களை கிராமங்களுக்கும் சிறு நகரங்களுக்கும் கொண்டு செல்லும்போது, நம்மூரில் படம் எடுப்பவர்கள் ஒன்று உலகத் தரத்துக்கு உள்ளூர் படங்களை எடுப்பார்கள். இல்லையேல், வேறு தொழில் பார்க்க போய்விடுவார்கள். 

- எம்.சிவகுமார் 

Pin It

தாம்பூலத்தின் பலனால் சுரந்த உமிழ் வரத்தைமிடறு விழங்கியவாறு சோதிடர் தொடர்ந்து சிரித்தார். கும்பகோணம் கொளுந்து வெத்தலைச் சிறப்பு, அவர் வாய்திறந்து சிரிக்கையில் மைனா தன் சிவந்த கடைவாய் திறந்து அண்ணாந்து கத்தியது போல இருந்தது. லட்சுமி அம்மாள் சுற்றியுள்ள பொம்மனாட்டிகளையெல்லாம் பார்த்து அவர்கள் பரிகசிப்புக்கு அஞ்சி உக்கிப் போய் நின்றாள். 

குடந்தை வரதய்யர், சோதிடத்தில் அவ்வளவு பிரபலம். தஞ்சாவூர் நிலச்சுவான்தார்கள் வீட்டு நல்லதும் கெட்டதும் இவர் எழுதிய குறிப்பில் தான் நடக்கும். தவிர்த்து, ஆலய பிரவேசம் ஜமீன்தார்கள். மிட்டாமிராசு அழைப்பு போன்ற காரணிகளில் அவர் வெளியூர் பயணிக்கிற தருணத்தில் ஆங்காங்கே அக்ராகரத்தில் இவரது தரிசனம் அபூர்வமாய்க் கிடக்கும். 

அப்படியான ஒரு பொழுதில், தெற்கே நவதிருப்பதிகளை தரிசிக்க வந்திருந்த காலை, எட்டையபுரம் அரண்மனையில் ஏடு பிரசன்னம் பார்த்துவிட்டு அந்த பெருமாள் கோயிலில் உட்கார்ந்து அக்ராகரத்து வாசிகள் கொண்டு வந்த ஜாதகங்களை மேம்போக்காக கிளி சீட்டு புரட்டுவது போல் புரட்டி வாய்க்கு வந்ததை சொல்லிக் கொண்டிருந்த போது தான் ஸ்ரீ சின்னச்சாமி ஐயரின் தவசிரேஷ்டன் சுப்பையா என்ற சுப்பிரமணியனின் ஜாதகத்தை பார்த்து சற்றே ஊன்றிக் கணித்து பகபகவென சிரித்துவிட்டார். 

"பிராமணாளோட ஜாதகத்தைப் பார்த்து இது மாதிரியான சொற்பிரயோகம் செய்யுறது என் ஆயுளுக்கும் இதுதான் முதன் முதல்ன்னு நெனைக்கிறேன். சுப்பையா என்கிற சுப்பிரமணியன், மூலநட்சத்திரம் கார்த்திகை இருபத்தி ஏழுக்கு பிறந்த குறிப்பாவது என்ன சொல்றதுன்னா 'நான்கு கால்பட்ட ஜீவராசிக்கு இந்த ஜாதகத்தின் பேரில் ஆதியோடந்தம்மா அதிகாரம் பெற்றிருக்குங்கிறேன்'. சத்தியமான வாக்கு! சிரிச்சுண்டே சொல்றேன்னு நெனைக்காதீங்கோ ஜாதகம் சொல்றது". 

அப்படியிப்படி பராக்கு பார்த்து கொண்டிருந்த குழந்தை சுப்பையாவை வாரி தூக்கி இடுப்பில் வைத்து, சோதிடரைப் பார்த்து 'உத்தரவு வாங்கிக் கிடறேன் மாமா' என்று லட்சுமியம்மாள் கும்பிட்டு புறப்பட்ட போது, ஜாதகத்தை கொடுத்தவாறே "சின்னச்சாமியை சாரித்ததாய்ச் சொல்லு" என்று தலையை ஆட்டி வழி அனுப்பிய சோதிடரைப் பார்த்து குழந்தை சுப்பையா கண்களை அகல விரித்து நடுவிரலால் உதட்டில் தட்டி 'பர்ர்ர்ர்ர்' என்று வலிப்பம் காட்டினான். 

'பெரியவாளை அப்படியெல்லாம் சொல்லக்கூடாது' என்று மகனை செல்லமாக குசுகுசுத்து கடிந்த தாயின் தோளை இறுக அணைந்தவாறு குண்ணாங் குண்ணாங் குர்ர்ர்ர் என்று காதில் இரைந்த மகனின் சேஷ்டைகளைக் கூட பெரிது படுத்தாமல், அடுத்துப் போய்க் கொண்டிருந்த அக்ராகரத்து பெண்களின் ஜாடைமாடையான பேச்சுக்களில் கவனமும் கவலையும் கொண்டாள் லட்சுமி. 

"பிராமண குழந்தைகள் ஜாதகத்தை பார்த்திட்டு கருப்புக்கோட்டு போட்டுண்டு கனதனவான்களோட காலாட்ஷேபம் செய்ய லபித்திருக்கும்பா. இல்லை வெள்ளை வஸ்தீரணத்துல ஏகப்பட்ட மனுஷாளுக்கு உயிர்பிச்சை கொடுக்க வரம் வாங்கி வந்தவன்ம்பா. கடல் கடந்து போய் அயல்ராச்சியங்களில் துபாஷியாய் இருக்க வேண்டிய யோகமிருக்குன்னு இப்படி அக்ராகரத்து ஜாதகங்கள்ல முன்சீப்பா டாக்டரா கலெக்டரா குறைஞ்சபட்சம் குமாஸ்தாவா உக்காந்துண்டு எழுதியாச்சிம் பொழைப்பான்னு குறிப்பு சொல்லுவான்னு கண்டிருக்கோம். அதென்ன நாலுகால்பட்ட ஜீவராசிக்கு அதிகாரமிருக்கு...?! ஐயே "சூத்திராளுக்கு சொல்ற மாதிரியே சொல்லிட்டு ஜோதிடரே சிரிக்கிறதைப் பாரேன்" 

இடுப்பிலே குழந்தைகளை சுமந்து போய்க் கொண்டே சொல்லி சொல்லி சிரிக்கிறார்கள். ஒருவருக்கொவர் எதிரெதிரே நின்று கழுத்து மடியசிரித்தார்கள். 

"கழுதை கூட நாலுகால்தான்" 

அம்மாவின் சிகையைப் பிடித்து இடுப்பிலிருந்து புஜம் வரை தாவி அவள் கன்னத்தோடு முத்தமிட்டு கன்னம் சேர்த்து குதூகலிக்கும் குழந்தை சுப்பையாவை மூச்சுப்பறிய தாமரித்தவாறு, மீண்டும் அவனை இடுப்பிற்கு இறக்கி அமர்த்தியவாறு பாவமாய் திரும்பிப் பார்க்கும் லட்சுமி அம்மாள் கேட்கும்படி"ஏன்? மாடுகள் இல்லையா கண்ணன் மேய்க்கவில்லையா புல்லாங்குழலூதி ஒருங்கு சேர்க்கலையா அப்படிக் கூட நடக்கலாம்!" 

எல்லோரும் ஓரக்கண்ணால் பார்த்து கேலிச் சிரிப்பு. 

வீட்டிற்கு வந்த பிறகும் லட்சுமி அம்மாளுக்கு அந்த அக்ராகரத்து பெண்கள் "க்ளுக்" கொட்டி சாடைமாடையாகக் கூட இல்லாமல் நேரடியாக பேசியதை நினைத்து கவலையிலிருந்தாள். 

"அந்தா அந்தா ஸ்கை ப்ளுவிலே பட்டுசேலை கட்டிண்டு குழந்தையை தூக்கிட்டு போறாளே அவதான்! சீவலப்பேரி சின்னச்சாமி ஐயர் பாரியாள் லட்சுமி அம்மாள். ஆத்துக்காரர் ஜமீன்ல கொஞ்ச நாள் குப்பை கொட்டுனார். நம்ம ஜாதியா ஆச்சாரமா நாலு இடம் பாய் மந்திரம் சொல்லாம ஒரு கோயிலாப் பார்த்து அர்ச்சனை அனுஷ்டாணம்ன்னு இல்லாம பெரிய பெரிய மிஷனரி பார்ட்ஸ்களை வாங்கி ஒக்கிட்டுண்டு இருக்காராம். வெள்ளைக்காரன் போல மில் நடத்தப் போராறாம். 

"ஜமீனுக்கு சுத்தமா பிடிக்கலையாம். புருசலட்சணமா எதாவது உத்யோகம் பார்க்காம பிராமணானா இருந்துண்டு ஏன் வெள்ளைக்காரன் பண்ணுற பாக்டரிகளில் பொல்லாத ஆசை வைக்கிறீர்ன்று சொல்லியும் மசியலையாம். பெரிய இயந்திரங்களெல்லாம் வரவழைச்சி வகை வகையான துணி நெய்து சீமைக்கு அனுப்பியே தீருவேங்கிறாராம் 

கேலிப் பேச்சுக்கள், அவமதிப்புக்களில் ரொம்பவும் வாடிப்போனாள் லட்சுமி சின்னச்சாமி ஐயர் ரொம்ப தேற்ற வேண்டியதாயிருந்தது. 

"அடி அசடே அசடே நாலுகால்ப்பட்ட ஜீவன்னா கழுதையும் மாடும் தானா? ஏன் உன் மகன் சுப்பையா ஜில்லா கலெக்டராகி குதிரைகள் பூட்டிய சாரட்டில் வந்திறங்கினா ஆகாதோ?

பிராமண்ணா ஏதாவது ஒரு கோயில்ல அக்காரவடிசல் பண்ணிண்டு இல்லே மிலேச்சனுக்கு சொன்னபடி கேட்டுத்தான் பிழைக்கணுமா என்ன? சொந்தத் தொழில் பண்ணி வாழக்கூடாதா. இந்த சீவலப்பே ஐயரை விமர்சனம் பண்ணியதுக்கு, இவ்வளவு அலட்டிக்கிடுறியே நாளைக்குப் பார்! நம்ம சுப்பையா நிறைய படிச்சு கணிதத்திலும் ஆங்கிலத்திலும் பெரும் பண்டிதனாகி அந்த விதேசியர் அறிவுக்குச் சமதையாய் யந்திரப்பழக்கப்பட்டு முடியும்மானா நம்மதேசம் விட்டு கடல் கடந்து போயி சீமையையே முழம்போட்டு அளந்திட்டு வருறானா இல்லையானுட்டு. அவன் இந்தியா வரும்போது இவாளுக்கு முன்னாடி கைச்சொக்காயும் கால்சராயுடன் ஆகாய மார்க்கமாவோ கடல் மார்க்கமாவோ வந்திறங்கிறானோ இல்லையா பாரேன்". 

கணவரது இலட்சிய உரை முடிந்து, அவர் நெற்றி வியர்வையை தொடைத்த பொழுது. அவருடைய முகம் சிவந்திருந்தது. அவரது கண்கள் தீர்க்கமான ஒளியைச் சிந்தின. இனத்தாரின் பரிகாசம், கணவரின் உறுதி! இரண்டுக்குமிடையில் லட்சுமி அம்மாள் இதயம் இன்னும் இறுக்கங்கண்டது. 

துருதுருத்த சிறுவன் சுப்பையா தெரு நிறைய குடுகுடுவெனத் திரிந்தான். பெருமாள் கோயில் பக்கம் நிற்கும் யானை கட்டு தளத்திற்கு அடிக்கடி ஓடிப்போவான். ஊரார் பேசுற மாதிரியே இருக்கிறானே என்று லட்சுமி அம்மாள் பின்னாடி ஓடிப்போய் தூக்கி தூக்கி வருவாள். 

உதயப்பொழுது சிவந்து உருண்டையாக கீழ்வானத்தில் புலரும் பொழுது, அதை ஒரு பழம் என்று எண்ணி குழந்தை அனுமன் அதைப்பிடிக்க தினமும் தாவி தாவி ஓட, தாய் அஞ்சனை குழந்தையின் பின்னால் ஓடித் திரிந்த மாதிரி யானையை பார்க்கிற பொழுதெல்லாம் குழந்தை சுப்பையா குதூகலமாகி விடுவான். அம்மாவின் பிடியிலிருந்து திமிறி விடுபட்டு ஓடுவான். 

கிழக்கும் மேற்குமாய் வரிசையாய் அக்ராகரத்து வீடுகள் எதிரெதிரே அமைந்திருந்தன. ஏகமாய் எல்லா வீடுகளிலிருந்தும் யானையைப் பார்த்தவுடன் குழந்தைகளின் வீறிட்ட ஒலி கிளம்பும். சிறுவன் சுப்பையா மட்டும் அந்நேரம் யானையின் துதிக்கையில் தொங்கிக் கொண்டிருப்பான். வழக்கம் போல் மாவுத்தன் உற்சாகமாகிப் போவான். 

"சாமி வந்துட்டாக! சாமி வந்துட்டாக!. நம்ம சுப்பையாச்சாமி கில்லாடிச்சாமி! தாயவுகளே! சாமியோவ்!" லட்சுமி அம்மாளை பார்த்து விண்ணப்பித்துக் கொள்வான் "சுப்பையாச்சாமி ஐயாவை மேலே ஏத்திக்கிடுறேனும் மோவ்" 

லட்சுமி அம்மாள் ஒண்ணும் பேச முடியாமல் விக்கித்துப் போய் நிற்பாள். மாவுத்தன் கொறடு கொண்டு யானையின் உச்சந்தலையில் ஒரு தட்டு தட்டியதும், அடுத்த ஷணம் சிறுவன் சுப்பையா யானையின் பிடறியில் மாவுத்தன் மடியில் தும்பிக்கை மூலம் அலாக்காய்ப் போய் அமர்ந்து ஆனந்தமாகிப் போவான். 

ஹேகே... கெக்கெக்கே... என்ற மழலைச் சிரிப்பு. மாவுத்தனுக்கு சந்தோசம். அக்ராஹரமே வேடிக்கைப் பார்த்தது. 

இப்பொவெல்லாம் லட்சுமி அம்மாளுக்கு சரீரம் ஒத்துழைக்கவில்லை. எத்தனையோ மருத்துவர்கள் பார்த்தாகிவிட்டது. எல்லாம் மன வியாதிதான் என்று கோரஸ்ஸாக சொல்லிவிட்டார்கள். 

சுப்பையாவுக்கு வயது ஏற ஏற வாய்த்தாட்டடீகம் அதிகமாகிவிட்டது. என்னவெல்லாம் பேசுகிறான். கூடப்பழகாத பிராணிகள் உண்டா?

"அம்மா அந்த பூம்பூம் மாடு பார்த்தியோ அதை மனுசாள் மாதிரியே தலையாட்ட பழக்கிவிட்டான் பாரேன். மாடுகள் உழுது விதைக்க அறுவடை செய்யவென்று மனிதர்களுக்கு எத்துணை விதத்தில்  உதவுகிறது என பாடத்தில் ஒரு அப்பியாசமே இருக்கிறது. இவன் என்னடாவென்றால்...!" 

"அம்மா பழைய துணி கொடுப்பாளா? டிவ்விங் டிவ்விங்... அம்மா பழையது போடுவாளா? டிவ்விங் டிவ்விங்.. என்னம்மாய் தலை ஆட்டுறது". மாட்டுக்காரன் போலவே நடித்துக் காட்டினான். 

அவர் இயந்திரமே கதியாய்க் கிடக்கிறார். நூற்பாலை ஒன்று நிறுவியே தீருவது என்று ஜமீனிடம் தன் திறன்களை வெளிப்படுத்தி பொருளுதவிக்காய் நிற்கிறார். நூற்பாலை ஒன்றுக்கு இரண்டாய் பின்னாளில் நன்கு வளர்ந்துவிட்ட பருவத்தில், தான் வயதாகி தளர்கிற தருணம். சுப்பையா தலையெடுத்து ஆலையை மேலும் பெருக்குவான் என்ற உறுதியில் ஊண் உறக்கமின்றி உழைக்கிறார். லட்சுமி அம்மாள் நடக்குமா எனும் ஏக்கத்தில் படுக்கையோடு கண்ணீர் சிந்தினாள். 

ஒரு வாரமாய் கிடப்பாய் கிடந்தவளிடம் சுப்பையாவின் சிநேகிதன் வேங்கட ரமணன்தான் வீடு தேடி வந்து அந்த விசயத்தைச் சொன்னான். 

"சித்தி! பள்ளிக்கூடம் விட்டதும் சுப்பையா எங்கு போகிறான் தெரியுமா? யானைக் கட்டடிக்குத்தான். யானையின் சாணமெல்லாம் கூட சுத்திசெய்வான். தென்னங்கீற்றுகள் எங்கிருந்தாலும் தலைசுமையாய் கொண்டு வந்து கூளம் வைப்பான். வாளியில் தண்ணீர் கொண்டு வந்து யானையின் மீது, எவ்வி எவ்வி ஊற்றி குளிப்பாட்டுவான். மாவுத்தன் கூடாதென்று எவ்வளவு கெஞ்சினாலும் அந்த வேலையெல்லாம், இழுத்துப் போட்டிண்டு செய்வான். மாவுத்தன் கடுமையாக கடிந்தாலும் சமர்த்தாய் சிரித்துப் பேசி கொஞ்சம் காசு கொடுத்து யானையின் துதிக்கையைப் போய் சேர்த்து பிடித்தமட்டில் மருகி மருகி பயமில்லாமல் நிற்பான். சந்தோசத்தில் துதிக்கையை கடித்துக் கூட வைப்பான்னா பாரேன். 

தீபம் வைக்கிற நேரம் சுப்பையா வீட்டிற்கு முன்னும் பின்னும் ஆடியபடியே பாட்டு ஒன்று முணகிக் கொண்டே வந்தான். 

"அம்மா உனக்கு ஒரு சேதி தெரியுமா? நமது கோயிலில் இருக்கிற யானையின் பெயர் குந்தவை நாச்சியார். சோழப் பேரரசின் பெயர். இதனுடன் சேர்ந்த ஆண் யானைகளெல்லாம் வெள்ளை அதிகாரிகள் தந்தத்திற்காக கொன்று கோட்டார்களாம். பாகன் கதை கதையாய்ச் சொன்னான். தந்தம் எதற்கு தெரியுமா! அதில் குட்டி குட்டி யானைகளின் உருவம் செய்து மேஜைகளின் மேல் அலங்காரத்திற்காக வைப்பார்களாம்! முட்டாள்தனமாக இல்லை?" இந்த குத்வை இருக்கிறாளே உன்னைப் போலவே என்னைப் பார்த்ததும் மகிழ்ந்து போவாள். தூரத்தில் வரும் போதே  என்னைக் கண்டு "ஓ" வென்று பிளிறுவாள் துதிக்கையை தூக்கி நமஸ்கரிப்பாள். 

அம்மா......... அம்மா..... 

அவள் மூச்சை நிறுத்திக் கொண்டிருந்தாள். ஐந்து வயதிலெல்லாம் அசாகாமாய் பேசும் மகனின் பேச்சில் லயித்தபடி அமுதூட்ட இனி சுப்பையாவுக்கு யார் இருக்கிறார்கள். அவன் சொல்லும் கதைகளை கேட்க இனி எந்தத்தாய் வருவாள்?

தனது ஆலை அமைக்கும் முஸ்தீபுகளில் ஒரு தோழியாய் இருந்து ஆர்வம் காட்டிய இல்லாள். அதே வேளையில் அண்டை அயலார் ஏச்சையும் பேச்சையும் பொறுக்கமாட்டாமல் விழியில் திரண்ட கண்ணீரோடு நாதழுதழுக்க "ஏன்னா இந்த முயற்சியில் நமக்கு ஜெயம் உண்டாகுமா? நாம வாழ்ந்தால் தான் நாலு பேர் பின்னாடி வருவா, மங்களமோ அமங்களமோ  திண்ணையில் வந்து உட்காருவா. பகவான் இருக்கார் நாம் யாருக்கும் எந்த கஷ்டமும் கொடுத்ததில்லை. எனக்குத் தெரியும் நீங்கள் நாலும் தெரிஞ்சவா! மத்தவா சொல்றமாதிரி பிராமண ஆகமங்களுக்கு எதிரா எள்ளத்தனையும் செய்யமாட்டேள்". 

சின்னச்சாமி ஐயர் மனைவிக்கான நீத்தார் கடமையெல்லாம் செய்து முடிச்சார். லட்சுமியின் - ஆத்மா சித்திக்கவாவது தன் முயற்சியில் ஜெயம் பெற உறுதி கொண்டார். லட்சுமி தன் பக்கத்திலேயே இருந்து 'ஏன்னா பகவான் இருக்கார் நல்லதே நடக்கும் என்று ஆசீர்வதிப்பாய், தன் முயற்சியில் கிஞ்சிற்றும் சுணக்கமின்றி இளசையிலிருந்து கோவில்பட்டி சுற்று வட்டார கரிசல் பூமியெல்லாம் சுற்றித் திரிந்தார். வானவெளியில் வெள்ளி சிதறிக்கிடப்பதைப் போல பருத்திச் சுளைகள் வெளேர் வெளேரென்று வெடித்துக் கிடந்தன. 

கரிசலின் மானாவாரி மனிதர்கள் பருத்தியிலிருந்த கொட்டையைப் பிரிக்கும் சாதனத்தை தாங்களே உருவாக்கி, வீட்டிற்கு வீடு பெண்டு பிள்ளைகள் பருத்தியையும் கொட்டையையும் பிரித்து, பஞ்சுகளை மலைபோல் குவித்து வைத்து வியாபாரிகளை எதிர்நோக்கிய வண்ணமிருந்தனர். 

சோர்வற்ற இடையறாத விவசாயிகளின் பாடுகளையும், தன் முனைப்பாக அவர்கள் இதுபோன்ற சாதனங்களை தாங்களே உருவாக்கி கொள்வதைப் பார்த்து, ஐயருக்கு நம்பிக்கைத் துளிர் தழைத்தோங்கியது. தனது ஆடை தயாரிக்கும் ஆலைக் கனவு சமீபத்துவிட்டதாக அந்த கரிசல் மனிதர்களோடு கலந்து கலந்து கொண்டாடினார். 

எட்டையபுரம் ஜமீனில் அறிஞர்கள் சூழ்ந்த சபையில் சுப்பையா தன் கவிப்புலமையால் மற்றைய புலவர்களை வாதில் வென்று ஜமீன் சமூகத்தால் 'பாரதி' என்று புகழப்பெற்று அப்பட்டத்தினாலேயே அழைக்கப்படுகிறான் என்ற செய்தி கூட ஐயரவர்களுக்கு மகிழ்வைத் தரவில்லை. 

தனக்குப்பின்னால் ஆலை நிர்வாகத்தை நானாவித தொழில்நுட்பத்திறனோடு சுப்பையா நடத்திக் கொண்டு செல்ல இவை மாதிரியான நிகழ்வுகள். முட்டுக்கட்டையாய் இருக்கும் என்று, முன்னம்மே மகனை திருநெல்வேலி இந்து கலாசாலையில் ஆங்கிலம் கற்றுக் கொள்ளும் முகமாக கொண்டு போய் சேர்ப்பித்திருந்தார். 

விடுமுறை நாட்களில் சுப்பையா தந்தை நிர்மாணித்து வரும் ஆலைக்கு வந்து தந்தைக்கு உதவியாய் இருப்பான். ஆலையில் பஞ்சு அரைவை நடந்து கொண்டிருந்தது. அருகில் அருவி போல் நூல்கள் எந்திரத்தில் சொரிந்த வண்ணமிருந்தன. 

"சுப்பையா! நமது ஆலையை ஸ்காட்லாந்து சகோதரர்கள் வந்து பார்வையிட்டு சென்றுள்ளார்கள். அவர்களுக்கு என் முயற்சியில், திறமையில் ரொம்பவும் திருப்தி. இனி கால் பாகம் வேலைதான். ஆடைபின்னும் எந்திரங்கள் இந்த மாதத்தில் வந்து சேர்ந்துவிடும். அப்புறம் என்ன?" என்று பெருமிதத்தோடு நெற்றி வியர்வையை விரலால் சிந்தினார். 

"நீ ஐந்தாம் படிவம் போகப் போகிறாயே இந்த  வெள்ளைக்காரர்களோடு உனது ஆங்கிலப்புலமை செல்லுபடியாகிவிடுமா?"

"ஏன்? அப்படி ஒன்றுயம் அது கஷ்டகாரியமில்லை. ஆனால் அப்பா, இந்த அயலவர்கள் நமது மக்களின் உழைப்பு, பொருள், வளம் அனைத்தும் தேவையென்று படையெடுத்து வந்து கிடக்கிறார்கள். அதற்காக அவசியம் கருதி நமது தமிழ் பாஷையை கற்றுக் கொள்ள ஏன் அவர்கள் முயற்சிக்கவில்லை. அவனுக்குத்தானே தேவை. அதுவன்றி இவன் நம்மை உறிஞ்சுக் கொழுப்பதற்கு அவன் பாஷை மேல் நாம் ஏன் இவ்வளவு மோகம் கொள்ள வேண்டும்?

சுப்பையாவின் இப்படியான நிறைய கேள்விகளுக்கு அவரிடம் மாத்திரமல்ல யாரிடமும் பதில் இல்லை. வழக்கம் போல் சுப்பையாவின் கேள்வி மேலோங்கி நிற்க. 'அது கிடக்கட்டும் இந்த ஸ்காட்லாந்து ஹார்வி சகோதரர்கள் மறு விஜயத்திற்கு முன், முடிந்தமட்டும் பஞ்சுக் கொள்முதல் செய்து முடிக்க வேண்டும். நமது ஜமீன்தார் ஐம்பது சதம் பங்குகள் வாங்கியிருக்கிறார். அவரிடம் பணம் பெற்றுக் கொண்டு மதுரை மாநகருக்குப் போய் ஆடை நெய்வதற்கான பிரதான எந்திரங்களை வேறு போய் பெற்று வர வேண்டும் என்று மூச்சிரைக்க பேசி தடபுடலானார். 

மகனை திருநெல்வேலி கலாசாலைக்குப் போக அனுப்பி வைத்து விட்டு ஐயர் கிராமங்களை நோக்கி கிளம்பினார். பல ஊர்களுக்கும் நடந்தே போனார். எல்லாம் கூடி வந்துவிட்டது இதையெல்லாம் பார்க்க லட்சுமி இல்லையே. இப்பொழுதெல்லாம் அக்ராஹரம். ஐயரை பரிகாசம் செய்வது மாதிரி அவருக்கு தெரியவில்லை. எல்லாம் வாயடைத்துப் போய்க் கிடக்கிறார்கள். போலும். ஆமாம் லட்சுமி சொன்ன மாதிரி இனி ஜெயம்தான். முயற்சி தன் மெய் வருத்தக்கூலி தரும் என்கிறது சரியாய்த்தான் இருக்கிறது. 

இந்த முறை ஊர் எல்லையில் கால் வைத்ததும் 'சாமி வந்துட்டாரு! சாமி வந்துட்டாரு!' என்று ஒருவருக்குப்பின்னால் ஒருவர் ஓடிவரும் சம்சாரிகளை ஏனோ ஒருவரையும் காணவில்லை. 'ஐயர்ச்சாமி முதல்ல நம்ம பஞ்சு பொதிகளை எடை போடுங்க சந்தைக்கு போக வேண்டியிருக்கு... என்று அவசரப்படுத்துகிறவர்களையும் காணோம். 

"சின்னப் பண்ணை!" என்று குரல் கொடுத்து கூப்பிட்டாலும், திண்ணையில் அமர்ந்திருக்கிற மனுசன் எழுந்துவர அவ்வளவு நேரமானது. அப்படியே சுணங்கி பாரியாள் உள்பட பக்கத்திலிருக்கிற குடும்ப அங்கத்தினர்களோடு, பூராவும் கலந்து பேசி வர வேண்டியிருந்தது ஏன் என்று தெரியவில்லை. 

பருத்தியிலிருந்து கொட்டை பிரிக்கும் கை எந்திர மனைகள் நான் கைந்து தூரத்தில் குப்புற கவிழ்ந்து கிடப்பதையே ஐயரவர்கள் பார்த்துக் கொண்டிருப்பதை, தானும் ஒரு தடவை திரும்பிப் பார்த்துவிட்டு ஐயர் கேட்பதற்கு முன்னமே அருகில் திகைந்து திகைந்து வந்த சின்னப் பண்ணை பேசத் தொடங்கினார். 

"சாமிக்கு தாக்கல் தெரிஞ்சிருக்குமில்லே இன்னும் தெரியாமலா இருக்கும்!" என்று கேள்வியையும் பதிலையும் அவராக கூறிக் கொண்டு தொடர்ந்தார். 

"தூத்துக்குடியிலிருந்து மோட்டார் வண்டியில் வந்து பருத்தியாவே வாங்கிட்டு போயிடறாங்கசாமி ஹார்வி கம்பெனியாமே. அவ்வளவும் மொத்தம்மா வளைச்சி சங்கரன்கோவில் வரைக்கும் பிடிச்சு வாங்குறாங்க. சம்சாரிகளுக்கு கொட்டையெடுக்கிற வேலையும் மிச்சம். 

ஐயருக்கு காலிரண்டையும் வாரி விழத்தாட்டியதைப் போல இருந்தது. ஹார்வி யா! என்ன... என்ன.... எவ்வளவு பெரிய துரோகம்! ஹார்வி யா! அவர்கள் தகுதிக்கு செய்கிற காரியமா இது! 

சின்னப் பண்ணை அதுக்கு என்ன பண்றது என்பது போல் நின்று கொண்டிருந்தார். என்னய்யா இப்படி செய்து போட்டீர்களே என்று சம்சாரிகளை வருத்தப்படுவதா? என்ன துரையவர்களே இது தகுமா என்று அவர்களை கோபிப்பதா? உச்சி முதல் உள்ளங்கால் வரை வியர்த்து ஊற்றியது. ஏதோ பேச முயன்றும் நாக்கு ஒத்துழைக்கவில்லை. கொஞ்ச நேரம் தலை கவிழ்ந்து நின்றார். 

"உங்களையெல்லாம் நம்பித்தானே......." என்றவாறு சோர்ந்த முகத்தோடு நிமிர்ந்தபோது பண்ணை திண்ணையை ஒரு தரம் திரும்பிப் பார்த்து, வெட்டு ஒன்று துண்டு ரெண்டாக உடனே சொன்னார். "சரிதான் சாமி... என்னை விடுங்க நான் ஒருத்தன் தானா அத்தனை சனங்களுக்கும் உடனுக்குடன் துட்டு, அடுத்த வருசம் உழுது, விதைக்க, களையெடுக்க, இப்பவே ரொக்கம். அதோடயா! பருத்தியை வேறு யாருக்கும் போடக்கூடாது அடுத்தவர் வைக்கிற விலையை விட நாலணா எட்டணா கூடவே தர்ரேங்கிறாங்க அப்புறம் உங்க வீடுகள்ல கல்யாணம் மாதிரி விசேஷமா என்ன விஷேசம்னாலும் இந்த பிடி கடன்! மகசூல்ல கழிச்சுக்கிடலாம். வட்டி மட்டும் கூட போதும். அசல் நிலுவையில இருக்கட்டும்ன்னு வீடு தவறாம கூப்பிட்டு பேசி பட்டு வாடா பண்ணியிருக்காங்க... 

"உங்களையெல்லாம் நம்பித்தான்....." "நாமல்லாரும் ஒண்ணுல்லியா........" 

சின்னச்சாமி ஐயர் நா ததழுத்தது கண்ணீர் சிந்தினார். கால்கள் தள்ளாட பிடிமானத்திற்கு பக்கத்தில் கைகளால் துலாவி ஏதும் அகப்படாததால் மீண்டும் நிலையாக நிற்க முயன்று தோற்று அப்படியே உட்கார்ந்தார். 

"ஆமா வாஸ்தவந்தான். எவ்வளவோ நம்பிக்கையிலதான் முயற்சி பண்ணினீங்க தகுதிக்கு மீறுன எடுப்பு எடுத்துட்டீங்க. என்ன செய்ய சாமி, துட்டுக்கு முன்னாடி சனங்களை தாக்காட்ட முடியலயே! நீங்களும் பாவந்தான்". 

அதன்பின் இரண்டு மாதங்களுக்குப்  கிறகு ஐயர் எட்டையபுரம் வந்து சேர்ந்தார். ஸ்காட்லாந்து ஹார்வி சகோதரர்கள் ஐயரின் திட்டங்களையெல்லாம் எட்டையபுரத்தில் வைத்து அறிந்து கொண்டு துரிதகதியில் தூத்துக்குடி, அம்பை, புனலூர் ஆகிய இடங்களில் ஆலைகளை அமைத்து விவசாயிகளை வளைத்துப் போட்டனர். ஐயர் திட்டமெல்லாம் பொருளின்றி தேக்கங் கொண்டிருந்த சூட்சமத்தை அறிந்த கொண்ட ஹார்வி சகோதரர்கள் வலையை விரித்தனர். தங்களின் பொருள் வலிமையுடன் அரசின் ஆதரவும் இருந்தது. 

ஹார்வி சகோதரர்களை காண்பதற்கு நாலா ஊர்களுக்கும் அலைந்த ஐயர் கடைசியில் மதுரையை தலைமையிடமாகக் கொண்டுள்ளதை அறிந்து அங்கு போகும் போது ஐயர் எலும்பும் தோலுமாக ஆகிப்போனார். வழிச்செலவுக்கும் வகையில்லாமல், மிகவும் வதங்கிப் போய், பல கஷ்டங்களுக்கு நடுவில் ஹார்வி சகோதரர்களைக் கண்டு பேசினார். 

"என்னிடம் பருத்தி ஆடை வகைகளை வாங்கி ஏற்றுமதி விற்பனை செய்வதற்காக பேரம் பேசினீர்கள். அதன் பொருட்டு நான் பெருவாரி உற்பத்தி செய்ய கன இயந்திரங்களுக்கு தொகை அனுப்பிய செய்தியும் உங்களுக்கு தெரியும் அவைகளும் கப்பலில் வந்து கொண்டிருக்கிற நிலையில், துரையவர்கள் நமது உடன்பாட்டுக்கு முரணாக என் முயற்சிகளின் அஸ்திவாரத்தையே அழிக்கலாகுமா? கிராமிய தொழில் முதலீட்டில் வந்து உங்கள் அசுரப்பொருள் முதலீட்டை குவிக்கலாமா? தங்கள் தரத்திற்கு தகுமா?"

ஹார்வி சகோதரர்களின் வாயிலிருந்து புகைந்து கொண்டிருந்த புகையிலை பைப்புகள் ஒன்றையொன்று நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டு, மீண்டும் ஐயரவர்களின் இருக்கை நோக்கி திரும்பியது. ஐயர் மேலும் தொடர்ந்தார். 

"சின்ன மீனை விழுங்கும் பெரிய மீன்போல அல்லவா..." 

"நிறுத்துங்கள் ஐயர்" 

புகைப்பதற்கு விடுப்புக் கொடுத்த ஒரு ஹார்வி துரை பேசினான். 

"ஒன்றை வீழ்த்தி ஒன்று மேலே உயர்வது உலகநியதி. அதுதான் தொன்மை தொட்டு வரும் சரித்திரம் வலிமை தான் ஆளுமை  செய்யும். என்றாலும் ஆங்கிலேய சட்டம் மாத்திரமல்ல உலகியல் ரீதியாகவும் ஒரு உண்மை உண்டும் கேட்டுக் கொள்கிறீரா! அந்த ஜனநாயகத்தில் நீர் எப்போதும் எம்மை வெற்றி பெறலாம். அதாவது சின்ன மீன் முயன்று பெரிய மீனை விழுங்கலாமே எது தடை? நீங்கள் படுகிற கஷ்டத்தை... ம்... அப்படி அல்ல உங்கள் திறமையை... போராட்டத்தை இனிமேல் இப்படித் திருப்புங்கள்......... ம்...........!! 

ஹார்வி சகோதரர்கள் மட்டுமின்றி சிரித்தார்கள். எட்டையாபுரம் வந்து வீட்டின் படுக்கையில் எப்படி விழுந்தார் என்று அவருக்கே புடிபடவில்லை. பேச்சையும் நடமாட்டத்தையும் குறைத்துக் கொண்டார். கடைசியில் லட்சுமி பயந்த மாதிரியே ஆகிவிட்டதா? நீண்ட நாட்களுக்குப் பிறகு லட்சுமியின் உருவத்தை மனதிலிருத்திப் பார்த்தார். அவளின் முகம் கலங்கலாய் மறைந்து  போய்க் கொண்டேயிருந்தது. காணாமல் போயிருந்த அக்ராகரவாசிகள் இப்பொழுது வாசல் வரை எட்டிப்பார்த்து சிரிப்பது போல் தெரிந்தது. சுப்பையாவைப் பற்றியதான பயம் ஐயரை ரொம்பவும் பற்றிக் கொண்டது. தன் தொழில் முயற்சி பெருத்த அபஜெயமடைந்து, பொருளும் உறவும் அற்றுப் போன நிலையில் சுப்பையா என் செய்வான்? எவ்வழியிலேனும் பொருள் தேடிட துடிக்கும் உலகில் சுப்பையா திக்கற்று திரிவானோ?

"அப்பா இப்போது நான் வெள்ளை மனிதர்களுக்கு இணையாக ஆங்கிலம் கற்றிருக்கிறேன். எங்கள் ஆங்கிலோ வெர்னாகுலர் கலாசாலையின் தாளாளருக்கு  ஆங்கில மொழி பெயர்ப்பாளராக நான் இருக்கிறேன்" 

"குழி விழுந்த கண்களில் தேங்கிய கண்ணீரோடு சுப்பையா கூறியதை நினைத்து விம்மி விம்மி அழுதார். சற்றுத்தள்ளி தம்பி விச்சுவை வைத்துக் கொண்டு சுப்பையாவின் சிற்றன்னை நின்று கொண்டிருந்தாள். 

அப்போதுதான் அந்த முடிவை திடீரென்று அறிவித்தார். 'ஆமாம் எனது இந்தக் கடமையை நான் நிறைவேற்றிட வேண்டும் சுப்பையாவுக்கு கல்யாண ஏற்பாடு செய்யுங்கள்! கல்யாண ஏற்பாடு செய்யுங்கள்! சுப்பையாவைப் போய் அழைத்து வாருங்கள்'.

"தனக்குப் பின்னால் மகன் சுப்பையாவுக்கு வாழ்க்கையில் பிடிமானமாக எவரும் இல்லையே, என்ற தன் மன ஆற்றாமைக்காக செல்லம்மாவை திருமணம் செய்தது எவ்வளவு நல்லதாய் போய்விட்டது. அவளுக்கு ஏழு  வயதேயானாலும் பதினான்கரை வயது சுப்பிரமணியம், அவன் தாயின் மறைவுக்குப் பிறகு இந்த வீட்டில் ப்ரியமாய் பேசுவதற்கு ஒரு தோழி கிடைத்துவிட்டாள். ஆமாம் இப்போது மீண்டும் சம்பாஷணைகளால் இந்த வீடு களிப்புறத் தொடங்கியது. 

"செல்லம்மா செல்லம்மா இங்கு வாயேன்" 

"ம்... வந்துட்டேன் சொல்லுங்கோ! 

"நீ வித்யாசாலையில் முதல் பாரம் வரை படித்திருக்கிறாயில்லையா யானைகள் பற்றி படித்திருக்கிறாயா?"

"ம் ஹூம்" 

"தெரியாதா அடி அசடே! தெரிந்து கொள்ள வேணாமா? அது அதிசயமான ஒரு ஜீவன். விலை மதிப்பில்லாதது அறிவுடையது. இந்த வெள்ளை பரங்கிகளுக்கு குதிரை பற்றி தான் தெரியும். அவர்கள் முதன் முதலில் யானையை பார்த்த போது, இரவு முடிந்து விடிகிறதல்லவா அப்படி வெளிச்சமாகிய பின்பு யானையை பார்த்து மிச்ச இருட்டு  போகிறது என்பார்களாம்........ ரெண்டு பேருக்கு சிரிப்பு. 

அவையெல்லாம் கூட்டம் கூட்டமாய்த் தான் வாழும். அந்தந்த கூட்டத்திற்கு யார் வழிகாட்டி தெரியுமா பெண் யானைதான். பாட்டி யானை! மனுசாள் வாழ்க்கையில் ஆண் தானே அம்பலம் பண்றான்? யானைகள் தனது கூட்டத்திலுள்ள தனது பெயரனோ வெளியிலிருந்து தன் வாழ்க்கைத் துணையை அழைத்து வருவது தான் பாட்டிக்கு பிடிக்குமாம். ஒரு குடும்பத்திற்குள் விவாகம் பண்ண சம்மதிக்காதாம். உறவுகளை பெருத்த விருத்தி செய்ய எவ்வளவு அறிவு பாரேன்!" 

செல்லம்மாள் கழகத்தைச் சாய்த்து விழிகளை மேலே உருட்டி ஏதோ யோசனை செய்வது போல் இருந்தாள்.  

இந்த மனுஷாள்தான் சுற்றி சுற்றி ஒன்றோடொன்று வனைந்த பானைக்குள்ளேயே மடிந்து மடிந்து கிடந்து மாய்கிறார்கள். அக்ராஹரத்தை விட்டு கொஞ்சம் கூட அப்பால் விலகுவதில்லை. கொஞ்சம் தள்ளிப் போய் வேற்று மனுஷாளை பார்த்திருக்கிறாயா அவர்கள் மற்றவர்களிடம் கொள்ளை பிரியம் வைத்திருக்கிறார்கள். இன்னும் ஒருபடி மேலே போய் நம்மை சாமி சாமி என்கிறார்கள். 

எனக்குச் சிரிப்பாய் வரும் ஒரு இனத்துக்குள் உயர்வு தாழ்வு பார்ப்பார்களா? பாவம் யாரோ அவர்களுக்கு பொய்யாய் கற்பித்திருக்கிறார்கள். அப்படியெல்லாம் சொல்லக்கூடாது என்றாலோ, 'இல்லேசாமி உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்து ஆகுமா' என்கிறார்கள் அடப்பாவமே! ஊர்க்குருவி ஒரு இனம் பருந்து ஒரு இனம் வெவ்வேறு இனத்தை ஒரே இனமான மனுசருக்கு உவமையாய்ச் சொல்லுகிறார்கள். 

சொல்லிவிட்டு ஓ.... ஹோ... வெனச் சிரித்தான் செல்லம்மா எழுந்து வீட்டின் உட்கடைக்குப் போய் அத்தையின் பக்கத்தில் போய் நின்று கொண்டு "அத்தை! அவர் என்னென்னம்மோ சொல்கிறார் ஒன்றும் புரியவில்லை" என்று நெளிந்தாள். 

"ஆமாம் செல்லம்மா அவன் அறிவார்ந்த உரையாடலைக் கேட்கும் பிராப்தம் அவன் அன்னைக்குப் பிறகு உனக்கு கொடுத்து வைத்திருக்கிறது. நீ அவனோடு வாழ்வாங்கு வாழ்வாயம்மா அது போதும்". 

ஐயருக்கு ரொம்ப முடியவில்லை. ஆயினும் ஐந்தாம் படிவம் முடிக்க சுப்பையாவுக்கு சில நாட்களே இருந்தன. 

"சுப்பிரமணியா... சுப்பையா......... ஐயா பாரதி!" 

ஐயர் தன் மகனின் இயற்பெயரையும், செல்லப் பெயரையும் பட்டப் பெயரையும் முழுதாய்க் கூறிக் கொண்டார். 

திருநெல்வேலியில் கலாசாலைக்கு போகும் வழியில் சுப்பையாவுக்கு அன்று மிகப்பெரிய  ஆச்சர்யம் காத்திருந்தது. நெல்லைப்பர் கோயில் யானையின் பெயர் அக்பர். அது சைவ கோயிலானாலும் வைணவ கோயிலானாலும் சரி எல்லா கோயில் விழாவிலும் கலந்து கொள்ளும். அதோடு சந்தனக் கூடு திருவிழா குருத்தோலை ஊர்வலம் என்று நானாவித மத ஆச்சாரங்களுக்கும் அக்பர் உரித்ததாயிருந்தது. அதனால் அதற்கு சுப்பையாதான் அந்தப் பெயர் சூட்டியிருந்தான். 

அந்த யானையின் பாகன், தென்னிந்திய கலெக்டர் துரை, தன் அலுவலகம் வரும் வழியில் சுவாமி ஊர்வலத்தில் யானையின் மீது அமர்ந்து கொண்ட ரோட்டின் போக்குவரததிற்கு இடையூறு செய்ததாக கைது செய்யப்பட்டிருந்தான். 

காவல் நிலையத்தில் பாகனை காவலில் வைத்திருந்ததால் பாகனைப் பிரிந்த யானை நடுரோட்டில் நின்று தர்ணா செய்தது. காவல்நிலையத்தைப் பார்த்து ஓங்கி பிளறியது. மண்டியிடவும் அமரவும் முன்னும் பின்னும் நடப்பதுமாக களேபரம் ஆடியது. தனது திருநெல்வேலி நண்பனான அக்பர் புரியும் போராட்ட செய்தி கேள்விப்பட்டு சுப்பையா மகிழ்ச்சி கூத்தாடி ஓடி வந்தான். தன் எஜமானனைக் காப்பாற்ற அக்பர் படும் பாடுகளை மக்கள் ஏகமாய் நின்று வேடிக்கை பார்த்தார்கள். சுப்பையாவைப் பார்த்ததும். அக்பர் அவனிடம் முறையிடுவது போல் பிளிறியது. நேரமாக ஆக கூட்டம் அளவின்றிக் கூடியது. யானையின் தர்ணா குறைந்தபாடில்லை. காவல்நிலையத்திலிருந்து கூட்டம் கலையுமாறு ஒலிபெருக்கியில் எச்சரிக்கை வந்த வண்ணமிருந்தன. "பலே பாண்டியா! நம்மவர்களுக்கு ஒரு துன்பம் வரும் போது எப்படி நடந்து காரியார்த்தமாய் சகபேர்கள் சாதிக்க வேண்டும் என்று நன்றாகவே உணர்த்துகிறாய் பலே! பலே!" சுப்பையாவின் ஊக்கத்தில் அக்பரின் போராட்டம் உச்சங்கொண்டது. 

இப்போது காவல்நிலையத்திலிருந்து வான்நோக்கி துப்பாக்கி சத்தம் வெடித்தது. வெடிச்சத்தத்தில் யானை மிரண்டு ஓடும் அதனால் கூட்டம் கலைந்து விடும் என்று கருதினார்கள். அங்குமிங்குமாக நடுரோட்டில் படுத்து குந்தியிருப்புப் போராட்டம் செய்த அக்பர் வெடிச் சத்தம் கேட்டு சுப்பையாவின் அருகில் ஓடிவந்து நின்றது. சுப்பையா தன் உடம்போடு அதன் துதிக்கையைச் சேர்த்து ஆறுதலாய் நின்றான். கூட்டம் கலைந்தபாடில்லை. கூட்டம் அமைதியாகயிருந்து மீண்டும் அக்பருக்கு ஆதரவாய் கோஷமிட்டது. கட்டுக்குள் நிற்காது மக்கள் வெள்ளமாய் திரண்டிருந்தனர்.  

இப்போது காவல்நிலையத்திலிருந்து வெள்ளைப் போலீசாரின் பெரிய அதிகாரி தனது கைக்குள் அடங்கிய விசை மிகுந்த நவீன துப்பாக்கியால் அக்பரின் நெற்றிப் பொட்டிற்கு குறி வைத்தான். 

சின்னச்சாமி ஐயருக்கு ஜமீனிலிருந்து வந்த அந்த தகவல்களால் அவரது நாடி ஓட்டம் நடுங்க தலைப்பட்டது. "ஐயரவர்களோட மில் மிஷனரி சாமான்கள் மதுரை ரயிலடியில் வந்து கிடக்கிறதாம். ஆனால் அரசாங்கம் அதை அங்கிருந்து ரிமூவ் செய்ய மறுத்துவிட்டது. மிஷினை அனப்பிய கம்பெனியை ரிடர்ன் எடுத்துக் கொண்டு ஐயவர்களுக்கு தர வேண்டிய பணத்தை தரும்படி கேட்டும் கம்பெனி ரிடர்ன் எடுக்க மறுத்துவிட்டது. மிஷின் உங்களுக்கு கிடைக்க அரசாங்கம் நிச்சயமாக மறுத்துவிட்ட சூழலில் ஜமீன் தங்களுக்கு ஒப்புக் கொண்ட ஐம்பது சத பங்குகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறது". 

உயர் போலீஸ் அதிகாரியின் துப்பாக்கி ரவை அக்பரின் நடு நெற்றிப் பொட்டை துளைத்து உள்ளிறங்கியதும், அக்பர் சுப்பையாவைப் பார்த்து தும்பிக்கையை தலைக்கு மேல் தூக்கி ஒரு குன்று சரிந்து விழுவதைப் போல சரசரவென சரிந்து விழுந்தது. 

- எஸ்.இலட்சுமணப் பெருமாள்

Pin It