நவம்பர் 7 புரட்சி தினம்

“பாட்டாளிகளுக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை தங்கள் அடிமைச் சங்கிலிகளைத் தவிர, ஆனால் அவர்கள் வெல்வதற்கோர் பொன்னுலகம் காத்திருக்கிறது’’ என்று 1848இல் கம்யூனிஸ்ட் அறிக்கையில் மார்க்சும், ஏங்கல்சும் சொன்ன அந்த பொன்னுலகுக்கான பயணம் 1917இல் ரஷ்ய மண்ணில் தொடங்கியது.

எல்லோருக்கும் வேலை வாய்ப்பை வழங்குவது, மக்கள் நல அரசாக செயல்படுவது தொட்டில் முதல் சுடுகாடுவரை அனைத்து தரப்பினரையும் பாதுகாப்பதும் எல்லோரும் சமம் என்கிற கொள்கையை ஏற்று செயல்படுவது மட்டுமே ஒரு சோசலிச சமூகமாக இருந்து விட முடியாது. கட்டாயமாக இவைகள் அனைத்தும் சோசலிச சமூகத்தில் இருப்பவைதான். ஆனால் சோசலிச சமூகம் என்பது இவைகளையெல்லாம் கடந்த ஒன்று. “டூரிங்குக்கு மறுப்பு’’ என்ற புத்தகத்தில் எங்கெல்ஸ் குறிப்பிடுவது போல், மக்கள் வரலாற்றில் ஒரு பொருளாக இல்லாமல் வரலாற்றை படைப்பவர்களாக மாற்றுவது தான் சோசலிச சமூக அமைப்பு எனலாம். இரக்கமுள்ள மக்கள் நல அரசுக்கும், சோசலிச அரசுக்குமான வேறுபாட்டை முதலாளித்துவ சார்பு பொருளாதார வல்லுநர் கீன்ஸ்சின் எழுத்துக்கள் மூலமாகவே நாம் புரிந்து கொள்ள முடியும். வேலையின்மையில் அவதிப்படும் தொழிலாளர் நிலை கண்டு அவர் வருந்தினார். முதலாளித்துவ அரசு, முதலாளித்துவ பொருளாதார முறையில் உள்ள தேவையை முறைப்படுத்துவதால் மட்டுமே இப்பிரச்சனைக்கு தீர்வுகாண முடியும் என்றார்.

பொருளாதார வல்லுநர்கள் என்பவர்கள் சமூகத்தின் மனசாட்சி என்றும், அவர்கள் அதை ஒட்டியே செயல்பட வேண்டும் என்றும் கூறினார். அதே நேரத்தில் கீன்ஸ் ஒரு சோசலிச எதிர்ப்பாளர், பொதுவாக முதலாளித்துவத்தில் அனைவரும் சோசலிசத்தை எதிர்ப்பவர்கள்தான், எல்லோரையும் போல் கீன்சும் சோசலிசம் தனிமனித  சுதந்திரத்தை பாதிக்கும் என்றார். அதையும் தாண்டி “காட்டுத்தனமான பாட்டாளிகளை எப்படி புத்திசாலித் தனமான முதலாளித்துவ வர்க்கத்தைவிட முற்போக்கானவர்கள்’’ என்று ஏற்றுக்கொள்ள முடியும் என்றார்.

அவர் மனித நேயத்தோடு ஒரு சில விஷயங்களை அணுகியிருந்தாலும் கூட மேலே கூறியதுபோல அவருடைய சிந்தனையிலிருந்த தடை கற்கள் அவரை மக்களை வரலாற்றை படைப்பவர்களாக பார்க்க முடியவில்லை.

மக்கள் நல கோட்பாட்டிற்கும், சோசலிச அமைப்புக்கும் வேறுபாடுகள் இருந்தாலும் இவை ஒன்றோடொன்று இயக்கவியல் ரீதியான தொடர்புடையது. அதாவது, மக்கள் நல திட்டங்களுக்கு பொதுவாகவே முதலாளிகள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள், அதே நேரத்தில் சோசலிசவாதி முதலாளித்துவ சமூக அமைப்புக்குள் இருந்து கொண்டே மக்கள் நல அரசுக்காக போராடவேண்டும். முதலாளித்துவம் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முயற்சிக்கும். மக்கள் நல அரசுக்காக நாம் போராடும் பொழுது அது உடைபடும், சமூகத்தை பின்னோக்கி இழுக்கும் முதலாளித்துவ முயற்சிகளை, சோசலிசவாதி எதிர் கொண்டு, அதை முன்னோக்கி எடுத்து செல்ல வேண்டும்.

மக்கள் நல அரசின் கொள்கையை முதலாளித்துவம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. ஏனென்றால் மேலாண்மையில் அரசு தலையிடுவதையோ, சமூகப் பாதுகாப்பை வழங்குவதோ, கல்வி, வேலையை உத்தரவாதப் படுத்துவதோ, ஏற்றத்தாழ்வை உடைப்பதோ முதலாளித்துவத்துக்கு ஒவ்வாத ஒரு காரியமாகும்.

எல்லோருக்குமான குறைந்தபட்சத் தேவைகளை பூர்த்தி செய்வதை ஒரு சமூகம் ஏற்றுக்கொள்வதே முதலாளித்துவவாதிகளுக்கு ஏற்புடையதாக இல்லை. மக்கள் நல அரசின் செயல்பாடுகள் தொழில் மற்றும் இதர உழைப்பாளி மக்களின் பேரம் பேசும் தன்மையை உயர்த்தும். கிட்டத்தட்ட முழு வேலைவாய்ப்பு என்பது தொழிற்சங்கத்தின் பேரம் பேசும் தன்மையையும் உயர்த்துகிறது. வேலையின்மை அதிகமாக இருக்கும்பொழுது தொழிலாளர்களின் எதிர்ப்புணர்வு என்பது மட்டுப்படுத்தப்படும். எல்லோருக்கும் வேலை, அல்லது போதுமான வேலையில்லா கால நிவாரணம் உத்தரவாதப்படுத்தப்பட்ட சமூகத்தில் முதலாளிகளால் பணி நீக்கம் போன்ற பழிவாங்கும் நடவடிக்கைகள் அடிபட்டுப் போகும், இது தொழிலாளர்களின் சக்தியை உயர்த்தும்.

சுருங்கச் சொனன்£ல், மக்கள் நல அரசு தொழிலாளர் மற்றும் இதர உழைக்கும் மக்களின் எதிர்ப்புணர்வை, சக்தியை உறுதிப்படுத்தும் இது அவர்களை வரலாற்றின் ஒரு பொருளாக இல்லாமல் வரலாற்றைப் படைப்பவர்களாக பரிணமிக்க வைக்கும்.

சோசலிசவாதி மக்கள் நல அரசை ஆதரிக்க வேண்டும் ஏனென்றால், வெறுமனே அது மனிதநேயமுடையது, உழைப்பாளி மக்களுக்கு சலுகைகள் வழங்குகிறது என்பதற்காக மட்டும் அல்ல. இவைகளை கடந்து இந்த அரசு உழைப்பாளர்களை உறுதிப்படுத்துவதாலும் அவர்களை வரலாற்றின்  ஒரு பொருளிலிருந்து வரலாற்றை படைப்பவர்களை பரிணமிக்க வைப்பதாலும், வர்க்கப் போராட்டத்தை கூர்மைப்படுத்துவதாலும் நாம் மக்கள் நல அரசை ஆதரிக்க வேண்டும். நிச்சயமாக முதலாளித்துவ வாதிகள் இப்படிப்பட்ட மக்கள் நல அரசு உருவாகும் சூழலை தவிர்க்கவே விரும்புவர், வரலாற்றில் மக்கள் வெறும் ஒரு பொருளாகவே இருக்க வேண்டும் என்றும் கருதுவர். மக்கள் நல அரசை வலுவாக்கச் செய்வது, அச்சுறுத்துவது, பிரித்தாளுவது என பல வழிகளில் மீண்டும் பழைய நிலைக்கே மக்கள் சமூகத்தை கொண்டுவரவே முயற்சிப்பார்கள் சந்தர்ப்ப சூழல் காரணமாக சில நேரங்களில் மக்கள் நலத் திட்டங்களை ஏற்றுக்கொள்ள வேண்டி வரும், அப்போதைக்கு ஏற்றுக் கொண்டாலும் அதை ஒழிப்பதற்கு நேரம் பார்த்துக் கொண்டேதான் இருக்கும்.

இந்தியாவைப் பொறுத்தவரை இடதுசாரிகளின் நிர்ப்பந்தத்தால் கடந்த ஐந்தாண்டுகால காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தேசிய ஊரக வேலை உறுதிச்சட்டம் போன்ற மக்கள் நலத்திட்டங்களை பல புதிய தாராளமய சிந்தனையாளர்களின் கடுமையான எதிர்ப்பையும்  மீறி அமல்படுத்த வேண்டிவந்தது. இதில் வேடிக்கை என்னவென்றால் இதே புதிய தாராளமய சிந்தனையாளர்கள் தான் பின்நாளில் இத்திட்டத்தின் பலன்களை சொந்தம் கொண்டாடினர். அதே நேரத்தில் இத்திட்டத்தை வெட்டிச் சுருக்கும் வேலையையும் செய்கின்றனர்.

பெருமுதலாளிளுக்கு கொடுக்கும் பெரும் சலுகைகளை மூடி மறைப்பதற்காகத்தான் இத்திட்டங்களை பேசுகின்றனர். வளர்ச்சி என்ற பெயரில் பங்குச்சந்தையில் ஒரே இரவில் கோடீஸ்வரர்களாக மாற இந்த அரசு வழிவகை செய்து கொடுக்கிறது. இதைப்பற்றி யாரேனும் பேசினால் உடனேயே, நாங்கள் தான் தேசிய ஊரக வேலை உறுதிசட்டம் போன்ற நலத்திட்டங்களை கொண்டு வந்தோம் என்று வாய்ஜாலம் பேசுவார்கள். இந்த திட்டங்களை வெட்டிச் சுறுக்கும் அதே வேளையில் பணம் படைத்தவனுக்கு வாரி வழங்கி சேவகமும் செய்கின்றனர்.

தேசிய ஊரக வேலை உறுதிசட்டம் போன்ற சில நல்ல திட்டங்கள் கொண்டு வரப்பட்டிருந்தாலும், அதன் வெற்றி அதை அமல் படுத்துவதில்தான் அமைந்துள்ளது. இத்திட்டங்கள் உழைக்கும் மக்களுக்கு சில நன்மை பயத்தாலும், மக்களை வெறும் பொருளாகவே நீடிக்க வைக்கிறது. காங்கிரஸ் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றபோது, ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவான அறவு ஜீவிகள் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு அவர்கள் அமல்படுத்திய மக்கள் நலத்திட்டங்களே காரணம் என்று சொன்னதிலிருந்தே அவர்கள் மக்களை வெறும் ஒரு பொருளாகவே பாவிக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடியும்.

மக்களை உறுதியுடைவர்களாக மாற்றக்கூடிய மக்கள் நல அரசு செயல்முறைகளை இடதுசாரிகளின் தலையீட்டின் மூலம் கொண்டு வந்து மக்களை வரலாற்றை படைப்பவர்களாக மாற்ற வேண்டும்.

இடதுசாரிகள் மக்கள் நல அரசு செயல்முறைகளை கொண்டுவருவதோடு மட்டுமல்லாமல், இத்திட்டங்களுக்கு எதிரான முதலாளித்துவ செயல்பாடுகளையும் எதிர்க்க வேண்டும். இதன் மூலம் மக்களின் போர்குணத்தையும், வர்க்கப் போராட்டத்திற்கான முனைப்பையும் உயர்த்தி வரலாற்றை படைப்பதற்கான செயல்பாட்டிலும் அணிசேர்க்க வேண்டும். மக்கள் நலத் திட்டங்களுக்காக மட்டும் போராடுபவர்கள் இடதுசாரிகள் அதையும் கடந்து சோசலிசத்திற்காக போராடுபவர்களே அவர்கள், மக்கள் நல செயல்பாடும் சோசலிசமும் ஒன்றோடொன்று இயக்கவியல் ரீதியாக தொடர்புடையதாக இருந்தாலும் அவை குணாம்ச ரீதியாக வேறுபாடுடையவையாகும்.

 

Pin It