இந்திய பங்குச் சந்தை துவங்கி நூற்றாண்டைக் கடந்து நிற்கிறது. ஆசியாவில் மிகப்பழமையானதும், நான்காவது பெரியதுமான இந்திய பங்குச்சந்தை, உலகில் எட்டாவது இடத்தில் உள்ளதாகும். 1850 களில் பாம்பே நகர வீதிகளில் ஆலமர நிழலில் பங்கு வர்த்தகத்தை நான்கு குஜராத்தியர்களும், ஒரு பார்சியும் இணைந்து துவக்கி இருக்கின்றனர். இவர்களுக்கான சந்திப்பு மையங்கள் நிலையான தரகர்கள் உருவாகும்வரை பல இடங்கள் மாற்றப்பட்டு இன்றைக்கு இருக்கும் தலால் தெருவில் 1874+-75ல் தரகு மற்றும் பங்கு வர்த்தகர் கழகம் (THE NATIVE SHARE AND STOCK BROKERS ASSOCIATION) என அமைப்பாக மாறி நிலைபெற்றது. துவக்க காலத்தில் சணல், தேயிலை மற்றும் நிலக்கரி இவற்றை பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுத்தியுள்ளனர்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பின் 1956ல் உருவான பாதுகாப்பு கட்டுப்பாடு சட்டத்தின் படி பாம்பே பங்கு வர்த்தகம் (BSE) என உருப்பெற்றது.. 1993 வரை பங்குகள் சான்றிதழ்களாகத் தான் இருந்தன.

1994+-95ல் பங்குகள் மின்னணு அமைப்பிற்கு மாற்றப்பட்டன. தற்போது பங்குகளை வாங்க அல்லது விற்பதற்கு டிமேட், டிரேடிங், மற்றும் வங்கிக்கணக்கு இம்மூன்றும் ஒரு சேர தேவைப்படுகிறது. இப்படி முறையாக மாற்றப்பட்டதற்கு பின்னணி வரலாறும் உள்ளது. 1990களில் உலகமயமாக்கல் பங்கு வர்த்தகத்தையும் தளமாகக் கொண்டு விரிவடையத் துவங்கியபோது பெரும் முதலாளிகள் மற்றும் அன்னிய முதலாளிகள் மட்டுமே களத்தில் நிற்கும் ஏற்பாட்டை இந்திய பொருளாதாரச் சட்டங்கள் உருவாக்கின.

1992ம் ஆண்டு பிரபலமான ஹர்ஷத் மேத்தா பங்குச்சந்தை ஊழல் நடைபெற்றது நினைவிருக்கலாம். ஹர்ஷத் மேத்தா வங்கி மற்றும் பல தனியார் நிறுவனப் பங்குகளை மொத்தமாக பெற்றுக்கொண்டு போலியாக விலை ஏற்றுவதும், இறக்குவதும் செய்து பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்தார். இந்த மோசடி மற்றும் ஊழலினால் நாடே கொந்தளித்தது. பல தரகர்கள், சொத்துகள் அனைத்தையும் இழந்து நடுத்தெருவில் நிறுத்தப்பட்டு தற்கொலைச் சம்பவங்கள் பல நடந்தன. இந்த ஊழலுக்கெதிரான எதிர்ப்பின் விளைவால் செக்யூரிட்டி எக்ஸ்சேஞ்ச் போர்ட் ஆப் இந்தியா (செபி) பங்குச் சந்தையை கட்டுப்படுத்தும் அமைப்பாக உருவாக்கப்பட்டு, 1993 ல் நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (NSE) உருவாக்கப்பட்டது. இதில் 1500 கம்பெனிகள் இடம் பெறுகின்றன. இதன் குறியீடுகள் நிப்டி என அழைக்கப்படுகிறது. இப்படி கொண்டு வந்த போது கூறப்பட்ட காரணம் வெளிப்படையான வர்த்தகம் நடைபெறவேண்டுமென்பதே. ஆனால் கசாப்புக்கடையில் நின்று கொண்டு ரத்தம் வராமல் சுத்தமாக ஆட்டை வெட்டினால் பாவம் கிடையாது என்றால் எப்படியோ அதுபோலத்தான் சூதாடிகளிடத்தில் நியாயம் மற்றும் வெளிப்படைத்தன்மை எதிர்பார்த்தால் கிடைக்காது. இதற்கு உதாரணம் 2009 ம் ஆண்டு சத்யம் நிறுவனப் பங்குகள் போலியான சொத்து மதிப்பை காட்டியுள்ளது என்று செய்தி பரவ 600ரூபாயில் இருந்த பங்குகள் சில மணி நேரங்களில் வெறும் ரூ10க்கு வந்து பல பேரின் முதலீட்டை பறித்துக் கொண்டு நடுத்தெருவில் நிறுத்தியது. இதில் எந்தவிதமான வெளிப்படைத் தன்மையை அரசு வலியுறுத்தப்போகின்றன? மோசடி செய்தவர் உண்மை வெளிவரும் வரையில் லாபத்தை ஈட்டினார். ஆனால் இறுதியாக பாதிக்கப்பட்டது முதலீட்டாளர்கள் என அழைக்கப்படும் சாதாரண மக்கள் தான்.

இந்திய பங்குச்சந்தை 1956லிருந்து 2006 வரை சீராக வளர்ந்து வந்தது. அதாவது முறையே 4000,5000,9000,11,000, புள்ளிகள் என்ற நிலையிலிருந்து மாயம் செய்தது போன்று 2006+-07 ம் ஆண்டில் 21,000 புள்ளிகளைத் தொட்டது. இந்த உயர்வு பல உயர்தர, நடுத்தர வர்க்க மக்களை பங்குச்சந்தையில் முதலீடு செய்யத் தூண்டியது. ஆனால், அடுத்த ஆண்டே 2008ல் உலகம் முழுவதும் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் சென்செக்ஸ் புள்ளிகள் மீண்டும் பத்தாயிரத்திலிருந்து ஆயிரத்திற்கு இறங்கியது. இச்சமயத்திலும் பல தரகர்களும், முதலீட்டாளர்களும் தான் தங்களது பணத்தை பெருமளவு இழந்து வீதிக்கு வந்தனர்.

2008ல் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா பெரும் பாதிப்புக்குள்ளாகாமல் இருந்ததற்கு காரணம் பொதுத்துறை நிறுவனங்களும், இந்திய மக்களின் சேமிப்பும் ஆகும். ஆனால் தேசத்தை காத்து நிற்கின்ற இப்பொதுத்துறை நிறுவனங்களை இன்று தனியாருக்கு தாரை வார்க்கத் துடிக்கின்றனர் ஆட்சியாளர்கள். கடந்த ஐ.மு.கூ அரசில் தொழிலாளர் வைப்பு நிதியை பங்குச்சந்தையில் முதலீடு செய்யத் துணிந்தபோது அன்றைக்கு அந்த அரசுக்கு ஆதரவு தந்து கொண்டிருந்த இடதுசாரிகள் தடுத்து நிறுத்தினர். இது தடுக்கப்படாமல் இருந்திருந்தால் இன்றைக்கு அமெரிக்காவைப் போல நாமும் பெரும் நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டிருப்போம்.மக்களின் இந்த சேமிப்பையும் பிடுங்கும் நோக்கோடுதான், தற்போதைய பொருளாதாரக் கொள்கைகள் இருந்து வருகின்றன.

பங்கு வர்த்தகத்தை நம்பிய பொருளாதார பலம் என நாட்டிற்கு பொருளாதார அடித்தளத்தை உருவாக்க இயலாது என்பதும்,இது மிக ஆபத்தான முயற்சி எனவும் தெரியாதவர்கள் அல்ல நமது ஆட்சியாளர்கள். இருப்பினும், பங்குச்சந்தையில் மாற்றங்கள் அதாவது புள்ளிகள் சரிவுகள் காணும் போதெல்லாம் பொதுத்துறை நிறுவனங்களை பங்குச்சந்தையில் பெருமளவு முதலீடு செய்ய நம் ஆட்சியாளர்கள் நிர்ப்பந்திக்கிறார்கள். ஓய்வூதியம் மற்றும் தொழிலாளர் வைப்பு நிதியைக்கூட பங்கு வர்த்தகத்தில் தான் முதலீடு செய்ய வேண்டுமென திட்டமிடுகின்றனர். இதனால் பயன் அடையப்போவது யார்? கட்டாயம் முதலீட்டை சேமிக்கும் மக்கள் அல்ல. மாறாக,இந்தியாவில் இருக்கும் பெரு முதலாளிகள் மற்றும் அன்னிய நாட்டு முதலாளிகளே,சமீபத்தில், நம்முடைய பிரதமர் இந்தாண்டு உலகப் பொருளாதார மந்த நிலை காரணமாக நமது பொருளாதார வளர்ச்சி சதவீதம் குறையுமென கூறி கவலைப்படுகிறார். அதே போல் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்றைக்கு ஏற்பட்டிருக்கும் உலகப் பொருளாதார வீழ்ச்சி குறித்து கூறும்போது இன்று நிலவும் சூழல் குறித்து குறைத்து மதிப்பிட்டு விட்டோம் எனவும் வருத்தப்படுகிறார்.

இவர்களின் கவலைகள் நம் தேசத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகளையாவது சரியானதாக திட்டமிட உதவுமா என்றால் அதற்கான திட்டங்களும் தொலைநோக்கு பார்வையும் இவர்களிடத்தில் இல்லை.மாறாக மீண்டும் சந்தை அடிப்படையிலான தாராளப் பொருளாதாரத்தை மையமாகக்கொண்டு தனியார் மூலதனத்தை பெருகச் செய்வதையே குறிக்கோளாகக்கொண்டு செயல்படுகின்றனர். காப்பீட்டுத்துறை மற்றும் வங்கித்துறை மூலமாக சேமிக்கும் பழக்கமுள்ள இந்திய மக்களிடையே சிறு சேமிப்பு மூலம் கோடிகளில் வருமானம் என நுகர்வு வெறியை திணிப்பதில் கவனம் செலுத்துகின்றது மத்திய அரசு. பங்குச் சந்தையில் பல கோடி வருமானம் என சாமான்யன் கனவுகளில் மூழ்க, அவன் சேமித்த பணத்தை சூதாடிகளிடம் கொடுத்து வேடிக்கை பார்க்கிறது காங்கிரஸ் அரசு.

மேலும் பல வகைகளில், பங்குச் சந்தை குறித்து பொதுவான பார்வையும், கருத்துக்களும் மக்களிடையே திட்டமிட்டு பரப்பப்படுகிறது. பங்கு வர்த்தகம் மூலமாக இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு அதிகரிக்கிறது எனவும், ஒரு மனிதன் தன்னிடத்தில் எவ்வளவு பங்குகள் வைத்திருக்கிறான் என்பதைப் பொருத்தே அவனுடைய பொருளாதாரம் குறித்த எதிர்கால மதிப்பீடு அளவிடப்படுகிறது எனவும் திரும்பத்திரும்ப அடித்துச்சொல்லப்படுகிறது. இப்படி பல விதத்திலும் பணம் மீதான நுகர்வு கலாசார வெறி தனிநபரிடத்தில் உருவாக்கப்படுகிறது. பங்குச் சந்தை மூலமாக வாங்கி விற்பவர்கள் என்றைக்குமே பெரும் லாபம் ஈட்டியது கிடையாது. முதலாளிகள் மட்டுமே இலாபம் அடைகின்றனர்.ஆனால், இதனால் ஏற்றப்படும் பொருள்களின் விலையும் சாமான்யன் தலையில்தான் சுமத்தப்படுகிறது.

ஒரு நாள் காலையில் இந்த பங்குகளை வாங்கினால் இலாபம் ஈட்டலாம் என செய்தி பரப்பப் படுகிறது. நீங்கள் பார்த்திருப்பீர்கள்! அன்றைக்கு என்ன நடக்கிறது என்றால் அந்த நிறுவனத்தின் பங்குகள் மொத்தமாக லாபம் என குறிப்பிட்ட நேரம் பேசப்படும். பின், திடீரென ஒரு நேரத்தில், இப்போதே அந்த நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் மொத்தமாக விற்று விடுங்கள். இதன் விலை இறக்கத்துடன் காணப்படுகிறது, தாமதித்தால் உங்களுக்கு நட்டம் அதிகமாகும், எனவே உடனே குறைவான நட்டத்துடன் விற்றுவிடுங்கள் என செய்தி பரவும். இந்த நேரத்தில் இந்தப் பங்குகளை அதே நிறுவனம் மீண்டும் குறைந்த விலையில் மொத்தமாக பெற்றுக்கொள்ளும். இப்போது சொல்லுங்கள் இது யாருக்கு இலாபம் என்று?

ஒரு சில தனிநபர்களின் இலாப வெறிக்காக நடத்தப்படுவதே பங்குச் சந்தை. இந்த சூதாட்ட விளையாட்டுக்களை 200 ஆண்டுகளுக்கு முன்னரே அமெரிக்கர்கள் துவங்கியுள்ளனர். இயற்கையில் கிடைக்கும் வளங்கள் அனைத்தும் முதலாளிகளுக்கு மட்டுமே சொந்தம் என்ற நினைப்பில் இவர்கள் இயங்குகின்றனர். இப்படி பல தனிநபர்களுக்கானதாக இயற்கை வளங்களை மாற்றும் முயற்சியில்தான் அமெரிக்கா வளரும் நாடுகளை பல துறைகளில் நிர்ப்பந்திக்கிறது.

உலக அரங்கில் இந்திய பணக்காரர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்து விட்டது என பெருமிதத்துடன் பத்திரிகைகளில் செய்திகள் வருகிறது. பங்கு வர்த்தகம்தான் அவர்களை உலகப்பணக்காரர் பட்டியலுக்கு உயர்த்தியுள்ளது. ஆனால் மூலதனம் செய்த மக்கள் காலையில் எந்தவொரு தமிழ் தொலைக்காட்சியின் செய்தியை பார்த்தாலும், அதில் கேள்வி கேட்டு தன் சந்தேகங்களை நிபுணர்களிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் முதலீட்டாளர்கள், அய்யா, நான் வாங்கிய பங்கு மதிப்பு உயருமா?

Pin It