‘தமிழக உள்ளாட்சி மன்றத் தேர்தல்கள், உள்ளாட்சிப் பதவிகளைக் கைப்பற்றிட உதவிடும், மற்றொரு வாய்ப்பு’ என்ற குறுகிய நோக்குடன் அணுகும் போக்கு பரவலாக பலரிடம் உள்ளது.

இந்தத் தேர்தலையொட்டி, திமுக தலைவர் கருணாநிதி திமுக தனித்துப் போட்டியிடும் என்று அறிவித்து விட்டு அதற்கு ஒரு காரணமும் தெரிவித்தார். அவரது அறிக்கையில் “உள்ளாட்சித் தேர்தல்களில் அரசியல் அடிப்படையோ, கொள்கை அடிப்படையோ முன்வைக்கப்படாமல், பொதுமக்களுக்குத் தேவையான சுகாதாரம், கல்வி, சாலை, மருத்துவம், குடிநீர் போன்ற பொதுப்பணிகளைக் குறிக்கோளாகக் கொண்டு இயங்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார். பதவிகளைக் கைப்பற்றுவது, பதவிகளுக்கு வந்தவர்கள் மக்களின் தேவைகளை ‘பெரிய மனது’ கொண்டு நிறைவேற்றுவது என்பதுதான் உள்ளாட்சிகளின் வேலை என்ற பார்வை திமுகவின் அறிக்கையில் உள்ளது. அடித்தள ஜனநாயகமே உள்ளாட்சி மன்றங்கள் என்றில்லாமல் ‘அடித்தள அளவில் ஊழல்’ செய்யும் வாய்ப்பாக கருதப்படுகிறது. உள்ளாட்சி முறையின் பின்னணியாக உள்ள அரசியல் மறைக்கப்படுகிறது.

உள்ளாட்சி தேர்தல்களத்தில் ஈடுபடுவோருக்கும், வாக்களிப்பவருக்கும், மக்களுக்கும் உள்ளாட்சி முறையைப் பற்றிய சரியான அரசியல் பார்வை இருந்தால்தான் உள்ளாட்சி முறை உண்மையான பலனை ஏற்படுத்தும்.

மக்களுக்கு “அதிகாரம்” ஏன்?

மக்கள் தங்களது வாழ்க்கையை தங்களின் விருப்பப்படி அமைத்துக் கொள்ள உண்மையில் என்ன தேவைப்படுகிறது? ஒரே வார்த்தையில் சொல்லுவதென்றால், “அதிகாரம்” தேவைப்படுகிறது. மக்களிடம் அதிகாரம் இருந்தால்தான், கௌரவமான உழைப்பு செலுத்தவும், தேவையான உற்பத்தி செய்திடவும், பொருட்களை நியாயமாக பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பு ஏற்படும்.

ஆனால், இன்றைய சமூகத்தில் ‘அதிகாரம்’ எப்படி இருக்கிறது? மக்கள் உழைப்பு செலுத்திட எத்தகைய வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்திட வேண்டும்? எத்தகு உற்பத்தி நடந்திட வேண்டும்? பொருட்களைப் பகிர்ந்து கொள்வதில் யாருக்கு மேலான பங்கு? இவற்றையெல்லாம் தீர்மானிக்க ஒரு சிறு கூட்டத்திடம்தான் அதிகாரம் உள்ளது. அனைத்து மக்களுக்கான அதிகாரம் எப்போதுமே இருந்ததில்லை. சமூகத்தில் மேல்தட்டு வர்க்கங்கள்தான் அதிகாரம் பெற்றவர்களாக இருந்து வந்துள்ளனர் .இந்நிலையில் அதிகாரம் கொண்டவர்களுக்கு சுகபோக வாழ்க்கையும், அதிகாரமற்றவர்களுக்கு வறிய வாழ்க்கையும் என சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

ஆனால், சமத்துவமற்ற அதிகாரம் நிலவும் சூழலை அப்படியே மக்கள் சகித்துக் கொண்டு இருந்ததில்லை. தங்களது வாழ்க்கையை தாங்களே தீர்மானித்துக் கொள்ளும் அதிகாரத்திற்கான மக்களின் போராட்டம் இடைவிடாமல் நடந்து வந்துள்ளது. இதையே, கார்ல் மார்க்ஸ், “இதுவரை இருந்து வந்துள்ள சமூகத்தின் வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே” என்று குறிப்பிட்டார். இது மனிதகுல வரலாறு குறித்த ஒரு உயரிய கண்டுபிடிப்பு.

இந்தியாவில் அதிகாரத்திற்கான போராட்டம்

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக நடந்த விடுதலைப் போராட்டமும், மக்களின் அதிகாரத்திற்கான போராட்டம்தான். விடுதலைப்போராட்ட வரலாற்று நூல்களில் காங்கிரசின் தலைமை, காந்தியின் போராட்டங்கள் பற்றியெல்லாம் விலாவாரியாக பேசப்படுகிறது. ஆனால் காஷ்மீரத்திலிருந்து கன்னியாகுமரி வரை விடுதலைப் போராட்டங்களில் மக்கள் ஈர்ப்புடன் ஏன் பங்கேற்றார்கள்? இலட்சக்கணக்கான அடித்தட்டு மக்கள் ஏன் தங்களது வாழ்க்கையை இழந்து விடுதலைக்காகப் போராடினார்கள்? உழைக்கும் மக்களின் கையில் அதிகாரம் முழுமையாக வசப்படும் ஒரு சமூகத்தை அமைப்பதற்கான வேட்கையே அவர்களை போராட்டத்திற்கு உந்தித் தள்ளியது. இதனை அந்த சாமானிய மக்கள் கட்டுரை, நூல் வடிவில் பதிவு செய்திடத் திறமை அற்றவர்களாக இருந்திருக்கலாம்; ஆனால் உண்மையான அவர்களது உள்ளக்கிடக்கை, அதிகார சமத்துவம் குறித்ததுதான்.

இந்தியாவிற்கு விடுதலை கிடைத்ததோடு, மக்களுக்கு முழு அதிகாரம் கிடைத்ததாகக் கூறப்பட்டது. ஆனால் அது, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சியைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரமாகச் சுருங்கிப் போனது.

எவ்வாறு மக்களுக்கு முழு அதிகாரம் கிடைக்கச் செய்வது என்ற கேள்வி நீடித்தது. இதற்கான நீண்ட நெடிய விவாதம் இந்திய சிந்தனைத்தளத்தில் நடைபெற்று வந்தது.

விடுதலை கிடைப்பதற்கு முன்பிருந்தே, இந்த விவாதம் நடைபெற்றது. மகாத்மா காந்தி, விடுதலைக்குப்பிறகு, அமையவிருக்கும் அதிகார அமைப்பை, ‘இராம ராஜ்யம்’ என்று அழைத்தார். “ வர்க்கம் இல்லாத, அரசு இல்லாத, கிராம அடிப்படையிலான அரசியல் அமைப்பு முறை வேண்டும்” என்பதுதான் காந்தியின் கிராம சுயராஜ்யம் எனும் கோட்பாடு. இந்த அமைப்பில் அமைப்பை ஆள்பவர்கள் ‘இராமர்’ போன்ற மேல்தட்டு வர்க்கத்தினர்தான். ஆனால் அவர்கள் தர்மகர்த்தர்களாக, நியாயவான்களாக நடந்து கொள்ள வேண்டும் என்பது காந்தியின் கனவு. கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலான அனுபவம், அவரது கனவு நனவாகவில்லை என்பதுதான். அதிகாரம் கையில் கிடைத்தவுடன், ஆள்கிறவர்கள் அதனை உறுதிப்படுத்தி, மக்களை ஒடுக்கிடும் பாதையில்தான் நடைபோட்டு வருகின்றனர்.

ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட வகுப்புவாதிகள் ‘இந்துத்துவா’ என்ற அரசமைப்பை உருவாக்க விரும்பினர். இதில் எந்த மதத்தைச் சார்ந்த ஒரு தனிமனிதனுக்கும் அதிகாரம் கிடையாது. ஆட்சி அதிகாரத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத மத ஆளுமை கொண்ட ஒரு கூட்டம் அதிகாரம் கொண்டதாக இருக்கும். இந்த நோக்கத்தின் அடிப்படையை உணர்ந்த மக்கள் இந்த சக்திகளை அவ்வப்போது நிராகரித்து வருகின்றனர்.

இந்திய சிந்தனைத்தளத்தில், வரலாற்று ரீதியான மக்களின் அதிகார வேட்கையோடு, இணைந்ததாக இருந்த ஒரு பார்வை, கம்யூனிஸ்டுகளின் பார்வை. இந்தியாவில் தொழிலாளர், விவசாயிகள் உள்ளடக்கிய உழைப்பாளி வர்க்கங்கள் முழு அதிகாரம் பெற்ற சோசலிச சமூகம் உருவாக வேண்டுமென்பது அவர்களது இலட்சியம். இந்த இலட்சியத்தை அடைவதற்காக அவர்கள் முன்வைத்த பல திட்டங்களில் முக்கியமானது, உள்ளாட்சி மன்றங்களின் செயல்பாடு பற்றியது.

சோசலிசம் நோக்கிய பயணத்தின் முக்கிய படிக்கல்லாக அதிகாரம் படைத்த உள்ளாட்சி மன்றங்களை உருவாக்க வேண்டுமென்று அவர்கள் உளமாற முயற்சித்தனர்.

இடதுசாரி மாற்றுப்பார்வை 1950-ம் ஆண்டுகளிலிருந்து மாநில அரசுகளை கம்யூனிஸ்டுகள் கைப்பற்றிய போதெல்லாம், சிறந்த உள்ளாட்சி மன்ற நிர்வாகத்தை அவர்கள் நிறுவினார்கள். 1957ம் ஆண்டு கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்கம் இ.எம்.எஸ் நம்புதிரிபாட் தலைமையில் அமைந்தது. அந்த அரசாங்கம் மேற்கொண்ட முதல் பணியே, அதிகாரங்களை பரவலாக்கும் பணிதான். நிர்வாக சீர்திருத்தக்குழு அமைக்கப்பட்டு “சுயாட்சி பெற்ற உள்ளூர் அமைப்புகள் நிர்வாகத்தில் பங்கு பெற” முதல் முயற்சிகளை இ.எம்.எஸ் அரசு மேற்கொண்டது.

மேற்கு வங்கம், கேரளம், திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களிலும் உள்ளாட்சிமன்றத் தேர்தல்கள் முறையாக நடத்தப்பட்டு வந்துள்ளன. கிராம ஊராட்சியிலிருந்து மேல் அடுக்குகள் வரை சுயமாக செயல்படுவதை அவர்கள் உறுதி செய்தனர். அனைத்து அடுக்குகளுக்கும் உரிய அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டன. 1996-ம் ஆண்டுகளில் கேரளாவில் இடது ஜனநாயக அரசு மேற்கொண்ட ‘மக்கள் திட்டம்’ என்ற இயக்கம் அதிகாரப்பரவல் வரலாற்றில் ஒரு புதிய காவியம். ஒன்பதாவது 5 ஆண்டுத் திட்டத்தில் 35லிருந்து 40 சதவிகிதம் திட்ட ஒதுக்கீட்டை உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கி, ஊராட்சி மட்டத்திலிருந்து மக்களே தங்களுக்குரிய திட்டங்களை தீட்டி, அமலாக்கி, கண்காணித்து, நடைமுறைப்படுத்தியது மிகப்பெரிய சாதனை. கேரளம் முழுவதும் 2 லட்சம் மக்களை விழிப்புணர்வு பிரச்சாரம், திட்டமிடலுக்கான மாநாடுகள் உள்ளிட்ட பல பணிகளில் ஈடுபடுத்தியதும் முக்கிய சாதனை. முடிவுகள் எடுப்பதற்கான ஒரு அதிகார அமைப்பு கிராம சபை. முறையாக மக்களின் பங்கேற்போடு அவை நடத்தப்பட்டு வந்துள்ளன. வார்டு மட்டத்தில் கூட மக்கள் கூடி முடிவெடுக்கிற வார்டு சபைகளும் மேற்கு வங்கத்தில் நடத்தப்பட்டன.

ஐந்து ஆண்டுக்கு ஒருமுறையே அதிகாரத்தை மக்கள் பயன்படுத்த முடியும் என்ற நிலையை கிராம சபைதான் மாற்ற முடியும். அவ்வப்போது அன்றாட நிர்வாகச் செயல்பாடுகளில் முடிவு எடுக்கும் அதிகாரம் கொண்ட இந்த கிராம சபை அமைப்பு, தற்போது பல மாநிலங்களில் உருக்குலைக்கப்பட்டு வருகின்றது. தமிழகம் உள்பட பல மாநிலங்களில் வருடத்திற்கு சில தடவை கூடிக்கலையும் சடங்காக இதனை மாற்றி விட்டனர்.

இடதுசாரி அரசுகள் ஆண்ட மாநிலங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாநில வருவாயில் 30 சதவிகிதத்திற்கும் மேலான தொகை ஒதுக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் பல மாநிலங்களில் 10 சதவிகிதத்திற்கும் குறைவாக ஒதுக்கப்பட்டு, பெயரளவில்தான் அதிகாரம் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

சட்டம் மட்டும் போதுமானதா?

முன்னாள் பிரதமர் மறைந்த இராஜிவ் காந்தியின் அரசு 73-வது, 74-வது சட்ட திருத்தங்களைக் கொண்டு வந்ததன் மூலமாக, உள்ளாட்சி முறையை அரசியலமைப்புச் சட்ட ரீதியான ஒரு அதிகார அமைப்பாக உருவாக்கியது. இது அதிகாரத்திற்கான மக்களின் நீண்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. சட்டத்தைக் கொண்டு வந்ததன் மூலம், அவர்கள் மக்களிடம் செல்வாக்கை தக்க வைத்துக் கொண்டனர். ஆனால், உள்ளாட்சி மன்றங்களுக்கு உரிய நிதி ஒதுக்காதது, உரிய அதிகாரங்கள் வழங்காதது என்ற வகையில், உள்ளாட்சி மன்றங்களை செயல்பாடற்ற அமைப்புக்களாக வைத்திருக்கவே அவர்கள் விரும்பினார்கள். இடதுசாரிகள் தவிர, மற்றவர்கள் உள்ளாட்சி அமைப்புக்களை வெறும் அலங்கார பொம்மைகளாகவே கருதினர்.

உற்பத்திக்கான நிலம் உள்ளிட்டவற்றில் மக்களுக்கு உரிமை இருந்தால்தான், மக்களுக்கு உண்மையான அதிகாரம் கிடைக்கும் என்பது கம்யூனிஸ்டுகளின் பார்வை. இதனால்தான், மேற்கு வங்கத்தில் 12 லட்சம் ஏக்கர் நிலம், சாதாரண பின்தங்கிய ஏழை விவசாயிகளுக்கு சொந்தமாக்கப்பட்டது. மேற்கு வங்கம், கேரளம், திரிபுரா தவிர எந்த மாநிலத்திலும், உள்ளாட்சி மன்ற செயல்பாட்டோடு இணைந்து சாதாரண மக்களுக்கும் நிலத்தில் உரிமையை உறுதிப்படுத்திய சாதனை நிகழ்த்தப்பட்டதில்லை.

அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ளாட்சி முறை வலுவாக இடம் பெற்ற போதிலும், இன்றைக்கும் கூட அதிகாரங்கள் மேல்மட்டத்தில்தான் குவிந்துள்ளன. டெல்லியிலிருந்து, மாநில, மாவட்டத் தலைநகரங்கள் வரை, அதிகார வர்க்கத்திடமும், ஆள்வோரிடமும்தான் அதிகாரங்கள் குவிந்துள்ளன. ஆனால் அடித்தள, உள்ளூர் மக்கள் மீது நம்பிக்கை வைத்து, அதிகாரங்களைப் பரவலாக்க அவர்கள் தயாரில்லை; அதுமட்டுமல்ல, அதிகாரம் பரவலாக்கப்பட்டால் வாய்ப்பு, வசதிகள் அனைத்தையும் ஆளும் வர்க்கங்கள் பங்கு போட்டுக் கொள்ளும் நிலை, மாறிவிடும். இதற்கு அஞ்சியே அதிகாரப்பரவலை அவர்கள் முடமாக்குகின்றனர்.

இந்நிலையில், மக்கள்தான் விழிப்புணர்வுடன் இருந்து தங்களுக்கான தற்போதைய அதிகாரங்களை பாதுகாத்துக் கொள்வதோடு, மேலும் அதிகாரப்பரவலுக்கான போராட்டத்தை நடத்திட வேண்டும். இதற்கான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த மக்கள் இயக்கங்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும். உள்ளாட்சி முறை என்ற தளத்தில் ஆளும் வர்க்கங்களுக்கும், மக்களுக்கும் அதிகாரத்திற்கான போராட்டம் நடைபெற்று வருகின்றது. கண்ணுக்கு வெளிப்படையாகத் தெரியாமல் நடந்து வரும் இந்த நிகழ்வே, உள்ளாட்சி அரசியல் என்பது. உண்iயான, அர்த்தமுள்ள உள்ளாட்சி முறை உருவாகிட போராடுபவர்கள், உழைக்கும் மக்கள் கையில் அதிகாரம் கிடைத்திடும் வரலாற்றுக் கடமையை செய்பவர்கள். இந்தக் கடமை உணர்வோடு உள்ளாட்சி மன்றத் தேர்தல் பணிகள் நடைபெற வேண்டும். உள்ளாட்சி அரசியல் அறியாத மக்கள் தேர்தலின்போது பணபலம், சாதிபலம், பதவி ஏலம், முறைகேடுகள் போன்றவற்றில் இரையாவது மிகப்பெரிய சாபக்கேடு. எனவே, தங்களது உரிமைக்கான, அதிகாரத்திற்கான போராட்டமாக உள்ளாட்சி மன்றங்களை அணுகிடும் பார்வை மக்களுக்கும் ஏற்படுத்திட வேண்டும்.

Pin It