மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிபிஐ) புதிய தலைமை அலுவலக திறப்பு விழாவில் பேசிய பிரதமர் மன்மோகன்சிங், சிபிஐ எந்தவித தலையீட்டுக்கும் உட்படாமல் சுயேட்சையாக, பதவி, பொறுப்புகளை பார்த்து பயப்படாமல் செயல்பட வேண்டும் என்றார். உண்மைதான், அப்படித்தான் சிபிஐ செயல்பட வேண்டும். ஆனால் நிலைமை அப்படி ஒன்றும் இல்லையே.

2ஜி, ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் உச்சநீதிமன்றம் கடுமையாக கேள்வி எழுப்பும் வரை சிபிஐ ஆமையை விட மெதுவாகத்தான் செயல்பட்டது. ஒரு சின்ன வழக்கு கூட யார் மீதும் பதியப்பட வில்லையே. உச்சநீதிமன்றம் நேரடியாக இவ்வழக்கை கண்காணிக்கும் என்று சொன்ன பிறகுதான் ஆ. ராசாவை கூட கைது செய்தது. ஏன், முழுமையான குற்றப் பத்திரிகையை கூட தாக்கல் செய்தது?இப்போது கூட, கனிமொழியை கைது செய்ய இவ்வளவு கால தாமதம் ஏன் ஆனது. தமிழக தேர்தல் முடிந்து கைது படலமெல்லாம் அரங்கேறுகிறது. இதையெல்லாம் பார்க்கும் போதுதான் நமக்கு மன்மோகன் சிங் சொன்னதெல்லாம் சற்று புரிகிறது. இப்படி காங்கிரஸ் அரசு ஒரு பக்கம் தலையிடக்கூடாத இடத்தில் அதிகமாக தலையிடுகிறது. மறு பக்கம் தலையிடுங்கள் என்று பேசினால் தலையிட முடியாது என்கிறது.

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளியான அடுத்த நாளே தேர்தல் பரிசாக மத்திய அரசு பெட்ரோல் விலையை 5 ரூபாய் உயர்த்தியுள்ளது. காங்கிரஸ் அரசு 2004ல் ஆட்சிக்கு வந்தபோது 35 ரூபாயாக இருந்த பெட்ரோலின் விலை தற்போது அப்படியே இரண்டு மடங்கு கூடுதலாகி 70 ரூபாய் வரை சென்றுவிட்டது.

சாதாரண மக்கள் பயன்படுத்தும் பெட்ரோலின் விலை விமானத்திற்கு பயன்படுத்தும் பெட்ரோலின் விலையை விட அதிகமாக உள்ளது. இந்த விலை உயர்வு மக்களை கடுமையாக பாதிக்கும். மத்திய அரசு இதில் தலையிட்டு விலை உயர்வை திரும்பப்பெற வேண்டுமென்று சொன்னால், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, அரசுக்கும் இந்த விலை உயர்விற்கும் சம்மந்தமே இல்லை என்று கூறிவிடுகிறார். எண்ணெய் நிறுவனங்கள்தான் இந்த விலை உயர்வை தீர்மானிக்கிறது. அரசு இதில் தலையிடாது என்கிறார். பிறகு எப்படி தேர்தல் முடிவு வரும்வரை விலையுயர்வை ஒத்திப்போட முடிந்தது? சரி பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே தீர்மானிக்கும் உரிமையை அவர்களுக்கு யார் கொடுக்கச் சொன்னது? எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல் விலையை தீர்மானிக்கும் முடிவை பாஜக ஆட்சியிலிருக்கும் போதே எடுக்கப்பட்டுவிட்டது. அதை மிக கச்சிதமாக கடந்த ஆண்டு காங்கிரஸ் அரசு அமல்படுத்தி மக்கள் தலையில் சுமையை ஏற்றியுள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் ஐந்து ஆண்டுக்காலம் இடதுசாரிகள் ஆதரவில்லாமல் நடத்த முடியாது என்ற சூழல் இருந்த வரை காங்கிரஸ் அரசு இதுபோன்று பெட்ரோல் விலையை உயர்த்த முடியவில்லை.

எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல் விலையை தீர்மானிக்கும் உரிமை வழங்கியபோது கூட, இடதுசாரிகள்தான் கடுமையாக அம்முடிவை எதிர்த்தனர்.

தீர்மானிக்கும் உரிமையை முதலாளிகள் வசம் கொடுத்துவிட்டு தலையிட முடியாது என்று கூறுவது எப்படி நியாயமாகும்? பெட்ரோல் விலையை நிறுவனங்கள் தான் தீர்மானிக்கிறது. அரசு தலையிடாது என்கிறார்கள். டீசல், மற்றும் எரிவாயு விலையை உயர்த்தப் போவதாக செய்திகள் வருகிறது. இது எப்படி அரசே தலையிட்டு உயர்த்துமோ? இதற்கும் பழியேற்க வேண்டாம் என்றுதான் டீசல் மற்றும் எரிவாயுவின் விலையையும் அந்நிறுவனங்களே தீர்மானித்துக்கொள்ளும் உரிமையையும் வழங்க தயாராக இருக்கிறது. அப்படி செய்யுமானால் ஏற்கெனவே உச்சத்தில் உள்ள அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் உயரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பெரும் முதலாளிகளுக்கு வரித் தள்ளுபடி செய்யப்படுகிறது. ஊக்கத்தொகை என்கிற பெயரில் மானியமும் வழங்கப்படுகிறது. மக்கள் தலையில் மட்டும் சுமைகள் ஏற்றப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. இவர்களுக்கு ஓட்டுப்போட்டது மக்களா அல்லது முதலாளிகளா என்றுதான் புரியவில்லை. அவ்வளவு விசுவாசமாக நடந்து கொள்கிறார்கள் முதலாளிகளுக்கு மட்டும்...

- ஆசிரியர் குழு

Pin It