ஊழலைப் பற்றி பேசுவது இன்றைக்கு தேவையாகிவிட்டது. ஊழலைப் பற்றிப் பேசாமல் யாரும் அரசியல் நடத்த முடியாது. அதே சமயம் ஊழல் இல்லாத இடமே எங்குமில்லை. அங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்துள்ள விஷக்காற்றே ஊழல். இது வீடு, சாலை, தொழிற்சாலை, அலுவலகம், அரசியல், கோட்டை, நீதிமன்றம், ஊடகம், ஆன்மீக பீடங்கள் என எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது ஊழல்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் கமலஹாசன் நடித்த ‘இந்தியன்’ என்ற திரைப்படம் வெளிவந்தது. அதையொட்டி ஒரு விமர்சனக்கூட்டத்திற்கு நான் தலைமையேற்றேன். அப்போது அதில் பேசிய ஒரு அரசு ஊழியர் ரொம்பவும் கோபமாகக் கேட்டார். “கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளை விட்டுவிட்டு 5க்கும் 10க்கும் கைநீட்டும் எங்களை கேலி செய்வது நியாயம்தானா?” இதற்கு பதில் சொன்ன எதிர் தரப்பினர், “மற்ற நாடுகளில் சட்டவிரோதக் காரியங்கள் செய்வதற்கு மட்டுமே லஞ்சம் கேட்கிறார்கள். அதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், சட்டப்படி குடிமகனுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமானவைகளுக்குக் கூட லஞ்சம் அழவேண்டியிருக்கிறதே” என பதிலடி கொடுத்தனர்.

இரண்டு பேர் வாதத்திலும் நியாயம் உண்டு. ஊழலை பற்றிப் பேசும்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றியும் பேசலாம் அல்லது சட்டமன்றத்தில் விஜயகாந்த் பேசியதுபோல் அரசு ஊழியர்களின் லஞ்ச லாவண்யம் குறித்தும் பேசலாம். ஏனெனில், இரண்டும் ஊழல்தான். இரண்டும் சமூகத்திற்குக் கேடுதான். இரண்டும் ஒழிக்கப்பட வேண்டியதுதான். ஆனால், யார் எதை எப்போது பேசுகிறார்கள் என்பதில்தான் சூட்சுமம் இருக்கிறது.

கையூட்டு என்ற பழைய தமிழ்ச் சொல் நீண்ட நெடுங்காலமாக ஊழல், லஞ்சம் வழக்கில் இருப்பதை நமக்கு உணர்த்துகிறது. இந்தியாவில் பிரபலமாகப் பேசப்பட்ட முந்திரா ஊழல் தொடங்கி மாருதி கார் ஊழல், நகர்வாலா ஊழல், போபர்ஸ் ஊழல், ஹர்ஷத் மேத்தா ஊழல், முத்திரைத்தாள் ஊழல், வீராணம் ஊழல், டான்சி ஊழல், காமன்வெல்த் ஊழல், இப்போது 2ஜி ஊழல், ரிலையன்ஸ் ஊழல் என பலதும் அவ்வப்போது பேசப்பட்டாலும் இன்றைக்கு லட்சம் கோடிகள் என பேசப்படுகிற அளவிற்கு முன் எப்போதும் பேசப்பட்டதில்லை. ஆகவே, ஊழல் என்பது ஒரு கொடிய விருட்சமாக வளர்ந்துள்ளதை சம்பவங்கள் நிரூபிக்கின்றன. கழகங்களின் ஊழலால் தமிழகம் தடுமாறுகிறதே!இந்த ஊழல்கள் ஏன் நிகழ்கின்றன? சில சில்லறை ஊழல்கள் தனிநபர்களின் கையரிப்புக் காரணமாக நிகழ்ந்திருக்கக் கூடும். ஆனால், பெரும்பாலான மெகா ஊழல்கள் முதலாளித்துவம் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் போக்கில் உருவானதே.

முதலாளித்துவமும் ஊழலும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள். இவற்றை தனித்தனியே பிரித்துப் பார்ப்பது முதலாளித்துவத்தை பாதுகாக்கவே உதவும். அதுவும் குறிப்பாக தாராளமயம் தனியார் மயம் உலகமயம் அமலுக்கு வந்த எண்பதுகளுக்குப் பிறகுதான் மெகா ஊழல்கள் - ஹர்ஷத் மேத்தாக்கள் உருவானார்கள் என்பதை மறந்துவிடவேக் கூடாது.

பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய வளங்களை வேட்டையாடவும் இந்திய உழைப்பை சுரண்டவும் இந்த மண்ணில் காலெடுத்து வைக்கிறது. அப்போது அதற்கு உள்ளூர் மட்டத்தில் எதிர்ப்புகள் எழும் அதை ஈடுகட்ட உள்ளூர் தலைவர்கள் முதல் ஊடகங்கள் வரை அனைத்தையும் கைக்குள் போட்டுக்கொள்ள, பன்னாட்டு நிறுவனங்கள் மாபெரும் ரட்சகர்கள் என மக்களிடம் மயக்கத்தை உருவாக்க - கோடிக்கணக்கில் பணத்தை அள்ளிக்கொட்டுகிறது. ஊழலின் வேர் அதுதான்.

தற்போது உலகமயக் கொள்கையின் மோசமான மக்கள் விரோத அம்சங்களால் மக்களிடையே அதிருப்தியும் கோபமும் மேலோங்கி வருகிறபோது அதை மடைமாற்ற திசைதிருப்ப ஊழல் எதிர்ப்பை பூதாகரமாக்கி மற்றப் பிரச்சனைகளை பின்னுக்குத் தள்ள முயற்சிக்கின்றன. இதற்கு ஊடகங்கள் மனசாட்சி இல்லாமல் துணை போகின்றன.

2ஜி ஊழல் அநீதியானது. அக்கிரமமானது. கண்டிக்கத்தக்கது. தண்டிக்கத்தக்கது. இதை சொல்வதில் நமக்கு எந்த தயக்கமும் இல்லை. ஆனால், இந்தத் தொலைபேசித் துறையில் மிகப்பெரிய ஊழல் செய்த சுக்ராம் கதை என்னாச்சு? அவர் வீட்டில் கட்டுக்கட்டாக மூட்டை மூட்டையாக பணங்கள் எடுக்கப்பட்ட செய்திகள் மறந்து போச்சா? அவருக்காக நாடாளுமன்றம் மாதக்கணக்கில் பாஜகவால் முடக்கப்பட்டது மறக்கக் கூடியதா? ஆயினும் அதே சுக்ராம் பாஜக பக்கம் சாய்ந்ததும் அவர் சுத்த சுயம் பிரகாசம் ஆகிவிடவில்லையா? அவர் பாஜக ஆதரவோடு இமாச்சலப்பிரதேச முதல்வராகவும் கொள்ளையடித்தார். இது ஊழல் எதிர்ப்பு அரசியலில் ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

இதே தொலைபேசித்துறையில் அருண் ஷோரி அடித்த கொள்ளையை யாரும் பேச மறுப்பதேன்? பாஜக ஆட்சி அமைச்சரவையில் பங்கு விலக்கல் துறை என்ற ஒரு புதிய துறையையே உருவாக்கி அதன் அமைச்சராக இருந்த அருண்ஷோரி பொதுத்துறைகளை அடிமாட்டு விலைக்கு விற்று ஆர். எஸ். எஸ். ஆதரவாளர்களை கொழுக்க வைத்தக் கதையை அவ்வளவு சுலபமாக இந்திய மக்கள் மறந்துபோனது எப்படி?ரிலையன்ஸ் 500 ரூபாய்க்கு எல்லோருக்கும் செல்போன் கொடுத்தது. பல பேர் உரிய பணம் கட்டவில்லை. ஆனாலும், ரிலையன்ஸ் கம்பெனி நட்டம் அடையவில்லை. மாறாக வீங்கிக்கொழுத்தது. எப்படி? அரசின் நேரடியான மற்றும் மறைமுகமான ஆதரவு தான். ரிலையன்ஸ் அம்பானிகள் அரசாங்கத்தை ஏமாற்றுவதை மாபெரும் திறமையாக - உச்சிமீது வைத்து கொண்டாடிய ஊடகங்கள் உண்டு. அம்பானிகளை நியாயப்படுத்தி மணிரத்னம் எடுத்த ‘குரு’ திரைப்படத்தில் காந்தியோடு அம்பானியை ஒப்பிட்டுப் பேசிய வசனங்களெல்லாம் உண்டு. இப்போது அந்தப் படத்தை மீண்டும் ஒருமுறை மனதில் ஓடவிட்டுப் பாருங்கள். ஊழலின் ஊற்றுக் கண்ணாக முதலாளித்துவமே இருப்பதை நீங்கள் அனுமானிக்க முடியும்.

ஒருபுறம் லல்லு பிரசாத்தின் மாட்டுத் தீவன ஊழல், தேசம் முழுவதும் நாற்றம் எடுத்தது. லல்லு ரயில்வே மந்திரியாக பதவி ஏற்றபோது ஊடகங்கள் அவரோடு மாட்டையும் சேர்த்தே காண்பித்து லல்லுவை ஊழல் பிசாசாக சித்தரிப்பதில் வெற்றி கண்டன. அதே சமயம், ஹர்ஷத் மேத்தா குறித்தோ, லக்குபாய் பதக் குறித்தோ, சுக்ராம் குறித்தோ இப்படி ஒரு சித்தரிப்பை காண முடியாது. ஊழல் எதிர்ப்பு அரசியலில் கூட பாஜகவின் மனுதர்மப் பார்வை பளிச்சிடக் காணலாம்.

காங்கிரஸ் எப்போதுமே ஊழல்வாதிகளின் கூடாரமாகவே திகழ்ந்தது. திகழ்கிறது. இனியும் திகழும். காங்கிரசை வீழ்த்தாமல் ஊழலை வீழ்த்த முடியாது. ஆனால், இதற்கு மாற்று பாஜக அல்ல. ஏனெனில், அவர்கள் இதே சுரண்டல் கூட்டத்தின் இன்னொரு முகமே. அதுமட்டுமல்ல. மதவெறி அவர்களின் கொடூர அம்சமும் கூட.

இப்போது ஊழலை எதிர்ப்பதற்கு சிவில் சொசைட்டி என்கிற போர்வையில் அண்ணா ஹசாரே, பாபா ராம்தேவ் போன்றோர்கள் புறப்பட்டிருக்கிறார்கள். நோக்கம் வெளிப்பார்வைக்கு பவித்திரமாக தோன்றினாலும் உள்ளே ஈரும் பேனும் நெளிகிறது. பன்னாட்டு நிறுவனங்களின் படையெடுப்பால் விவசாயத்தை இழந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட போது துடிக்காத இவர்கள் திடீரென புனிதராய் காட்சி தருவது ஏன்? மதவெறிக் கலவரத்தில் பல ஆயிரம் உயிர்கள் செத்து மடிந்தபோது வருந்தாத இவர்கள் திடீரென முகம் காட்டுவது ஏன்? பன்னாட்டு மூலதனத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய் அரசு அள்ளிக்கொட்டும்போது அதனால் உள்நாட்டுத் தொழிலும் வாழ்வாதாரங்களும் சூறையாடப்படும்போது கவலைப்படாத இவர்கள் இப்போது மாவீரர்களாய் பவனி வருவது ஏன்?இப்படி அடுக்கடுக்காய் கேள்விகள் எழும். அதற்கெல்லாம் யார் பதில் சொல்வார்கள்? ஒன்றுமட்டும் நிச்சயம். ஊழல் செய்வதற்கு யார் தேவையோ, அவர்களை அரியணை ஏற்ற அதற்கேற்ப அரசியல் செய்வதும் அவர்கள் நாறிப்போகிறபோது இன்னொரு ஏஜெண்டை முன்னிறுத்த நாடகம் ஆடுவதும், சுரண்டல் கூட்டத்தின் கை வந்தக் கலை. இப்போது நாடகத்தின் இரண்டாவது காட்சி நடக்கிறது. இது ஊழலை ஒழிப்பதற்கு அல்ல. ஊழலின் ஊற்றுக் கண்ணான தாராளமயம் தனியார்மயம் உலகமயம் இவற்றிற்கு எதிரானது அல்ல. மாறாக மேலோட்டமான சில்லறை சீர்திருத்தங்களுக்காகவே நடக்கிறது.

லோக்பால் மசோதா சர்வரோக நிவாரணி அல்ல. இதற்கு முன்பு இந்த மசோதாவுக்காக இடதுசாரிகள் குரல் கொடுத்தபோது கண்டுகொள்ளாத ஊடகங்கள் இப்போது துள்ளிக் குதிப்பது அவர்களின் வர்க்கப் பாசத்தினால்தான். ஆயினும், லோக்பால் மசோதா குறைந்தபட்ச தடுப்பரணாக இருக்கும் என்பதால் இடதுசாரிகள் வரவேற்கிறார்கள். ஆனால், பிரதமர் அதற்குள் வரமாட்டார் என்பது ஏற்கக் கூடியதா?அதுமட்டுமல்ல நமது நீதிமன்றங்கள் ஊழலுக்கு அப்பாற்பட்டதல்ல. “வாங்கப்பட்ட நீதியா? வழங்கப்பட்ட நீதியா?” என்ற விவாதம் சில ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் வலுவாக வந்தது. அதை இப்போது அசை போட்டுப் பாருங்கள். வருடக் கணக்கில் வாய்தா வாங்குவதை நீதிமன்றங்கள் அனுமதிக்கின்றன. நீதிபதி தினகரன் நில மோசடி குறித்து தமிழகமே அறியும். பல நீதிபதிகள் ஊழல் புகார்களில் சிக்கியுள்ளனர். இந்நிலையில், நீதிபதிகளை கட்டுப்படுத்த அதற்குரிய தேசிய நீதி ஆணையம் அமைக்கப்படுவதும் லோக்பால் மசோதாபோல் முக்கியமானதே.

தேர்தலில் பணம் விளையாடுவது கட்டுப்படுத்தப்பட வேண்டும். இது யாரோ ஒரு தேர்தல் ஆணையரின் தனிப்பட்ட விருப்பு, திறமை சார்ந்ததாக மட்டும் இருக்கக் கூடாது. சட்டப்பூர்வமாக தேர்தல் சீர்திருத்தம் தேவை. இப்படி பல வழிகளில் ஊழலுக்கு கடிவாளம் போட முயற்சிக்காமல் திடீர் ரசம், திடீர் சாம்பார் போல் திடீரென முளைக்கும் ஹசாரேக்களும் பாபாக்களும் பிரச்சனையை திசைதிருப்ப பயன்படுவார்களே தவிர தீர்வு நோக்கி பயணிக்க உதவமாட்டார்கள்.

புரையோடிப் போயிருக்கிற சமூக ரணத்தின் குறியீடுதான் ஊழல். சமூக ரணத்தை ஆற்றுவதற்கு உரிய சிகிச்சையைத் தேடாமல் புனுகுபூசி ஊழலை மறைத்தால் ரணம் சீழாகும். நாளை பல உறுப்புகளையே வெட்டி எறிய வேண்டியிருக்கும். ஊழலுக்குப் பின்னாலும் அரசியல் இருக்கிறது. ஊழலை எதிர்ப்பவர்களுக்குப் பின்னாலும் அரசியல் இருக்கிறது. இந்த உண்மையை உணராத வரை மக்கள் அரசியலில் ஏமாளிகளாகவே இருப்பார்கள்.

சுரண்டலை பாதுகாக்கும் போலி நாடகம்

அன்னா அசாரே சிவில் சொசைட்டி என்கிற பெயரால் ஊழல் ஒழிப்பு தங்களுடைய ஏக போக குத்தகையாக பிறகடன படுத்துகிறார். இது ஆபத்தானது சிவில் சொசைட்டி என்பதில் தற்கொலை செய்து கொள்ளாத விவசாயிகள் இல்லையா? தீண்டாமையால் வதைபடும் தலித்துக்கள் இல்லையா? உலகமயத்தில் நாடோடியாக்கப்பட்டுள்ள விவசாய கூலிகள் இல்லையா? இதைப் பற்றி எல்லாம் அசாரேவிற்கு கவலை இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தைவிட தாங்களே அதிகாரம் படைத்தவர்கள் என்கின்றனர். வாக்களித்த மக்களை மடையர்களாக கருதுகிறார்கள். கிட்லர் மக்களுக்கு எதுவும் தெரியாது நான்தான் நல்லது கெட்டதை தீர்மானிப்பவன் என்றான். அவர்களின் இந்திய வாரிசுகளான (ஆர். எஸ். எஸ்)நாடாளுமன்றத்தைவிட சாமியார்கள் சபைதான் உயர்ந்தது என்கிறது. அசாரே, ராம்தேவின் போராட்டத்தை ஆதரிக்கிற அறிவுஜீவிகள் இந்த பாசிச சிந்தனையை அடையாளம் காணவில்லையா?அல்லது வேண்டும் என்றே நாடகம் ஆடுகிறார்களா. ஊழல் ஊற்றுக்கண்ணான சுரண்டலை எதிர்க்காமல் சுரண்டலை பாதுகாக்கும் ஒரு போலி நாடகம் தான் இவர்கள் நடத்துவது. இதை அறியாரவரை அரசியலில் மூடர்களாகவே இருப்போம்.
Pin It