கடவுள் எங்கும் எதிலும் இருக்கும் பரம்பொருள் என்பார்கள். தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்பார்கள். கடவுள் எப்படி கருப்பொருளாய் யாவிலும் விரிந்து, பரந்து வியாபித்து இருக்கும் என்பார்களோ, அதேபோல் தான் ஊழலும் இருக்கிறது. ஊழல் எந்த ஏற்றத் தாழ்வும் இல்லாமல் எதிலும் வியாபித்து பிரதமர் முதற் கொண்டு கடை நிலை ஊழியர் வரை எங்கும் நிலைத்து இருக்கிறது. ஊழல் என்பது தனிமனித ஒழுக்கம் என்பதை மாற்றி பொதுமைப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய வளர்ச்சிக்கு இந்த தேசத்தை 64 ஆண்டுகளாக ஆண்ட ஆட்சியாளர்களின் பெருமை மிக்க வரலாறு என்றால் மிகையாகாது.

தேசத்தில் நடந்த ஊழலை பட்டியலிடவும், ஊழலில் பங்குபெறாதவர்களை கணக்கெடுக்க வேண்டுமென்றால் அரசுத் துறைகளில் ஊழலுக்கு என்று ஒரு துறை வைத்தால் தான் கணக்கிட முடியும் என்ற அளவிற்கு எங்கும், எப்போதும் ஊழல் தாராளமாய் நடந்து கொண்டுதான் வருகிறது. ஊழலில் பங்கெடுக்காத கட்சி என்றால் பொதுவுடைமை இயக்கம் தவிர எந்த இயக்கமும் இல்லை என்று கூறும் அளவிற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஊழலில் திளைத்து இருக்கிறார்கள். ஊழலுக்கு எதிராக லோக்பால் மசோதா கொண்டுவர வேண்டும் என்றால் இந்த ஊழல் கட்சிகள் தான் அமலாக்கவேண்டும் அப்படி என்றால் இந்த மசோதா என்ன லட்சணத்தில் இருக்கும். இதற்கு முன்பு நமது அரசியல் சட்டத்தில் ஊழலைத் தடுக்க எந்த சட்டமும் இல்லாதது போல் ஒரு விதமான புரிதலை உருவாக்குகிறார்கள்.

நமது நாட்டில் உள்ள அனைத்து சட்டங்களையும் மீறுபவர்கள் ஆட்சியாளர்களும், அரசியல் வாதிகளும் தான். அதனால் தான் நமது நாட்டில் பல லட்சக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் நடந்தாலும் எந்த அரசியல் வாதிகளும் இதுவரை தண்டிக்கப்படவில்லை என்பது வரலாற்று உண்மை.

     இதுவரை யாரும் தண்டிக்கப்படவில்லை என்றால் நாட்டில் ஊழல் நடைபெறவில்லை என்று அர்த்தமா? முந்த்ரா ஊழல் துவங்கி போபர்ஸ் பீரங்கி ஊழல், இராணுவ வீரர்களுக்கு சவப்பெட்டி, காலணிகள் வாங்கியதில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், எஸ் பாண்டு ஸ்பெக்ட்ரம். ஆதர்ஷ் குடியிருப்பு, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி . . . . என பட்டியல் போட்டால் நீண்டு கொண்டே இருக்கும். 1992 முதல் இதுவரை 18 ஆண்டுகளில் மட்டும் 73 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்ததாக கூறுகிறார்கள். வெளிநாட்டு வங்களில் 200 லட்சம் கோடி ரூபாய் பதுக்கி வைத்துள்ளார்கள். ஏன் அரசு பதுக்கல் காரர்களின் பெயர்களை வெளியிட மறுக்கிறது. ஏன் யாரும் தண்டிக்கப்படவில்லை.

சாதாரண மக்கள் ஊழல் என்று சொன்னாலே இதை யாராலும் தடுக்க முடியாதப்பா, எல்லாம் திருடனா போயிட்டான். கலி முத்திவிட்டது என விரத்தியாக பேசும் அளவிற்கு அரசியலையும், அரசையும் காங்கிரசும், பா. ஜ. கவும், திமுக, அதிமுக இப்படி அனைத்து அரசியல் இயக்கங்களும் மாற்றிவிட்டார்களே இதற்கு எதிராகக் கோபப்பட வேண்டிய மிகப்பெரிய சக்தியான இளைஞர்களும், மாணவர்களும், புலம்பிக்கொண்டு இருந்தால் போதுமா?

ஊழலின் ஊற்றுக்கண்கள் எது?

திருடராய் பார்த்து திருந்தாவிட்டால்

திருட்டை ஒழிக்க முடியாது

இருக்கிறது எல்லாம் பொதுவாய்

போனால் எடுக்கிற நோக்கமும்

இருக்காது, பதுக்கர நோக்கமும் இருக்காது

என பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் தன் பாடலில் அழகாக கூறியுள்ளார். நாட்டில் திருட்டை ஒழிக்க வேண்டுமானால் அனைவருக்கும் பொதுவான சமூகமாக மாறுகிற போது திருடற நோக்கமோ, பதுக்கர நோக்கமோ இருக்காது என்றார். ஆனால் ஆட்சியாளர்கள் பெரும்பான்மை மக்களின் நலனில் அக்கறை கொள்வதைவிட சிறுபான்மையாக உள்ள விரல்விட்டு எண்னக்கூடிய முதலாளிகளின் நலனை பாதுகாக்கும் அரசாக இருக்கிறது. இதுதான் ஊழலின் ஊற்றுக்கண்ணாக உள்ளது. பெரும்பான்மை மக்களின் நலனை புறந்தள்ளிவிட்டு முதலாளிகளுக்கு சேவை செய்யும் சேவகனாக ராஜா முதல் பிரதமர் வரை செயல்படுகின்றனர். இதன் விளைவு இவர்கள் செய்த வேலைக்கு லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை சேவை கட்டணமாக (ஊழலாக) பெற்றுக் கொள்கின்றனர். இந்திய உணவு குடோனில் உணவு தானியங்களை புழு, எலி சாப்பிட்டு வீணாவதற்கு பதிலாக ஏழைகளுக்கு இலவசமாகக் கொடுங்கள் என்று உச்சநீதிமன்றம் தலையிட்டால் கூட கொடுக்கமுடியாது என்கிறார் பிரதமர். நாட்டில் 84 கோடி மக்கள் நாள் ஒன்றுக்கு 20 ரூபாய்க்கும் குறைவாகவே வருமானம் உள்ளவர்கள் என்று அரசே கூறுகிறது. ஆனால் மத்திய திட்டக்குழு துணைத் தலைவர். மாண்டேக் சிங் அலுவாலியா ஏழைகளுக்கு வழங்கப்படும் மானியங்களை நிறுத்த வேண்டும் என மாநிலங்களுக்கு அறிவுரை கூறுகிறார். யாரும் கேட்காமலேயே முதலாளிகளுக்கு பல லட்சம் கோடி ரூபாய் மானியம் வழங்குகிறார்கள் என்றால் யாரை பாதுகாக்க? நீதிபதிக்கு லஞ்சம் கொடுத்தால் குடியரசு தலைவருக்கும் பிடி வாரண்ட் கொடுப்பார்கள் என்றால் ஊழல் எந்த அளவிற்கு மலிவாக மாறியுள்ளது.

உண்மையாகவே ஊழலை ஒழிக்கவேண்டும் என்ற சிந்தனை எப்படி இந்த ஆட்சியாளருக்கு வரும். ஆளும்கட்சி அரசியல் வாதியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி ஊழலில் ஊறி திளைத்தவர்கள் உண்மையிலேயே ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற சிந்தனையா?அல்லது அரசியல் நாடகமா என்றால்? அரசியலை நாடகமாக மாற்றிவிட்டார்கள். ஊழலுக்கு எதிராக பேசக்கூடிய யாராவது 34 ஆண்டுகாலம் ஆட்சி அதிகாரத்தில் இருந்தும் மேற்கு வங்கத்தில் ஊழல் நாற்றம் எடுக்கவில்லையே அப்படி ஒரு அரசு வேண்டும் என்று சொல்கிறார்களா என்றால் கிடையாது. இடதுசாரி அரசுகளைத் தவிர அனைத்து அரசுகளும் ஊழலில் திளைக்கக்கூடிய அரசாகத்தான் உள்ளது. இதற்கு காரணம் அரசு எந்த பெரும்பான்மை மக்களின் நலனை பிரதிபலிக்கிறது என்பது தான் காரணம்.

ஊழலை ஒழிக்க என்ன செய்ய வேண்டும்?

ஊழலை ஒழிப்பதற்காக காங்கிரஸ், பா. ஜ. க, திமுக, அதிமுக போன்ற கட்சிகளெல்லாம் உண்மையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தோற்றத்தை உருவாக்க அரசியல் சித்து விளையாட்டை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் ஏதோ நியாயமான போராட்டம் போலவும், அதற்கு பா. ஜ. க வக்காலத்து வாங்குவது மிகப்பெரிய நாடகமாக நடைபெற்று வந்தது. பா. ஜ. க எத்தகைய ஊழல் பேர்வழிகள் கார்கில் போரில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு சவப்பெட்டி வாங்குவதிலும், இராணுவ தளவாடங்கள் வாங்குதிலும் எவ்வளவு பெரிய ஊழல் நடத்தியவர்கள். பாபா ராம்தேவ் ஒரு ஆர். எஸ். எஸ், காரர். சாமியார் என்றால் பொன் வேண்டாம். பொருள் வேண்டாம் என்று அனைத்தையும் துறந்தவர்கள் தான். ஆனால் பாபா ராம்தேவோ கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றக்கூடிய அரசியல் புரோக்கர் இல்லை என்றால் எப்படி பல ஆயிரக் கணக்கான கோடி ரூபாய் சொத்து, வந்தது. சாமியார் போர்வையில் நடமாடும் ஒரு சமூக விரோத பேர்வழிதான்.

இப்படியான நாடகம் தான் அன்னா ஹசாரா நடத்திய நாடகமும், “திட்டம் போட்டு திருடற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது. அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது”. என்றார் பட்டுக்கோட்டை. ஆனால் இங்கு திருடற கூட்டமும், சட்டம் போடுர கூட்டமும் ஒன்றாகவே இருக்குது என்பது தான் வேதனைக்குரிய விஷயம்.

பட்டுக்கோட்டையார் சொன்னதைப் போல இருக்கிறது எல்லாம் பொதுவாய் போனால் எடுக்குற நோக்கமும், இருக்காது அதை பதுக்கிற நோக்கமும் இருக்காது. என்பதை அரசு உணர்ந்து இந்நாட்டில் உள்ள பெருபான்மையான மக்களின் நலன்களுக்கான அரசாங்கமாக மாறினால் மட்டுமே திருட்டை ஒழிக்க முடியும்.

அதைவிடுத்து பெரும் முதலாளிகளின் நலனைமட்டுமே குறிக்கோளாக வைத்து அரசு நடைபெறுகின்ற வரை எத்தனைச் சட்டங்கள் வந்தாலும் அவை அனைத்தும் காகிதத்திலே மட்டும் தான் இருக்குமே ஒழிய அமலாக்கத்தில் வராது.

Pin It