தமிழகக் கல்வி வரலாற்றில் இப்படியொரு அவலநிலை இதற்கு முன்பு நடந்ததில்லை. இனிமேலும், நடவாதிருக்க வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமுமாகும். புத்தகங்கள் இல்லா பள்ளிகளும், பாடங்கள் இல்லா வகுப்பறைகளும் மாணவர்களிடம் எழுப்பும் சலிப்புத்தன்மையை இதுவரை தமிழகம் கண்டதில்லை. எப்போதும் நடப்பது தான் என்றாலும் இன்று நடப்பது சற்று துயரமானது. தூக்கத்திலிருந்து மிக மெதுவாக, தன்னை விடுவித்துக்கொள்ளும் குழந்தைகள் பள்ளிக்கு கிளம்பிச் செல்லும் முன்பாக வீட்டில் கேட்கும் கேள்விகளில் இன்று பெற்றோர் புதிய மனச்சுமைகளை எதிர்கொள்கின்றனர். புத்தகங்களுக்கும், கல்விக்குமான உறவின் நடுவில் அரசியல் அமர்ந்துகொண்டு செய்யும் அராஜகங்களை குழந்தைகள் புரிந்துகொள்ளத் துவங்கிய சூழலை பெற்றோர் வெறும் பதிலால் மட்டும் மறுத்துவிடமுடியாது. புத்தகங்களின் மீதான வெறுப்பு குழந்தைகளிடம் உருவாகிவிடக்கூடாது என்ற கவலையே பெற்றோர்களின் பெருங்கவலை.

அப்பா, எப்போப்பா புத்தகம் வாங்கித் தருவேநீதிமன்றத்தில் கேட்க வேண்டிய கேள்வியாக மாறிவிட்டது. குழந்தைகளின் குரல்கள் ஆட்சியாளர்களின் காதுகளுக்கு என்றுமே கேட்டதில்லை. ஆனால், அவர்களின் உத்தரவுகளால் அதிகம் பாதிக்கப்படுவது எப்போதும் குழந்தைகள் தான். எந்தவிதமான சமூகப்பயனும் இல்லாமல் வளர்க்கப்படும் வெறுப்பு அரசியல் கல்வித்துறையையும் பாதிக்கத் துவங்கிய சூழல் வளர்ந்து, இன்று பாடத்திட்டத்தில் மிக வெளிப்படையான விருப்பு-வெறுப்பு அரசியல் விளையாட்டு நடக்கத்துவங்கியிருக்கிறது. எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளவோ, சகித்துக்கொள்ளவோ இயலாத செயல்கள் இவை.

சமச்சீர் கல்வியென பெருமையுடன் பேசத் துவங்கி பொதுப்பாடத்திட்டத்தை மட்டும் அறிவித்துவிட்டு இது தான் சமச்சீர் கல்வியென புது வியாக்கியானம் கொடுத்தவர் அதிலும் செய்த தவறுகள் பல. முழுமையான சமச்சீர் கல்வியை முந்தைய திமுக அரசு முறையாக விவாதித்து அமல்படுத்தத் துவங்கியிருந்தால் இன்று இந்த நிலை ஏற்பட்டிருக்காது. தனது ஆட்சிக்காலத்தின் கடைசி ஐந்தாவது ஆண்டில் தயாரிக்கப்படும் பாடத்திட்டத்தில் தன் சாதனைகளையும், தன் வரலாற்று பெருமைகளையும் கூடவே தன் கவிதையையும், தன் மகளின் கவிதையையும் இணைக்க வேண்டுமென ஒரு முதல்வர் நினைப்பது எந்த வகையில் நியாயமாக இருக்கமுடியும்? துளி கூட அரசியல் பண்பாடு இல்லாத இச்செயல்தான் இன்றைய பிரச்னையின் ஒரே காரணமென்ற முடிவுக்கும் நாம் வந்துவிட முடியாது. மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு தன்னுடைய பாணியிலான அதிரடி அரசியல் நடவடிக்கையை கல்வித்துறையில், குறிப்பாக பாடத்திட்டத்தில் எடுக்கும் என வாக்களித்த யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

முதலில், பதினைந்து நாட்கள் பள்ளித்துவங்கும் தேதியை தள்ளிவைத்து அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அரசு மாணவர்களின் கல்வியைப்பற்றி கவலை கொண்டிருந்தால், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று பொதுப்பாடத்திட்டத்தை அமல்படுத்திருக்கவேண்டும், சட்டத்திருத்த மசோதாவை நிறுத்திவைத்திருக்கவேண்டும். அரசின் பிடிவாதம் மற்றும் கௌரவத்தை விடவும் மாணவர்களின் கல்விநலனும், மனநலனும் மிக முக்கியம். ஆனால் உச்சநீதிமன்றம் சென்ற தமிழக அரசு, மீண்டும் செய்த தவறால் அரசு யார் பக்கம் என்ற சந்தேக விதையையும் மக்கள் மனதில் தூவி உள்ளது. கல்வியாளர்கள் என்ற தகுதியை இரண்டு தனியார் கல்வி நிறுவன அதிபர்களுக்கு வழங்கியுள்ளதன் மூலம் பொதுப்பாடத்திட்டம் அமலுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு மட்டுமல்ல, அரசு பெற்றோர்களுக்கு ஆதரவாக செயல்படுமா அல்லது தனியார் கல்வி நிலையங்களுக்கு ஆதரவாக செயல்படுமா என்ற விவாதமும் இப்போது துவங்கியுள்ளது. அரசு நடுநிலையானது என்று சொன்னால் அந்த நிலைபாடு போலித்தனமானதென நாமறிவோம்.

அரசின் நோக்கத்தை விளக்கியும், பாராட்டியும் பேசுவது மட்டுமல்ல, முதல்வருக்கு பாராட்டு விழா என்ற அளவிற்கு தனியார் பள்ளிகள் அறிவிப்பது அரசின் சார்புநிலையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. ஏனெனில் தனியார் பள்ளிகளின் கட்டணக்கொள்ளைக்கு எதிராக பெற்றோர்கள் வீதிக்கு வந்து போராடிக்கொண்டிருக்கும் நிலையில் வாக்களித்த வாக்காளர்களான பெற்றோர்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டிய சூழலில் அரசை தனியார் பள்ளிகள் வானுயர புகழ்வதும், அரசு அவர்களை கல்வியாளர்கள் என அங்கீகரிப்பதும் ஆரோக்கியமான கல்விச்சூழலுக்கு உகந்ததல்ல. சர்ச்சைக்குரிய பாடத்திட்டம் என்பது மட்டும் இப்போதைய பிரச்னையல்ல என தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ள விவாதங்களின் பின்னணியில் உள்ள இத்தகைய கேள்விகளை அச்சங்களாக, நாளைய அவலங்களாக மாற்றாமல் அகற்ற வேண்டியது தமிழக அரசின் கடமை. பொதுப்பாடத்திட்டத்தை அமல்படுத்திக்கொண்டே முழுமையான சமச்சீர் கல்வியை அமல்படுத்த அரசு மக்களிடையே கருத்தறிய முயலுமானால், மக்களிடம் பெற்ற நம்பிக்கையை புதிய அரசால் தக்கவைத்துக்கொள்ள இயலும். இல்லையெனில் அரசுக்கு எதிராக மக்கள் எழுச்சி உருவாவதை தவிர்க்க இயலாது. ஏனெனில் இன்று கல்வி ஒரு அரசியல் பொருளாதார பிரச்னை என மக்கள் உணரத் துவங்கிவிட்டார்கள்.

- ஆசிரியர் குழு
Pin It