சுதந்திரக் கனல் தேசமெங்கும் வீசியடித்துக் கொண்டிருந்தது. இளைஞர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் என அனைத்து மக்களும் தமது கடமையை ஆற்றிட களத்தில் குதித்தனர். தேசம் முழுவதும் ஒரே குரலில் “சுதந்திரம்” என்ற ஒற்றை வார்த்தையில் உயிரை சுவாசித்துக் கொண்டிருந்தனர். 18 வயதில் பி.யு.சி படிப்பை முடித்த .ஆர்.எஸ்.ஜேக்கப் அவர்களுக்கு கிறிஸ்தவ மிசினரி பள்ளிக்கூடத்தில் வாத்தியாராக பணியாற்றிட அழைப்பு வந்தது அவரும் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார். ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பண்ணையூர் கிராமத்தில் ஆசிரியராக பணியாற்றிட தயாரானார். பண்ணையூர் கிராமத்தில் ஏழை, எளிய பிள்ளைகள் படிக்க பள்ளிக்கூடம் துவங்கிட ஏற்பாடு செய்ய வேண்டுமென ஆவலோடு ஊர் ஜமீனை சந்தித்தார். ஏழை சாதி பசங்க பள்ளிக்கூடம் போனா மாட்டுத் தொழுவத்துல உங்க அப்பனா வேலை பாப்பான்? என்ற ஜமீன் பதில் அவரை காயப்படுத்தியது. ஜமீனுக்குத் தெரியாமல் தலித் மக்கள் தெருவில் கிணற்றடியில் கூரை வேய்ந்து பள்ளிக்கூடம் ஒன்றைத் துவங்கினார்.

வீடு, வீடாகச் சென்று குழந்தைகளை தேடிப்பிடித்து மாணவனாக்குகிறார். நாளாக ,நாளாக ஜமீன் வீட்டு மாட்டுத் தொழுவத்தில் வரும் வேலையாட்களின் எண்ணிக்கை குறைகிறது. எண்ணெய் தேய்த்து, சுத்தமான ஆடையுடன் அப்பாவின் சுடு சொல்லுக்குப் பயந்து சில குழந்தைகள் மட்டும் வேலைக்கு வந்து கொண்டிருந்தது. ஜமீனுக்கு இது புதிதாக தெரிகிறது. ஊரில் என்ன நடக்கிறது என விசாரிக்கிறார். கோபம் கொப்பளிக்க வாத்தியாரைத் தேடுகிறார். பண்ணையூரிலிருந்து தப்பித்து ஸ்ரீவைகுண்டம் வருகிறார் வாத்தியார். பின் பஸ் பிடித்து வீடு போய்ச்சேருகிறார். கலெக்டருக்கு புகார் எழுதினார்,காவல் நிலையத்திலும் புகார் கொடுக்கிறார்.எந்த சொல்லும் அம்பலம் ஏறவில்லை. கிறிஸ்தவ மிசினரியினர் வேறு பள்ளிக்கு வாத்தியாரை மாற்றிட அவரிடம் கேட்டனர். பண்ணையூர் மக்களை பிரிய மனமில்லாத ஜேக்கப் அரசு, நிர்வாகம் எதுவும் உடன் இல்லாத போதும் தனியொருவராக மீண்டும் பள்ளிக்கூடத்திற்கு திரும்புகிறார். பள்ளி சாம்பலாகி இருந்தது.தலித் மக்கள், நிலைமையை வாத்தியாருக்கு புரிய வைக்க முற்பட்டனர். அதற்குள் நான்கைந்து குண்டர்கள் வாத்தியாரை ஜமீன் வீட்டுக்கு தூக்கிச் சென்று ஜமீன் முன்னிலையில் அடித்தனர். பின் குற்றுயிராக சாலையில் வீசப்பட்டார்.

நினைவுதிரும்பி கண் விழித்துப் பார்த்தபோது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எதுக்குப்பா இந்த வேலையெல்லாம் உனக்கு? தாழ்ந்த சாதிப் பசங்க படிச்சா என்ன, படிக்காட்டா என்ன? நீ பாட்டுக்கு மாச மாசம் ஜமீன் வீட்டுக்கு வந்து நல்லா சாப்புட்டு பள்ளிக்கூடம் நல்லா நடக்குதுனு எழுதி வாங்கிட்டு போய்ட வேண்டியதுதானே. பக்கத்தில் காவல்துறை அதிகாரி பின் குரல் கணீர் என கேட்டது. ஆஸ்பத்திரியில் அவரைப் பார்க்க வந்த சிகப்புத் துண்டுக்காரர் பாலதண்டாயுதம் ஜேக்கப்பின் கையைப் பிடித்து, அருகில் அமர்ந்து பரிவோடு விசாரித்தார். வாத்தியார் நடந்ததைச் சொன்னார். நீ நல்லா ஓய்வெடு அப்புறமா வந்து சந்திக்கிறேன் என விடை பெற்றார் பாலதண்டாயுதம்.

பண்ணையூரில் நடந்தவை வாத்தியாரின் மனதை விட்டு அகலவில்லை. தூக்கம் வராமல் கொட்ட கொட்ட விழித்தபடியே படுத்திருந்தார். பண்ணையூரில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் பிறப்பது பெண்ணாக இருந்தால், அப்பெண் வயதுக்கு வந்த பின் ஜமீன் வீட்டிற்குள் விட்டுவிட வேண்டும். பெண்ணின் வீட்டிற்குத் தேவையான அளவு கம்பும், வரகும், திணையும் வாராவாரம் வந்து விழும். இப்பெண்கள் திரும்பி வரும் வரை சாப்பாட்டுக்கு பஞ்சமே இல்லை என சந்தோசப்பட்ட குடும்பங்கள் அதிகம்.

பாலதண்டாயுதமும் மற்றும் சில தோழர்களுடனான தொடர்பு வாத்தியாருக்கு உள்ளுர் சமூகப் பிரச்னைகள் முதல் வெள்ளை அரசின் அடையாளம் வரை அத்துபடியானது. தென் மாவட்டங்களில் வெள்ளை அரசை எதிர்த்து பெரும் கலகம் நடந்து கொண்டிருந்தது. ரயிலைக் கவிழ்க்க சிகப்புக்காரர்கள் முடிவு செய்து விட்டார்கள். ரயில் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. தோழர்கள் தலைமறைவாயினர்.

தலைமறைவான தோழர்களுக்குக் கோழி அடித்து சாப்பாடு போட்டார். சில நாட்கள் தலைவர்களுக்கு தன் வீட்டில் தஞ்சம் கொடுத்தார் என நெல்லை சதி வழக்கில் பதினெட்டாவது குற்றவாளியாக கைது செய்யப்பட்டார் வாத்தியார் ஆர்.எஸ்.

ஜேக்கப். அவர் வீட்டில் சதித் திட்டம் தீட்டப்பட்டதாக வழக்கு புனையப்பட்டது. கிறிஸ்தவப் பாதிரியார் ஆர்.எஸ் .ஜேக்கப் கைது செய்யப்பட்டு ஒன்றரை வருடம் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் தோழர்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியரானார். (இப்போது உள்ள சிறையல்ல) அவரின் சிறை அனுபவங்களை பதிவு செய்துள்ளார். எத்தனை எத்தனை கொடும் சித்திரவதைகள், எண்ணற்ற இழப்புகள் என எதிர் கொண்டு பெற்ற சுதந்திரத்தை பாதுகாத்திட ஒன்றிணைவோம்.

Pin It