இப்போதெல்லாம் மாஸ்டர் கார்டு, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுகள் மூலமாகத்தான் காணிக்கைகளை ஏற்றுக்கொள்கின்றனர் புதிய கடவுளர்கள். கலியுகத்தில் கல்கி அவதாரம் என்ற ஒரு இறுதி அவதாரத்தை கடவுள் எடுப்பார் என்ற கூற்றை பொய்யெனெ ஆக்கிவிட்டனர் புதிய கடவுளர்கள். ஆம், பல அவதாரங்களை ஒரே நேரத்தில் கடவுள் எடுத்துள்ளதாகத்தான் இன்று நாம் நம்ப வேண்டியுள்ளது. கடவுளின் ஆசி பெற்றவர் என்று ஆரம்பத்தில் கூறிக்கொள்ளும் இவர்கள் நாளடைவில் தன்னையே கடவுள் அவதாரமாக கூறத்துவங்குகின்றனர். நம்பத்துவங்கும் மக்கள் காலடியில் விழுந்து கிடப்பதோடு மட்டுமல்லாமல், கோடிக்கணக்கில் பணத்தையும் காலடியில் கொட்டத் துவங்குகின்றனர். நித்யானந்தா, மாதா அமிர்தானந்தமாயி, மட்டுமல்லாது ஆன்மிகத்தின் பெயரால் செயல்படும் பல தனிநபர்களையும், அனைத்து சாமிகளின் ஆசிரமங்களையும் அவர்கள் நடத்தும் கோயில்களின் வருமானத்தையும் கணக்கிட்டால் பல லட்சம் கோடிகள் தாராளமாய் கிடைக்கும். ஆனால் கடவுள் கோபித்துக்கொள்வார் என அரசே ஒதுங்கிப்போகும் சம்பவங்கள் தான் இன்று நடந்துகொண்டிருக்கின்றன.

இவ்வரிசையில் இல்லாவிடினும், இத்தோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டிய விசயம்தான் திருவனந்தபுரம் கோயிலின் புதிய சொத்து விபரங்கள். ஏழுமையான் சொத்து மதிப்பே 40,000 கோடி என்பதால் அம்பானி, டாட்டா ஆகியோர்களையும் மிஞ்சி பெரும் பணக்காரராய் ஆகிவிட்டார் பத்மநாப சுவாமி.

இது அனைத்தையும் வைத்து கடவுள் என்ன செய்யப்போகிறார்? கோயில் திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு சொந்தமானதால் மன்னர் மார்த்தாண்ட வர்மா இதை இப்படி சம்பாதித்திருப்பார்? மக்கள் மீது போட்ட வரி மற்றும் தண்டம் அனைத்தும் தங்கமாக வசூலிக்கப்பட்டது மட்டுமல்ல போர் மூலமாக கைப்பற்றப்பட்ட மற்ற நாட்டு(அதுவும் மக்கள் தங்கம் தான்) தங்கமும் சேர்ந்தது தான் இவை. இக்காலத்தில் ஸ்விஸ் வங்கியெனில் அக்காலத்தில் கோயில்தான் பாதுகாப்பறைகள். அதனால்தான் அனைத்து மன்னர் காலம் முதல் பிரிட்டிஷ் காலம் வரை போரில் வென்றவுடன் கோயிலை கொள்ளையடித்தனர். எனவே இது மக்கள் சொத்து தான் என ஏன் மக்களிடம் விவாதம் நடைபெறவில்லை?

பதில் ஒன்று தான் கொள்ளையடிக்கலாம், கொலை செய்யலாம், பாலியல் குற்றம் கூட செய்யலாம். ஆனால் கடவுள் ஆசி பெற்றவன் நான் என சொல்லத் தெரிந்திருக்க வேண்டும். சரி விசயத்திற்கு வருவோம். இந்த பணத்தையெல்லாம் எடுத்தால் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் இலவசக்கல்வியும், நல்ல சுகாதார வசதியும் நிச்சயமாய் தரமுடியும்.

வசதி படைத்தவருக்கும், அவர் பெயரை பயன்படுத்துவோருக்கும் மேலும், மேலும் வசதி செய்துதருவதும், அதே நேரத்தில் ஏழைகளையும் கைவிடாமல் மேலும் மேலும் சோதனைகளை தருவதுமே கடவுளின் அருள் எனில்,அடக்கடவுளே..,

Pin It