வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ? என்பது மகாகவி பாரதியின் வாக்கு. விடுதலை வேட்கையின் வெளிப்பாடுகளை தமது இளம் வயதிலேயே ஒரு புயலின் வலிமையோடும், சீற்றத்தோடும் வெளிப்படுத்தியவர்கள் ஏராளமான பேர். அத்தகைய வீர இளைஞர்களின் பெயர்களைப் பட்டியலிட்டால் முடிவற்று நீளும்.

இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கு மேல் நீடித்தது அந்நியர் ஆதிக்கம். டச்சு, பிரெஞ்சு, பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிகளின் வணிக ஆதிக்கம் முதலிலும், பிறகு பிரிட்டிஷ் அரசாட்சி நேரடியாகவும் நமது இந்திய நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருந்தன. இந்திய சமஸ்தான மன்னர்களும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாளையக்காரர்களும் ஆங்கிலேயருக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தனர். 1806ல் வேலூர் கோட்டையில் இந்தியப்படை வீரர்களின் எழுச்சி நிகழ்ந்தது. இந்திய அளவில் 1857ல் முதல் (சிப்பாய்க் கலகம் என்றழைக்கப்படுகிற) விடுதலைப் போர் நடைபெற்ற வரலாற்றை நாடறியும். ஆனால், தமிழ்நாட்டில் வடக்கே வேலூரிலும், தெற்கில் சிவகங்கை, காளையார்கோயில், எட்டயபுரம், சேத்தூர், திருவாடனை போன்ற சிறு சிறு பாளையப் பகுதிகளிலும் நடைபெற்ற ஏராளமான போர்கள், அவற்றில் உயிர்த்தியாகம் செய்த எண்ணற்ற வீர இளைஞர்களின், இளம்பெண்களின் தியாக வரலாறுகளை இந்தியாவின் பிற மாநிலங்கள் போதுமான அளவு அறிந்து கொள்ளவில்லை என்றே சொல்ல வேண்டும்.

இந்திய விடுதலைப் போரில் நாடறிந்த இளைஞர்களின் பெயர்களில் முதல்வரிiசைப் பட்டியலை நினைவுபடுத்திக் கொள்வோம். சுபாஷ் சந்திர போஸ், சந்திரசேகர் ஆசாத், பகத்சிங், சுகதேவ், ராஜகுரு, சூர்யா சென், கல்பனா தத், சிவவர்மா, குதிராம் போஸ், உத்தம்சிங், சுரேந்திரநாத் ஆர்யா, கணேஷ்கோஷ், பிரீதி லதா, வ.வே.சு. ஐயர், சுப்பிரமணிய சிவா, வாஞ்சிநாதன், தீரன் சின்னமலை, கட்டபொம்மன், ஊமைத்துரை, ஒண்டிப் பகடை, பின்னாளில் கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களாய் ஆன ஹர்கிஷன் சிங் சுர்ஜித், பி. ராமமூர்த்தி, இ.எம்.எஸ். நம்பூதிரிபாத், கையூர்த் தோழர்கள் சிருகண்டன், அப்பு, குஞ்சம்பு, அபுபக்கர் அன்று குட்டி கிருஷ்ணனாக இருந்த காரணத்தால் தூக்குக் கயிற்றிலிருந்து தப்பி பின்னாளில் கேரள முதல்வராகப் பொறுப்பு வகித்த இ.கே. நாயனார், இப்படியான எண்ணற்ற பெயர்கள் நினைவுகளில் பிரவகிக்கும்.

1946ல் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியின் சவப்பெட்டியில் இறுதி ஆணியாக அறையப்பட்ட கப்பற்படை எழுச்சியில், ஊரறியாமல், பெயரறியாமல் உயிர்த் தியாகம் செய்த இளைஞர்கள் எத்தனையோ பேர்?

சிட்டகாங் ஆயுதக் கிடங்கைத் தகர்த்தெறிந்த சூர்யா சென், கல்பனா தத் போன்றோரின் வரலாறும், தெற்கே சிவகங்கை மண்ணில் வெள்ளையர் ஆயுதக் கிடங்கை அழிப்பதற்குத் தன் உடல் முழுவதும் நெய்யைப் பூசி எரியூட்டிக் கொண்டு தற்கொலைத் தாக்குதல் நடத்திய இளம்பெண் குயிலி நாச்சியாரின் வரலாறும் நம் இதயச்சுவர்களில் கல்வெட்டுகளாய் பதிந்திருக்க வேண்டியவை. சிறையில் அடைபட்டோரின் உரிமைகளுக்காக உண்ணா நோம்பு மேற்கொண்டு 65 நாட்களுக்கு மேல் பட்டினிப்போர் நடத்தி உயிரையே தியாகம் செய்த யதீந்திரநாத் தாஸின் தியாகத்தை யாரால் மறக்க முடியும்?இப்படியான பெயர்கள் ஒவ்வொன்றுக்கும் பின்னால் ஒரு வீர வரலாறு இருக்கிறது. இவ்வரலாறுகள் அனைத்தையும் நாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் திரும்பத் திரும்ப எழுதியிருக்கிறோம், பேசியும் இருக்கிறோம். லூதியானாவில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க அமைப்பு மாநாட்டில் சிவவர்மா வருவதாக இருந்தார். உடல்நலக் குறைவால் வர இயலாத நிலை, பகத்சிங்கின் சகாவான அவரும், இன்னொரு தோழரான கணேஷ் கோஷும் பகத்சிங், சுகதேவ், ராஜகுருவின் பரம்பரையின் வாரிசுகளாக டி.ஒய்.எப்.ஐ தோழர்களை இனங்கண்டு பெருமிதப்பட்டார்கள். கையூர், பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிராக இளம் விவசாய இயக்கத் தோழர்கள் நான்கு பேரைக் களப்பலியாக்கிய வீரம் விளைந்த நிலம். அந்த வரலாற்றின் அழியாத நினைவுகளைக் காவியமாக்கி நிலைத்திருக்கும். ‘சிரஸ்மரண’ (நினைவுகள் அழிவதில்லை) நாவல் எழுப்புகிற கேள்வியை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

“கையூர்த் தியாகிகள்” கோவை சின்னியம் பாளையத் தோழர்கள் போன்ற பல வீர இளைஞர்களின் தியாக நினைவுகள் ஊட்டுகின்ற உணர்வுகள் எவை? நீர் நீறைந்த கண்கள் மட்டுமா? இல்லை. ஓங்கி உயர்த்திய கரங்களும்தான்!சரியான, தீர்க்கமான அரசியல் கொள்கைகளின் அடிப்படையிலமைந்த ஒரு புரட்சிகரமான திட்டமில்லாமல், வெறுமனே கரங்களை உயர்த்தி வீரமுழக்கங்களை எழுப்புவது என்ன விளைவுகளை ஏற்படுத்தி விடும்? கடந்த 60 ஆண்டுகால இந்திய சமூகத்தின் பயணம், ஒரு சோகக் கதையாக அல்லவா இருக்கிறது..? ‘புண்ணிய பூமி’ எனப்போ(பீ)ற்றிக் கொள்ளும் இந்தியா இருவேறு இந்தியாக்களின் சங்கம பூமியாகி விட்டது. ஒன்று இந்தியாவின் செல்வாதார வளங்கள் அனைத்தையும், கோடானு கோடி ஏழை மக்களின் உழைப்பையும் கொள்ளையடித்துச் சுரண்டிக் கொழுத்து சுகபோகத்தில் மிதக்கின்ற ‘ஒளிரும் இந்தியா’ மற்றொன்று, அன்றாட அடிப்படைத் தேவைகள் கூட நிறைவேறாமலே நாளும் பசியால் செத்து, நலிந்து ஒடுங்கித் தற்கொலை செய்யும் ‘ஏழை இந்தியா’

“எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான இடம்நோக்கி நடக்கின்ற திந்த வையம்..”என்ற புரட்சிக் கவி. பாவேந்தர் பாரதிதாசனின் கனவு நனவாகவில்லை. மாறாக அடிப்படை வாத, மதவாத, பிற்போக்கு சக்திகள் வரலாற்றுச் சக்கரத்தையே பின்னுக்கு இழுத்துக் கொண்டு போகின்றன. புதுயுகம் காணப் புறப்பட்டு, இலட்சியங்களுக்காக உயிரைத் துச்சமாக மதித்துப் போரிட்ட அன்றைய இளைஞர் சமுதாயத்தின் வீரம், உயர் மாண்புகள், அர்ப்பணிப்பு உணர்வு இவை எல்லாம் எங்கே போயின? என்ன ஆயிற்று நம் இளைஞர் பெருமக்களுக்கு?எங்கேயும் போய் விடவில்லை! எதுவும் ஆகிவிடவும் இல்லை! இப்போது மீண்டும் ஒருமுறை அந்த வீரவரலாற்றுப் பாரம்பரிய நினைவுகளை நெஞ்சில் சுமக்க வேண்டும். அதே உணர்வு வெள்ளத்தைப் பீறிட்டு எழச் செய்யவல்ல ஓர் ‘ஊற்றுக்கண் திறப்பு’ உடனடியாக நடைமுறைக்கு வேண்டும். இந்தப் பணியை நிறைவேற்ற, விடுதலைப் போராட்ட காலத்தில் செயல்பட்ட இளைஞர் இயக்கங்களின் வீரவரலாற்றுச் சம்பவங்களிலிருந்து முக்கியமான படிப்பினைகளைத் தொகுத்து நம் கவனத்தில் பதித்துக் கொள்ள வேண்டும்.

பகத்சிங்கே சொன்னது போல தூக்கு மேடைகளில் உயிரை விடுவது ஒரு வகையில் மிக எளிது. சட்டென்று ஒரு நொடி போதும். உலகளாவிய புகழ் உடனே கிடைத்து விடும்! ஆனால், ஒரு புரட்சிகர இளைஞர் இயக்கத்தின் இலட்சியங்கள் இறுதி வெற்றியடையும் வரையில், சலிப்பூட்டுகிற அதன் அன்றாட நடைமுறைப்பணிகளைச் சலிப்படையாமல் ஈடுபாட்டுடன் செய்து வருவதற்குத் தான் மிக மிக உறுதியான வைரம் பாய்ந்த மனம் தேவை! இப்பணிகளைத் தொடர்ந்து செய்து வருபவர்களின் பெயர்கள் கூட வெளியே தெரியாமல் போய் விடலாம். ஆனால், தூக்குமேடைத் தியாகிகளின் பணிகளை விட, இந்த அன்றாடப் பணிகளின் பெருமை ஒன்றும் மாற்றுக் குறைவானதல்ல..! வன்முறை மட்டுமே புரட்சியாகி விடாது. அது புரட்சியின் பலிபீடத்தில் தவிர்க்க முடியாத வகையில் இறுதிக் கட்டத்தில் நிகழக்கூடும். ஆனால், அதுவல்ல புரட்சி. துப்பாக்கியும், வெடிகுண்டுகளும் மட்டும் அல்ல புரட்சி. மனித இரத்தம் சிந்தப்படுவது எதன் பொருட்டு என்றாலும் வேதனை தரக்கூடியதுதான். மிக மிகக் குறைவாகவே மனித இரத்தம் சிந்தப்பட வேண்டும்.

இந்தக் கருத்துகளைக் சொல்லிருப்பது வேறுயாருமல்ல, தூக்குமேடையில் உயிர்த்தியாகம் செய்த ‘இளம் தளபதி’ பகத்சிங்கேதான்! காந்திக்கு இணையாக சில சமயங்களில் காந்தியை விடவும் அதிகமாகப் புகழ் பெற்றிருந்தவர், இந்தியாவில் அன்றைய நாளில் பகத்சிங் ஒருவர் மட்டுமே. இதைப் பதிவு செய்திருப்பவர் ‘காங்கிரஸ் சரித்திரம்’ எழுதிய பட்டாபி சீத்தாராமய்யா! இந்தப் புகழ், பகத்சிங்கின் தெளிவான தியாகம் நிரம்பிய, தீர்க்க தரிசனமிக்க சோஷலிஸக் கொள்கைகளாலும், அந்த இலட்சியத்திற்காக உயிரையும் அர்ப்பணித்த வீரத்தாலுமே கிடைத்தது!மதநம்பிக்கைகள், இறை உணர்வுகள் என்பதெல்லாம் தனிநபர்களின் உணர்வுப் பிரச்சனை, அவற்றுக்கு உரிய மதிப்பளிப்பது புரட்சிகர இயக்கங்களின் கடமை. அதே சமயம் மதவாத அடிப்படைவாத அமைப்புகளிலிருந்து விடுதலை இயக்க இளைஞர்கள் விலகியே இருக்க வேண்டும். அத்தகைய அமைப்புகளின் உறுப்பினர்கள் முற்போக்கான புரட்சிகரமான இளைஞர் அமைப்புகளில் உறுப்பினர்களாகச் சேர்க்கப்படக் கூடாது என்று ஒரு விதி செய்தார் பகத்சிங்.

தனிநபர்களின் வீரதீரச் செயல்களால் மட்டும் ஒருநாடு விடுதலையடைந்து விட முடியாது. ஆனால், நாட்டு மக்கள் அனைவரின் உணர்வுகளையும் தட்டியெழுப்பி செயல்படச் செய்வதற்கு இத்தகைய செயல்கள் மிக முக்கியமான பங்காற்றுகின்றன. சிட்டகாங் எழுச்சியும், பகத்திங்கின் இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசுக் கழகம் நிகழ்த்திய பல செயல்களும் அத்தகையவையே!வெறும் அரசியல் விடுதலையடைவது மட்டுமே அன்றைய இளைஞர் இயக்கங்களின் இலட்சியமாக இருந்திருக்கவில்லை. இந்திய நாட்டின் பொருளாதார விடுதலையும், இச்சமூகம் சமத்துவ சோஷலிச சமூகமாக மலர்வதுமே அன்றைய இளைஞர்களின் இலட்சியக் கனவு.

நாட்டு மக்கள் அனைவரும் கல்வி பெறும்வரை முழுமையான விடுதலை சாத்தியமில்லை என்பதை உணர்ந்திருந்தவர்கள் அன்றைய இளைஞர்களும், அவர்கட்கு வழிகாட்டிய தலைவர்களும். எனவேதான் சிறைக்கொட்டடிகளில் வாடிய போதும் கல்வி கற்பதை, கற்றுத் தருவதை அவர்கள் கைவிடவேயில்லை. காந்தி, கோகலே, லாலா லஜபதிராய், ஜோதிபா மற்றும் சாவித்திரி பூலே, அம்பேத்கர் உள்ளிட்ட பல தலைவர்கள் தாமே ஆசிரியர்களாயிருந்து எழுதப்படிக்கத் தெரியாதவர்களுக்குக் கல்வி கற்றுத் தந்தார்கள். கல்வி நிலையங்களை நிறுவி வழி காட்டியிருக்கிறார்கள்! முழு எழுத்தறிவு பெற்ற சமூகமே முழுமையான விடுதலை பெற்ற சமூகமாக மலர முடியும் என்பதே உள்ளடக்கச் செய்தி.

அன்றைய புரட்சிக்கார இளைஞர்களில், உயிர்த்தியாகம் செய்தவர்கள் தவிர, அனேகமாக மற்றவர்கள் எல்லாருமே பிற்பாடு கம்யூனிஸ்ட் இயக்கத்தில்தான் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். வாழ்நாளில் இறுதி வரை கம்யூனிஸ்டு இயக்கப் பணிகளிலேயே ஈடுபட்டிருந்திருக்கிறார்கள். இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம், இந்திய மக்கள் நாடக மன்றம் ஆகிய அமைப்புகளின் தாக்கத்திற்குட்படாத எந்த ஒர் எழுத்தாளரும் கலைஞரும் அன்றைய இந்தியாவில் இருந்ததில்லை!ஆனால், இன்று..? முற்போக்கு, சமத்துவம், சோஷலிசம், சமூகநீதி, பகுத்தறிவு இத்தகைய வார்த்தைகளை உச்சரிப்பதே பாவம் என்கிற மாதிரியான மனநிலைக்கு இளைஞர்கள் ஆளாக்கப்பட்டு வருகிறார்கள்.

உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் போன்ற கொள்கைகளின் விளைவாக இன்று நாடே அந்நிய கார்ப்பரேட் நிறுவனக் கொள்ளைக்காரர்களின் வேட்டைக்காடாகிவிட்டது. இந்த அசுரப்பிடியிலிருந்து இந்திய நாட்டை விடுவித்து, உண்மையான அர்த்தத்தில் ‘விடுதலை பெற்ற’ நாடாக ஆக்குவது நம் கடமை. அத்தகைய விடுதலை வேண்டி வீறு கொண்டு எழுவோம். களத்தில் நிற்போம்!

Pin It