தமிழ் இலக்கியக் களத்திற்கு இலங்கையிலிருந்து இருபெரும் ஆளுமைகள் கிடைத்தனர். ஒருவர் கனகசபாபதி கைலாசபதி. மற்றொருவர் கார்த்திகேசு சிவத்தம்பி. முன்னவர் 1933 ஆம் ஆண்டு கோலாலம்பூரில் பிறந்து இலங்கையில் வளர்ந்தவர். பின்னவர் 1932ஆம் ஆண்டு இலங்கையில் பிறந்து அங்கேயே வளர்ந்தவர்.

இருவரும் சமகாலத்தவர் என்றாலும் கைலாசபதி 50 ஆண்டுகள் கூட வாழாமலேயே இவ்வுலக வாழ்வை நீத்தவர்.இருப்பினும் அந்த காலகட்டத்திற்குள்ளேயே இலக்கிய ஆய்வுலகில் பெரும் புகழ் ஈட்டியவர். சங்க இலக்கியங்களை மார்க்சியப் பார்வையிலும் ஒப்பியல் நோக்கிலும் ஆய்வு செய்து புத்தொளி பாய்ச்சியவர். சிவத்தம்பியோ, இலக்கியங்களோடு கூடவே நாடக அரங்கு, திரைப்படம், மொழியாக்கம் என பிற துறைகளிலும் கவனத்தைச் செலுத்தியவர்.

கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோரின் மார்க்சிய ஆய்வுக்கு அடித்தளம் அமைத்துத் தந்தவர் ஜார்ஜ் தாம்சன். இவர் லண்டனில் உள்ள பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த பேராசிரியர் ஆவார். கிரேக்க இலக்கியத்தில் ஆழ்ந்த ஈடுபாடும், ஒப்பியல் ஆய்வில் மிகுந்த ஈடுபாடும் கொண்டிருந்த மார்க்சியரான ஜார்ஜ் தாம்சன் தமது மாணவர்களையும் அவ்வாறே உருவாக்கினார்.

“தமிழ் வீர யுகப்பாடல்கள்” என்ற தலைப்பில் கைலாசபதியும் “பண்டைத் தமிழ்ச் சமுதாயத்தில் நாடகம்” என்ற தலைப்பில் சிவத்தம்பியும் முனைவர் பட்டத்திற்கான ஆய்வு மேற்கொண்டனர்.ஆய்வுத் தலைப்புகளே இவர்களின் உள்ளக்கிடையை தெள்ளத் தெளிவாக்கும். இலங்கை நாடாளுமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராக வாழ்க்கையைத் துவங்கி, இலங்கைக் கல்லூரிகளில் விரிவுரையாளராகப் பணியாற்றிய அனுபவத்தோடுதான் முனைவர்பட்ட ஆய்வு மேற்கொண்டார். பின்னர் யாழ் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்தார். சென்னைப் பல்கலைக் கழகம், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் வருகை தரு பேராசிரியராக இருந்தார்.தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் மதிப்புறு ஆய்வாளராகப் பணியாற்றினார்.

இத்தனைச் சிறப்புக்குரிய சிவத்தம்பி உலகத் தமிழ் மாநாட்டில் கட்டுரை வாசிப்பதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அதுவும் சங்கம் வளர்த்த மதுரையில் நடந்ததென்பதுதான் நகைமுரணாகும். 1981 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் மதுரையில் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது.இந்த மாநாட்டிற்கு அவர் அனுப்பிவைத்த கட்டுரை “அரசியல் தொடர்பாடல் ஊடகமாகத் தமிழ் திரைப்படம்” என்பதாகும்.

இந்தக் கட்டுரையில் ‘தரம்’ இல்லையென்று எவரும் கூறவில்லை. “தமிழ்நாடு முதலமைச்சரைப் பற்றிய குறிப்பு அதில் இருப்பதால் இக்கட்டுரையை நிகழ்ச்சிப் பட்டியலில் சேர்க்கமுடியாமல் போயிற்று” என்று காரணம் கூறப்பட்டது.

“மாநாட்டின் பிரசன்னத்திற்குச் சேர்க்கப்படாத இக்கட்டுரையைப் பற்றி அங்குள்ள கல்விக் குழுக்களுக்குப் பொறுப்பாக இருந்தவர்கள் என்னவெல்லாம் சொன்னார்கள் என்பதைத் திருப்பிக்கூற என்னுடைய கல்வியாளர் என்ற நிலைத்தகுதி தடுக்கிறது”. என இக்கட்டுரை நூலாக வந்த காலத்து முன்னுரையில் சிவத்தம்பி குறிப்பிட்டிருக்கிறார்.

தமிழ் இலக்கியங்களுக்காக தமிழ்ச்சமூக ஆய்வுக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட அந்த மாமனிதர் தமிழ்க்கூறு நல்லுலகில் மீண்டும் அவமதிக்கப்பட்ட சம்பவம் தஞ்சையில் உலகத் தமிழ் மாநாடு நடந்த போதும் ஏற்பட்டது. இலங்கையிலிருந்து அவர் வந்த விமானம் தரையிறங்க அனுமதிக்கப்படாமலேயே திருப்பி அனுப்பப்பட்டது. கோவையில் உலகத்தமிழ் மாநாடு என அறிவிக்கப்பட்டு உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என நடத்தப்பட்டபோது அந்த மாநாட்டின் துவக்க நிகழ்வுக்குத் தலைமை தாங்கினார். உடல் நிலை பாதித்திருந்த நிலையிலும் இன்றையச் சூழலில் தமிழ் வளர்ச்சிக்கான பல ஆலோசனைகளை முன்வைத்தார்.செம்மொழி என்றால் சிவப்பு மொழி என்பது போல் பொருள்படுகிறது. எனவே செவ்வியல் மொழி என்பதே சரியானது என்றும் கூறினார்.ஆனால் அவர் பேச்சு காற்றோடு போச்சு.

தமிழரும் தமிழ் நாடகங்களும், தமிழ் இலக்கியத்தில் மதமும் மானுடமும், பண்டைத் தமிழ்ச் சமூகம் தமிழ்ப் பண்பாட்டில் சினிமா உட்பட 40 க்கும் அதிகமான புத்தகங்களுக்குச் சொந்தக்காரரான சிவத்தம்பி பலநூறு ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

ஆய்வாளர் என்பதோடு ஆய்வு விமர்சகராகவும் விளங்கிய அவர் பொதுவாக ஆய்வுப் போக்குகள் ஒன்றை விளக்குவதாக மட்டுமே உள்ளன. விமர்சனப் படுத்துவதாக இல்லை என்ற மனக்குறையை அவர் அண்மைக்கால நேர்காணலில் வெளிப்படுத்தியுள்ளார்.

ஒப்பியல் வரலாற்றுத் தன்மைகள், மொழியியல், சமூக வரலாறு, மானுடவியல், வரலாறு போன்ற அடிப்படைகளைக் கொண்டதாக ஆய்வுகள் இருக்க வேண்டும் என்பது தமிழ்ப்புல ஆய்வாளர்களுக்குச் சிறந்த வழி காட்டுதல் எனலாம்!சான்றாக புதுமைப்பித்தன் படைப்புகளை வியந்து பாராட்டுவதோடு நிற்காமல் இவரது சமகாலப் படைப்பாளிகளின் எழுத்துக்களோடு ஒப்பிட்டு குறை நிறைகளை வெளிப்படுத்த வேண்டும். படைப்பாளிகளின் சமூகக் கண்ணோட்டத்தைப் பதிவு செய்ய வேண்டும். மொழிநடையில் கூட ஓர் ஒப்பாய்வு இருப்பது சிறப்பு என அவர் யோசனை கூறுகிறார். தமிழில் அறிவியல் பூர்வமான ஆய்வு முறைக்கு வித்திட்ட முன்னோடி வையாபுரிப் பிள்ளையைத் தமக்கான வழிகாட்டிகளில் ஒருவராக சிவத்தம்பி ஏற்றுக்கொண்டார்.ஆனால் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பியங்களின் காலம் கி.பி.9 ஆம் நூற்றாண்டு என்று வையாபுரிப்பிள்ளை கூறுவதை ஏற்க இயலாது என்று உறுதியோடு மறுத்த துணிச்சல்காரர் அவர்.

உலகில் தற்போது புழக்கத்தில் இருக்கும் மொழிகளில் 50 சதவீதம் அழிந்து கொண்டிருக்கின்றன என்று யுனெஸ்கோ ஆய்வு கூறுகிறது. இந்த மொழிகளில் தமிழும் இருக்குமா என்று சந்தேகம் எழுப்பப்பட்டபோது அதை முற்றிலுமாக நிராகரித்தார் சிவத்தம்பி.

சங்க காலத்திற்குப் பிந்தைய களப்பிரர்காலம், சமண,பவுத்த சமயங்கள் கோலோச்சிய காலம் சைவ,வைணவ பக்தி இலக்கிய காலம், ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் என காலந்தோறும் ஏற்பட்டுவரும் தடைகளைக் கடந்துதான் தமிழ் வளர்ந்து வந்துள்ளது. மேலும் காலமாற்றங்களுக்கேற்ப அது தன்னை தகவமைத்துக்கொண்டு மேலும் வளரும் என்ற தன்னம்பிக்கையாளர் சிவத்தம்பி.தமிழ் என்பது வெறும் மொழி அல்ல, அது ஒரு பண்பாடு. அது பேச்சு வழக்கில் மட்டுமல்ல, இசைபோன்ற பிற பண்பாட்டுத் தளங்களிலும் இயங்குகிறது என்பதை சரியாகக் கணித்துக் கூறியவர்.

இலக்கியவாதிகளுக்கும் ஆய்வாளர்களுக்கும் அரசியல் எதற்கு என்ற கேள்வி சலிப்பூட்டும் வகையில் தொடர்கிறது.அதற்கும் விடையாக வாழ்ந்தவர் சிவத்தம்பி. இலங்கை வடக்கு, -கிழக்கு குடிமக்களின் ஒருங்கிணைப்புக்குழு, யாழ்ப்பாணம் அகதிகள் மறுவாழ்வு அமைப்பு ஆகியவற்றின் தலைவராக இருக்கும் அளவுக்கு அந்த இலக்கிய அறிஞருக்கு அரசியல் களமும் இடமளித்தது. “தமிழராகவும், இலங்கையராகவும் வாழ்வது” குறித்த அவரது புத்தகம் இவரது அரசியல் பார்வையைத் தெளிவுபடுத்துவதாகும்.

தமிழர்களும் சிங்களர்களும் தத்தம் அடையாளங்களோடு தாங்கள் இலங்கையர் என்பதை அங்கீகரிக்க வேண்டும்.இலங்கை என்ற ஒரு நாடு இரு இனத்தவருக்கும் உரியது என்ற சிந்தனை மேலோங்க வேண்டும். ஆனால் காலனியப் பாரம்பரியம் இதற்கு அனுமதிப்பதில்லை. இதனை மீறி மக்கள் ஒன்று படுவதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

கலை, இலக்கியம், சமூகம், அரசியல் என எந்தத் துறையானாலும் மார்க்சிய கண்ணோட்டத்துடன் கருத்துக்களை ஆழமாகவும் தெளிவாகவும் துணிச்சலாகவும் வெளியிட்டவர் சிவத்தம்பி. ஒரு தலைவரின் இழப்பு கூட தேசத்துக்கு உரியதாக கருதப்படும். ஆனால் ஒரு இலக்கியவாதியாகவும், ஆய்வாளராகவும், அரசியல் ஈடுபாட்டாளராகவும் விளங்கிய சிவத்தம்பி அவர்களின் மறைவைத் தமிழுக்கும், தமிழர்களுக்குமான இழப்பாகவே கருத வேண்டியுள்ளது

Pin It