உங்கள் கரங்களில் தவழும் இந்நூல் தமிழ்நாட்டின் தென் கோடியில் வாழ்ந்து மறைந்த பொதுவுடைமை இயக்கத் தோழர் ஒருவரின் வாழ்க்கை வரலாறு. சோ.அழகர்சாமி என்ற பெயரைத் தாங்கிய இத்தோழர் விவசாயி என்ற அடையாளத்தையும் பள்ளி ஆசிரியர் என்ற அடையாளத்தையும் தன் தொடக்க கால வாழ்க்கையில் பெற்றவர். பின்னர் அவரது செயல்பாடுகளாலும் வகித்த பொறுப்புகளின் அடிப்படையிலும் கம்யூனிஸ்ட், விவசாய இயக்கத் தலைவர், எட்டயபுரம் பாரதி முற்போக்கு வாலிபர் சங்கத்தின் தலைவர், எட்டயபுரம் பால் கூட்டுறவு சங்கத்தின் நிறுவனர், அதன் தலைவர், கோவில்பட்டித் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் போன்ற அடையாளங்களைப் பெற்றவர். இவை மட்டுமின்றி மனிதநேயம் மிக்க போர்க்குணம் கொண்ட மனிதர் என்ற பேரடையாளத்தைப் பெற்றவர். இவர் அணிந்து வந்த வெண்ணிறக் கதர்ச் சட்டையைப் போன்றே வெள்ளை உள்ளம் படைத்தவராய் எளிமையையும் நேர்மையையும் இறுதிவரை தன் அடையாளமாகக் கொண்டு வாழ்ந்து மறைந்தவர்.

azhagarsamy communistஇந்நூலாசிரியர் தோழர் எஸ்.காசிவிஸ்வநாதன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருநெல்வேலி மாவட்டச் செயலாளர். அவரது மூத்த அண்ணன், தோழர் எஸ்.எஸ்.தியாகராஜன் தொழிற்சங்கவாதி. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் கிளையின் துணைச் செயலாளராகப் பணியாற்றியவர். இரண்டாவது அண்ணன் சந்திரசேகரன் தமிழ்நாடு அரசின் மின்வாரியத்தில் பணியாற்றியதுடன் ஒரு தொழிற் சங்கவாதியாகவும் விளங்கியவர். இந்தப் பின்புலம் மட்டுமின்றி தோழர் அழகர்சாமி வாழ்ந்த எட்டயபுரத்தில் வாழ்ந்ததுடன் அவரது உதவியாளராகவும் செயல்பட்டவர். அவருடன் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியின் பல்வேறு கிராமங்களுக்கும் பயணித்தவர். எல்லாவற்றிற்கும் மேலாக எழுத்தார்வம் கொண்டவர். இயக்கத் தலைவர்கள் இம்மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்யும்போது ஆற்றிய சொற்பொழிவுகளையும் மாவட்ட மற்றும் மாநிலம் தழுவிய மக்கள் பிரச்சனைகளையும் கட்டுரை வடிவில் கட்சியின் ‘ஜனசக்தி’ ஏட்டில் எழுதியதுடன் குறுநூல்களாகவும் வெளியிட்டவர்.

இனி, இந்நூல் கூறும் சில செய்திகளை அறிமுகம் செய்து கொள்வோம்.

இந்நூலில் இடம்பெறும் தோழர் அழகர்சாமியின் வாழ்க்கை வரலாறானது பிறப்பு, இளமைக்காலம், குடும்ப வாழ்க்கை, பொது வாழ்க்கை என ஒரே நேர்கோட்டில் செல்வதுதான். இந்நூலில் அவரது பொது வாழ்க்கை அல்லது பொதுப்பணியே அழுத்தம் பெற்றுள்ளது. அவரது பொதுப்பணி என்பது இந்திய விடுதலை இயக்கத்தில் அவர் காட்டிய ஈடுபாட்டில் தொடங்கி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராதல் என்பதில் போய் முடிவுற்ற ஒன்றாகும். விவசாய இயக்கம், கூட்டுறவு இயக்கம் என்பனவற்றிலும் இவர் தடம் பதித்தவர். கோவில்பட்டித் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக அய்ந்து முறை தேர்வு செய்யப்பட்டு ஒரு சட்டமன்ற உறுப்பினர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டியவர். இவை எல்லாம் அவரது சமூக அரசியல் செயல்பாடுகள்.

இவற்றுடன் நின்றுவிடாமல் இலக்கிய வேட்கையுடன் பாரதி முற்போக்கு வாலிபர் சங்கம் என்ற அமைப்பை, ஜீவாவின் தூண்டுதலில் எட்டயபுரத்தில் நிறுவி அதன் தலைவராகத் தன் இறுதிக்காலம் வரைச் செயல்பட்டவர். இவ் அமைப்பு ஆண்டுதோறும் நடத்திவரும் பாரதிவிழா தமிழ்நாட்டில் நிகழ்ந்துவரும் சிறப்பான இலக்கிய விழாக்களில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது. அடுத்த ஆண்டில் (2022) தனது அறுபதாவது ஆண்டுவிழாவைக் கொண்டாட இருக்கிறது. இவ்வாறு அவர் ஆற்றிய பணிகள் பன்முகத் தன்மை வாய்ந்தவை.

இதனால் அவரது வாழ்க்கை குறித்த சரியான புரிதலுக்கு அவரது செயல்பாடுகளை மட்டுமின்றி அவர் இணைந்திருந்த இயக்கங்கள், அவர் உருவாக்கி வளர்த்த இயக்கங்கள் என்பன குறித்து அறிந்து கொள்வதும் அவசியமாகிறது. இவ்வுண்மையை இந்நூலாசிரியர் நன்றாகவே உணர்ந்துள்ளார். இதனால்தான் முதல் இரண்டு இயல்களில் அழகர்சாமியின் பூர்வீக ஊர், அவரது குடும்பம், அவரது கல்வி, ஆசிரியப்பணி, தன் மகனேயானாலும் மருத்துவக் கல்வி பயிலப் பரிந்துரைக்க மறுத்தமை என்பனவற்றை அறிமுகம் செய்துவிட்டு வரலாற்றுக்குள் நுழைந்து விடுகிறார்.

மதுரை நாயக்கர் ஆட்சிக்காலம், இக்காலத்தில் அறிமுகமான பாளையக்காரர் ஆட்சி முறை, எட்டயபுரம் பாளையம், கிழக்கிந்தியக் கம்பெனிக்கெதிரான பாளையக்காரர் எழுச்சி, சிறு கிராமங்கள் சூழ இருந்த கோவில்பட்டி என்ற ஊர் ஒரு நகரமாக வளர்ச்சிபெறல். விடுதலைப் போராட்ட நிகழ்வுகள் எனக் கடந்த கால வரலாற்றுச் செய்திகள் அணி வகுத்து நிற்கின்றன. இச் செய்திகள் அழகர்சாமியுடன் தொடர்புடைய பகுதிகளுக்கான வரலாற்றுப் பின்புலமாக அமைகின்றன.

இதனையடுத்து வரும் இயல்களில் 1925இல், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தோற்றம், அக்கட்சியின் மீதான காலனிய அரசின் அடக்குமுறை, விடுதலைக்குப் பின் அமைந்த இந்திய அரசும் அதைத் தொடர்ந்தமை, முன்னணி ஊழியர்களின் போராட்ட வாழ்க்கை, இதை எதிர்கொண்டவர்களில் ஒருவராக அழகர்சாமி இருந்தமை குறித்த செய்திகள் இடம்பெறுகின்றன. இதனையடுத்து அவர் தொடங்கிய எட்டயபுரம் கூட்டுறவுப் பால் பண்ணை உருவான வரலாறு, அதன் செயல்பாடு என்பன இடம்பெற்றுள்ளன. முதல் இரண்டு இயல்களில் நமக்கு அறிமுகமான அழகர்சாமியில் இருந்து வேறுபாடான அரசியல் முதிர்ச்சி பெற்ற ஒருவரை இங்கு சந்திக்கிறோம். ஆம் இப்போது அவர் தோழர் அழகர்சாமி. இனி தோழர் என்றே அவரை அழைப்போம்.

தமிழ்நாட்டின் பொதுவுடைமை இயக்கத் தலைவர்களில் ஒருவரான தோழர் ஜீவா தமிழ் இலக்கியத்தில் ஆர்வமும் பயிற்சியும் உடையவர். பாரதியின் மீது மிகுந்த பற்றுக் கொண்டிருந்த அவர் தமிழரின் அடையாளமாகப் பாரதியை முன் நிறுத்திவந்தார். அவரது தாக்கத்தால் நம் தோழரும் பாரதியார் கவிதைகளைப் பயின்று அதில் ஈடுபாடு கொண்டிருந்தார். பாரதி பிறந்த எட்டயபுரத்தில் அவரது நினைவாக மணிமண்டபம் ஒன்று கல்கி கிருஷ்ணமூர்த்தியின் முயற்சியால் கட்டப்பட்டது. இதற்கான செலவுத் தொகையைத் தமிழ் நாட்டிலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் தென் ஆப்பிரிக்கா, சிரிலங்கா, மியான்மர் ஆகிய வெளிநாடுகளிலும் வாழ்ந்துவந்த தமிழர்கள் மனமுவந்து அனுப்பி உதவினர். இவ்வகையில் இம் மண்டபமானது அரசின் நிதி உதவியாலோ ஆலை உரிமையாளர்களின் நன்கொடைகளின் துணையினாலோ அன்றி சராசரித் தமிழர்களின் உணர்வு சார்ந்த நன்கொடையினால் கட்டப்பட்ட சிறப்புடையது. இங்கு அமைக்கப்பட்ட நூலகத்திற்குத் தேவையான நூல்களைத் தமிழ் எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் கொடையாக வழங்கினர்.

ஒரு கட்டத்தில் ஆண்டுதோறும் இங்கு நடந்து வந்த பாரதிவிழா ஒரு சடங்கு போன்று மாறிப்போனது. பின்னர் இதுவும் போய் சிவாஜி கணேசன் நடத்தும் பாரதிவிழா, ஜெமினிகணேசன் நடத்தும் பாரதிவிழா என்ற சுவரொட்டிகளுடன் நடத்தப்படலாயிற்று. பாரதியின் இடத்தை அதை நடத்துவோர் சிக்கெனப் பிடித்துக்கொண்டனர். ‘பாரதி! நீ எங்கு சென்றனையோ’ என்று பாரதி அன்பர்கள் புலம்பும் நிலை ஏற்பட்டது.

இத்தகைய சூழலில் ஜீவாவின் எட்டயபுரம் வருகை அவரது மனக்குமுறல் அதன் எதிரொலியாக நம் தோழரைத் தலைவராகக் கொண்டு ‘பாரதி முற்போக்கு வாலிபர் சங்கம்’ என்ற அமைப்பை உருவாக்கி அதன் சார்பில் 1962இல் இருந்து பாரதி விழாவை நடத்தத் தொடங்கியமை, அது நிகழும் பாங்கு என்பன குறித்து இந்நூலின் ஓர் இயலில் விரிவுபடச் சொல்லப்பட்டுள்ளது. சில இயல்களைக் கடந்த பின்னர் பாரதிவிழா நிகழ்வுகள் சிலவற்றையும் நேர்முக வர்ணனை போல பதிவிட்டுள்ளார். இவ்வாறு நம் தோழரின் வரலாற்றின் ஊடாகப் பாரதியை மையமாகக் கொண்ட அமைப்பொன்று தோன்றிய வரலாற்றை இந்நூலாசிரியர் சுவைபடக் கூறியுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக தோழரின் இயக்கப் பணிகளுக்குள் நம் கையைப் பற்றி அழைத்துச் செல்வதுபோன்று அழைத்துச் செல்கிறார் நூலாசிரியர். நில உச்சவரம்புச் சட்டத்தை வலியுறுத்தி நடந்த போராட்டம், வரிகொடா இயக்கம், நிலமீட்சிப் போராட்டம் போன்ற போராட்டங்களை அறிமுகம் செய்துள்ளார். வேளாண் விளை பொருட்களுக்கு உரிய விலையின்மை, மழை பொய்த்துப் போய் உருவாகும் வறட்சி, குடிநீர்ப் பஞ்சம் என கரிசல் நிலப்பகுதி விவசாயிகளின் வாழ்வியல் சிக்கல்களை நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறார். இவற்றுக்கு ஊடாக நம் தோழரின் விவசாய இயக்கப் பணிகளை நமக்கு அறிமுகம் செய்வதுடன் அவர் அடிப்படையில் விவசாய இயக்கப் போராளி என்பதை நம் உள்ளத்தில் பதியச் செய்துள்ளார். இவற்றுக்கிடையில் ஒரு மாயமான் போன்று அவசர நிலை வந்ததையும் அது தந்த போலி நம்பிக்கை குறித்தும் குறிப்பிடுகிறார்.

kasivishwanathan book on azhagarsamyஇவ்வாறு பல்வேறு நிகழ்ச்சிகளை மட்டுமின்றி நம் தோழருடன் இணைந்து பணியாற்றிய தோழர்கள் பலரையும் அறிமுகம் செய்துள்ளார். அவர்களுள் சிலர் இன்று நம்மிடையே இல்லை. சிலர் நம்முடன் வாழ்கிறார்கள். இவர்கள் அனைவரையும் அவர் அறிமுகம் செய்துள்ளமை நம் தோழர் தனி ஒரு மனிதராகக் ‘கூட்டொருவரையும் வேண்டாக் கொற்றவர்’ என்பது போல் செயல்படவில்லை என்ற உண்மையை நாம் அறியச் செய்துள்ளது. ஒரு நல்ல பொதுவுடைமை வாதியின் தலையாய நற்பண்பு இது.

இவர்களில் பலரை நான் அறிவேன். குறிப்பாக எட்டயபுரம் பாரதிவிழாவை தம் இல்லத்தின் மங்கல நிகழ்ச்சி போல் நடத்தி மறைந்த, நினைவில் வாழும் அன்புத் தோழர்கள் கு.ச.சுப்பையா, வே.சதாசிவம், தி.முத்துக்கிருஷ்ணன், இளசை மணியன் ஆகியோரைப் பற்றிய பதிவைப் படிக்கும்போது நான் உணர்ச்சிவயப்பட்டுப் போனேன். இவர்களுடன் எட்டயபுரம் தெருக்களில் சுற்றித் திரிந்ததும், விவாதங்கள் செய்ததும் நினைவுக்கு வந்து உள்ளத்தை நெருடின. இந்த இடத்தில் நம் தோழரைப் பற்றியும் குறிப்பிட விரும்புகிறேன். பாரதியார் விழாவை நடத்தும் அமைப்பின் தலைவர் என்ற முறையில் அழைப்பிதழில் அவர் பெயர் இடம் பெற்றிருக்கும் என்பதைத் தவிர அவர் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வது கிடையாது. தலைவர் என்ற முறையில் தொடக்க விழா நிகழ்ச்சியின் போது மேடையில் காட்சியளிப்பார். அவ்வளவுதான். பின்னர் முன்வரிசையில் பார்வையாளர்களுடன் அமர்ந்து நிகழ்ச்சியைக் கவனிப்பார். தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் நோக்கில் குட்டி போட்ட பூனையைப் போல் மேடையில் குறுக்கும் நெடுக்கும் அலைவது, நிகழ்ச்சியின் தலைவரை ஓரங்கட்டிவிட்டு திடீரென வேறு ஒருவரை உரையாற்ற வரும்படி அழைப்பது, அவருக்குப் புகழ்மாலை சூட்டுவது என்பன அவரிடம் கிஞ்சித்தும் கிடையாது.

கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருந்த போது அத்தொகுதியில் அவர் உருவாக்கிய பாரதி நூற்றாண்டு மகளிர் பாலிடெக்னிக், பாரதி நூற்றாண்டு மகளிர் மேல்நிலைப் பள்ளி, பாரதி நூற்றாண்டு கூட்டுறவு நூற்பாலை என்பன குறிப்பிடத்தக்கவை. இவை அனைத்துக்கும் மேலாக வறண்ட கரிசல் பகுதி மக்களுக்காக அவர் உருவாக்கிய கூட்டுக் குடிநீர்த்திட்டம் இப்பகுதி மக்களின் அன்றாட வாழ்வின் அவலத்தைப் போக்கிய ஓர் அற்புதமான திட்டமாகும்.

அவரது இம்முயற்சி தமிழகம் முழுவதும் பயன்படும் அளவுக்கு விரிவடைந்து தமிழ்நாடு அரசின் குடிநீர் வடிகால் வாரியத்தின் தோற்றத்திற்கு வித்திட்டது. இவ்வுண்மையை தம்பி ஜீவபாரதி தொகுத்து வெளியிட்ட தோழரின் சட்டமன்ற உரைகள் நூல் வாயிலாக அறிய முடிகிறது. இந்நூலாசிரியரும் இதைச் சுட்டிக்காட்டி உள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் உருவான பின்னர் அந்நகரில் மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. இதனால் அங்குச் செயல்பட்டு வந்த அரசு தலைமை மருத்துவமனை மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனை ஆயிற்று. ஏற்கனவே செயல்பட்டு வந்த தலைமை மருத்துவமனையைக் கோவில்பட்டி நகருக்கு இடம் மாற்றம் செய்ய முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றார். தொழிற்கூடங்களும் வணிக நிறுவனங்களும் மிகுந்த கோவில்பட்டி நகருக்கென்று தீ அணைப்பு நிலையம் இல்லாத குறையைப் போக்கினார்.

இந்நூலின் சிறப்புக் கூறுகளாகப் பின்வருவனவற்றைத் தொகுத்துரைக்கலாம்:

ஓர் இடதுசாரி இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட ஓர் இளைஞரின், இயக்கம் சார்ந்த படிப்படியான வளர்ச்சிநிலை மிகவும் இயல்பான முறையில் சமூக வரலாற்றுப் பின்புலத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

“வானத்து அமரன் வந்தான் காண் வந்தது போல் போனான் காண்” என்று புலம்புதல் இன்றி, கொச்சைப்படுத்தல் எதுவுமின்றி, ஓர் இயக்கவாதியை இயக்கத்தில் இருந்து பிரித்து ‘பொதுமனிதர்’ ஆக்காத இயல்பான அறிமுகம் இடம் பெற்றுள்ளது. அத்துடன் தம் வாழ்க்கையில் அவர் பின்பற்றிய நேர்மை, போராட்டக் குணம் என்பனவற்றுடன் அவரது மனிதநேய உணர்வையும் உறவு பேணும் பண்பையும் வெளிப்படுத்தியுள்ளது.

இந் நூலில் தாம் கூறவரும் செய்திகளைப் புரிய வைக்கும் நோக்கில் கடந்தகால நிகழ்வுகளையும், மனிதர்களையும் ஆளுமைகளையும் இந்நூலாசிரியர் விரிவாக அறிமுகம் செய்துள்ளார். இவ்வகையில் இவ் வாழ்க்கை வரலாறானது கடந்தகால வரலாற்று நிகழ்வுகளின் பதிவாகவும் அமைந்துள்ளது. இதை வெறுமனே பின்னோக்கிப் பார்க்கும் முறை என்று கூறி எளிமைப்படுத்திவிட முடியாது. இவை வெறும் செய்திகளின் தொகுப்பல்ல. பல்வேறு வண்ணங்களைக் காட்சிப்படுத்தும் ‘கலைடாஸ்கோப்’ கருவியில் இடம்பெற்றுள்ள பல வண்ணக் கண்ணாடிச் சில்லுகள் போன்று இடம்பெற்றுள்ளன. இவை வாசிப்பவனைப் பல்வேறு களங்களுக்கும் காலங்களுக்கும் அழைத்துச் செல்கின்றன. பல்வேறு காலத்து மனிதர்களையும் இயக்க வாதிகளையும் அறிமுகம் செய்கின்றன. அவர்களது உரைகளைக் கேட்கச் செய்கின்றன. ஆனால் வெறும் செய்திகளின் தொகுப்பாகவோ இட்டு நிரப்பும் உத்தியின் வெளிப்பாடாகவோ அமையாது நூலின் மையத்துடன் இணைந்து நின்று கலைடாஸ்கோப்பைச் சுழற்றிப் பார்க்கும்போது தோன்றும் பலவண்ணச் சித்திரங்கள் காட்சி தருகின்றன.

தமிழகத்தின் நீண்ட அரசியல் வரலாற்றில் ஆங்கிலக் காலனிய ஆட்சியிலும் நாட்டின் விடுதலைக்குப்பின் உருவான ஆட்சிகளிலும் தொடர்ச்சியான அடக்குமுறைக்கு ஆளான கட்சி கம்யூனிஸ்ட் கட்சி தான். இக்கட்சியின் வரலாறு என்பது போராட்டங்களையும் பல்வேறு சித்திரவதைகளையும் இழப்புகளையும் சிறைக்கொடுமைகளையும் எதிர்கொண்ட, குருதி சிந்திய, துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையான, தூக்குமேடை ஏறிய தோழர்களின் வரலாறுதான். ஆனால் பல்வேறு வரலாற்றுச் சூழல்களால் இவை தொடர்பான ஆவணங்கள் சேகரிக்கப் படாமலும் பதிவுசெய்து பாதுகாக்கப்படாமலும் போனமையால் இப் பேரியக்கத்தின் வரலாற்று முகம் தூசி படிந்து கிடக்கிறது.

ஏனைய வரலாறுகளைப் போன்று இவ்வியக்கத்தின் வரலாற்றுக்கான தரவுகள் ஆவணக் காப்பகங்களின் கோப்புகளிலோ, நூல்களிலோ கண்டறிய முடியாத ஒன்று. இயக்கத்தின் தோழர்கள் அவர்களின் பணிகளால் பயன்பெற்றோர் என்பவர்களிடமிருந்து பெறும் வாய்மொழிச் சான்றுகளின் வாயிலாகத்தான் பெறமுடியும். இத்தகைய இடர்ப்பாடுகளுக்கு ஊடாகத்தான் தோழர் அழகர்சாமியின் வரலாற்றுச் சித்திரத்தை நூலாசிரியர் தீட்டியுள்ளார்.

இந்நூலாசிரியரிடம் இருந்து மேலும் படைப்புக்களை எதிர்பார்க்கலாம் என்ற நம்பிக்கையை இந்நூல் தோற்றுவித்துள்ளது. நூலின் நாயகருக்குச் செவ்வணக்கம். நூலாசிரியருக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

கரிசலில் உதித்த செஞ்சூரியன் (சோ.அழகர்சாமியின் வாழ்க்கைத் தடம்)

எஸ்.காசிவிஸ்வநாதன்

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.

விலை - ரூ.335/-

- ஆ.சிவசுப்பிரமணியன்

Pin It