தமிழர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஐந்து வகை திணைகளை உருவாக்கி அதற்குரிய தாவரங்கள், தொழில்கள் என அந்த மண்ணுக்குரிய வேலைகளை செய்து வந்தனர். நாகரிகத்திலும், விவசாயத்திலும் உலகத்திற்கே முன்னோடியாக விளங்கினார்கள்.

சங்க இலக்கியங்களில், காட்டுயிர்கள் பற்றிய பல பாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தாவரங்கள், காட்டுயிர்கள் பற்றிய புரிதலுடனும், ஒத்திகையுடனும் இருந்துள்ளார்கள் என்பது புலனாகிறது.

Elephant என்று யானையே இல்லாத நாட்டின் ஒரு மொழியில் இன்று படிக்கும் நாம்தான், அக்காலத்தில் மா, கரி, ஆச்சல், இபப், இம்மபு என 50 பெயர்களில் யானைகளை அழைத்திருக்கிறோம்.

நாராய்.. நாராய்.... செங்கால் நாராய்.. எனத் தொடங்கும் நாரை பற்றிய பாடலில், பறவையின் உடலமைப்பு, பழக்க வழக்கங்கள் எனக் கூர்மையாகப் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோல எண்ணற்ற உதாரணங்களை சங்க இலக்கியத்தில் சுட்டிக் காட்ட முடியும். காட்டுயிர்கள் மேல் புரிதலுடன் இணக்கமான உறவைப் பேணி வந்த தமிழர்களுக்கு இன்று என்ன நேர்ந்தது?காக்கை, குருவி தவிர்த்து மற்ற பறவைகளைப் பற்றியோ, விலங்குகள் பற்றியோ தெரியாமல் விழிப்புணர்வு அற்ற நிலையில் இருப்பது எதனால்?ஒரு நாட்டிற்கு 33 சதம் காடு வளம் இருக்க வேண்டும். ஆனால் தமிழகத்திலோ 17 சதத்திற்கு குறைவாகவே உள்ளது. அது போலவே நீர்ப்பற்றாக்குறை மிகுந்த மாநிலமாகவும் உள்ளது. காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு என தமிழகத்திற்கு உரிமையுள்ள நீராதாரங்கள் இருந்தும் அண்டை மாநிலங்களிடம் கையேந்தி நிற்கும் நிலையில் தமிழகம் உள்ளது.

தமிழகம் முழுக்க எண்ணிலடங்கா கோயில்களும், புதுப்புது சாமியார்களும் நிரம்பியுள்ள சூழலில், காட்டுயிர்கள் மேல் உள்ள மூட நம்பிக்கையை ஆய்வு செய்வதே இச்சிறு கட்டுரையின் நோக்கம்.

சாக்குருவி, ஆந்தையின் அலறல், ஆந்தையை கண்டால் அபசகுணம், அதிசயப் பறவை என பற்பல சொல்லாடல்களால் எதிர்மறையாய் அழைக்கப் பெறும் ஆந்தைகள் தான், வேளாண்மைக்கு தீங்கு செய்யும் எலிகளை உட்கொண்டு விவசாயிகளுக்கு நண்பனாக திகழ்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

நாம் சாதாரணமாகக் காணும் ஆந்தைகள் கூகை என்ற வெண்ணாந்தை, புள்ளி ஆந்தை, கொம்பன் ஆந்தை என்ற மூன்று வகையாகும்.

அதிசயப் பறவை ஆஸ்திரேலிய பறவை என அடிக்கடி செய்தித்தாள்களில் இடம் பெறும் கூகை என்ற வெண்ணாந்தை உட்பட ஆந்தைகள் யாவும் இடம் பெயர்பவை அல்ல என்பதை பத்திரிகை காட்சி ஊடகங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இரவாடிகளான ஆந்தைகள் யாவும் ஓர் இரவில் சராசரியாக 8 எலிகளை வேட்டையாடி விவசாயிகளுக்கு நன்மை புரிகிறது. ஓணான் சிறு பாம்புகள், பல்லிகள் போன்றவற்றையும் பிடித்துண்ணுகின்றன.

தனக்கென ஓர் இடத்தை தேர்ந்தெடுத்து வாழும் இயல்பு கொண்ட ஆந்தைகள் மரப் பொந்துகள், பாழடைந்த கட்டடங்கள், பாறை இடுக்குகள் போன்ற பகுதிகளைத் தேர்ந்தெடுத்து நான்கு வரையிலான முட்டைகளை இட்டு இனப்பெருக்கம் செய்கின்றன.

அடுத்ததாக நகரத்தின் துப்புரவாளனாக விளங்கும் காக்கைகள் ஒற்றுமைக்கு உதாரணமாக பற்பல சொல்லாடல்கள் மூலம் கூறப்படுகின்றன. இவையாவும் உண்மையா? அறிவியல் என்ன சொல்கிறது பார்ப்போம்.

பொதுவாக விலங்குகள், பறவைகள் கூட்டமாக கூடுவது தனியே இருக்கும் போது உள்ள ஆபத்தின் அளவை குறைக்கத்தான். அதாவது சுயதைரியம் பெறத்தான் கரைவதும், கத்துவதும் என்கிறார் உயிரியல் அறிஞர் டபிள்யூ டி. ஹேமில்டன். அவரது இந்தக் கோட்பாடு சுயநலக் கூட்டம் அல்லது மந்தை என்று உலகின் அனைத்து உயிரியலாளர்களிடமும் பழக்கத்தில் உள்ளது.

காக்கைகள் தங்கள் நேரடி உறவினர்களிடம் மட்டுமே உணவை பகிர்ந்து கொண்டு, மற்றவற்றை விலக்கி விடும் என்று அவரது மற்றொரு கோட்பாடான மin ளநடநஉவiடிn என்ற விதிப்படி கூறுகிறார். இம்முறை எறும்பு, தேனீ, கரையான் போன்ற உயிரினங்களிடமும் பழக்கத்தில் உள்ளது.

காட்டுயிர்களில் பேருயிரான யானைகள் பற்றிய கீழ்க்கண்ட சொல்லாடல் நீண்ட காலமாக நிலவி வருகிறது.

யானை இருந்தாலும் ஆயிரம் பொன். இறந்தாலும் ஆயிரம் பொன். யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே. யானையின் செவிலில் புகுந்த எறும்பு. காடுகளின் வளமைக்கு குறியீடாக விளங்கும் யானைகள் அதன் உணவுத் தேவையான 300 கிலோ, பசுந் தாவரங்களுக்காக ஓரிடத்தில் தங்காமல் தனக்கென வழித்தடத்தை ஏற்படுத்தி காடுகள் முழுமைக்கும் சுற்றியலைந்து பலதரப்பட்ட தாவரங்களின் விதைகளை வீரிய மிக்க விதைகளாக பரப்பி வருவதுடன் பல பறவை இனங்களுக்கும், விலங்குகளுக்கும் மறைமுக உதவி புரிகிறது.

அந்த வகையில் முதல் சொல்லாடலின், முதல் வாக்கியத்தின் அர்த்தமாக மேற்குறிப்பிட்டவற்றை கொள்ளலாம். யானைகள் இறந்தபின் அவற்றின் தந்தங்கள் கலைப் பொருட்கள் செய்யப் பயன்படுவதால் இரண்டாவது வரி சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், கடந்த நூறு ஆண்டுகளில் தந்தங்களுக்காகவே பெரும்பாலான யானைகள் கொல்லப்பட்டு இன்று சில ஆயிரங்களாக குறைக்கப்பட்டுள்ளது இந்தியாவில்.

இரண்டாவது சொல்லாடல் வளர்ப்பு யானைகள் குறித்து சொல்லப்படும் வார்த்தை. காடுகளின் செழுமைக்கும் சுற்றுச் சூழலுக்கும் முக்கிய பங்களிக்கும் பேருயிர்களை யானைகளை சிறு கூடாரங்களில் அடைத்து பட்டையும், நாமமும் போடுவதில் என்ன சுகம் கண்டதோ மனித சமூகம்! சாலைகளில் பிச்சை எடுப்பதற்கும், பக்தியின் சின்னமாக வணங்குவதற்காகவும் யானைகள் படும் வேதனைகள் சொல்லி மாளாது.

இன்றைய பள்ளி மாணவர்கள், பெரியவர்களிடம் காட்டின் ராஜா யார்? என்று கேட்டால் சட்டென சிங்கம் என்று ஒருமித்த பதில் வரும்.

உண்மையாகவே காட்டின் இராஜாவாக சிங்கம் இருக்குமா? இல்லை என்பதுதான் அறிவியலாளர்களின் பதில். பெண் சிங்கங்கள் வேட்டையாடியதை பகிர்ந்து உண்ணும் இயல்பு கொண்ட ஆண் சிங்கங்கள் காட்டின் ஓர் அங்கமே. அதனதன் இயல்பிலேயே அனைத்து காட்டுயிர்களும் ஒழுங்குற வாழ்கின்றன.

தனித்தே சுற்றியலைந்து வேட்டையாடி உண்ணும் புலிகளைக் காட்டின் இராஜாவாகக் கூறலாம். அதனுடைய மஞ்சள் நிற உடம்பில் கருப்பு பட்டைகளும், கம்பீரமான உடலமைப்பும் ஆண்டொன்றுக்கு 50 முதல் 60 வரையிலான இரை விலங்குகளை உண்ணும் புலிகள் உணவு சங்கிலியின் உச்சத்தில் உள்ளன. புலிகளின் அழிவு காடுகளின் அழிவுக்கு காரணமாகும் எனலாம்.

ஒரு காட்டில் புலிகளின் எண்ணிக்கை குறைந்தால் இரை விலங்குகளான மான், காட்டு மாடுகள் எண்ணிக்கை அதிகரித்து மேய்ச்சல் பரப்பு குறைந்து காடுகளின் வளம் சீர்குலையும். புலிகளை சார்ந்து வாழும் கொரி விலங்குகளும், பறவைகளும் அழியும்.

அடுத்ததாக ஏமாற்றும் ஒருவரை குள்ளநரித்தனம் பண்ணுகிறான் என்று மனித சமுதாயத்தின் பொது புத்தியை நரிகளின் மேல் சொல்வது நமது அறியாமையை காட்டுகிறது.

புலி, சிங்கம், சிறுத்தை போன்ற இரை கொல்லி விலங்குகள் உண்ட உணவுகள் மிச்சத்தை உண்டதுடன், தானே வேட்டையாடி உண்ணும் இயல்பு கொண்ட குள்ள நரிகள். மனிதரை கண்டால் ஒதுங்கிச் செல்லும் குணமுடையது. இந்திய அளவில் அழியும் காட்டுயிர்களின் பட்டியலில் நரிகள் உள்ளன.

இந்தியாவில் 214 வகைகளாக காணப்படும் பாம்புகளில், 4 வகை பாம்புகள் மட்டுமே விஷத்தன்மை வாய்ந்தன. ஆனால், நமது சமூகத்தில் பாம்புகள் என்றால், அச்சத்தின் குறியீடாகவும், பற்பல சொல்லாடல்களும், மூட நம்பிக்கைகளும் ஆழமாக பதிந்துள்ளன. இதன் காரணமாகவே ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பாம்புகள் அடித்துக் கொள்ளப்படுகின்றன.

பாம்புக் கடிக்கு ஆளானோரில் 70 சதம் பேர்கள் பயத்தின் காரணமாகவும், உரிய சிகிச்சை இன்றியுமே உயிரிழக்கிறார்கள் என்கிறது ஓர் ஆய்வு.

வேளாண்மைக்கு உற்ற தோழனாக விளங்கும் பாம்புகள், எலிகள், ஓணான், பல்லி, மீன்கள் போன்றவற்றை உணவாகக் கொள்கிறது.

பாம்பு நடனம், பாம்பு பழிவாங்கும் பண்பு கொண்டது, பால், முட்டை குடிக்கும் போன்ற பற்பல மூட நம்பிக்கைகள் பாம்புகள் பற்றி உள்ளன. இவையாவும் அறவே ஒழிக்கப்பட வேண்டியவை. மனிதர்களுக்கு எவ்விதத்திலும் தீங்கிழைக்காத உயிரினம் பாம்புகள். பாம்புகள் யாவும் அழியும் நிலையில் உள்ளது.

அடுத்ததாக பன்றிகளை பற்றிய சொல்லாடல் புகழ் பெற்றது. பன்றி மாதிரி சேற்றில் புரளாதே? இந்த வாக்கியத்தில் உள்ள பன்றி என்ற காட்டுயிர் சேற்றில் மட்டுமே வாழும் என்ற மன நிலையை மக்கள் மனதில் நிறுத்தி வைத்துள்ளனர். பன்றிதான் இருக்கும் இடத்தை தூய்மையாகவும், மலம் கழிக்க ஓரிடத்தை மட்டுமே தொடர்ந்து பயன்படுத்தும் என்கிறது ஆய்வு. ஆறு, ஏரி, குளங்களை சேறுகளாகவும், குட்டைகளாகவும் வைத்திருப்பது மனிதர்களாகிய நாம்தான். நீர்நிலைகள் பறிபோவதில் அரசியல் பின்னணி இருக்க நமது தவறுகளுக்கு காட்டுயிர்கள் மேல் பழிசுமத்துவது நமது விழிப்புணர்வு அற்ற தன்மையே.

ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உருப்படாது என்ற சொல்லாடல் நீண்ட காலமாகவே பழக்கத்தில் உள்ளது. கடன்பட்ட மனிதரின் நிலங்கள் பறிமுதல் செய்வதில் தொடர்பு படுத்தி வரும் இந்த வாக்கியத்தில் நீர்நில வாழ்வியான ஆமை ஏன் வந்தது என்பதை சிந்திக்க வேண்டும்.

நீர் நிலைகளை சுத்தப்படுத்தும் பணிகளை பல வகை மீன்களோடு ஆமைகளும் செய்கின்றன. நன்னீர் ஆதாரத்திற்கு ஆமைகள் வாழ்வதும் ஓர் குறியீடு.

ஆமைகள் இறைச்சிக்காக அதிகளவில் கொல்லப்படுகின்றன. மேலை நாடுகளில் ஆமைகளை பாதுகாப்பது, வளர்ப்பது என்பது அறிவியல் பூர்வமாக அணுகும் போக்கு துவங்கி நீண்ட காலமாகி விட்டது.

அறிவியல்பூர்வமற்ற இவ்வாக்கியங்களை பயன்படுத்துவதை வரும் தலைமுறைக்கு பரவாமல் தடுத்திட வேண்டும்.

தமிழகத்தில் கோடை கால முடிவில் ஜூன், ஜூலை மாதங்களில் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் சுற்றுப்புற மக்கள் மழை வர பல்வேறு வடிவங்களில் வேண்டுவது பத்திரிகை செய்திகளாக வருகின்றன. உதாரணத்திற்கு பத்திரிகை அடித்து ஒரு லட்சம் ரூபாய் செலவில் 1000 கிராம மக்கள் முன்னிலையில் ஆலமரத்திற்கும் அரச மரத்திற்கும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. கழுதைகளுக்கு திருமணம் நடத்திவைக்கப்பட்டது. மக்கள் திரண்டு வந்திருந்து தவளைகளுக்கு திருமணம் நடத்தி வைத்தனர். ஆற்றில் நடுப்பகுதியில் பள்ளம் தோண்டி இரவு நேரத்தில் பெண்கள் மட்டும் மழை வேண்டி பிரார்த்தித்தனர். என பலப்பல செய்திகள் ஊடகங்களில் வருகின்றன. மழை வராமல் இருக்க, மரங்கள் தொடர்ந்து வெட்டப்படுதல், காடுகள் அழிப்பு, நீர் நிலைகள் வீட்டுமனைகளாகவும், கழிவு நீர் குட்டைகளாகவும், மருத்துவக் கழிவுகளாகவும் மாறுவதற்கு அதிகார வர்க்கமும், பலமான அரசியல் பின்னணி இருக்கும் சூழலில், விழிப்புணர்வு படிப்பறிவற்ற மக்கள் கூட்டம் மீண்டும் மீண்டும் மூடநம்பிக்கைகளையும், பழக்க வழக்கங்களையும் பின்பற்றுவது கடும் பின்விளைவுகளையே ஏற்படுத்தும்.

அலங்கு நங்கில் என்ற தமிழ்ப் பெயர்களை மறந்து யவே நயவநச என்றும் னடிடbin என்றும் மனப்பாடம் செய்து கொண்டிருக்கிறார்கள் நமது மாணவர்கள்.

பள்ளி, கல்லூரிகளில் சுற்றுச்சூழல், காட்டுயிர்கள் பற்றிய பாடங்களை தாய்மொழிக் கல்வியில் கற்பிக்கும் போது மட்டுமே வருங்கால தலைமுறைக்கு நாம் அனுபவித்த இயற்கைச் சூழலை அதன் அழகு குறையாமல் கொடுக்க இயலும்.

மனிதனின் பொதுப் புத்தியில் பதிந்துள்ள கடவுள் பற்றிய மாயைகளையும் அச்சத்தையும் உடைத்தெறிந்தால் மட்டுமே, காட்டுயிர்கள் மேல் நெருக்கத்தை ஏற்படுத்த இயலும் என்பது மறுக்க இயலா உண்மையாகும்.

Pin It