ஒரு ஜனநாயக அமைப்பில் நீதித் துறைக்கு கிடைத்திருக்கும் சுதந்திரமும் தனித்துவமுமே, அவ்வமைப்பின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் என்பார் பாபாசாகேப் அம்பேத்கர். இயல்பான ஒரு ஜனநாயக அமைப்பில், சட்டமியற்றும் நிறுவனங்களாலும், நிர்வாக எந்திரத்தாலும் குடிமக்களுக்கு இழைக்கப்படும் கேடுகளைக் கண்டறிந்து, அரசமைப்புச் சட்ட வழிகாட்டலின்படி நிவர்த்தி செய்ய வேண்டிய முக்கியக் கடமையாற்றுகிறது நீதித்துறை. இந்திய ஜனநாயக அமைப்பிலும்கூட வேறு எவற்றையும்விட நீதித்துறை, வலுவானதாகவும் தற்சார்புடையதாகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது. அரசின் கருவியாகவே செயல்படுகின்ற போதிலும், நால்வர்ண இந்து பண்பாட்டில் பல்லாயிரம் சாதிகளாய் சிதறிக் கிடக்கும் நூறுகோடி இந்திய மக்களின் அனைத்துச் சமூகப் பிரச்சனைகளுக்கும், அரசியல் சிக்கல்களுக்கும், மக்களின் குற்ற நடவடிக்கைகளுக்கும் நீதி வழங்கும் மிகப் பெரும் பணியைச் செய்து கொண்டிருக்கிறது நீதித்துறை.

Ambedkar
தேசத்தின் எல்லைக்குட்பட்ட வான், நீர், நிலம், காற்று அவற்றில் வாழும் அனைத்து உயிரினங்களின் மீதும் தீர்ப்பளிக்கிற இணையற்ற அதிகாரத்தை, நீதி அமைப்பு பெற்றிருப்பதற்கான காரணம், பாகுபாட்டுணர்வு எதுவுமற்ற மாசற்ற நீதியின் அதிகாரத்தை அது நிலைநிறுத்தும் என்ற நம்பிக்கைதான். நமது அரசமைப்புச் சட்டத்தின் கர்த்தாக்கள், நீதித்துறையை உருவாக்குங்கால், அதன் அதிகார மய்யங்களில் வந்தமரப்போகும் இந்தியர்களைப்பற்றியும் உயர்வான மதிப்பீடு கொண்டிருந்தார்கள். முன்னுதாரணம் எதுவுமற்ற அந்த முடிவின் விளைவுகள், அய்ம்பதாண்டு காலத்திற்குப் பிறகு வெளிப்படத் தொடங்கியுள்ளன. மீப்பெரு வட்டமாய் நெளிந்து கொண்டிருக்கும் நாடாளுமன்றப் பாம்பின் தலையை, கரடுபட்ட தனது நீள் அலகால் கொத்தத் தொடங்கிவிட்டது நீதிக் கழுகு.

வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறும் மக்கள் பிரதிநிதிகளின் அதிகாரம், வருங்காலத்தில் மணல் கயிறாய் கலைந்து போகும் என்று சோதிடம் பேசுகிறார், உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர். இயற்றப்படவிருக்கும் சட்டங்களின் மீதும் தீர்ப்பெழுதும் அதிகாரம் எமக்குண்டு என்கிறார் மற்றொரு உச்ச நீதிமன்ற நீதிபதி. பாம்பிற்கும் கழுகிற்குமான விரோதம் தொடங்கியது, இன்றோ நேற்றோ அல்ல. 1950 இல் இந்தியா தன்னை ‘குடியரசு' என அறிவித்துக் கொண்டு இயங்கத் தொடங்கிய போதே அது தொடங்கிவிட்டது.

சுதந்திர இந்தியாவில் தனி ஆட்சி அதிகாரம் செலுத்திய கடைசிக்கால ஜமீன்தார்களின் அனைத்து சிறப்பு உரிமைகளையும் குடியரசு இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் பிரிவு 31(2) ரத்து செய்தது. அதை எதிர்த்து பீகார், அலகாபாத் உயர் நீதிமன்றங்கள் அளித்த வெவ்வேறு தீர்ப்புகளின் அடிப்படையில், நிலச் சீர்த்திருத்த சட்டங்களை நீதிமன்ற விசாரணை அதிகாரத்திலிருந்து விலக்கி வைக்க நேரு அமைச்சரவை முடிவு செய்தது. அப்போது சட்ட அமைச்சராக இருந்த பேரறிஞர் அம்பேத்கரின் வழி காட்டலின்படி, பிரதமராக இருந்த நேரு 1951 இல் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தார். அச்சட்டத் திருத்தத்தின் மூலம், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஒரு புதிய சட்டப் பிரிவு சேர்க்கப்பட்டது. அதற்கு ஒன்பதாவது அட்டவணை என்று பெயரிடப்பட்டது.

அடிப்படை உரிமைகளை வழங்கும் சட்டப் பிரிவுகள் 14, 19, 20 மற்றும் 21 இன் அடிப்படையில், ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்படும் சட்டங்களை விசாரணைக்கு உட்படுத்தாமலிருக்க, நீதிமன்றங்களிடமிருந்து காப்பாற்ற 31 ‘பி' என்ற பிரிவுடன், ஒன்பதாவது அட்டவணை உருவாக்கப்பட்டது. மன்னர் மானிய முறை ஒழிப்பு, ஜமீன்தாரி முறை ஒழிப்பு, வரம்பற்ற நிலவுடைமை ஒழிப்பு ஆகியவற்றை நடைமுறைப்படுத்த உருவாக்கப்பட்ட சட்டங்கள், ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டன. ஒன்பதாவது அட்டவணையில் இன்றுவரை மொத்தம் 284 சட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றில் 281 சட்டங்கள் நிலச்சீர்திருத்தம் தொடர்பானவை. 69 சதவிகித இடஒதுக்கீட்டை வழங்கும் தமிழ் நாடு அரசின் 1993 ஆம் ஆண்டு சட்டம், ஒன்பதாவது அட்டவணையின் ‘31 சி' பிரிவில் 257 ஆவது சட்டமாக சேர்க்கப்பட்டுள்ளது.

தற்பொழுது, ஒன்பதாவது அட்டவணையில், உச்ச நீதிமன்றம் கை வைத்திருப்பது, இந்திய ஜனநாயகத்திற்கு நெருக்கடியை உருவாக்கியிருக்கிறது. சனவரி 11 அன்று, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஒய்.கே. சபர்வால் தலைமையில் ஒன்பது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அரசமைப்புச் சட்ட அமர்வு, ஏப்ரல் 24, 1973க்குப் பிறகு, ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டிருக்கும் சட்டங்கள், தனி மனித அடிப்படை உரிமைகளை வழங்கும் பிரிவுகளுக்கு எதிராக இருக்குமானால், அவற்றை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் என அறிவித்திருக்கிறது. காரணம், ஒன்பதாவது அட்டவணையில், முரண்பாடுகளைக் கொண்ட சட்டங்கள் சேர்க்கப்பட்டிருப்பதாகக் குற்றம் சுமத்தும் உச்ச நீதிமன்றத்தின் கழுகுப் பார்வை, தமிழக அரசின் 69 சதவிகித இடஒதுக்கீட்டு சட்டத்தின் மீதுதான் குத்திட்டு நிற்கிறது.

‘50 சதவிகிதத்திற்கு மேல் இடஒதுக்கீடு இருக்கக் கூடாது' என எந்தவித சட்ட ஆதாரமும், வழிகாட்டுதலுமின்றி எதேச்சதிகாரமாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த கட்டளைக்கு எதிராக, 69 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கி வரும் இடஒதுக்கீட்டுச் சட்டத்திற்கு, விளக்கம் கேட்டு அறிவிக்கை அனுப்பியிருக்கிறது உச்ச நீதிமன்றம். ஒன்பதாவது அட்டவணையை விசாரிக்கத் துணிந்த பின், அது அனுப்பிய முதல் விசாரணை அறிவிக்கை அது. இடஒதுக்கீடுகள் மீது உச்ச நீதிமன்றம் காட்டிவரும் காய்மையை அதன் பல்வேறு தீர்ப்புகளில் நாம் காண முடியும். ஆனால், இடஒதுக்கீட்டை குறிவைத்து ஒன்பதாவது அட்டவணைக்குள் நுழைந்திருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அரசமைப்புச் சட்டத்தின் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தங்களுக்கானதாக மாற்றிக் கொள்ள முனைந்திருக்கிறார்கள் என்பதை நாம் குறிப்பிட்டறிந்து கொள்ள வேண்டும்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகளிடம் உருவாகியிருக்கும் இந்த பேராதிக்கச் சிந்தனை, ஜனநாயகத்தின் அடிப்படையான கருதுகோள்களை மிரளச் செய்திருக்கிறது. சட்டங்களை சட்ட அவைகளில் விவாதத்திற்கு வைக்கும் முன்பு, உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விரும்புகிறார்கள். இயற்றப்பட்ட சட்டங்களின்படி செயலாற்ற வேண்டிய நீதிபதிகள், இயற்றப்படவிருக்கும் சட்டங்களை விசாரித்துத் தீர்ப்பெழுதும் அதிகாரம் வேண்டும் என எண்ணுவது வேடிக்கையானது!

பிரதிநிதித்துவ மக்களாட்சியில், அரசமைப்புச் சட்டத்தின் முதல் மதிப்பைப் பெறுபவர்கள் மக்கள் பிரதிநிதிகள்தாம்; உச்ச நீதிமன்ற நீதிபதிகளல்ல. முதல் மதிப்பைப் பெறும் இடம் நாடாளுமன்றம்தான்; உச்ச நீதிமன்றம் அல்ல. முதல் அதிகாரமும் மக்கள் பிரதிநிதிகளுக்குத்தான். இந்திய அரசமைப்புச் சட்டம், நாடாளுமன்றத்திற்கு அளிக்கும் அதிகாரத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு எந்த அரசமைப்புச் சட்டப் பிரிவும் ஆதரவளிக்கவில்லை. ஆனால், நாட்டின் ஒரே ஒரு அதிகார மய்யமாக உச்ச நீதிமன்றத்தை உருவாக்க முயலும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் செயல்பாடுகள், இந்திய மக்களாட்சியில் பெரும் கேடுகளை மட்டுமே உருவாக்கப் போகின்றன. வழக்கு - விசாரணை தீர்ப்பு ஆகியவற்றின் மூலம் ஒருபோதும் மக்களிடையே ஜனநாயக உணர்வுகளை உருவாக்க முடியாது.

உச்ச நீதிமன்றத்தின் அண்மைக்கால அரசமைப்புச் சட்ட அமர்வுகளின் தீர்ப்புகள், நாடாளுமன்றத்தின் மீதும், ஆட்சியாளர்கள் மீதும் நீதித்துறைக்கு ஏற்பட்டிருக்கும் நம்பிக்கையின்மையின் வெளிப்பாடுகளே! அரசையும் அதன் அதிகாரத்தையும் பயன்படுத்தி, ஆட்சியாளர்களின் சுயநலன்களுக்காகப் புதிய சட்டத்தையே உருவாக்கிய வெட்கக்கேடான வரலாறுகள், இந்திய நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றங்களுக்கும் உண்டு.

நாட்டின் அய்ம்பதாண்டுகால ஜனநாயகம், வெறும் தேர்தல் நடைமுறைகளாகவே அறியப்பட்டுள்ளதால், சாதியத்தால் பிளவுண்ட மக்களிடையே ஜனநாயக உணர்வுகளை உருவாக்குவதில் மிகப்பெரும் பின்டைவைச் சந்தித்திருக்கிறது. அரசியலில் நீண்ட காலமாக அங்கீகரிக்கப்பட்ட சாதியமே, இன்று கிரிமினல் உளவியலாகப் பரிணமித்திருக்கிறது. இந்திய ஜனநாயகத்தின் வேர்களில் நீர்விட உச்ச நீதிமன்றம் விழையுமேயானால், ஏற்றத்தாழ்வுகளாலும், ஒடுக்குமுறைகளாலும் பகைமை உணர்வுகளாலும் தகித்துக் கொண்டிருக்கும் சமூகங்களின் மீது அது கவனம் கொள்ள வேண்டும். சாதியத் தீங்கோடு பன்னாட்டுப் பெருவணிக நிறுவனங்களின் அச்சுறுத்தலும் சேர்ந்து, மக்களைச் சிதறடித்துக் கொண்டிருக்கின்றன. எனவே, நாட்டில் நிலவிக் கொண்டிருக்கும் சமூகப் பதற்றத்திலிருந்து மக்களை விடுவிக்கத் துணியாத வரை, சட்டமியற்றும் அவைகளில் நிரம்பி வழியும் ஊழல் மலிந்த மனிதர்களிடமிருந்து - நாட்டின் எதிர்காலத்தை மீட்க, உச்ச நீதிமன்றம் நடத்தும் போராட்டங்கள் எதிர்மறை விளைவுகளையே உருவாக்கும்.

அதே நேரத்தில், நீதித்துறை தன்னளவில் ஒரு ஜனநாயக முனைப் போடு செயல்படுகிறதா என்ற கேள்வியும் எழுகிறது. நீதி கேட்டு வழக்கு மன்றத்தை நாடியவர்கள் பெரும் அதிர்ச்சியடையுமளவிற்கு, ஊழலும் நிர்வாகச் சீர்கேடும் மலிந்துள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்காக காலவரையறையின்றி காத்துக்கிடக்கிறார்கள். நாடு முழுவதும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. விசாரணைக் கைதிகளாக சிறையிடப்பட்டவர்கள், குற்றம் நிரூபிக்கப்படாமலேயே ஆயுட்சிறை அனுபவித்து வருகிறார்கள். அகமதாபாத் நீதிமன்றம் ஒன்று, நாட்டின் குடியரசுத் தலைவருக்கும் தலைமை நீதிபதிக்கும் வழக்கு அறிவிக்கை அனுப்புகிறது. உயர் நீதிமன்ற நீதிபதிகள்கூட ஊழல் வழக்குகளில் கைதாகின்றனர். ‘உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் சில நேரம் தவறாக இருக்கக் கூடும். ஆனாலும், அதுதான் இறுதியானது' என்கிறார் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஒய்.கே. சபர்வால். தவறானது ஒருபோதும் நீதியாக இருக்க முடியாது. தவறாக வழங்கப்பட்ட நீதியும் இறுதியானதாக இருக்காது.

காஷ்மீர், அசாம் போன்ற மாநிலங்களில் நீதித்துறை செயலிழந்து நிற்கிறது. முற்றிலும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துவிட்ட பின்னர், காஷ்மீரிகளுக்கு ‘ராணுவ நீதியே' சட்டத்தின் நீதியாக மாற்றப்பட்டுவிட்டது. அதைவிட, பல்லாயிரக்கணக்கான கிராமங்களில் கொடிய வன்முறைக்குள்ளாகும் ஒடுக்கப்பட்ட, படிப்பறிவற்ற தலித் மக்களுக்கும், பழங்குடி மக்களுக்கும் சட்டங்கள் வழங்கும் உரிமைகளைப் போலவே நீதியும் சென்றடையவில்லை. கடந்த அய்ம்பதாண்டு காலத்தில் சாதி இந்துக்கள் இழைத்த வதைகளில் பாதிக்கப்பட்ட அம்மக்களின் கண்ணீரோடு, அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நீதியும் உலர்ந்து போய்விட்டது! வழக்குப் பதிவு கூட செய்யப்படாமலேயே புதைக்கப்பட்ட படுகொலைகள் மற்றும் பாலியல் வல்லுறவு களுக்கெல்லாம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பொறுப்பேற்க மாட்டார்களா?

ஆனால், இடஒதுக்கீடு என்று வந்துவிட்டால், உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஆயிரம் கண்கள் முளைத்து விடுகின்றன. இடஒதுக்கீடுகளுக்கான சமூகப் பின்புலங்கள் அக்கண்களுக்குப் படுவதில்லை. அரசின் இடஒதுக்கீடு தவிர்த்த பிற கொள்கை முடிவுகளைப் பற்றி அவர்கள் வாயே திறப்பதில்லை. தலித் மக்களில் பொருளாதார வளர்ச்சி பெற்ற பிரிவினரை ‘கிரீமிலேயர்' முத்திரை குத்தி, இடஒதுக்கீடுகளிலிருந்து வெளியேற்ற, அண்மையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்பு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஒட்டுமொத்த இடஒதுக்கீடுகளையே குழிதோண்டிப் புதைக்க நடத்தப்பட்ட சதி என திட்டவட்டமாகக் கூறமுடியும். இந்து சாதி அமைப்பு, பண்பாட்டுத் தளத்தில் கிரீமிலேயர்களையும்கூட, பிறப்பின் அடிப்படையில் இகழ்ச்சிக்குள்ளாக்கியே வைத்திருக்கிறது என்பதை உச்ச நீதிமன்றம் புரிந்துகொள்ளாமல் போனது நாட்டின் கெடுவாய்ப்பாகும்.

நீதித்துறை நியமனங்கள்கூட வெளிப்படையாக இருப்பதில்லை. நீதிபதிகளின் தனிப்பண்புகள், கடந்தகாலச் செயல்பாடுகள், நேர்மையுணர்வு, சமூகப் புரிதல் ஆகியவை குறித்து எவ்வித தகவலையும் மக்கள் அறிந்து கொள்ள முடிவதில்லை. நாட்டின் தலைமை அமைச்சரையோ, குடியரசுத் தலைவரையோ தேர்வு செய்யும்போது, ஊடகங்கள் மூலம் மக்கள் விவாதங்கள் நடைபெறுவதைப் போல, தலைமை நீதிபதி நியமனத்திலும் மக்கள் கருத்து அறியப்பட வேண்டும்.

மேலும் நீதிமன்றங்கள், நீதிபதிகள் மற்றும் வழக்கின் தீர்ப்புகள் குறித்து விவாதங்களை எழுப்புவோர் மீதும், மாற்றுக் கருத்து தெரிவிப்போர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடுக்கப்படுகின்றன. பேசுவதற்கும் கருத்துகளை வெளியிடுவதற்கும் அரசமைப்புச் சட்டம் குடிமக்களுக்கு வழங்கியிருக்கும் உரிமையை, நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் மறுக்கிறது. அரசமைப்புச் சட்டப் பிரிவுகள் 129 மற்றும் 215 ஆகிய பிரிவுகள், நீதிமன்றங்கள் மீதும் நீதிபதிகள் மீதும் விமர்சனம் செய்பவர்களைக் குற்ற நடவடிக்கையின் கீழ் தண்டிக்க நீதிமன்றங்களுக்கு அனுமதி வழங்குகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், விடுதலைக்குரல் எழுப்பியவர்களை ஒடுக்குவதற்காகவே நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஜனநாயக இந்தியாவிலும் அச்சட்டம் தொடர்ந்து தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. நர்மதா நதிப் பிரச்சனையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து கருத்துத் தெரிவித்ததற்காக, எழுத்தாளர் அருந்ததிராய் கைது செய்யப்பட்டார். பொதுநலனைக் கருதிக்கூட நீதிமன்றத் தீர்ப்புகளை விமர்சிக்க நீதிபதிகள் அனுமதிப்பதில்லை.

2006 இல் கொண்டுவரப்பட்ட நீதிமன்ற அவமதிப்புச் சட்டத் திருத்தம், பொதுநலனில் அக்கறை கொண்டும், உண்மையை அடிப்படையாகக் கொண்டும் விமர்சனம் செய்யப்படுகிறபோது, அவற்றை நீதிமன்றங்கள் அனுமதிக்கலாம் என்கிறது. அச்சட்டத்திற்கு பலமளிக்கும் வகையில் நீதிபதிகள் செயல்பட வேண்டும். உண்மையான ஜனநாயக மாண்புகளை மக்களிடையே துளிர்விடச் செய்வதில் நீதித்துறை முன் முயற்சி எடுக்க வேண்டும். சமூகத்தோடு உறவாட முடியாமல் நீதிபதிகளுக்கு விதித்திருக்கும் அத்தனைத் தடைகளையும் நீதித்துறை விலக்க வேண்டும். மக்களோடு கலந்து உறவாடுகிறபோதுதான் சமூகத்தைப் பற்றிய புரிதலும், அறிவும் நீதிபதிகளுக்கு வாய்க்கும். நீதிமன்றங்கள் மீதும், நீதிபதிகள் மீதும் மிக உயர்ந்த புனித கருத்தாக்கம் மக்களிடையே பராமரித்து, பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஜனநாயகத்திற்கு நேர் விரோதமான இக்கருத்தாக்கத்தை உடைத்தெறிய வேண்டியது, நீதிபதிகளின் முதல் கடமையாகும். தேங்கிக் கிடக்கும் எண்ணற்ற வழக்குகளை விரைந்து தீர்க்க, நீதித்துறையை ஜனநாயகப்படுத்த வேண்டியது முன் தேவையாகும்.

அதை விடுத்து, நீதிப் பேரரசர்களாகத் தங்களை எண்ணிக் கொண்டு எதேச்சதிகாரத்துடன் நீதிபதிகள் எல்லாவற்றிலும் கை வைப்பார்களேயானால், நாடு முழுவதும் பெரும் பதற்றம் ஏற்படுமே தவிர, ஒருபோதும் நீதிபதிகள் கோலோச்சிவிட முடியாது. அத்தகைய அரசியல் பதற்றம், பல்லாண்டுகளாகத் தீர்க்க முடியாமல் நீடித்துக் கொண்டிருக்கும் சமூகப் பிரச்சனைகளை மேலும் பின்னுக்குத் தள்ளுவதாகவே அமையும். அதற்கு உடனடி உதாரணமாகியிருப்பவர் தமிழக முதல்வர் மு. கருணாநிதி. ஒன்பதாம் அட்டவணையில் உள்ள சட்டங்களை விசாரிக்க உச்ச நீதிமன்றம் அறிவிப்புச் செய்தவுடன், ‘புதிய அரசமைப்புச் சட்டம் வேண்டும்' என்று ஆளுநர் மூலம் கோரிக்கை வைத்திருக்கிறார் அவர். மத்திய அரசின் வழிகாட்டும் குழு, அக்கோரிக்கையை உடனடியாக ஆய்வுக்கு எடுத்துக் கொண்டதாக அறிவித்திருக்கிறது. தமிழக முதல்வர் முன்வைத்திருக்கும் புதிய அரசமைப்புச் சட்டத்திற்கான கோரிக்கை, கடந்த அய்ம்பதாண்டு காலமாக திராவிட இயக்கங்கள் நடத்திவரும் இடைநிலைச் சாதி அரசியலின் உச்சபட்ச வெளிப்பாடாக அமைந்துவிட்டது. 69 சதவிகித இடஒதுக்கீடுகளின் மீதுதான் உச்ச நீதிமன்றம் அறிவித்திருக்கிறது என்பதைத் தெள்ளென அறிந்து கொண்டதால்தான், புதிய அரசமைப்புச் சட்டம் வேண்டும் என்கிறார் கருணாநிதி. புதிய அரசமைப்புச் சட்டம் உருவாக்குவதை கொக்குப் பிடிக்கிற வேலையென எண்ணிக் கொண்டிருக்கிறார் போலும்.

அனைத்து உலக நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களையெல்லாம் ஆய்ந்தறிந்து, இந்தியச் சூழலுக்கு ஏற்றார்போல், சமத்துவத்தையும் சமூக நீதியையும் அடிப்படையாகக் கொண்டு, சமூக மாற்றத்தை முன்னெடுக்கும் இணையற்ற இந்திய அரசமைப்புச் சட்டத்தை மாற்றுவதற்கு - இந்தியாவில் யார் உளர் என்பதை கருணாநிதி அறிவிக்க வேண்டும். அதற்கு என்ன தேவை ஏற்பட்டுள்ளது என்பதையும் அவர் தமிழக மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். எண்ணற்ற இடர்ப்பாடுகளை தலித் மக்களுக்கான இடஒதுக்கீடுகள் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. அதற்காக ஒரு வார்த்தைகூட அவர் பேசியதில்லை. இன்னும் சொல்லப்போனால், திராவிட இயக்க அரசுகள் பெரும் முட்டுக்கட்டைகளாகவே செயல்பட்டு வந்துள்ளன. இப்போது பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டில் உச்ச நீதிமன்றம் கை வைக்கப் போகிறது என்றதும், புதிய அரசமைப்புச் சட்டம் கேட்கிறார் கருணாநிதி. அவர் தொடர்ந்து நடத்தி வரும் இடைநிலைச் சாதி அரசியலை ஜனநாயகத்திற்காகப் போராடும் தலித் இயக்கங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

- இருள் விரியும்
Pin It