இந்திய நாட்டின் விடுதலை - அரசியல் விடுதலை என்றபோதிலும், ஒடுக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரையில் முதலில் அது ஒரு சமூக விடுதலையைத் தர வேண்டியது அவசியம் எனக் கருதினார் அம்பேத்கர். எனவேதான் ‘தீண்டாமைக்கு எதிரான உரிமை' என்பதை அரசியலமைப்புச் சட்டத்தில் அடிப்படை உரிமைகள் பகுதியில் (பிரிவு 17) இணைத்தார். அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழுவில் அம்பேத்கர் இடம் பெறாமல் இருந்திருந்தாலோ, தமது சட்ட அறிவின் வலிமையினால் இது குறித்து வலியுறுத்தாமல் இருந்திருந்தாலோ, இவ்வுரிமை அடிப்படை உரிமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்காது.

‘தீண்டாமை ஒழிக்கப்பட்டு, அதன் நடைமுறை வடிவங்கள் யாவற்றுக்கும் தடைவிதிக்கப்படுகிறது; தீண்டாமை அடிப்படையில் எந்த குறைபாட்டையும் நடைமுறைப்படுத்துவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம்” என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 17 கூறுகிறது. தீண்டாமை ஒழிப்பு வெற்றுப் பிரகடனமாக மாறிவிடாமல் இருக்கவும் அதை நடைமுறைப்படுத்திடவும் 1955 இல் நாடாளுமன்றம் ‘தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தை' நிறைவேற்றியது. பின்னர், இது 1976 இல் ‘குடிமை உரிமைகள் பாதுகாப்புச் சட்டம்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு அழைக்கப்படுகிறது.

தீண்டாமையை ஒரு சமூகக் குற்றம் என்ற அளவில்தான் இச்சட்டம் கருதியது. பொது இடங்களைப் பயன்படுத்துதல், பொதுக் கிணறு, நீர்நிலைகளிலிருந்து நீர் எடுத்தல் போன்றவற்றில் ஒடுக்கப்பட்டோருக்கு சம உரிமை வழங்கிடும் விதமாக, இதுபோன்ற நடவடிக்கைகளில் தீண்டாமையைக் கடைப்பிடிப்பதை குற்றமாகக் கருத வேண்டும் என்றும், அக்குற்றத்தை இழைப்பவருக்கு 1 மாதத்திற்கு குறையாத 6 மாத காலம் வரையிலான சிறைத் தண்டனை, ரூ. 100க்குக் குறையாத ரூ. 500 வரையிலான அபராதம் விதிக்கலாம் என்றும் இச்சட்டம் கூறியது. சாதிய ஒடுக்குமுறையைக் கடைப்பிடிப்பவர் களை எளிய/குறைந்த தண்டனையைக் காட்டி மனமாற்றம் செய்வதன் மூலம் - தீண்டாமைக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்ற நம்பிக்கையில் கொண்டு வரப்பட்டதுதான் இச்சட்டம்.

ஆனால், பன்னூறு ஆண்டுகளாக வேர்விட்டுத் தழைத்தோங்கியிருக்கும் இந்து மனம், இச்சட்டம் போன்ற சில வெந்நீர்த் துளிகளால் துவண்டுவிடாமல் புதிய உத்திகளின் மூலம் பல்வேறு வன்கொடுமைகளைத் தொடர்ந்து இழைத்து வருகின்றது. இந்நிலையில்தான், 1989 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றம் - ‘பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) சட்டத்தை' இயற்றியது. இச்சட்டத்தின் நோக்கங்கள் பகுதியில் இடம் பெறும் கீழ்க்கண்ட வாசகங்கள், மனசாட்சி யுள்ள ஒவ்வொரு இந்தியக் குடிமகனை யும் முகத்திலறையச் செய்யவல்லன:

‘பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினரிடையே கல்வி போன்றவற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு, அவர்கள் தங்கள் உரிமைகளை வலியுறுத்தும் முயற்சியில் துணைபுரிந்துள்ளது என்றாலும், அது மற்றவர்களால் மிக தன்மையாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. அவர்கள் தங்கள் உரிமைகளை வலியுறுத்தும்போதும், அவர்களுக்கு எதிராக தீண்டாமை கடைப்பிடித்தலை எதிர்க்கும்போதும் அல்லது சட்டப்படியான குறைந்தபட்ச கூலியை கேட்கும்போதும் அல்லது கொத்தடிமை மற்றும் கட்டாய வேலை செய்ய மறுக்கும்போதும் ஆதிக்க சக்திகள் அவர்களை அடிபணியச் செய்யவும், மிரட்டவும் முயல்கின்றனர். அவர்கள் தங்கள் சுயமரியாதையையோ, தங்கள் பெண்களின் மானத்தையோ காத்துக் கொள்ள முயல்வதும், வலிமை வாய்ந்தவர்களுக்கு எரிச்சல் ஊட்டுவதாக அமைகிறது. அரசு அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யும் நிலங்களைப் பயன்படுத்துவதும், பயிரிடுவதும்கூட வெறுப்புணர்வுடன் பார்க்கப்படுவது மட்டுமல்லாமல், பல நேரங்களில் இம்மக்கள் ஆதிக்கச் சக்திகளின் தாக்குதலுக்கு இரையாகின்றனர்.

‘சமீப காலமாக, பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்களை மனித மலம் போன்ற உண்ணத் தகாதவைகளை உண்ணச் செய்வது, தாக்குதலுக்குள்ளாக்குவது, பிரிவு எண்ணிக்கையில் கொலை செய்வது மற்றும் இச்சாதியைச் சேர்ந்த பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வது போன்ற குறிப்பிட்ட வன்கொடுமைகள் அதிகரித்து வரும் போக்கினை காண்கிறோம். இச்சூழ்நிலையில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள குடிமை உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் - 1976 போன்ற சட்டங்களும், இந்திய தண்டனைச் சட்டத்தின் சாதாரண பிரிவுகளும் இவ்வகையான குற்றங்களைத் தடுக்கும் அளவிற்குப் போதுமானவையாக இல்லை. எனவேதான், பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினரல்லாத நபர்கள் இழைத்திடும் குற்றங்களைத் தடுக்கவும், அச்சுறுத்தவும், ஒரு சிறப்புச் சட்டம் தேவைப்படுகிறது.”

1955 ஆம் ஆண்டு சட்டத்தைப் போல் எளிய தொனியில் இல்லாமல் 1989 ஆம் ஆண்டு சட்டம், பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் மீதான 22 வகையான சாதிய வன்செயல்களை ‘வன்கொடுமை' என்று வரையறுத்து கடுமையான தண்டனையைப் பரிந்துரைக்கிறது. இச்சட்டம் குறிப்பிடும் வன்கொடுமையை இழைக்கும் பட்டியலினத்தவரல்லாத, பழங்குடியினரல்லாத நபர் - 6 மாதங்களுக்குக் குறையாத 5 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை, மரண தண்டனை வரையிலான தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படக்கடவர். இச்சட்டம் ஒரு சிறப்புச்சட்டம் என்பதால், இச்சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை, மாவட்ட நீதிமன்றத் தகுதியிலான அமர்வு நீதிமன்றத்தை சிறப்பு நீதிமன்றமாக நியமித்து, சிறப்பு கவனம் செலுத்த பிரிவு - 14 வலியுறுத்துகிறது.

பிரிவு 15 இன்படி, இவ்வழக்குகளை நடத்த சிறப்பு அரசு குற்றத்துறை வழக்குரைஞர் நியமிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டோர் குறிப்பாகக் கோரும் பட்சத்தில் புகழ்மிக்க, தகுதி வாய்ந்த மூத்த வழக்குரைஞரை சிறப்பு அரசு குற்றத்துறை வழக்குரைஞராக அரசு நியமிக்க வேண்டும் என்றும் இச்சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள, 1995 ஆம் ஆண்டு விதிகளில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதேபோல், இவ்வகை வழக்குகளை புலன் விசாரணை செய்யும் அலுவலர், காவல் துணைக் கண்காணிப்பாளர் பதவிக்குக் குறையாத அலுவலராக இருக்க வேண்டும் என்கிறது.

இச்சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டிருக்கும் 7 ஆம் விதி, அப்படி நியமிக்கப்படும் காவல் துணைக் கண்காணிப்பாளரும், அவருடைய கடந்தகால அனுபவம், பணியில் அவருக்குள்ள கடமையுணர்வு ஆகிய தகுதிகள் வாய்க்கப் பெற்றவராக இருக்க வேண்டும் என்கிறது. அதனடிப்படையில் பார்த்தால், இச்சட்டத்தின் கீழ் வரப்பெறும் புகார்களை புலன் விசாரணை செய்யத் தகுதிவாய்ந்த அலுவலர் அரிதாகவே கிடைக்கப் பெறுவர். மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மாவட்ட வன்கொடுமைத் தடுப்புக் கண்காணிப்புக் குழுவும் பெயரளவில்தான் உள்ளது.

ஆனால், வன்கொடுமைச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி, பல்வேறு மாநிலங்களிலும் குறிப்பாக, தமிழகம், உத்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஆதிக்க சாதியினர் - ‘இச்சட்டத்தில் பொய் வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதாக' தொடர்ந்து பொய்ப்பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஒரு சட்டத்தின் கீழ் பொய்வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதால், அச்சட்டத்தையே நீக்க வேண்டும் என்பதுதான் சரியான தீர்வு என்றால், இந்தியாவில் தற்போது நடைமுறையிலிருக்கும் அனைத்துச் சட்டங்களும் நீக்கப்பட வேண்டியவைதான்! குற்றம் சாட்டப்பட்ட ஒரு நபரை விடுவித்து நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்புகள், அவ்வழக்கை ஏதோ ஒரு விதத்தில் பொய்யாகத் தாக்கல் செய்யப்பட்டதாகக் கருதிதான் விடுதலை வழங்கு கின்றன என்பதைப் பார்க்கும்போது - இந்த வாதம் எவ்வளவு அபத்தமானது, விஷமத்தனமானது என்பது புரியும்.

1989 ஆம் ஆண்டு சட்டத்தைப் பற்றி விவரிக்கவும், விவாதிக்கவும் பல்வேறு அம்சங்கள் உள்ளன. ஆனால், சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய காவல் துறையும், நீதிபரிபாலனம் செய்ய வேண்டிய நீதித்துறையும் - சாதிய மேலாண்மைத் தாக்கத்தால், இச்சட்டத்தைச் செயலிழக்க வைக்கக் கையாளும் சட்ட மீறல், நீதி பிறழ்வு பற்றியதை மட்டுமே இங்கு குறிப்பிடலாம்.

இச்சட்டத்தின் மிக முக்கிய அம்சங்களில் ஒன்று - வன்கொடுமைக் குற்றம் புரிந்ததாகக் கூறுப்படும் நபருக்கு எதிர்பார்ப்புப் பிணை (முன் ஜாமீன்) வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக (பிரிவு 18) கூறப்படுகிறது. இதன்படி, வன்கொடுமைக் குற்றம் சாட்டப்படும் நபர் கொடியதொரு சமூகக் குற்றம் புரிந்துள்ளவராகக் கருதப்படுகிறார். பொதுவான சட்டவிதியிலிருந்து விலகியிருக்கும் நிலை இது. இப்பிரிவு அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என அறிவிக்கக் கோரி, வன்கொடுமை குற்றம் சாட்டப்பட்டவர்களால் பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் தொடுக்கப்பட்டன. ‘மத்தியப் பிரதேச அரசு - எதிர் - ராம்கிருஷ்ணயா பலோத்ரா' (AIR 1995 SC 1198) வழக்கில் உச்ச நீதிமன்றம், இறுதியாக இப்பிரிவின் அரசியலமைப்புத் தகைமையை உறுதி செய்தபோது இவ்வாறு கருத்துரைத்தது:

‘தீண்டாமை வழக்கில் வரலாற்றுப் பின்னணியையும் பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு எதிராக இழைக்கப்படும் இவ்வகைக் குற்றங்களின் சமூக எண்ணத்தையும் பார்க்கும்போது, இவ்வகை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் தாம் பெறும் எதிர்பார்ப்புப் பிணையைத் தவறாகப் பயன்படுத்தி, வழக்கில் பாதிக்கப்பட்ட நபரை பயமுறுத்தவும் முறையான புலன் விசாரணையைத் தடுக்கவும் செய்வார்கள் என்ற அச்சம் நியாயமானது. இந்த அடிப்படையில்தான் பிரிவு 17 இல் சேர்க்கப்பட்டுள்ளது. இது, அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 21அய் எவ்விதத்திலும் பாதிப்பதாகக் கருத முடியாது.”

இதன் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றமும் இச்சட்டத்தின் பிரிவு 18 அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானதல்ல என்று ‘தவம் - எதிர் - அரசு' (1998 (1) crimes 310) வழக்கில் தீர்ப்பளித்துள்ளது. இருப்பினும், புகாரில் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் (Allegations) அடிப்படையில், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகள் ஈர்க்கப்படாத சூழலில் - அக்குறிப்பிட்ட வழக்கின் தன்மையினை அடிப்படை ஆய்வு செய்து, எதிர்பார்ப்புப் பிணை வழங்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உட்பட, ஒரு சில உயர் நீதிமன்றங்கள் தீர்ப்புகள் வழங்கியுள்ளன. ஆனால், ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்ளவும் புதுப்புது உத்திகளைக் கையாள்வது, சாதி இந்துக்களுக்கு கைவந்த கலை. சாதிய மனம் படைத்த அனைத்து அரசு எந்திரங்களும், ஏன் நீதித்துறையும்கூட, ஆதிக்க சாதியினருக்குத் துணை புரியவே தவம் கிடக்கின்றன என்பதற்குப் பல முன்னுதாரணங்களைக் கூற முடியும்.

அப்படிப்பட்ட ஓர் உத்திதான், ‘விசாரணை நீதிமன்றத்தில் தோன்றும் தினத்திலேயே பிணை மனு விசாரிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும்' என்று உயர் நீதிமன்றத்தில் பெறப்படும் உத்தரவாகும். இப்படி ஓர் உத்தரவு எந்தவித சட்ட (அல்லது தீர்ப்பு) அடிப்படையுமின்றி, உயர் நீதிமன்றத்தின் பெரும்பாலான நீதிபதிகளால் வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை உயர் நீதிமன்றத்தைப் பொறுத்தவரையில், இப்படி ஓர் உத்தரவு எந்தவித அடிப்படை விசாரணையுமின்றி ‘வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்கு' என்றாலே வழங்கப்பட்டு வருகிறது. மனித மலத்தை தலித்துகளின் வாயில் திணித்த ‘திண்ணியம் வன்கொடுமை' வழக்கிலும் சென்னை உயர் நீதிமன்றம், அவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முக்கிய நபர்களுக்கு இப்படி ஓர் உத்தரவை வழங்கியது.

பாதிக்கப்பட்டோர் சார்பாக இக்கட்டுரையாளர், அவ்வாறு உத்தரவு வழங்குவது - வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்திற்கும், அதனை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கும் எதிரானது என்றும், இவ்வுத்தரவு 1989 ஆம் ஆண்டுச் சட்டம் மற்றும் உச்ச நீதிமன்றம் தடைசெய்துள்ள எதிர்பார்ப்புப் பிணை வழங்குவதற்கு ஒப்பாகும் என்றும் (அம்மனுவை விசாரித்தபோது) சென்னை உயர் நீதிமன்றத்தில் கடும் ஆட்சேபம் தெரிவித்தார். ஆனால், இம்மாதிரியான உத்தரவு, எதிர்பார்ப்பு பிணை உத்தரவு அல்ல என்றும், வன்கொடுமை குற்றம் சாட்டப்பட்டவர்களின் பிணை மனுவை அவர்கள் விசாரணை நீதிமன்றத்தில் தோன்றும் தினத்திலேயே சட்டப்படி முடிவு செய்ய வேண்டும் எனக் கூறுவது மட்டுமே என்றும் கூறி, வன்கொடுமைக் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குச் சாதகமாக உத்தரவு வழங்கப்பட்டது. இது ஒரு துளிதான். நாள்தோறும் இவ்வாறான உத்தரவுகள் சட்டப் பிரச்சனைகளின்றி வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலை குறித்து நீதிபதிகளுக்குத் தக்கபடி அறிவுறுத்தி, சுற்றறிக்கை அனுப்பி, வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோர் நலன் காக்க சமூக அக்கறையுள்ள, மனித உரிமையில் அக்கறையுள்ள வழக்குரைஞர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி தணிகாசலத்திடம் மனு அளித்தனர். ஆனால், அதன் பேரில் இன்று வரை நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.

வன்கொடுமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் முதல் தடைக்கல்லாகத் திகழ்வது காவல் துறையே. முதலில் புகாரைப் பெற்று பதிவு செய்வது என்பது மிகப் பெரும் சுமை, தேவையற்ற வேலை என்று இத்துறையினர் கருதுகின்றனர். அப்படிப் பதிவு செய்யப்படும் புகார்களும் வன்கொடுமைக் குற்றங்களின் ஒரு சிறு எண்ணிக்கையே. பெறப்படும் புகார்களும் வழக்கை வலுவிழக்கச் செய்யும் வகையிலேயே பதிவு செய்யப்படுகின்றன. பல நேர்வு களில் வன்கொடுமை குற்றம் செய்தவர்கள் மீது பாதிக்கப்பட்டவர்கள் முதலில் புகார் கொடுத்தாலும், காவல் துறையினர் குற்றம் சாட்டப்பட்டவர்களை அழைத்து அவர்களிடமிருந்து பாதிக்கப்பட்டவர்கள் மீது பொய்ப்புகார் தரச் செய்து, அதை முதலில் பதிவு செய்து, வன்கொடுமைப் புகாரை வலுவிழக்கச் செய்கின்றனர்.

இத்தகு மோசடியான புகார்கள் மீது விசாரணை என்ற பெயரில் ‘சமரசம்' செய்தும், ஒத்துழைக்காத புகார்தாரரின் புகார் பொய்யானதெனப் புலன் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டதாகச் சொல்லியும் நடவடிக்கையை முடித்துக் கொள்கின்றனர். அதற்குமேல் புகார்தாரர் எடுக்கும் எந்த நடவடிக்கையும் பெரிய அளவில் பலன் தருவதில்லை. பெரும்பாலான வழக்குகளில் இதையும் மீறி சட்ட நடவடிக்கையை வலியுறுத்தும் பாதிக்கப்பட்டோரை - அலைக்கழிக்கும் விதமாக, குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்யாமல் - அவர்களுக்கு அரசும், காவல் துறையும் அரணாக செயல்படுகின்றன.

இதுபோன்ற சூழலில்தான், வன்கொடுமைக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் உயர் நீதிமன்றத்தை அணுகி, தங்களுக்கெதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் புகார் பொய்யானது என்றும், அதன்பேரில் தாம் கைது செய்யப்படலாம் என்றும், எனவே விசாரணை நீதிமன்றத்தில் தாம் தோன்றும் (சரணடைதல் என்று சட்ட ரீதியாகச் சொல்லப்பட்டாலும், அவர்கள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்படுவதில்லை) நாளிலேயே தங்கள் பிணை மனு மீது உத்தரவு பிறப்பித்திட, விசாரணை நீதிமன்றத்திற்கு மனு செய்கின்றனர். இவ்வகையான மனு உயர் நீதிமன்றத்தில், எவ்வளவு கொடூரமான வன்கொடுமை வழக்காக இருந்தபோதிலும் அரசுத் தரப்பில் ஆட்சேபம் ஏதுமின்றி, மிக எளிதாக அனுமதிக்கப்பட்டு விடுகிறது. விதிவிலக்காக ஓரிரு நீதிபதிகள் மட்டுமே இதுவரை இதுபோன்ற மனுக்களை ஏற்க மறுத்துள்ளனர். மற்ற மாநிலங்கள் எதிலும் இதுபோன்ற ஒரு நடைமுறை இருப்பதாகத் தீர்ப்புகள் ஏதுமில்லை. சாதாரண, சிறு வழக்குகளிலெல்லாம் கைது நடவடிக்கை மேற்கொள்ளும் காவல் துறையினரும், பிணை மனுவுக்கே கடும் ஆட்சேபம் தெரிவிக்கும் அரசும், குற்றத்துறை வழக்குரைஞர்களும் இவ்வகை மனுக்களை கிஞ்சித்தும் ஆட்சேபிப்பதில்லை.

மேற்படி மனுக்கள் உயர் நீதிமன்றத்தின் தன்னதிகாரத்தின் கீழ் (Inherent Power) ஏற்கப்பட்டு அனுமதிக்கப்படுகின்றன. இவ்வதிகாரத்தை உயர் நீதிமன்றம் மிகச் சில நேர்வுகளில் மட்டுமே (Sparingly) பயன்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பலப்பல வழக்குகளில் வலியுறுத்தியுள்ளது. அவ்வாறான மிகச் சில நேர்வுகளும் நீதியின் நோக்கத்தையும் சட்டத்தின் நோக்கத்தையும், உத்தரவுகளையும் நடைமுறைப்படுத்திடவுமே அமைந்திடல் வேண்டும் என்கிறது, குற்ற விசாரணை முறைச் சட்டத்தின் 482 ஆம் பிரிவு.

ஆனால், இந்நெறிமுறைகளில் எந்தவொன்றையும் சார்ந்திராத நிலையிலும் மேற்குறிப்பிட்ட மனுக்களை ஏற்றுக் கொள்வதற்கு சட்ட அடிப்படையோ, தீர்ப்பு அடிப்படையோ இல்லை. இதுபோன்ற உத்தரவின் அடிப்படையில், வன்கொடுமைக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வன்கொடுமைச் சட்டத்தையே கேலிக்குள்ளாக்குகின்றனர். எந்த ஒரு செயலை நேரடியாகச் செய்ய சட்டம் தடை செய்துள்ளதோ, அச்செயலை மறைமுகமாகவும் செய்வதை சட்டம் அனுமதிக்காது என்பது சட்டத்தின் அடிப்படை விதி. இவ்விதியும் மீறப்படுகிறது.

‘ஒரு பறையன் ஒரு மீட்பராக ஏன் மாறினான் என்பதற்கு, ஆளும் அமைப்பில் ஏற்பட்ட மாற்றம் என்பதுதான் ஒரே காரணமாகத் தோன்றுகிறது” - The only reason why a pariah becomes a messiah appears to be the change in the ruling pattern. இப்படி யாராவது ஒரு தனிமனிதர் கூறியிருந்தால், அதற்கு எவ்விதமான எதிர்வினை இந்நாட்டில் ஏற்பட்டிருக்கும் என்பதை கற்பனைகூட செய்ய இயலவில்லை. ஆனால், அண்மையில் 11.10.2006 அன்று, இந்தியத் தலைமை நீதிமன்றம் ஒரு வழக்கில் (எபுரு சுதாகர் - எதிர் - ஆந்திரப்பிரதேச அரசு (2006) 8 SCC 161) வழங்கிய தீர்ப்பில் மேற்கூறிய வாசகம் இடம் பெற்றுள்ளது. இந்தத் தீர்ப்பு குறித்து இதே வாசகத்தை உள்ளடக்கி ‘தி இந்து' நாளிதழில் செய்தி வெளியானபோது, அதிர்ச்சி அடையாமல் இருக்க முடியவில்லை. இவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் குடியரசுத் தலைவருக்கும் ஆளுநருக்கும் உள்ள தண்டனைக் குறைப்பு அதிகாரங்கள் பற்றி வழங்கிய தீர்ப்பு அது. அரசியல் காரணங்களுக்காக தண்டனைக் குறைப்பு வழங்கிய ஆந்திர ஆளுநரின் உத்தரவிற்கெதிராகத் தொடுக்கப்பட்ட வழக்குதான் அது. இந்தப் பொருளில் அது மிக முக்கியமான தீர்ப்பும்கூட.

ஆனால், மேற்கண்ட வாசகம் எந்த அளவிற்கு தலைமை நீதிமன்ற நீதிபதிகளாக இருப்பவர்களின் மனத்தில் சாதியம் குடிகொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. இன்றுவரை இதற்கு எவ்விதக் கண்டனத்தையும் எந்த தலித் அமைப்பும், பொது நலவாதிகளும் தெரிவிக்கவில்லை. ‘பறையன்' என்பது பட்டியல் சாதியினரைக் குறிப்பது; அவ்வாறு பிறரை அழைப்பது - ‘பறையன்' என்ற சொல்லையே இழிச்சொல்லாகப் பயன்படுத்துவதாகும் என்பது நீதிபதிகளுக்குத் தெரியாது என்றால், அதை நாம் நம்ப இயலுமா? இதைத்தான் நீதித்துறையின் சாதிய மேலாதிக்கம் என்கிறோம்.

மேற்கண்ட அநீதிகளெல்லாம் இழைக்கப்படுவதற்கு அடிப்படைக் காரணம், அண்ணல் அம்பேத்கர் கூறியது போல தலித்துகள் சமூக உணர்வு கொள்ளாததுதான். சமூக உணர் வுடன் அதிகார மய்யத்தை நோக்கி குரலெழுப்பும்போதுதான் - இதுபோன்ற அநீதிகளையும் வன்கொடுமைகளையும் ஒழிக்க முடியும்.
Pin It