நம் வீட்டின் சமையல் அறைகள் பெருந் தொழிற்சாலைகளின் சிறிய பகுதிகள் போன்றவை. இவை செயல்படும் முறை சூழலுக்கு இணக்கமாகவோ, எதிராகவோ அமையலாம். சமையல் அறைகள் உணவு தயாரிப்பதற்கு மட்டுமானவை என்று நினைத்துவிடக் கூடாது. அவைதான் நமது உடல்நலத்தையும், பூமியின் உடல்நலத்தையும் ஒரு சேரப் பாதுகாக்கக் கூடியவை.
சமையல் அறையில் எரிபொருளையும், தண்ணீரையும் நாம் பெருமளவு சேமிக்க முடியும்.
வீட்டுக்குள்ளே நாம் மிக அதிகமாக எரிபொருள் செலவு செய்யும் விஷயங்களில் ஒன்று கேஸ் ஸ்டவ் அல்லது ஏதாவது ஒரு வகை அடுப்பு. எரிவாயு நன்கு, முழுமையாக எரியும் திறன் கொண்ட எரிபொருள் என்பதால், கேஸ் ஸ்டவ்வை சிம் நிலையில் வைத்தே சமைக்கலாம். எப்பொழுதும் பர்னரை முழுமையாக எரிய விடத் தேவையில்லை. சமைக்க வேண்டிய பொருள் தேவையான கொதி நிலைக்கு வந்த பின், தீயின் அளவைக் குறைப்பதால் 40 சதவீத எரிவாயுவை மிச்சம் பிடிக்கலாம். திரவப் பொருள் என்றால் கொதி நிலை வந்தவுடனும், திடப் பொருட்கள் என்றால் வெந்தவுடனும் தீயை அணைத்து விடவும். குறிப்பாக காய்கறிகளை முழுமையாக வேக வைக்காமல், பாதி வெந்தாலே போதும், முழுமையாக வேக வைக்கும்போது அவற்றிலுள்ள சத்துகள் காணாமல் போய்விடும்.
பாத்திரத்தில் சமைப்பதற்கு பதிலாக பிரஷ்ஷர் குக்கரில் சமைப்பதால் 75 சதவீத எரிபொருளை மிச்சம் பிடிக்கலாம். சமைப்பதற்கு ஆகும் நேரமும் குறையும். பிரஷ்ஷர் குக்கரின் கேஸ்கட் இறுக்கமாக இருக்கிறதா, வெயிட் சரியாக இருக்கிறதா என்பதை அடிக்கடி பரிசோதித்துக் கொள்ளவும். இல்லையென்றாலும் எரிபொருள் வீணாகும்.
அதேபோல் தட்டையான, அடி அகன்ற பாத்திரத்தில் சமைப்பதால் தீ முழுமையாக பயன்படுத்தப்பட்டு வெப்பம் அதிகமாகக் கிடைக்கிறது. மேலும் எதை சமைக்கும்போதும் பாத்திரத்தை மூடி வைக்கவும். இதனாலும் எரிபொருள் மிச்சமாகும்.
குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து கூட்டாகச் சாப்பிடுவதால் அந்நியோன்னியம் கூடும். உணவை பல முறை சூடாக்குவதையும் தவிர்க்கலாம். எப்பொழுதும் தேவையைக் கணக்கிட்டே சமைக்க வேண்டும். சமைத்த உணவை அடிக்கடி பிரிட்ஜில் வைத்து, மீண்டும் சூடாக்குவதால் இரண்டுக்குமே எரிபொருள் செலவாகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
பொருட்கள் வாங்கக் கடைக்குச் செல்லும்போது கட்டாயம் துணிப்பை எடுத்துச் செல்வோம். சாலையோர கடையில் முன்பெல்லாம் இலையில் கட்டி பூவை கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இன்று அங்கும்கூட பிளாஸ்டிக் பையே தரப்படுகிறது. பூக்கடை, மளிகைக் கடை, ஜவுளிக் கடை, ஓட்டல் என எதுவென்றாலும் பிளாஸ்டிக் பை தராத பட்சத்தில் நாமே கேட்டு வாங்குகிறோம். ஒரு காலத்தில் வாழை இலை, மந்தாரை இலையில் சுருட்டிக் கொடுத்தது மட்டுமின்றி, அவற்றில் சாப்பிட்ட காலமும் மலையேறி விட்டது.
பிளாஸ்டிக் பையால் ஏற்படும் பிரச்னைகள் நம் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். இருந்தாலும் துணிப் பை எடுத்துச் செல்லத் தயங்குகிறோம். இந்தத் தயக்கத்தை ஒழிக்க வேண்டும். கடைகளுக்குச் செல்லும் முன்னரே என்னவெல்லாம் வாங்க வேண்டும் என்று யோசித்துக் கொள்ள வேண்டும். இதனால் பல முறை செல்வதைத் தவிர்க்கலாம். அத்துடன் ஒவ்வொரு முறை செல்வதற்கான நேரம், எரிபொருள் இழப்புகளையும் குறைக்கலாம்.
வெவ்வேறு கடைகளுக்குச் செல்ல வேண்டிய பட்சத்தில், முன்கூட்டியே திட்டமிட்டு வரிசையாக ஒவ்வொரு கடைக்கும் சென்று வாங்குவதாலும் மேற்கண்ட இழுப்புகளை குறைக்க முடியும். திட்டமிட்டு செயல்படுவதால் நேரம், எரிபொருள் மிச்சம் அடைவது மட்டுமின்றி நம் அலைச்சலும் குறைகிறது, காசு சேமிக்கப்படுகிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
- பேராசிரியர் த. முருகவேள்