கடந்த இதழின் தொடர்ச்சி

 இன்று வரையும் நமக்கு அமெரிக்கர்கள் கையளித்த பசுமைப்புரட்சி அரிசியில் என்ன மாதிரியான சத்துக்கள் இருந்தன, அதற்கு முன் நம்மிடம் இருந்த அரிசியில் என்ன மாதிரியான சத்துக்கள் இருந்தன என்பது குறித்து ஒரு விரிவான விவாதம் நடக்கவில்லை. அது நடந்தால் தான் ஒட்டு மொத்த நாட்டு மக்களையும் நோயாளிகளாக மாற்றியதன் மூலகாரணம் தெரியவரும். 80களில் தமிழ் நாட்டில் ஆங்கில மருந்துக் கடைகளின் எண்ணிக்கை பெருமளவில் உயர்ந்தது. இந்த உயர்வுக்கும் பயிர்களுக்கு விவசாயிகள் பயன்படுத்திய ஊக்க மருந்துகள், பூச்சிக்கொல்லிகள் முதலியவைகளுக்கும் உள்ள சம்பந்தம் குறித்து அறியமுடியும்.

முதலில் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லிகள் தெளித்தோம். நுண்ணூட்ட தெளிப்பு மருந்துகள் கொடுத்தோம் பிறகு நாமும் வைட்டமின் மாத்திரைகள், கால்சியம் மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டோம். 70 களுக்கு முன்னால் நம்மில் இவ்வளவு பேர் இப்படி மாத்திரைகள் வாங்கிய தில்லை. ஒரு விரிவான கலந்துரையாடலே இப்புரட்சி மக்களை  பட்டினியில் இருந்து காப்பாற்றியதா அல்லது நோயளிகளாக மாற்றியதா என்று தெரிவிக்கும். இன்னும் சில வருடங்களில் 80 விழுகாடு இந்தியர்கள் நீரழிவு நோயால் பாதிப்புக்குள்ளாவார்கள் என்னும் செய்தி இக்கலந்துரையாடலின் முக்கியத்துவத்தை உணர்த்தும். வேளாண்மை என்றால் என்னவென்றே அறியாத எஸ்கிமோக்களின் உடலில் d.t.t. இருந்ததை ஐரோப்பியர்கள் சொல்லி பல வருடங்கள் ஆனபின்னாலும் நமக்கு இப்பசுமைப் புரட்சி உணவுகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட வில்லை என்பது அதுவும் படித்தவர்கள் மத்தியில் ஏற்படாதது ஒரு புரியாத புதிரே.*

80கள் வாக்கில் ஒரு பட்டிமன்றம் நடந்ததாகக் கேள்வி. அதன் விபரம் ; நாம் தெளிக்கும் பூச்சிக் கொல்லிகள் பயிர்பச்சைகளின் மீது படுகிறது. அதனால் அதிலிருந்து விளையும் விளைச்சலில் அதன் நச்சுத்தன்மை இருக்குமே என ஒரு தரப்பும், தன் மீது தெளிக்கப்படும் நஞ்சை அப்பயிர்கள் சுமார் 45 நாட்களில் சன்னம்    சன்னமாக வெளியேற்றி விடும் என மறு தரப்பும் கூறியது. ஐரோப்பிய ஆய்வுகள் கூறுவது ; எத்தனை நாட்கள் ஆனாலும் அந்த நச்சுப்பொருளின் ஒரு பகுதி அதலேயே தங்கி விடும். அப்பகுதி அதன் விளைச்சலிலும் இருக்கும். அதனால் தான் வைக்கோல் மூலமாக மாடுகள் மூலமாக பால் மூலமாக மனிதர்களுக்கு யூரியா கிடைக்கிறது. அரிசி மூலமாகவும் யூரியா கிடைக்கிறது. வயல்வெளிகளில் தெளித்த d.t.t. மழைநீர்    வழியாக ஆறு வழியாக அட்லாண்டிக் கடலுக்கு வந்து, சங்கிலித்தொடராக மீன்கள் மூலமாக எஸ்கிமோக்கள் வரை போய் சேர்ந்திருக்கிறது. நமக்கும் விதவிதமான நோய்களும் வந்திருக்கிறது.

இதில் ஒரு விசித்தரமும் சொல்லப் படுகிறது. அது; x அளவு d.t.t. வைக்கோல் வழியாக மாடுகளுக்குச் செல்லும் போது மாட்டிலிருந்து பால் மூலமாக நமக்கு வரும்போது அந்த அளவு ஜ்யை விட சற்று அதிகமாகத்தான் இருக்குமாம். அடுத்தடுத்து இது உயிர்களை கடக்கும்போது அதன் அளவுகள் உயர்ந்து கொண்டேதான் போகுமாம். அவர்கள் கொடுத்த எடுத்துக்காட்டு நீர் வழியாக மீனுக்கும் மீனைச் சாப்பிடும் பறவை பறவையைச் சாப்பிடும் மனிதன் என்று. ஐரோப்பாவில் இது போன்ற விபரங்கள் வெளியாகி பல வருடங்கள் ஆனபோதும் நமது சிறு பத்திரிக்கைகளில் கூட - ஒட்டுமொத்த இந்தியர்களைப் பாதிக்கும் - மனித நேய பார்வையின் அடிப்படையில் இச்செய்திகள் விரிவாக வராதது ...

1980களில்தான் வேளாண் துறையினர் விவசாயி களுக்கு நன்மை செய்யும் பூச்சிகள், தீமை செய்யும் பூச்சிகள் என பூச்சிவகைகளைப் பற்றி பாடம் நடத்தினர். நன்மை செய்யும் பூச்சிகளில்தான் தேனீக்களும் உள்ளன. பூச்சி மருந்துகள் அடித்த காரணத்தால் நன்மை செய்யும் பல பூச்சிகளுடன் மகரந்த சேர்க்கையின் முக்கியமான தேனீக்கள் பெரும்பாலும் அழிந்து விட்டதை வேளாண் துறையினர் கண்டு கொண்டனர். அவர்கள் பண்ணைகளில் இருந்த பருத்தி பூத்து மகரந்த சேர்க்கைக்கு வழியே இல்லாததால் அவை உதிர்ந்து விட்டன. இக்காலகட்டத்தில்தான், சூரியகாந்தி பயிரிட்ட விவசாயிகளுக்கு வேளாண் துறையினர் ஒரு அறிய யோசனையைச் சொன்னார்கள். அது; துணியை பந்துபோல சுருட்டிக் கொண்டு அதை சூரியகாந்தி பூ வின்மீது தடவி மகசூலை அதிகரிக்கச் சொன்னது. 2 ஏக்கர் முதல் 10 ஏக்கர் வரை பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு இது சாத்தியமா என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல் இந்த பரிந்துரை வழங்கப் பட்டது. தேனி வட்டார தென்னை விவசாயிகளுக்கும் இதே பிரச்சினை ஏற்பட்ட போது அவர்கள் தேனீ வளர்ப்போரை தங்கள் பண்ணைகளில் தேன் கூண்டுகளை வைக்க அழைத்து தப்பித்துக் கொண்டார்கள்.

ராஜபாளையம் தென்காசி சாலைப் பகுதிகளில் இருந்த பருத்தி சாகுபடி நிலங்களில் கன்னியாகுமரி மாவட்ட தேனீ வளர்ப்போர்கள் தங்கள் தேன் பெட்டிகளை வைத்து தேன் சேகரித்தனர். பூச்சிக் கொல்லி மருந்தடிப்பு களின் உக்கிரத்தினால் 80 விழுக்காடு தேனீக்கள் இறந்துபோனதால் அவர்கள் 87 க்குப்பின் அந்த பகுதி களுக்கு வருவதே இல்லை. இந்த காலகட்டத்தில்தான் பருத்திப் பயிர்கள் வெள்ளை ஈ என ஒரு புதிய வகை நோயைச் சந்தித்தது.  *பருத்தியில் இளஞ் செடிபருவத்திலிருந்தே மருந்தடிக்கும் வேலை தண்ணீர் பாய்ச்சுவதற்குச் சமமாக நடந்து கொண்டிருக்கும். இந்த நிலையில் 80களின் பிற்பகுதியில் சந்தையில் இறக்கிவிடப்பட்ட வீரியமான மருந்துகளின் காரணமாகவும், மருந்தடியும் கொஞ்சம் அதிகமானதாலும் பூச்சிகள் கட்டுப்படாமல் இருந்த நிலையில் மருந்தடிக்கும் வேகமும் கூடியது. இந்த நிலையில் பூச்சிகள் கூடியதால் பருத்திச் செடியும் நிறமாறு அளவிற்குச் செல்லும்போது பருத்திச் செடியின் இலைகளின் மேல் பரப்பில் கருப்பாக, இனிப்பான,  பிசுபிசுப் பான திரவப் படிவம் உருவானது. இந்த நிலையில் வெளிப்பட்டதே வெள்ளை ஈக்கள். இந்த நிலையில் செடிகளின் பசுமை குறைந்து சிகப்பு கலந்துக் காணப்படும். மனிதர்களில் எயிட்ஸ் நோயாளியைப் போல செடிகளில் எப்படி இருக்கும் என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு.

இப்படிப்பட்ட பருத்தியை கையில் ஏந்தியபடி விவசாயிகள் மதுரையில் ஊர்வலம் போனதை ஒருசின்னச் செய்தியாகத் தினமணி வெளியிட்டு இருந்தது. மற்றப் பத்திரிகைகளுக்கு இது ஒரு செய்தி அளவுக்குகூட படவில்லை. வேளாண் துரை வழக்கம்போல அளவு தெரியாமல் அதன் அளவுகளில் பூச்சிக் கொல்லிகளைப் பயன் படுத்தியதால் தான் இப்படி நடந்தது என்று அறிவித்தது. தேவதானத்தில் அரசு வேளாண்துரை பண்ணையிலும் அவர்கள் பயிரிட்டு இருந்த பருத்திக்கும் இதுதான் நிலை. அப்படியானால் அவர்களும் அளவு தெரியாமல் பூச்சிக்கொல்லிகளை அடித்து விட்டார்களா?. அழுவதற்கு கூட நாதி இல்லை என்று இப்படிப்பட்ட கையறு நிலையை கிராமப்புரங்களில் சொல்வார்கள். அதுதான் அன்று நடந்தது.

கி.ராஜநாராயணன் கரிசல் காடுகளின் பெருமையைச் சொல்லுகையில் பலம் பொருந்திய வளமான அம்மண்ணைப் போலவே அவ் விவசாயிகளும் அம்மண்ணோடு உள்ள உறவும் மிகவும் நெருக்கமானது. நல்ல ஒரு மழை பெய்தால் 2 மாதங்களுக்கு ஈரப்பதத்தை தக்கவைத்துக் கொள்ளும். சால் சாலாக விதவிதமான தானிய வகைகளும் சரியான இடைவெளிகளில் பருத்தியும் பயிரிடுவது அவர்கள் விவசாயமுறை. உழுந்து, பாசிப்பயறு, தினை, குதிரைவாலி, சாமை, எள் என வகைவகையான விளச்சலை எடுத்து விட்டு துவரையையும், பருத்தியையும் கடைசி வெள்ளாமையாக வைத்துக் கொள்வார்கள். ஐந்தில் ஒருபகுதி நிலத்தில் தங்கள் கால்நடைகளுக்கான தீவனப் பயிர்களை விளைய வைத்துக்கொண்டார்கள். இதுதான் பசுமைப் புரட்சிக்கு முந்திய கரிசல் காட்டு மரபுமுறை விவசாயமாக இருந்தது. பிற மானவாரி, ஆற்றுப்பாசன நிலத்து விவசாயிகள் ஊரைக் காலி செய்தபோதும் அசையாமல் இருந்தனர் கரிசல் காட்டுக்காரர்கள். அந்த வளமான, வலிமையான மண்ணுக்கு, அமெரிக்கர்களின் பருத்தி விதைகள் - னீ.நீ.u, றீ.க்ஷீ.ணீ.- வந்தன.

பிறப்பகுதி விவசாயிகளைப்போலவே கரிசல் விவசாயிகளும் இப்பருத்தி விளைசலையே முதலில் பார்த்து மயங்கினர். அவைகளுக்கு அடித்த பூச்சிக் கொல்லிகள் பற்றிய தகவல்களையோ, அவர்கள் பகுதியில் அதைப் பயன் படுத்துவது இன்னும் மிகுந்த சிரமமானது என்பதையோ அவர்கள் ஆரம்பத்தில் கண்டுகொள்ளவில்லை. இன்றும் அப்பருத்தி விளைச்சல் பற்றி பேசும்போது மலையாக குமித்தோம் என்றுதான் சொல்கிறார்கள்.

கி.ரா. ஊருக்குப் பக்கத்து ஊரான வில்லிசேரி - சுமார் 2500 தலைக்கட்டுள்ள ஊர் - பெருங்கொண்ட பருத்தி விவசாயிகள் இந்த புதிய விதைவித்து களால் தங்கள் வாழ்வைத் தொலைத்த கதையை கோபால் நாயக்கர் இப்படிச் சொன்னார். 1968 கள் வாக்கில் வி.சி.ஹி. பருத்தி விதைகள் அறிமுகமாயின. நாட்டுப் பருத்தியை விட மகசூல் அதிகமாக இருந்தது. இதற்கு அடுத்த படியாக வர லட்சுமியை அறிமுகப்படுத் தினார் கள். அள்ளிக்கு வித்தார்கள். அப்படி இருந்தது விளைச்சல். அந்த சுற்றுட்டாரத்திலேயே மீன்துள்ளி ஊரில்தான் சரியான விளைச்சல். பொதுவாக கரிசல் காட்டில் கிணறுகள்  இருக்காது. பூச்சிக்கொல்லியை தெளிப்பது அவர்க ளுக்கு புதிய அனுபவம். பூச்சிக்கொல்லியை அடிக்கும் போது செவக்காட்டு விவசாயியை விட இவர்களுக்கு அதிக      வேலை. இரண்டு முதல் ஐந்து கிலோமீட்டர் தூரத்திலிருந்து - ஊரணி - வண்டிகளில் பெரிய பெரிய டிரம்களில் தண்ணீர் கொண்டுவந்து பூச்சிக் கொல்லியைத் தெளித்துள்ளனர் - இவர்களுக்காகவே 5 லிட்டர் கேன்களில் பூச்சிக்கொல்லிகள் விற்பனையானது.

சிறு விவசாயிகள் பெரு விவசாயிகளுடன் இணைந்து பூச்சிக் கொல்லிகளை தெளிக்க வேண்டும். இல்லையெனில் இப்பூச்சுக் கொல்லித் தெளிப்பே அவருக்கு பெரிய தண்டனையாக இருக்கும். 1985 க்குப்பின் வீரியமான மருந்துகள் - 100 மில்லி ரூ.100  என  அறிமுகப் படுத்தப்பட்டது. இக்கால கட்டத்தில்தான் கட்டுப் படுத்த முடியாத நோய்களும் இறுதியில் வெள்ளை ஈக்கள் ஆக்கிர    மிப்போடு -அப்போது பருத்திச் செடிகள்  எயிட்ஸ் நோயாளியைப் போலிருக்கும் - பருத்தியின் கதை முடிந்து விடும். லி.ஸி.கி. பருத்தியுடன் இவ்வீரிய மருந்துகளும் படிப்படியாக களத்தில் இறக்கி விடப்பட்டன.

4 - 5 வருடங்களில் காடுகரை எல்லாம் வி.சி.ஹி. பருத்தியாக மாறியது. - ஒரு மந்திரவாதி தனது மந்திரக் கோலை ஆட்டியது போல. அரசும் தன் பங்குக்கு இந்நிகழ்வுக்கு Indensive Cotton Cultivation எனப்பெயர்சூட்டி மகிழ்ந்தது. இந்த 5 வருடகால ஆட்டப்பாட்டத்தில் பழைய உப்பாம் பருத்தியை யும் கருங்கண்ணிப் பருத்தியையும் ஏதோ கனவு போல மறைந்தே விட்டது.  இப்பழைய பருத்திகள் - கருங்கண்ணி, உப்பம் - மூலமாகக்  கிடைத்த சாதாரன விளைச்சலில்* காரை வீடுகளும், மச்சுவீடுகளும் கட்டிவாழ்ந்த இம்மக்கள் இப்பருத்திச் சூதாட்டத்தில் மதியிழந்து ஒருபத்து பதினைந்து வருடகாலம் பூச்சி மருந்துகளோடு போராடி தோற்று ஊரைவிட்டு வெளியேறத் தொடங்கினர். இப்படியாகத்தான் பருத்தி விதைகளும் பூச்சிக்கொல்லிகளும் ரசாயன உரங்களும் மெல்ல மெல்ல கரிசல் காட்டில் அடியெடுது வைத்து, வலுவான அந்த மண்ணின் உயிர் மூச்சியையும் இறுக்கிப் பிடித்தது. மதுரை - திருநெல்வேலி சாலை அல்லது ரயில் பாதை இதன் இருபுறமும் இன்று முள்காடாக காட்சி யளிக்கும் பெரும்பாலான கரிசல் நிலங்கள் இப்பசுமைப் புரட்சிக்கு முன்பு பழைய பருத்தி வகைகளுடன் கலப்புப் பயிராக உழுந்து, தினை, சிறு பயறு, எள், வறகு,குதிரைவாலி, சாமை, எனப் பயிரடப்பட்டு மரகத படுக்கைகளாக காட்சியளித்த நிலங்களே. இன்று இப்பகுதிகளில் சாமையும், வறகும் காணாமல் போனது மட்டுமல்ல இப்பகுதி நிலமே சூவைப்புல் தரிசாவும் அல்லது முள் காடகவும் ஆகிவிட்டது.

*உப்பாம்பருத்தி அல்லது கருங்கண்ணிப் பருத்தி ஒரு மரக்கால் நிலத்தில் - 8 செண்ட் நிலம் -அரை குவிண்டால் பருத்தி விளைந்தால் அது ஒரு மேனியாகும். 86 -87 வாக்கில் லி.ஸி.கி.பருத்தி விதை உற்பத்திக்கு அரசு விவசாயிகளுடன் இணைந்தே செயல்பட்டுள்ளது. வேளாண் அதிகாரிகள் இவ் வயல்களுக்கு மேற்பார்வைக்காக வந்துள்ளனர். என்ன மருந்து அடிக்க வேண்டுமென்ற விபரங்களை சொல்லியுள்ளனர். கலவன்கள் இருந்தால் மகரந்த சேர்கைப் பிரச்சனை வரும் என்பதால் கலவன்களை அப்புறப்படுத்தும் வேலையிலும் அவர்களின் மேற் பார்வை  இருந்துள்ளது.இவ்வளவும் நடந்தபோது  உடனிருந்த இவ்வேளாண் அதிகாரிகளே இப்பிரச் சனை உச்சகட்டதை அடைந்தபோது விவசாயிகள் அவர்கள் விருப்பத்திற்கு மருந்துகள் வாங்கியும் அளவு தெரியாமலும் கூட்டியும் மருந்தடித்த தால்தான் பருத்திப் பாதிப்படைந்தது எனக்கூறினர்.

இராஜபாளையம், தேவதானத்தில் உள்ள அரசு பண்ணையில் பயிரிடப்பட்ட பருத்திக்கும் இதே கதிதான் ஏற்பட்டது என்பதால் அவர்கள் தரப்பு வாதம் எப்படிப்பட்டது என்பது விளங்கும். சாப்டூர் பகுதியில் - ராஜு ரெட்டியார் மருமகன் - நிலத்தில் மதுரை கோட்ஸ் நிறுவனத்தினர் இப்பருத்தி விவசாயத்தில் தங்கள் நேரடி மேலாண்மையை செய்துள்ளனர்.     இதன்படி அவர்களது வழிகாட்டலின் படி வரலட்சுமி பருத்திப் பயிரிடவேண்டும். இரசாயன உரம், பூச்சிக் கொல்லிகள் முதலியவைகளை அவர்களே இலவசமாகக் கொடுத்துவிடுவார்கள். மேற்பார்வை சிபாரிசுகள் அவர்களது. முன்கூட்டியே பருத்திக்கு விலையையும் -உண்மையிலேயே நல்ல விலை- கொடுத்து அவர்களே எடுத்துக் கொண்டார்கள். ஆனால் இத்திட்டம் தொடர்ந்து செயல்பட வில்லை. பெரிய அளவிலும் செயல்பட வில்லை.

இத்தகவல்களை வில்லிசேரியுடன் தொடர்புள்ள வெள்ளாளன்குளத்தில் பருத்தி விவசாயம்- வில்லி சேரிக்காரர்களைப் போலவே -செய்து கடன்பட்டு நிலங்களையும் இழந்து தற்போது பால் வியாபாரம் செய்து கொண்டிருக்கும் திரு கோபால் நாயக்கர் சொன்னது. அவர்மேலும் சொன்னது 40 மரக்கால் விதைப்பாட்டில் பருத்திப் போட்டதில் வேர்ப்புழுவால் 2 குண்டால் 60 கி.கி. பருத்தி விளைந்தது. அதுதான் கடைசியாக அவர் எடுத்த வெள்ளாமை. அவரறிய பலதலைமுறைகளாக செய்து வந்த விவசாயம் அந்த லி.ஸி.கி பருத்தி வெள்ளாமையுடன் முடிவுக்கு வந்தது.

வெள்ளையர் ஆட்சி காலத்தில் பருத்தியில் அதிகமாக பூச்சித் தாக்குதல் நடந்தபோது  வெள்ளையர் அரசு உடனடியாக இப்பிரச்சனையை தீர்த்துக் கொடுத்தது. ஒட்டுமொத்த பருத்தி விவசாயிகளும் தங்கள் நிலத்திலும் தங்கள் நிலத்திற்கு அருகிலும் வெண்டை துத்தி முதலிய செடிகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அரசின் இந்த வேண்டுதல்கள் சரியாக பராமறிக்கப் பட்டதா என்பதை அந்தந்த ஊர் கிராம முன்சீப் உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும் என அரசு வலியுறித்தியது. இதன்படி ஊர் கிராம முன்சீப் தலையாரிகளோடு எல்லா நிலங்களையும் பார்வை இட்டுள்ளனர். செடிகள் பிடுங்கப்படாமல் இருந்தால் அந்நிலத்தின் உரிமையாளரை புளியம் விளாரால் முன்சீப் அல்லது தலையாரிகள் அடித்து பிடுங்கி அப்புறப்படுத்தச் செய்துள்ளனர். வெள்ளையர் அரசு தன்நாட்டுக்கு வரவேண்டிய மூலப் பொருளுக்காகவோ பருத்தி நிலவரி வசூலுக் காகவோ எடுத்த ஒரு அக்கிசையைக் கூட நமது அரசு எடுக்கவில்லை என்பது மட்டுமல்ல கண்டும் காணாதது போல இருந்து விட்டதுதான் கொடுமை யிலும் கொடுமை. - தகவல் கி.ரா.

Pin It